பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ..

0

கவிஞர் காவிரி மைந்தன்

akv
akv1உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் என்பது எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கையில் மற்றுமொரு மைல்கல் மட்டுமல்ல! தமிழ்த்திரை வரலாற்றிலும் அந்தப்படம் மறக்க முடியாத ஒன்று! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை அழைத்து.. இந்தப் படத்திற்கான இசையமைப்பிற்கு முதல் தொகையை வழங்கிய புரட்சித்தலைவர்.. முழுக்க முழுக்க பாடல்களின் வெற்றியை எதிர்பார்க்கிறேன்! பத்துப் பாடல்கள்.. அனைத்தும் முத்துப் பாடல்களாக வரவேண்டும் என்று பணிக்க.. மெல்லிசை மன்னரும் தன் திறம் முழுக்கச் செலுத்தி ஒவ்வொரு பாடலாக உருவாக்கித் தருகிறார். காலை முதல் மாலைவரை நடந்திடும் அப்பணியை மாலையிலே வந்து கேட்டு கருத்து வழங்கிய மக்கள் திலகம்.. ஒவ்வொரு பாடலையும்.. எதிர்பார்த்த அளவு சரியாக வரவில்லை.. என்று சொல்ல, மெல்லிசை மன்னரோ.. சரி.. அப்படியென்றால் நாளைக்கு இதே பாடலுக்கு வேறு மெட்டுக்கள் அமைத்துக் காட்டுகிறேன் என்பாராம். எம்.ஜி.ஆரோ.. சரி.. விடுங்க.. அடுத்த பாடலையாவது இன்னும் நல்லா பண்ணுங்க என்று விடைபெறுவாராம்.

அப்படியே படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் எம்.ஜி.ஆர். அவர்களின் தினசரி கருத்தின்படி பரவாயில்லைakv2 ரகமாகவே அமைந்திட மெல்லிசை மன்னருக்கு.. மனம் திருப்தியாக இல்லை.. எனவே கடைசிப் பாடலை இசையமைத்துவிட்டு.. இதோ பாருங்க.. இந்தப் பாடலும் உங்களுக்கு திருப்தியாக இல்லையென்றால்.. நான் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்.. நீங்கள் வேறொரு இசையமைப்பாளரை வைத்து இசை அமைத்துக் கொள்ளுங்கள் என்று எம்.ஜி.ஆரிடம் சொல்ல.. கடைசிப்பாடலையும் கேட்டபின் பொன்மனச் செம்மல் புகன்றிட்ட பாராட்டுகள் எத்தனை தெரியுமா? எம்.எஸ்.வி.. உங்கள் இசையை வேறு எவரும் குறை சொல்லக் கூடாது.. நான் மட்டும்தான் அந்த உரிமை பெற்றவன்.. மேலும் ஒவ்வொரு பாடலையும் நீங்கள் வித்தியாசமான முயற்சி செய்து புதுமையாக செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நான் அப்படி நடந்துகொண்டேன் என்றார். அது தவிர.. உலகம் சுற்றும் வாலிபன் திரைப்பாடல்கள் அனைத்தும் காலங்களை வென்று நிற்கும் கானங்களாகும் என்றே அன்றே உறுதிபட தெரிவித்து உள்ளத்து மகிழ்ச்சியை வெறும் வார்த்தைகளால் வழங்காமல், குறிப்பிட்ட தொகைக்கு மேலே பல மடங்கு மெல்லிசை மன்னருக்கு வழங்கிய வள்ளலின் இசை ரசனை என்றைக்காவது சோடை போனதுண்டா?

வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.. என்கிற முதல் பாடல் முதல் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் தமிழ்பேசும் மக்கள் அனைவரின் விருப்பப் பாடல்களானதை மறுக்க முடியுமா? இதோ பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ .. வாலிபக் கவிஞர் வாலியின் கைவண்ணம்.. மக்கள் திலகத்தோடு தாய்லாந்து நாட்டு கதாநாயகி இணைசேர.. கற்பனை வானம் திறக்கிறது.. கன்னித்தமிழ் மணக்கிறது.. இன்பத்தேன் வழிகிறது.. இதயம்வரை நனைகிறது.. அதற்கு முன்னரோ.. பின்னரோ.. வந்த எந்த இசையோடும் ஒப்பிட்டுப் பாருங்கள்.. மெல்லிசை மன்னருக்கு நிகர் மெல்லிசை மன்னரே என்று நிரூபிக்கும் தரமான இசை.. மேலைநாட்டு சங்கீதத்தை தன் கற்பனையாலே கேள்வி ஞானத்தாலே மீட்டெடுத்துத் தருகின்ற வித்தைக்காரர்.. இதைவிட சிறந்ததொரு இசை உலகம் சுற்றும் வாலிபனுக்கு கிடைத்திடுமா?

டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா குரல்களில் அமைந்த இன்னிசை ஸ்வரமாலை..
இதோ.. மெல்லப் பேசும் கள்ளப்பார்வை ஜாதிப்பூவின் மென்மை..

பச்சைக்கிளி முத்துச்சரம்
முல்லைக்கொடி யாரோ……………

திரைப்படம்:உலகம் சுற்றும் வாலிபன்.
பாடியவர்:டி.எம்.சௌந்தரராஜன் பி.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள்: கவிஞர் வாலி

பச்சைக்கிளி முத்துச்சரம்
முல்லைக்கொடி யாரோ
பாவை என்னும் பேரில் வரும்
தேவன் மகள் நீயோ ?
பொன்னின் நிறம் பிள்ளை மனம்
வள்ளல் குணம் யாரோ
மன்னன் எனும் பேரில் வரும்
தேவன் மகன் நீயோ (பொன்னின்)

தத்தை போலத் தாவும் பாவை
பாதம் நோகும் என்று
மெத்தை போல பூவைத் தூவும்
வாடைக் காற்றும் உண்டு
வண்ணச்சோலை வானம் பூமி
யாவும் இன்பம் இங்கு
இந்தக் கோலம் நாளும் காண
நானும் நீயும் பங்கு
கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ
நானே தரும் நாளும் வரும் ஏனிந்த அவசரமோ (பச்சை)

பொன்பட்டாடை மூடிச்செல்லும் தேன்சிட்டோடு மெல்ல
நான் தொட்டாடும் வேளைதோறும் போதை என்ன
சொல்லகை தொட்டாட காலம் நேரம் போகப் போக உண்டு
கண்பட்டாடும் காதல் வேகம் பாதிப்பாதி இன்று
பள்ளிக் கூடம் போகலாம் பக்கம் ஓடி வா
கூடம்தனில் பாடம் பெறும் காலங்கள் சுவையல்லவா (பச்சை)
பல்லவி முதல் சரணங்கள் வரை பாடலில் இனிமை..இளமை.. புதுமை!!


கவிஞர் காவிரிமைந்தன்
நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்
பம்மல், சென்னை 600 075
தற்போது – அபுதாபி – அமீரகம்
00971 50 2519693
00971 50 4497052
kaviri2015@gmail.com
www.thamizhnadhi.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.