Month: August 2014

  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! (35)

    35. யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகம் (2), வைல் டெர் ஸ்டாட், ஜெர்மனி.

     

    சுபாஷிணி ட்ரெம்மல்​

    பிரச்சனைகள் இல்லாத ஒரு வாழ்க்கை என்பது உண்டா? அதிலும் குறிப்பாக சாதனைகள் பல படைப்போர் வாழ்க்கையில் அவர்கள் சந்தித்து கடந்து வந்த பாதைகள் கரடு முரடானவையாகத் தான் அமைந்திருக்கின்றன. வாழ்க்கை பாடம் கொடுக்கும் அனுபவங்களே ஒரு படி நிலையிலிருது மற்றொரு படி உயரத்திற்கு அழைத்துச் செல்கின்றது.யொஹான்னஸ் கெப்லரின் வாழ்க்கை இத்தகைய கடினமான தடைகள் பல நிறைந்த வாழ்க்கையாகத்தான் அமைந்தது.

    jk2
    யொஹான்னஸ் கெப்லர்
    ​

    யொஹான்னஸின் தாயார் காத்தரினா ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் பிறந்தவர். இவருக்கும் ஒரு பிரபலமான வர்த்தகராக அந்த வட்டாரத்தில் திகழ்ந்த ஒரு வர்த்தகரின் மகனான ஹைன்ரிக் கெப்லருக்கும் திருமணம் நடந்தது. ஹைன்ரிக் பாடன் உர்ட்டென்பெர்க் பகுதி பிரபுவிடம் சற்று அனுக்கமாகப் பழகும் சூழல் அமைந்திருந்தாலும் தனது குடிப்பழக்கத்தால் வறுமை நிலையை அடைந்து குடும்பத்தையும் வறுமை வாட்ட காரணமாகிவிட்டார். யொஹான்னஸின் தாயார் காத்தரினா ஒரு முன்கோபம் படைத்தவர் என்றும் சிடுசிடு என்று எல்லோரிடமும் பழகுபவர் என்றும் வர்ணிக்கப்படுகின்றார். இதனால் இவர்களின் சுற்றத்தார் மற்றும் அவர்கள் சூழலில் நல்ல நட்புறவும் அமையாத நிலையே அப்போது சிறுவன் யொஹான்னஸுக்கு அமைந்தது. புதிய இடம் புதிய பாதையைக் காட்டலாம் என்ற முடிவில் ஹைன்ரிக் தன் மனைவியுடனும் யொஹான்னஸுடனும் நெதர்லாந்துக்குப் பயணமானார். ஆனால் அங்கும் இவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல மாற்றம் அமையவில்லை. மனம் உடைந்து இவர்கள் மீண்டும் தங்கள் கிராமமான ஜெர்மனியின் வைல் டெர் ஸ்டாட் கிராமத்துக்கே வந்து சேர்ந்தனர்.

    இந்த காலகட்டத்தில் தான் காத்தரீனாவின் அத்தை ஒருவர் விஷம் வைத்து ஒருவரை கொன்று விட்டார் என்று கைதாகி விசாரணைக்குப் பின் ஒரு சுனியக்காரி என்று அறிவிக்கப்பட்டு உயிருடன் எரிக்கும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இது அவர்கள் குடும்பத்தில் எவ்வகை துயர சூழலை உருவாக்கியிருக்கும் என்று நம்மால் ஓரளவு ஊகிக்க முடிகின்றது. இந்த பிரச்சனைகளுக்கு இடையில் யொஹான்னஸின் கவனமும் கல்வியின் மீதான ஆர்வமும் அதிகரித்துக் கொண்டேயிருந்ததே தவிர குறையவில்லை. தனது திறமையின் காரணமாக மானில பிரபுவின் பிரியத்துக்குள்ளான சிறுவர்களில் ஒருவராக யொஹான்னஸ் திகழ்ந்தார். இதனால் ட்யூபிங்கன் பல்கலைக்கழகத்தில் உபகாரச் சம்பளம் பெற்று படிக்கும் நல்வாய்ப்பையும் இவர் பெற்றார்.

    jk1
    கெப்லர் வாழ்க்கை குறிப்பு
    ​

    இத்தருணத்தில் தான் யொஹான்னஸின் தந்தை யாரிடமும் சொல்லாமல் தன் வீட்டிலிருந்து வெளியேறி ஆஸ்திரிய நாட்டின் படையில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது துருக்கிக்கு எதிராக போர் நிகழ்ந்து கொண்டிருந்தமையால் அதற்குப் படையில் உழைக்க ஆட்கள் தேவைப்பட, வீட்டில் சொல்லாமலேயே புறப்பட்டு போய்விட்டார் ஹென்ரிக். தந்தையை இழந்தாலும் யொஹான்னஸின் கல்வி முயற்சிகள் பாதிப்படையவில்லை. தமது 20 வயதிற்குள்ளேயே பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்று சிறந்த ஆய்வாளராக உருவாகிக் கொண்டிருந்தார் யொஹான்னஸ்.

    வின்வெளி ஆராய்ச்சி, சோதிட ஆராய்ச்சி இவையிரண்டும் தனித்தனி துறைகளாக வளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. இந்த இரண்டு துறைகளிலும் தக்க பாண்டித்தியம் பெற்றிருந்தார் யொஹான்னஸ். 17ம் நூற்றாண்டின் உலகின் தலைச் சிறந்த அறிவியல் ஆய்வாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் யொஹான்னஸ். அறிவியல் புரட்சிக்கு வித்திட்ட மிக முக்கியமானவர்களில் ஒருவர் இவர் என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மை. இவரது ஆய்வின் கண்டுபிடிப்புக்களான Mysterium cosmographicum, Astronomia nova, Harmonice Mundi அனைத்துமே மிக முக்கிய அறிவியல் ஆய்வுகளின் பட்டியலில் இடம் பெறுபவையாக அமைகின்றன. வானியல் துறை நிபுணராக இருந்தாலும் ஜோதிட குறிப்புக்களைக் கணித்துக் கொடுக்கும் வழக்கத்தையும் தொழிலாகவும் இவர் செய்து வந்தார். இந்த ஜோதிடக் கணிப்பு செய்யும் வேலையே இவரது ஜீவனத்துக்கும் வழியாக சில காலங்கள் அமைந்தது.

    jk4
    16ம் நூற்றாண்டு லத்தின் மொழி வகுப்பு – பள்ளி வகுப்பறை
    ​

    வானியல் ஆய்வுக் கோட்பாடுகளை வெளியிட்டு யொஹான்னஸ் அறிவியல் புரட்சி செய்யத் தொடங்கியிருந்த சமயத்தில் தான் இவரது தாயாரின் தொடர்பில் ஒரு பிரச்சனை எழுந்தது. ஒரு சிறிய பூசலில் இவரது தாயாரை அக்கிராமத்துப் பெண் ஒருவர் விஷம் கொடுத்து இவர் கொல்லப்பார்க்கின்றார் எனக் குற்றம் சாட்ட அது அப்போதைய அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டு காத்தரினா ஒரு விட்ச் என வழக்காடு மன்றத்தில் அறிவிக்கப்பட்டு அவர் சிறைப்படுத்தப்பட்டார். இது 1620 ஆண்டு நடந்தது. மூலிகை தாவரங்களை உடல் நோய் தீர்க்க உபயோகித்தல், நாட்டு வைத்திய மருந்து தயாரித்தல், அதனை பிறருக்கு கொடுத்து சோதித்தல், நோயை இத்தகைய மூலிகைகளைக் கொண்டு குணமாக்க முயற்சி செய்தல் போன்றவை அக்காலத்தில் மிகக் கடினமான தண்டனைக்கு உட்படுத்தக்கூடிய சட்டமாக இருந்தது. இப்படி செய்வோர் விட்ச் என அறிவிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கிடைப்பது வழக்கம். தண்டனைகள் பொதுவாக உயிருடன் எரித்துக் கொல்வது அல்லது இவர்களை ஒரு மரத்தில் வைத்து கட்டி ஓடும் ஆற்று வெள்ளத்தில் தூக்கிப் போட்டு விடுவது என்பதாக இருக்கும்.

    jk3 (1)

    ​16ம் நூற்றாண்டு லத்தீன் வகுப்பில் மாணர்கள் ஆசிரியரிடம் பாடம் கேட்பதைக் காட்டும் ஓவியம்

    ஆக தன் தாய்க்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கைப் பற்றி அறிந்து, இதனைக் கேள்விப்பட்டு பதைத்துப் போய் யோஹான்னஸ் லின்ஸ் நகரில் தான் மேற்கொண்டிருந்த ஆராய்ச்சிப் பணிகளை விட்டு வைல் டெர் ஸ்டாட் நகருக்கு திரும்பி வந்து தனது தாயாரை குற்றத்திலிருந்து விடுவிக்க முயற்சிகள் மேற்கொண்டார். தனது பல்கலைக்கழக நண்பர் கிறிஸ்தஃபர் பெசோல்டஸின் உதவியால் தனது தாயார் மூலிகை மருந்து தயாரித்து விஷம் கொடுத்து கொல்லும் விட்ச் அல்ல என நிரூபித்து அவருக்கு தண்டனையிலிருந்து விடுதலையும் பெற்று தந்தார். ஏறக்குறைய ஓராண்டுகள் இந்த வழக்கு நடைபெற்று அதாவது 1621ம் ஆண்டு தண்டனையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்தார் கத்தரீனா. ஆயினும் பல மனக் குழப்பங்கள் இவருக்கு நீடித்துக் கொண்டிருந்ததால் அடுத்த ஆண்டே இவர் இறந்தார் என்றும் அறிகின்றோம்.

    யோஹான்னஸ் கெப்லெர் அறிவியல் உலகுக்கு அளித்த கொடைகள் ஏராளம் என்றாலும் தனது வாழ் நாள் முழுமைக்கும் வருமையிலே தான் அவரது வாழ்க்கை நிலை அமைந்தது.

    தொடரும்..

    குறிப்புகள்

    Share
  • மனம் – பணம்…!

    – கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    மனம்
    கடலைவிட
    விசாலமானது!
    பணம் –
    பிணத்தைவிட துருநாற்றமானது!

    துன்பத்தில்
    வாழ்ந்தவனுக்கு
    வாழ்க்கையின் உயர்வு தெரியாது
    மகிழ்வு தெரியாது!

    வசதியில்
    வாழ்ந்தவனுக்கு
    ஏற்றத்தாழ்வு தெரியாது
    பசி,கஷ்டம் தெரியாது

    படைப்பெல்லாம் இறைப் படைப்பே!
    வித்தியாசம்
    ஏழை –பணக்காரன்!

    பணக்கார வாழ்வில்
    ஆரோக்கியமான சுகம் இருக்காது!
    ஏழைகள் வாழ்வில்
    கோடிப் பணமிருக்காது …!

    Share
  • கீதையின் நாயகனே!

    -ரா. பார்த்தசாரதி

    தீமை செய்த காளிங்கன்மேல் நடனம் புரிந்தாய்!    krishna_arjuna
    வெண்ணை திருடும் கள்வனாய்த் திரிந்தாய் !

    இந்திரனின் கர்வத்தை அடக்கி ஆயர்குலத்தினைக் காத்தாய் !
    அவர்களுக்காக மலையையே குடையாகப் பிடித்தாய் !

    கிருஷ்ண, பலராமனாக, அக்குரருடன் சென்று கம்சனை வதைத்தாய் !
    பெற்றவளையும், வளர்த்தவளையும்  வணங்கி நின்றாய்!

    பண்டவர்களுக்காக அஸ்தினாபுரத்திற்குத் தூதுவனாய்ச் சென்றாய் !
    துரியோதனனுக்கும் மற்றவர்களுக்கும் அறிவுரை கூறினாய் !

    போரே முடிவானதும் பாண்டவர்பக்கம் துணை இருந்தாய் !
    போரில் கீதை எனும் வேதத்தை அர்ச்சுனனுக்கு உபதேசித்தாய் !

    தர்மத்தினால்  பாண்டவர்களைப் போரில் வெற்றிபெறச் செய்தாய் !
    அதர்மத்தை அழிக்கவே அவதாரம் எடுத்தாய் என்பதை நீயே அறிவாய்!

    ஆக்கலும், அழித்தலும் உன் அவதாரத்தினால் நடந்திடச் செய்தாய் !
    ஜடவரதன் அம்புபட்டு யாரும் அறியாமல் விண்ணுலகம் சென்றாய் !

    Share
  • காற்று வாங்கப் போனேன் (35)

    கே.ரவி

    1976-77. இந்தக் காலக் கட்டத்தில் தமிழ்நாட்டில், குறிப்பாகச் சென்னையில், நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தமிழ் நாடக உலகின் பொற்காலம் என்றே அதைச் சொல்லலாம். அப்போது நாமும் ஒரு நாடகம் போட்டால் என்ன என்று தோன்றியது. என்னதான் கல்யாணராமன் மாமாவிடம் வளர்ந்தாலும், லேடி விஸ்வத்தின் மகன் இல்லையா? நடிப்பு என் ரத்தத்தில் ஊறியிருந்தது.

    ஆனால், நடிப்பைக் காட்டிலும், நாடக ஆவலைக் காட்டிலும், கவிதை வெறியே என் உயிரணுக்கள் ஒவ்வொன்றிலும் பதிந்து கிடந்தது. எனவே, நாடகம் என்று யோசித்த போதும் கவிதையே முன்னின்று வழிகாட்டியது. ஆம், நானும் ஷோபனாவும் இணைந்து நாடகக் கதை ஒன்றை உருவாக்கினோம். என் தந்தை விஸ்வம்தான் நாடக இயக்குநர்.

    அதன் கதாநாயகன் அரவிந்தன் ஒரு கவிஞனாக இல்லாமல் வேறெப்படி இருக்க முடியும்? அவன் தன் நிஜ வாழ்க்கையில் பார்த்திராத ஒரு பெண் அவனுடைய கனவுகளில் மட்டும் அடிக்கடித் தோன்றி அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தாள். கனவில் அரவிந்தனோடு கவிதையாகவே அளவளாவுவாள். கவிதைச் சுவையில் இருவரும் மூழ்கிக் களிப்பார்கள். இதைப் பற்றி அவன் தன் நண்பனிடம் சொல்கிறான். அந்த நண்பன் ஓர் ஓவியன். அரவிந்தன் அவளை நன்றாக வர்ணித்தால் தான் அவளை அப்படியே வரைந்து காட்டுவதாகச் சொல்கிறான் ஓவிய நண்பன். அரவிந்தனின் வர்ணனைகளுக்கு வர்ணம் தீட்டிக் காட்டுகிறான் நண்பன். அப்படியே தத்ரூபமாகத் தன் கனவுக் காதலியை நண்பன் வரைந்து விட்டதைச் சொல்லி வியந்து மகிழ்கிறான் அரவிந்தன். அவளுக்குக் கல்பனா என்று பெயர் சூட்டுகிறார்கள். ஓவியம் வரைந்து முடித்த பிறகு, ஏனோ அரவிந்தன் கனவில் கல்பனா வருவதில்லை. அவனுக்குக் காரணம் புரியவில்லை. மிகவும் சோகத்துக்கு ஆளாகிறான். அப்போது ஒரு நாள் தெருவில் சென்று கொண்டிருக்கும் போது, கல்பனாவையே நேரில் பார்த்து விடுகிறான். சென்று பேசுகிறான். தான் கல்பனா இல்லை, தன் பெயர் ரூபா, தனக்குக் கவிதையிலெல்லாம் துளிக்கூட ஆர்வம் கிடையாது என்று அவள் எவ்வளவோ சொல்லியும், விடாமல் அவளை அரவிந்தன் தொடர்ந்து சந்தித்துப் பேசப் பேசப் அவர்களிடையே காதல் மலர்கிறது. ஆனால், கொஞ்சம், கொஞ்சமாக அரவிந்தனுக்குப் புரியத் தொடங்குகிறது, உருவத்தில் மட்டுமே ரூபா தன் கல்பனாவைப் போல் இருப்பது. மற்றபடி அவளுடைய எண்ணம், செயல், பேச்சு எதுவுமே கல்பனாவை நினைவு படுத்துவதாக இல்லை. இதனால் வருத்தம் அடைந்து அரவிந்தன் கல்பனாவின் ஓவியத்தின் முன் அமர்ந்து கொண்டு அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கையில், ரூபா ஏதோ முக்கியமாகப் பேசியதை அவன் கவனிக்காததால் ஆத்திரம் கொண்ட ரூபா, அந்தக் கல்பனா ஓவியத்தை உடைத்துக் கிழித்து எறிகிறாள். அரவிந்தனும் தான் இனிமேல் கல்பனாவை மறந்துவிட்டு ரூபாவுடன் சாதாரண மனிதனைப்போல் சந்தோஷமாக வாழ்வதாக உறுதியளிக்கிறான். ஆனால், அன்றிரவே மீண்டும் அவன் கனவில் கல்பனா வருகிறாள். நிலைமை மாறுகிறது. தினமும் அவன் கனவில் கல்பனா வரத் தொடங்கியதும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி அரவிந்தன் தடுமாறிக் கிட்டத்தட்ட ஒரு மனநோயாளியாவே மாறி விடுகிறான். எப்படியாவது கல்பனாவை மறந்தால் மட்டுமே அவன் நிம்மதியாக இயல்பு வாழ்க்கை வாழ முடியும் என்ற தெளிவு ஏற்படுகிறது. ஒரு மனோதத்துவ நிபுணரின் யோசனைப்படி அரவிந்தன் கனவில் கல்பனா வரும் போது அவளைக் கனவிலேயே கொன்றுவிட வேண்டும் என்று முடிவாகிறது. அன்றிரவு ஒரு கத்தியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு அரவிந்தன் படுக்கிறான். மறுநாள் அவன் பிறந்ததினம். காலையில் ரூபா கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து விட்டுப் பிரசாதத்துடன் வருகிறாள். அப்போது, கனவில் கல்பனாவைக் கண்டு, “போய்விடு ராட்சஸி. உன்னைக் கொன்று விடுகிறேன்” என்று தூக்கத்தில் அரவிந்தன் அலறும் சத்தம் கேட்கிறது. ரூபா படுக்கை அறைக்குள் ஓடுகிறாள். ஒரே இருட்டு. அலறல் சத்தம் …. அரவிந்தன் கத்தியில் ரத்தம் சொட்டச் சொட்ட வெளியே வருகிறான். “கல்பனாவைக் கொன்று விட்டேன்” என்று உரக்கக் கூவுகிறான். ஆனால் அவன் உண்மையில் கொன்றது ரூபாவை.

    அவனுடைய கவிதைகளுக்கு ஞான பீட விருது வழங்கப் பட்டதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாமல், விழிப்பு நிலையிலும் கல்பனாவுடனேயே பேசிக் கொண்டும், கவிதைகள் சொல்லிக் கொண்டும் ஒரு மனநோயாளியாக அரவிந்தன் வாழ நேரிடுகிறது.

    தலை சுற்றுகிறதா? நாடகத்தில் நான்தான் அரவிந்தன், ஷோபனாதான் கல்பனா-ரூபா ஆகிய இரட்டை வேடங்கள். முதலில், “கனவுக்கும் நிழல்கள் உண்டு” என்று நாடகத்துக்குக் பெயர் வைத்தோம். பிறகு அன்றைய நாடக உலகத்தின் போக்குக்கு ஏற்பப் “பார்வைக்கு என்ன பொருள் ” என்று அதை மாற்றினோம். 1976 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், ஶ்ரீ கிருஷ்ண கான சபாவில் நாடகம் அரங்கேறியது. முதல் பாதி வெற்றி. சுகி சிவம் கூட அதில் திரைக்குப் பின்னால் இருந்து குரல் தரும் ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. ஆனால், இடைவேளைக்குப் பின்னால், கல்பனா-ரூபா மாறிமாறி வரும் காட்சிகளில் ஒளியமைப்பு ஒத்துழைக்காமல் போய் நாடகம் குழப்பமாகியது. எங்களுடன் நடித்த ராகவன், ராமச்சந்திரன் உட்பட எல்லாருமே நன்றாக நடித்திருந்தும், என் சிந்தனைகளைப் புரிந்து கொண்டு என் நண்பர்கள் ஶ்ரீதர்-சாமா நன்றாக வசனம் எழுதியும், எடுத்த எடுப்பிலேயே நிறைய தந்திரக் காட்சிகள் கொண்ட ஒரு கதையைத் தேர்ந்தெடுத்ததாலும், அதைச் சரிவர நிகழ்த்திக் காட்ட முடியாமற் போனதாலும், நாடகம் அரங்கேறிய பிறகு அதைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. பல ஆயிரங்கள் நஷ்டமானதுதான் மிச்சம். 1976 ஆம் ஆண்டில் அது பெரிய தொகைதானே!

    நாடகமே இந்த உலகம்! இதில் ஆடுவதோ பொம்மலாட்டம் என்று மனோன்மணி மெல்லிய குரலில் பாடுகிறாள்.

    அந்தக் காலக் கட்டத்தில்தான், 1977-ஆம் ஆண்டில் இப்படி ஒரு கவிதை நான் எழுத நேர்ந்தது:

    கவிதையைக் கேட்டு மகிழ இங்கே சுட்டுங்களேன்…

    உள்ளக் கதவை மெல்லத் திறந்துநான் உற்றுப் பார்க்கிறேன்images (1)

    உருத்தெரியாமல் நான்தான் அங்கே உதிர்ந்து கிடக்கிறேன்

    என்

    உள்ளக் கதவை மெல்லத் திறந்துநான் உற்றுப் பார்க்கிறேன்

    உருத்தெரியாமல் நான்தான் அங்கே உதிர்ந்து கிடக்கிறேன்

    தாபத் தோடு சுடரும் எந்தன் தீபக் கனவுகள்

    நடுங்கி னாலும் நடுநடு வேயொளி நடனம் செய்வதால்

    என்

    உள்ளக் கதவை மெல்லத் திறந்துநான் உற்றுப் பார்க்கிறேன்

    உருத்தெரியாமல் நான்தான் அங்கே உதிர்ந்து கிடக்கிறேன்

    காலைப் பனியின் காதற் பொழிவில் கண்வி ழித்ததும்

    கதிரவ னுடைய க்ரணங்களை அருந்தி வளர்ந்தி ருந்ததும்

    மாலையில் வண்டு மழலையில் தாய்மை சுரந்தி ருந்ததும்

    மாயையா இல்லை வாழ்க்கையா என்று மனம்வெ தும்பிடும்

    ரோஜா மலரின் இதழ்க ளாகப் படப டக்கிறேன்

    ஊதற் காற்றில் உடம்பு நடுங்க முடங்கிக் கிடக்கிறேன்

    என்

    உள்ளக் கதவை மெல்லத் திறந்துநான் உற்றுப் பார்க்கிறேன்

    உருத்தெரியாமல் நான்தான் அங்கே உதிர்ந்து கிடக்கிறேன்

    ஆடித் திரிந்த கால்களில் நாதம் அள்ளித் தெறித்ததும் – ஓர்

    ஆரணங் கென்னைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டதும்

    பாடிக் களித்த பண்களெல் லாமென் நெஞ்சிற் பதிந்ததும்

    பாழும் கனவா பழமை நினைவா என்ற பதைப்புடன்

    உதிர்ந்து கிடக்கும் சதங்கை மணிகளாய் ஒடுங்கிக் கிடக்கிறேன் – மனம்

    அதிர்ந்த போதும் அசைவே இன்றிப் புழுங்கித் தவிக்கிறேன்

    அருவித் துகிலை அணிந்த வண்ணம் அமர்ந்திருந்ததும்

    யாரோ ஒருவன் சிற்றுளியாலே வளைந்து நெளிந்ததும்

    வருவோர் எல்லாம் வணங்கித் துதிக்க வாழ்ந்தி ருந்ததும்

    வாழ்க்கையா இல்லை மாயையா என்று மனம் வெதும்பிடும்

    தூள்தூள் ஆன பாறைத் துகள்களாய்த் துடிது டிக்கிறேன்

    நாளொவ் வொன்றும் நானே பலவாய்ப் பிரிந்து தேய்கிறேன்

    அறிவில் பூத்த அரவிந் தங்களின்

    நறுந்தேன் அள்ளிப் பருகிய நாட்கள்

    உலகு திருத்தும் உணர்ச்சி வேகத்தில்

    உன்மத்த னாகவே ஓடிய கால்கள்

    அழகுப் பசியின் அசுர போதையில்

    கனல்வயப் பட்ட என் காவியப் பார்வைகள்

    மெழுகாய் உருகி மெலிந்த நினைவுகள்

    மீண்டும் மீண்டும் மீண்ட ஸ்வர்கங்கள்

    தனிமை இருட்டில் தவித்த படியோர்

    அச்சத் தாலே அதிர்ந்த நரம்புகள்

    இனிய இசையில் என்னை மறந்துநான்

    இதய மாகவே அலைந்த பொழுதுகள்

    அணுக்க ளாகச் சிதறிச் சிதறி

    அழுது முடித்த ஆயிரம் கணங்கள்

    எல்லா மாகி இருந்த பின்னும்

    எதுவும் முழுமை பெறாத நிலையில்

    என்

    உள்ளக் கதவை மெல்லத் திறந்துநான் உற்றுப் பார்க்கிறேன்

    உருத்தெரியாமல் நான்தான் அங்கே உதிர்ந்து கிடக்கிறேன்

    இதை உருக்கம் என்பதா, விரக்தி என்பதா, வேதாந்தம் என்பதா? என் இல்லற வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பொருளாதாரமும் மோசம் இல்லை. பின் ஏன் இந்தப் பாடல்? யாரைக் கேட்பது? எந்த அனுபவக் களத்தில் இருந்து நான் இந்தப் பாடலை எடுத்து வந்தேன்?

    நிஜ வாழ்க்கை என்று நாம் சொல்கிறோமே, அதில் நடக்கும் சம்பவங்களைக் காட்டிலும் என் மனம் சென்று சஞ்சரிக்கும் வேறு நிலைகளில் நிகழும் அல்லது நிகழ்ந்த சம்பவங்களே என் கவிதைகளின் கருப்பொருள்கள் ஆகியிருக்கின்றன. அந்தச் சம்பவங்கள் இன்னவை என்று என் மேல் மனத்துக்குப் பல சமயங்களில் தெரியக் கூடத் தெரியாது.

    எனக்குத் தோழர்களை விடத் தோழிகளே அதிகம். “என்னப்பா கங்கைக் கரைத் தோட்டம்” என்றுதான் ராஜகோபால் என்ற என் நண்பன் என்னை அழைப்பான். ஒருமுறை, சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன், ஷோபனா, அவளுடைய தாயார், என் தோழி ஒருத்தி ஆகியோருடன் ஓரூருக்குச் சென்றிருந்தேன். அங்கே, விடியற்காலையில், மலை மேல் அமர்ந்தபடி அந்தத் தோழியிடம் கவிதை ஒன்று சொல்லிக் கொண்டிருந்தேன். ஷோபனாவின் தாயார் அதைக் கேட்டிருக்க வேண்டும். நான் அந்தத் தோழியிடம் ஏதோ காதல் கவிதை சொல்லிக் கொண்டிருந்ததாகவும், எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும் மறுநாள் அவர் ஷோபனாவிடம் சொல்லிப் புலம்பினாராம். ஷோபனாவும் நானும் சிரித்துக் கொண்டோம். உண்மையில் அது ஒரு பராசக்தி கவிதை. ஆனால் என் கவிதைகளில்தான் பக்தி எது, காதல் எது; பராசக்தி எது, ஷோபனா எது என்று புரியாதே!

    உலக நடப்புகள் என் சிந்தனையை பாதித்த அளவு என் கவிதை மூலத்தை உசுப்பவில்லை என்பதை நான் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். நாட்டில் நடக்கும் அநியாயங்களை எண்ணிக் கோபப் பட்டிருக்கிறேன். கொந்தளித்துப் பேசியிருக்கிறேன். ஏன், ஊழலை எதிர்த்து, அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது, நானும் உண்ணாவிரதம் இருந்தேன். அவருடைய போராட்டத்தை அலட்சியப் படுத்தி, ஆணவத்தோடு ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் பேசியதைக் கேட்டு, சிவம் வீட்டுக்குச் சென்று உட்கார்ந்து சீற்றத்தோடு, கண்கலங்கிப் புலம்பியிருக்கிறேன். ‘குடிமக்களாகிய நாம்’ (We The People) என்ற அமைப்பை நிறுவி ஊழல் எதிர்ப்புக் கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன். என் மீது உள்ள அன்பு மிகுதியால், என்னுடைய ஊழலெதிர்ப்பு நடவடிக்கை பற்றி அமுதசுரபி இதழில் ஒரு தனித் தலையங்கமே எழுதி விட்டார், அதன் ஆசிரியர், திரு. திருப்பூர் கிருஷ்ணன்.

    அந்த அளவு சமூக உணர்வு இருந்தும், இப்படிப்பட்ட உலக நடப்புகள் என் கவிதையி ஊற்றுக்கண்ணை ஏனோ அணுக முடியவில்லை. உலகத்தின் அன்றாட மானுட நிகழ்ச்சிகள் என் கவிதைப் பொறியைத் தூண்டிவிடவில்லை. என் கவிதை வேறெங்கெங்கோ சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது.

    (தொடரும்)

    Share
  • சுப்புலஷ்மி டீச்சர்

    –மாதவ. பூவராக மூர்த்தி.

    ஒண்ணாம் வகுப்பு குருமூர்த்தி வித்யாலயத்தில் சேர்ந்து என் அத்தை ரேணுகா (என்னை விட மூன்று வயது மூத்தவர்) என்னை பத்திரமாகக் கை பிடித்து அழைத்துப் போவாள். நல்ல பள்ளிக்கூடம். உள்ளேயே ஒரு பிள்ளையார் கோவில் உண்டு. அதன் இரண்டு திண்ணைகளில் ஒன்றில் தான் நான் மூணாம் வகுப்பு படித்தேன். விளையாட்டு மைதானத்துக்குப் பக்கத்தில் ஐயனார் கோவில், பக்கத்தில் பெரிய புளிய மரம். கப்பி ரோடு காவேரிபட்டினம் போகும். கோவிலுக்கு எதிரில் ஐயங்குட்டை. பள்ளிகூடத்துக்கு எதிரில் ஒரு சாலை சேந்தகுடிக்குப்போகும். பள்ளிக்கூடத்தின் மேற்கு எல்லையில் போகும் தெரு ஒத்தை தெரு.

    ஒரு பக்கம்தான் வீடுகள் இருக்கும். எதிர்பக்கம் அதற்கு மேற்கே இருக்கும்இரட்டைத் தெருவின் கிழக்கு பக்கத்து வீடுகளின் கொல்லைப்பக்கம் கதவுகளுடன் இருக்கும். காலை வேளைகளில் அது லேசாக திறந்து வைத்து தோட்டி முறத்துடன் அவன் பணி முடிப்பான்.

    சாலையில் ஒரு ஓரமாக சாக்கடை ஓடிக்கொண்டிருக்கும். அதைத் தாண்டி இருக்கும் கடைதான் எங்கள் வாயில் நீர் ஊறவைகும் கமர்கட், தேன் மிட்டாய், புளிப்பு மிட்டாய், எலந்த வடை, பர்பி,  பலபம் எல்லாம் கிடைக்கும் சூப்பர் மார்க்கெட்.

    எத்திராஜுலு நாயுடு கடையில் வாங்கிய பையில் என் புஸ்தகம் இருக்கும்

    அப்போதெல்லாம் பரிட்சை மார்க்குகள் சிலேட்டிலேயே மார்க் போட்டு அனுப்புவார்கள். அதை அழிக்காமல் வீட்டுக்கு வரும் வழியெல்லாம் காட்டிக்கொண்டே போவோம்.

    school-3காலையில் இறைவணக்கம் பாடி, வகுப்புக்கு வரிசையாக செல்ல வேண்டும்.. மதிய உணவுக்கு வானாகி மண்ணாகி பாடி மகிழ்வோம்.

    பட்டம்மா  டீச்சர் கிளாஸில் படித்து நிறைய மார்க் வாங்கி பாஸ் பண்ணிவிட்டேன். அடுத்த ஆண்டு பள்ளிக்கூடம் திறக்கும் போது நான் இரண்டாம் வகுப்பு.

    பட்டம்மா டீச்சர் என்னை அன்போடு அழைத்து எனக்கு முத்தமிட்டு மூர்த்தி நீ இந்த வருஷம் இரண்டாம் வகுப்பு படிக்கப் போறே.இனிமே நீ இரண்டாம் வகுப்புல போய் உட்காரணும் என்றார். எனக்கு அழுகையாக வந்தது. கண்ணில் நீர் வழிந்தோடியது. பட்டம்மா டீச்சர் இல்லாமல் என்ன வகுப்பு. நினைக்க நினைக்க விசும்பல் அதிகமானது. பட்டம்மா டீச்சர் அடிக்கமாட்டாங்க. என்னை கண்ணான்னு கூப்பிடுவாங்க. நல்லா சொல்லி கொடுப்பாங்க. நான் மறுபடியும் வேணா ஒண்ணாவதே படிக்கிறேனேனு சொல்லணும்னு தோணிச்சு.

    டீச்சர் என்னை சமாதானப்படுத்தி கொண்டுபோய் இரண்டாம் வகுப்பில் உட்காரவைத்து விட்டார். யார் வருவாங்க? எப்படி இருப்பாங்க அடிப்பாங்களா இல்ல பட்டம்மா டீச்சர் மாதிரி ஆசையா இருப்பாங்களான்னு நிறைய தோணிச்சு. என்னோட படிச்ச நிறைய பையங்களையும் பொண்ணுங்களையும் என் கிளாஸ்ல பார்த்தேன். கொஞ்ச நேரத்தில டீச்சர் வந்தாங்க. பார்த்தா சிவப்பா அழகா சிரிச்சு கிட்டே வந்தாங்க. உள்ள வந்தவுடனே எங்க எல்லாரையும் பார்த்து அழகா சிரிச்சிகிட்டே காலை வணக்கம் அப்படின்னு சுப்பலஷ்மி டீச்சர் சொன்னாங்க. அப்பவே அவங்களை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.

    ஒரு வாரத்துல எல்லார் பேரையும் தெரிஞ்சுகிட்டு அவங்க என் பேரை மூர்த்தின்னு கூப்பிடும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். நான் நல்லா படிக்க ஆரம்பிச்சேன்.

    அடிக்கடி ரீஸஸ் விடும்போது பட்டம்மா டீச்சரைப்பார்த்து காலை வணக்கம் சொல்வேன். கால் பரிட்சையில் எல்லா பாடத்திலயும் நான் தான் பர்ஸ்ட். சுப்பலஷ்மி டீச்சர் என்னை கூப்பிட்டு கன்னத்தைத் தட்டி நல்ல பையன் மூர்த்தின்னு சொன்னப்ப எனக்கு உச்சி குளிர்ந்து போச்சு.

    இரண்டு நாள் டீச்சர் பள்ளிக்கூடத்துக்கு வரல்லை. அதுக்கு அப்பறம் வந்தாங்க. எல்லார்கிட்டயும் சிரிச்சு பேசிகிட்டிருந்தாங்க.

    ஆனா அன்னிக்கு நடந்ததை என்னால மறக்க முடியல. கடைசி பீரியடு. டீச்சர் கண்கலங்கி எங்க எல்லாரையும் பார்த்து எல்லா நல்லா படிக்ககணும் நான் நாளையிலேர்ந்து வரமாட்டேன் அப்படின்னு சொன்னாங்க. எனக்கு அழுகையா வந்தது. அப்ப அவங்க என்னை கூப்பிட்டு மடியில உட்காரவைச்சு கிட்டு எனக்கு முத்தம் கொடுத்து மூர்த்தி நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும். நீ டீச்சரை மறக்காம இருப்பியா? அப்படின்னு கேட்டாங்க. நான் அழுதுகிட்டே தலையாட்டினேன்.

    அப்பறம் பட்டம்மா டீச்சர் சொன்னாங்க அவங்களுக்கு கல்யாணமாம். வேற ஊருக்குப் போயிடுவாங்களாம்.

    மறுநாள் அவங்க வரலை. பள்ளிக்கூடம் போகவே பிடிக்கலை. அம்மாகிட்ட சொன்னேன். அவங்க அப்படியெல்லாம் சொல்லக் கூடாது டீச்சர் நீ பெரிய ஆளா வரணும்னு சொன்னாங்க இல்ல. அதுக்கு நீ இப்ப பள்ளிக்கூடம் போகணும். போனேன். புதுசா வந்த சம்பந்தம் வாத்யார் குண்டா ஒசரமா இருந்தார். பாக்கவே பிடிக்கலே.. ஆனா கொஞ்சநாள்ல அவரும் நல்லா நடத்தினார். நான் படிச்சு ஐந்தாம் வகுப்பு வரை படிச்சு நேஷனல் ஹைஸ்கூல்ல சேர்ந்தேன். படிச்சேன் காலேஜ் படிச்சு வேலைக்கு சேர்ந்து நாடகம் நடிச்சு நல்ல பேர் வாங்கிகிட்டிருக்கேன்.

    இதை படிக்கறவங்க யாருக்காவது மூர்த்தி உங்களை இன்னும் ஞாபகம் வைச்சிருக்கான்னு சுப்பலஷ்மி டீச்சரைப் பார்த்தா சொல்றீங்களா?

    பின்னுரை:  இந்த நிகழ்ச்சி நடந்த 52 வருடங்கள் கழித்து, என் முகநூல் நண்பர் மாயவரம் ஶ்ரீனிவாசன், தற்போது அமெரிக்காவில் இருப்பவர் என்னிடம் தொலைபேசியில் பேசும்போது நான் அவரிடம் குருமூர்த்தி வித்யாலயம் பற்றியும் சொன்னேன். அவர் மிகுந்த சிரமம் மேற்கொண்டு எங்கள் ஊர் மாணவர்களைத் தேடிப்பிடித்து இந்த செய்தியை சொல்லி விபரம் கேட்டார்.  கணேஷ். ஶ்ரீனிவாசன் என்பவர் தற்போது மும்பையில் இருப்பவர், எனக்கும்  சீனியர், அவரும்  அந்த சுப்பலஷ்மி டீச்சரிடம் படித்தவர்,  அவர் இப்போது டீச்சர் மும்பையில் இருப்பதாகவும் அவருடன் இன்னும் தொடர்பு இருப்பதாகவும் சொல்லி அவர் புகைப்படத்தையும் தொலைப்பேசி எண்ணையும் எனக்கு அளித்தார். நான் அவரிடம் பேசினேன். அவர் மகன் என்னோடு அன்போடு பேசி மும்பைக்கு அழைத்தார். விரைவில் சென்று நேரில் சந்திப்பேன்.

    படம் உதவிக்கு நன்றி: http://en.vikatan.com/article.php?aid=25549&sid=739&mid=33

    Share
  • மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்…

    –கவிஞர் காவிரிமைந்தன்.

    பாசமலர்

    கவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கையொன்றும் பஞ்சணையல்ல… அவர் கடந்து வந்த பாதையில் நடந்த அனைத்துச் சம்பவங்களும் அனுபவப் பாடங்களை அடுக்கிக் கொண்டே வந்தன.  அவைதான் அனேகமாக பாடல்களின் பல்லவிகளாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. கவிஞர்கள் பெரும்பாலும் மென்மையானவர்கள்.  சுக துக்கங்களை மற்றவர்கள் பெறுவதைவிட உணர்ந்து அதை பிரதிபலிக்கத் தெரிந்தவர்கள்! எத்தனையோ உதாரணங்கள் இதற்கு உண்டு – என்றாலும் சொல்கிறேனே இங்கு ஒன்று!  தமிழ்த்திரையுலகில் காலடி பதித்துத் திசையைத் தீர்மானித்து பயணம் துவங்கிய கவிஞர்..

    உடன் பிறந்த தங்கைகளின் திருமணம் தொடர்பாய் விரைவில் பொருளீட்டி வந்துவிடுவேன் என்று கடிதங்கள் மூலம் தெரியப்படுத்திக்கொண்டிருந்தக் காலக்கட்டம்! இதோ.. அதோ என்று காலச்சக்கரம் சுழல.. அடுத்து வந்தது ஒரு தந்தி.. அவசர அவசரமாய்.. தங்கையின் உடல்நிலை கவலைக்கிடம் என .. உடனே புறப்பட்டார்.. வானூர்திவாயிலாக மதுரை சென்று அங்கிருந்து காரைக்குடி செல்ல.. ஒரு மணி நேரம் தாமதம் என வானூர்தி நிலையத்தில் அறிவிப்பு.. சோகத்தில் ஆழ்ந்திருந்த அச்சமயம்.. அடுத்துவந்த செய்தியில் அதிர்ந்துபோனார் கவியரசர்.. ஆம்.. தங்கையின் மரணச்செய்தி.. மனதையே உலுக்கிப் போட.. நிலைகுலைந்த நெஞ்சத்தோடு நெக்குருகி வலுவிழந்தார்.  இதயத்தில் விழுந்த அடியை ஏட்டிலே வடித்தெடுத்தார்.

    மலர்களைப் போல் தங்கை உறங்குகின்றாள் – அண்ணன்
    வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்..

    அமைதி என்பதற்கு நிரந்தர உறக்கம் என்றொரு பொருளும் உண்டு.. அன்புமலராய் கண்ணில் நிறைந்தவள்.. தன்னுதிரம் என்பதாக தன்னுடனே பிறந்தகொடி.. கண்ணெதிரே சாய்ந்ததனைக் கற்பனையால் சமைக்கின்றார்..

    அற்புதமாய் ஒரு பாடல் முழுக்க முழுக்க கவிஞரின் சுய சோகத்தில்உதித்த இப்பாடல்..

    பாசமலர் திரைப்படத்தில் அண்ணன் தங்கையின் எதிர்காலவாழ்வை எண்ணிடும் கனவாக.. கனிந்த இப்பாடலின் பின்னணியில் இத்தகு சோகம் புதைந்திருப்பது சற்றும் தெரியாமல்..

    KANNADHASAN - VISWANATHAN - RAMAMOORTHYTMS

    சுகமான கற்பனை போல் .. நடிகர் திலகத்தின் நயமான நடிப்பில்..

    விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரிசையில்.. இன்றும் நாம் கேட்டு மகிழ்கிறோமே..

    மலர்களைப் போல் தங்கை உறங்குகின்றாள்.. டி.எம்.செளந்திரராஜன் குரலில்..

    ரோஜா மலரின் அடியில் உள்ள முள்பட்ட உணர்வோடு…மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்..

     

     


    காணொளி: http://www.youtube.com/watch?v=kmFD8It4aak

    படம்: பாசமலர்
    வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    குரல்: டி.எம்.செளந்திரராஜன்

    மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
    அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
    கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
    அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்
    கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
    அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்

    மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
    மங்கள மேடையில் பொன்வண்ணம் கண்டான்
    மாவிலைத் தோரணம் ஆடிட கண்டான்
    மணமகன் வந்து நின்று மாலை சூட கண்டான்
    கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
    அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்

    ஆசையின் பாதையில் ஓடிய பெண் மயில்
    அன்புடன் கால்களில் பணிந்திட கண்டான்
    வாழிய கண்மணி வாழிய என்றான்
    வான்மழை போல் கண்கள் நீரினில் ஆட கண்டான்
    கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
    அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்

    பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
    பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
    மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
    மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டான்
    மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
    அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
    கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
    அவன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்

    Share
  • காதல் நாற்பது (16)

    முழுமைப்படுத்தும் என்னை !

    Elizabeth-Browing2

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    கண்ணியம் மிகும் வேந்தனைப்போல் நீ
    என்னை மீட்டுக்கொண்டதால்
    எனது அச்சத்தை எதிர்த்து
    மேற்பட்டு நிற்கிறாய் !
    போர்த்தி விடு
    உன் பழுப்புவண்ண அங்கியை
    என்மீது,
    நெருங்கி என்னிதயம் ஒன்றி
    உன்னிதயமுடன்
    ஒருங்கே வளரும்வரை !
    தனிமையில் நான் தவித்திட
    எப்படி என்மனம்
    ஆடிப்போனதென்று
    அறிவாய் நீ !

    வெல்ல முயலும்போது
    சீமானாய் நிரூபிக்கும் உன்னை
    முழுமைப்படுத்தி என்னை !
    மேலெழ ஒருவர்
    கீழே அழுத்தித்தணிவது போன்றது.

    விழுந்த படைவீரன்
    குருதிப் புலத்திலிருந்து
    தூக்குவோன் கையில்
    விட்டுவிடும் உடைவாள்போல,
    முடிந்தன இங்கு இறுதியாய் எனது
    முயற்சிகள் !

    இனி நீ எனக்கு அழைப்புவிடுத்தால்
    உன்சொல்லை மதித்து
    என்தாழ்வுணர்வைத் தாண்டித்தான்
    நான் மேல்எழலாம்,
    என்னினிய காதலனே !
    உன்காதல் உணர்வைப் பெரிதாக்கு
    என்மதிப்புத் தரம்
    உயர்வாக !

    +++++++++++

    Poem : 16

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Barrett Browning (1806-1861)

    And yet, because thou overcomest so,

    Because thou art more noble and like a king,

    Thou canst prevail against my fears and fling

    Thy purple round me, till my heart shall grow

    Too close against thine heart henceforth to know

    How it shook when alone. Why, conquering

    May prove as lordly and complete a thing

    In lifting upward, as in crushing low!

    And as a vanquished soldier yields his sword

    To one who lifts him from the bloody earth,–

    Even so, Beloved, I at last record,

    Here ends my strife. If thou invite me forth,

    I rise above abasement at the word.

    Make thy love larger to enlarge my worth.

    +++++++++

    Share
  • அப்படி என்னதான் பேசிக்கொண்டே இருப்பார்களோ

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (27)

     

    அப்படி என்னதான் பேசிக்கொண்டே இருப்பார்களோ

    {கேட்டு மகிழ}

    10346451_671691352922340_5932846411327986116_n

     

    பொழிய ஆரம்பித்தால்
    நிறுத்தவே தெரியாமல்
    கொட்டிக் கொண்டிருக்கிறது மழை.

    ஆற்றங்கரை அரச மரத்தில்
    ஆயிரம் பதினாயிரம் இலைகள்
    ஒவ்வொன்றும் ஒன்றினிடத்தில்
    ஓயாமல் ரகசியம் பேசி
    வீசப்படுகிறதாம் காற்று.

    நாகர்கோயில் மணிக்கூண்டிலிருந்து
    நேரெதிரே பார்த்தால்
    நீல மலைகளின் மெளனம் அவிழ்ந்ததுபோல்
    செல்லுவதே தெரியாமல்
    மளமளவென்று
    வந்துகொண்டே இருக்கிறது காற்று.

    எங்கிருந்து என்று தெரியாமல்
    எங்கு என்றும் புரியாமல்
    அப்படி என்னதான் பேசிக்கொண்டே இருப்பார்களோ
    அவளும் அவனும்?

    பாஷையெல்லாம் காலியாகிப்போய்
    கவிதையெல்லாம் ஆளை விடு என்று
    களைத்தபின்னும்
    பேசிக்கொண்டே இருப்பதற்கு
    ஏதேனும் இருந்துகொண்டே இருக்குமோ?

    கண்களைக் கண்கள் கவ்வியபடி
    கட்டிப் பனியாய் உருகியபடி
    உருகிக் கரையவே உருவெடுத்தவர்கள் போல்
    அவளும் அவனும்
    இன்னும் எத்தனை நேரம்தான்
    ஆறிப்போன பாழும் காப்பியை
    உறிஞ்சுவதாகவும் ரசிப்பதாகவும்
    உட்கார்ந்து பேசுவார்கள்?

    ஒருநாள் அவனுக்குத் தோன்றிவிட்டது
    தான்தான் ரொம்பவும் பேசுவதாக
    நாணத்தால் அவன் சாம்பத் துவங்கியது
    அந்தப்
    பட்டாம் பூச்சிக் கண்களில்
    படாமல் இல்லை.

    ‘’இவனுடைய விரலின் முனை
    இவளுடைய நிழலைக்கூடத்
    தீண்டாது போனாலும்
    எப்போதும் நிரம்பித் ததும்பிக்கொண்டிருக்கும்
    இதயக் கோப்பைகளை
    இவர்கள் மாறி மாறி அருந்திக்கொண்டிருப்பார்கள்’’
    என்று
    அவர்களுக்காக மட்டுமே
    அசரீரி சொன்னது.

    அவன் பேச்சை நிறுத்திவிட்டான்
    அவள், அவனை நிறுத்தவில்லை

    கால்கள் அவனை வீட்டுக்கும்
    சிறகுகள் அவளைக் கூட்டுக்கும்
    கூட்டிச் சென்றன.

    மறுநாள் காலை
    அவன் வீட்டு மணி ஒலித்தது
    வாசலில்
    படபடத்து நிற்கிறது
    பட்டாம் பூச்சி
    பெட்டியோடு..

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கிரேசி மோகன்

     crazy

    “மவுனகுரு தக்ஷிணா மூர்த்தியைப் போல
    யவன வடிவில் யதுசேய் -புவனசுந்த்ரன்;
    புல்லாங் குழலூதும் புள்ளாண்டான் அஷ்டமி
    வல்லான் BRUSHடமி வீச்சு”….கிரேசி மோகன்….

    Share
  • கோகுலாஷ்டமி வெண்பாக்கள்

     

    கிரேசி மோகன்

    crazy
    கண்ணா நலம்தானா கன்று நலம்தானா
    அண்ணா பலராமன், ஏரார்ந்த -கண்ணி
    யசோதையாள் நந்தகோபன் யாதவரைக் கேட்டு
    விசாரித் ததாக விளம்பு.

    சூப்பிய காலை சுவைத்தபடி ஆலிலையின்
    TOPப்பில் துயிலும் திருமாலே -HAPPY
    பிறந்தநாள் வாழ்த்து பிறவிப் பிணியை
    இறந்தநாள் ஆக்குவாய் இன்று….

    வந்தனம் கேசவா நந்த குமாரனே
    உன்தன மங்கை உடனிருக்க -வந்துநம்
    வீட்டில் எழுந்தருளி ஊட்டியதை உண்டுநான்
    காட்டியக் கீக்கிடத்தில் குந்து…

    இன்று சிறைவந்(து) இரவோ(டு) இரவாய்
    கன்றுகள் மேய்த்திட கோகுலம் -சென்று
    புகுந்தநாள் நாளை முகுந்தனுக்கு நெஞ்சம்
    உகந்தநாள் ராதை உதிப்பு..

    அஷ்டமி ரோகிணியில் ஆயர்தம் பாடியில்
    இஷ்ட இடைச்சியர் இல்லம்போய் -துஷ்டனாய்
    சாமள வண்ணன் சளைக்காது வெண்ணெய்வாய்
    ஆமளவு உண்ண உதிப்பு….

    அய்யர்க்கு நேற்றவன் அய்யங்கார்க்(கு) இன்றவன்
    கையிருப்பு பக்ஷணம் கொள்வதற்கு -மையிருட்டு
    வண்ணனவன் இல்லம் வருவான் தினம்தினம்
    கன்னமிடும் கோல்கைக் கொண்டு….
    கண்ணன் காப்பு
    —————————

    கஷ்டம் கலைந்திடும் நஷ்டம் நகர்ந்திடும்
    இஷ்டம் நமக்கு இணங்கிடும் – அஷ்டமி
    ரோகினியில் தோன்றிய லேகிய வண்ணனின்
    காகநிறக் காலிரெண்டும் காப்பு….
    தீக்குளிட்டு பாரதி தீண்டிய தெய்வத்தை
    வாக்கிலெட்டா கண்ணனை வாழ்த்துவோம்-பூக்களிட்டு
    அப்பம் அதிரசம் முப்பழங்கள் அப்பயல்முன்
    கப்பம்நீ கட்டிடக் காப்பு….

    மாதவனை கேசவனை மாலொழிய வந்தவனை
    ஆதவனை ஆயர் அணிவிளக்கை -யாதவனை
    ரோகினி அஷ்டமியாய் ஆகிய கீதையை
    காகீ எனக்கத்தக் காப்பு….

    நடுநிசியில் ரோகினி நட்ஷத் திரத்தில்
    கொடுஞ்சிறையில் தோன்றிய கண்ணா-முடிமிசையில்
    அப்பன் சுமந்திட ஆயர்தம் கோகுல
    குப்பம் நுழைந்தவனே காப்பு….

    கட்டு மயிற்பீலி கொண்டை யிலணிந்து
    பட்டுப்பீ தாம்பரம் பூண்டாவை -வெட்ட
    வெளிதனில் மேய்க்க வேய்ங்குழல் ஊதும்
    களிமிகு கண்ணனே காப்பு….

    பொன்னிற வண்ணப் புழுதி எழுந்துயர்
    விண்ணவர் கண்ணில் விழுந்திட -செந்நிற
    சாயங்கா லத்தில் சகாக்களுடன் வீடேகும்
    காயாம்பூ வண்ணனே காப்பு….

    காளியன் குட்டையில் மூளியாய் மூழ்கஅவன்
    தோளினில் ஆடிய தெய்வமே -காளியின்
    அண்ணனே கைமாறி ஆயர் குலம்புகுந்த
    கண்ணனே வேண்டினேன் காப்பு….

    பூதனை மார்பை புசித்தவள் ஆவியை
    வேதனை இன்றி விரட்டியவா -தீதினை
    ஓட்டவும் தர்மம் உயரவும் பாண்டவ
    கூட்டம் பிணைந்தவா காப்பு….

    தாய்க்குப் பணிந்தன்று தாம்பில் புகுந்துமரம்
    சாய்க்க உரலிழுத்த சாகஸா – வாய்க்குள்
    மாதா மகிழ மகோன்னதம் காட்டிய
    கீதா உபதேசா காப்பு….

    எதுரா எதுராவென எங்கெங்கோ தேடும்
    புதிராம் புவிவாழ்வு போதும் – மதுரா
    நகரொளிந்த தெய்வம் நவனீதக் கண்ணன்,
    குகனணைந்து ஐவரானோன் காப்பு….

    தீரன் யமுனா தரங்கக் கரையோரன்
    சேரும் இளமாதர் ஜீவான்ம -சோரன்
    அழகில் சுகுமாறன் அன்பில் உபகாரன்
    கழுகில் வரும்நேரம் காப்பு….

    குவலயா பீடத்தின் கொம்பொசித்துக் கம்சன்
    கவலையால் பீடிக்கக் கொன்றோன் – ’அவலையா
    தந்தாய் எடுத்துக்கொள் தோழாயென் செல்வமுன்
    கந்தையைக் கட்டென்றோன்’ காப்பு….

    கூவும் கஜேந்திரனை காத்த புஜேந்திரா
    ஏவிய சக்கரத்தை ஏந்தியவா -காவிய
    பாகவதக் கண்ணா பரந்தாமா நாரணா
    காகவத காகுத்தா காப்பு….

    ஆலில் மிதந்தவா ஆழ்வார்கள் பாசுர
    நூலில் நிறைந்தவா நந்தலாலா -தோளில்
    திருத்துழாய் பூண்ட திருவோணத் தானே
    கருத்தில் கலந்துவளைக் காப்பு….

    உதித்தவா நேற்று மிதித்தவா இன்று
    நதிக்கரை நந்தகோபன் நாட்டை -எதிர்த்ததாய்
    மாமா அனுப்பிய மல்லர் களையன்று
    கோமாளி ஆக்கியவா காப்பு….

    கால்கள் பலநூறு கண்டேனென் வாசலில்
    வால்கள் புடைசூழ வந்தமுகுந்தன்-நூல்போல்
    அணிவகுப்பாய் சென்று அடுக்களை உள்ளில்
    விநியோகம் செய்தான் விருந்து….

    உறியிழுத்தாய் பின்னர் உரலிழுத்தாய் பின்னர்
    மரமிழுத்தாய் பின்னர் மதகில் – அரவிழுத்தாய்
    பின்னர் நகிலிழுத்தாய் பெண்கள் துகிலிழுத்தாய்
    கண்ணா எனையிழுப்பாய் காப்பு….

    சகடா சுரனை சுமந்தா காய
    முகடில் முறித்த முகுந்தா -பகடையில்
    தோற்றவர்க்காய் தேரேறி நூற்றவர் மாய்ந்திட
    கூற்றவனாய் நின்றவனே காப்பு….

    கோடி குருமார்கள் கூறிய வேதாந்தம்
    தேடிப் படித்தும் திருப்தியில்லை -நாடியில்
    ஏதோ அதிருப்தி என்னென்று சொல்வது
    கீதோ பதேசகா காப்பு….

    தரையில் புரளபீ தாம்பர ஆடை
    சுருளும் முடிநுதல் சாய -முரளி
    மனோகரா வந்துன் மதிவதனம் காட்டு
    கனாவரும் நேரத்தில் காப்பு….

    கன்னத்தில் அன்னையிட்ட கண்மை திருஷ்டியது
    வண்ணக் கருமையில் வாடிட -எண்ணற்ற
    இம்சைக்(கு) இடமாகி இன்னல் கடந்தோனே
    கம்சன் மருகோனே காப்பு….

    வையங்கள் ஏழை வயிறார உண்டும்
    ஐயம் மிகக்கொண்டு அய்யனே -கையால்
    பிடித்துக் கமல பதத்தை அன்று
    கடித்துக் களித்தவனே காப்பு….

    நான்மறை ஓதிடும் நான்முகன் வாழ்ந்திடும்
    தாமரை நாபியும், பூமகள் -போய்மறையும்
    சந்தனம், ஸ்ரீவத்ஸம், சாற்றும் திருத்துழாய்யு
    கந்திடும் திண்மார்பும் காப்பு….

    மோதகப் பிள்ளை முழுங்க, பதைபதைத்து
    பீதகப் பட்டாடை பாழாக -காதினை
    கைகளால் பற்றி கரணமிட்(டு) ஆழியை
    கொய்தகோ பாலனே காப்பு….

    தேர்கடவி பாரதப் போர்முடிக்க பார்த்தனின்
    சீர்கெடலை கீதையால் செப்பனிட்டோன், -மோர்குடத்தை
    கல்லால் உடைத்தன்று கோபியர் கோபத்திற்க்
    குள்ளான கண்ணனே காப்பு….

    சாக்கிரதை யாக சகாக்களுடன் சென்றாயர்
    தூக்கிலிட்ட வெண்ணை திருடியுண்ட -போக்கிரிப்
    பையனே பேய்மழைக்குப் பர்வதம் தாங்கியக்
    கையனே கண்ணனே காப்பு….கிரேசி மோகன்….

    படத்திற்கு நன்றி : கேசவ்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 132

    மலர் சபா

     

    மதுரைக் காண்டம் – 02. வேட்டுவ வரி

    கூத்து உள்படுதல்
    2b
    அழகிய பொன்னால் செய்த பரல்களையுடைய
    சிலம்பும் வளையும் மேகலையும் ஒலித்து நிற்க
    வஞ்சம் புரிகின்ற வாள்தொழில் செய்யும்
    அசுரர்கள் அழியும் வண்ணம்
    கொற்றவையாகிய நீ
    மரக்கால் மீது நின்று
    கூத்தாடினாய் போலும்!

    அவ்வாறு அசுரர்களை அழிக்க
    மரக்கால் மீது நின்று
    நீ வாள் கொண்டு ஆடும் வேளையில்
    உன்னுடைய காயாம்பூ மேனியைப் போற்றித்
    தேவர்கள் தம் கைகளால் சொரியும் மலர்கள்
    மழை போல் காணப்படும் போலும்!

    வெட்சி

    பகைவரும் அச்சப்படும் சிற்றூர் ஒன்றிலுள்ள
    ஒப்பற்ற வீரன் ஒருவன்
    ஆநிரை கவரச் செல்லும் உரிய காலைப் பொழுதில்
    அப்போர்க்கு வெட்சி மாலை சூடுவதற்கு
    வெள்ளிய வாள் ஏந்திய
    கொற்றவையாகிய உழத்தியின் துணை
    வேண்டும் போலும்!

    அவ்வாறு வெள்ளிய வாள் ஏந்தி
    கொற்றவையாகிய உழத்தி வரும் போது,
    பகைவர் ஊரைச் சேர்ந்த காட்டில் உள்ள
    கருங்குருவி ஒன்று
    அவர்கள் பின்னால் வந்து
    பின்னர் வரக்கூடிய கேட்டினை
    முன்னரே அறிவிக்கும் போலும்!

    வெட்சிப் புறநடை

    கள் விற்பவள் பழங்கடன் கொடுக்காதவனுக்குக்
    கள் கொடுக்க மறுக்க
    அதனைப் பொறுக்காத வீரன்
    வில்லினை ஏந்தி,
    பறவை பின்னால் வர
    ஆநிரை கவர எண்ணிச் செல்வான்.

    அங்ஙனம் பறவை பின் தொடரச்
    செல்லும் வேளையில்,
    சிங்கக் கொடியைக் கையில் கொண்டு
    கொற்றவையும் முன் செல்வாள் போலும்!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    “இளங்கன்று இறையறியாது”
    ————————————-

    crazy

    “மூடநெய் பெய்யும், முழங்கை வழித்துண்டு,
    மாடுமை வண்ணனை மேய்ந்திட, -ஒடிவந்த,
    கன்று பொறாமையில், “கோனாரைக் கொஞ்சுதலேன்,
    நன்றா!” எனவிறைப்பாய் நின்று”….கிரேசி மோகன்….

    crazy1

    மாட்டிக்கிட் டான்மாட்டுக், கிட்டக்’கிட் டானி’ன்று,
    போட்டக் குளம்படியில்: ,பாரத -ஆட்டத்தில்,
    பாண்டவன் சேயை பரிதவிக்க விட்டாயே!,
    வேண்டும்கட் டிக்கவேண்டும் வேணு’’….கிரேசி மோகன்….

    கிட்டான் -செல்லமாகக் கண்ணன்….
    பாண்டவன் சேய்-அபிமன்யு பத்ம வியூகத்தில் அகப்பட்டுக்கொண்டது….

    Share
  • ஒரு ரயில் பயணத்தில்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (26)

     

    ஒரு ரயில் பயணத்தில்….

    {கேட்டு மகிழ}

    10301055_285979498239973_6877421676757917975_n

    தூசு, சத்தம், துர்நாற்றம்
    கூட்டம், குப்பை, தள்ளாட்டம்
    ஈசல் பறக்கும் நெஞ்சங்கள்
    ஈக்கள் மொய்க்கும் வியாபாரம்

    ஓசை மிகுந்த குலுக்கலிலே
    தூளிக் குழந்தை அயர்கிறது
    நேசம் நெருக்கம் இவையெல்லாம்
    பேசும் குரலில் மிளிர்கிறது

    இறங்குவ தொன்றே நினைத்தபடி
    இதையும் அதையும் செய்கின்றார்
    இறங்கி விடாத பண்டத்தை
    ஏனோ விரும்பித் தின்கின்றார்

    இடிக்கக் கூட முடியாமல்
    இத்தனை நெரிசல் ரயிலில்தான்
    புழுதி விசிறும் வெய்யிலிலும்
    பொறுமை காப்பது இந்தியர்தான்

    இத்தனை நெருக்கடி மத்தியிலும்
    இருக்கையில் எழுந்து நின்றபடி
    சித்திர நடனம் செய்கின்ற
    சிறுமியை வியந்து பார்க்கின்றேன்!

    வேரில்லாத பேச்சுக்கள்
    வேடங் காட்டும் வீச்சுக்கள்
    யாரென் றிலக்கே இல்லாமல்
    வீசப் படுகிற ஏச்சுக்கள்

    சாமியாடும் சில தலைகள்
    சதா பேசும் சில தலைகள்
    சாமரம் போடும் சில தலைகள்
    தளைகள் மண்டிக் கிடக்கும் தலைகள்…

    சுமையை
    இறக்கி வைப்பார் சிலர்
    ஏற்றி வைப்பார் சிலர்
    ஏற்றவும் இறக்கவும் மனமின்றி
    சுமந்து சுமையாய்ச் சிலர்…

    நாற்றம் பிடித்த கழிவறைகளுக்கு
    நடுவே
    டோக்கன் போடும் பக்தனாக
    நின்றபடி
    துப்பல் தேசத்தின் தொண்டர் குழாத்தின்
    தூரிகை லாகவம் பார்த்தபடி
    அத்தனை கூட்டத்திலும் நாற்றத்திலும்
    அவசரத்திலும்
    அவுக் அவுக்கென்று பிரியாணியை
    அள்ளிப் போட்டுக் கொள்பவரையும்
    ரசித்தபடி

    பொருள்களோடு பொருட்டின்றி
    நின்று கொண்டிருக்கின்றேன்…

    எப்படி என்னால் முடிந்தது?

    இப்போது
    உன் பத்து விரல்களும்
    என் கன்னத்தைப்
    பற்றிக்கொண்டால்
    எப்படி இருக்குமென்று பாவித்தேன்

    நனவின் நடப்பை
    கனவுத் துடுப்பால்தானே
    கடக்க வேண்டும்?!

     

     

     

    Share
  • ஜெயிச்சிட்டே! கண்ணா நீ ஜெயிச்சிட்டே! – கவிஞர் வாலி

    கவிஞர் காவிரி மைந்தன்

    வழக்கமான சினிமாப் பாடல்தான்! ஒரு பாத்திரம் பேசுவதற்கு பதிலாக பாடுகிறது! பாடல் வரிகள் மட்டும் அந்தக் கதாப் பாத்திரத்தையும் மீறி வாழ்க்கையின் கீதையை நமக்குக் காட்டுகிறது! வேதாந்தம் புரிகிறது! ஆதி அந்தங்கள் தெளிவாகிறது! மனிதன் கடவுளை உணருகிறான்! அந்த உணர்வைத்தான் பாடலை வடித்துள்ளார் கவிஞர் வாலி!

    ஜெயிச்சிட்டே! கண்ணா நீ ஜெயிச்சிட்டே!kaviri
    திறந்துட்டே கண்ணை திறந்துட்டே
    உன்னிடத்தில் தோற்றதில் வெற்றி எனக்கு
    என்னை தெளிய வைத்தாய் தன்னை புரிய வைத்தாய்
    என் நன்றி உனக்கு .
    …………………..
    தன்னை அறிந்தவர்க்கு தானாகி நிற்பவனே..
    என்னை அறிந்து கொண்டேன்.. மன்னனே..
    எனக்கு கீதை எடுத்துரைத்த கண்ணனே!
    ஜெயிச்சிட்டே! கண்ணா நீ ஜெயிச்சிட்டே!

    எட்டடுக்கு கட்டிடத்தில் எத்தனை ஓட்டை..
    இதில் நல்ல ரத்தம் உள்ளமட்டும் எத்தனை சேட்டை
    ……………..
    கொண்டு வந்ததென்ன கொண்டு செல்வதென்ன
    ஒன்றுமில்லையே முடிவிலே
    இதை உணர்ந்த பிள்ளை உன் மடியிலே!

    ‘கலியுகக் கண்ணன்’ திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசன் அவர்கள் கதாநாயகனாக தோன்றி திரையில் நடித்த காட்சியும் வி. குமார் அவர்கள் வழங்கியிருக்கும் கம்பீர நாட்டையிது!!

    1aகண்ணனைப் பற்றித் தொடங்கும் பாடல்! வாழ்க்கைத் தத்துவங்கள் கொட்டிக்கிடக்கிறது! இது கவிஞர் கண்ணதாசன் பாடல் என்றே எண்ணியிருந்தேன்.. வரிகளில் உள்ள அர்த்தபுஷ்பங்கள் அப்படி எண்ண வைத்தன. ஒரு முறை கவிஞர் வாலி அவர்களைச் சந்தித்து உரையாடியபோது அவரிடமே.. இப்பாடல் பற்றி கேட்டேன். அப்போது ஆம். நான் எழுதிய பாடல் என்றார். நான் நம்பவில்லை.. அவருடன் வாதம் செய்தேன்.

    அப்போது கிடைத்த தகவல்கள் என்னை அதிர வைத்தன. இந்தப் படம் கவிஞர் வாலி அவர்கள் இதில் பாடல்கள் தவிர வசனமும் அவரே எழுதியதும் அறிந்து வியந்து போனேன். 1974ல் வெளிவந்த இப்படத்தின் இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு அவர்கள்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஆகஸ்ட் 18, 2014

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் அவர்கள்

    Mohanarangan Srirangam

     

    ஆன்மிக சிந்தனையாளர் திரு. மோகனரங்கன் அவர்கள் பரந்துபட்ட பல ஆன்மிக நூல்களைப் படிப்பதில் ஆர்வமுடையவர்.  அவ்வாறு தான் படித்ததைப்  படித்தவாறே ஏற்றுக் கொள்ளாது அவற்றை  வெவ்வேறு கோணங்களில் ஆராய்பவரும் கூட. சிந்தனையின்  முடிவில் அவர்கொண்ட கருத்துகள் பெரும்பான்மையான மக்களின் கருத்துக்கு  மாறுபட்ட கோணத்தில் இருந்தாலும் அவற்றைப் பிரதிபலிப்பதில் சற்றும் தயக்கம் காட்டாதவர்.  இந்தப் பிரதிபலிப்பின் நீட்சியாக, தொடர்ந்து இவரது எழுத்தைப் படிப்பவர்களும் சிந்திக்கத் தூண்டப் படுகிறார்கள்.  தனது எழுத்தின் மூலம் வாசகர்களின் ஆன்மிக சிந்தனைக்கு வினையூக்கியாக இருக்கும் மோகனரங்கன் அவர்கள்  இவ்வாரத்தின் வல்லமையாளராக வல்லமை இதழ் குழுவினரால் பாராட்டப்படுகிறார். இவரது ஆன்மிக சிந்தனைகளின் பிரதிபலிப்பை வியந்து இவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் வாசகர் முனைவர் ராஜம் அவர்கள்.

    சென்னை வங்கி ஒன்றில்  பணிபுரியும்  திரு. மோகனரங்கன் திருவரங்கத்தில் பிறந்து வளர்ந்தவர். மிக இளம் வயதிலேயே இலக்கியம், தத்துவம், இறையியல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டவர், அத்துடன்  வரம்பற்ற வாசிக்கும் பழக்கமும் கொண்டவர்.  ஆன்மிக சிந்தனையாளர்கள் ராமகிருஷ்ணர், ரமணர், விவேகானந்தர் என்று ஒரு பக்கமும், நாத்திக சிந்தனையாளர் அயன் ரேண்ட் பற்றியும் தத்துவ மேதை அரிஸ்டாட்டில் பற்றி மறுபக்கமும் ஆர்வத்துடன் படிப்பவர்.  அதேபோலத்தான் இலக்கியத்திலும் இவரது ஆர்வம் பல துறைகளையும் தொட்டுச் செல்லும்.  தமிழிலக்கியத்தில் திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள்  என்ற வைணவ இலக்கியங்களையும், பெரிய புராணம் போன்ற  சைவ இலக்கியங்களையும் ஒரு சேர படிப்பவர்.  விக்டர் ஹ்யூகோ பற்றியும் விளக்கம் தருகிறாரே இவர் என்று வியந்தால்  அக்கால ஸ்ரீ  ராமானுஜர் தத்துவங்களைப் பற்றியும்  இக்கால அக்னிஹோத்ரம் ஸ்ரீராமானுஜ தாதாசாரியார் பற்றியும் விரிவுரை வழங்குவார்.  பொருளாதாரக் கொள்கை , கம்யூனிசக் கொள்கை  …இல்லை…இல்லை இவற்றையும் இவர் விட்டு வைத்ததில்லை. பலநூல் படிப்பும் அவற்றை ஒப்பிட்டு ஆராயும் பாங்கும் இவரது சிந்தனையை விரிவுபடுத்தியுள்ளது. ஆனால் குடத்திலிட்ட விளக்காக தான் அறிந்து கொண்டதை மறைத்துவிடாமல் குன்றிலிட்ட விளக்கொளி போல பலர் பயன்பெற தனது பதிவுகள் மூலம் பகிர்ந்து கொள்வது இவரது சிறப்பு.

    இதற்குக் காரணம் “படிப்புதான் உண்மையான யோகம்”என்று இவர் கொண்டுள்ள கருத்தாகும்.  அப்பதிவிலிருந்து சில வரிகள் இங்கே …

    “நீ உண்மையிலேயே உயர வேண்டுமா?

    இந்த வாழ்க்கையில், புறச் சாதனைகளில், அகச் சாதனைகளில், ஆன்மிகத்தில் – எதில் நீ உயர வேண்டும், உன்னை நீ உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று உண்மையாக, மனசார நீ விரும்பினால் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறேன் எழுதி வைத்துக்கொள் – படிப்பது தவிற வேறு மார்க்கம் இல்லை.

    எதைப் படிப்பது என்று கேட்காதே. உனக்கு முக்கியம் என்று படுகிற துறை யாதாயினும் சரி. அதில் ஊரானை, அவன் பெரும் மகாமுனிவனாகவே இருக்கட்டும், நம்பி அவன் வாயைப் பார்த்துக்கொண்டு நிற்காதே.”  

    குறிப்பாக ஆன்மிக நூல்களைப் படிப்பவர்களுக்கு இவரது சிந்தனை மற்றொரு கோணத்தைக் காட்டும் என்பதை கீழ்வரும் கட்டுரையின் பகுதி வெளிப்படுத்துகிறது …

    “கற்றலும் நம்பிக்கையும் ”
    பழைய மரபுகளைப் பற்றி ஆர்வம் கொண்டு அதைக் கற்பவர்கள் கட்டாயமாக அந்த மரபுகளைத் தம் வாழ்நெறியாகத்தான் கொண்டிருக்க வேண்டும் என்பது இல்லை.பண்டைய நெறிகளைக் கற்று அறியும் ஆர்வம்தான் போதிய காரணம். ஆனால் பழம் மரபுகளில் பெரும் நம்பிக்கை கொண்டு அவற்றைத் தம் வாழ் நெறியாகவே கொள்பவர்கள் அறிவதற்காக மட்டும் அந்த மரபுகளில் தோய்வது இல்லை. அந்த மரபு சார்ந்த நெறிகள் சொல்லும் உலகம் அப்படிப்பட்ட நம்பிக்கையாளர்களுக்கு இன்றும் உண்மையான ஓர் உலகமாக ஒரே உலகமாகப் போய் விடுகிறது. அந்த மரபு சொல்லும் உலகக் கோட்பாடுதான் ‘தி உண்மை’ என்ற கடும் கருதல் விரதத்திற்குத் தங்களை ஈடு கொடுத்துவிடுகின்றனர். அப்படி, சொல் செயல், மனம் எல்லாவற்றையும் ஒரு நெறியில் காவு கொடுத்து, அதில் தன்னையே இழக்கும் வெறியான மனப்பான்மைக்குத்தான் பண்டைய நெறிகள் பெரும்பான்மையும் நம்பிக்கையாளர்களை மறைமுகமாகவோ நேரடியான ஆணைகள் மூலமாகவோ ஊக்குவிக்கின்றன. எனவே ஒரு நம்பிக்கையாளராக மத மரபுக் கருத்துகளைப் பயில்வோர் ஒரு விதத்தில் Probation for religious exclusivism if not fanaticism என்ற நிலையில் தம்மைப் பெய்து விடுகின்றனர்.

    விவேகாநந்தரின் கருத்துகள் பற்றிய விமரிசனம்,  சத்சங்க மஹிமை, சமய நெறிகளும் சமரஸ வாதமும், எது பக்தி? தற்கால ஆன்மிகம், நாத்திகம் பரவ வேண்டும் என்று ஆன்மிக சிந்தனையைப் பல கோணங்களில் ஆராயும் இவர் தொடர்ந்து தனது எழுத்துக்கள் மூலம் வலியுறுத்துவது  “சிந்தனை செய்ய…”

    “அகல்யா கற்பிழந்தாள் என்ற அபத்தக் கதை” என்ற பதிவில்…

    அகல்யாவின் கற்பிழத்தலைப் பற்றி காலம் நெடுக பேசுகிறார்கள். யாராவது காட்டில் இருந்த வேறொரு முனிவரிடமோ, அல்லது அரசன் ஒருவனிடமோ, அல்லது ரிஷி குமாரன் ஒருவரிடமோ உறவு கொண்டிருந்து அதனால் அவளுக்கு இந்தப் பெயர் என்றாலும் புரிந்து கொள்ளலாம். ஆனால் இங்கு இந்திரனிடம் கற்பு இழந்தாள் என்று கூறப்படுகிறது.

    அதையே தாருக வனத்தில் நிர்வாணமாகச் சிவபெருமான் சென்று ரிஷி பத்தினிகளை மயங்கச் செய்தது உயர்ந்த தத்வார்த்தமான ஒன்றின் ஸிம்பாலிஸமாகப் பார்க்கப் படுகிறது.

    கோபியரின் காதலும் கண்ணனிடத்தில் ஈடுபாடும் உயர்ந்த பக்திநிலையைக் குறிக்கும் அவஸ்தைகளாகப் பார்க்கப் படுகிறது.

    அனைவரும் தேவர்கள் என்ற பிரிவைச் சேர்ந்தவர்களே.

    ஆனால் அகல்யாவின் விஷயத்தில் ஏன் அது ‘கற்பிழந்தாள்’ என்று பெரும் மானக்கேடாகச் சித்திரிக்கப்பட வேண்டும்?

    அரசனிடமோ, முனிவனிடமோ, வேறு மானிடர் யாரிடமோ உறவு என்றால் இந்தக் களங்கக் குற்றம் புரிந்துகொள்ள முடியும்.

     “இங்கு உறவு என்பது அந்தக் காலத்தில் கடவுள் என்று கருதப்பட்ட, மானிட மெய்மை அல்லாத ஒரு தத்துவ வடிவினால் ஆய உருவத்திடம்தானே!”

    மற்ற உதாரணங்களில் எல்லாம், தத்வார்த்தமாக ஸிம்பாலிஸம் என்றால் அகல்யா விஷயத்தில் மட்டும் அது அப்படியே காமத்தனமான நடவடிக்கை ஆகிவிடுகிறதா?

    சிந்தனை செய் மனமே!

    […]

    இந்த அபத்தக் கதைகளின் ஆரம்பகால நோக்கமே ஒரு பக்தி நெறி தலைதூக்கி முன்னிருந்த பக்தி நெறியொன்றை வழ்க்கத்திலிருது நீக்கியிருக்கிறது என்பதில்தான் நிறைவேறியிருக்கிறது.

    எவ்வளவு காலம்! காலம் காலமாக நம் நாட்டுப் பண்டிதர்களும், அறிவு ஜீவிகளும், தற்கால எழுத்தாளர் பிரம்மாக்களும் கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டார்களோ!

    “நாத்திகம் பரவ வேண்டும்” என்ற சிந்தனை நோக்கில் இவர் முன்னிறுத்தும் கருத்துக்கள்,  மதங்கள் மக்களின் சிந்தனையை முடக்குவதால் மாற்றுவழி தேவை என்ற நோக்கில் வைக்கப்படுகிறது…

    மிகவும் ஆழ்ந்து நோக்கினால் மனிதர்களின் இயல்பான வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெரும் குந்தகமும் தடையும் விளைவிப்பனவாய் இருக்கின்றன மதங்கள். அதுவும் ஹிந்து மத சமுதாயத்தைப் புனரமைப்பது, சீர்திருத்துவது என்பதெல்லாம் ஒருவர் தம்மைத்தாமே தற்காலிகமாக ஏமாற்றிக் கொள்ளும் வேலை என்றுதான் படுகிறது. ஹிந்து மதத்தை விட்டுப் பிரிந்து தனி மதமாக ஸ்ரீராமகிருஷ்ணர் காட்டிய மார்க்கத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று சில காலங்களின் முன்பு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த துறவியர் சிலர் முயற்சி செய்ததைப் பற்றிக் கடும் விமரிசன எண்ணத்தை முன்னரெல்லாம் கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் விரும்பியதிலும் ஒரு காரணமும் நியாயமும் இருப்பதை இப்பொழுது உணர்கிறேன். அவர்களைப் பற்றிய விமரிசன எண்ணம் எனக்கு மாறிவிட்டது (Posted: August 9 at 11:43pm)
    https://www.facebook.com/mohanarangan.srirangamv/posts/969343329749350

    எப்படிப்பட்ட தன்மை உள்ள செய்கைகளையும், கருத்துகளையும் பற்றி, தம்மளவில் நல்ல மனிதர்கள் கூட, உள்ளத்தின் அதிர்வுகளுக்கு ஆளாகாமல் தப்பித்துக்கொள்ளத்த தகுந்த வழியில் மனசாட்சியை மழுங்க அடித்துவிடும் கலையை மத நம்பிக்கைகள் பயிற்றுவிக்கும் (August 9 at 10:57pm)
    https://www.facebook.com/mohanarangan.srirangamv/posts/969328769750806

    ஆன்மிகம் தவிர்த்து பொருளாதார  சித்தாந்தங்கள் பற்றியும் ‘உபரி மதிப்பு’ கட்டுரையில் இவர் சிந்திக்கும் கோணம்…

    “இந்தியாவில்    ஒரு  மணி  நேரம்   ஒருவர்   உழைக்கிறார்.   அதற்கு    ஒரு  மதிப்பு  நிர்ணயமாகிறது.     அதே  நேரம்  அதே  உழைப்பு   அவர்    வேறு  ஒரு  நாட்டில்    செய்தால்     பலமடங்கு    மதிப்பு    பெற முடிகிறது.    அப்பொழுது     உழைப்புக்கான  உரிய  மதிப்பை    முடிவு  செய்வது   எது?     சந்தையின்    தேவை   என்பதுதானே      அனைத்து  மதிப்புகளையும்   நிணயிக்கும்     மூலம்.     சந்தையின்   தேவை    நிர்ணயித்துத்    தரும்    மதிப்பு    உழைப்புக்கு  வந்தடையாமல்    போக   இடைப்பட்ட    தடங்கல்கள்    ஏற்படலாம்.  அப்பொழுது    அந்தத்   தடங்கல்களை     சமாளித்து    உரிய  மதிப்பைப்  பெற்றுத்தரவும்,    எதிர்காலத்தில்   தடங்கல்கள்   ஏற்படாதவாறு   பார்த்துக்கொள்ளவும்     உழைப்பவரின்  ஒருங்கிணைந்த    அமைப்பு     அவசியம்  இல்லையா?”       

    மோகனரங்கன்  ஒரு சிறந்த கவிஞரும் கூட.  உணர்வின் உயிர்ப்பு, காற்றுகளின் குரல் என்ற கவிதை நூல்களை இவர் வெளியிட்டுள்ளார்.  காற்றுகளின் குரல் கவிதை நூலில்    4000 கி மு விலிருந்து இன்றுவரை, சுமார் 25 நாடுகளிலிருந்து நூறு கவிதைகளை  மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

    கட்டளைக் கலித்துறையில் பாடல்கள், சங்கத்தமிழ்  கவிதைகளை ஒத்த கவிதைகள் ஆகியவற்றையும் இயற்றியுள்ளார்.

    “If you have knowledge, let others light their candles in it” என்றும் “Sharing will enrich everyone with more knowledge” ஆங்கிலப் பொன்மொழிகளுண்டு.  அதற்கொப்ப தான் அறிந்து கொண்டதை, தான் சிந்தித்த ஆன்மிகத்தின் மாறுபட்ட கோணத்தை தனது பதிவுகளின் மூலம் வழங்கிவரும் மோகனரங்கன் அவரது சிந்தனையைத் தூண்டும் எழுத்துகளுக்காகப் பாரட்டப்பட வேண்டியவர். இவ்வாரத்தின் வல்லமையாளராக மோகனரங்கன் அவர்களை அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    மோகனரங்கனை “அரங்கனார்” என்றும் அன்புடன் சிலர் அழைப்பதுண்டு…வல்லமை மின்னிதழில் கட்டுரைகள் எழுதியுள்ள இவர் கூகிள் குழுமங்களில்; குறிப்பாக வல்லமை கூகிள் குழுமத்திலும், தனது பேஸ்புக் பக்கத்திலும் எழுதி வருகிறார்.  இவர் எழுத்துக்களை  படிக்க விரும்பினால் …

    இடம் பிடிக்க வேண்டுமெனில்
    வடம்பிடிக்க வாருங்கள்
    “அரங்கன்” தேர் அசைகிறது …

    (இவரது  “உணர்வின் உயிர்ப்பு”, என்ற கவிதை நூலில் உள்ள “கவி தைத் தேர்” என்ற கவிதையில் வரும் வரிகள் இவை.  தமிழினி, நவம்பர் 2002, பக்கம் 27 )

    https://www.facebook.com/mohanarangan.srirangamv
    http://thiruvarangan.blogspot.in/

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    Share