–யோகாவினால் பொங்கிவரும் ஆழ்மன சக்தி….

 &&&&&&&&&&&&&&&&&&&&&&

yoga

கவியோகி வேதம்

………….. நம் ஒவ்வொருவரிடமும் ஆழம்காணமுடியாத ஞாபக சக்தி, அபாரமான  ஆராய்ந்தறியும் அறிவு முதலியவை நமது  ’ஆழ்மன’த்துள்ளே புதைந்து கிடக்கின்றன. அது இறைவன் நமக்குக்கொடுத்த பெரிய வரப்ரஸாதம். இதனை நாம் நம் தினசரி தீவிர யோகப்பயிற்சியாலும், ஒழுங்கான தியானத்தாலும்  நிச்சயம் தோண்டி வெளியே எடுக்கலாம்.

 இதில் நல்ல வெற்றி பெற்ற என் ஒரு நண்பர்.. ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன். அவர் மலேஷியாவிலிருக்கும் என் அன்பர்டாக்டர்  திரு.ஜேபீ{ஜெயபாரதி} அவர்கள்.அவர் தற்போது இதையெல்லாம் தம் அகத்தியர் இணையத்தில் {அகத்தியர் யாஹூ க்ரூப்ஸ்}வெளிப்படுத்திவருகிறார்.அவர் அடிக்கடி சொல்லுவார்.வேதம்! என் முன்னோர்கள் செய்த பாக்கியம். எனக்கு இந்த யோக முறைகளைக் கற்றுத்தந்த  ‘வேலவனார்’  அவர்கள் குரு வாக அமைந்ததும்,அவர் மூலம் என் ஆழ்மன சக்திகளை வெளியே தோண்டி எடுத்ததும்.. இவற்றை நான் பயன்படுத்தி எவ்வளவோ பேருக்கு இலவசமாய் நல்ல உதவிகள் செய்திருக்கிறேன் என்று..

 இப்போது சொல்லுங்கள்!அந்த விலைமதிப்பில்லாத சக்திச்சுரங்கத்தை நாம் ஒவ்வொருவருவரும் தோண்டித்தோண்டி எடுத்துப்பயன்

 படுத்துகிறோமா? என்றால் அதுதான் இல்லை. சிறுவயதுமுதல் நம் குழந்தைகட்கு சுமார் மூன்று வயதுமுதலே தேவாரம், திருவாசகம்,சில குறிப்பிட்ட மந்திர ஸ்லோகங்கள், அருணகிரி நாதரின் திருப்புகழ்  முதலியவற்றை மனப்பாடமாகச் சொல்லக் கற்றுக் கொடுத்துப் பாருங்கள்! குறிப்பிட்ட 12 வயதுக்குள் அக்குழந்தைகளின் ஞாபக சக்தி,தமிழ்

 இலக்கியம் கற்றுக்கொள்ளும் ஆர்வம் எல்லாமே ஆச்சர்யப்படும் விதமாக வளரும்.

 ஒரு குழந்தையும் இந்த விஷயத்தில் குறைந்தோ, அல்லது மக்காகவோ இருக்காது.

      …..  இதை என் பையனிடம் முன்பே சொல்லிவைத்திருந்தேன். ஆகவே இதைப் பரீட்சித்துப்பார்க்கும் விதமாக( அவன் நியூஜெர்ஸியில் இருக்கையில்) அவனது மகனை(என் பேரனை) ஸ்கூல் நேரம் முடிந்து மாலை 6 முதல் 7 மணி வரை பக்கத்திலுள்ள ஒரு சம்ஸ்கிருத டீச்சரிடம்( சிவாநந்தாவின் சம்ஸ்கிருதி பவுண்டேஷன்) வடமொழி ஸ்லோகங்கள், ஒவ்வொரு பகவானுக்கும் உரிய மந்திரங்கள், பகவத் கீதை முதலியவற்றைக் கற்க ஏற்பாடு செய்தான். வீட்டிலோ என் மருமகள் பாரதியாரின்

 சில பாடல்களைக் கற்றுக்கொடுத்தாள்.ஆச்சர்யம்! ஒரே வருடத்தில்

 என் பேரன் எல்லாவற்றையும் தலைகீழ்ப்பாடமாகச்  சொல்வதோடு இன்னும்  இந்த10-வது வயதிலும், ஒரு வரி கூட மறக்காமல் சொல்கிறான். காரணம் என்னவெனில் குழந்தைப்பருவத்திலேயே விளையாட்டோடு விளையாட்டாய் ஆழ்மன சக்தியும் மேம்படுகிறது. வளர்கிறது.மனத்தில் குப்பைகள் சேர்வதில்லை. தேவையில்லாத எண்ணங்கள்  அவைகளை நெருக்குவதில்லை.அப்படியே சின்னச்சின்னக் கோபம், பிடிவாதச் சொற்களை  அவர்கள்  வெளிப்படுத்தினாலும்  அடுத்த நிமிடம் சமாதானமாகி,  சொற்களை, எண்ணங்களை மறந்துவிடுகின்றன.  பெரியவர்களைப்போல்(தாய் தந்தை?) ஆழ்மனம் வரை அவற்றைக்கொண்டு செல்வதில்லை. திரியாத பால் போல் குழந்தை மனம் தெளிவாக இருக்கிறது.அதாவது,உறவினரும், பெற்றோரும் அவற்றைக்கெடுத்துக் குட்டிச்சுவராக்காதவரை! கவிஞர் புலமைப்பித்தன் பாடினார்..-

    என்ன- பால்  மனமடீ உனக்கு!-குழந்தாய்!

       .. எண்ணி வியக்கின்றேனடி!

   தின்னும் பொருளை உன் அண்ணன்-நீ

     .. திகைக்கும்படிப் பிடுங்கிடினும்,

   மின்னலெனச் சண்டை போடுகிறாய்!-படு

      ..வேகமாய்க் கத்தியே திட்டுகின்றாய்!

  பின்பு வேறோர் பண்ட(ம்)உன் கைவந்தால்,-வாய்

 …. பிடித்துக்  கடித்(து)அவன் கைவைப்பாய்!

 என்ன பால்மனமடீ!..உனக்கு!!

 

.. எவ்வளவு அழகிய பாடல் பாருங்கள்! இதுதான் குழந்தை மனம். அதில் கல்மிஷம்  இல்லை; தீராத வன்மம் இல்லை.நிலைத்த கோபமோ பொறாமையோ இல்லை.

 அதனால்தான் ஆராய்ந்து  சொல்கிறேன்.குழந்தைகளின் வெளிமனமும் உள்மனமும்பிரகாசமாகவே இருக்கிறது.ஆழ்மனமோ அற்புத சக்தி படைத்ததாக இருக்கிறது.

 பெற்றோர்கள்தாம் அதனை முதலிலேயே உணர்ந்து மூன்று வயது முதல் திருக்குறள்,திருவாசகம்,பிரபந்தங்கள் முதலியனவற்றை அவர்கட்குக்  கற்றுக்கொடுக்க ஒரு ஏற்பாடு செய்யவேண்டும்.

    ..நம் (அவ்வை!)பாட்டிகள் சொல்லவில்லையா? ‘ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையுமோ?’.. ஆம்.. வயது ஏற ஏற ஞாபக சக்தி குறைகிறது.காரணம், தேவைஇல்லாத அசட்டு சினிமாப்  பத்திரிகைகள், சினிமா நடிகைச்  சமாச்சாரங்கள்,,கணினியின்  மனம் கெடுக்கும் விளையாட்டுகள்,  அனாவசியக் கோபம், பொறாமைகள், கவலைகள்.. போன்ற குப்பைகளை  மனத்துள்ளே போட்டு பால்போன்ற மனத்தைத் திரித்துவைக்கின்றோம். ஆழ்மனம் தெளிந்து அருவிநீர்போல்  இருக்கும்வரை ஞாபக சக்தியும் பெருகி, எத்தனையோ பழம்பாடல்கள், கம்பன் அமுதம், காப்பியங்கள் இவற்றை மனப்பாடமாகச் செய்தாலும் அப்படியே நினைவில் நின்று சொற்பொழிவுக்கும், சொற்ப ஒழிவு இன்றிச் செய்யும் கட்டுரைக்கும் நல்ல துணையாய் நிற்கும்.

     என் நண்பன் எழுத்தாளர் பாலகுமாரன் தம் எத்தனையோ கட்டுரைகளில் சொல்லியிருக்கிறார்.தம் அன்னையே தனது எழுத்தின் பிரகாசத்திற்குக் காரணம் என்று.ஒரு பள்ளியில் டீச்சராக இருந்த அவர் அன்னை தினமும் இரண்டு தேவாரப்பாடல், பத்து  திருக்குறள், ஒரு திருவாசகம் இவற்றை சரியாக ஒப்பிக்காவிட்டால் இரவுச் சோறு போடமாட்டார்களாம். தாமும் துணை நின்று ஒவ்வொரு பாடலின் முழுப்பொருளும் மிக ருசிகரமாகச் சொல்லிகொடுத்ததால் ஆர்வத்துடன் எல்லாவற் றையும்  சீக்கிரமே மனப்பாடம் செய்தாராம்.தாயும் மிக சந்தோஷமடைந்து அதிகம் தமிழ்ப்பாடல்களை ஒப்பித்தால் அவ்வப்போது ஸ்பெஷல் தின்பண்டங்களும் பாலகுமாரனுக்குச் செய்துதந்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவாராம்.அவர் அன்றோ சிறந்த அன்னை!

 ….இப்படி மனப்பாடம் செய்ததால் சரியான உதாரணங்கள் காட்டி இப்போதும் அவரால் சிறந்த சித்தர்போல் சொற்பொழிவாற்றமுடிகிறது. என் இன்னொரு நண்பர்( திருப்புகழ்ச் செம்மல்) மதிவண்ணனும் அப்படித்தான். சிறுவயதுமுதலே அருணகிரியார் பாடல்களினால் கவரப்பட்டு உரிய சந்தத்தோடு மனப்பாடம் செய்தவர்.

 பள்ளியில் படிக்கும் போது அவர் அருகில் குமுதம், பேசும்படம் போன்ற அநாவசியஏடுகளைப் பிறர்படிக்கத்தூண்டினாலும்,மறுத்துவிடுவாராம்.திருப்புகழே எனக்குச்

சோறுபோடும், உயிர்வளர்க்கும் தெய்வம் என  என் அன்னையும், அண்ணனும் சொல்லியுள்ளார்கள்..ஆகவே அசுத்த ஏடுகளைச் சிந்தையாலும் தொடேன் என்பாராம்.

       ..  ‘ கசடு அறக் கற்க’ என என் தமிழ் ஆசான் திருவள்ளுவர்

 சொல்லியபடி நன்றாகத் தேர்ந்து (கசடு அற= குற்றமற்ற, உள்ளத்தில் தீய எண்ணம் விளைவிக்காத) நல்ல தமிழ் நூல்களையே கற்றுச் சிறந்த பேச்சாளனாக விளங்குவேன்!”-

 என்று பல நண்பர்களிடம் சவால் விட்டு அதில் ஜெயித்தும் காட்டி இருக்கிறார். இன்றும் அவர் சுமார் இரண்டாயிரம்  கம்பன் பாடல்களையும், ஆயிரம் திருப்புகழையும் இரவில் எழுப்பிக் கேட்டாலும் தட தட என அருவிபோல் கொட்டுவார். இதற்கு அவர் காரணமாகச் சொல்வது சிறிது நேர தியானமும்,தேகத்தையும், மூளையையும், நல்ல அளவில் பேணி வளர்த்ததும் தான் !..என்பார்.

 அவரது நினைவாற்றலில், சொற்பொழிவுத்திறனில் வியந்துபோய் மும்பை, கொல்கத்தா, மலேசியா, ஸ்ரீலங்கா அன்பர்கள் இன்றும்அவரைப்

 பல இடங்களில் தொடர்ச்சொற்பொழிவுக்குக் கூப்பிடுகிறார்கள். இதற்கெல்லாம்என்ன காரணம்? அந்தச் சிறுவயதின் தெளிந்த ஆழ்மனச் சக்தியை மதிவண்ணன் அவர்கள் மிகச்சரியாகப் பயன்படுத்தியமையே. ..

         இப்போதும் சொல்லுவார் என்னிடம். வேதம் ஸ்வாமீ!!  சிறு வயது முதல்நான் கண்ட கண்ட புத்தகங்களைப் படிப்பதை வெறுத்தவன். என் ஐந்து வயதுமுதல் இன்றுவரை தவறாமல் அருணகிரிநாதரின் புயவகுப்பு, வேல்வகுப்பு, சீர்பாத வகுப்பு  இவற்றின் பாடல்களைக் கண்மூடிச்சொல்லியபிறகே தூங்கப்போவேன். அதுவே  ஒரு பழக்கமாகிவிட்டது வேதம்! ஏன் எனில் இவற்றின்மூலம்,

 எனக்கு அருணகிரிநாதர் என் வாழ்வுக்கும்,வருமானத்திற்கும் போட்ட பிச்சை! ”–என மிக நெகிழ்ந்து கண்ணில் நீர் கோக்க  ஒரு பரவசமாய்ச் சொல்வார்!இதனால்இன்றுவரை அவரது ஞாபக சக்தியும், தமிழில் ஆராயும் அறிவும்ஆழ்மனச் சக்தியும் வளர்ந்துகொண்டே போகிறது…

 …  சுரங்கம் தோண்டி வைர  ‘ முதல்’எடுக்கின்ற சொக்கத்தங்கம் ஐயா நீர்! ’

என்று நான் அவரைச் சிரிப்போடு கிண்டல் செய்வேன்!  மனமாரத் தழுவிக்கொள்வேன்..இப்படி ஆழ்மனச்சக்தியை வளர்த்துவரும்  நண்பர் மதிவண்ணனின் சொல்லின் அற்புதத்திறன்,பாட்டுத்திறன் இவற்றால்  எத்தனை எத்தனை  நண்பர்களின் சிக்கலான வாழ்வு சீர் அடைந்துள்ளது என நான் விவரித்தால் நீங்கள் அசந்துபோவீர்கள்..(தொடரும்)-

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *