Month: February 2014

  • மெலட்டூர் பாகவத மேளா!…

    தஞ்சை வெ.கோபாலன்

     

    தமிழகத்தில் தோன்றிய பல அரிய கலைகளுடன், இங்கு ஆட்சி புரிய வந்த பிறமொழி பேசும் மக்களால் நமக்களிக்கப்பட்ட கொடை பல புதிய கலைகள். அப்படி இங்கு புகுந்த பல கலைகளில் ஹரிகதா, லாவணி, பாகவத மேளா, நடன வகைகளில் குச்சிபுடி, மோகினியாட்டம், யக்ஷகானம், ஒடிசி, கதக் போன்றவற்றையும் குறிப்பிடலாம். நம் நாட்டில் காலம் காலமாய் வளர்ந்து வந்த தெருக்கூத்து இந்த கலைகளுக்கெல்லாம் முன்னோடியாக இங்கே திகழ்ந்திருக்கிறது.

    தஞ்சை மாவட்டத்தில் சில கிராமங்களில் அந்தந்த ஊரில் பிரபலமான மாரியம்மன் கோயில்களில் திருவிழாக்களுக்காகக் காப்பு கட்டுதல் என்றொரு நிகழ்ச்சி உண்டு. அப்படி காப்பு கட்டி திருவிழா முடிந்து கொடியிறக்கம் ஆகும் வரை அந்த ஊர்க்காரர்கள் வெளியூர்களுக்குச் செல்வதில்லை. அப்படி வெளியூர் போக வேண்டுமென்று இருப்பவர்கள் காப்பு கட்டும் தினத்தில் கிராமத்தை விட்டு வெளியேறி வேறு எங்காவது இருந்துவிட்டு மறுநாள் வருவார்கள். அப்படி எங்கும் போக முடியாதவர்கள் அவ்வூர் எல்லைக்கு அப்பால் ஏதாவதொரு திடலிலோ, அல்லது ஆற்றின் மணல் பரப்பிலோ தெருக்கூத்து ஏற்பாடு செய்துவிட்டு விடியவிடிய கூத்து பார்த்துவிட்டு ஊர் திரும்புவார்கள். அப்படிப்பட்ட நிகழ்ச்சி தஞ்சை ஜில்லா குத்தாலம், தேரழந்தூர் அருகிலுள்ள கோமல் எனும் கிராமத்தில் அந்த நாட்களில் நடப்பது வழக்கம். கோமல் மாரியம்மன் ஆலயத்துக்கு அண்டை அயல் கிராமங்களிலிருந்து பதினெட்டு தேர்கள் வரும். ஊரே அல்லோலப் படும். மாரியம்மனுக்குக் காப்பு கட்டும் நாளன்று அங்கு ஓடும் வீரசோழன் நதி வரண்டு கிடக்கும் மணற்பரப்பில் தெருக்கூத்து இரவு தொடங்கி மறுநாள் விடியும் வரை நடக்கும். கோமல் எல்லை அந்த ஆற்றின் கரையோடு முடிவடைந்துவிடுவதால், மணற்பரப்பு தேரழந்தூர் பகுதியாகிவிடும். அதனால் அங்கு இருந்தால் காப்புக் கட்டுக்குள் இருப்பதிலிருந்து விலக்கு கிடைக்குமென்பது எண்ணம்.

    தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யரின் சுயசரிதமான “என் சரித்திரம்” நூலில் இந்தத் தெருக்கூத்து பற்றி விவரிக்கிறார். இரவு படுக்கைக்குப் போகும்போது தெருக்கூத்து நடக்கும் சத்தம் காதில் விழுமாம். அப்போது அங்கு பாடுபவன் “டிங்கினானே…..” என்ற சொல்லை தொடர்ந்து பல மணி நேரம் ஸ்வரம் மாற்றி மாற்றி பாடிக் கொண்டிருப்பானாம். இவர் ஒரு தூக்கம் போட்டு எழுந்தால் அந்தப் பாட்டு சற்று விரிவடைந்து “புடிங்கினானே…..” என்று பாடிக் கொண்டிருப்பானாம். விடியும்போது அந்த பாடல் வரி ஒரு முழு வடிவைப் பெறுமாம். எப்படி? “மரத்தைப் புடிங்கினானே….” “பீமசேன மகாராஜா மரத்தைப் புடிங்கினானே…..” என்று. இப்படி ஒரு பாட்டை நாட்கணக்கில்கூட பாட வசதியுள்ளது தெருக்கூத்து.

    தெருக்கூத்தில் கதா பாத்திரங்கள் முதலில் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பாங்கே சிறப்பாக இருக்கும். முதலில் விதூஷகன் எனும் கோமாளி வந்து அன்று என்ன கூத்து என்பதை ஆடிப் பாடி விளக்குவான். ஜனங்கள் அவனை உள்ளே போகச்சொல்லி கூச்சலிடுவார்கள். பின்னர் கதாபாத்திரங்கள் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் தங்களை அறிமுகம் செய்து கொண்டபின் கதை ஆரம்பமாகும். புராணத்தில் வரும் ஒரு சிறிய கதை எடுத்துக் கொள்ளப்பட்டு நடிக்கப்படும். ஏராளமான ஒப்பனையுடன் பாத்திரங்கள் அபஸ்வரத்தில் பாடி ஆடி நடிப்பது கண்கொள்ளா காட்சி. போதாதற்கு ஒரு ஆண் பெண் வேடம் போட்டுக்கொண்டு முடிந்தவரை பெண்மை சாயலைக் கொண்டுவர முயற்சித்தாலும், அவனுடைய கரகரத்த ஆண் குரல் காட்டிக் கொடுத்துவிடும். இப்படிப்பட்ட தெருக்கூத்துதான் நமது நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் முன்னோடியாக இருந்திருக்கிறது.

    இப்படி தெருக்கூத்தில் ஊறியிருந்த தமிழகத்துக்கு விஜயநகர சாம்ராஜ்யம் உச்சத்தில் இருந்த சமயம் நாயக்க மன்னர்கள் தென் தமிழ்நாடு முழுவதையும் ஆங்காங்கே தங்கள் ராஜாங்கத்தை ஸ்தாபித்து அரசாட்சி செய்யத் தொடங்கினார்கள். அப்படி தஞ்சையை ஆண்டு நாயக்க மன்னர்கள் சேவப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் ஆகிய நால்வர் இங்கு ஆட்சி புரிந்திருக்கிறார்கள். இவர்கள் காலத்தில் சேவப்ப நாயக்கர் ஆட்சியின் கடைசி காலகட்டம் தொடங்கி ரகுநாத நாயக்கர் காலம் வரையிலான பொற்காலத்தில் இங்கு கோவிந்த தீக்ஷதர் என்பவர் அமைச்சராக இருந்தார். இவர் நான்கு வேதங்களையும் விஜயநகர சாம்ராஜ்யத்தில் படித்துப் பாண்டித்யம் பெற்றவர். இவரது காலத்தில் இவர் செய்த அரிய பணிகள் இன்றும் போற்றிப் பாராட்டப் படுகிறது.

    காவிரி நதியில் பல ஊர்களில் படித்துறை அமைத்தது, வேத பாடசாலைகள் அமைத்தது, கலைகளுக்கு முதன்மைத் தகுதி அளித்து கலைஞர்களைப் போற்றியது. கல்விச்சாலைகளை அமைத்தது, நிர்வாகத்தை ஒழுங்கு படுத்தி அரசாங்கத்தின் வருமானத்தை அதிகப்படுத்தியது, ஆலயங்களைப் புனரமைத்தும் புதிய ஆலயங்களை எழுப்பியும் இவர் செய்த தொண்டு போற்றத் தக்கது. திருவரங்கம் ஆலயத்துக்குப் பல கோபுரங்களையும் பிரகாரங்களையும் அமைத்த அச்சுதப்ப நாயக்கருக்கு ஊக்கசக்தியாக விளங்கியவர் இந்த கோவிந்த தீக்ஷதர். இவர்கள் காலத்தில் ஆந்திர தேசத்திலிருந்து இங்கு வந்ததுதான் பாகவத மேளா எனும் அரிய கலை. இது நரசிம்ஹ ஜெயந்தி எனும் விழாவையொட்டி நாட்டிய நாடகமாக நடிப்பார்கள். ஆண்களே பெண் வேடம் அணிந்து முழுக்க முழுக்க தெலுங்கில் பேசியும் பாடியும் நடிப்பது பாகவத மேளா. இந்த அரிய கலையைப் பற்றிய சில விவரங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

    நாயக்க மன்னர்கள் தஞ்சைக்குக் கொணர்ந்த இந்த அரிய கலை இப்போதும் தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் திட்டை எனும் ஊருக்குத் திரும்பும் சாலையிலிருந்து சுமார் ஐந்து கல் தொலைவில் அமைந்துள்ள மெலட்டூர் எனும் ஊரில் உயிர்ப்போடு நடைபெற்று வருகிறது. மெலட்டூர் எனும் வளமான கிராமத்துக்கு திட்டையைத் தாண்டி செல்ல வேண்டும் மெலட்டூரில் வரதராஜ சுவாமி எனும் பெருமாள் ஆலயத்தில் நரசிம்ஹ ஜெயந்தியை யொட்டி இவ்விழா நடைபெறுகிறது.

    பக்தர்களுக்கு, குறிப்பாக வைணவர்களுக்கு நரசிம்ஹ ஜெயந்தி சிறப்பான பண்டிகை. அந்த நரசிம்ஹ ஜெயந்தியன்று மெலட்டூர் கிராமமே களைகட்டிவிடும். காரணம் அன்றிரவுதான் அலங்கரிக்கப்பட்ட பந்தலில் “பிரஹலாத சரித்திரமு” எனும் தெலுங்கு மொழியிலான இசை நாடகம் நடத்தப்பெறும். மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் நான்காவது அவதாரம் நரசிம்ஹாவதாரம். உடல் மனித வடிவிலும் தலை சிம்ஹ வடிவிலும் இருக்கும். கிருஷ்ண பரமாத்மாவின் வாழ்வை சித்தரிக்கும் ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து மேலும் சில பகுதிகள் நாடகங்களாக நடத்துவார்கள்.

    இந்த விசேஷத்துக்காக இவ்வூரிலிருந்து வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் பணி நிமித்தமாகக் குடிபெயர்ந்த பலரும் நரசிம்ஹ ஜெயந்தி சமயத்தில் ஊர் திரும்பிவிடுவார்கள். அப்படி ஊர் திரும்புவர்களில் பலர் இந்த பாகவத மேளா நாடகங்களில் வேடமிட்டு நடிப்பவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு முன்பு இவர்களுடைய அப்பா, பாட்டனார் என்று வழிவழியாக நடிப்பவர்கள் அந்தந்த பாத்திரங்களைத் தாங்களே ஏற்று தொடர்ந்து இன்று வரை நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை ஏதோ பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக அல்லது தங்கள் திறமையைக் காட்டுவதற்கு என்றுமட்டுமில்லாமல் ஆத்மார்த்தமாக ஈடுபாட்டோடு பக்தி சிரத்தையாக செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக விரதமிருந்து தன்னை அந்தந்த பாத்திரங்களுக்கு அருகதையாக்கிக் கொள்ளும் அந்த ஈடுபாடு பாராட்டுப் போற்றத்தக்கதாக இருக்கும்.

    ஊர் வந்து சேர்ந்த விநாடி முதல் தங்கள் வேடத்துக்கான வசனம் பாடல்களை ஒத்திகைகளைப் பலமுறை பார்த்து எந்த தவறும் ஏற்பட்டுவிடாதபடி கவனத்தோடு மேற்கொள்வார்கள். இந்த அற்புதக் கலையை பல தலைமுறைகளுக்கு முன்பாக இங்கு கொண்டு வந்து இன்று வரை நடைபெறும்படியான பலமான அஸ்திவாரத்தை அமைத்துத் தந்த பிரம்மஸ்ரீ வேங்கட்டராம சாஸ்திரி என்பவரை இவர்கள் இன்றளவும் மனத்தில் நிறுத்தி போற்றி வழிபட்டு வருகிறார்கள். இவருடைய படைப்புகள் பல கதைகள் இருந்தாலும் இந்த நரசிம்ஹ ஜெயந்தியை யொட்டி நடைபெறும் பிரஹலாத சரித்திரம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது. நாடக பாத்திரங்கள் அந்த பாத்திரமாகவே மாறிவிட முடியுமா. உணர்வால் அப்படி ஆகிவிடுகிறார்கள் நரசிம்ஹம் இரணியனை மடியில் வைத்துக் கிழிக்கும் கட்டத்தில். அந்த நேரத்தில் ஏற்படும் உக்கிரத்தைத் தணிக்க அடடா, நிர்வாகிகள் என்ன பாடு படுகிறார்கள். நரசிம்ஹமாக வேடமிட்டவர் நிஜத்தில் நரசிம்ஹமாக ஆகிவிடும் காட்சி அற்புதம். காண வேண்டிய காட்சி.

    இந்த மெலட்டூரோ, அல்லது இங்கு நடக்கும் பாகவத மேளாவோ, தமிழ்நாடு சுற்றுலாத் துறையினரால் விளம்பரப்படுத்தப்பட்டு அதற்காக இங்கு ஆர்வலர்களை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் நாட்டியக் கலையில் ஆர்வமுடைய கலைஞர்கள் பலரும் இங்கு நடைபெறும் பாகவதமேளாவை கவனிக்கிறார்கள். ஆண்டுக்கு ஆண்டு இந்நிகழ்ச்சி பெற்று வரும் முக்கியத்துவம் மக்களால் உணரப்படுகிறது. இந்தக் கலை எத்தனை காலத்துக்கு முந்தையது, யார் இந்தக் கலையை வளர்த்தது, அல்லது இங்கு அறிமுகம் செய்தது போன்ற ஆராச்சியில் யாரும் ஈடுபடுவதில்லை. இங்கு மக்களோடு ஒருங்கிணைந்து இந்த மண்ணின் கலையாக இன்றும் பிரகாசித்துக் கொண்டிருப்பது பாகவத மேளா.

    14ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யம் விரிவு படுத்தப்பட்டு தென்னாடு முழுவதும் நாயக்க மன்னர்கள் ஆட்சியில் வந்தபோது பழைய சோழ சாம்ராஜ்யத்தின் பகுதிகளும் அவர்களது ஆளுமையின் கீழ் வந்தது. விஜயநகர சாம்ராஜ்யம் ஹிந்து சாம்ராஜ்யம் என்று புகழ் பெற்றதற்கிணங்க இந்து கோயில்கள் புத்துணர்வு பெற்றன. இடிபாடுகள் சரிசெய்யப்பட்டு புனருத்தாரணம் செய்யப்பட்டன. அழிந்தவை பலவாக இருந்தால் ஒன்றையாவது சரி செய்து மீண்டும் தலையெடுக்கச் செய்தனர் நாயக்க மன்னர்கள். அப்படி பல சைவ வைணவ ஆலய இடிபாடுகளிலிருந்து மீட்டெடுப்பு செய்யப்பட்ட பல கோயில்களில் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள செந்தலையும் ஒன்று என்று ஆய்வறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியம் எழுதுகிறார்.

    இப்படி புகழ் பரப்பி உருவான விஜயநகர சாம்ராஜ்யத்தை தக்ஷிண சுல்தான்கள் விட்டு வைப்பார்களா? அவர்கள் மீது போர் நடத்தி 1565இல் தலைக்கோட்டை யுத்தத்தில் வென்று விஜயநகர சாம்ராஜ்யத்தின் அழிவினைத் தொடங்கி வைத்தார்கள். விஜயநகரத்தின் ஆட்சியில் பெருமைக்குரியவர்களாக விளங்கிய பல பண்டிதர்கள், கவிஞர்கள், வேத விற்பன்னர்கள், கலைஞர்கள் என்று பலரும் அங்கிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் ராஜ்யத்தில் வந்து குடியேறினார்கள். இங்கு அப்போது (1560 முதல் 1600) வரையிலான நாற்பதாண்டு கால ஆட்சியில் அப்போதைய தஞ்சாவூர் நாயக்க மன்னரான அச்சுதப்ப நாயக்கர் அப்படி ஓடிவந்த கலைஞர்களுக்கு அடைக்கலம் கொடுத்து இங்கு குடி அமர்த்தினார். எந்தவொரு சாம்ராஜ்யத்தின் தலைநகர் ஒரு ஆற்றங்கரையில்தான் அமைந்திருக்கும். ஆனால் தஞ்சாவூர் காவிரி ஆற்றிலிருந்து பல கல் தொலைவில் இருந்ததால் இங்கு வந்தேறிய கலைஞர்கள் தஞ்சையைச் சுற்றி ஆற்றங்கரை உள்ள ஊர்களில் குடியேறி வசிக்கத் தொடங்கினார்கள்.

    1125 முதல் 1150 வரை சோழ நாட்டை ஆண்ட விக்கிரம சோழன் என்பான் பூமியில் புதையுண்டிருந்த ஒரு பெரிய லிங்கத்தை தோண்டியெடுத்து அங்கு ஒரு ஆலயத்தை நிறுவி அந்த இடத்துக்கு உன்னதபுரி என்றும், அங்கு குடிகொண்டி ஈசருக்கு ‘உன்னதபுரீஸ்வரர்’ என்றும் பெயர் சூட்டியிருந்தான். ஆக 12ஆம் நூற்றாண்டில் உருவாகியிருந்த இந்த உன்னதபுரியில்தான் இப்போது குடிபெயர்ந்து வந்த கலைஞர்களை நாயக்க மன்னரின் அமைச்சராக விளங்கிய கோவிந்த தீக்ஷிதரின் ஆலோசனையின் பேரில் குடியேறினார்கள். அப்படி இங்கு குடியேறிய குடும்பங்கள் 510 என்கிறது ஆதாரங்கள். இங்கு குடி அமர்த்தப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு வீடு, அந்த வீட்டுக்குத் தனியாக ஒரு கிணறு, விவசாயம் செய்ய நிலம், கன்றோடு கூடிய ஒரு கறவை பசு ஆகியவை கொடுக்கப்பட்டன. இவர்கள் தவிர கைத்தொழில்களில் திறமை படைத்தவர்கள் பலரும் இவர்களைப் போலவே இங்கு குடியமர்த்தப்பட்டனர்.

    அரசர் அச்சுதப்ப நாயக்கர் தன்னுடைய அமைச்சர் கோவிந்த தீக்ஷிதர் சொல்லை வேதவாக்காக எடுத்துக் கொண்டு செயல்படுபவர். நாயக்க மன்னருடைய பல பெருமைகளுக்கு இந்த அமைச்சரே காரணமாக இருந்தார் என்றால் மிகையல்ல. இப்படி தெலுங்கு நாட்டிலிருந்து வந்த பிராமணர்களை அவ்வூரில் இருந்த உன்னதபுரீஸ்வரர் ஆலயத்தைச் சுற்றி குடியமர்த்தி அக்ரகாரத்தை உருவாக்கினார். கோயிலை மேலும் விரிவுபடுத்திக் கட்டி அதற்கு குடமுழுக்கையும் செய்வித்தார். ஆலயத்துக்கு முன்புறமாகஒரு திருக்குளத்தையும் தென்மேற்கில் ஒரு குளத்தையும் அமைத்துக் கொடுத்தார். கோயிலுக்கு முன்புள்ள குளம் “சிவகங்கை தீர்த்தம்” எனவும், மற்றது அமைச்சர் தீக்ஷிதர் பெயரால் “ஐயன் குளம்” என்றும் வழங்கப்படுகிறது. இங்கு குடியேறிய பிராமணர்கள் அனைவரும் தெலுங்கு மொழி பேசுபவர்கள் என்பது சொல்லாமலேயே விளங்கும் அல்லவா?

    இப்படி நாயக்க மன்னருடைய ஆதரவும், அமைச்சர் கோவிந்த தீக்ஷிதரின் ஒத்துழைப்போடும் குடியேறியவர்கள் உன்னதபுரத்தை கலைகளில் சிறந்து விளங்கும் உன்னதமான புரமாக ஆக்கிவிட்டனர். நாயக்க மன்னர்கள் வைணவர்கள் எனும் முறையில் இங்கு வைணவத்தோடு அவர்கள் சுமந்து வந்த கலைகளும் வைணவ புராணங்களைச் சொல்பவைகளாகவும், இசை, நாட்டியம் ஆகிய கலைகளையும் இங்கு வளம்பெற செய்து வந்தார்கள். ஆக, இவர்களால் தெலுங்கு பிரதேசத்துக் கலைகளை இவர்கள் இங்கு கொண்டு வந்து கண்ணும் கருத்துமாக வளர்க்கத் தொடங்கினார்கள்.

    இப்படி உன்னதபுரியாக இருந்த சோழ நாட்டு ஊர் அச்சுதப்ப நாயக்கரின் கருணையால் பற்பல கலைகளும் தழைத்தோங்கிய காரணத்தால் இவ்வூரை அச்சுதபுரம், அச்சுதபுரி, அச்சுதாப்தி என்றெல்லாம் மக்கள் அழைக்கத் தொடங்கினர். அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் இவ்வூர் பெயர் மாற்றம் பெற்றது. இந்த அச்சுதபுரியே இன்றைய மெலட்டூர் கிராமம்.

    இங்கு குடியேறியவர்கள் மூச்சிலும் பேச்சிலும் இசையும் நடனமும் இருந்த காரணத்தால் இவர்களில் பலர் இசைக் கலைஞர்களாகவும், பாடல்களை இயற்றியும் பாடவும் கூடிய வாக்யேயக் காரர்களாய், நடன மணிகளாய் விளங்கினர். இப்படி அச்சுதபுரி எனும் மெலட்டூர் கலைகட்கு புகலிடமாக இருப்பதறிந்து தெலுங்கு பேசும் நாட்டிலிருந்து குடிபெயர்ந்து வேறு சில இடங்களில் குறிப்பாக பரவாக்கரை, மாணாங்கோரை, பள்ளியகரம் ஆகிய ஊர்களிலிருந்தும் கலைஞர்கள் இவ்வூருக்குக் குடிபெயர்ந்தார்கள். இப்படி நாளுக்கு நாள் கலைகளில் ஆர்வமுடையோர் வந்து குவியவும் இவ்வூர் ஜனத்தொகை மிக்கதோர் கலைநகர் ஆகியது.

    இப்படி இருந்து வரும் போது, அச்சுதப்பருக்குப் பிறகு ரகுநாத நாயக்கர், அதன்பின் அவர் மகன் விஜயராகவ நாயக்கர் ஆகியோர் காலத்தில் இங்கு குடியேறிய வம்சங்கள் மேலும் பெருகித் தழைத்தன. தஞ்சையின் கடைசி நாயக்க அரசர் விஜயராகவ நாயக்கரும் அவர் மகன் மன்னாருவும் போர்க்களத்தில் மதுரை சொக்கநாத நாயக்கரால் விஜயராகவரின் முதுமைப் பருவத்தில் கொல்லப்பட்டு விட்டதால், மராத்தியர்கள் ஆட்சி தஞ்சையில் மலர்ந்தது. ஏகோஜி எனும் சத்ரபதி சிவாஜியின் சகோதரர்தான் தஞ்சையின் முதல் மராத்திய மன்னர். பின்னர் அவர்கள் வம்சம் தஞ்சையை ஆண்டு கொண்டு வந்த நேரத்தில் 18ஆம் நூற்றாண்டில் தஞ்சையை துளஜேந்திர ராஜா (1728 முதல் 1735வரை) ஆண்டு கொண்டிருந்த நேரத்தில் காஞ்சிபுரம் பக்கத்திலிருந்து ஒரு பெரும் கூட்டம் குடிபெயர்ந்து மெலட்டூர் வந்து குடியேறினர். இவர்கள் மன்னர் துளஜாவின் ஆதரவைப் பெற்றிருந்த காரணத்தால், இங்கு ஊரின் வடமேற்கில் வரதராஜ பெருமாளுக்கு ஒரு கோயிலை எழுப்பினர். அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாள் சிலையை அவர்கல் காஞ்சியிலிருந்து கொண்டு வந்திருந்தனர். அப்போது காஞ்சி மீது படையெடுத்து வந்த முஸ்லீம் படையெடுப்பாளர்களிடமிருந்து காப்பாற்ற இந்த தெய்வ மூர்த்தம் இங்கு கொண்டு வரப்பட்டதாக வரலாறு உண்டு.

    இப்படி ஊர் வளர்ச்சியடைய அடைய வசதிகளும் தேவைப்பட்டன. இதன் பொருட்டு ஊரின் மேற்கி ஒன்றும், வட மேற்கில் ஒன்றுமாக இரண்டு குளங்கள் வெட்டப்பட்டன. இவை நாராயண தீர்த்தம் என்றும் மற்றொன்று கருட தீர்த்தம் என்றும் பெயர் பெற்றன. துளஜாவுக்குப் பிறகு பட்டத்துக்கு வந்த பிரதாபசிம்ஹ மகாராஜா காலத்தில் ஒரு யோக நரசிம்ஹர் பிம்பம் நாராயண தீர்த்தக் கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் காலத்தில்தான் விருத்த காவேரி என வழங்கப்பட்ட வெட்டாற்றங்கரையில் ஒரு நந்தவனமும் ஒரு படித்துறையும் அமைக்கப்பட்டது.

    மெலட்டூரில் பரதம் காசினாதையா எனும் சிறந்த கலைஞர் தோன்றினார். இங்கு நாயக்க மராத்திய மன்னர்களான விஜயராகவ நாயக்கர், ஷாஜி மகாராஜா ஆகியோர் இயற்றிய நாட்டிய நாடகங்களையொட்டி நிருத்திய நாடகங்கள் உருவக்கப்பட்டன. கோபாலகிருஷ்ண சாஸ்திரி என்பவர் இந்தக் காலத்தில் மிகச் சிறந்த கலைஞராகப் போற்றப்பட்டிருக்கிறார். இந்த கோபாலகிருஷ்ண சாஸ்திரி என்பவரின் புதல்வர்தான் வெங்கட்டராம சாஸ்திரி என்பார். இவர்தான் பாகவத மேளா நாடகங்களை ஆக்கித் தந்தவர். இவரது காலம் 1743 முதல் 1809).

    இவருடைய தந்தையிடமிருந்து வெங்கட்டராம சாஸ்திரி வேத உபநிஷதங்களைப் பயின்றார். புராணங்களைக் கற்றார். இவருடைய குரு மெலட்டூர் லக்ஷ்மணையா என்பவர். இவர் வீரபத்ரையா என்பவரின் சீடராவார். இவர் காவ்யம், நாடகம் அலங்காரம் ஆகிய துறைகளில் விற்பன்னராகத் திகழ்ந்தார். தெலுங்கு, சம்ஸ்கிருதம், இசை, நாட்டியம், நாடகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய வெங்கட்டராம சாஸ்திரி மெலட்டூர் பாகவத மேளாவுக்கு சிறந்த அறிமுகத்தைக் கொடுத்தார்.

    பனிரெண்டு புதிய நாட்டிய நாடகங்கள் உருவக்கப்பட்டன. இங்கு இயற்றப்பட்ட அனைத்து நாடகங்களையும் இவ்வூரில் கோயில் கொண்டுள்ள வரதராஜ பெருமாளுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. இவர் தன்னுடைய நாட்டிய நாடகங்களில் நடிக்க அவ்வூர் அக்ரகாரத்தைச் சேர்ந்த இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, வரதராஜ பெருமாள் சந்நிதியில் அரங்கேற்றி வந்தார். அப்படி நாடகங்கள் நடக்கும் தினங்களில் உத்சவ விக்கிரகம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்படும். இவருடைய நாட்டிய மேளா குழுமத்தில் ஆண்களுக்கு மட்டுமே இடம் உண்டு. பெண்கள் பாத்திரங்களையும் ஆண்களே ஏற்று நடிப்பார்கள். இந்த முறை இந்நாள் மட்டும் கண்டிப்பாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கு ஏன் “பாகவத மேளா” என்று பெயர் வந்தது? தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? ஆம், அதற்கு விடை: “இதனை நடத்துபவர்கள், நடிப்பவர்கள், பாடுபவர்கள் அனைவருமே பாகவதர்கள், இங்கு நடிக்கப்படும் கதைகள் அனைத்தும் ஸ்ரீமத் பாகவத புராணத்திலிருந்து எடுக்கப்பட்டவை, எனவே இதற்கு பாகவத மேளா என்று பெயர் ஏற்பட்டது.” இந்த பாகவத மேளாவில் நடிக்கப்படும் அத்தனை பாகவத கதைகளிலும் நரசிம்ஹ ஜெயந்தி அன்று நடிக்கப்படும் “பிரஹலாத சரித்திரமு” கதைதான் மிக உயர்வானது, பலராலும் பார்த்துப் பாராட்டப்படுவது, உணர்ச்சி பூர்வமானது, நரசிம்ஹ ஜெயந்தியன்று நடிக்கப்படுவதாலும், இதில் நரசிம்ஹரின் உக்ரம் யதார்த்தமாக இருப்பதாலும் இதுவே மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

    வெங்கட்டராம சாஸ்திரி தன்னுடைய நாடகங்களைத் தஞ்சை மராத்திய மன்னர் அவைகளில் நடத்திக் காட்டியிருக்கிறார். இவரது நாட்டிய நாடகங்களைப் பார்த்து ரசித்த பல்லாயிரக் கணக்கானவர்களில் சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளும் ஒருவர். இந்தக் கலை மெலட்டூரிலிருந்து மெல்ல நகர்ந்து அருகிலுள்ள ஊர்களுக்கும் செல்லலாயிற்று. அப்படிச் சென்ற ஊர்களில் ஊத்துக்காடு, சூலமங்கலம், தேப்பெருமாநல்லூர் ஆகியவைகளாகும்.

    தஞ்சையிலிருந்து திருவாரூர் மார்க்கத்தில் உள்ள சாலியமங்கலத்திலும் ‘பாகவத மேளா’ நடத்தப்படுகின்றது. இங்கு மெலட்டூருக்கும் முந்தைய காலகட்டத்திலேயே இந்தக் கலை வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இதை பஞ்சநத பாகவதர் என்பார் அறிமுகம் செய்ததாகச் சொல்வர். ஆக இந்த பாகவத மேளா, முழுவதும் தஞ்சை ஜில்லாவின் ஒரு சில கிராமங்களில் இன்றளவும் நடத்தப்பட்டு வருகிறது.

    ஒரு காலகட்டத்தில் தொய்வு ஏற்பட்ட நிலையில் இதனை மீண்டும் தூக்கி நிறுத்திய பெருமை பரதம் நடேச ஐயர் என்பவரைச் சாரும். இவர் மெலட்டூரில் 1865 1935 காலகட்டத்தில் வாழ்ந்தவர். இன்று இந்த பாகவத மேளாவைப் பற்றிய செய்தி கடல் கடந்த நாடுகளுக்கும் சென்றதன் விளைவாக அங்கிருந்தெல்லாம் பலர் தங்களுடைய ஆராய்ச்சிப் படிப்புக்காக இங்கு வந்து பாக்வத மேளா பற்றி ஆய்வுக் கட்டுரைகளை எழுதி முனைவர் பட்டம் பெறுகிறார்கள். அப்படியொரு பெண்மணி ஜப்பான் டோக்யோ நகரிலிருந்து இங்கு வந்து குடியிருந்து இந்தக் கலை பற்றிய அரிய செய்திகளைக் கொடுத்து முனைவர் பட்டம் பெற்றார். அவர் பெயர் மேடம் தகாதா. இவர் போன்ற பல அயல் நாட்டாரையும் கவர்ந்திழுக்கக் கூடிய கலையாக இந்த அரிய கலை விளங்குகிறது. மன்னர்கள் காலம் போய் இப்போது மக்கள் நாயகம் மலர்ந்துவிட்டதால் இனி இந்தக் கலையை ஆதரிக்க வேண்டிய கடமை மக்களுக்குத்தான் இருக்கிறது. வாழ்க பாகவத மேளா. வாழ்க கலைகள்.

    Share
  • உருப்பட…

     


     -செண்பக ஜெகதீசன்

     

    உருக்கிய தங்கம்தான்

    உருப்பெறுகிறது

    விலையுயர் அணிகலனாய்..

     

    அடித்து நீட்டிய செம்புதான்

    எடுக்கிறது வடிவு,

    மின்கம்பியாக..

     

    உளியால்

    உடைபடும் கல்தான்

    உருவமாகிறது சிலையாக..

     

    சிந்தித்திடு மனிதா,

    சிறிதும் பெரிதுமாய்த் துன்பந்தான்

    வாழ்வில்

    சிறப்பைத் தருகிறது…!

     

             

     

    Share
  • அத்திக்காய் காய் காய்..

    கவிஞர் காவிரி மைந்தன்

    கண்ணதாசன் என்கிற திரையுலகக் கம்பன் – தன் முன்னோர்கள் – தமிழ்ச் சான்றோர்கள் – புலவர் பெருமக்கள்தம் படைப்புகளில் ஆழ்ந்து உணர்ந்து, அப்பாடல்களின் பொருளுணர்ந்து, புளகாங்கிதம் அடைந்தது மட்டுமின்றி, பலரும் புரியும்வண்ணம் அச் செய்திகளை உள்வாங்கி, தமக்கே உரிய பாணியில் திரைப்பாடல்களில் வழங்கியிருக்கும் பல பாடல்கள் கவிஞரின் திறமைக்கு சான்று பகர்கின்றன.

    காய் என்கிற சொல்லை அடுக்கடுக்காய்வைத்து பல்வேறு காய்களைச் சுட்டிக்காட்டி தன் அத்தை மகள் சமைத்த சமையலைப் பாடும் காளமேகப் புலவரின் பாடல் ஒன்று..

    ‘கரிக்காய் பொரித்தாள் கன்னிக்காயை தீர்த்தாள்

    பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள்’ என்று காய் அடுக்கு நான்கு முறை கூறப்பட்டு நயமுற அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் வியந்த கண்ணதாசன், 25 முறை காய் என்னும் சொல்லை வைத்து விளையாடுகிறார். அத்திக்காய் காய் காய் காய் ..ஆலங்காய் வெண்ணிலவே.. என்கிற பாடலில் கேட்பவர் நெஞ்சம் மகிழும்படி பாடுகிறார்..

    காளமேகப் புலவரின் இருபொருள் நயங்களில் மயங்கி இலை மறை காயாகப் பலமுறை இவரும் வார்த்தைகளை வடித்தெடுத்துத் தருகிறார்.

    பலே பாண்டியா என்கிற திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாட்டு,எழுதப்பட்ட போது இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் ‘என்னய்யா? கொத்தவால் சாவடியையே பாடலில்கொண்டு வந்திருக்கீரே.. என்று சொல்ல.. கண்ணதாசன் அவரிடம் எவ்வளவோ பாடல்கள் நீங்க கேட்கிறமாதிரி எழுதித் தருகிறேன்.. இதுமாதிரி ஒருசில பாடல்கள் எனக்காக இருக்கட்டும் என்று சொல்லி இடம்பிடித்த பாட்டு இது..

    அந்த திக்காய் காய்.. என்று வெண்ணிலவை கவியரசர் இருபொருள்பட .. ஒவ்வொரு வரியிலும் வார்த்தை விளையாட்டு நடத்தியிருக்கிறார்.

    தமிழின் அழகு கொட்டிக்கிடக்கும் திரைப்பாடலைக் காணுங்கள்! பொருளின் சுவையும் அறிந்தபடி இசையில் கொஞ்சம் மயங்குங்கள்!!

    அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
    இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
    நீ என்னைப்போல் பெண்ணல்லவோ

    அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
    இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
    என்னுயிரும் நீயல்லவோ
    (அத்திக்காய்..)

    கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்
    அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக் காய்
    (கன்னிக்காய்..)
    மாதுளங்காய் ஆனாலும் என்னுள்ளங்காய் ஆகுமோ
    என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
    இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

    இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த ஏலக்காய்
    நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்
    (இரவுக்காய்..)
    உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
    என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
    (அத்திக்காய்..)

    ஏலக்காய் வாசனைப்போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
    ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக்காய்
    (ஏலக்காய்..)
    சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா
    என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
    (அத்திக்காய்..)

     
    http://www.youtube.com/watch?v=2yjVzhSK_t8
    http://www.youtube.com/watch?v=2yjVzhSK_t8

     

    காவிரிமைந்தன்

    நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்

    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)

    சென்னை 600 075.

    தற்போது – அபுதாபி  (அமீரகம்)

    00971 50 2519693

    kaviri2012@gmail.com

     

    Website: thamizhnadhi.com

    அத்திக்காய் காய் காய் – Athikkaai kaai kaai aalankaai vennilave
    Share
  • மதிய உணவின் முன்னோடி!

    பவள சங்கரி

    தலையங்கம்

    singaravelar 01‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலனாரின் பிறந்த நாள் இன்று. பொதுவுடமைவாதியும், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தொழிற்சங்கவாதியுமான இவர், வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பாளர்களுக்கென்று ஒரு சிறப்பு தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற நல்ல சிந்தையை முன்னெடுத்தவர். அத்தோடு கர்மவீரர் காமராசர் வெற்றிகரமாக செயல்படுத்தி இலட்சக் கணக்கான குழந்தைகள் கல்வியறிவு பெற வழியமைத்துக் கொடுத்த மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடியாக இருந்தவரும் திரு சிங்காரவேலனார் அவர்களே. நூற்றுக்கணக்கான இவருடைய நூல்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சமீபத்தில் மேற்கொண்ட ஒரு கருத்துக் கணிப்பில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களில், 8ம் வகுப்பு பயிலும் 74 சதவிகித மாணவர்களுக்கு சாதாரண கூட்டல், கழித்தல் கணக்கு கூட தெரியவில்லை என்றும், 40 சதவிகித சிறார்களுக்கு வகுத்தல் என்பதும் புரியவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை அளிக்கின்றனர். அப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீரோ அல்லது கழிவறை வசதிகளோ கூட இல்லை என்ற தகவலும் அதிர்ச்சியளிக்கக் கூடியது. 2011இல் உச்ச நீதி மன்றத் தீர்ப்பின்படி அனைத்துப் பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்கென்று தனி கழிவறை இருக்க வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டும், சென்ற வாரம் ஆசர் எடுத்த கருத்துக் கணிப்பின்படி, 54 சதவிகித பள்ளிகளில் மட்டுமே பெண் குழந்தைகளுக்கான தனி கழிவறை இருப்பதாகத் தெரிகிறது. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைக் காட்டிலும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மிகவும் பின்தங்கியிருப்பதைக் காண முடிகிறது. கிராமப் புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆயினும் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் தேவையான ஆசிரியர்கள் இல்லை என்பதும் வேதனைக்குரிய விசயம்.

    பாராளுமன்றத் தேர்தல் திருவிழா வருகிறது. செலவழிக்க பணமூட்டைகள் தயார். எந்தப் பெயரில் கொடுத்தாலும் வாங்குவதற்குத் தயாராகவும் ஒரு கூட்டம். தொலைக்காட்சிப் பெட்டியா, மாவரைக்கும் இயந்திரமா, குளுகுளு மின்விசிறியா, மடிக் கணினியா, இல்லை காந்திப்படம் போட்ட நோட்டா.. எதைக் கொடுத்தாலும் வாங்கத் தயார். வாக்களிக்க சத்தியங்களும் அள்ளி வழங்கப்படும்!

    இந்திய ஜனநாயகமும், வாக்குச் சுதந்திரமும் படும்பாடுதான் இது. மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டியது ஆட்சியாளரின் கடமை . இவ்வளவு நாள் ஆட்சியில் இருந்துவிட்டு நாங்கள் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று பட்டியல் போட்டு பல ஆயிரம் கோடி செலவு செய்து விளம்பரம் செய்து மக்களுக்கு நினைவூட்ட வேண்டிய நிலையிலேயே இன்றைய ஆட்சியாளர்கள் இருப்பது கண்கூடு. ஒன்றுபட்ட இந்தியாவிற்குரிய இரும்பு மனிதர் என்று பேசப்பட்ட வல்லபபாய் பட்டேலுக்கு இரண்டு கட்சியினரும் போட்டியிடும் கேலிக்கூத்தும் அரங்கேறுகிறது. அவர் செய்த செயல்கள் மற்றும் அவருடைய கொள்கைகளை மட்டுமே நாங்கள் பின்பற்றுகிறோம் என்று கூற ஏதேனும் உதாரணம் காட்டியோ அல்லது நல்ல செயல்களைச் செய்து அதன் மூலம் அவருடைய பெயரை நிலைநாட்ட முனைந்தாலோ அவர்களுக்கு வாக்களிக்க வாக்காளர்களுக்கு தயக்கம் இல்லாமல் போகலாம். தொட்டிலையும் ஆட்டி விட்டு பிள்ளையையும் கிள்ளிவிடுவது போல டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டு, உழைப்பவர்களின் வருமானங்களை உறிஞ்சிய பிறகு அவர்களின் இல்லங்களுக்கு எதற்கு இலவசங்கள். அப்பனிடமிருந்து பணத்தை பிடுங்கிக்கொண்டு பிள்ளைகளுக்கு விலையில்லா மடிக்கணினி எதற்கு? ஆளும் கட்சியினர், எதிர்க் கட்சியினர் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவருக்குமே இந்தத் தேர்தல் திருவிழாவின்போது மட்டும்தான் மக்களைச் சந்திக்க முடிகிறது. மாறி வரும் இளைய சமுதாயம் இதையெல்லாம் கவனத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு சரியான வழிகாட்டும் விதமாக வல்லபபாய் பட்டேலாகவும், லோக மானிய திலகராகவும், ஜெயப்பிரகாஷ் நாராயணனாகவும் மாறி வழி நடத்தினால் பின்வருபவருக்குத் தயக்கம் ஏது என்பதையும் உணர எவரும் முனைவதாகவும் இல்லை.

    டாஸ்மாக் கடைகளையும், மணல் குத்தகையையும் அரசு எடுத்துக் கொண்டு வருமானம் பார்ப்பதைக்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். அனைத்துப் பள்ளிகளையும் தேசியமயமாக்கி, குழந்தைகளுக்கு விலையில்லா கல்வியைக் கொடுக்கும்பட்சத்தில்! விலையில்லா இலவசங்களை விடுத்து விலையில்லாத கல்வியை மட்டும் கொடுத்து இளைய சமுதாயத்தை வளரவிட்டால் போதும். பாடத்திட்டம் எதுவாக இருப்பினும் அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுங்கள் விலையில்லாக் கல்வியை!

    Share
  • ஷீரடி பாபா வெண்பாக்கள்

    கிரேசி மோகன்

     

    தாயி தகப்பன் ஒறவுமுற எல்லாமே

    ஓவியம் : கிரேசி மோகன்
    ஓவியம் : கிரேசி மோகன்

    சாயி பகவானே நீதான்யா -சேயெனக்
    காப்பாத்த வேண்டிக் கனிவோடு அன்னைக்கு
    நீபாத்த தொன்றே நிசம்….(நண்பன் ”சு.இரவி” எழுதியது)….

    அக்கல்கோட் ராஜன் அவதார மானவா
    சிக்கல்கட் டாமிந்த சம்சாரம் -வெக்கங்கெட்
    டீரடியும் சேற்றினில் வைத்திங்கு சீரழிந்தோம்
    ஷீரடி ஆற்றில் செலுத்து….(1)

    சுகவாணி சாயி கமலவாசி சாயி
    மகமாயி சாயி அயனரியரன் -சாயி
    முகமதுவும் சாயி முனியேசு சாயி
    அகமதை ஷீரடியாய் ஆக்கு….(2)….

    மோதக மூக்கனே சாதக வாக்கனே
    தீதற போக்கிடும் போக்கனே -மாதவா
    சாயி மஹராஜா தாயின் அருள்சொரியும்
    ஆயி மகமாயி ஆவ்….(3)….

    தாயினால் மண்தோன்றி நோயினால் மண்மூடும்
    காயமிது பொய்யென்று காணுவாய் -மாயமாய்
    ஆயிரம் ஒன்றாகும் ஒன்றா யிரமாகும்
    சாயிராம் சேவடியில் சேர்….(4)

    விண்டுரைக்க வொண்ணா விளையாட்டுப் பிள்ளையை
    பண்டரிக்குள் வாழும் பகவானாய் -கண்டறிவாய்
    ஷீரடி சாயியவன் சேவிப் பவர்க்கருள
    வேரடி பாயும் விழுது….(5)

    உதியெடுத்(து) உந்தன் நுதலிலே பூசி
    கதியென்று சாயி கமலப் -பதமிரெண்டை
    பற்றிவாழ பாவங்கள் பற்றாது, பாபாவை
    சற்றுநேரம் சிந்திக்க சித்து….(6)

    நட்டநடு கானகம் நாற்புரமும் சாகரம்
    எட்டுவித கோணலாய் இவ்வாழ்க்கை -விட்டுவிட
    புத்தியில்லை, வெற்றிபெற சக்தியில்லை சத்குருவே
    பித்தனிவன் பேதமையைப் போக்கு….(7)

    தாயி தகப்பன் தெய்வமே ஷீரடி
    சாயி மகராஜா சத்குரு -சேய்நான்
    படித்த உமது சரித்திரம் பாடி
    முடிக்க அருள்வீர் மகிழ்ந்து….(8)

    சாதுவாய் ஷீரடி சொந்தங்கள் காத்திட
    கோதுமை மாவை அரைத்தது -தீதுரு
    காலரா நோயை வாலறுத்(து) ஓட்டிடும்
    போலோராம் சாயிநாதன் போக்கு….(9)

    வாயினால் பேசி வசனத்தை உச்சரிக்க
    சாயிராம் வாக்கை சரியாக்கு -தூயவா
    ஷீரடி வந்துன்னை சேவிக்கும் நாளன்று
    கூறிடுவேன் நன்றிக் கடன்….(10)

    சகிப்பு, வினயம், சகோதர பாவம்
    உகக்கும் அனைத்தையும் ஒன்றாய் -அகத்தும்
    புறத்தும் சமரச சன்மார்கம் காண
    சிரத்தினில் ஷீரடி சூடு….(11)

    கெட்டபுத்தி செய்கைகள் விட்டகன்(று) ஓடிட
    புட்டபர்த்தி பாதம் பணிந்திடு -பட்டுமலர்
    நித்தியமும் நெஞ்சில் நிறுத்த நிறுத்திடும்
    சத்யம் சிவசுந் தரத்து….(12)

    பத்திரம் பாதுகாப்பு பாபாவின் ஷீரடி
    சத்திரச் சாவடியில் சாஸ்வதம் -நித்திரை
    சொப்பனம் மற்றும் சகஜத்தில், சாயிராம்
    எப்பவும் காப்பு எமக்கு….(13)

     

    பன்றிக் காய்ச்சல் ஊரில் பரவிய போது….
    ——————————————————
    வந்திருக்கும் பன்றி வியாதி வெகுண்டோட
    எந்திரத்தில் முன்போல இட்டரைப்பாய் -உன்திறத்தைக்
    காட்டருள் பாபா கலங்குகிறோம், நீயல்லால்
    கூட்டெமெக்கு வேறிங்கார் கூறு….(14)

    பேட்டி எடுக்க லஷ்மி நரசிம்மனும் & க்ளிக் ரவி
    வந்தபோது எழுதியது….
    ————————————————————–
    ஆறடி மண்ணில் அடங்கும் உடலோடு
    மாரடித்துப் பார்த்தேன் முடியவில்லை -ஷீரடி
    நாதா சரண்புகுந்தேன் நின்னை, எனக்கருள்
    ஏதே னுமனுபூதி யை….(15)

    ஆள்காட் டிவிரல் அடுத்தவிரல் வாயிலாய்
    தாள்காட்டும் கட்டைவிரல் தீண்டிட -மால்கட்டின்
    வேரடிக்குப் பாய்ந்து வினைமரம் சாய்த்திடும்
    ஷீரடி பாபா செயல்….(16)

    மாபாவம் செய்தும் மகனீயர் ஷீரடி
    பாபா சரணம் புகுந்தோரை -ஆபாச
    இச்சைகள் அண்டாது என்றென்றும் காத்திடும்
    உச்சியில் இட்ட உதி….(17)….07-09-2011

    வேப்ப மரத்தடியில் வீற்று மருந்தாக
    காப்பிடும் சாயி கசப்பாக -சாப்பிடத்
    தந்தாலும் நோய்க்கு தருகற் பகமாகி
    வந்தோர்க்கு வாழ்வில் வலுவு….(18)

    காம துனியெரித்து நாம உதியெடுத்து
    தாமசம் தீர்ப்பாய் தகப்பன்சாய் -ராமனே
    வேம்பாமென் நெஞ்சில் விளைந்த குருஸ்தானில்
    ஆம்பிளை அம்மா அமர்….(19)

    கந்தலா னாலுமதைக் கொண்டுத் திரம்கட்டி
    மந்திரமாய்த் தொங்கும் மரவணையில் -அந்தரத்தில்
    எங்கணம் ஏறினீர், அங்கணம் பாபாவே
    இங்கெனக்கோர் உச்சி இடு….(20)

    தீர்த்தங்கள் ஏழும் தளும்பிடும் ஷீரடி
    மூர்த்தியின் பாதத்தில் MunNiiraai -ஆர்த்தி
    எடுபுத்தி, அன்பாம் எரியூட்டி, ஆர்வத்
    துடன்பக்தி நூலே திரி….(21)

    அச்சுதன் சம்பு அயனுரு ஆனவா
    சச்சிதா னந்தகுரு சாயிராம் -இச்சிறை
    ஆறடிப் பொந்தில் அடைபட்(டு) உழல்கிறேன்
    ஷீரடியில் சேர்ப்பாய் சரண்….(22)

    ஆயிரம் அம்மாக்கள் ஆகுமோ ஈடாக
    சாயிராம் தாய்க்குச் சமானமாய் -நோயினால்
    ஆறடி ஓய்ந்தாலும் ஆன்ம சுகம்தரும்பார்
    ஷீரடி மாயி சிரிப்பு….(23)

    ஆடை கபினி அணிந்தடி யார்களின்
    பாடை அதற்குள் பதுக்கிடும் -வீடை,
    அறம்பொருள் இன்பம் அளித்திடும் வேப்ப
    மரம்நிழல் சாயி மகான்….(24)

    ஆரத்தி நேரத்தில் ஆலயம் சென்றுனது
    பாரத்தை பாபாவின் பாதத்தில், -ஈரத்தில்
    கண்கள் பளபளக்க கைகூப்பி சேர்க்கமனப்
    புண்கள் மலராய் பிறப்பு….(25)

     

     

    Share
  • திருமால் திருப்புகழ் (1)

     

    கிரேசி மோகன்

    Tamil-Daily-News-Paper_52750360966
    தனதன தனான தனதன தனான
    தனதன தனான-தனதான

    “இறகும யிலாடி இலகுசு ருள்கேச
    இடையர்ம கனான -பெருமாள்காண்
    விரைகள பகோபி நடுவில்க ஸுதூரி
    திலகநு தல் பூணும் – பெருமாள்காண்
    கரியவி ழிபாசம் பொழியவ ருராம
    கவுசலை குமார -பெருமாள்காண்
    குமிழழ குவேத மொழிநில வுஸ்வாஸம்
    உமிழள வுநாசி -பெருமாள்காண்
    கறவையி னம்மேய குழலமு தகானம்
    பொழிஅத ரராக – பெருமாள்காண்
    ஜனகம கள்சாய சவுகரி யமான
    விரியுநெ டிமார்பு -பெருமாள்காண்
    விரையவி ரிவானம் ,உலகள வுகாணும்,
    தொழுமுள ரிபாத -பெருமாள்காண்
    அருணகிரி நாதர் வருணனை யிலேளும்
    மருகன்மு றைமாம -பெருமாளே”….
    —————————————————————

     
    தனதன தனான தனதன தனான
    தனதன தனான-தனதான

    “திரைகட லுளோடி திரவிய வியாச TN_145110000000
    மறைகொண ருமீன -பெருமாள்காண்
    வரைவழு விடாது வலியமு துகாள
    உருவில்க டலாமை -பெருமாள்காண்
    சிறையவ னிமீள விரையும வதார
    வடிவுரு வராக -பெருமாள்காண்
    இரணிய விரோதம் ஒழி,பிர கலாத
    அழையவ ருசீய -பெருமாள்காண்
    வரமரு ளமாவ வலிமுடி யிலேறி
    உலகள வுகாணு -பெருமாள் காண்
    மழுபர சுராம,உழவுப லராம
    பழகுகு கராம -பெருமாள்காண்
    இறையென உலாவி பறவையே னவேடன்
    இரையுறு முராரி -பெருமாள்காண்
    தருமம துவாழ தரணிஅ வதார
    தசமுக புராண -பெருமாளே”….
    —————————————–

    படத்திற்கு நன்றி : http://www.tamilthottam.in/t35761-topic

     

    Share
  • மன அமைதிக்கு வித்து! – வேறுபாடற்ற மனித தத்துவம்

    பவள சங்கரி

    பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
    பேணி வளர்த்திடும் ஈசன்
    மண்ணுக்குள்ளே சில மூடர் – நல்ல
    மாதர் அறிவைக் கெடுத்தார்
    கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்திக்
    காட்சிக் கெடுத்திட லாமோ?
    பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம்
    பேதைமை யற்றிடும் காணீர்!
    – பாரதியார்

    இந்தக் கட்டுரையில் எங்கேனும் ஆணாதிக்கம், அல்லது பெண்ணியம் என்பதன் சாயல் துளியும் தென்படக்கூடாது என்பதில் தெளிவாகவே இருக்கிறேன். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்த வேண்டி, போராட்டங்கள் நூற்றாண்டுகளாக நடந்துகொண்டிருந்தாலும், இன்று பெண்கள் தடம் பதிக்காதத் துறையே இல்லை என்னும் நிலை இருக்கும் ஒரு காலகட்டத்திலும் பெண்களின் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. இங்கு பெண்களின் போராட்டம் என்று நான் குறிப்பிடும்போது சில வேளைகளில் பெண்களே பெண்களுக்கு எதிரியாகவும், தமக்குத்தாமே தேவையற்ற ஒரு எல்லைக்கோட்டை நிர்ணயித்துக்கொள்பவளாக இருப்பதையும் சேர்த்தே குறிப்பிட வேண்டியுள்ளது. இந்த எல்லைக்கோடு என்று நான் குறிப்பிடுவது நம்முடைய பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் எந்த விதத்திலும் பாதிக்காமல் இருக்கக்கூடிய எல்லைக்கோடுகளைத்தான்!

    இன்றைய சமுதாயத்தில் ஒரு பெண் என்றால் அவளை இரண்டு எல்லைகளுக்குட்பட்ட நிலையிலேயே பார்க்கத் தோன்றுகிறது அனைவருக்கும். ஒன்று ‘மங்கையராய்ப் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்பது. மற்றொன்று ‘பெண் எனும் மாய வலை’ என்பது. இந்த இரண்டின் இடைப்பட்ட யதார்த்த நிலையிலான ஒரு பெண்ணின் வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள ஏன் இந்த சமுதாயம் மறுக்கிறது என்பதே இன்றைய பிரச்சனையாக உள்ளது. ஒன்று உச்சாணிக் கொம்பில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டும் அல்லது ‘மாயப்பிசாசு’ என்று அஞ்சி ஒதுக்க வேண்டும் என்ற மோசமான நிலைதான் பெண்களுக்கு இன்று பெரும் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. ஒரு சராசரி உயிராக, சக மனுசியாக நடத்தப்படுவதையே ஒரு தெளிவான பெண் விரும்பக்கூடும். அதுவே அவர்களை வாழ்க்கையின் மேன்மை நிலைக்கு இட்டுச் செல்லக் கூடியதாக இருக்கும். இப்படிச் சொல்லும்போது தற்போது மேன்மை நிலையில் பெண்கள் இல்லையா என்ற கேள்வியும் எழலாம். இன்னும் அந்தப் போராட்டம் ஓய்ந்தபாடில்லை என்பதே சத்தியம். சாண் ஏறினால் முழம் சரியத்தான் செய்கிறது. இதற்கு என்ன காரணம்? கற்கால மனிதன் தோன்றிய ஆதி காலந்தொட்டு இன்றுவரை விதி விலக்கில்லாமல் ஒன்று மட்டும் தெளிவாக நடந்து கொண்டிருக்கிறது. அது பெண்ணினத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்ற ஆணினத்தின் தீராத தாகம்! ஒரு பெண்ணை இரண்டே கோணங்களில் மட்டும் இவர்களால் பாகுபடுத்திப் பார்க்க முடிகிறது. ஒன்று மாதவம் செய்து மகளிராய்ப் பிறந்தவள், மற்றொன்று மாய வலையாய் சிக்க வைப்பவள்.

    ‘மங்கையராய்ப் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டும்’ என்று முடக்கி வைத்து அவளை ஒரு தேவதையாக, மலராக, தெய்வமாக, இறுதியாக கற்சிலையாக, பேசா மடந்தையாக, கைப்பாவையாக, வைத்திருந்தால் வைத்திருப்பவர்களுக்கு வேண்டுமானால் சுகமாக இருக்கலாம். ஆனால் இங்கு வளர்ச்சி என்பதற்கு இடமில்லாமலே போய்விடுகிறது. அன்றாடம் அவளுடைய வாழ்க்கை முறையே தியாகம் மட்டும் என்பதன் அடிப்படையிலேயே அமைந்து விடுகிறது. அதுதான் சுகம், அது மட்டுமேதான் வாழ்க்கை என்று வாழ்ந்து பழகியவர்கள், தம் சந்ததியையும் அப்படியே வாழப் பழக்குவதிலும் ஆச்சரியமில்லை. ஆனால் அதெல்லாம் சென்ற நூற்றாண்டு வரையிலும், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட காலகட்டம் வரை சரியாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று எந்த ஒரு துறையும் ஆண்களுக்கானது என்று தனியாக ஒதுக்கப்படவில்லை. இன்றைய வாழ்க்கை ‘SURVIVAL OF THE FITTEST’ என்ற அடிப்படையில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு பெண் தன்னை மிஞ்சி விடுவாளோ என்ற பதட்டமும், சுயபச்சாதாபமும் ஒரு ஆணுக்கு ஏற்படுவதாலேயே பல பிரச்சனைகள் எழுகிறது. எந்த வகையில் அவளை முடக்கினால் தனக்கு போட்டி இல்லாமல் இருக்கும், போராட்டம் இல்லாத வெற்றியாக அமையும் என்பதில் குறியாக இருக்கும் நிலையே இன்று அதிகமாகக் காணப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் ஒரு பெண்ணை எந்த வகையிலும் சக மனுசியாக வைத்துப் பார்க்க முடியாத நிலையே. எதையாவது சொல்லி, அவளை எப்படி முடக்க வேண்டும் என்று திட்டம் போட்டு செய்யும் செயலாகவே பல நேரங்களில் வெளிப்படுகிறது. இதற்கு பெண்ணை தெய்வமாகப் போற்றுகிறேன், அவள் பாதுகாப்பிற்காக அவளை வழிபட்டு, மிகச் சிறப்பானதொரு இடத்தில் வைத்திருக்கிறேன் என்று சொல்லியே முடக்கி வைக்கும் ஒரு வகை. இப்படி ஒரு சூழலில்தான் பெண்கள் வேதம் கற்கக் கூடாது எனும் நிலை இருந்ததைக் கண்டு பொங்கி எழுந்த பாரதி அன்று,

    “வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் வேண்டி வந்தோமென்று கும்மியடி” என்றும்,

    “சாத்திரங்கள் பலபல கற்பராம்,
    சவுரியங்கள் பலபல செய்வராம்
    மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்,
    மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்
    காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
    கடவுளர்க்கினிதாகச் சமைப்பராம்”

    என்று முழக்கமிட்டதோடு,

    “பெண் விடுதலை நீரில்லை என்றால்
    பின்னிந்த உலகினிலே வாழ்க்கை இல்லை,
    ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
    அறிவி லோங்கி இவ்வையகம் தழைக்குமாம்”

    என்றும் பாடிவைத்துச் சென்றான், பெண் விடுதலை பற்றி ஓயாது பேசியவன்! ஆனால் இவையனைத்தும் இன்று மேடைப் பேச்சுக்கும், திண்ணையில் உட்கார்ந்து சுகமாக அசை போடவும் மட்டுமே பயன்படுவதாகத் தெரிகிறது. பெண்ணை வெறும் போகப் பொருளாகவும், வேலை செய்யும் இயந்திரமாகவும், பொழுதுபோக்கு சாதனமாகவும் பார்க்கும் வழமையில் சற்றும் மாற்றம் இல்லை என்பதே கசப்பான உண்மை. ‘பாரதியே என் உயிர் மூச்சு’, என முழக்கமிடும் கவிச்சக்கரவர்த்திகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ‘படிப்பது இராமாயணம், இடிப்பது இராமர் கோயில்’ என்பதே வழமையாகிவிடுகிறது.

    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
    திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
    செம்மை மாதர் திறம்புவது இல்லையாம்.

    தேடிச் சோறு நிதம் தின்று – பல
    சின்னஞ்சிறு கதைகள் பேசி
    வாடித் துன்பமிக உழன்று – பிறர்
    வாடப் பல செயல்கள் செய்து
    நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி
    கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்
    மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
    நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ

    என்றும் சொல்லிச் சென்றவனை வணங்கி உள்ளத்தில் ஏற்றி உய்ய வேண்டிய காலகட்டமிது.

    படைப்பாளர்களில் பாலின வேறுபாட்டின் அடிப்படையில் எல்லைக்கோடுகள் நிர்ணயம் செய்யப்படுவதும் நிதர்சனமாகிறது. கற்பனைச் சிறகை விறிப்பதற்கும் எல்லைக்கோடுகள் தேவைப்படுகிறது. சுயகட்டுப்பாடும், சுய ஒழுக்கமும் உள்ள ஒரு பெண் தன் கண்முன் நடக்கும் சில விசயங்களை கௌரவமான மொழியில் எழுதுவதற்கு என்ன தடை வேண்டியிருக்கிறது. இதைவிட மோசமாக, வெளிப்படையாக எழுதும் ஆண் படைப்பாளர்கள் பற்றிய எந்தவொரு விமர்சனமும் எழாதபோது, வெகு நேர்த்தியாக, விரசமில்லாத ஒரு கட்டுப்பாட்டிற்குள் எழுதும் பெண் படைப்பாளிகளை குறி வைத்துத் தாக்கும் நோக்கம் இன்னும் பெண்களுக்கான சுதந்திரம் மறுதலிக்கப்படுவதே வெள்ளிடைமலை. ஒரு படைப்பில் ஆண் படைப்பு, பெண் படைப்பு என்ற பேதம் தேவைதானா? ஆணோ, பெண்ணோ அவரவர் எண்ணத்தில் உதிக்கும் வண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து வரைவதுதானே இலக்கியமாகிறது. இதற்கு நம் புராணங்கள், இதிகாசங்கள் என்று எத்தனையோ உதாரணங்களைக் காட்ட முடியும். இப்படி விமர்சனத்திற்கு உள்ளாகக் கூடிய படைப்புகளே பெரும்பாலும் வெற்றி பெறுகிறது. அது அந்த படைப்பின் வெற்றி அல்லவா?

    ஒரு பெண் சமுதாயத்தின் இப்படிப்பட்ட தளைகளைக் கடந்து ஒரு நிலைக்கு முன்னுக்கு வருகிறாள் என்றால் அதற்கு அவள் எந்த அளவிற்குப் போராட வேண்டியுள்ளது. குடும்பத்தையும் , குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு, பணியிடங்களிலும் எந்த விசேச சலுகைகளையும் எதிர்பார்க்க முடியாமல் ஆண்களுக்குச் சரியாக உழைத்துக் கொண்டுதான் இருக்கிறாள். அத்துனைப் போராட்டத்திற்குப் பிறகும் அவளுக்குக் கிடைக்கும் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அதையும் எந்த அளவிற்கு சிறுமைப்படுத்தி அவளை சின்னாபின்னமாக்கலாம் என்று துடிப்பவர்கள்தான் அதிகம். இதில் பல நேரங்களில் ஆண், பெண் என்ற பாகுபாடெல்லாம் கூட இல்லாமல் போய்விடுகிறது என்பதும் வேதனையான விசயம். மாறிவரும் காலப்போக்கிற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டி ஒரு சராசரி இந்தியப் பெண், தன் தகுதியை உயர்த்திக்கொள்ள எத்துனை விதமான போராட்டங்களை அன்றாடம் சந்திக்க வேண்டியுள்ளது என்று சற்றே அவர்கள் நிலையில் நின்று சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே. ஒரு ஆணுக்கு நிகராக ஒரு பெண் உழைக்க வேண்டுமானால் அவள் எத்தகைய மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டும் என்று பார்க்க வேண்டும். அறிவியல், தொழில்நுட்பம், பண்பாடு, இலக்கியம், கலை என்று எந்த ஒரு துறையை எடுத்துக்கொண்டாலும், உயர்ந்த நிலையில் இன்று பெண்களும் இருக்கின்றனர். வெளியில் சென்று பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இன்றைய சூழலில் அவளுக்கு எந்த அளவில் பாதுகாப்பு இருக்கிறது என்று நினைத்துப்பார்க்க வேண்டும். பாதுகாப்பு என்பது சொல்லும் அளவிற்கு ஏதும் இல்லை என்பதே சத்தியம். குடும்பத் தேவைகளையும் கவனித்துக்கொண்டு, சுய முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு இரட்டிப்பு உழைப்பை வழங்கவும் தயாராக இருப்பவளின் ஆற்றலுக்கு உரிய ஆங்கீகாரம் வழங்கப்படாவிட்டாலும் பரவாயில்லை. அவள் முன்னேற்றத்திற்குத் தடையாக இல்லாமலாவது இருக்கலாமே. எத்துனை காழ்ப்புணர்ச்சி, கரிப்பு, கசப்பு என்று சேற்றை வாரிப் பூசுவதில் என்ன இலாபம் நம் நாட்டிற்கோ அல்லது சமுதாயத்திற்கோ? அந்தக் காலத்திலேயே வணிகம், விவசாயம் என அனைத்துத் துறைகளிலும், குடும்பத்து ஆண்களுக்கு இணையாக பெண்களும் பாடுபட்டுக்கொண்டுதானே இருந்திருக்கிறார்கள்.

    குடும்பமாகட்டும் அல்லது சமூகமாகட்டும், எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பெண்ணைக் குறித்த பிற்போக்குச் சிந்தனைகள் முற்றிலுமாக மாற்றப்பட வேண்டும். முறையான சுதந்திரமும், பாதுகாப்பும், கண்ணியமான முறையில் வழிநடத்துதலும் வழங்கப்பட வேண்டும். அத்தோடு ஒரு பெண் தனக்கு இருக்கும் உரிமைகளின் எல்லைக்கோட்டை அறிந்து, எந்த வகையிலும் அது மற்றொருவரின் முன்னேற்றத்தையோ அல்லது சுய மரியாதையையோ பாதிக்காத வகையில் பார்த்துக்கொண்டு, நல்ல வாய்ப்புகளைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு, முன்னேற முயலவேண்டும். அதற்கானத் திட்டங்களை உருவாக்கிக்கொடுப்பதில், ஒரு பெண்ணின் தந்தை, சகோதரன், கணவர் என அனைவரின் ஒத்துழைப்பும் இருக்கும்பட்சத்தில் அவளின் வெற்றிக்கு உத்திரவாதம் நிச்சயம் அல்லவா? பெண்கள் சுயமாகப் பலம் பெற வேண்டுமானால், அதற்குப் பின்புலமாக ஆண்கள் இருந்து கொண்டு அவர்களை நல்ல முறையில் வழிநடத்த முயன்றால் மட்டுமே, அதாவது ஒரு கூட்டு முயற்சியின் மூலமாக மட்டுமே பெண்களின் பாதுகாப்பையும், அவள்தம் முன்னேற்றத்தையும் உறுதி செய்ய இயலும்.

    பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட வர்களில் குறிப்பிடத்தக்கவர்களான, இராஜாராம் மோகன் ராய், அண்ணல் மகாத்மா காந்தி அடிகள், , ஈ.வே.ரா. பெரியார், திரு வி.க. அவர்கள், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, பாரதியார், பாரதிதாசன் வரை அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். . சுய உதவிக் குழுக்கள் மூலம் இன்று கல்வியறிவு குறைவாகப் பெற்ற பெண்கள்கூட சிறு தொழில் முதலீட்டாளர்களாகவும், சாதனை படைத்து சிகரத்தைத் தொட கடுமையாக உழைக்கின்றனர். அரசியல், அறிவியல், சமூகவியல் என அனைத்திலும் தங்கள் பங்களிப்பை செலுத்தி, வரலாற்று நாயகிகளாகவும், சாதனைப் பெண்களாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். மன உறுதியில் ஒரு பெண்ணிற்கு நிகராக ஒரு ஆண் இருக்க முடியாது. ஒரு சிறந்த இல்லாள் இருந்தால் மட்டுமே இல்லறம், நல்லறமாக நடக்கும் என்பதில் ஐயமில்லை. பதினெட்டாம் நூறாண்டுகளில் வாழ்ந்த வள்ளலார் பெருமான், பெண்களுக்கு யோகம் முதலிய சாதனங்கள் அவசியம் கற்பிக்க வேண்டியது என்கிறார். மேலும், ஆண் பெண் என்ற பேதமில்லாமல் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். யோகம், ஆன்மீகச் சாதகம் என அனைத்தையும் பாகுபாடு இன்றி இருபாலருக்கும் கற்பிக்கப்பட்டால் குடும்பத்தில் அமைதி நிலவும் என்கிறார். கணவன் இறந்த பின்பு மதத்தின் பெயரால், ஒரு மனைவிக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்றார். ஆனால் இன்றளவிலும் காட்டுமிராண்டித்தனமான அந்தக் கொடுமைகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

    வள்ளலாருக்குப் பின் வந்த முண்டாசுக் கவி பாரதியோ ‘

    ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
    அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
    பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
    போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
    நாணும் அச்சமும் நாய் கட்கு வேண்டுமாம்;
    ஞான நல்லறம் வீர சுதந்திரம்
    பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
    பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!

    என்கிறார். நம் நாட்டின் பண்பாட்டின்படி, பெண் பிறப்பே தியாகம் என்ற அந்த ஒன்றின்மீதுதான் கட்டமைக்கப்படுகிறது எனலாம். திருமணத்திற்குப் பின் கணவன் வீட்டிற்கு வரும் ஒரு பெண், தன் தாய், தந்தை, உடன்பிறப்புகள், தாம் வளர்ந்த சூழல், சுற்றம் என அனைத்தையும் துறந்த பின்புதான் புகுந்த வீட்டிற்குள் வலது காலடி எடுத்து வைக்கிறாள். அப்படி ஒரு தியாகத்தின் அடிப்படையில் , அன்பு நாடி புகுந்த வீட்டில் அடி எடுத்து வைக்கும் பெண்ணிற்கு அன்பும், ஆதரவும் அளிக்க வேண்டியது அக்குடும்பத்தினரின் முக்கிய கடமை. அந்தக் கடமையிலிருந்து ஒரு குடும்பம் தவறும் போது மட்டுமே அங்கு எண்ணிலடங்கா பிரச்சனைகள் தோன்றிவிடுகின்றன.

    ஆன்மாவிற்கு ஆண், பெண் என்ற பேதமில்லை. வெளித்தோற்றத்தில் மட்டுமே அந்த பேதங்களெல்லாம் இல்லையா? ஒவ்வொரு பெண்ணும் பேதமற்ற ஒரு சக மனிதம் மட்டுமே எதிர்பார்க்கிறாள் என்பதே சத்தியம்.

    Share
  • ‘ஒரு புளிய மரத்தின் கதை’ – சுந்தரராமசாமி – புத்தக மதிப்புரை

    கலையரசி

    சுந்தரராமசாமி அவர்கள் எழுதிய முதல் நாவல்,‘ஒரு புளிய மரத்தின் கதை’. 1966 ஆம் ஆண்டு வெளி வந்தது. தற்கால உரைநடையைப் பேச்சு வழக்கில் எழுதிய முதல் நாவல் என்ற வகையில், தமிழிலக்கியத்தில் இது சிறப்பிடம் பெறுகிறது.

    காலச்சுவடு நிறுவனத்தின் நிறுவனரான இவரின் சொந்த ஊர் நாகர்கோவில்.  ‘ஜே.ஜே.சிலகுறிப்புகள்’, ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’, என்ற நாவல்களோடு, தகழி சிவசங்கரப் பிள்ளையின் ‘செம்மீன்’, ‘தோட்டியின் மகன்’, என்ற நாவல்களைத் தமிழில் மொழியாக்கமும் செய்துள்ளார்.

    இந்நாவலில் கதை சொல்லியாக அறிமுகமாகும் தாமோதர ஆசான் இரத்தமும் சதையும் கொண்ட உயிர்த் துடிப்புள்ள ஒரு கதாபாத்திரம். அவர் கதை சொல்லும் பாங்கு, கேட்போரை ஈர்த்துப் பிணிக்கும் ஆற்றல் கொண்டது.

    ஆசான் வெற்றிலை போட்டுக் குதப்பிவிட்டு ஹா, ஹூம் என்று ஆர்ப்பாட்டமாக கனைத்துப் புகையிலை சாற்றை வெளியேற்றிவிட்டுக் கதை சொல்லும் அழகை நீங்களும் சுவைக்க, நாவலிலிருந்து கொஞ்சம்:-

    ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் என்று அத்தைப் பாட்டிகள் பாணியில் கதை ஆரம்பம் ஆகாதுகதை உத்திகள் எல்லாம் அவரிடம் படிந்து போன சமாச்சாரம்.

    சற்றுத் தள்ளி முளைத்திருக்கும் ஒரு செடியை இரண்டு வினாடிகள் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுஅதென்ன செடி, தெரியுமா அது யாருக்காவது? என்கிறார்.

    நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுத் தலையை அசைக்கிறோம்.

    இதெக் கொடுத்துத்தாலாதாலி கெட்டின புருஷனெக் கொன்னே போட்டா சண்டாளிமனசு வருமா ஒரு பொம்பிளைக்கு?அடுத்தவன் களுத்தெக் கட்டிக்கிடணும்னு ஒரே நெனப்பா நெனச்சுத் துணிஞ்சிட்டாளே பாவி

    அப்படித்தான் செய்தாளே, புருஷன்காரன் என்ன நொண்டியா, சப்பாணியா, கூன் குருடா, இல்லே மேலே ஒண்ணு இருக்கட்டும்னு இன்னொருத்தியெ வச்சுக்கிட்டு இருந்தானா?

    எப்படிப் போனாலும் அறுப்புக்கு நூறு கோட்டை நெல் வந்து விளும்நாள் ஒண்ணுக்குக் கொல்லேலே விளுற இலை அம்பதுக்குக் கொறயாதுஅவுத்து விட்டாத் தொளுவம் காலியாகுதுக்கு அரைமணி நேரமாகும்

    சவாரிக்கு மாடு புடிக்குதுக்கு வந்தான் வடசேரி சந்தைக்குஅரபிக் குதிரெ கணக்கா ரெண்டு மாட்டெப் புடிச்சுக்கிட்டு, அந்த மாபாவி தலையிலே ஆசையா வெச்சு முத்துதுக்கு மடி நெறயப் பூவும் வாங்கிட்டுத் தானே போனான் அண்ணைக்கும்.  பாலைத் தான் தாறான்னு வாங்கிக் குடிச்சான்ரெண்டு தவா ரெத்தம் மாட்டு வாந்தி எடுத்தான்குளோஸ்.

    இது தான் ஆசானுடைய எடுப்புகடைசியில் மண்ணைத் தூக்கி விண்ணில் நிறுத்திக் காட்டுகிறேன் என்று சொல்லி விட்டுத் துண்டை விரித்துமருந்துப் பெட்டிகளை அடுக்கும் செப்பிடு வித்தைக்காரன் போல், மீண்டும் வெற்றிலை போட்டுக் கொள்ள ஆரம்பித்துவிடுவார். பின்னால் விஷம் கொடுத்தவளின் குழந்தைப் பருவத்தில் கதை ஆரம்பமாகும்
    புளிய மரத்தின் ஆரம்பகால சுவாரசியமான கதைகளை, நாம் ஆசான் மூலமே அறிந்து கொள்கிறோம். கதை கேட்பதற்காகவே அவரைச் சுற்றி எந்நேரமும் சிறுவர்களின் கூட்டம் அலைகிறது.  பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் வராததுமாக பையைத் தூக்கித் தூர எறிந்துவிட்டு, கதை கேட்க ஓடும் மாணவர் போன்றே, நாமும் ஆசான் எப்போது கதை சொல்லத் தொடங்குவார் என்று எதிர்பார்த்து ஏங்குகிறோம்!

    ஆனால் பாதியிலேயே ஆசான் மறைந்து விடுகிறார். அவர் மறைவுக்குப் பின்,  நாவலின் சுவை குறைந்துவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. அந்தளவுக்கு ஆசான் கதாபாத்திரம், படிப்பவர்களின் மனதைக் கொள்ளை கொண்டு விடுகிறது.

    அதற்குப் பிறகு காற்றாடி மரத்தோப்பு அழிக்கப்பட்டுப் பூங்காவாகும் கதை விவரிக்கப்படுகிறது. நவீனமயம் என்ற பெயரில் இயற்கையை அழிக்கும் மனிதனின் பைத்தியக்காரத்தனத்தை இச்சிறு உரையாடல் மூலம், ஆசிரியர் எப்படி கிண்டல் செய்கிறார் பாருங்கள்!

    தோப்புமரம் ஒவ்வொன்றாக வெட்டப்பட்டு வீழ்வதைக் காணச் சகிக்காமல் முதியவர் ஒருவர், இளைஞனிடம்கேட்கிறார்:-

    தம்பி, எதுக்கு டேய் மரத்தெ வெட்டிச் சாய்க்கிறாங்க?”

    செடி வைக்கப் போறாங்க” 

    எதுக்கு டேய், செடி வைக்கப் போறாங்க?”

    காத்துக்கு

    மரத்தெக் காட்டிலும் செடியா டேய் கூடுதல் காத்துத் தரும்?”

    அளகுக்கு

    செடிதான் அளகாட்டு இருக்குமோ?”

    உம்

    செடி மரமாயுடாதோவ்?”

    மரமாட்டு வளராத செடிதான் வைப்பாங்க. இல்லை வெட்டி வெட்டி விடுவாங்க

    வெட்டி வெட்டி விடுவாங்களா?”

    ஆமா

    அட, பயித்தாரப் பசங்களா!” 

    அதன் பின்னர், அக்கிராமத்தில் ஒரே வியாபாரம் செய்யும் தாமுவுக்கும் காதருக்குமான போட்டியும் பொறாமையும், வியாபாரச் சண்டையும் விரிவாகச் சொல்லப்படுகிறது. நகர சபை தேர்தலில் போட்டியிடும் அவர்களுக்கிடையே ஏற்படும் பகைமை, ஒன்றுமறியாத அப்பாவி மரத்தை வெட்டுவதில் போய் முடிகிறது.

    தாமு கடைக்கு நிழல் கொடுக்கும் புளியமரம் வெட்டப்பட்டால், அவன் வியாபாரம் பாதிக்கும் என்று ஐடியா தந்து, காதரை தேர்தலில் போட்டியிட வைத்து, வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த அவர்களுக்கிடையே பகைமையை வளர்ப்பது எசக்கி என்கிற பத்திரிக்கை நிருபர்!

    இந்நாவலின் கரு பற்றி ஆசிரியரே முதல் அத்தியாயத்தில் சொல்கிறார்:- .

    மறக்க முடியாத விஷயங்களும் சில உண்டு தானேஅதில் ஒன்றுதான் புளியமரத்தின் கதையும்.

    சொல்லப் போனால் புளியமரம் என்ன செய்ததுசும்மா நின்று கொண்டு தானே இருந்தது?மனிதனின் அலகிலா விளையாடல்களுக்கு மெளன சாட்சியாக நின்றதே அல்லாமல் எதிலாவது பங்கெடுத்துக் கொண்டதாபட்டுக்கொண்டதாமனித ஜாதிக்கு அது இழைத்த கொடுமைதான் என்னயாரைப் பார்த்துக் கை நீட்டிற்றுயாரை நோக்கிப் பல்லிளித்ததுயாருடனாவது சேர்ந்து கொண்டு, யாருக்கேனும் குழி பறித்ததா

    ஆனால் நாட்டையும், பணத்தையும் பெண்டுகளையும் அதிகாரத்தையும், புகழையும் காயாக வைத்து விளையாடிய மனிதன், புளியமரத்தை மட்டும் விட்டு வைக்கிறேன் என்கிறானா?அதையும் காயாக வைத்து விளையாடித் தீர்த்துவிட்டான்புளியமரம் அழிக்கப்பட்டது.” 

    இந்நாவலில் புளியமரம் ஒரு குறியீடு. வாய்ப்புக் கிடைத்தால் இந்நாவலை அவசியம் வாசியுங்கள்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    வரும்காலம் பூராவுமே காகிதமில்லா உலகமாக மாற இருக்கிறது என்பதில் எல்லோருக்குமே ஒரு கவலையும், சந்தோஷமும் இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். கவலை என்னவென்றால் பேப்பர் (செய்திகளாகட்டும், புத்தகங்களாகட்டும்) சம்பந்தப்பட்ட தொழிலின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறதோ என்றுதான். அதே சமயத்தில் பேப்பரில்லா காலத்தில் எத்தனை சேமிப்புகள், எத்தனை எளிமைகள், என்பதையும் எண்ணிப்பார்த்து சந்தோஷப்பட வேண்டும்தான்.

    எத்தனைதான் மின்வழிச் சாதனங்கள் மூலம் படித்துப் பார்த்தாலும் புத்தகம் மூலம் பொறுமையாக பார்த்துப் படித்து ரசிப்பது போல வருமா எனக் கேட்ப்போருமுண்டு. பழங்காலத்தில் செவி வழிக் கல்விதான். பின்புதான் ஏட்டுக் கல்வி வந்தது.ஏட்டுக் கல்வி போய் கணினிக் கல்வி வரும்போது கணினிக்கு ஏடு தாராளமாக வழிவிட வேண்டுமென்றுதான் நான் நினைக்கிறேன். ஏற்கனவே தினப் பத்திரிகைகள் மின்னிதழ்களை இப்போதே ஆரம்பித்து விட்டன. இந்தப் போக்கு இன்னும் வேகமடையுமா..காகிதம் முழுவதும் . மின் தொலைத் தொடர்புச் சாதனங்கள் மூலமாக ஓரங்கட்டப்பட்டு ஒரேயடியாக கிழிந்து போகும் நிலை வருமா. காகிதத்தை வெறும் காற்றாடிக்காக மட்டுமே பயன்படுத்தும் காலம் வருமா.. ஏனோ இதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

    இதற்கிடையில் இந்த கால கட்டத்தில் வாழும் படைப்பாளிகள் வரும் எதிர்காலத் தலைமுறைக்காக தம்மைத் தயார் செய்துகொள்ளத்தான் வேண்டும். காகிதப் புத்தகங்கள் நிச்சயமாக நமக்குச் செல்வம் போலத்தான்.ஆனால் காலம் மாறுகிறது என்பதை நம் கண் முன்னால் காணும்போது காலத்துக்கேற்றவாறு மாறுவதும் இயல்புதானே.. காகிதப் புத்தகங்கள் காகிதத்தைத் துறந்து மின் புத்தகமாக மாறி வரும் இந்த இடைப்பட்ட காலத்தை படைப்பாளிகள் தகுந்தமுறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

    480498_10151261068171644_1937474422_nஇப்படிப்பட்ட நிலையில் சென்னையைச் சேர்ந்த திரு ஸ்ரீனிவாசன் . படைப்பாளிகளுக்கு ஒரு நல்லதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் இந்த பணி ஒரு உயரிய பணி என்பதோடு படைப்பாளியின் படைப்புகள் உலகெங்கும் பரவ வழியின் செய்தது போல ஆகிறது. நல்லுதவி செய்து வரும் திரு ஸ்ரீனிவாசன் இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்

    தெடுக்கப்படுகிறார். அவருக்கு நம் வாழ்த்துகள். அவரைப் பற்றி மேலும் அறிய தேமொழியின் தொடுப்பைக் காணலாம்.

    I nominate Mr. Srinivasan   (https://www.facebook.com/tshrinivasan) as vallamaiyaalar for his continuing effort in making free eBooks possible and also for introducing authors by making their works available for the general public.
     
     

    கடைசி பாரா: கிரேஸி மோகன் அவர்களின் வேதாந்த பண்டு

    உண்டாகி உண்டுமிழும் குண்டாகி, வேதக்கற்
    கண்டாகி, வேதாந்த சிண்டாகி -தண்டாகி
    செண்டாகி, முண்டகத்து வண்டாகி ஜீவான்மா
    ரெண்டாகி வந்துபோகும் பண்டு

    Share
  • குளிரவன் போவதெங்கே?

    கீதா மதிவாணன்

    images

    அதோ… குளிரவன்!
    தூரத்து மலைமுகட்டு மரங்களுக்குப் பின்னே
    மெளனமாய்ப் பதுங்கி நழுவிப் போவதெங்கே?

    வசந்தமென்னும் பருவப்பெண் பச்சையம் பூசி
    ஓடைக் கண்ணாடியில் ஒப்பனை செய்வதை
    வழியில் பார்த்தவன், வெளிறிய தன் முகத்தை
    வேறுதிசையில் திருப்பிக்கொண்டு
    திரும்பிப் பாராமல் போகிறான்.

    ஆனால் எனக்குத் தெரியவேண்டும்
    அவன் சென்ற வழி எதுவென்று…
    அவனைக் கண்டுபிடிக்க இதுவரை
    எவரும் முயன்றாராவென்று…

    இடிமுழக்கத்தால் விண்ணுக்கு இழுத்துவரப்பட்டு
    மேகப் பஞ்சணையில் துஞ்சவைக்கப்பட்டிருக்கிறானோ?
    சமுத்திரத்துக்குள் சென்றிருப்பானாயின்
    சதிராடும் அலைகளால் சுழற்றியெறியப்பட்டிருப்பானோ?

    அலைக்கழிக்கப்பட்டு ஆறாத ரணங்களுடன்
    உயிர் ஊசலாடியபடி கரையோரம் ஒதுங்கி
    காட்சியளிக்கிறானா மீனவர் எவருக்கேனும்?
    ஆளரவமற்றத் தீவொன்றில் அசைவற்று
    விறைத்துக் கிடக்கிறானா எங்கேனும்?

    சாம்பல் நிறத் தலையைக் கவிழ்ந்தபடி
    நித்தமும் சூரியன் மறையும் நீலமலைகளுக்கப்பால்
    எவருமறியாப் பொழுதுகளில் சென்று
    கல்லறையொன்றைத் தோண்டுகிறானோ?

    தன் வெளிர்வண்ண ஆடையுடன்
    தானே வெட்டிய கல்லறைக்குழிக்குள்
    கரங்களை மார்பில் கோர்த்தபடி படுத்துக்கொண்டு
    “என் மறைவுக்காய் கண்ணீர் சிந்துவார் யார்?
    மாறாய் மகிழுமே வசந்தத்தின் வருகையால் ஊர்!
    என்றெண்ணி மருகுகிறானோ?

    ஐயோ… குளிரவனே…
    என் கண்கள் சிந்துகின்றனவே கண்ணீர்,
    உனக்கு மகிழ்வளிக்கப் போதுமானதா
    ஒரு குழந்தையின் கண்ணீர்?
    வசந்தம் தொலைவில் வரும்போதே
    உன் ஆடைநுனியை இறுகப் பற்றிக்கொண்டு
    உன்னை அழைத்தபடியே தொடர்ந்தேன்.
    உன் கரங்களில் முத்தமிடுகிறேன்.
    உன் வேதனையைப் புரிந்துகொண்டேன்,
    தொய்ந்துபோன உன் தலையை இதமாய்த் தடவுகிறேன்.

    ஓ…. என்னால் பாட இயலாது…
    குளிரவன் இங்கே வெளிறிச் சாகிற வேளையில்
    வசந்த கானமிசைத்திட என்னால் எப்படியியலும்?

    (Where does the Winter go? By Ethel Turner)

    படத்துக்கு நன்றி

    http://www.wallpapergang.com/Winter/cold-winter-morning-frost-leaves_11066.html

    Share
  • 24. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! க்ருவெயர் சீஸ் அருங்காட்சியகம், சுவிஸர்லாந்து.

    சுபாஷிணி ட்ரெம்மல்

    அருங்காட்சியகங்கள் என்றாலே சில பல நூற்றாண்டுகள் பழமை கொண்ட கருவிகளும், விலங்குகளின் மனிதர்களின் எலும்புக் கூடுகளும், ஆவணங்களும், கட்டிடங்களின் உடைந்த பகுதிகளும் சிறபங்களும் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் இடம் என பலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். உணவுப் பொருட்களுக்காகவும் அருங்காட்சியகங்கள் இருக்கின்றன என நான் சொன்னால் நம்புவீர்கள் தானே? அப்படி ஒரு அருங்காட்சியகத்திற்கு செல்வோமா?

    க்ருவெயர் நகர் (2009)
    க்ருவெயர் நகர் (2009)

    பச்சை பசேல் என்ற பசுமை… அதில் மஞ்சள் வெள்ளை, ஊதா என வர்ணங்களில் மலர்ந்திருக்கும் மலர்கள். அந்தப் பசுமையான புல்வெளியில் துளிர்த்து வளர்ந்திருக்கும் விதம் விதமான மூலிகை செடிகள்.. இங்கே கொழு கொழு என நம் கண்களை ஈர்க்கும் வகையில் கழுத்தில் மணியை கட்டிக் கொண்டு அசைந்து அசைந்து சுவைத்து ரசித்து புற்களைத் தின்று கொண்டிருக்கும் மாடுகளைப் பார்த்தவாறே சாலையில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இப்போது நாம் பயணம் செய்து கொண்டிருப்பது சுவிஸர்லாந்தில். இங்கே ஆல்ப்ஸ் மலைத் தொடர்களின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் எழில் நிறைந்த க்ருவெயர் நகரில் தாம் நாம் இருக்கின்றோம். இங்கிருக்கும் க்ருவெயர் சீஸ் அருங்காட்சியககத்திற்குத் தான் நான் இன்று உங்களை அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றேன்.

    சீஸ் ஐரோப்பிய உணவில் பிரதான இடம் பிடிக்கும் ஒன்று. ஐரோப்பா என்று மட்டுமல்லாமல் ஐரோப்பியர்கள் பரவிய வட அமெரிக்கா தென் அமெரிக்கா ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்க கண்டங்களில் விரிவாகப் பரவிய சீஸ் பயன்பாடு தற்சமயம் ஆசிய நாடுகளுக்கும் அறிமுகமாகிவிட்டது. ஆசிய நாடுகளில் கூட சூப்பர் மார்க்கெட்டுகளில் இப்போது சீஸ் கிடைக்கின்றது.

    சீஸ் என்பது அடிப்படையில் பாலைக் கொண்டு செய்யும் ஒரு பதார்த்தம் என்றாலும் அதில் சேர்க்கப்படும் பாக்டீரியா, தயாரிப்பு முறை, பதப்படுத்தும் முறை ஆகியன பொருத்து ஒவ்வொன்றும் அதன் தன்மையில் மாறுபடுகின்றன. ஐரோப்பாவில் குறிப்பிடத்தக்க வகையில் சீஸ் வகையிலேயே நாட்டுக்கு நாடு வித்தியாசமாக, நகருக்கு நகர் வித்தியாசமாக சீஸ்கள் தயாரிப்பதும் விற்பனை செய்யப்படுவதும் நிகழ்கின்றது. உதாரணமாக இத்தாலி, ப்ரான்ஸ், ஜெர்மனி, சுவிட்ஸர்லாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம், டச்சு, டென்மார்க், க்ரீஸ், ஆகியவை தங்களின் பிரத்தியேக சீஸ்களுக்காகப் புகழ் பெற்று விளங்குகின்றன. இவை ஒன்றிலிருந்து ஒன்று சுவையிலும் அதன் கெட்டித்தன்மையிலும், அமைப்பிலும், வர்ணத்திலும், வாசத்திலும் மாறுபடுகின்றன.

    அப்படி சிறப்புத்தன்மை வாய்ந்த ஒரு சீஸ் தான் க்ருவெயர் சீஸ். இந்தச் சீஸ் பற்றிய முழு விபரங்களையும் தரும் ஒரு அருங்காட்சியகம் தான் க்ருவெயர் நகரில் அமைந்திருக்கும் இந்த La Maison du Gruyère a Pringy (House of Gruyère) அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே சென்று பார்வையிட கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டைப் பெற வேண்டும்.

    இந்த அருங்காட்சியகம் வாரத்தின் ஏழு நாட்களிலும் காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை திறந்திருக்கும். ஆக சுவிஸர்லாந்து செல்பவர்கள் தாங்கள் சென்று பார்த்து வர வேண்டிய அம்சங்களில் இதனையும் ஒன்றாக மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

    இந்த அருங்காட்சியகத்தில் முதலில் நமக்கு க்ருவேயர் சீஸ் உருவான வரலாறு விளக்கப்படுகின்றது. அதனை விளக்கும் வகையில் புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், விளக்கத் தகவல்கள் ஆகியவை வரிசையாக வழங்கப்பட்டிருக்கின்றன. எவ்வகை மூலிகைகள் இந்தப் புற்களில் விளைகின்றன? அதனால் கிடைக்கும் மாட்டின் பால் இந்தச் சுவையைக் கொண்டதாக அமைந்திருக்கின்றது என்பன போன்ற விளக்கங்கள் இதில் அடங்கும். பின்னர் படிப்படியாக க்ருவெயர் சீஸ் எப்படி பிரபலமடைந்து இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது என்ற தகவலை விளக்கும் வகையில் விபரங்களை அமைத்திருக்கின்றனர்.

    சீஸ்கள் வரிசையாக அடுக்கப்பட்டுள்ளன (2009)
    சீஸ்கள் வரிசையாக அடுக்கப்பட்டுள்ளன (2009)

    அங்கிருந்து தொடர்ந்து சென்றால் க்ருவெயர் சீஸ் தயாரிக்கப்படும் இடத்திற்கு வந்து சேர்வோம். முதலில் நம்மை மலைக்க வைப்பது வரிசை வரிசையாக ஏறக்குறைய 10 மீ தூரத்திற்கு அமைக்கப்பட்ட அலமாரியில் அடுக்கப்பட்டிருக்கும் ராட்ஷ்சஷ அளவிலான உருண்டை வடிவிலான சீஸ்கள்.

    இவற்றில் நாள் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கும். சீஸ் தயாரிப்பில் எத்தனை நாட்கள் சீஸ் பதப்படுத்தப்பட வேண்டும் என்பது மிக முக்கியம். குறிப்பிட்ட நாட்கள் சீஸ் முறையாகப் பதப்படுத்தப்படும் போதே அது சரியான சுவையைப் பெறுகின்றது.

    சீஸ் தயாரிப்பை பார்வையிடும் ஊழியர் (2009)
    சீஸ் தயாரிப்பை பார்வையிடும் ஊழியர் (2009)

    அங்கிருந்து சற்று தள்ளிச் செல்லும் போது ஒரு ராட்சச அளவிலான பாணையில் அமைக்கப்பட்டிருக்கும் படியின் மேல் ஏறி நின்று கொண்டு ஒருவர் பெரிய துணியால் பால் கலவையை வடித்து எடுப்பதையும் இன்னொரு ராட்சச அளவிலான பானையில் ஒருவர் மரக்கம்பு கொண்டு திரண்டு வரும் பாலை கிளறுவதையும் இன்னொரு இடத்தில் வரிசை வரிசையாக ராட்சச அளவிலான பானைகளில் பால் நிறைந்து நிற்பதும் என வெவ்வேறு நடவடிக்கைகள் நிகழ்ந்து கொண்டிருப்பதைக் காண்போம். பார்க்கவே வியப்பூட்டுவதாக இருக்கும் இவை அனைத்தும்.

    இப்படி மிகப் பெரிய அளவில் வணிக நோக்கோடு இன்று தயாரிக்கப்படும் இந்த க்ருவெயர் சீஸின் வரலாறு பற்றியும் சிறிது அறிந்து கொள்வது இந்தச் சீஸ் எத்தனை காலமாக மக்கள் உணவுப் பயன்பாட்டில் இருக்கின்றது என்பதை நாம் அறிந்து கொள்ள நிச்சயம் உதவும். இன்று கிடைக்கின்ற ஆவணங்களின் அடிப்படையில் உள்ள குறிப்புகளில், கி.பி.1115 ஆண்டின் ஒரு ஆவணத்தில் இந்த க்ருவெயர் சீஸ் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஆக அதற்கும் முந்தைய பழமை வாய்ந்த ஒரு சீஸ் தான் க்ருவெயர் என்ற விஷயத்தை இதன் வழி அறியமுடிகின்றது. இதன் வரலாற்றை மேலும் பல தகவல்களோடு தொடர்ந்து அடுத்த பதிவில் வழங்குகின்றேன். தொடர்ந்து வாருங்கள்!

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 108 (10.02.14)

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

     

    சாரணரது அறிவுறையைக் கேட்டு, கவுந்தி கூறிய புகழ்மாலை

    சாரணர் மொழி கேட்ட
    தவத்தில் சிறந்த கவுந்தி
    தன் தலை மேல் கைவைத்து வணங்கி,

    “காமம், வெகுளி, மயக்கம்
    இம்மூன்றையும் அடக்கி வென்ற அருகதேவன்
    தம் அருளால் உரைத்த திருமொழி மட்டுமேயல்லாது
    பிறமொழிகளை எம் செவிகள் ஏற்காது….

    காமனை வென்ற அருகதேவனது
    ஆயிரத்தெட்டு நாமங்களைப் போற்றுவதேயல்லாது
    வேறொரு நாமத்தை என் நா நவிலாது…

    ஐம்புலன்களையும் அடக்கி வென்ற
    அருகதேவனின் திருவடிகளை மட்டுமேயல்லாது….
    வேறு தேவர்களின் திருவடிகள்
    மிக அருகில் இருந்தாலும்
    எம் கண்கள் அவற்றைப் பார்க்காது…

    அருளும் அறனும் பூண்டு ஒழுகும்
    அருகதேவனுக்கேயல்லாது
    வேறு எவருக்காகவும்
    என் பயனற்ற இவ்வுடல்
    பூமியில் பொருந்தி வணங்கிடாது…

    அறங்கூறும் அருகதேவனை வணங்குவதற்கேயல்லாது
    வேறெந்த தெய்வத்தையும் வணங்குவதற்கு
    என் கைகள் குவிந்திடாது…

    அருகனின் மலரடிகளை அணிந்திடுமேயல்லாது
    வேறு எந்தத் திருவடிகளையும்
    என் உச்சியானது அணிந்திடாது…

    என்றும் முடிவில்லா இன்பத்தையுடைய
    இறைவன் ஓதிய வேதத்தையல்லாது
    வேறு எந்த மொழியையும்
    என் உள்ளம் ஓதாது..”

    இங்ஙனம் அருகதேவனைப்
    போற்றித் துதித்தார் கவுந்தியடிகள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  192 – 207

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

    Share
  • பணிக்குச் செல்லும் பெண்

    பொன்ராம் 1-images

    பனியில் பூத்த ரோஜா

    பார்த்து ரசிக்க ஆளின்றி

    வாடிக் கிடக்கிறது!

    வெண்டை விரலின் ஸ்பரிசம் தேடி

    தோட்டத்தில் வெண்டைப்பூவின் தேடுதல் ஆரம்பம்!

    என் குழந்தையின் மழலை

    அடுத்த வீட்டிற்கு மட்டும்

    சொந்தமாகி விட்டது!

    அடுப்படியின் சிணுங்கல் ஒலி

    அன்னியமாகி விட்டது!

    குளிர்பதனப் பெட்டியில்

    உறைந்த உணவுகள்

    அன்றாட நண்பர்களாகி விட்டன!

    ஆறிலக்கப் பணித்தொகை

    உறவுகளின் ஆற்றுப்படையாகி விட்டன!

    உடைகளின் எண்ணிக்கை

    எனது துயரத்தினை வெளிக்காட்டாத

    மெழுகு முகமூடிகள்!

    எதைக் கொண்டு வந்தோம்

    எதைக் கொண்டு செல்கிறோம்?

    என்ற நோக்கின்றி வாழும்

    உயிரிருந்தும் இயந்திர மனிதர்களாய் நாங்கள்

    எங்கு செல்கிறோம்?

    படத்துக்கு நன்றி

    http://www.hindu.com/mp/2007/03/08/stories/2007030800730100.htm

    Share
  • ஆயிரம் இரவுகள் வருவதுண்டு

    கவிஞர் காவிரி மைந்தன்

    கற்பகம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் முழுக்க முழுக்க கவிஞர் வாலியின் கைவண்ணமாகும். இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.. டி.கே.ராமமூர்த்தி. இன்னுமொரு விசேஷம் என்னவென்றால் பாடல்கள் எதிலும் ஆண்குரல் இல்லை. இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் லேடீஸ் சென்டிமென்ட் படம் இது என்றால் அது மிகையில்லை.

    புதுமுக நாயகியாக புன்னகை அரசி கே.ஆர்.விஜயா.. நடிகையர்திலகம் சாவித்திரி.. ஜெமினி கணேசன் முத்துராமன் என்கிற நட்சத்திரப் பட்டாளத்துடன் அன்றைய நாளில் வெற்றியைக் குவித்த படம்! பாடல்கள் நான்கே நான்கு! அனைத்தும் அமர்க்கள வெற்றி!! அனைத்துப் பாடல்களையும் பாடியவர் பி.சுசீலா!!

    ஆயிரம் இரவுகள் வருவதுண்டு அத்தை மடி மெத்தையடி..
    மன்னவனே அழலாமா? பக்கத்துவீட்டு பருவமச்சான்..

    2004ஆம் ஆண்டு கவிஞர் வாலி அவர்களுக்கு பம்மல் – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கண்ணதாசன் விருது வழங்கி பாராட்டு நடத்தியபோது இசைஞானி இளையராஜா குறிப்பிட்ட செய்தியை இங்கே பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    கவிஞர் வாலியின் தனித்திறமைகளைப் பட்டியலிட்டுக் காட்ட நேரமில்லையென்றாலும் அவர் குறிப்பிட்ட இரண்டு பாடல்கள்.. ஒன்று தளபதி திரைப்படத்தில் இடம்பெற்ற சுந்தரி கண்ணால் ஒரு சேதி.. மற்றொன்று கற்பகம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஆயிரம் இரவுகள் வருவதுண்டு..

    என்ன சொன்னார் தெரியுமா.. இந்தக் கவிஞர் ஒருவர்தான்.. பாட்டுவரியின் முதல் வார்த்தையைச் சொல்லிவிட்டு அதன் அடுத்த வார்த்தையை சொல்லாமல் .. ஆனால் அந்த வார்த்தையையே நினைக்க வைத்தவர்.. என்றார். ஆம்.. இப்போது இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள் .. விளக்கம் கிடைக்கும்!

    முதல் இரவின் முன்னதாக நடக்கும் இந்தக் காட்சியில் நாயகியைத் தோழி துவள வைக்கிறாள்.. இன்பத்தை எண்ணித் துடிக்க வைக்கிறாள்.. வஞ்சியின் நெஞ்சம் வெட்கத்தில் தவித்திருக்க.. வேடிக்கை அல்லாமல்.. அனுபவக் கதையைப் பாட்டில் வைக்கிறாள்.. இன்பத்தின் அரிச்சுவடி இது என்று சொல்லி வைக்கிறாள்.. அதையும் முழுதாய் சொல்லிவைக்காமல்.. அங்கங்கே புள்ளிவைக்கிறாள்.. கேளுங்களேன்..

    ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
    ஆனால் இது தான் முதல் இரவு
    ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
    ஆனால் இது தான் முதல் உறவு

    ஆயிரம் இரவுகள் வருவதுண்டு

    வயதில் வருவது ஏக்கம்
    அது வந்தால் வராது….
    வந்ததம்மா மலர் கட்டில்
    இனி வீடினில் ஆடிடும்…..

    ஆயிரம் …

    வருவார் வருவார் பக்கம்
    உனக்கு வருமே வருமே ஊஹும்
    தருவார் தருவார் நித்தம்
    இதழ் தித்திக்க தித்திக்க….
    ஆயிரம் …

    யாரோ சொன்னார் கேட்டேன்
    நான் கேட்டதை உன்னிடம் சொன்னேன்
    நானாய் சொன்னது பாதி
    இனி தானாய் தெரியும் மீதி
    ஆயிரம் …

    http://www.youtube.com/watch?v=vaF4mNuLURM
    http://www.youtube.com/watch?v=vaF4mNuLURM

    ஆயிரம் இரவுகள் வருவதுண்டு – Aayiram iravugal varuvathundu

    Share
  • வார ராசி பலன் 10-02-14-16-02-2014

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்: மாணவர்கள் புது நட்புடன் வளைய வருவார்கள். கணவன் வழி
    உறவுகளுக்காக பெண்கள் தங்கள் சேமிப்பை கரைப்பர். கலைஞர்களுக்கு
    வெளிவட்டாரம் மூலம் மகிழ்ச்சி வரும். கூடவே சுற்றியிருப்பவர்களால் வீண்
    செலவுகளும் வந்து வந்து போகும். சில குழப்பங்கள் உருவாகும் சூழல்
    இருப்பதால்,வியாபாரிகள் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டு வாருங்கள்.நிலைமை
    மீண்டும் சகஜமாகிவிடும். வேலை நிமித்தம் அங்கும் இங்கும் அலைபவர்கள் உடல்
    ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்தி வந்தால், உங்களின் அன்றாட
    அலுவல்கள் சீராக நடைபெறும். பொருளாதார வரவால்,நீங்கள் மன உற்சாகத்துடன்
    செயல்படலாம்.
    ரிஷபம்: மாணவர்கள் எட்டாக் கனியான விஷயங்களில் உங்கள் கவனத்தையும்,
    திறமையையும் வீணடிக்காததிருப்பது நல்லது. கலைஞர்கள் போட்டா போட்டியில்
    வெற்றி பெற,உங்களின் அனுபவ அறிவு கை கொடுக்கும். முக்கியமான
    பொறுப்புக்களை கையாள்பவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களை உங்கள் அருகில்
    வைத்துக் கொள்வது சிறந்தது. வியாபாரிகள் பழைய பாக்கிகளை வசூலிக்க அலைய
    நேரிடும். பெண்கள் இரவலாக உங்கள் பொருள்களைத் தருவதை நாசுக்காகத்
    தவிர்த்துவிடுங்கள். பாதிப் பிரச்னைகள் குறைந்து விடும். தொழிற்சாலைகளில்
    பணி புரிவோர் இரும்பு உபகர ணங்களை எச்சரிக்கையுடன் கையாள்வது அவசியம் .

    மிதுனம்: சரக்குகள் தேங்காதவாறு வியாபாரத்தை முடுக்கிவிடும்
    வியாபாரிகளுக்கு லாபத்தோடு புதிய ஒப்பந்தங்களும் உடன் வந்து சேரும்.
    பிறர் செய்யும் தவறுக்கு, நீங்கள் பதில் சொல்லும் சூழல் உருவாகும் நிலை
    இருப்பதால், மாணவர்கள் கவனத்துடன் செயல்படவும். தந்தை-மகள் உறவு
    நெருக்கமாகும். இதுவரை இருந்த மனத் தாங்கல் நீங்கி, ஒருவரையொருவர்
    பாராட்டிக் கொள்வீர்கள். பெண்கள் அவ்வப்போது தோன்றும் சிறிய பிரச்னைகளை,
    தெளிவுடனும், திறமையுடனும் கையாண்டால் உறவுகளின் ஆதரவு உங்கள் பலமாய்
    மாறும். ஆன்மீகப் பயணங்களுக்கான அழைப்பு உங்களைத் தேடி வரும்!

    கடகம்: இதுநாள் வரை மந்த கதியில் சென்று கொண்டிருந்த வேலை, புதிய
    வேகத்துடன் நடைபெறுவதால், சுய தொழில் புரிபவர்கள் உற்சாகத்துடன்
    திகழ்வார்கள். கல்விப் பணியில் இருப்பவர்க்கு இது ஏற்ற வாரமாகும்.
    அனுசரித்து நடந்து கொள்ளும் கொள்கை உடையவரின் கூட்டு முயற்சி வெற்றியாய்
    முடியும். வியாபாரிகள் எதிரிகளின் செயல்களை கண்காணிப்பது அவசியம். இது
    வரை தன் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று வருந்தியவர்க்கு
    பாராட்டு வந்து சேரும். முக்கியமான முடிவு எடுக்கும் தருணங்களில்
    அவசரப்பட வேண்டாம். சிலர் பழைய நண்பர்களை சந்தித்து பேசி மகிழலாம்.

    சிம்மம்: நீங்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள், உங்களின் எதிர்கால
    முன்னேற்றத்திற்கு அடித்தளமாகும் . இளம் வயதினர் புதிய சூழலில் கவனமாகப்
    பழகுவதோடு யோசித்து செயல்படுவது அவசியம். தொழிலதிபர்கள் தங்கள்
    நாவன்மையால் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஏற்ற வாரம். வீடு,மனை
    விற்பனை அவ்வளவு லாபகரமாய் இராது. எனவே பணத்தை அதில் முடக்க வேண்டாம்.
    இல்லச்சூழலோடு பணிச்சுமை மோதாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். கலைஞர்கள்
    புதிய ஒப்பந்தம், பயணம் என்று மகிழ்ச்சியாய் இருப்பார்கள். பணியில்
    இருப்போர் தன் திறமைக்குரிய வாய்ப்பு வரும் வரை பொறுமை காப்பது அவசியம்.

    கன்னி: பெண்கள் பேச்சில், படபடப்பைக் குறைத்து இனிமையைக் கூட்டுங்கள்.
    இல்லறம் நல்லறமாய் திகழும். பெற்றோர்கள் பிள்ளைகள் கேட்டவுடன் பணம்
    கொடுப்பதை விட, அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைப்பது நல்லது.
    பணியில் இருப்பவர்கள் இடம், பொருள், ஏவல் தெரிந்து உங்கள் கோரிக்கைகளை
    முன் வைப்பது அவசியம். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமிருக்கும். எனவே
    செலவுப் பட்டியலை குறைவாக்குங்கள். சுய தொழிலில் இருப்பவர்கள் ,
    சிரமங்களுக்கிடையே வெற்றி காண்பர். சில நேரங்களில் நண்பர்கள் உங்களை
    முழுமையாய் புரிந்து கொள்ளாமல் செயல்படலாம்.

    துலாம்: உயரதிகாரிகள் காட்டும் ஆதரவு புதிய உற்சாகத்தை அளிப்பதோடு,
    உங்களின் ஆர்வத்திற்கு உரிய வாய்ப்பும் உங்களைத் தேடி வரும். மாணவர்கள்
    படிப்புக்கு முக்கியத்துவம் தந்தால், பாடங்கள் கரும்பாய் இனிக்கும். பொது
    வாழ்வில் இருப்போர் ஆவேசமான பேச்சு, மற்றும் செயல் பாடு இரண்டும் எல்லா
    நேரங்களிலும் விரும்பிய பலனைத் தராது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
    வேலையில் இருக்கும் பெண்கள் சில மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து, தங்களின்
    திறமையைத் தக்க வைத்துக் கொள்வர். பிறரின் தனிப்பட்ட விஷயங்களில்
    தலையிடாமல் இருந்து வந்தால், மன அமைதி குறையாமலிருக்கும்.

    விருச்சிகம்: நண்பர்களிடையே பணம் கைமாற்றாக கொடுப்பதை தவிர்த்தால், நட்பு
    கெடாமல் இருக்கும். மாணவர்கள் தெளிவான சிந்தனையுடன் செயலாற்றினால் தடுமாற
    வேண்டி யிருக்காது. பெண்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் முன்
    அவற்றைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். சிலருக்கு புதிய மனை மற்றும்
    இடம் வாங்கும் வாய்ப்பு கனிந்து வரும். அலுவலக விழா விருந்து
    ஆகியவற்றிற்கு கணிசமான பணம் செலவழியும். நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களை
    நண்பர்கள் இனிமையாய் மாற்றிடு வார்கள். உறவுகளிடையே கருத்து வேறுபாடு
    தோன்றி மறையும். அவசர கதியில் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொண்டால்,
    தேக நலன் சீராக இருக்கும்.
    தனுசு:குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்காதீர்கள்.
    பிரச்னைகள் சுமுகமாக முடியும். வெளி இடங்களில் தங்கி படிக்கும் மாணவ
    ர்கள் அவசியமற்ற இரவு நேரப் பயணங்களை தவிர்த்து விடுதல் நலம். கலைஞர்கள்
    கவனமாக இல்லை என்றால், சிலரின் சூழ்ச்சியால், வரும் வாய்ப்புகள் திசை
    மாறலாம். குழந்தைகள் பெறக் கூடிய பெருமையால், உங்களின் பெருமையும்
    உயரும். அலுவலக கொடுக்கல் வாங்கலில் கவனமாய் இருந்தால், மன இறுக்கமின்றி
    வேலையில் ஈடுபட முடியும். மற்றவருக்கு ஜாமீன் போடுவதை தவிர்த்துவிடவும்.

    மகரம்: குடும்ப உறுப்பினர் உங்களின் திட்டங்களுக்கு, வலிமை சேர்க்க முன்
    வருவார்கள். பங்குச்சந்தை விஷயங்களில் ஏற்றம், ஏமாற்றம் இரண்டும்
    கலந்திருக்கும். எனவே பணத்தை முதலீடு செய்யும் முன் யோசனை செய்வது
    நல்லது. பெண்கள் பேச்சில் கடுமை கலவாதவாறு பார்த்துக் கொண்டால், குடும்ப
    உறவுகள் சுமூகமாக இருக்கும்.வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் உள்ள
    குளறுபடிகளை கவனமாக சரிசெய்தால், அபராதம் செலுத்தவதை தவிர்த்துவிடலாம்.
    வெளியூர் பிரயாணங்களில், உணவு விஷயத்தில் மிதமாக இருப்பது நல்லது.
    பொறுப்புக்களில் உள்ளவர்கள் கோப்பு களை நன்கு படித்தபின்,
    கையெழுத்திடுவது அவசியம்.

    கும்பம்: சில நேரங்களில் கண் மற்றும் பல்சம்பந்தமான உபாதைகள் உங்கள்
    இயல்பு வாழ்வை பாதிக்கக் கூடும். எனவே சிறு தொந்தரவுகளை உடன் கவனித்து
    விடுங்கள். கலைஞர்கள் விழா விருந்து போன்றவற்றில், உங்கள் எல்லையை
    அறிந்து, நடந்து கொள்வது அவசியம். வியாபாரிகள் எழுத்துப் பூர்வமாகவே
    ஒப்பந்தங்களை முடிப்பது நல்லது. பொருள் விநியோகத்தில்
    ஈடுபட்டிருப்பவர்கள் வேலையாட்களை நம்பி முழு பொறுப்பை அளிக்காமல், உங்கள்
    கவனமும் அதில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.பணியில் இருப்போர்
    வரும் இடமாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொள்வதால், வாழ்க்கையில் உயரும்
    வாய்ப்பு உங்களை நாடி வரும்.

    மீனம்:பெண்கள் தங்கள் துணைவரின் உடல்நலத்தில் விசேஷ கவனம்
    செலுத்தி வந்தால், இல்லப் பணிகள் தடையின்றி தொடரும். மாணவர்கள் சோர்வை
    விரட்டியடி க்கும் சத்தான பானங்களை குடித்து வந்தால், சிந்தனை வளம்
    மேலும் பெருகும். வியாபார விஷயங்களில் வெளுத்ததெல்லாம் பால் என்றிருப்பதை
    தவிர்த்தல் நலம். பணியில் இருப்போர்கள் புதிய விஷயங்களை அறிந்து கொள்ளும்
    துடிப்புடன் செயலாற்றுவார்கள். பிள்ளைகளிடம் உங்கள் கருத்துக்களை இதமான
    முறையில் எடுத்துச் சொன்னால்,அவர்களின் ஒத்துழைப்பையும் பெறலாம். பழைய
    கடன்கள் அடைவதால், பொருளாதார இறுக்கம் குறையும்.

    Share