”கொம்புக்(கு) இடையிலே, காலம்ப்ர தோஷத்தில்,
சம்பு நடமாட, சீராயர் -நம்பியும்,
கொம்புக்(கு) இடையே குமுதம் மலர்ந்தாற்போல்,
அம்புஜவாத் சல்யம் அளிப்பு’’….கிரேசி மோகன்….
”கொம்புக்(கு) இடையிலே, காலம்ப்ர தோஷத்தில்,
சம்பு நடமாட, சீராயர் -நம்பியும்,
கொம்புக்(கு) இடையே குமுதம் மலர்ந்தாற்போல்,
அம்புஜவாத் சல்யம் அளிப்பு’’….கிரேசி மோகன்….
கவியோகி வேதம்
………….. நம் ஒவ்வொருவரிடமும் ஆழம்காணமுடியாத ஞாபக சக்தி, அபாரமான ஆராய்ந்தறியும் அறிவு முதலியவை நமது ’ஆழ்மன’த்துள்ளே புதைந்து கிடக்கின்றன. அது இறைவன் நமக்குக்கொடுத்த பெரிய வரப்ரஸாதம். இதனை நாம் நம் தினசரி தீவிர யோகப்பயிற்சியாலும், ஒழுங்கான தியானத்தாலும் நிச்சயம் தோண்டி வெளியே எடுக்கலாம்.
இதில் நல்ல வெற்றி பெற்ற என் ஒரு நண்பர்.. ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன். அவர் மலேஷியாவிலிருக்கும் என் அன்பர்டாக்டர் திரு.ஜேபீ{ஜெயபாரதி} அவர்கள்.அவர் தற்போது இதையெல்லாம் தம் அகத்தியர் இணையத்தில் {அகத்தியர் யாஹூ க்ரூப்ஸ்}வெளிப்படுத்திவருகிறார்.அவர் அடிக்கடி சொல்லுவார்.வேதம்! என் முன்னோர்கள் செய்த பாக்கியம். எனக்கு இந்த யோக முறைகளைக் கற்றுத்தந்த ‘வேலவனார்’ அவர்கள் குரு வாக அமைந்ததும்,அவர் மூலம் என் ஆழ்மன சக்திகளை வெளியே தோண்டி எடுத்ததும்.. இவற்றை நான் பயன்படுத்தி எவ்வளவோ பேருக்கு இலவசமாய் நல்ல உதவிகள் செய்திருக்கிறேன் என்று..
இப்போது சொல்லுங்கள்!அந்த விலைமதிப்பில்லாத சக்திச்சுரங்கத்தை நாம் ஒவ்வொருவருவரும் தோண்டித்தோண்டி எடுத்துப்பயன்
படுத்துகிறோமா? என்றால் அதுதான் இல்லை. சிறுவயதுமுதல் நம் குழந்தைகட்கு சுமார் மூன்று வயதுமுதலே தேவாரம், திருவாசகம்,சில குறிப்பிட்ட மந்திர ஸ்லோகங்கள், அருணகிரி நாதரின் திருப்புகழ் முதலியவற்றை மனப்பாடமாகச் சொல்லக் கற்றுக் கொடுத்துப் பாருங்கள்! குறிப்பிட்ட 12 வயதுக்குள் அக்குழந்தைகளின் ஞாபக சக்தி,தமிழ்
இலக்கியம் கற்றுக்கொள்ளும் ஆர்வம் எல்லாமே ஆச்சர்யப்படும் விதமாக வளரும்.
ஒரு குழந்தையும் இந்த விஷயத்தில் குறைந்தோ, அல்லது மக்காகவோ இருக்காது.
….. இதை என் பையனிடம் முன்பே சொல்லிவைத்திருந்தேன். ஆகவே இதைப் பரீட்சித்துப்பார்க்கும் விதமாக( அவன் நியூஜெர்ஸியில் இருக்கையில்) அவனது மகனை(என் பேரனை) ஸ்கூல் நேரம் முடிந்து மாலை 6 முதல் 7 மணி வரை பக்கத்திலுள்ள ஒரு சம்ஸ்கிருத டீச்சரிடம்( சிவாநந்தாவின் சம்ஸ்கிருதி பவுண்டேஷன்) வடமொழி ஸ்லோகங்கள், ஒவ்வொரு பகவானுக்கும் உரிய மந்திரங்கள், பகவத் கீதை முதலியவற்றைக் கற்க ஏற்பாடு செய்தான். வீட்டிலோ என் மருமகள் பாரதியாரின்
சில பாடல்களைக் கற்றுக்கொடுத்தாள்.ஆச்சர்யம்! ஒரே வருடத்தில்
என் பேரன் எல்லாவற்றையும் தலைகீழ்ப்பாடமாகச் சொல்வதோடு இன்னும் இந்த10-வது வயதிலும், ஒரு வரி கூட மறக்காமல் சொல்கிறான். காரணம் என்னவெனில் குழந்தைப்பருவத்திலேயே விளையாட்டோடு விளையாட்டாய் ஆழ்மன சக்தியும் மேம்படுகிறது. வளர்கிறது.மனத்தில் குப்பைகள் சேர்வதில்லை. தேவையில்லாத எண்ணங்கள் அவைகளை நெருக்குவதில்லை.அப்படியே சின்னச்சின்னக் கோபம், பிடிவாதச் சொற்களை அவர்கள் வெளிப்படுத்தினாலும் அடுத்த நிமிடம் சமாதானமாகி, சொற்களை, எண்ணங்களை மறந்துவிடுகின்றன. பெரியவர்களைப்போல்(தாய் தந்தை?) ஆழ்மனம் வரை அவற்றைக்கொண்டு செல்வதில்லை. திரியாத பால் போல் குழந்தை மனம் தெளிவாக இருக்கிறது.அதாவது,உறவினரும், பெற்றோரும் அவற்றைக்கெடுத்துக் குட்டிச்சுவராக்காதவரை! கவிஞர் புலமைப்பித்தன் பாடினார்..-
என்ன- பால் மனமடீ உனக்கு!-குழந்தாய்!
.. எண்ணி வியக்கின்றேனடி!
தின்னும் பொருளை உன் அண்ணன்-நீ
.. திகைக்கும்படிப் பிடுங்கிடினும்,
மின்னலெனச் சண்டை போடுகிறாய்!-படு
..வேகமாய்க் கத்தியே திட்டுகின்றாய்!
பின்பு வேறோர் பண்ட(ம்)உன் கைவந்தால்,-வாய்
…. பிடித்துக் கடித்(து)அவன் கைவைப்பாய்!
என்ன பால்மனமடீ!..உனக்கு!!
.. எவ்வளவு அழகிய பாடல் பாருங்கள்! இதுதான் குழந்தை மனம். அதில் கல்மிஷம் இல்லை; தீராத வன்மம் இல்லை.நிலைத்த கோபமோ பொறாமையோ இல்லை.
அதனால்தான் ஆராய்ந்து சொல்கிறேன்.குழந்தைகளின் வெளிமனமும் உள்மனமும்பிரகாசமாகவே இருக்கிறது.ஆழ்மனமோ அற்புத சக்தி படைத்ததாக இருக்கிறது.
பெற்றோர்கள்தாம் அதனை முதலிலேயே உணர்ந்து மூன்று வயது முதல் திருக்குறள்,திருவாசகம்,பிரபந்தங்கள் முதலியனவற்றை அவர்கட்குக் கற்றுக்கொடுக்க ஒரு ஏற்பாடு செய்யவேண்டும்.
..நம் (அவ்வை!)பாட்டிகள் சொல்லவில்லையா? ‘ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையுமோ?’.. ஆம்.. வயது ஏற ஏற ஞாபக சக்தி குறைகிறது.காரணம், தேவைஇல்லாத அசட்டு சினிமாப் பத்திரிகைகள், சினிமா நடிகைச் சமாச்சாரங்கள்,,கணினியின் மனம் கெடுக்கும் விளையாட்டுகள், அனாவசியக் கோபம், பொறாமைகள், கவலைகள்.. போன்ற குப்பைகளை மனத்துள்ளே போட்டு பால்போன்ற மனத்தைத் திரித்துவைக்கின்றோம். ஆழ்மனம் தெளிந்து அருவிநீர்போல் இருக்கும்வரை ஞாபக சக்தியும் பெருகி, எத்தனையோ பழம்பாடல்கள், கம்பன் அமுதம், காப்பியங்கள் இவற்றை மனப்பாடமாகச் செய்தாலும் அப்படியே நினைவில் நின்று சொற்பொழிவுக்கும், சொற்ப ஒழிவு இன்றிச் செய்யும் கட்டுரைக்கும் நல்ல துணையாய் நிற்கும்.
என் நண்பன் எழுத்தாளர் பாலகுமாரன் தம் எத்தனையோ கட்டுரைகளில் சொல்லியிருக்கிறார்.தம் அன்னையே தனது எழுத்தின் பிரகாசத்திற்குக் காரணம் என்று.ஒரு பள்ளியில் டீச்சராக இருந்த அவர் அன்னை தினமும் இரண்டு தேவாரப்பாடல், பத்து திருக்குறள், ஒரு திருவாசகம் இவற்றை சரியாக ஒப்பிக்காவிட்டால் இரவுச் சோறு போடமாட்டார்களாம். தாமும் துணை நின்று ஒவ்வொரு பாடலின் முழுப்பொருளும் மிக ருசிகரமாகச் சொல்லிகொடுத்ததால் ஆர்வத்துடன் எல்லாவற் றையும் சீக்கிரமே மனப்பாடம் செய்தாராம்.தாயும் மிக சந்தோஷமடைந்து அதிகம் தமிழ்ப்பாடல்களை ஒப்பித்தால் அவ்வப்போது ஸ்பெஷல் தின்பண்டங்களும் பாலகுமாரனுக்குச் செய்துதந்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவாராம்.அவர் அன்றோ சிறந்த அன்னை!
….இப்படி மனப்பாடம் செய்ததால் சரியான உதாரணங்கள் காட்டி இப்போதும் அவரால் சிறந்த சித்தர்போல் சொற்பொழிவாற்றமுடிகிறது. என் இன்னொரு நண்பர்( திருப்புகழ்ச் செம்மல்) மதிவண்ணனும் அப்படித்தான். சிறுவயதுமுதலே அருணகிரியார் பாடல்களினால் கவரப்பட்டு உரிய சந்தத்தோடு மனப்பாடம் செய்தவர்.
பள்ளியில் படிக்கும் போது அவர் அருகில் குமுதம், பேசும்படம் போன்ற அநாவசியஏடுகளைப் பிறர்படிக்கத்தூண்டினாலும்,மறுத்துவிடுவாராம்.திருப்புகழே எனக்குச்
சோறுபோடும், உயிர்வளர்க்கும் தெய்வம் என என் அன்னையும், அண்ணனும் சொல்லியுள்ளார்கள்..ஆகவே அசுத்த ஏடுகளைச் சிந்தையாலும் தொடேன் என்பாராம்.
.. ‘ கசடு அறக் கற்க’ என என் தமிழ் ஆசான் திருவள்ளுவர்
சொல்லியபடி நன்றாகத் தேர்ந்து (கசடு அற= குற்றமற்ற, உள்ளத்தில் தீய எண்ணம் விளைவிக்காத) நல்ல தமிழ் நூல்களையே கற்றுச் சிறந்த பேச்சாளனாக விளங்குவேன்!”-
என்று பல நண்பர்களிடம் சவால் விட்டு அதில் ஜெயித்தும் காட்டி இருக்கிறார். இன்றும் அவர் சுமார் இரண்டாயிரம் கம்பன் பாடல்களையும், ஆயிரம் திருப்புகழையும் இரவில் எழுப்பிக் கேட்டாலும் தட தட என அருவிபோல் கொட்டுவார். இதற்கு அவர் காரணமாகச் சொல்வது சிறிது நேர தியானமும்,தேகத்தையும், மூளையையும், நல்ல அளவில் பேணி வளர்த்ததும் தான் !..என்பார்.
அவரது நினைவாற்றலில், சொற்பொழிவுத்திறனில் வியந்துபோய் மும்பை, கொல்கத்தா, மலேசியா, ஸ்ரீலங்கா அன்பர்கள் இன்றும்அவரைப்
பல இடங்களில் தொடர்ச்சொற்பொழிவுக்குக் கூப்பிடுகிறார்கள். இதற்கெல்லாம்என்ன காரணம்? அந்தச் சிறுவயதின் தெளிந்த ஆழ்மனச் சக்தியை மதிவண்ணன் அவர்கள் மிகச்சரியாகப் பயன்படுத்தியமையே. ..
இப்போதும் சொல்லுவார் என்னிடம். வேதம் ஸ்வாமீ!! சிறு வயது முதல்நான் கண்ட கண்ட புத்தகங்களைப் படிப்பதை வெறுத்தவன். என் ஐந்து வயதுமுதல் இன்றுவரை தவறாமல் அருணகிரிநாதரின் புயவகுப்பு, வேல்வகுப்பு, சீர்பாத வகுப்பு இவற்றின் பாடல்களைக் கண்மூடிச்சொல்லியபிறகே தூங்கப்போவேன். அதுவே ஒரு பழக்கமாகிவிட்டது வேதம்! ஏன் எனில் இவற்றின்மூலம்,
எனக்கு அருணகிரிநாதர் என் வாழ்வுக்கும்,வருமானத்திற்கும் போட்ட பிச்சை! ”–என மிக நெகிழ்ந்து கண்ணில் நீர் கோக்க ஒரு பரவசமாய்ச் சொல்வார்!இதனால்இன்றுவரை அவரது ஞாபக சக்தியும், தமிழில் ஆராயும் அறிவும்ஆழ்மனச் சக்தியும் வளர்ந்துகொண்டே போகிறது…
… சுரங்கம் தோண்டி வைர ‘ முதல்’எடுக்கின்ற சொக்கத்தங்கம் ஐயா நீர்! ’
என்று நான் அவரைச் சிரிப்போடு கிண்டல் செய்வேன்! மனமாரத் தழுவிக்கொள்வேன்..இப்படி ஆழ்மனச்சக்தியை வளர்த்துவரும் நண்பர் மதிவண்ணனின் சொல்லின் அற்புதத்திறன்,பாட்டுத்திறன் இவற்றால் எத்தனை எத்தனை நண்பர்களின் சிக்கலான வாழ்வு சீர் அடைந்துள்ளது என நான் விவரித்தால் நீங்கள் அசந்துபோவீர்கள்..(தொடரும்)-
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
காதல் பளிங்கு மாளிகை
மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
உன்னை நான் முதன்முறை
சந்தித்து
காதலித்த போது,
அச்சம்ப வத்தின் மீது நான்
எழுப்ப வில்லை
பளிங்கு மனக் கோட்டை !
நிலைத்து விடுமா
அப்படிக்
கட்டுமோர் காதல்
அடுத்தடுத்த துயருக்கு இடையே
ஊசலாடிக் கொண்டு ?
இல்லை !
புல்லரித்தது எனக்கு மாறாக,
முன் செல்லும் பாதை
நெடுவே
மின்னும் ஒவ்வொன்றையும்
நம்பாத போது !
விரலை ஊன்றிச் சாயவும்
அரண்டேன் !
முரணாக அன்றுமுதல் அமைதியில்
வலுப் பெற்றாலும்
தலைதூக்கும்
மற்றுமோர் மீளும் அச்சம்
கடவுள் விட்டபடி !
ஓ காதலே !
ஒப்பந்த உறுதி வாசகம்
ஓதாமல்
பிணைத்துக் கொண்ட கரங்கள்
பிடித்திடக் கூடாது !
ஒருவருக் கொருவர் முத்தம்
தருதல் கூடாது,
நம்மிருவருக் கிடையே
உரியதாய் ஆகாத உறவில்
உதடுகள்
குளிர்ந்து போனால் !
உறுதி வாக்கொன்றை
நிறைவேற்ற
ஊழ்வினை முன்னறிவித்த
களிப்பினைக்
காதலன் இழக்க நேர்ந்தால்
காதலே பொய்யாகும்
அப்போது !
************
Poem -36
Sonnets from the Portuguese
By: Elizabeth Browning
When we met first and loved, I did not build
Upon the event with marble. Could it mean
To last, a love set pendulous between
Sorrow and sorrow? Nay, I rather thrilled,
Distrusting every light that seemed to gild
The onward path, and feared to overlean
A finger even. And, though I have grown serene
And strong since then, I think that God has willed
A still renewable fear . . .O love, O troth
Lest these enclasped hands should never hold,
This mutual kiss drop down between us both
As an unowned thing, once the lips being cold.
And Love, be false! if he, to keep one oath,
Must lose one joy, by his life’s star foretold,
**********
அன்பு நண்பர்களே,
வணக்கம்.
பழமை, இனிமை, சொல்வளம், திருந்திய பண்பட்ட இலக்கிய இலக்கணங்கள், பிற மொழிகளின் துணை வேண்டாத தனித் தன்மை முதலியன நம் தமிழ் மொழியின் அரிய பண்புகளாம். தமிழின் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை. சங்க இலக்கியம் என்பது ஒரு சுரங்கம். நாம் தோண்டும் ஆழத்திற்கு ஏற்றவாறு அதன் இன்சுவை அமுதை அள்ளிப் பருக இயலும்! சங்கப் பாடல்களில் கற்பனைகள் இருந்தாலும் அவை வரம்பு மீறிய உயர்வு நவிற்சிகளாக மாறுவதில்லை என்பதும் தனிச்சிறப்பு. இத்தகையப் பாடல்களை பதம் பிரித்து படித்து, பொருள் விளங்கிக்கொள்ள சில நேரங்களில் சிரமம் ஏற்படுவதும் உண்டு. இதனைப் போக்கும் விதமாக கவிஞர்
திரு ருத்ரா அவர்கள் “ஓலைத்துடிப்புகள்” என்ற தலைப்பில் நம் சங்கத்தமிழ் அலைவிரிப்பை அணிவகுப்பாக்கி நமக்கு எளிமையாக அளிக்கப் போகிறார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். செங்கீரன், ருத்ரா என்ற பெயர்களில் நூற்றுக் கணக்கான கவிதைகள் எழுதியுள்ளார். ருத்ரா எனும் இ.பரமசிவன் ஆகிய இவர் பிறந்தது நெல்லைச்சீமையில் தாமிரபரணிக் கரையில் உள்ள கல்லிடைக்குறிச்சி. ‘சங்க இலக்கியத்தில் மிகவும் ஆர்வம் கொண்டு சங்க நடைச்செய்யுள் போன்று பாடல்கள் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்கிறார். இனி தொடர்ந்து பிரதி புதன் தோறும் கவிஞர் ருத்ரா அவர்களின் சங்கத் தமிழ் பாடலும் அதனை எளிமையாகப் புரிந்து கொள்ளும் விதமாக விளக்கமும் காணலாம். வாருங்கள் நண்பர்களே, சுவையோடு சங்கத் தமிழ் சொல் வளங்கள் கற்போம்!
அன்புடன்
பவள சங்கரி
ஓலைத்துடிப்புகள்
தொண்டை சுற்றிய குவளை
===============================================
நுண்சிறைத்தும்பி நுரைவிரித்தாங்கு
நுவலும் அதிர்வின் நரல் மொழி உய்த்து
கொண்டல் நாடன் கொழு நிழல் தழீஇ
தொண்டை சுற்றிய குவளையன்ன
தொடிநெகிழ் பசலை நோன்ற காலை
நோக்கும் நெடும் தேர் மணி இமிழோசை.
பொழிப்புரை
========================================
நுண்சிறகுகள் நுரை படர்ந்தாற்போல் அதிர
அதனுள் ஒலிக்கும் காதலனின் இன் சொல் உற்றுக்கேட்டு
மகிழ்கிறாள் காதலி.காதலன் நாட்டின் மழை மேகம் மறைக்கும்
அடர்ந்த நிழலில் அவன் நினைப்பில் தழுவிக்கிடக்கும் உணர்வை
அடைகிறாள்.தொண்டைக்கொடி சுற்றிய குவளை மலர் போல
அவன் தழுவலுக்கு ஏங்கி அவள் “தொடி” நெகிழும் வண்ணம்
பசலையுற்றாள்.அப்போது ஏக்கத்தோடு காதலனின் தேர் மணி ஒலிக்கும் ஓசையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
சங்க நடைக் கவிதையில் இது காதலின் எழில் பொங்கும் ஒரு காட்சி.
======================================================
சந்திப்போம்
சுரேஜமீ
நம் கல்விமுறையில் மாற்றம் வேண்டுமென்பது, பெரும்பான்மையினரின் கருத்தாக, இற்றை நாட்களில் இருக்கிறது. இதற்குப் பின்னனி என்ன என்று யோசித்தால், வாழ்வியல் சார்ந்த கல்வியாக, தற்போதைய கல்வி இல்லை என்பதும், ஒரு தேர்விற்காகத் தன்னைத் தகுதிப் படுத்திக் கொள்ளும் மனனம் சார்ந்த ஒரு புத்தக அறிவை மட்டுமே தருகிறது என்பதும், குற்றச்சாட்டாக இருக்கிறது.
கல்வி என்பது சிந்தனை ஆற்றலை, பகுத்து உணரும் அறிவை, சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்கும் தன்மையை, வாழ்க்கை நெறியை உய்விக்கும் கோட்பாடுகளை, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கொடுக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது!
ஆனால், நாம் படித்ததை, நம் வாழ்க்கைக்குப் பயன்படுத்தி, நம்மைச் செதுக்கினோமா? என்றால், அதற்கான விடையைத் தேடும் சமுதாயமாக, வளரும் சமுதாயம், இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது!
ஒரு பழமொழி நாம் அனைவரும் அறிந்ததே.
‘ஐந்தில் வளையாதது; ஐம்பதில் வளையாது! என்பது;
ஆகவே தான், நல்ல பல கருத்துக்களை, மிகவும் சுருக்கமாக, குழந்தைகளுக்கு, ஆரம்பக் கல்வியில் வைத்தார்கள்! ஆனால், அதன் ஆழத்தைப் பெற்றோர்கள் உணர்த்தினார்களா? என்பதில் தான், கல்வியின் மேம்பாடு இருக்கிறது!
இன்றைக்கு ஆங்கில வழிக் கல்விதான், உலகத்திலேயே சிறந்தது என்ற நினைப்புதான், ஆதாரக் கல்வியான தாய்மொழிக் கல்வியின் சிறப்பைக் கெடுக்கிறது.
ஆங்கிலம் என்பது ஒரு அன்னிய மொழி அறிவு! அவ்வளவே! அது சூழலால் ஏற்படுவது. மொழி அறிவு என்பது, ஒரு புரிதல் சாதனம்! அதுவே, அறிவின் உச்சமாகிவிடாது!
தாய்மொழிக் கல்விதான் தரத்தின் அடையாளம்!
அதற்கேற்ப, தமிழ்க் கிழவி ஔவையாரின் சில பாடல்களும், அதன் கருத்துக்களும், வளரும் சமுதாயத்திற்காகப் பகிர்வதில் பெருமிதம் கொள்கிறேன்!
கல்வியின் சிறப்பு என்ன? ஏன் படிக்க வேண்டும்? படித்தால் தான் வாழ முடியுமா? என்ற கேள்விகளுக்கு, ஔவையார் என்ன சொல்கிறார் என்று சிந்தியுங்கள்!
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் – மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு!
இதைவிடப் பிஞ்சு உள்ளங்களில், கல்வியின் சிறப்பைச் செம்மையாகச் சொல்ல இயலுமா? ஆகக், குழந்தைகள் சிந்திக்க வேண்டுவது, நாம் ஒரு தேசத்தில் மட்டுமே இருக்க வேண்டுமா? அல்லது, மன்னனினும் உயர்வாகக் கற்றவராக இருந்தால், சென்ற இடமெல்லாம் சிறப்புப் பெறமுடியும்!
இன்றைக்கு மக்களாட்சியில், ஆட்சி பீடத்தில் இருப்பவர்களும் பல தேசம் போகலாம்; ஆனால், கற்றவரின் துணையில்லையேல், ஆட்சியாளருக்கே அவலமாகிவிடும்!
ஆதலால், கல்வியின் சிறப்பு எத்தகையது என்பதை அறிய, இதைவிட உதாரணம் வேறில்லை!
அடுத்து, நாம் யாரோடு நம்மைத் தொடர்பு படுத்திக் கொள்ளல் அவசியம் என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார் அடுத்த இரண்டு பாடல்களில்!
நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே!
அப்படி, நல்லவர்களோடு நட்பு கொள்ளும்போது, நமக்கு என்ன கிடைக்கும்?
இந்தப் பாடலைக் கவனியுங்கள்!
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை!
நாம் கழனியிலே நெல்லுக்குத்தான் நீர் பாய்ச்சுகிறோம்; ஆனால், அது புல்லுக்கும் போகிறதல்லவா? அதுபோல, இந்த உலகம் உய்வதற்குத் துணையாக இருப்பவர்கள் நல்லவர்கள். ஆதலால், அவர்களுடைய நட்பு அவசியம் என்பதை, அவர்களால்தான் அனைவருக்கும் பயன் விளைகிறதென்பதை, மழையோடு ஒப்பிட்டுச் சொல்கிறார்.
அடுத்து உறவு எப்படி இருக்க வேண்டும்?
இன்றைக்கு அவசியமானது நல்ல உறவுகள், நமக்குத் துணையாக இருப்பதுதான். நமக்குக் கிடைத்த உறவுகள், நம் பிள்ளைகளுக்கு வாய்ப்பதில்லை. அதற்குக் காரணம், நாம் கூட்டுக் குடும்பங்களில் வாழ்ந்ததும், நம் உடன் பிறந்தோர் ஒன்றுக்கு மேல் என்பதும்!!
ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலில், பொருளாதார ஏற்ற, இறக்கங்களில், தனிக்குடித்தன வாழ்வும், பெரும்பாலான இல்லங்களில் உறுப்பினர்கள் குறைவு என்பதும் கண்கூடு. ஆக, உறவு முறைகள் அவ்வளவாக பலமாக இருப்பது இல்லை என்பதும், அதன் அவசியத்தை இன்னும் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இவர் கூற்றுப்படி ஒரு உறவு உங்களுக்குக் கிடைத்தால், நிச்சயம், நீங்கள் கொடுத்து வைத்தவரே!
அற்ற குளத்தில் அறும்நீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் – அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு!
நீர்ப் பறவைகள் எப்படி நீர் வற்றியவுடன், அடுத்த நீர் நிலையைத் தேடி ஓடுகிறதோ, அவ்வாறில்லாமல், நீர்த்தாவரங்கள், நீரோடு சேர்ந்து தானும் மடிவதுபோல,
உறவுகள் நம் துன்பத்திலும் தோள் கொடுக்கக் கூடிய உறவுகளாகப் பெற்றவர்கள் வாழ்க்கை சொர்க்கத்திற்கு ஒப்பானது!
இன்னும் எவ்வளவோ சான்றுகளை, நீதிகளை அடுக்கலாம். ஆனால், நாம் எந்த அளவு ஒரு நூலைத் தனதாக்கி, அதனை நாம் சிந்தையில் ஏகி, அதன் பயனை, வளரும் சமுதாயத்திற்கு ஏற்ற வகையில், எடுத்து இயம்புவோமேயானால்,
ஒரு உறுதியான சமுதாயத்தை, உலகுக்கே வழிகாட்டும் சமுதாயத்தை, உன்னத நெறி போற்றும் சமுதாயத்தை, நம்மால் உருவாக்க முடியும்!
செய்வோமா?
-வேதா. இலங்காதிலகம்
நாலடியார்
அதிகாரம் 25 – அறிவுடைமை
பகைவர் பணிவிட நோக்கித் தகவுடையார்
தாமேயு நாணித் தலைச்செல்லார் காணா
யிளம்பிறை யாயக்காற் றிங்களைச் சேரா
தணங்கருந் துப்பி னரா. (நாலடி: 241)
அணங்கு – வருத்தம் செய்யும், அரு – கொடிய, துப்பின் – வலியுடைய, அரா – பாம்பு, இளம்பிறை – இளையபிறைச் சந்திரனாயிருக்கும் போது, திங்களை – சந்திரனை, சேராது – வருத்துவதற்கு நெருங்காது, (அது போல) தகவு உடையார் – தகுந்த அறிவுடையார், பகைவர் – தம்முடன் மாறுபட்டவர், பணிவு இடம் நோக்கு – தாழ்ந்து இருக்கும் காலத்தைக் கவனித்து, தாமேயும் நாணி – தம்மில் தாமே வெட்கமுற்று, தலைசெல்லார் – அவரை அடக்குதற்கு எதிர்த்துச் செல்லமாட்டார், காணாய் – இதனை அறிக.
எனது வரிகள்:-
முழுமதிச் சந்திரனையே என்றும்
பழுதுடை கிரகணம் பற்றும்
பிறை நிலாவை அதன்
குறையோடு கிரகணம் பற்றா
இவ் விதியாய் எதிராளியின்
திடமற்ற நிலைப்பாடில் பலவீனரை
அடக்கார் எதிர்க்கார் தம்முள்
குறுகும் நிறை மதியாளர்.
-பாவலர் கருமலைத்தமிழாழன்
பூந்தென்றல் வீதியுலா
புறப்பட்டு வருவதற்கே
ஏந்திவரும் பல்லக்கை
எதிர்பார்த்தா காத்துளது ?
காரிருளை மாய்ப்பதற்குக் 
கதிரவன்தான் காலைவர
தேரினையா எதிர்பார்த்துத்
தெருமுனையில் காத்துளது ?
கண்களினைப் பறிக்கின்ற
கார்மேக மின்னல்தான்
மின்சாரம் எதிர்பார்த்தா
மின்னுதற்குக் காத்துளது ?
தானிறங்கி வருவதற்குத்
தரையிருந்து குழாய்இணைப்பு
வானிற்கு வருமென்றா
வளமழையும் காத்துளது ?
சாதனைகள் புரிவதற்குச்
சந்தர்ப்பம் வாய்க்குமென்று
சோதனைகள் செய்யாமல்
சோம்பலுடன் இருப்பதுவோ ?
வாய்ப்புகளோ உனைத்தேடி
வரவேற்பு கொடுக்காது
வாய்ப்புகளை உருவாக்கு
வானம்உன் கைகளுக்குள் !
கவிஞர் காவிரி மைந்தன்

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் என்பது எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கையில் மற்றுமொரு மைல்கல் மட்டுமல்ல! தமிழ்த்திரை வரலாற்றிலும் அந்தப்படம் மறக்க முடியாத ஒன்று! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை அழைத்து.. இந்தப் படத்திற்கான இசையமைப்பிற்கு முதல் தொகையை வழங்கிய புரட்சித்தலைவர்.. முழுக்க முழுக்க பாடல்களின் வெற்றியை எதிர்பார்க்கிறேன்! பத்துப் பாடல்கள்.. அனைத்தும் முத்துப் பாடல்களாக வரவேண்டும் என்று பணிக்க.. மெல்லிசை மன்னரும் தன் திறம் முழுக்கச் செலுத்தி ஒவ்வொரு பாடலாக உருவாக்கித் தருகிறார். காலை முதல் மாலைவரை நடந்திடும் அப்பணியை மாலையிலே வந்து கேட்டு கருத்து வழங்கிய மக்கள் திலகம்.. ஒவ்வொரு பாடலையும்.. எதிர்பார்த்த அளவு சரியாக வரவில்லை.. என்று சொல்ல, மெல்லிசை மன்னரோ.. சரி.. அப்படியென்றால் நாளைக்கு இதே பாடலுக்கு வேறு மெட்டுக்கள் அமைத்துக் காட்டுகிறேன் என்பாராம். எம்.ஜி.ஆரோ.. சரி.. விடுங்க.. அடுத்த பாடலையாவது இன்னும் நல்லா பண்ணுங்க என்று விடைபெறுவாராம்.
அப்படியே படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் எம்.ஜி.ஆர். அவர்களின் தினசரி கருத்தின்படி பரவாயில்லை
ரகமாகவே அமைந்திட மெல்லிசை மன்னருக்கு.. மனம் திருப்தியாக இல்லை.. எனவே கடைசிப் பாடலை இசையமைத்துவிட்டு.. இதோ பாருங்க.. இந்தப் பாடலும் உங்களுக்கு திருப்தியாக இல்லையென்றால்.. நான் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்.. நீங்கள் வேறொரு இசையமைப்பாளரை வைத்து இசை அமைத்துக் கொள்ளுங்கள் என்று எம்.ஜி.ஆரிடம் சொல்ல.. கடைசிப்பாடலையும் கேட்டபின் பொன்மனச் செம்மல் புகன்றிட்ட பாராட்டுகள் எத்தனை தெரியுமா? எம்.எஸ்.வி.. உங்கள் இசையை வேறு எவரும் குறை சொல்லக் கூடாது.. நான் மட்டும்தான் அந்த உரிமை பெற்றவன்.. மேலும் ஒவ்வொரு பாடலையும் நீங்கள் வித்தியாசமான முயற்சி செய்து புதுமையாக செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நான் அப்படி நடந்துகொண்டேன் என்றார். அது தவிர.. உலகம் சுற்றும் வாலிபன் திரைப்பாடல்கள் அனைத்தும் காலங்களை வென்று நிற்கும் கானங்களாகும் என்றே அன்றே உறுதிபட தெரிவித்து உள்ளத்து மகிழ்ச்சியை வெறும் வார்த்தைகளால் வழங்காமல், குறிப்பிட்ட தொகைக்கு மேலே பல மடங்கு மெல்லிசை மன்னருக்கு வழங்கிய வள்ளலின் இசை ரசனை என்றைக்காவது சோடை போனதுண்டா?
வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.. என்கிற முதல் பாடல் முதல் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் தமிழ்பேசும் மக்கள் அனைவரின் விருப்பப் பாடல்களானதை மறுக்க முடியுமா? இதோ பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ .. வாலிபக் கவிஞர் வாலியின் கைவண்ணம்.. மக்கள் திலகத்தோடு தாய்லாந்து நாட்டு கதாநாயகி இணைசேர.. கற்பனை வானம் திறக்கிறது.. கன்னித்தமிழ் மணக்கிறது.. இன்பத்தேன் வழிகிறது.. இதயம்வரை நனைகிறது.. அதற்கு முன்னரோ.. பின்னரோ.. வந்த எந்த இசையோடும் ஒப்பிட்டுப் பாருங்கள்.. மெல்லிசை மன்னருக்கு நிகர் மெல்லிசை மன்னரே என்று நிரூபிக்கும் தரமான இசை.. மேலைநாட்டு சங்கீதத்தை தன் கற்பனையாலே கேள்வி ஞானத்தாலே மீட்டெடுத்துத் தருகின்ற வித்தைக்காரர்.. இதைவிட சிறந்ததொரு இசை உலகம் சுற்றும் வாலிபனுக்கு கிடைத்திடுமா?
டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா குரல்களில் அமைந்த இன்னிசை ஸ்வரமாலை..
இதோ.. மெல்லப் பேசும் கள்ளப்பார்வை ஜாதிப்பூவின் மென்மை..
பச்சைக்கிளி முத்துச்சரம்
முல்லைக்கொடி யாரோ……………
திரைப்படம்:உலகம் சுற்றும் வாலிபன்.
பாடியவர்:டி.எம்.சௌந்தரராஜன் பி.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள்: கவிஞர் வாலி
பச்சைக்கிளி முத்துச்சரம்
முல்லைக்கொடி யாரோ
பாவை என்னும் பேரில் வரும்
தேவன் மகள் நீயோ ?
பொன்னின் நிறம் பிள்ளை மனம்
வள்ளல் குணம் யாரோ
மன்னன் எனும் பேரில் வரும்
தேவன் மகன் நீயோ (பொன்னின்)
தத்தை போலத் தாவும் பாவை
பாதம் நோகும் என்று
மெத்தை போல பூவைத் தூவும்
வாடைக் காற்றும் உண்டு
வண்ணச்சோலை வானம் பூமி
யாவும் இன்பம் இங்கு
இந்தக் கோலம் நாளும் காண
நானும் நீயும் பங்கு
கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ
நானே தரும் நாளும் வரும் ஏனிந்த அவசரமோ (பச்சை)
பொன்பட்டாடை மூடிச்செல்லும் தேன்சிட்டோடு மெல்ல
நான் தொட்டாடும் வேளைதோறும் போதை என்ன
சொல்லகை தொட்டாட காலம் நேரம் போகப் போக உண்டு
கண்பட்டாடும் காதல் வேகம் பாதிப்பாதி இன்று
பள்ளிக் கூடம் போகலாம் பக்கம் ஓடி வா
கூடம்தனில் பாடம் பெறும் காலங்கள் சுவையல்லவா (பச்சை)
பல்லவி முதல் சரணங்கள் வரை பாடலில் இனிமை..இளமை.. புதுமை!!
–
கவிஞர் காவிரிமைந்தன்
நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்
பம்மல், சென்னை 600 075
தற்போது – அபுதாபி – அமீரகம்
00971 50 2519693
00971 50 4497052
kaviri2015@gmail.com
www.thamizhnadhi.com
-கவிஜி
உயிர் சுமந்து
திரியும்
இடைவெளியற்ற
மாற்றுச் சிந்தையில்
மற்றுமோர்
தீவுக்குள் தொலைவதைத் தவிர
வழியில்லை…
உடல் கொண்ட
பலம் முழுக்க
முதிர்ந்துபட்ட
கல்லடிகள்தான்…
உடைத்த கல்
உன் விழிக்குள் தூசியாகும்
உடைந்த கண்ணாடி
ஆனாலும் ஆயிரம்
முகங்கள் எனக்கு!
அத்துமீறி நுழையும்
காட்டுயானையைக் கேட்டு பார்…!
அத்திசை சொல்லும்
தாகம் – சுரண்டுபவள்
நீ என்கும்…!
பூக்கள் வியக்கும்
பிணமாகி, கிடப்பதில்தான்
பூர்த்தியாகிறது பயணம்
பாதம் நக்கும்
நாய் போல…!
நீ இல்லாத தேசத்திலும்
இனி நான் இருப்பேன்
இருத்தல் உனைக் கடந்த
என் சவத்தோடு!
-பாவலர் கருமலைத்தமிழாழன்
அடுக்கடுக்காய் நூல்களினை அடுக்கி வைத்தே
அழகுதனைப் பார்ப்பதிலே பயன்தான் உண்டோ?
மிடுக்கான பேழைக்குள் வரிசை யாக
மிளிர்கின்ற படிவைத்தால் அறிவா கூடும்? 
எடுக்காமல் எடுப்பாக வீட்டிற் குள்ளே
எழிலுக்காய் வைப்பதிலே மதிப்பா சேரும்?
கொடுக்காமல் புதைக்கின்ற பணத்தைப் போன்ற
கொடுமையன்றோ படிக்காமல் வைத்தி ருத்தல்!
வாங்கிவந்த நூல்களினைக் கருத்துக் கேற்ப
வகைபடுத்தித் துறைபிரித்து வைக்க வேண்டும்
பாங்காகத் தூசிதட்டிப் பூச்சி வந்து
பக்கங்கள் அரிக்காமல் காக்க வேண்டும்
பூங்காவில் தேன்தேடும் தேனீ போன்றுப்
புதுநூல்கள் கொண்டுவந்து சேர்க்க வேண்டும்
நீங்காத அன்புகாட்டிக் காக்கும் தாயாய்
நிறைநெஞ்சால் நாள்தோறும் பேண வேண்டும்!
உண்பதற்கு நேரத்தை ஒதுக்கல் போல
உரியநேரம் படிப்பதற்கும் ஒதுக்க வேண்டும்
பண்புகளைக் குழந்தைகட்குச் சொல்லல் போன்று
படிக்கின்ற பழக்கத்தைப் பதிக்க வேண்டும்
எண்ணத்தை அறிவுதனைக் கூர்மை யாக்கி
எப்போதும் துணைநிற்கும் நூல்கள் தம்மைக்
கண்போலக் காத்துநாளும் படிக்கும் போதே
கால்நிற்கும் துணிவுவந்து சிறக்கும் வாழ்வே !
-பா.ராஜசேகர்
இரவுப்பெண்
தலை சூடிய
மலரோ
அது நிலவு !
வளர்மங்கை
மனம் தேடிய
மலரும்
வனம் தினம்
தேடிவரும் வண்டோ
அது நான் !
கண் மீனது 
பெண் மானது
வெண் மேகங்களும்
தலை சாயும்
அவள் தேகம் !
மலர் மொய்க்கும்
வண்டுகளைப் போல
ஊர் கூடிவரும்
நீ மலர்சூடி
வரும்போது !
மழை
நீர் அருவி
மலை மேலிருந்து
தென்றலிடை
வளைந்து நீ வரும்
அழகில் நாணும் !
உன்
முன்னழகு
என் கண்களிலே
பூமி பந்தை
இரண்டு துடுண்டுகளாக
வெட்டி ஓட்டும் !
உன்
கட்டழகில் ஒட்டிக்கொண்ட
ஆடை தேனில்
ஊறச் சுளை
சுவைக்கும் !
காரிருளை
ஓர் பின்னலில்
ஊஞ்சல்
உன் கூந்தல் !
உன்
புன்னகையைச்
சுருட்டி கூந்தல்
முனையில் கட்டி
நீ நடந்து
வர அழகு!
கூந்தலாடும்
அசைவும்
கொள்ளை போகும்
மனசு !
கொல்லுதடி வயசு!!
-கவிஜி
உதிர்தலில்
இளவேனில் முன்பனி…
பகர்தலில்
முதுவேனில் பின்பனி…
காலம் சருகுகள்
மிதிக்கிறது
படாமல் படும்
பாதங்களில்
நான் மட்டும் கேட்கும்
மெட்டிச் சத்தம்…
துளியாய்த் தொலைந்த
காட்டுக்குள்
மரமாகி நிற்கிறது
நினைவுகள்…!
நிழல் மறையும்
நேரங்களில்
மீண்டும் மீண்டும்
உயிர்த்தலே
பெரும் சுவாசம்…!
மூடு மந்திரக்
கோட்பாட்டில்
சித்திரமாகி நிறைகிறது
உதிர்தலின் ஓர் இலை…!
அது நானாகி
யோசிக்கும் பிழையில்
என் காட்சி
வண்ணங்கள் தாண்டிய
என் மொழியில்…!
-துஷ்யந்தி, இலங்கை
வாழ்க்கைச் சக்கரம் இயங்க
வழிகாட்டியும் இதுவே…
வாழ்க்கைச் சக்கரத்தை முடிக்க
குழி தோண்டுவதும் இதுவே..!
அளவாய் உணவு கொடுக்க
உண்டு தினம் இன்பம்…
அளவுக்கதிமானால் தரும்
நமக்கே வீண் சோகம்..!
வறுமையின் நிறந்தனைக்
காட்டுவதும் இதுவே…
வாழ்வில் பிறர்க்குச் சேவையெனச்
செய்யவேண்டியதும் இதற்கே..!
ஈயாது சேர்ப்பான் பெரு
வயிறு கொண்டு இருப்பான்…
இறப்பின் பின் அவனோ
இடமில்லாது திரிவான்…!
நாடாளும் மன்னனுக்கும்
ஒரே அளவு பசிதான்…
நாட்டின் சிறு சேவகனுக்கும்
அதே அளவு பசிதான்..!
வீணான எண்ணம் கொண்ட
மனிதனுக்கே பிரிவினை…
பசியென்று வந்துவிட்டால்
வயிற்றுக்கில்லை வேற்றுமை…!
வாழ்க்கையில் உண்மைகள்
பலவுண்டு கேளுங்கள்….
வாழும்வரை நாமெல்லாம்
செய்யவேண்டும் பல சேவைகள்..!
-சுரேஜமீ.
இந்திய மண்ணின் இரண்டு இதிகாசங்கள் சொல்லும் நீதி, வாழ்க்கை இயம்பட வாழ வழிசொல்லும் ஒப்பற்ற காவியங்கள் என்பது யாவரும் அறிந்ததே!
அதை சொல்லும் விதத்தில், எவ்வகையிலும் சளித்தவர்கள் அல்ல நம் கவிஞர்கள்!
அதிலும் குறிப்பாக, கவிச் சக்ரவர்த்தி கம்பன், அயோத்தியா காண்டத்தில், மந்திரப் படலத்தில், ஒரு வாழ்த்துப் பா வைக்கிறான்.
அந்த விருத்தத்தில், கடைசி நான்கு வரிகளில், ஒரு காதையின் முழுக்கருத்தையும் சொல்லி விடுகிறான் என்பதை, என்னுடைய கோணத்தில் பார்க்க விரும்புகிறேன்.
இதோ அந்த பாடல் வரிகள்:
…….கூனும் சிறிய கோத் தாயும்
கொடுமை இழைப்பக் கோல் துறந்து,
கானும் கடலும் கடந்து, இமையோர்
இடுக்கண் தீர்த்த கழல் வேந்தை!
என்ன சொல்கிறான் கம்பன்? சிந்திப்போமா?
கூனியும், இராமனின் சிறிய தாயான கைகேயியும், செய்த கொடுமையின் விளைவால், அரசாள வேண்டிய இராமன், பட்டத்தைத் துறந்து, கானகம் ஏகிக், கயவர்களின் சூழ்ச்சியால், கட்டின மனைவி சீதையைப் பிரிந்து, ஆற்றொனாத் துன்பத்திற்கு ஆளாகி, அனுமனின் உதவியால், கடல் கடந்து, தன் இமைபோல இருக்கக் கூடிய மனைவி சீதாப்பிராட்டியை துன்பத்திலிருந்து மீட்க, இழிசெயல் புரிந்த இராவணனை அழித்து, வெற்றியை ஈட்டித் தன் மனைவியை மீட்ட வேந்தன் இராமன் என்று
இரத்தினச் சுருக்கமாக, ஈரிரண்டு வரிகளில் யாரால் சொல்ல முடியும்?
கவிஞனால்தான் முடியும்! காலத்தால் அழிக்க முடியாத கருத்தைச் சொல்வதற்கு!
வார்த்தைகள் இல்லையே வெண்பா விளம்பிட,
நீர்த்தேனே நின்வரைவை நான்கண்டு, -பார்த்தனின்
சாரதி வாய்குவித்தல் சங்காபுல் லாங்குழலா!
பாரதம்முள் வாத்சல்யம் பூ ….கிரேசி மோகன்….