கவிஞர் காவிரி மைந்தன்

கண்ணதாசன் என்கிற திரையுலகக் கம்பன் – தன் முன்னோர்கள் – தமிழ்ச் சான்றோர்கள் – புலவர் பெருமக்கள்தம் படைப்புகளில் ஆழ்ந்து உணர்ந்து, அப்பாடல்களின் பொருளுணர்ந்து, புளகாங்கிதம் அடைந்தது மட்டுமின்றி, பலரும் புரியும்வண்ணம் அச் செய்திகளை உள்வாங்கி, தமக்கே உரிய பாணியில் திரைப்பாடல்களில் வழங்கியிருக்கும் பல பாடல்கள் கவிஞரின் திறமைக்கு சான்று பகர்கின்றன.

காய் என்கிற சொல்லை அடுக்கடுக்காய்வைத்து பல்வேறு காய்களைச் சுட்டிக்காட்டி தன் அத்தை மகள் சமைத்த சமையலைப் பாடும் காளமேகப் புலவரின் பாடல் ஒன்று..

‘கரிக்காய் பொரித்தாள் கன்னிக்காயை தீர்த்தாள்

பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள்’ என்று காய் அடுக்கு நான்கு முறை கூறப்பட்டு நயமுற அமைக்கப்பட்டுள்ளது.

இதில் வியந்த கண்ணதாசன், 25 முறை காய் என்னும் சொல்லை வைத்து விளையாடுகிறார். அத்திக்காய் காய் காய் காய் ..ஆலங்காய் வெண்ணிலவே.. என்கிற பாடலில் கேட்பவர் நெஞ்சம் மகிழும்படி பாடுகிறார்..

காளமேகப் புலவரின் இருபொருள் நயங்களில் மயங்கி இலை மறை காயாகப் பலமுறை இவரும் வார்த்தைகளை வடித்தெடுத்துத் தருகிறார்.

பலே பாண்டியா என்கிற திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாட்டு,எழுதப்பட்ட போது இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் ‘என்னய்யா? கொத்தவால் சாவடியையே பாடலில்கொண்டு வந்திருக்கீரே.. என்று சொல்ல.. கண்ணதாசன் அவரிடம் எவ்வளவோ பாடல்கள் நீங்க கேட்கிறமாதிரி எழுதித் தருகிறேன்.. இதுமாதிரி ஒருசில பாடல்கள் எனக்காக இருக்கட்டும் என்று சொல்லி இடம்பிடித்த பாட்டு இது..

அந்த திக்காய் காய்.. என்று வெண்ணிலவை கவியரசர் இருபொருள்பட .. ஒவ்வொரு வரியிலும் வார்த்தை விளையாட்டு நடத்தியிருக்கிறார்.

தமிழின் அழகு கொட்டிக்கிடக்கும் திரைப்பாடலைக் காணுங்கள்! பொருளின் சுவையும் அறிந்தபடி இசையில் கொஞ்சம் மயங்குங்கள்!!

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
நீ என்னைப்போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்..)

கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக் காய்
(கன்னிக்காய்..)
மாதுளங்காய் ஆனாலும் என்னுள்ளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த ஏலக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்
(இரவுக்காய்..)
உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்..)

ஏலக்காய் வாசனைப்போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக்காய்
(ஏலக்காய்..)
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்..)

 
http://www.youtube.com/watch?v=2yjVzhSK_t8
http://www.youtube.com/watch?v=2yjVzhSK_t8

 

காவிரிமைந்தன்

நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்

கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)

சென்னை 600 075.

தற்போது – அபுதாபி  (அமீரகம்)

00971 50 2519693

kaviri2012@gmail.com

 

Website: thamizhnadhi.com

அத்திக்காய் காய் காய் – Athikkaai kaai kaai aalankaai vennilave

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *