அன்பு நண்பர்களே,

வணக்கம்.

oolaisuvadi

பழமை, இனிமை, சொல்வளம், திருந்திய பண்பட்ட இலக்கிய இலக்கணங்கள், பிற மொழிகளின் துணை வேண்டாத தனித் தன்மை முதலியன நம் தமிழ் மொழியின் அரிய பண்புகளாம். தமிழின் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை. சங்க இலக்கியம் என்பது ஒரு சுரங்கம். நாம் தோண்டும் ஆழத்திற்கு ஏற்றவாறு அதன் இன்சுவை அமுதை அள்ளிப் பருக இயலும்! சங்கப் பாடல்களில் கற்பனைகள் இருந்தாலும் அவை வரம்பு மீறிய உயர்வு நவிற்சிகளாக மாறுவதில்லை என்பதும் தனிச்சிறப்பு. இத்தகையப் பாடல்களை பதம் பிரித்து படித்து, பொருள் விளங்கிக்கொள்ள சில நேரங்களில் சிரமம் ஏற்படுவதும் உண்டு. இதனைப் போக்கும் விதமாக கவிஞர் SDC11588 (3)திரு ருத்ரா அவர்கள் “ஓலைத்துடிப்புகள்” என்ற தலைப்பில் நம் சங்கத்தமிழ் அலைவிரிப்பை அணிவகுப்பாக்கி நமக்கு எளிமையாக அளிக்கப் போகிறார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். செங்கீரன், ருத்ரா என்ற பெயர்களில் நூற்றுக் கணக்கான கவிதைகள் எழுதியுள்ளார். ருத்ரா எனும் இ.பரமசிவன் ஆகிய இவர் பிறந்தது நெல்லைச்சீமையில் தாமிரபரணிக் கரையில் உள்ள‌ கல்லிடைக்குறிச்சி. ‘சங்க இலக்கியத்தில் மிகவும் ஆர்வம் கொண்டு சங்க நடைச்செய்யுள் போன்று பாடல்கள் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்கிறார். இனி தொடர்ந்து பிரதி புதன் தோறும் கவிஞர் ருத்ரா அவர்களின் சங்கத் தமிழ் பாடலும் அதனை எளிமையாகப் புரிந்து கொள்ளும் விதமாக விளக்கமும் காணலாம். வாருங்கள் நண்பர்களே, சுவையோடு சங்கத் தமிழ் சொல் வளங்கள் கற்போம்!

அன்புடன்

பவள சங்கரி

ஓலைத்துடிப்புகள் 

தொண்டை சுற்றிய குவளை
===============================================

நுண்சிறைத்தும்பி நுரைவிரித்தாங்கு
நுவலும் அதிர்வின் நரல் மொழி உய்த்து
கொண்டல் நாடன் கொழு நிழல் தழீஇ
தொண்டை சுற்றிய குவளையன்ன‌
தொடிநெகிழ் பசலை நோன்ற காலை
நோக்கும் நெடும் தேர் மணி இமிழோசை.

 

பொழிப்புரை
========================================

நுண்சிறகுகள் நுரை படர்ந்தாற்போல் அதிர‌
அதனுள் ஒலிக்கும் காதலனின் இன் சொல் உற்றுக்கேட்டு
மகிழ்கிறாள் காதலி.காதலன் நாட்டின் மழை மேகம் மறைக்கும்
அடர்ந்த நிழலில் அவன் நினைப்பில் தழுவிக்கிடக்கும் உணர்வை
அடைகிறாள்.தொண்டைக்கொடி சுற்றிய குவளை மலர் போல‌
அவன் தழுவலுக்கு ஏங்கி அவள் “தொடி” நெகிழும் வண்ணம்
பசலையுற்றாள்.அப்போது ஏக்கத்தோடு காதலனின் தேர் மணி ஒலிக்கும் ஓசையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

சங்க நடைக் கவிதையில் இது காதலின் எழில் பொங்கும் ஒரு காட்சி.

======================================================

சந்திப்போம்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க