கே.ரவி

1976-77. இந்தக் காலக் கட்டத்தில் தமிழ்நாட்டில், குறிப்பாகச் சென்னையில், நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தமிழ் நாடக உலகின் பொற்காலம் என்றே அதைச் சொல்லலாம். அப்போது நாமும் ஒரு நாடகம் போட்டால் என்ன என்று தோன்றியது. என்னதான் கல்யாணராமன் மாமாவிடம் வளர்ந்தாலும், லேடி விஸ்வத்தின் மகன் இல்லையா? நடிப்பு என் ரத்தத்தில் ஊறியிருந்தது.

ஆனால், நடிப்பைக் காட்டிலும், நாடக ஆவலைக் காட்டிலும், கவிதை வெறியே என் உயிரணுக்கள் ஒவ்வொன்றிலும் பதிந்து கிடந்தது. எனவே, நாடகம் என்று யோசித்த போதும் கவிதையே முன்னின்று வழிகாட்டியது. ஆம், நானும் ஷோபனாவும் இணைந்து நாடகக் கதை ஒன்றை உருவாக்கினோம். என் தந்தை விஸ்வம்தான் நாடக இயக்குநர்.

அதன் கதாநாயகன் அரவிந்தன் ஒரு கவிஞனாக இல்லாமல் வேறெப்படி இருக்க முடியும்? அவன் தன் நிஜ வாழ்க்கையில் பார்த்திராத ஒரு பெண் அவனுடைய கனவுகளில் மட்டும் அடிக்கடித் தோன்றி அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தாள். கனவில் அரவிந்தனோடு கவிதையாகவே அளவளாவுவாள். கவிதைச் சுவையில் இருவரும் மூழ்கிக் களிப்பார்கள். இதைப் பற்றி அவன் தன் நண்பனிடம் சொல்கிறான். அந்த நண்பன் ஓர் ஓவியன். அரவிந்தன் அவளை நன்றாக வர்ணித்தால் தான் அவளை அப்படியே வரைந்து காட்டுவதாகச் சொல்கிறான் ஓவிய நண்பன். அரவிந்தனின் வர்ணனைகளுக்கு வர்ணம் தீட்டிக் காட்டுகிறான் நண்பன். அப்படியே தத்ரூபமாகத் தன் கனவுக் காதலியை நண்பன் வரைந்து விட்டதைச் சொல்லி வியந்து மகிழ்கிறான் அரவிந்தன். அவளுக்குக் கல்பனா என்று பெயர் சூட்டுகிறார்கள். ஓவியம் வரைந்து முடித்த பிறகு, ஏனோ அரவிந்தன் கனவில் கல்பனா வருவதில்லை. அவனுக்குக் காரணம் புரியவில்லை. மிகவும் சோகத்துக்கு ஆளாகிறான். அப்போது ஒரு நாள் தெருவில் சென்று கொண்டிருக்கும் போது, கல்பனாவையே நேரில் பார்த்து விடுகிறான். சென்று பேசுகிறான். தான் கல்பனா இல்லை, தன் பெயர் ரூபா, தனக்குக் கவிதையிலெல்லாம் துளிக்கூட ஆர்வம் கிடையாது என்று அவள் எவ்வளவோ சொல்லியும், விடாமல் அவளை அரவிந்தன் தொடர்ந்து சந்தித்துப் பேசப் பேசப் அவர்களிடையே காதல் மலர்கிறது. ஆனால், கொஞ்சம், கொஞ்சமாக அரவிந்தனுக்குப் புரியத் தொடங்குகிறது, உருவத்தில் மட்டுமே ரூபா தன் கல்பனாவைப் போல் இருப்பது. மற்றபடி அவளுடைய எண்ணம், செயல், பேச்சு எதுவுமே கல்பனாவை நினைவு படுத்துவதாக இல்லை. இதனால் வருத்தம் அடைந்து அரவிந்தன் கல்பனாவின் ஓவியத்தின் முன் அமர்ந்து கொண்டு அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கையில், ரூபா ஏதோ முக்கியமாகப் பேசியதை அவன் கவனிக்காததால் ஆத்திரம் கொண்ட ரூபா, அந்தக் கல்பனா ஓவியத்தை உடைத்துக் கிழித்து எறிகிறாள். அரவிந்தனும் தான் இனிமேல் கல்பனாவை மறந்துவிட்டு ரூபாவுடன் சாதாரண மனிதனைப்போல் சந்தோஷமாக வாழ்வதாக உறுதியளிக்கிறான். ஆனால், அன்றிரவே மீண்டும் அவன் கனவில் கல்பனா வருகிறாள். நிலைமை மாறுகிறது. தினமும் அவன் கனவில் கல்பனா வரத் தொடங்கியதும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி அரவிந்தன் தடுமாறிக் கிட்டத்தட்ட ஒரு மனநோயாளியாவே மாறி விடுகிறான். எப்படியாவது கல்பனாவை மறந்தால் மட்டுமே அவன் நிம்மதியாக இயல்பு வாழ்க்கை வாழ முடியும் என்ற தெளிவு ஏற்படுகிறது. ஒரு மனோதத்துவ நிபுணரின் யோசனைப்படி அரவிந்தன் கனவில் கல்பனா வரும் போது அவளைக் கனவிலேயே கொன்றுவிட வேண்டும் என்று முடிவாகிறது. அன்றிரவு ஒரு கத்தியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு அரவிந்தன் படுக்கிறான். மறுநாள் அவன் பிறந்ததினம். காலையில் ரூபா கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து விட்டுப் பிரசாதத்துடன் வருகிறாள். அப்போது, கனவில் கல்பனாவைக் கண்டு, “போய்விடு ராட்சஸி. உன்னைக் கொன்று விடுகிறேன்” என்று தூக்கத்தில் அரவிந்தன் அலறும் சத்தம் கேட்கிறது. ரூபா படுக்கை அறைக்குள் ஓடுகிறாள். ஒரே இருட்டு. அலறல் சத்தம் …. அரவிந்தன் கத்தியில் ரத்தம் சொட்டச் சொட்ட வெளியே வருகிறான். “கல்பனாவைக் கொன்று விட்டேன்” என்று உரக்கக் கூவுகிறான். ஆனால் அவன் உண்மையில் கொன்றது ரூபாவை.

அவனுடைய கவிதைகளுக்கு ஞான பீட விருது வழங்கப் பட்டதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாமல், விழிப்பு நிலையிலும் கல்பனாவுடனேயே பேசிக் கொண்டும், கவிதைகள் சொல்லிக் கொண்டும் ஒரு மனநோயாளியாக அரவிந்தன் வாழ நேரிடுகிறது.

தலை சுற்றுகிறதா? நாடகத்தில் நான்தான் அரவிந்தன், ஷோபனாதான் கல்பனா-ரூபா ஆகிய இரட்டை வேடங்கள். முதலில், “கனவுக்கும் நிழல்கள் உண்டு” என்று நாடகத்துக்குக் பெயர் வைத்தோம். பிறகு அன்றைய நாடக உலகத்தின் போக்குக்கு ஏற்பப் “பார்வைக்கு என்ன பொருள் ” என்று அதை மாற்றினோம். 1976 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், ஶ்ரீ கிருஷ்ண கான சபாவில் நாடகம் அரங்கேறியது. முதல் பாதி வெற்றி. சுகி சிவம் கூட அதில் திரைக்குப் பின்னால் இருந்து குரல் தரும் ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. ஆனால், இடைவேளைக்குப் பின்னால், கல்பனா-ரூபா மாறிமாறி வரும் காட்சிகளில் ஒளியமைப்பு ஒத்துழைக்காமல் போய் நாடகம் குழப்பமாகியது. எங்களுடன் நடித்த ராகவன், ராமச்சந்திரன் உட்பட எல்லாருமே நன்றாக நடித்திருந்தும், என் சிந்தனைகளைப் புரிந்து கொண்டு என் நண்பர்கள் ஶ்ரீதர்-சாமா நன்றாக வசனம் எழுதியும், எடுத்த எடுப்பிலேயே நிறைய தந்திரக் காட்சிகள் கொண்ட ஒரு கதையைத் தேர்ந்தெடுத்ததாலும், அதைச் சரிவர நிகழ்த்திக் காட்ட முடியாமற் போனதாலும், நாடகம் அரங்கேறிய பிறகு அதைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. பல ஆயிரங்கள் நஷ்டமானதுதான் மிச்சம். 1976 ஆம் ஆண்டில் அது பெரிய தொகைதானே!

நாடகமே இந்த உலகம்! இதில் ஆடுவதோ பொம்மலாட்டம் என்று மனோன்மணி மெல்லிய குரலில் பாடுகிறாள்.

அந்தக் காலக் கட்டத்தில்தான், 1977-ஆம் ஆண்டில் இப்படி ஒரு கவிதை நான் எழுத நேர்ந்தது:

கவிதையைக் கேட்டு மகிழ இங்கே சுட்டுங்களேன்…

உள்ளக் கதவை மெல்லத் திறந்துநான் உற்றுப் பார்க்கிறேன்images (1)

உருத்தெரியாமல் நான்தான் அங்கே உதிர்ந்து கிடக்கிறேன்

என்

உள்ளக் கதவை மெல்லத் திறந்துநான் உற்றுப் பார்க்கிறேன்

உருத்தெரியாமல் நான்தான் அங்கே உதிர்ந்து கிடக்கிறேன்

தாபத் தோடு சுடரும் எந்தன் தீபக் கனவுகள்

நடுங்கி னாலும் நடுநடு வேயொளி நடனம் செய்வதால்

என்

உள்ளக் கதவை மெல்லத் திறந்துநான் உற்றுப் பார்க்கிறேன்

உருத்தெரியாமல் நான்தான் அங்கே உதிர்ந்து கிடக்கிறேன்

காலைப் பனியின் காதற் பொழிவில் கண்வி ழித்ததும்

கதிரவ னுடைய க்ரணங்களை அருந்தி வளர்ந்தி ருந்ததும்

மாலையில் வண்டு மழலையில் தாய்மை சுரந்தி ருந்ததும்

மாயையா இல்லை வாழ்க்கையா என்று மனம்வெ தும்பிடும்

ரோஜா மலரின் இதழ்க ளாகப் படப டக்கிறேன்

ஊதற் காற்றில் உடம்பு நடுங்க முடங்கிக் கிடக்கிறேன்

என்

உள்ளக் கதவை மெல்லத் திறந்துநான் உற்றுப் பார்க்கிறேன்

உருத்தெரியாமல் நான்தான் அங்கே உதிர்ந்து கிடக்கிறேன்

ஆடித் திரிந்த கால்களில் நாதம் அள்ளித் தெறித்ததும் – ஓர்

ஆரணங் கென்னைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டதும்

பாடிக் களித்த பண்களெல் லாமென் நெஞ்சிற் பதிந்ததும்

பாழும் கனவா பழமை நினைவா என்ற பதைப்புடன்

உதிர்ந்து கிடக்கும் சதங்கை மணிகளாய் ஒடுங்கிக் கிடக்கிறேன் – மனம்

அதிர்ந்த போதும் அசைவே இன்றிப் புழுங்கித் தவிக்கிறேன்

அருவித் துகிலை அணிந்த வண்ணம் அமர்ந்திருந்ததும்

யாரோ ஒருவன் சிற்றுளியாலே வளைந்து நெளிந்ததும்

வருவோர் எல்லாம் வணங்கித் துதிக்க வாழ்ந்தி ருந்ததும்

வாழ்க்கையா இல்லை மாயையா என்று மனம் வெதும்பிடும்

தூள்தூள் ஆன பாறைத் துகள்களாய்த் துடிது டிக்கிறேன்

நாளொவ் வொன்றும் நானே பலவாய்ப் பிரிந்து தேய்கிறேன்

அறிவில் பூத்த அரவிந் தங்களின்

நறுந்தேன் அள்ளிப் பருகிய நாட்கள்

உலகு திருத்தும் உணர்ச்சி வேகத்தில்

உன்மத்த னாகவே ஓடிய கால்கள்

அழகுப் பசியின் அசுர போதையில்

கனல்வயப் பட்ட என் காவியப் பார்வைகள்

மெழுகாய் உருகி மெலிந்த நினைவுகள்

மீண்டும் மீண்டும் மீண்ட ஸ்வர்கங்கள்

தனிமை இருட்டில் தவித்த படியோர்

அச்சத் தாலே அதிர்ந்த நரம்புகள்

இனிய இசையில் என்னை மறந்துநான்

இதய மாகவே அலைந்த பொழுதுகள்

அணுக்க ளாகச் சிதறிச் சிதறி

அழுது முடித்த ஆயிரம் கணங்கள்

எல்லா மாகி இருந்த பின்னும்

எதுவும் முழுமை பெறாத நிலையில்

என்

உள்ளக் கதவை மெல்லத் திறந்துநான் உற்றுப் பார்க்கிறேன்

உருத்தெரியாமல் நான்தான் அங்கே உதிர்ந்து கிடக்கிறேன்

இதை உருக்கம் என்பதா, விரக்தி என்பதா, வேதாந்தம் என்பதா? என் இல்லற வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பொருளாதாரமும் மோசம் இல்லை. பின் ஏன் இந்தப் பாடல்? யாரைக் கேட்பது? எந்த அனுபவக் களத்தில் இருந்து நான் இந்தப் பாடலை எடுத்து வந்தேன்?

நிஜ வாழ்க்கை என்று நாம் சொல்கிறோமே, அதில் நடக்கும் சம்பவங்களைக் காட்டிலும் என் மனம் சென்று சஞ்சரிக்கும் வேறு நிலைகளில் நிகழும் அல்லது நிகழ்ந்த சம்பவங்களே என் கவிதைகளின் கருப்பொருள்கள் ஆகியிருக்கின்றன. அந்தச் சம்பவங்கள் இன்னவை என்று என் மேல் மனத்துக்குப் பல சமயங்களில் தெரியக் கூடத் தெரியாது.

எனக்குத் தோழர்களை விடத் தோழிகளே அதிகம். “என்னப்பா கங்கைக் கரைத் தோட்டம்” என்றுதான் ராஜகோபால் என்ற என் நண்பன் என்னை அழைப்பான். ஒருமுறை, சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன், ஷோபனா, அவளுடைய தாயார், என் தோழி ஒருத்தி ஆகியோருடன் ஓரூருக்குச் சென்றிருந்தேன். அங்கே, விடியற்காலையில், மலை மேல் அமர்ந்தபடி அந்தத் தோழியிடம் கவிதை ஒன்று சொல்லிக் கொண்டிருந்தேன். ஷோபனாவின் தாயார் அதைக் கேட்டிருக்க வேண்டும். நான் அந்தத் தோழியிடம் ஏதோ காதல் கவிதை சொல்லிக் கொண்டிருந்ததாகவும், எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும் மறுநாள் அவர் ஷோபனாவிடம் சொல்லிப் புலம்பினாராம். ஷோபனாவும் நானும் சிரித்துக் கொண்டோம். உண்மையில் அது ஒரு பராசக்தி கவிதை. ஆனால் என் கவிதைகளில்தான் பக்தி எது, காதல் எது; பராசக்தி எது, ஷோபனா எது என்று புரியாதே!

உலக நடப்புகள் என் சிந்தனையை பாதித்த அளவு என் கவிதை மூலத்தை உசுப்பவில்லை என்பதை நான் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். நாட்டில் நடக்கும் அநியாயங்களை எண்ணிக் கோபப் பட்டிருக்கிறேன். கொந்தளித்துப் பேசியிருக்கிறேன். ஏன், ஊழலை எதிர்த்து, அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது, நானும் உண்ணாவிரதம் இருந்தேன். அவருடைய போராட்டத்தை அலட்சியப் படுத்தி, ஆணவத்தோடு ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் பேசியதைக் கேட்டு, சிவம் வீட்டுக்குச் சென்று உட்கார்ந்து சீற்றத்தோடு, கண்கலங்கிப் புலம்பியிருக்கிறேன். ‘குடிமக்களாகிய நாம்’ (We The People) என்ற அமைப்பை நிறுவி ஊழல் எதிர்ப்புக் கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன். என் மீது உள்ள அன்பு மிகுதியால், என்னுடைய ஊழலெதிர்ப்பு நடவடிக்கை பற்றி அமுதசுரபி இதழில் ஒரு தனித் தலையங்கமே எழுதி விட்டார், அதன் ஆசிரியர், திரு. திருப்பூர் கிருஷ்ணன்.

அந்த அளவு சமூக உணர்வு இருந்தும், இப்படிப்பட்ட உலக நடப்புகள் என் கவிதையி ஊற்றுக்கண்ணை ஏனோ அணுக முடியவில்லை. உலகத்தின் அன்றாட மானுட நிகழ்ச்சிகள் என் கவிதைப் பொறியைத் தூண்டிவிடவில்லை. என் கவிதை வேறெங்கெங்கோ சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *