‘ஒரு புளிய மரத்தின் கதை’ – சுந்தரராமசாமி – புத்தக மதிப்புரை

0

கலையரசி

சுந்தரராமசாமி அவர்கள் எழுதிய முதல் நாவல்,‘ஒரு புளிய மரத்தின் கதை’. 1966 ஆம் ஆண்டு வெளி வந்தது. தற்கால உரைநடையைப் பேச்சு வழக்கில் எழுதிய முதல் நாவல் என்ற வகையில், தமிழிலக்கியத்தில் இது சிறப்பிடம் பெறுகிறது.

காலச்சுவடு நிறுவனத்தின் நிறுவனரான இவரின் சொந்த ஊர் நாகர்கோவில்.  ‘ஜே.ஜே.சிலகுறிப்புகள்’, ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’, என்ற நாவல்களோடு, தகழி சிவசங்கரப் பிள்ளையின் ‘செம்மீன்’, ‘தோட்டியின் மகன்’, என்ற நாவல்களைத் தமிழில் மொழியாக்கமும் செய்துள்ளார்.

இந்நாவலில் கதை சொல்லியாக அறிமுகமாகும் தாமோதர ஆசான் இரத்தமும் சதையும் கொண்ட உயிர்த் துடிப்புள்ள ஒரு கதாபாத்திரம். அவர் கதை சொல்லும் பாங்கு, கேட்போரை ஈர்த்துப் பிணிக்கும் ஆற்றல் கொண்டது.

ஆசான் வெற்றிலை போட்டுக் குதப்பிவிட்டு ஹா, ஹூம் என்று ஆர்ப்பாட்டமாக கனைத்துப் புகையிலை சாற்றை வெளியேற்றிவிட்டுக் கதை சொல்லும் அழகை நீங்களும் சுவைக்க, நாவலிலிருந்து கொஞ்சம்:-

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் என்று அத்தைப் பாட்டிகள் பாணியில் கதை ஆரம்பம் ஆகாதுகதை உத்திகள் எல்லாம் அவரிடம் படிந்து போன சமாச்சாரம்.

சற்றுத் தள்ளி முளைத்திருக்கும் ஒரு செடியை இரண்டு வினாடிகள் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுஅதென்ன செடி, தெரியுமா அது யாருக்காவது? என்கிறார்.

நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுத் தலையை அசைக்கிறோம்.

இதெக் கொடுத்துத்தாலாதாலி கெட்டின புருஷனெக் கொன்னே போட்டா சண்டாளிமனசு வருமா ஒரு பொம்பிளைக்கு?அடுத்தவன் களுத்தெக் கட்டிக்கிடணும்னு ஒரே நெனப்பா நெனச்சுத் துணிஞ்சிட்டாளே பாவி

அப்படித்தான் செய்தாளே, புருஷன்காரன் என்ன நொண்டியா, சப்பாணியா, கூன் குருடா, இல்லே மேலே ஒண்ணு இருக்கட்டும்னு இன்னொருத்தியெ வச்சுக்கிட்டு இருந்தானா?

எப்படிப் போனாலும் அறுப்புக்கு நூறு கோட்டை நெல் வந்து விளும்நாள் ஒண்ணுக்குக் கொல்லேலே விளுற இலை அம்பதுக்குக் கொறயாதுஅவுத்து விட்டாத் தொளுவம் காலியாகுதுக்கு அரைமணி நேரமாகும்

சவாரிக்கு மாடு புடிக்குதுக்கு வந்தான் வடசேரி சந்தைக்குஅரபிக் குதிரெ கணக்கா ரெண்டு மாட்டெப் புடிச்சுக்கிட்டு, அந்த மாபாவி தலையிலே ஆசையா வெச்சு முத்துதுக்கு மடி நெறயப் பூவும் வாங்கிட்டுத் தானே போனான் அண்ணைக்கும்.  பாலைத் தான் தாறான்னு வாங்கிக் குடிச்சான்ரெண்டு தவா ரெத்தம் மாட்டு வாந்தி எடுத்தான்குளோஸ்.

இது தான் ஆசானுடைய எடுப்புகடைசியில் மண்ணைத் தூக்கி விண்ணில் நிறுத்திக் காட்டுகிறேன் என்று சொல்லி விட்டுத் துண்டை விரித்துமருந்துப் பெட்டிகளை அடுக்கும் செப்பிடு வித்தைக்காரன் போல், மீண்டும் வெற்றிலை போட்டுக் கொள்ள ஆரம்பித்துவிடுவார். பின்னால் விஷம் கொடுத்தவளின் குழந்தைப் பருவத்தில் கதை ஆரம்பமாகும்
புளிய மரத்தின் ஆரம்பகால சுவாரசியமான கதைகளை, நாம் ஆசான் மூலமே அறிந்து கொள்கிறோம். கதை கேட்பதற்காகவே அவரைச் சுற்றி எந்நேரமும் சிறுவர்களின் கூட்டம் அலைகிறது.  பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் வராததுமாக பையைத் தூக்கித் தூர எறிந்துவிட்டு, கதை கேட்க ஓடும் மாணவர் போன்றே, நாமும் ஆசான் எப்போது கதை சொல்லத் தொடங்குவார் என்று எதிர்பார்த்து ஏங்குகிறோம்!

ஆனால் பாதியிலேயே ஆசான் மறைந்து விடுகிறார். அவர் மறைவுக்குப் பின்,  நாவலின் சுவை குறைந்துவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. அந்தளவுக்கு ஆசான் கதாபாத்திரம், படிப்பவர்களின் மனதைக் கொள்ளை கொண்டு விடுகிறது.

அதற்குப் பிறகு காற்றாடி மரத்தோப்பு அழிக்கப்பட்டுப் பூங்காவாகும் கதை விவரிக்கப்படுகிறது. நவீனமயம் என்ற பெயரில் இயற்கையை அழிக்கும் மனிதனின் பைத்தியக்காரத்தனத்தை இச்சிறு உரையாடல் மூலம், ஆசிரியர் எப்படி கிண்டல் செய்கிறார் பாருங்கள்!

தோப்புமரம் ஒவ்வொன்றாக வெட்டப்பட்டு வீழ்வதைக் காணச் சகிக்காமல் முதியவர் ஒருவர், இளைஞனிடம்கேட்கிறார்:-

தம்பி, எதுக்கு டேய் மரத்தெ வெட்டிச் சாய்க்கிறாங்க?”

செடி வைக்கப் போறாங்க” 

எதுக்கு டேய், செடி வைக்கப் போறாங்க?”

காத்துக்கு

மரத்தெக் காட்டிலும் செடியா டேய் கூடுதல் காத்துத் தரும்?”

அளகுக்கு

செடிதான் அளகாட்டு இருக்குமோ?”

உம்

செடி மரமாயுடாதோவ்?”

மரமாட்டு வளராத செடிதான் வைப்பாங்க. இல்லை வெட்டி வெட்டி விடுவாங்க

வெட்டி வெட்டி விடுவாங்களா?”

ஆமா

அட, பயித்தாரப் பசங்களா!” 

அதன் பின்னர், அக்கிராமத்தில் ஒரே வியாபாரம் செய்யும் தாமுவுக்கும் காதருக்குமான போட்டியும் பொறாமையும், வியாபாரச் சண்டையும் விரிவாகச் சொல்லப்படுகிறது. நகர சபை தேர்தலில் போட்டியிடும் அவர்களுக்கிடையே ஏற்படும் பகைமை, ஒன்றுமறியாத அப்பாவி மரத்தை வெட்டுவதில் போய் முடிகிறது.

தாமு கடைக்கு நிழல் கொடுக்கும் புளியமரம் வெட்டப்பட்டால், அவன் வியாபாரம் பாதிக்கும் என்று ஐடியா தந்து, காதரை தேர்தலில் போட்டியிட வைத்து, வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த அவர்களுக்கிடையே பகைமையை வளர்ப்பது எசக்கி என்கிற பத்திரிக்கை நிருபர்!

இந்நாவலின் கரு பற்றி ஆசிரியரே முதல் அத்தியாயத்தில் சொல்கிறார்:- .

மறக்க முடியாத விஷயங்களும் சில உண்டு தானேஅதில் ஒன்றுதான் புளியமரத்தின் கதையும்.

சொல்லப் போனால் புளியமரம் என்ன செய்ததுசும்மா நின்று கொண்டு தானே இருந்தது?மனிதனின் அலகிலா விளையாடல்களுக்கு மெளன சாட்சியாக நின்றதே அல்லாமல் எதிலாவது பங்கெடுத்துக் கொண்டதாபட்டுக்கொண்டதாமனித ஜாதிக்கு அது இழைத்த கொடுமைதான் என்னயாரைப் பார்த்துக் கை நீட்டிற்றுயாரை நோக்கிப் பல்லிளித்ததுயாருடனாவது சேர்ந்து கொண்டு, யாருக்கேனும் குழி பறித்ததா

ஆனால் நாட்டையும், பணத்தையும் பெண்டுகளையும் அதிகாரத்தையும், புகழையும் காயாக வைத்து விளையாடிய மனிதன், புளியமரத்தை மட்டும் விட்டு வைக்கிறேன் என்கிறானா?அதையும் காயாக வைத்து விளையாடித் தீர்த்துவிட்டான்புளியமரம் அழிக்கப்பட்டது.” 

இந்நாவலில் புளியமரம் ஒரு குறியீடு. வாய்ப்புக் கிடைத்தால் இந்நாவலை அவசியம் வாசியுங்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *