ஜெயிச்சிட்டே! கண்ணா நீ ஜெயிச்சிட்டே! – கவிஞர் வாலி
கவிஞர் காவிரி மைந்தன்
வழக்கமான சினிமாப் பாடல்தான்! ஒரு பாத்திரம் பேசுவதற்கு பதிலாக பாடுகிறது! பாடல் வரிகள் மட்டும் அந்தக் கதாப் பாத்திரத்தையும் மீறி வாழ்க்கையின் கீதையை நமக்குக் காட்டுகிறது! வேதாந்தம் புரிகிறது! ஆதி அந்தங்கள் தெளிவாகிறது! மனிதன் கடவுளை உணருகிறான்! அந்த உணர்வைத்தான் பாடலை வடித்துள்ளார் கவிஞர் வாலி!
ஜெயிச்சிட்டே! கண்ணா நீ ஜெயிச்சிட்டே!
திறந்துட்டே கண்ணை திறந்துட்டே
உன்னிடத்தில் தோற்றதில் வெற்றி எனக்கு
என்னை தெளிய வைத்தாய் தன்னை புரிய வைத்தாய்
என் நன்றி உனக்கு .
…………………..
தன்னை அறிந்தவர்க்கு தானாகி நிற்பவனே..
என்னை அறிந்து கொண்டேன்.. மன்னனே..
எனக்கு கீதை எடுத்துரைத்த கண்ணனே!
ஜெயிச்சிட்டே! கண்ணா நீ ஜெயிச்சிட்டே!
எட்டடுக்கு கட்டிடத்தில் எத்தனை ஓட்டை..
இதில் நல்ல ரத்தம் உள்ளமட்டும் எத்தனை சேட்டை
……………..
கொண்டு வந்ததென்ன கொண்டு செல்வதென்ன
ஒன்றுமில்லையே முடிவிலே
இதை உணர்ந்த பிள்ளை உன் மடியிலே!
‘கலியுகக் கண்ணன்’ திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசன் அவர்கள் கதாநாயகனாக தோன்றி திரையில் நடித்த காட்சியும் வி. குமார் அவர்கள் வழங்கியிருக்கும் கம்பீர நாட்டையிது!!
கண்ணனைப் பற்றித் தொடங்கும் பாடல்! வாழ்க்கைத் தத்துவங்கள் கொட்டிக்கிடக்கிறது! இது கவிஞர் கண்ணதாசன் பாடல் என்றே எண்ணியிருந்தேன்.. வரிகளில் உள்ள அர்த்தபுஷ்பங்கள் அப்படி எண்ண வைத்தன. ஒரு முறை கவிஞர் வாலி அவர்களைச் சந்தித்து உரையாடியபோது அவரிடமே.. இப்பாடல் பற்றி கேட்டேன். அப்போது ஆம். நான் எழுதிய பாடல் என்றார். நான் நம்பவில்லை.. அவருடன் வாதம் செய்தேன்.
அப்போது கிடைத்த தகவல்கள் என்னை அதிர வைத்தன. இந்தப் படம் கவிஞர் வாலி அவர்கள் இதில் பாடல்கள் தவிர வசனமும் அவரே எழுதியதும் அறிந்து வியந்து போனேன். 1974ல் வெளிவந்த இப்படத்தின் இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு அவர்கள்.