ஊக்க சக்தி

 
மீ.விசுவநாதன்

தென்பொதிகை மலைத்தொடரில் தெரியும் அந்த
தெய்வீக அழகினிலே சொக்கிப் போவேன் !
முன்பார்த்த இடங்கள்தான் என்ற போதும்
முகம்சுளிக்கத் தோன்றாது முன்னே நிற்பேன் !
சின்னதானப் பறவையெனப் பறந்து அங்கே
சிலநொடிகள் தவமிருந்து மறந்து போவேன் !
முன்னதானப் பிறப்பெல்லாம் முன்னே வந்து
முகம்தடவி முத்தமிட மகிழ்ந்தி ருப்பேன் !

பிறப்பென்றும் இறப்பென்றும் இருந்த போதும்
பெரியதொரு கவலைகளில் கரைய மாட்டேன்
சிறப்பெல்லாம் இயற்கைவளக் கொடைதான் என்னும்
சிந்தனையில் இருக்கின்ற பயிற்சி பெற்றேன் !
அறத்தொடு வாழுகின்ற விலங்கு பார்த்து
அதனிடந்தான் அன்பினையே கற்று வந்தேன் !
புறத்தோடு காணுகின்ற பொலிவைப் பார்த்து
போய்விழுந்து துன்பத்தில் சிக்க மாட்டேன் !

சித்தர்கள் இன்றுமிங்கே இருக்கி றார்கள்
சிருங்கேரி பீடம்கூட இதில்தா னுண்டு !
பித்தரெனத் திரிகின்ற பேர்க(ள்) உண்டு !
பேசாம(ல்) இருக்கின்ற முக்த ருண்டு !
புத்தினிலே இருக்கின்ற பாம்பைப் போல
பொழுதெல்லாம் குகையிருக்கும் யோகி கூட
சத்தியமாய் வாழ்கின்ற பொதிகை தன்னை
தப்பாது நினைப்பதுவே தர்மம் என்பேன்.

பெருகிவரும் அருவியெனக் கவிதை பொங்க
பிள்ளையென இருக்கையிலே பாப நாச
அருவியிலே குளித்தபடி வேண்டிக் கொள்வேன் !
அடுத்தகணம் வாய்முணுத்தே தன்னை மறப்பேன்
உருவிவிழும் வான்மழையாய் உள்ளே மெல்ல
ஒளிமிகுந்த வார்த்தைகளால் கவிதை கேட்பேன் !
கருவியிவன் மூலமாக அந்தக் கலைஞன்
கடகடெனச் சொல்வதாக நம்பு கின்றேன் !

(09.09.2016 13.15 pm)

Share

Comments

One response to “ஊக்க சக்தி”

  1. MURALI

    மிக அருமை மற்றும் உண்மை. சமீபத்தில் அகஸ்தியர் அருவியில் குளித்து பொதிகை மலை அழகை ரசித்து விட்டு திரும்பினேன் சென்னைக்கு. புத்துணர்வை உணர்ந்தேன். நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *