கிரேசி மோகன்

 

தாயி தகப்பன் ஒறவுமுற எல்லாமே

ஓவியம் : கிரேசி மோகன்
ஓவியம் : கிரேசி மோகன்

சாயி பகவானே நீதான்யா -சேயெனக்
காப்பாத்த வேண்டிக் கனிவோடு அன்னைக்கு
நீபாத்த தொன்றே நிசம்….(நண்பன் ”சு.இரவி” எழுதியது)….

அக்கல்கோட் ராஜன் அவதார மானவா
சிக்கல்கட் டாமிந்த சம்சாரம் -வெக்கங்கெட்
டீரடியும் சேற்றினில் வைத்திங்கு சீரழிந்தோம்
ஷீரடி ஆற்றில் செலுத்து….(1)

சுகவாணி சாயி கமலவாசி சாயி
மகமாயி சாயி அயனரியரன் -சாயி
முகமதுவும் சாயி முனியேசு சாயி
அகமதை ஷீரடியாய் ஆக்கு….(2)….

மோதக மூக்கனே சாதக வாக்கனே
தீதற போக்கிடும் போக்கனே -மாதவா
சாயி மஹராஜா தாயின் அருள்சொரியும்
ஆயி மகமாயி ஆவ்….(3)….

தாயினால் மண்தோன்றி நோயினால் மண்மூடும்
காயமிது பொய்யென்று காணுவாய் -மாயமாய்
ஆயிரம் ஒன்றாகும் ஒன்றா யிரமாகும்
சாயிராம் சேவடியில் சேர்….(4)

விண்டுரைக்க வொண்ணா விளையாட்டுப் பிள்ளையை
பண்டரிக்குள் வாழும் பகவானாய் -கண்டறிவாய்
ஷீரடி சாயியவன் சேவிப் பவர்க்கருள
வேரடி பாயும் விழுது….(5)

உதியெடுத்(து) உந்தன் நுதலிலே பூசி
கதியென்று சாயி கமலப் -பதமிரெண்டை
பற்றிவாழ பாவங்கள் பற்றாது, பாபாவை
சற்றுநேரம் சிந்திக்க சித்து….(6)

நட்டநடு கானகம் நாற்புரமும் சாகரம்
எட்டுவித கோணலாய் இவ்வாழ்க்கை -விட்டுவிட
புத்தியில்லை, வெற்றிபெற சக்தியில்லை சத்குருவே
பித்தனிவன் பேதமையைப் போக்கு….(7)

தாயி தகப்பன் தெய்வமே ஷீரடி
சாயி மகராஜா சத்குரு -சேய்நான்
படித்த உமது சரித்திரம் பாடி
முடிக்க அருள்வீர் மகிழ்ந்து….(8)

சாதுவாய் ஷீரடி சொந்தங்கள் காத்திட
கோதுமை மாவை அரைத்தது -தீதுரு
காலரா நோயை வாலறுத்(து) ஓட்டிடும்
போலோராம் சாயிநாதன் போக்கு….(9)

வாயினால் பேசி வசனத்தை உச்சரிக்க
சாயிராம் வாக்கை சரியாக்கு -தூயவா
ஷீரடி வந்துன்னை சேவிக்கும் நாளன்று
கூறிடுவேன் நன்றிக் கடன்….(10)

சகிப்பு, வினயம், சகோதர பாவம்
உகக்கும் அனைத்தையும் ஒன்றாய் -அகத்தும்
புறத்தும் சமரச சன்மார்கம் காண
சிரத்தினில் ஷீரடி சூடு….(11)

கெட்டபுத்தி செய்கைகள் விட்டகன்(று) ஓடிட
புட்டபர்த்தி பாதம் பணிந்திடு -பட்டுமலர்
நித்தியமும் நெஞ்சில் நிறுத்த நிறுத்திடும்
சத்யம் சிவசுந் தரத்து….(12)

பத்திரம் பாதுகாப்பு பாபாவின் ஷீரடி
சத்திரச் சாவடியில் சாஸ்வதம் -நித்திரை
சொப்பனம் மற்றும் சகஜத்தில், சாயிராம்
எப்பவும் காப்பு எமக்கு….(13)

 

பன்றிக் காய்ச்சல் ஊரில் பரவிய போது….
——————————————————
வந்திருக்கும் பன்றி வியாதி வெகுண்டோட
எந்திரத்தில் முன்போல இட்டரைப்பாய் -உன்திறத்தைக்
காட்டருள் பாபா கலங்குகிறோம், நீயல்லால்
கூட்டெமெக்கு வேறிங்கார் கூறு….(14)

பேட்டி எடுக்க லஷ்மி நரசிம்மனும் & க்ளிக் ரவி
வந்தபோது எழுதியது….
————————————————————–
ஆறடி மண்ணில் அடங்கும் உடலோடு
மாரடித்துப் பார்த்தேன் முடியவில்லை -ஷீரடி
நாதா சரண்புகுந்தேன் நின்னை, எனக்கருள்
ஏதே னுமனுபூதி யை….(15)

ஆள்காட் டிவிரல் அடுத்தவிரல் வாயிலாய்
தாள்காட்டும் கட்டைவிரல் தீண்டிட -மால்கட்டின்
வேரடிக்குப் பாய்ந்து வினைமரம் சாய்த்திடும்
ஷீரடி பாபா செயல்….(16)

மாபாவம் செய்தும் மகனீயர் ஷீரடி
பாபா சரணம் புகுந்தோரை -ஆபாச
இச்சைகள் அண்டாது என்றென்றும் காத்திடும்
உச்சியில் இட்ட உதி….(17)….07-09-2011

வேப்ப மரத்தடியில் வீற்று மருந்தாக
காப்பிடும் சாயி கசப்பாக -சாப்பிடத்
தந்தாலும் நோய்க்கு தருகற் பகமாகி
வந்தோர்க்கு வாழ்வில் வலுவு….(18)

காம துனியெரித்து நாம உதியெடுத்து
தாமசம் தீர்ப்பாய் தகப்பன்சாய் -ராமனே
வேம்பாமென் நெஞ்சில் விளைந்த குருஸ்தானில்
ஆம்பிளை அம்மா அமர்….(19)

கந்தலா னாலுமதைக் கொண்டுத் திரம்கட்டி
மந்திரமாய்த் தொங்கும் மரவணையில் -அந்தரத்தில்
எங்கணம் ஏறினீர், அங்கணம் பாபாவே
இங்கெனக்கோர் உச்சி இடு….(20)

தீர்த்தங்கள் ஏழும் தளும்பிடும் ஷீரடி
மூர்த்தியின் பாதத்தில் MunNiiraai -ஆர்த்தி
எடுபுத்தி, அன்பாம் எரியூட்டி, ஆர்வத்
துடன்பக்தி நூலே திரி….(21)

அச்சுதன் சம்பு அயனுரு ஆனவா
சச்சிதா னந்தகுரு சாயிராம் -இச்சிறை
ஆறடிப் பொந்தில் அடைபட்(டு) உழல்கிறேன்
ஷீரடியில் சேர்ப்பாய் சரண்….(22)

ஆயிரம் அம்மாக்கள் ஆகுமோ ஈடாக
சாயிராம் தாய்க்குச் சமானமாய் -நோயினால்
ஆறடி ஓய்ந்தாலும் ஆன்ம சுகம்தரும்பார்
ஷீரடி மாயி சிரிப்பு….(23)

ஆடை கபினி அணிந்தடி யார்களின்
பாடை அதற்குள் பதுக்கிடும் -வீடை,
அறம்பொருள் இன்பம் அளித்திடும் வேப்ப
மரம்நிழல் சாயி மகான்….(24)

ஆரத்தி நேரத்தில் ஆலயம் சென்றுனது
பாரத்தை பாபாவின் பாதத்தில், -ஈரத்தில்
கண்கள் பளபளக்க கைகூப்பி சேர்க்கமனப்
புண்கள் மலராய் பிறப்பு….(25)

 

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “ஷீரடி பாபா வெண்பாக்கள்

 1. ஷீரடி பாபாவின் சீரடி போற்றும் பாவடிகள் அருமை!

  தங்களின் நகைச்சுவையை மட்டுமே ரசித்து வந்த நிலையில், தங்களுக்குள் ஒளிவிடும் கவிச்சுவையை கண்டு மகிழ்ச்சி! ஓவியமும் மனதை மயக்குகிறது. வாழ்த்துக்கள்!

 2. பாபாவின் அடிகள் சரணடைந்தோர்க்கு இல்லை பயம். வெகு அழகாக ஷீரடி நாதனின் அருள் பாடி மகிழ வைத்தீர்கள் திரு மோஹன். இதுவரை உங்கள் வசனங்களையே நானும் என் மகன்களும் பேசிப் பேசி மகிழ்வோம். இப்போது பாக்களையும் படித்து மகிழ  வல்லமை வழி வகுத்தது. மிக நன்றி.

 3. //தாயினால் மண்தோன்றி நோயினால் மண்மூடும்
  காயமிது பொய்யென்று காணுவாய்

  நட்டநடு கானகம் நாற்புரமும் சாகரம்
  எட்டுவித கோணலாய் இவ்வாழ்க்கை ///

  மேற்கண்ட பாடல் வரிகள் அருமை.
  ஓவியமும் அழகு, ஆடையின் மடிப்புகளும், சுருக்கங்களும் , தோலின் பளபளப்பும் மிக நேர்த்தியாக வந்துள்ளது, பாராட்டுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *