Year: 2016

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (212)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலுடன் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். பகலும், இரவும் மாறி மாறி வருவது போல, கோடையும், வசந்தமும் மாறி மாறி வருவது போல, இன்பமும், துன்பமும் மாறி மாறி வருவது போலத்தான் அரசியல் உலக மாற்றங்களும். 

    அரசியல் என்றால் என்ன? ஏதோ நாம் அறியாத எமக்குப் புரியாத ஒரு மந்திரமா? அரசியல்வாதிகள் என்று தம்மை அறிமுகப்படுத்தி அரசியலுக்குள் நுழைபவர்கள் அனைவரும் என்ன அதற்காகவே இறைவனால் சிருஷ்டிக்கப்பட்டுக் கையில் தாம் நினைத்தவுடன் அனைத்தையும் சரிசெய்துவிடும் மந்திரக்கோலைக் கொண்டு அனுப்பி வைக்கப்பட்டவர்களா?

    இல்லையே!

    அவர்களும் எம்மைப் போன்ற சாதாரண ஆசாபாசங்களுக்கும், உலக பந்தங்களுக்கும் ஆட்பட்ட மனிதர்களே! சமூகசேவை, மனிதர்களின் மேம்பாடு, மக்கள் சேவை என்பவற்றின்பால் ஈர்க்கப்பட்டு அதற்கான மாற்றமாக அரசியலைத் தேர்ந்தெடுத்து மக்கள்முன்னால் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்களே அரசியல்வாதிகள். ஆனால் இன்றைய அரசியல் உலகில் இடம்பெறும் பல அநாகரிகமான செயல்கள் இவற்றையெல்லாம் கொச்சைப்படுத்துவதுபோலத் தம்முடைய சொந்தவாழ்வைக் குறுக்குவழியில் மேம்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில்தான் சிலர் அரசியலில் குதிக்கிறார்களோ என எம்மை எண்ணத்தோன்ற வைக்கிறது எனலாம். ஆனால் அரசியல் உலகில் இத்தகையோர் சிறுபான்மையினர் எனும் உண்மை எமது மனதில் ஓரளவு மன அமைதி கொள்ள வைக்கிறது.

    சுமார் நூறு நாட்களுக்கு முன்னால் இங்கிலாந்து மக்கள் தமது வாழ்வை, தமது எதிர்காலத்தை முற்றாக மாற்றியமைக்கப் போகும் ஒரு முக்கியத் தீர்மானத்தை எடுத்தார்கள். கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி நடந்த சர்வஜன வாக்கெடுப்பு சரித்திரப் பிரசித்தி பெற்றது. 41 வருடகாலமாக ஜக்கிய இராச்சியத்தை ஒன்றாகப் பிணைத்து வைத்திருந்த “ஜரோப்பிய ஒன்றிய”அமைப்பிலிருந்து தம்மை வெளியேற்றுக் கொள்ளும் முடிவினைப் பெரும்பான்மை பலத்தினால் இங்கிலாந்து மக்கள் எடுத்தனர். அதன்மூலம் அவர்கள் ஆட்சியிலிருக்கும் தமது அரசுக்கொரு கட்டளையிட்டனர். “ஜரோப்பிய ஒன்றியத்தின் “தொடர்ந்த அங்கத்துவம் தம்மைப் பாதிக்கக்கூடிய செயலாதலால் அதனின்றும் வெளியேறும் நடவடிக்கையை எடுக்கும் அதிகாரத்தைக் கட்டளை மூலம் வழங்கினார்கள்.

    சீட்டாட்டக் கட்டுகளினால் கட்டப்பட்ட மாளிகை ஒரு காற்றடித்ததும் அடுக்கடுக்காய்ச் சரிந்து விழுவது போல முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்திலும் படுவேகமான மாற்றங்கள் நிகழ்ந்தன. ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என சுமார் 53% விகித மக்கள் வாக்களித்தாலும் 47%ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தில் நிலைப்பதை விரும்பினார்கள். நாடு ஏறத்தாழ கருத்தளவில் சரிபாதியாகப் பிரிந்து நின்றது. இந்நிலையில் சரியான, முறையான அரசியல்வாதிகளின் முக்கிய நகர்வு எதுவாக இருக்க வேண்டும்? பிளவுப்பட்ட மக்களின் கருத்தை ஒன்றாக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டியதே! ஜரோப்பிய ஒன்றியத்தில் நிலைபெற வேண்டும் என்று வாதிட்ட அப்போதைய பிரதம மந்திரி டேவிட் கமரன் அவர்கள் மிகவும் கெளரவமாகத் தன் வாதத்தில் தோல்வியுற்றதற்காக மட்டுமல்லாது அவ்வாதத்தோல்வி கொடுத்த மாற்றங்களை ஏற்படுத்தும் தகுதி தனக்குக் கிடையாது எனும் காரணத்தினால் தனது பிரதமர் பதவியிலிருந்து மட்டுமல்ல அரசியலில் இருந்தே ஒதுங்கி விட்டார்.

    எதிர்க்கட்சித் தலைவரின் நிலையோ இதற்கு முற்றும் முரணானது. அவரது கட்சியைச் சேர்ந்த 170 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் அவர்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை இழந்துவிட்டோம் என்று இரகசிய வாக்கெடுப்பு மூலம் அறியத்தந்தும் தனது பதவியை அழுங்குப்பிடியாகப் பிடித்து விட்டார். அதற்கு அவர் கொடுத்த காரணம் நான் இக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எமது கட்சியின் அடிமட்டத் தொண்டர்களினால் , பாராளுமன்ற உறுப்பினர்களால் அல்ல என்பதுவே. விளைவு? கடந்த மூன்று மாதங்களாக அக்கட்சிக்குள் ஒரு தலைவர் போட்டிக்கான தேர்தல் முடுக்கி விடப்பட்டு அரசின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதே ஒரு எதிர்க்கட்சியின் முக்கிய கடமை என்பதினின்றும் விலகித் தமக்குள்ளே ஓர் உட்கட்சிப் போரில் ஈடுபட்டார்கள். மறுபடியும் அதே ஜெர்மி கோபன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். பார்த்தீர்களா? முன்னைவிட அதிக வாக்கு வித்தியாசத்தினால் இம்முறை வெற்றி பெற்றது எனக்கு அடிமட்டத் தொண்டர்களிடையே இருக்கும் ஆதரவைக் காட்டவில்லையா? என்று மார்தட்டிக் கொள்கிறார். அவருக்கு எதிரானோர் தம்முடைய ஆதரவாளர்களின் ஆதரவை மட்டும் கொண்டு ஆட்சியமைக்க முடியாது; மற்றைய கட்சிகளின் வாக்காளர்களைக் கவரக்கூடியவகையில் ஒரு தலைவர் இருக்க வேண்டும். அத்தகைமை அவருக்கு இல்லை. அதனால் தாம் அரசமைப்பது என்பது இத்தலைவர் இருக்குமட்டும் முடியாத காரியம் என்கிறார்கள்.

    இத்தகைய ஓர் அரசியல் சூழலில் இங்கிலாந்து மக்களை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை “ப்ரெக்ஸிட் (Brexit)” எனப்படும் ஜரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் அம்சமே! வெளியேறும்போது ஜக்கிய இராச்சியம் எத்தகைய ஒரு உடன்படிக்கையை ஜரோப்பிய ஒன்றியத்தின் “வியாபாரச் சந்தையுடன்” ஏற்படுத்திக் கொள்ளப்போகிறது? ஏனெனில் அவ்வுடன்படிக்கையின் அடிப்படையே தொடர்ந்த வெளிநாட்டு முதலீடுகளை உறுதிசெய்யும் என்பது ஓர் மறுக்க முடியாத உண்மை. இத்தகையதோர் பாரிய மாற்றம் ஜக்கிய இராச்சியத்தின் பொருளாதாரத்தை ஒரு உலுக்கு உலுக்கத்தான் போகிறது. ஆனால் அதன் தாக்கத்தை மென்மைப்படுத்த அரசின் நடவடிக்கைகள் எதுவாக இருக்கப் போகிறது? ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதும் ஜக்கிய இராச்சியம் ஒரு தன்னுரிமை பெற்ற, ஜரோப்பிய ஒன்றியத்தின் சட்டதிட்டங்களுக்குள் கட்டுபட்டு நடக்க வேண்டிய அவசியமில்லாத நாடாகத் துலங்கப் போகிறது எனும் வாதத்தைப் பல தேசியவாதத் தலைவர்கள் முன்வைக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் வெறும் கோஷங்கள் எனும் நிலையிலேயே இருக்கின்றன. இதன் உண்மையான தாத்பரியம் அதனைச் செயலாக்கும் நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது. அதற்குரிய மனத்தைரியமும், இவற்றின் அடிக்கோடாக மறைந்து நிற்கும் இனத்துவேஷத்தை அடியோடு அறுத்தெறியும் வல்லமை புதிய பிரதமர் திரேசா மே அவர்களுக்கு உண்டா என்பதைக் காலம்தான் நிர்ணயிக்கும்.

    அக்டோபர் மாதம் அனைத்து அரசியல் கட்சிகளினது மகாநாடுகள் நடந்து முடிந்து விட்டன. லேபர் கட்சி தனது பிரபல்யமான மிதவாத இடதுசாரக் கட்சிக் கொள்கைளினின்றும் விலகித் தீவிர சோஷலிசக் கட்சியாகத் தன்னை இனம்காட்டி நிற்கிறது. வெறும் கோஷங்களுக்கும், ஊர்வலங்களுக்கும் அது வேண்டுமானால் சுவையாகத் தென்படலாம் ஆனால் நடைமுறையில் இத்தகைய தீவிர இடதுசாரக் கொள்கையுடைய கட்சி இன்றைய ஜக்கிய இராச்சியத்தில் அரசமைக்கும் அளவுக்கு தேர்தல் பலம் பெறுவதென்பது மிகவும் சந்தேகத்துக்குரிய விடயமே!

    அதேநேரம் லேபர் கட்சியினால் கைவிடைப்பட்ட இந்த மிதவாத இடத்தைத் தமது மிதவாத வலதுசாரக் கொள்கையின் மூலம் கைப்பற்ற அரசாங்கத்திலிருக்கும் கன்சர்வேடிவ் கட்சி முனைகிறது. கடைசியாக நடந்துமுடிந்த அவர்களது மகாநாட்டில் ஆற்றப்பட்ட உரைகள் குறிப்பாகப் பிரதம மந்திரி திரேசா மே அவர்களின் உரை இதனை அடிக்கோடிட்டுக் காட்டி நிற்கிறது.பாரம்பரியமாக லேபர் கட்சிக்கு வாக்களித்த வட இங்கிலாந்து தொழிலாளர்களின் வாக்குகளைத் தமது பக்கம் இழுப்பதற்கான சகல கொள்கை முழக்கங்களையும் அவர்கள் செய்கிறார்கள்.லேபர் கட்சி எதிர்க்கட்சியின் கடமைகளை மறந்து தமது சோஷலிசக் கொள்கைகளை இறுகப்பற்றி உட்கட்சிப்பூசலில் ஈடுபட்டிருக்கும்வரை கன்சர்வெடிவ் கட்சியின் காட்டில்தான் மழை.

    மக்களுக்காக அரசியலா? அரசியலுக்காக மக்களா?அதேகேள்வி அனைத்து மக்களின் உள்ளங்களிலும் எதிரொலிக்கிறது. அரசியல்வாதிகளின் உள்ளத்தில் எதிரொலிக்கிறதா? பொறுத்திருந்து பார்ப்பதுதான் இதற்கு விடையோ?

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • நவராத்திரி நாயகியர் (7)

    க. பாலசுப்பிரமணியன்

     

    மைசூர் அன்னை  சாமுண்டீஸ்வரி

    shri-chamundeshwari

    அரக்கனை அழித்திடவே வெகுண்டெழுந்த வேங்கை

    ஆயிரம்  ஆதவர்கள் அணியிட்ட  பார்வை

    அங்கமெல்லாம் தங்கமென மின்னிவிடும் நங்கை

    அச்சமில்லை! அன்னையவள் அன்புடைய மங்கை !

     

    பிறந்திருக்கும் குழந்தைக்கும் பாலூட்ட வருவாள்

    பிறழாத நாவினிலே உயிர்மெய்யாய் நிற்ப்பாள்

    பிறவிக்கடன் நீக்கிடவே பிரணவத்தைத் தருவாள்

    பேரிடரில் கைகொடுத்து பைரவியே காப்பாள் !

     

    மருந்தாகி மனத்துள்ள மலமெல்லாம் நீக்கிடுவாள்

    விருந்தாகி வந்தாலோ விளக்கருகில் அமர்ந்திடுவாள்

    பருந்தாகி பார்த்திருந்து பகையெல்லாம் விலக்கிடுவாள்

    மறந்தும் நினைத்தாலோ மனதில்லாம் நிறைந்திடுவாள்!

     

    சண்டனையும் முண்டனையும் சடுதியில் அழித்தவளே !

    சும்பனையும் நிசும்பனையும் மோகினியாகி முடித்தவளே

    சாகசங்கள் புரிந்திடவே சாமுண்டியாய் வந்தவளே !

    சாம்பவியே ! சங்கரியே ! சந்தனமாய் மணப்பவளே !

     

    வீரத்திலே துர்கையை  வென்றவர் யாருமில்லை

    ஈரத்திலே தாயுள்ளம் தரணியிலே  நிகரில்லை

    நாளத்தில் குருதியெல்லாம் காளியுந்தன் நிறமன்றோ!

    நான்மறைகள் போற்றுகின்ற ஆதிசிவன் அருந்துணையே !

    கொலுவேறி நீயிருக்கக்  குவலயமே வியந்திடுமே !

    குரலினிலே புதுப்பாடல்  நித்தம் பிறந்திடுமே !

    குறையின்றிக் குடும்ப  மெல்லாம் களித்திடுமே !

    கோலமிட்டு அழைக்கின்றேன்!  குலமகளே வருகவே !

    Share
  • மகிழ்ந்திடுவார் !

     
         (  எம் .ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா )

     

    வீரமொடு கல்விசெல்வம் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை

    பார்மீது வாழுதற்கு பலருக்கும் தேவையிவை

    ஊரெல்லாம் யாவருமே கொண்டாடி மகிழுமிந்த

    உயர்ந்த நவராத்திரியை உணர்வுடனே கடைப்பிடிப்போம் !

     

    வீரமொடு கல்விசெல்வம் வீணாகிப் போவதனை

    பாரினிலே பார்க்கையிலே பதைபதைப்பே வருகிறது

    ஊருக்கும் உதவாமல் உழைத்தவர்க்கும் சேராமல்

    சேராதவிடம் சேர்ந்து செயலொடுந்து போகிறதே !

     

    முச்செல்வம் பெறுவதற்கு முத்தேவிதனைத் துதிக்க

    இத்தரையில் நவராத்ரி இப்போது நடக்கிறது

    அத்தேவி அனைவரையும் அகமார வேண்டிநாம்

    சித்தமுடன் துதித்துநின்று சிந்தனையைத் திருத்திடுவோம் !

     

    உயர்ந்தசெல்வம் எதுவென்று உரத்தகுரல் எழுப்பிநின்று

    பட்டிமன்றம் போடுவதில் பலனெதுவும் இல்லையப்பா

    துட்டகுணம் உள்ளோரின் கைசேர்ந்த செல்வமெலாம்

    தூய்மைபெற வேண்டுமென்று துதித்திடுவோம் தேவியிடம் !

     

    கல்வியில்லார் கரயேறக் காட்டிடுவோம் நல்லவழி

    காசில்லார் வாழ்வதற்குக் கண்டிடுவோம் புதியவழி

    வீரமதை  விவேகமுடன்  விதைத்திடுவோம் மனமெல்லாம்

    மலைமகளும் அலைமகளும் கலைமகளும் மகிழ்ந்திடுவார் !

     

     

     

    Share
  • நேற்றைய நிழல்

    நிர்மலா ராகவன்

    “ஏதாவது கடுதாசி வந்திருக்கா?”

    சாதாரண குமாஸ்தாவாக இருந்த குஞ்சிதபாதத்திற்கு தினமும் அதிமுக்கியமான கடிதங்கள் வந்து குவியும் என்பதில்லை. இருந்தாலும், தான் வீடு திரும்பியாயிற்று என்பதைத் தெரிவிப்பதுபோல், அதே கேள்வியைத் தினமும் கேட்கத் தவறமாட்டார்.

    “ஆமாம்! நமக்கு யார் இருக்காங்க, அன்னாடம் எழுத!” என்றபடி, கோப்பையில் தேத்தண்ணீரை எடுத்து வருவாள் திலகம்.

    அன்று அவளுடைய பதிலில் சிறிது மாற்றம். “இந்தாங்க. ஒங்க மகன் பள்ளிக்கூடத்திலிருந்து!”

    “என்னாவாம்?”

    “யாருக்குப் புரியுது மலாயில எழுதினா!”

    அசுவாரசியமாக நோட்டம் விட்டவருக்கு கோபம் வந்தது. அதற்குப் பதில் எழுதித் தொலைக்கவேண்டுமே என்ற கவலை எழ, மனைவிமேல் பாய்ந்தார். “விநாயகம் ஒழுங்கா பள்ளிக்கூடம் போறதில்ல? மூணு நாளா வரல்லேன்னு எழுதியிருக்காங்களே!”

    அவளுக்கும் கோபம் எழுந்தது. தான் என்ன மற்ற மாற்றாந்தாய்கள் மாதிரியா!

    “தினமும் காலையில அஞ்சு மணிக்கே எழுந்து, கஷ்டப்பட்டு பலகாரம் பண்ணி அவன் கையில குடுத்து அனுப்பறேன் நான்! புத்தகப்பையை எடுத்துக்கிட்டு, ஆறரை மணி பஸ்ஸுக்குப் போயிடுவான். நீங்க வேணுமானா, அவனையே கேட்டுப் பாருங்க!” வீராவேசமாக ஆரம்பித்தவளின் குரல் அடைத்தது. அழுதுவிடுவாளோ என்று பயந்தார் குஞ்சிதபாதம்.

    ஆறு வயது மகனான விநாயகத்துடன் அவர் திகைத்துப்போய் நின்றிருந்தபோது, அவருடைய வாழ்வைப் பங்கு போட்டுக்கொள்ள துணிந்து வந்தவள் திலகம். அவளுடைய ஏழ்மையும், குள்ளமும், குண்டுமான உருவமும் அவரைப் பாதிக்கவில்லை. மாறாக, குடும்பப் பொறுப்பு முழுவதையும் அவள் கையில் விட்டுவிட்டு, தன் உத்தியோகம் உண்டு, வீட்டில் தொலைகாட்சி உண்டு என்று நிம்மதியாகக் காலத்தைக் கழித்தார்.

    அந்தச் சமயத்தில் உள்ளே நுழைந்தான் விநாயகம், தன்னைப்பற்றி ஒரு பூகம்பமே உருவாகிக் கொண்டிருப்பதை உணராது.

    பதினாறு வயதாகியும், பன்னிரண்டு வயதே மதிக்கத்தக்க தோற்றம். ஏனோ தானோ என்றிருக்கும் தந்தை, `கண்டிப்பு` என்ற பெயா¢ல் சதா சுடுசொற்களை வீசும் சின்னம்மா, தன் நினைவில் இல்லாத, ஆனால் பிறர் நினைவுபடுத்துக்கொண்டே இருக்கும், தாய் — இவர்களில் யாரால் அவனுடைய வளர்ச்சி பாதிக்கப் பட்டதோ!

    வயதுக்கு ஏற்ப உடல் வளர்ச்சி அடையவில்லையே என்ற தாபம் ஒரு புறம்; உடல் வளராமலேயே நின்றுவிட்டால் என்ன செய்வது என்ற பயம் மற்றொரு புறம். அதோடு, தான் யாருக்கும் வேண்டாதவனாக குறித்தும் அவனுக்கு கலக்கம் உண்டாயிற்று.

    பள்ளிக்கூடத்துக் கட்டுப்பாடுகள், கொள்கைகள் எல்லாவற்றிலும் அவநம்பிக்கை முளைக்க ஆரம்பித்தது.

    தான் ஒழுங்காக இருப்பதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையே என்ற ஏக்கமானது கெட்டலையும்போது பக்கபலமாக நண்பர்கள் இருக்கிறார்களே என்ற திருப்தியில் மறைந்தது.

    எப்படியோ இவ்வளவு நாட்களும் யார் கண்ணிலும் படாமல் தப்பியாயிற்று என்று சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தவன், தந்தை கையிலிருந்த கடிதத்தை அவன்மீது வீசி எறிந்து, கூடவே, “ஏண்டா? இதுக்கு என்னா அர்த்தம்னு கேக்கறேன்!” என்று ஒரு அதட்டலும் போட்டதும், திகைத்துப் போனான்.

    ஒரு கணம்தான். குறுக்கு வழியிலேயே போய் பழகிய மூளை அப்போது அவனைக் கைவிடவில்லை. “சின்னம்மாவையே கேட்டுக்குங்கப்பா, நான் பள்ளிக்கூடம் போகாம வீட்டிலேயே இருந்திருக்கேனா அப்படின்னு!” திமிராகப் பேசினான்.

    “ஒழுங்காப் போயிருந்தா, இந்த கடுதாசி எப்படி வந்திச்சு?” மலேசிய அரசாங்கப் பள்ளிகளின் விதிமுறைப்படி, தொடர்ச்சியாக மூன்று தினங்கள் பள்ளிக்குச் செல்லாவிட்டால், வீட்டுக்குத் தெரியப்படுத்திவிடுவார்கள்.

    அயரவில்லை விநாயகம். “டீச்சர் என் பேரைக் கூப்பிடறப்போ, நான் பதில் சொன்னது கேக்காட்டி, `ஆப்ஸெண்ட்` போட்டிருப்பாங்க!” என்று ஒரேயடியாக அளந்தான்.

    “எதுக்கு மனசுக்குள்ளே முனகிக்கிறியாம்? உரக்க பதில் சொல்றது!”

    “மத்தவங்க பேசறதால, என் குரல் அவங்களுக்குக் கேக்கல போலயிருக்கு! இனிமே ஜாக்கிரதையா இருக்கேம்பா!” என்று இரு பொருள்பட பேசினான் விநாயகம். இனிமேல் மாட்டிக்கொள்ளக்கூடாது. அதிகப்படி இரண்டு நாட்கள்தாம் மட்டம் போடலாம்.

    குஞ்சிதபாதத்திற்கு அலுப்பு தட்டியது. மகன் சொல்வது உண்மையோ, பொய்யோ, அதை நம்பினால் நிம்மதி என்று தோன்ற, “சரி, போ. இன்னொரு தடவை இந்தமாதிரி ஏதாவது வந்திச்சோ, முதுகுத்தோலை உரிச்சுடுவேன்!” என்று எச்சரித்துவிட்டு, அந்த சமாசாரத்தை அப்போதே மறந்துவிட்டவராக, தொலைகாட்சியை முடுக்கினார்.

    ஏதோ ஆங்கிலப்படம். கதாநாயகனுக்கு ஆறு பிள்ளைகள். அவளுக்கு நான்கு. இருவரும் விவாகரத்து ஆனவர்கள். காதலித்துக் கல்யாணம் செய்துகொள்கிறார்கள். மொத்தம் பத்து குழந்தைகள்!

    அவருக்கு ஆச்சா¢யமாக இருந்தது. ஒரு மகனை வைத்தே தன்னால் சமாளிக்க முடியவில்லையே, அது எப்படி இந்தக் குடும்பத்தில் எல்லாரும் சிரிப்பும், கேலியுமாக வளைய வருகிறார்கள்?

    நடப்பதையே காட்டினால், எவன் படம் பார்ப்பான் என்று தோன்ற, சிரிப்பு வந்தது.

    சில மாதங்கள் கழிந்தன.

    குஞ்சிதபாதத்திடம் ஒரு கடிதத்தை நீட்டிய விநாயகம், “அப்பா! வர்ற ஞாயித்துக்கிழமை எங்க பள்ளிக்கூடத்தில பி டி ஏ (PTA) மீட்டிங்காம். நீங்க கண்டிப்பா வரணும்னு சொல்லச் சொன்னாங்க டீச்சர். என்னையும் கூட வரச்சொன்னாங்க” என்றான், சற்றே பயந்தபடி.

    “அது என்னடா கஷ்டகாலம்?” டீச்சர் என்ன சொல்லிவிடுவார்களோ என்ற கவலையில் கேள்வி தானாக வந்தது.

    “பெற்றோர் ஆசிரியர் சங்கம். அதாவது, மாணவர்களோட அப்பாவோ, அம்மாவோ டீச்சர்ஸை பாத்துப் பேசறது”.

    “ஓ! அப்போ, மத்த அப்பாவும் வருவாங்க, இல்லே?” தான் மட்டும் தனியாகப் போய் நின்று, உதவாக்கரையான மகனைப் பெற்றதற்கு பேச்சு வாங்கிக்கொண்டு வரவேண்டாம் என்ற நினைப்பில் சற்று நிம்மதி பிறந்தது.

    பள்ளி வளாகத்துள் நுழையும்போது, குஞ்சிதபாதத்திற்குத் தயக்கம் ஏற்பட்டது. அவருக்குப் பின்னால் தன் சிறிய உருவத்தை மறைத்துக்கொள்ள முயன்றபடி, “அதோ வர்றாங்களே, அவங்கதான் எங்க டீச்சர்,” என்று கிசுகிசுத்தான் விநாயகம்.

    குதிகாலில் சுமார் நான்கு அங்குலம் நீண்ட காலணிகளும், உச்சந்தலையில் போடப்பட்டிருந்த கொண்டையும் அவளை அசாதாரணமான உயரமாகக் காட்டின. உடலைத் தழுவிய மெல்லிய , ஜப்பான் நாட்டு நைலக்ஸ் புடவை, நீல வண்ணத்தில். அதே நிறத்தில் நீண்டு தொங்கிய காதணிகள், கண்ணாடி வளையல்கள். கைக்கடிகாரத்தின் பிளாஸ்டிக் பட்டை மற்றும் நகப்பூச்சும்கூட நீலம்!

    `அலங்காரத்தில செலுத்தற கவனத்தை பிள்ளைங்க முன்னேற்றத்திலேயும் காட்டினா தேவலே!` என்று தனக்குள் சொல்லிக்கொண்டார் குஞ்சிதபாதம். `இவ்வளவு அழகா டிரெஸ் பண்ணிக்கிட்டா, வயசுப் பசங்க டீச்சரைத்தானே கவனிப்பாங்க! அவங்க படிச்சுக் குடுக்கறதிலே கவனம் போகுமா?` என்ற கவலையும் பிறந்தது.

    ஆசிரியர்களின் நடையுடை பாவனை அவர்கள் போதிக்கும் பாடங்களில் மாணவர்களுக்குத் தனி ஆர்வத்தை உண்டாக்கும் என்பதெல்லாம் குஞ்சிதபாதத்தின் அறிவுக்கு அப்பாற்பட்டது. அவர் என்ன, கல்லூரியிலா படித்திருந்தார் சமூக இயல் தெரிய!

    “அப்பா! இவங்கதான் எங்க டீச்சர், மிஸஸ் பாணி,” என்ற மகனின் குரல் கேட்டு, தம் எண்ணங்களிலிருந்து விடுபட்டார் குஞ்சிதபாதம். “எங்கப்பா, டீச்சர்!”

    மிஸஸ் பாணி புன்னகையுடன் தலையைத் தாழ்த்தினாள், அந்த அறிமுகத்தை ஏற்கும் விதத்தில்.

    “ஒங்களை இதுக்கு முன்னே பாத்ததில்லேன்னு நினைக்கிறேன்!” உருவத்திலிருந்த அழகு குரலில் இல்லை.

    `பாவம்! பிள்ளைங்களோட கத்திக் கத்தி, தொண்டை வரண்டுபோச்சு டீச்சரம்மாவுக்கு!` என்று பரிதாபப் பட்டுக்கொண்டார் குஞ்சிதபாதம்.

    “ரெண்டு நாள் முந்திதான் இவன் வந்து சொன்னான்..,” என்று மென்று விழுங்கினார்.

    “இந்தத் தடவை சொல்லாட்டி, நானே நேரிலே ஒங்க வீட்டுக்கு வந்துடுவேன்னு மிரட்டி அனுப்பினேன். ஒரு தடவைகூட விநாயகம் ஒங்ககிட்டே லெட்டரை ஒங்ககிட்டே குடுக்கலியா?”

    “ஏண்டா டேய்!” மகன்மேல் பாய்ந்தார் தந்தை.

    இப்படி ஒரு நோ¢டைத் தாக்குதலை எதிர்பார்த்திராத பையன் மிரண்டே போனான்.

    அவனைப் பார்த்து முறுவலித்தாள் ஆசிரியை. அவளுடைய உத்தியோகத்தில் இந்தமாதிரி எத்தனை அப்பாக்களைச் சந்தித்திருக்கிறாள்!

    “வாங்க. அப்படிப்போய் ஒக்காந்துக்கிட்டு பேசலாம்,” என்று நடந்தவள் பின்னால் பலியாடுகள்போல் இரு ஆண்களும் நடந்தனர்.

    “விநாயகம் ஒரு மாசத்தில ரெண்டு, மூணு நாள் கூட ஸ்கூலுக்கு வரதில்லே. அதுக்காக ஒங்களுக்கு எத்தனை லெட்டர் போட்டேன்! நீங்க ஏன் ஸார் எந்த ஆக்ஷனும் எடுக்கலே?”

    டீச்சரின் குற்றச்சாட்டைச் செவிமடுத்த குஞ்சிதபாதம் திகைத்துப் போனார். அவருக்கு ஒரே ஒரு கடிதம்தானே வந்தது? தன் உடலைக் குறுக்கியபடி பக்கத்தில் நின்றிருந்த மகனை நோக்கித் திரும்பினார். கையும் களவுமாகப் பிடிபட்டு, திருடனைப்போல் அவன் விழித்ததைப் பார்த்து அவருக்கு உண்மை புலனாகியது. தபால்காரரை மடக்கி, தனக்கு வரும் கடிதங்களை பாதி வழியிலேயே பெற்றுக் கொண்டிருக்கிறான்!

    டீச்சர் தன்பாட்டில் தொடர்ந்தாள்: “விநாயகத்தோட படிப்பு மட்டுமில்ல, உடம்பும் ரொம்ப இளைச்சிருக்கு, பாத்தீங்க இல்ல?”

    “அதுக்கு என்னங்க டீச்சர் பண்றது? காலையில போனா, ராத்திரி ஏழு மணிக்குத்தான் வீட்டுக்கு வரான். இங்க தினமும் ஹாக்கி, ·புட்பால் எல்லாம் விளையாடறானாமில்ல!” என்றார் அப்பாவியாக.

    ஆசிரியை பெரிதாக நகைத்தாள். “விளையாடறானா? பாடம் படிக்கவே கிளாசுக்கு வராதவன் விளையாட மட்டும் ஸ்கூலுக்கு வர்றானா? அவன் சொன்னா, நீங்களும் நம்பிடறதா?”

    குஞ்சிதபாதத்துக்கு அவமானம் தாங்கவில்லை.

    அடுத்த கேள்வி பிறந்தது.”ஒங்க மனைவிக்கும், ஒங்களுக்கும் இடையே எந்த மாதிரி உறவுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

    என்னென்னவோ கேட்கிறாளே என்று அருவருப்படைந்தார் குஞ்சிதபாதம்.

    அவருடைய எண்ணப்போக்கு முகத்திலும் பிரதிபலிக்க, புன்னகையுடன் விளக்கினாள் மிஸஸ் பாணி. “அதாவது, நீங்க ரெண்டுபேரும் குழந்தைகளோட நலனைப்பத்தி அக்கறையோட சேர்ந்து விவாதிப்பீங்களா? பெத்த பிள்ளைகளோட சேர்ந்து பொழுதைக் கழிக்க விரும்பறீங்களா? இதைத்தான் கேக்கறேன்”.

    எதற்காக இப்படியெல்லாம் கேட்கிறாள் என்பது விளங்காது, பதில்சொல்லத் தொ¢யாது விழித்தார் குஞ்சிதபாதம்.

    அவருடைய மௌனத்தை விநாயகம்தான் கலைத்தான், கணீரென்ற குரலில். “எனக்கு அம்மா கிடையாது, டீச்சர். சின்னம்மாதான் இருக்காங்க”.

    மென்று விழுங்கியபடி, ” ஆமாம். என் ரெண்டாந்தாரம்,” என்று சேர்ந்துகொண்டார் குஞ்சிதபாதம்.

    ஏதோ புரிந்தவள்போல் தலையை ஆட்டினாள் மிஸஸ் பாணி. “ஓ! முதல் மனைவி இறந்தபிறகு, விநாயகத்தை வளர்க்க இன்னொரு கல்யாணம் கட்டிக்கிட்டீங்கன்னு சொல்லுங்க!”

    விநாயகத்திற்கு திடீரென்று ஆவேசம் பிறந்தது. “எங்கம்மா செத்துப் போகலே, டீச்சர். யாரோடேயோ ஓடிப் போயிட்டாங்க. அவங்க எங்க குடும்பத்துக்கு உண்டாக்கிட்டுப் போயிருக்கிற களங்கத்தைத் துடைக்க முடியலியே என்கிற ஆத்திரத்திலே என்மேலே வஞ்சம் தீர்த்துக்கிறாங்க இவங்க எல்லாரும்!” பெரிய குரலில் அலறிவிட்டு, சிறு குழந்தைபோல் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான். ஆண்டாண்டு காலமாகத் தன்னையுமறியாமல் தேக்கி வைத்திருந்த துயரம் எல்லாம் வெளிக் கிளம்பியது.

    என்றோ சிறுவனாக இருந்தபோது நடந்ததை அப்படியே விட்டிருந்தால், அவனுக்கு மறந்து போயிருக்கக்கூடும்.

    ஆனால், அது மனதில் என்றும் நிலைத்திருப்பது அவனுக்கு ஒரு படிப்பினையாக இருக்கும் என்று எண்ணியவள்போல, திலகம் வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாரிடமும் தம்பட்டம் அடிப்பாள்: `விநாயகம் என் சொந்தப் பிள்ளைன்னுதான் எல்லாருமே நினைச்சுக்கிட்டிருக்காங்க. ஆனா, அவன் எங்க வீட்டுக்காரரோட மூத்த சம்சாரத்துக்குப் பிறந்தவன்`. இந்த இடத்தில் சற்று நிதானித்து, கேட்பவர்களை யோசிக்கவைப்பாள். `அந்தச் சிறுக்கி எவனோடேயோ ஓடிப் போயிட்டா. இவரு, பாவம், மானி. சாது. மகனை வளர்க்க என்னைக் கட்டிக்கிட்டார்!` என்று நீட்டி முழக்கி, இன்னொருத்தியின் மகனைப் பேணும் தன் நல்ல குணத்தையும், மூத்தவளுடைய தரக்குறைவான நடத்தையையும் ஒப்பிட்டுக் காட்டுவாள்.

    அதையே திரும்பத் திரும்பக் கேட்கும்போதெல்லாம் விநாயகத்தின் மனம் கொந்தளிக்கும். அப்படிப்பட்ட ஒரு தாய்க்குப் பிறந்த தான் மட்டும் ஒழுக்கமானவனாக இருக்க முடியுமா என்ற சந்தேகம்தான் அவனிடம் தலைதூக்கியது.

    தன் இருப்பிடத்திலிருந்து எழுந்த ஆசிரியை, மாணவனின் மனக்குமுறலைப் புரிந்துகொண்டவளாய், ஆறுதல் அளிக்கும் வகையில் அவனது தோளைத் தட்டிக் கொடுத்தாள்.

    விம்மலுக்கிடையே தொடர்ந்தான்: “எங்கம்மா செய்த காரியத்துக்கு நானா டீச்சர் பிணை? நீங்கதான் பாக்கறீங்களே! இந்தமாதிரி பாசமே இல்லாத, அக்கறை காட்டாத ஒருத்தரோட வாழ முடியாம அவங்க போனதில என்ன தப்பு? அவங்க நல்ல காலம் போயிட்டாங்க. என்னால முடியலியே! “

    குஞ்சிதபாதம் விக்கித்துப் போனார். மகன் ஒரு முட்டாள், கீழ்ப்படியாதவன் என்றுதான் அதுவரை நினைத்திருந்தார். ஆனால், அவனுடைய குற்றச்சாட்டுகளைக் கேட்டபின், தன்மீதே அவருக்குச் சந்தேகம் பிறந்தது.

    எப்போது மாறினான் இப்படி ஒரு உணர்ச்சிக் குவியலாக?

    எவ்வளவு காலமாக இத்துணை ஏக்கத்தையும் சுமந்து வந்திருக்கிறானோ என்ற எண்ணம் உரைக்க, தன்னையுமறியாமல் மகன்மேல் பாசம் சுரந்தது.

    “கண்ட வழியிலே போறதாச் சொன்னியே, விநாயகம்! சிகரெட்டா?”

    கொஞ்சம் தயங்கிவிட்டு, கண்ணைத் துடைத்தபடி, `ஆமாம்` என்பதுபோல் தலையாட்டினான்.

    “டாடா? (DADAH?)

    போதைப் பழக்கம் கிடையாது என்று தலையசைப்பிலேயே மறுத்தான்.

    சற்றுமுன் நெகிழ்ந்திருந்த குஞ்சிதபாதத்தின் மனம் மீண்டும் கல்லாகியது. சின்னப் பையன், பிறர் எதிரில் தன்னை என்ன பேச்சு பேசிவிட்டான், என்னவோ, எல்லாமே தன் குற்றம் என்பதுபோல்!

    ஆத்திரத்தில் அறிவிழந்தார். மகனது கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

    “என்னடா சொல்றே? இந்த வயசிலே சிகரெட் பிடிக்கிறியா, காலிப் பயலே! வெக்கமா இல்லே, டீச்சர் எதிரிலேயே ஒத்துக்கிட?”

    துடிக்கும் உதடுகளுடன், தலையைச் சற்றே சாய்த்தபடி ஆங்காரத்துடன் அவரை முறைத்துப் பார்த்தான் மகன்.

    நிலைமையை மிஸஸ் பாணி தன் வழியில் சமாளிக்கப் பார்த்தாள். “நீ கொஞ்சம் வெளியே இரு, விநாயகம். நான் அப்பாவோட தனியா பேசணும்”.

    உதடுகளைப் பிதுக்கியபடி அவன் அசையாது நின்றிருந்தான். வேறு வழியின்றி, அவன் எதிரிலேயே அவன் மனநிலைமையை அலசினாள். “புகை பிடிக்கிறதில்லேன்னு இவன் பொய் சொல்லி இருக்கலாம். ஆனா, இவன் அப்படிச் செய்யல. ஏன் தெரியுமா?”

    தந்தை, மகன் இருவருமே உன்னிப்பாகக் கவனித்தனர், தலையைச் சாய்த்தபடி.

    “தான் கெட்டுப் போறதை தன்னாலதான் தவிர்க்க முடியலே. மத்தவங்களாவது தன்னை நல்வழிப்படுத்த மாட்டாங்களான்னு ஏங்கிப் போயிட்டான்”.

    விநாயகத்திடமிருந்து ஒரு பெரிய விம்மல் வெளிப்பட்டது.

    “அதனாலதான் உண்மையை ஒத்துக்கிட்டான். அதுவே நல்ல ஆரம்பம்தான். என்ன சொல்றீங்க?”

    அந்த அழகிய உடலுக்குள் அறிவு மட்டுமின்றி, அளவற்ற அன்பும் இருப்பது புலன்பட, குஞ்சிதபாதம் மனம் நெகிழ்ந்து கையைக் கூப்பினார்.

    “நம்ப நாட்டிலே பெரும்பான்மையானவங்க பள்ளிக்கூடத்துக்குப் போற வயசுப் பிள்ளைங்கதான். இவங்களை முன்னுக்குக் கொண்டு வந்தாத்தானே நாளைக்கு நாடு உருப்படும்?” அரசியல்வாதிபோல் ஏதேதோ சொல்கிறாளே என்ற அலுப்பு ஏற்பட்டது எதிரிலிருந்தவருக்கு.

    “பிள்ளைங்களை ஒழுங்கு படுத்தறது ஆசிரியர்கள் பொறுப்பு மட்டும்தான் என்கிறமாதிரி நடந்துக்கிறவங்கதான் இங்க அதிகம்,” என்று மேலும் சொன்னாள்.

    குஞ்சிதபாதம் நெளிந்தார்.

    “அடடே! நீங்க வித்தியாசமா எடுத்துக்கிட்டீங்களா? பொதுவாச் சொன்னேன். தனித்தனியா நாம்ப எதுவும் செய்ய முடியாது. ஆனா, பெத்தவங்களும், ஆசிரியர்களும் ஒண்ணு சேர்ந்தா..!”

    தான் செய்யும் தொழிலில் கிடைக்கும் சம்பளத்தை மட்டும் கணக்கிட்டு, அதற்கேற்ப வேலை செய்யாது, அதன் மூலகாரணத்தையும், சிறப்பையும் அறிந்து நடக்கும் இவளைப்போல் எத்தனைபேர் இருப்பார்கள் என்று யோசித்தார் குஞ்சிதபாதம்.

    “ஒரு பையனுக்கு அப்பாதான் வழிகாட்டி. அவனோட சின்னம்மா நல்ல எண்ணத்தோட கண்டிச்சாலும், `பெத்த தாயா இருந்தா இப்படி தன் மனம் நோக ஏசுவாளா?`ன்னு நினைச்சு வருந்தலாம். அதுவே நீங்க உரிமையோட கண்டிச்சா, அப்பாவுக்குத்தான் நம்பமேல எவ்வளவு அக்கறைன்னு புரிஞ்சு ஆனந்தப்படுவான். ஒங்க அன்பையும், ஆதரவையும் எப்படியாவது அடையணும்னுதான் அவன் எதை எதையோ தேடிப் போயிருக்கான். நல்ல வேளை, சிகரெட்டோட போச்சு!”

    பள்ளிக்கூட வளாகத்திலிருந்து வெளியே நடக்கும்போது, கோயிலுக்குப் போய்விட்டு வந்த நிறைவு இருவரிடமும்.

    “என்னங்க, ஒன்பது மணிக்கே படுத்துட்டீங்க? சீரியல் பாக்கலே?”

    “அது கிடக்கு! நம்ப மகன் அடுத்த வருஷம் சீனியர் (பள்ளி இறுதியாண்டு) எடுக்கிறானே! இப்பவே பிடிச்சு படிக்கவேணாம்? சும்மா டிவி போட்டா, அதிலதான் அவன் மனசு போகும்!”

    மகன்மேல் அவருக்குப் புதிதாகத் தோன்றியிருந்த கரிசனம் திலகத்திற்குப் புதிராக இருந்தாலும், அவளுக்கும் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கேசவ், எனக்கென்னவோ அம்பாள் பார்வைக்கு ‘’நெமிலி பாலாம்பிகையாகத்’’ தோன்றினாள்….

    crazy14

    ஓலை ஜபமணி மாலை அபயமொடு
    காலை மடித்து கொலுவிருக்கும் -பாலை
    திரிபுர சுந்தரியைத் தேடி நெமிலி
    வருபவர் வாழ்வில் வளம்….
    ”த்யான த்யாத்ரு த்யேய ரூபி”
    —————————————–
    எண்ணும் தொழிலவள், எண்ணிலா எண்ணமவள்
    எண்ணுவோர்க்(கு) ஏற்ற எழுச்சியவள் -எண்ணிடத்
    தின்னும் பசியவள் தீராத தாகமவள்
    உண்ணா முலையவளை உண்….கிரேசி மோகன்….

    Share
  • ஏழையினை மறந்துவிடாதே!

    இசைக்கவி ரமணன்

     

    images-4
    உன்களிப்பு தர்மம்
    உன்விருப்பம் சிருஷ்டி
    உன்னிமைப்பு மாயம்
    உன்னிமைப்பே முக்தி!

    என்னசொல்லி என்னசெய்து உன்னை அறிவது?
    எங்கு மெதுவு மானவுன்னை என்று காண்பது?
    என்றோநீ வைத்தபுள்ளி எட்டும்வரையிலே, நீ
    எழுதும்கதை சொந்தக்கதை யாகத் தொடருது
    உன்னை மீறி எண்ணமொன் றிருக்க முடியுமா?
    உனதல்ல எனதென்று தடுக்க முடியுமா?
    உள்ளமென்னும் பள்ளமெங்கும் பாயும் வெள்ளமே!
    உயிரில் நின்றும் கண்ணில்படா உச்சக் கள்ளமே!

    என்வினைகள் பிறவி
    உன்மறைப்பு வாழ்க்கை
    என்மறப்பு மரணம்
    என்னநியாயம் தர்மம்?

    கட்டுவதும் கழற்றுவதும் உன்றன் கைகளே, இதில்
    கர்மம் தர்மம் என்பதெலாம் கல்விப் பொய்களே!
    மட்டிலாத உன்றன்கருணை மட்டும் உண்மையே! உன்
    மனதுபோல என்னைமாற்றி மகிழும் பெண்மையே!
    தொட்டிலுக்கு முன்பிருந்தும் தொடர்ந்து வருகிறாய், நாலு
    தோள்களிலோர் தோளுமாகித் தூக்கிச் செல்லுவாய்
    முட்டுமந்த இடைவெளியில் என்ன செய்கிறாய்? ஏதோ
    முழுமையென்கிறார்கள் நீ என்ன சொல்கிறாய்?

    கண்ணில் நீ மாயம்
    கனவெல்லாம் நேயம், உயிர்
    எண்ணியெண்ணித் தேயும்
    என்று வீழும் தாயம்?

    உன்னிருப்பே ஒருகோடி எண்ணமானது, அந்த
    ஒருநினைப்பே இன்பதுன்ப வண்ணமானது
    என்னிருப்போ பொய்மிகுந்த மெய்யுமானது
    ஏற்றும்வரை வாழும்கற் பூரமானது
    ஒன்றுமட்டும் சொல்லிச் சற்று ஓய்வு கொள்கிறேன், நீ
    ஒருத்தி தவிர ஒருவருமே இல்லை சொல்கிறேன்
    என்றுமிந்த ஏழையினை மறந்துவிடாதே! எனக்கு
    எல்லாமும் நீயம்மா துறந்துவிடாதே!

    Share
  • ஓம் மகாசக்தியே போற்றி!

     

    பவள சங்கரி

    14523106_1225986744109514_6103787041079987971_n

    எத்தனை எத்தனை பிறவியம்மா
    எல்லாம் உன் அருளம்மா
    அத்தனையும் பாவங்களன்றி
    வரமாக்கிய வடிவுடைநாயகியே

    நாடகமான வையகத்தில்
    பூடகமான மனமின்றி
    சேடகனாய் வாழாமல்
    சிறகடித்து சிறந்திருக்கருள்வாயே

    வாதமும் விநோதமும் வாழ்வானதும்
    நாதமும் வேதமும் கரைசேர்ப்பதும்
    சகாராவிலும் மொட்டவிழ்வதும்
    சகலகலாவல்லி நின் திருவிளையாடல்

    கருத்திலுறை காத்தியாயினி
    கடம்பவனத்தின் காவல்காரி நீ
    அடங்காதார் மனக் கூட்டிலும்
    அகம்நிறைந்து முகமலரச் செய்பவள்!

    அன்புறுவாய் அகிலம் ஆள்பவள் காளி
    புன்முறுவாய் புவியாவும் பொழிபவள் பூமாரி
    நான்மறை வித்தாய்த் திகழ்பவள் தேவி
    எந்நாளும் எமையாளும் எழிலரசி ஏழவார்குழலி!

    போற்றி! போற்றி! ஓம் மகாசக்தியே போற்றி!

    Share
  • நவராத்திரி நாயகியர் (6)

    க. பாலசுப்பிரமணியன்

     

    தாய் மூகாம்பிகை

    1

    காலடிச் சங்கரன் சந்தங்கள் கேட்டதும்

    காலடி பூமியில் வைத்திட வந்தவளே!

    காலையில் பகவதி மாலையில் சரஸ்வதி

    கருணையில் காவிரி காலத்தின் அறிவொளி !

     

    முதுகலை அறிந்தவள் மூகனை அழித்தவள்

    முத்தமிழ் தந்தவள் முடிவின்றிக் கொடுப்பவள்

    பாரதி !      சாரதி !     பார்கவி !     பைரவி !

    பங்கய மேலுறை மங்கள மோகினி !

     

    வல்லமை வாக்கினில் நல்லவை நாக்கினில்

    வளர்த்திடும்  அறிவினில் வாழ்ந்திடும் வேணி

    வண்டினம் சேர்ந்திடும் வெண்ணிற மலரினில்

    வீற்றிடும் வாசவி, வணங்கினேன் சியாமளி !

     

    விழிகளின் அசைவினில் வேதங்கள் வளர்ந்திடும்

    விரல்களின் அசைவினில் யாழிசை மலர்ந்திடும்

    வித்தைகள் நித்தமும் வழங்கிடும் வாணியே !

    பித்தனாய் அலைகிறேன் சித்தமே காத்திடு !

     

    தாமரை நெஞ்சினில் மூகையே மலர்ந்திடு!

    தளராத அறிவின் தரிசனம் தந்திடு !

    தங்கிடும் செல்வமாய்த் தமிழனில் வந்திடு !

    தடையின்றி மொழியினைத் தானமாய்த் தந்திடு !

     

    நலுங்கிட்டு நல்மலரிட்டு நற்சுவை உணவிட்டு

    நலம்படைக்க அழைத்தேன் நான்மறை போற்றியே

    கொல்லூரில் குடிகொண்ட கலைமகள் அன்னையே

    கொலுவிருக்க வருவாயோ குலம்காக்கும் தேவியே ?

     

     

     

    Share
  • யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் – தொடக்க விழா, நூல்கள் வெளியீட்டு விழா!

    மு.இளங்கோவன்

    அன்புடையீர், வணக்கம்.

    av

    av1

    தமிழ் இலக்கியப் பரப்பினுள் ‘யாழ்’ குறித்துப் பரவியிருந்த செய்திகளைத் தொகுத்துத் தம் நுண்மாண் நுழைபுலத்தால் யாழ்நூல் என்னும் பெயரில் அரிய ஆய்வுநூல் வழங்கிய தவத்திரு விபுலாநந்த அடிகளார் அவர்கள் பன்முக ஆளுமைகொண்ட அறிஞராவார். இலங்கையில் மட்டக்களப்பை அடுத்துள்ள காரைத்தீவில் பிறந்த இவர் இராமகிருட்டின மடத்தின் துறவி; இராமகிருட்டின விசயம், வேதாந்த கேசரி, பிரபுத்த பாரதம், விவேகானந்தன் ஆகிய இதழ்களின் ஆசிரியர்; மொழிபெயர்ப்பாளர்; பாரதியின் படைப்புகளைக் கல்வியுலகில் முதலில் வரவேற்றுப் போற்றியவர்; இலங்கையில் பல்வேறு பள்ளிகளை உருவாக்கி அனைத்துத் தரப்பு மாணவர்களின் கல்விக்கண்களைத் திறந்த அறிவாசான்; சிறந்த சொற்பொழிவாளர்; அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பேராசிரியர்; யாழ்நூல் இயற்றிய ஆராய்ச்சியாளர்; இத்தகு பெருமைக்குரிய அறிஞரின் வாழ்வும் பணிகளும் முற்றாக அறியப்படாமல் உள்ளதை உணர்ந்து அவற்றை ஆவணப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் தொடக்க விழாவில் புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சர் மாண்புமிகு வே. நாராயணசாமி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். ஆவணப்படத் தொடக்க விழாவும் எம் பதிப்பக நூல்களின் வெளியீட்டு விழாவும் நிகழ்ச்சி நிரலில் காணும்வண்ணம் நடைபெற உள்ளன. இத்தகு இனிய விழாவுக்கு அனைவரையும் அன்புடன் அழைத்து மகிழ்கின்றோம்.

    அழைப்பில் மகிழும்

    வயல்வெளித் திரைக்களத்தினர்

    புதுச்சேரி – 605 003

    தொடர்புக்கு: 9442029053

    நாள்: 06.10.2016 (வியாழன்) மாலை 6 மணி முதல் 8 மணி வரை

    இடம்: செயராம் உணவகம்(Hotel Jayaram), காமராசர் சாலை, புதுச்சேரி

    நிகழ்ச்சி நிரல்

    தமிழ்த்தாய் வாழ்த்து: பைந்தமிழ்ப் பாவலர் இரா. இளமுருகன் அவர்கள்

    வரவேற்புரை: முனைவர் அரங்க. மு. முருகையன் அவர்கள்

    தலைமை: முனைவர் வி. முத்து அவர்கள்(தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்)

    முன்னிலை: புலவர் இ. திருநாவலன் அவர்கள், திரு. சிவ. வீரமணி அவர்கள்

    விபுலாநந்த அடிகளார் ஆவணப் படத்தைத் தொடங்கிவைத்தல்:

    மாண்புமிகு வே. நாராயணசாமி அவர்கள்

    முதலமைச்சர், புதுச்சேரி அரசு

    திருக்குறள், இணையம் கற்போம் நூல்களை வெளியிட்டு வாழ்த்துரை

     

    மாண்புமிகு வே. பொ. சிவக்கொழுந்து அவர்கள்

    (சட்டப்பேரவைத் துணைத்தலைவர், புதுச்சேரி சட்டப்பேரவை)

    நூலின் முதல் படியினைப் பெறுபவர்:

    திரு. கி. வா. கா. பெருமாள் அவர்கள்

    (துணைத்தலைவர், தில்லித் தமிழ்ச்சங்கம்)

    அயல்நாட்டு விருந்தினர்கள்:

    திரு. ம. மன்னர் மன்னன் அவர்கள் (மலேசியா)

    திரு. சிவம் வேலுப்பிள்ளை அவர்கள் (கனடா)

    வாழ்த்துரை

    முனைவர் கு. சிவமணி அவர்கள் (ஆய்வறிஞர்)

    முனைவர் க. இளமதி சானகிராமன் அவர்கள்(புதுவைப் பல்கலைக்கழகம்)

    முனைவர் ஒப்பிலா. மதிவாணன் அவர்கள் (சென்னைப் பல்கலைக்கழகம்)

    முனைவர் அரங்க பாரி அவர்கள் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)

    முனைவர் போ. சத்தியமூர்த்தி அவர்கள் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்)

    ஏற்புரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

    நன்றியுரை: முனைவர் உரு. அசோகன் அவர்கள்

    அனைவரும் வருக!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    keshav1

    ”கோளரி மாதவன் கோகுலம் சென்றதைக்
    காளியறி வித்தனள், கந்தன்கை -வேலெரி
    எட்டாத ஆகாசத்தில், எட்டாவது தோன்றலை,
    சட்டாம்பிள் ளைகம் சனுக்கு”….கிரேசி மோகன்….

    Share
  • என்மஹா ராணி!

    இசைக்கவி ரமணன்

     

    amman1
    ஆயிரம் பேர்களால் என்ன? அவை
    யாவுமுன் கால்மூடும் மலரே!
    வாயி லிருப்பதா வாக்கு? அது
    வயிரவீ உன்மனப் போக்கு!
    பாயில் கிடக்கவா வாழ்வு? உன்
    பாலிப்புக் கதுதானே தாழ்வு?
    தேயா இருளெலாம் போக்கு! என்
    சித்தத்தில் முத்தத்தைத் தேக்கு!

    நின்னையே கதியெனக் கொள்வார், அவர்
    நிம்மதி இலாமலே திரிவார்
    நின்னையே பொய்யெனச் சொல்வார், அவர்
    நிலமெலாம் செல்வத்தி லாள்வார்
    நின்மனம் ஏதடி பிச்சி? இன்னும்
    நிற்கி றோமேயுனை மெச்சி!
    நின்னிலே ஏதோ இருக்கும்! அது
    நில்லாது நெஞ்சை இழுக்கும்!

    வக்கணை மிக்கதோர் ராணி! துளி
    வற்றாத பேரின்பக் கேணி!
    துக்கம் பிடிக்காத ராணி! நித்தம்
    தூக்கம் கலைக்கின்ற தேனி!
    பக்கத் திலேதேரியும் ராணி! முகம்
    பாராத என்மஹா ராணி!
    வெக்கத்தை விட்டவன் கவிஞன்! என்ன
    வேதனை தந்தாலும் பாதமே கதியே!

    அவளுக்கு மென்னைப் பிடிக்கும்! என்னை
    அல்லாட வைப்பதோ அதைவிடப் பிடிக்கும்!
    சுவர்முழுதும் எழுதினாள் சிறுமி, ஒரு
    சொல்மட்டும் இன்னும் பலிக்காமல் சொக்கும்!
    சுவடிலாச் சித்தத்தின் வெளியில், சற்றும்
    சுட்டமுடி யாதவொரு துகளின் துக ளொளியில்
    இவளைநான் சத்தியம் காண்பேன்! அந்த
    இன்பத்திற் காகவே இவையாவும் ஏற்பேன்!

    மலையிரண் டின்நடுவிலே, நின்று
    மறைகின்ற கதிரோனின் தங்கநிழ லொளியில்
    அலையிறைஞ் சிக்கேட்கவே, நெஞ்சின்
    அப்போதைக் கவிதைபோல் அரும்புநில வமிழ்தில்
    தலைகிறங் கிச்சுழலுமே! அந்தத்
    தள்ளாட்டத் தில்தேவி வெள்ளோட்டம் வருமே!
    விலையற்ற சக்திபித்தம்! மிக
    விரும்பியதை உயிர்தந்து பெற்றதென் சித்தம்!

    Share
  • நவராத்திரி நாயகியர் (5)

    க. பாலசுப்பிரமணியன்

     

    புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி

    bhuvaneshwari

    மூத்தவளே ! மூவுலகும் முக்கண்ணால் அறிந்தவளே !

    முழுமதியின் அமுதெடுத்து முக்காலம் தருபவளே !

    மூவுலகின் உயிரினங்கள் முன்னின்று காப்பவளே !

    மூடமதியன் மகிடனுக்கு முடிவினைத் தந்தவளே !

     

    புதிதாய் நித்தம் புதுவையில் பூப்பவளே !

    பொழுதும் மதியாய் புலனில் நிற்பவளே !

    விதியை கதியாய் வாழ்வினில் வடித்தவளே!

    விழுதாய் நின்று வினைகள் தீர்ப்பவளே !

     

    கடலில் நதியில் கனிவுடைக்காற்றில் கண்டேன் !

    கதிரில் கனியில் களிப்புறுமலரில் கண்டேன்

    தேனில் பாலில் தெவிட்டாத்தமிழில் கண்டேன்

    விண்ணுள் மண்ணுள் என்னுளுன்னைக் கண்டேன்  !

     

    அண்டங்கள் படைத்து அகிலத்தை வடித்தாய் !

    அசையாப் பொருளையும் அன்பினில் அசைத்தாய்

    அகத்தையும் புறத்தையும் அறிவினில் வைத்தாய்

    அன்னையே ! ஆதியே ! அமைதியின் ஆழியே !

     

    பொன்னும் பொருளும் புவிக்கென வைத்தாய்

    அன்பில் அருளில் அடைக்கலம் கொடுத்தாய்

    கண்ணில் மனத்தில் கருத்தில் நிறுத்த

    காட்சிகள் அனைத்திலும் கருவாய் வந்தாய் !

     

    நல்லவை தேடிடும் நெஞ்சமே தருவாய்!

    அல்லவை நாடிடும் ஆசையை அறுப்பாய் !

    உள்ளவை அனைத்தையும் உலகுடன் பகிர்ந்திட

    மங்கள வடிவே, மனதினில் அமர்வாய் !

    Share
  • மெய்ஞ்ஞான இலக்கியத்தின் உச்சம் அல்லது வீழ்ச்சி! 

    எம். ஜெயராமசர்மா B.A Hons, Dip.in.Ed, Dip.in.Soc, M.Phil Edu, SLEAS.
    முன்னாள் கல்வி இயக்குநர்விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர்,
    மெல்பேண், அவுஸ்திரேலியா                          

    இலக்கியம் என்பதற்குப் பலவிதமான விளக்கங்கள் பலராலும் கூறப்படுகிறது. இலக்கு + இயம் இலக்கியம். அதாவது ஓர் இலக்கை நோக்கமாகக் கொண்டதுதான் இலக்கியம் என்பதாகும். இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்றும் சொல்லப்படுகிறது. உணச்சியுடன் கூடியதுதான் இலக்கியம் என்றும் சொல்லப்படுகிறது. அறம், பொருள், இன்பம் என்பவற்றைப் புலப்படுத்துவதுதான் இலக்கியம் என்றும் சொல்லப்பட்டது. அப்படியல்ல  – அறம், பொருள், இன்பம், வீடு நான்கையும் கொண்டதே இலக்கியம் என்னும் கருத்தும் முன்வைக்கப்பட்டது. இலக்கண வழுவின்றி எழுதப்படுவனயாவும் இலக்கியம் என்றும் கொள்ளப்படுகின்றது. இலக்கண நூல்கள் இலக்கியத்துக்குக் கொடுக்கும் விளக்கங்களும், இலக்கிய விமர்சகர்கள் இலக்கியத்துக்குக் கொடுக்கும் விளக்கங்களும் வித்தியாசமானவையாகும்.

    உரைநடையில் எழுதப்படுவன இலக்கியங்களா அல்லது செய்யுளில் எழுதப்படுவன இலக்கியங்களா என்றெல்லாம் அலசப்படுகிறது. அல்லது இரண்டையுமே இலக்கியங்களாக எடுக்கலாமா என்னும் எண்ணங்களும் இருக்கின்றன.  அறத்தை, நீதியை, தத்துவத்தை, சமயத்தை, ஆன்மிகத்தை எல்லாம்பற்றிக் கூறும்வகையில் அமைந்தவற்றை இலக்கியங்கியங்களாகக் கொள்ளலாமா ? அல்லது உணர்ச்சிகளை ஊட்டக்கூடியவற்றை, இன்பத்தை அள்ளித்தருவனவற்றை, பொழுதுபோக்கும் வகையில் எழுதப்பட்டவற்றை இலக்கியமாகக் கொள்ளலாமா? என்றெல்லாம் எண்ணும்  வகையிலெல்லாம் இலக்கியத்தைப் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

    இலக்கியம் என்பது அவ்வக்கால நிலைகளை வெளிப்படுத்திக் காட்டுவதாகவே அமையப் பெற்றிருப்பதைக் காண்கின்றோம். கிரேக்க, உரோம, மேல்நாட்டு இலக்கியங்களுக்கும் – தமிழ் இலக்கியங்களுக்கும் வேற்றுமைகளைக் காண்கின்றோம். மேல்நாட்டாரின் நாகரிகம், பண்பாடு இவற்றின் வெளிப்பாடுகளைத்தான் அவர்களது இலக்கியங்களில் காணமுடியும். எமது பண்பாடு, நாகரிகத்தைத்தான் எங்களின் இலக்கியங்களில் காணமுடியும். எனவே இலக்கியம் என்பது பண்பாடுகளையும் அதன் ஊடாக வருகின்ற நாகரிகத்தினையும் புலப்படுத்தவேண்டும் என்பதும் ஒரு கருத்தாகப்பேசப்படுகிறது.

    இந்த வகையில் பார்க்கின்றபொழுது எந்த இலக்கியவகை உயர்ந்தது எந்த இலக்கியவகை குறைவானது என மதிப்பிடுவதும் பொருத்தமற்றது என்பதும் ஒரு கருத்தாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் இலக்கியம் கொண்டுள்ள நோக்கமே அதனை உயர்நிலையிலும், வாழுமிலக்கியமாக்கும் நிலையிலும் இருந்தும்வருகிறது என்பதுமட்டும் உண்மையான கருதுகோளாக அமைகிறது எனலாம்.

    இலக்கியத்தின் நோக்கம் அல்லது குறிக்கோள் எப்படி இருக்கவேண்டும் என்னும் நிலையிலே – ” கற்றார்க்கு இன்பஞ் செய்வதுடன் அவர்கள் வாழ்வைத் திருத்திச் செம்மை செய்வதும் இலக்கியத்தின் பயன் ” என்றும் ” படிக்கும் பொழுதே இன்பஞ்செய்வது தவிர வேறு பயனை விளைக்கக் கூடாது ” என்றும் இருவேறுபட்ட பதில்களை இலக்கியத் திறனாய்வாளர்கள் முன்வைப்பதையும் பார்க்கமுடிகிறது. இதில் முதலாவது நிலையினைக் கைக்கொண்டனவாகத் தமிழிலக்கியங்கள் அமைந்திருப்பதனை அவதானிக்கலாம். சங்க இலக்கியங்களில் காணப்பட்ட பண்பாடுகள், தொடர்ந்து தமிழ் இலக்கியங்களில் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. சங்க இலக்கியங்களை யாவரும் பெரிதும் மதிக்கின்றனர்; போற்றுகின்றனர். சங்க இலக்கிய காலத்தைப் பொற்காலம் என்று விதந்தும் கூறுவதுண்டு.அந்தளவுக்கு அக்கால இலக்கியம் விளங்கியிருக்கிறது என்பது கற்றறிந்தோர் கருத்தாகும்.

    சங்ககால மக்களின் வாழ்க்கையை இயற்கையோடு இணைந்த வாழ்க்கை என்பர். இலக்கிய ஆய்வாளர்கள். வீரமும், காதலும்  அக்கால மக்களின் வாழ்க்கையின் அடித்தளமாக விளங்கியிருந்தன என்பதைச் சங்க இலக்கியங்கியங்கள் வாயிலாக அறிந்து கொள்ளமுடிகிறது.வீரமும், காதலும்.  பெருமளவில் போற்றப்பட்டாலும் கூட – அறக்கருத்துக்களும், நிலையாமை பற்றிய கருத்துக்களும் சங்க இலக்கியக்கியங்களில் கூறப்பட்டிருக்கின்றன.   இதற்குப்பல எடுத்துக்காட்டுகளைச் சங்க இலக்கியத்தில் புறநானூற்றுப் பாடல்களில் கண்டுகொள்ளலாம். கணியன் பூங்குன்றனாரின் ” யாதும் ஊரே யாவரும் கேளிர் ” பாடலை நோக்கினால் நிலையாமை பற்றிய சிந்தனையைக் கண்டு கொள்ளலாம். வறுமை ஒழித்தல், பசிப்பிணி போக்குதல், பகுத்துண்டு வாழ்தல், பழியினை ஒழித்தல், மறுபிறவி பற்றிய சிந்தனை, அறம்செய்யும் சிந்தனை என்று பல விடயங்களைச் சங்க இலக்கியம் வெளிப்படுத்தி நிற்கிறது. இந்த விடயங்கள் யாவும் மெய்ஞ்ஞானம் சம்பந்தப்பட்டனவாகும். எனவே மெய்ஞ்ஞான இலக்கியம் என்று பார்க்கும்பொழுது அந்தக் கருவானது சங்ககாலத்திலேயே கருக்கொண்டு விட்டதாகக் கருதபக்கூடயதாக இருக்கிறதல்லவா?

    அறம் பற்றியும், நிலையாமை பற்றியும், பேரின்பம் என்றால் என்ன என்பது பற்றியும், நல்லொழுக்கம், வாழ்வாங்கு வாழுதற்கான ஒழுங்கு முறைகள் பற்றியும் சிந்திக்கும் நிலையினை மெய்ஞ்ஞானம் என்கின்றோம். இந்தக் கருத்துக்களையெல்லாம் தன்னகத்தேகொண்ட இலக்கியங்கள் பெருமளவில் சங்கமருவிய காலப் பகுதியில் தோன்றுவதைக் காண்கின்றோம். “அறவொழுக்கங்களைப் பொருளாகக் கொண்டுள்ள நூல்கள் சிறந்த இலக்கிய வரிசையில் வைத்துப் பாராட்டப்படுவது தமிழ் மொழிக்கு உள்ள ஒரு தனிச்சிறப்பாகும். ஆங்கிலம் முதலிய பிற மொழிகளில் அறநூல்கள் இலக்கிய நூல்களாகக் கொள்ளப்படுவதில்லை”  எனப் பேராசிரியர் வி. செல்வநாயகம் அவர்கள் தம்முடைய ” தமிழ் இலக்கிய வரலாறு” நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    சங்ககால இலக்கியங்கள் அகம், புறம் என்று அமைந்திருந்தாலும் அவற்றில் ஆங்காங்கு மெய்ஞ்ஞானச் சிந்தனைகளும் இடம்பெற்றிருந்திருக்கின்றன. அரசர்களைத் திசைதிருப்பும் முகமாக அவர்களிடம் பரிசில்கள் பெறவருகின்ற புலவர்கள் நிலையாமைக் கருத்துகளை எடுத்துக்காட்டி நல்லன செய்யும்வண்ணம் தூண்டமுயல்வதைச் சங்க இலக்கியங்களில் காண்கின்றோம்.மெய்ஞ்ஞானத்தில் நிலையாமைக் கருத்து மிகவும் முக்கியமானதாகும்.

    உலகமும் அதில்காணப்படுகின்ற பொருள்களும்தான் உண்மையானவை என்ற சிந்தனையுடன் உள்ள இலக்கியங்கள் இன்பத்தை ஊட்டும் வகையில் வந்துவிடுகின்றன. இந்த உலகினுக்கும் அப்பால் பல உயர்ந்த விஷயங்களும் இருக்கின்றன, அவைதான் நிரந்தரமானவை, அதுதான் வாழ்வினைச் செம்மைப் படுத்தும் என்னும் நோக்கினை வெளிப்படுத்தும் வகையிலும் இலக்கியங்கள் தமிழில் அமைந்திருக்கின்றன. அதைத்தான் மெய்ஞ்ஞான இலக்கியம் என அழைக்கின்றனர் எனலாம்.

    இந்த மெய்ஞ்ஞான இலக்கியத்துள் பக்தியும், அறமும், நீதிக்கருத்துகளும், இணைந்துவிடுகின்றன. சங்கமருவிய காலத்தில் மெய்ஞ்ஞான இலக்கிய நூல்கள் பெருமளவில் தமிழிலக்கியமாக வந்திருக்கின்றன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பதினொரு நூல்கள் மெய்ஞ்ஞானம் சம்பந்தமான இலக்கியம் எனக்கொள்ளக் கூடியதாக அமைந்திருக்கிறது.

    பெரும்பாலும் இவற்றில் அறக்கருத்துக்களே வலியுறுத்தப்படுகின்றன. இதில் திருக்குறள் சற்று வித்தியாசமானதாகும். இதில் அறமும், பொருளும், இன்பமும் கூறப்பட்டாலும் இதில் மேலோங்கி நிற்பதாக மெய்ஞ்ஞானக் கருத்துக்கள் இடம்பெறுகின்றன. சிலப்பதிகாரம் சமயம் தழுவாத இலக்கியமாக இருக்கின்ற போதிலும் இதுவும் மெய்ஞ்ஞானச் சிந்தனைகளை வெளிக்கொணரும் நிலையில் இருப்பதையும் அவதானிக்க முடிகிறது. மணிமேகலை சமயம் தழுவியதாக இருந்தும் மெய்ஞ்ஞான இலக்கியத்தினுள் வந்துவிடுகின்றது.

    காரைக்கால் அம்மையார் தொடக்கிவைத்த பக்தி இலக்கியமானது நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் வளர்த்தெடுக்கப்படுகின்றது. பக்தி இலக்கியம் மெய்ஞ்ஞான வழியில் சிந்திக்க வைக்கின்ற காரணத்தால் அவற்றை மெய்ஞ்ஞான இலக்கியம் என ஏற்றுக்கொள்ளலாம் என இலக்கிய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    பல்லவர்காலமும், சோழர்காலமும் பக்தியை வளர்க்கின்ற சூழலைப் பெற்றிருந்த காரணத்தால் இக்கால இலக்கியங்கள் பெரும்பாலும் மெய்ஞ்ஞானச் சிந்தனையினை வெளிப்படுத்துவனவாகவே அமைந்திருந்தன என்பது பொதுவான அபிப்பிராயமாகும். சோழர்காலத்தில் வந்த கம்பராமாயணம் பல்வேறு சுவைகளைக் கொண்டதாக விளங்கிய போதிலும் அன்றும், இன்றும் மெய்ஞ்ஞான இலக்கியமாகவே யாவரலும் பார்க்கப்படுகிறது. ”பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” எனப் போற்றப்பட்டசேக்கிழாரினால் அளிக்கப்பட்ட பெரியபுராணம் மெய்ஞ்ஞானத்தை ஒவ்வொரு நிலையிலும் உணர்த்துவதாக விளங்கும் இலக்கியமாகிப் பலராலும் ஆராயப்படத்தக்கதாயும் இருக்கிறது. வில்லிபுத்தூராரின் மகாபாரதமும் இந்தவகையில் இணைந்து கொள்கின்றது. சீவகசிந்தாமணி இன்பத்தைச் சொன்னபோதிலும் அதிலும் மெய்ஞ்ஞானமே முக்கிய நோக்கமாக அமைவதையும் காணமுடிகிறது.

    சைவசித்தாந்தம் பற்றிய சிந்தனைகளை வெளிப்படுத்தும் பல இலக்கியங்கள்புறப்பட்டு வந்தன. இவை யாவும் மெய்ஞ்ஞான இலக்கியமாகவே யாவராலும்பார்க்கப்படுகிறது. நாயக்கர் காலத்தில் ஏற்பட்ட அரசியல்சூழலினால் சமூகமே மாறியது.இதனால் சமயம் சார்ந்த மடங்கள் பல தோற்றம் பெற்றுச் சமயத்தையும் , அதன் பாரம்பரியத்தையும் காப்பாற்றும் அவசியமும் தேவையும் உருவானது. இதனால் பல தலபுராணங்கள் இக்காலத்தில் மிகுதியாக வந்தன. கலம்பகம், பள்ளு, உலா, தூது என்றவகையில் மெய்ஞ்ஞானம் சார்ந்த இலக்கியங்கள் பெருமளவில் இடம்பிடித்துக் கொண்டன.

    சித்தர்களது இலக்கியங்கள் தமிழிலில் மிகுந்து காணப்படுகின்றன. இந்தவகையில் திருமூலரின் இடம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும். மூவாயிரம் பாடல்கள் கொண்ட அவரது திருமந்திரம் மெய்ஞ்ஞான இலக்கியத்தில் மணிமகுடமாக விளங்கிறது என்று பலரும் எண்ணுகின்றார்கள்.

    திருமூலரின் சிந்தனையானது நாத்திகமாகவும் தெரியும்; அதேவேளை ஆத்திகமாயும் கருத்துக்களை அள்ளிவழங்கியும் நிற்பதை நாம்கண்டு கொள்ளலாம். திருமூலர் வழியிலே வந்து வெட்டொன்று துண்டிரண்டாய் மெய்ஞ்ஞானக் கருத்துக்களைத் தந்துநிற்கின்றார் பட்டினத்து அடிகள். மெய்ஞ்ஞான இலக்கியம் என்றவுடன் முதலில்வந்து நிற்பவர் சித்தருள் உயர்ந்தவரான திருமூலர் அவர்களே. இந்த வகையில் வந்தன உயர்வான மெய்ஞ்ஞான இலக்கியங்கள் அல்லவா!

    அருணகிரிநாதர் தமிழ் இலக்கியவரலாற்றில் மிகவும் முக்கியமானவர். ஏனென்றால் அவர்கையாண்ட யாப்புவகை மிகவும் கடினமானதும் சிறப்பானதுமாகும். அவரின் கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி யாப்பைவிடத் திருப்புகழ் யாப்பே வியப்பினை நல்கிநிற்கும் யாப்பு என யாவருமே வியந்துபோற்றுகிறார்கள். சந்தத்தால் தமிழை வளம்படுத்தியதோடு மெய்ஞ்ஞான இலக்கியத்தில் தனது ஆற்றலை வெளிப்படுத்திய தமிழ்ப் பாவலராகவும் விளங்குகின்றார் அவர் எனலாம். தாயுமான சுவாமிகளின் அத்தனை படைப்புகளும் மெய்ஞ்ஞான இலக்கியமாகவே இருக்கின்றன. குமரகுருபரர் படைப்புகளும் மெய்ஞ்ஞான இலக்கியத்தினுக்கு வலுசேர்ப்பனவாகவே அமைந்துஇருக்கின்றன.

    இஸ்லாமியர்களும் மெய்ஞ்ஞான இலக்கியங்களை வழங்கித் தமது பங்களிப்பினால் அந்த இலக்கியத்தைச் செழிப்பாக்கி இருக்கின்றார்கள். உமறுப் புலவரால் இயற்றப்பட்ட சீறாப்புராணம், முதுமொழிமாலை, மெய்ஞ்ஞான இலக்கியமாய் மிளிர்வதைப் பார்க்கின்றோம். வண்ணக்களஞ்சியப்புலவர், அலியார் புலவர், குணங்குடி மஸ்தான் ஆகியவர்கள் மிகவும் சிறந்த இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்களை வழங்கி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

     ஈழத்தவர்கள் பலர் மெய்ஞ்ஞான இலக்கியங்களை அவ்வப்போது வழங்கி அந்த இலக்கியத்தை மெருகூட்டியிருக்கிறார்கள் என்பதை எவருமே மறந்துவிடக்கூடாது. சின்னத்தம்பி புலவர், கனகசபைப்புலவர்,சேனாதிராய முதலியார், மயில்வாகனப் புலவர், உடுப்பிட்டி சிவசம்புப் புலவர், சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் இவர்கள் அனைவரும் செய்யுளாலான மெய்ஞ்ஞான இலக்கியங்களை வழங்கி அதற்கு வலுவூட்டி இருக்கின்றார்கள்.  வசனநடையாலும், பிரசங்கம் என்னும் வகையாலும், தன்வாழ்நாள் முழுவதையும் மெய்ஞ்ஞான இலக்கிய வழிக்கே அர்ப்பணித்த மிகச்சிறந்த சிந்தனையாளரும், செயல்வீரரும்தான் நல்லைநகர் ஈந்தளித்த ஆறுமுகநாவலர் பெருமான் அவர்கள். தமிழிலே பல சீர்திருத்தங்களைச் செய்தாலும், தமிழ் இலக்கணத்தில் நுண்மாண் அறிவினைப் பெற்றிருந்தாலும் அவரைப் பொறுத்தவரை இவ்வுலக வாழ்க்கையில் இறைவனை நினைந்து வழிபட்டு முத்தியின்பம் பெறுவதை வலியுறுத்தும் வகையில்தான் அவரின் தமிழும் அவரின் இலக்கியச் சிந்தனையும் உருவாகி இருந்தது என்பது தெளிவான உண்மையெனலாம். எனவே நாவலர் பெருமானின் இலக்கியப் படைப்புக்களின் அடிநாதமாக மெய்ஞ்ஞானமே இருந்திருக்கிறது.

      “ நல்லைநகர் நாவலர் பிறந்திலரேல்
        சொல்லுதமிழெங்கே சுருதியெங்கே
        எல்லரிய வேதமோடு ஏத்துஆகமங்கள் எங்கே

    என்று நாவலர் பெருமானின் வரவினைப் போற்றிப்பாடும் அளவுக்கு அவரின் மெய்ஞ்ஞான இலக்கியப்பணிகள் அமைந்திருந்தன என்பது எமக்கெல்லாம் மிகப் பெருமையை அளிக்கிறது அல்லவா!

    கிழக்கிலங்கையில் உதயமான மெய்ஞ்ஞான ஞாயிறான சுவாமிவிபுலாநந்தர் அவர்களால் உயர்மெய்ஞ்ஞான இலக்கியங்கள் உதயமாகிருப்பதையும் மறக்கமுடியுமா? நாவலர் பெருமானுக்கு வாய்த்த சூழல் வேறு. சுவாமி அவர்களுக்கு வாய்த்த சூழல் வேறாகும். இருவருமே தமிழில் மிகச்சிறந்த பாண்டித்தியம் பெற்றவர்களாக மிளிர்ந்தபோதிலும் – அவர்களிடம் மெய்ஞ்ஞான நோக்கே நிறைந்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  ஆறுமுகநாவலர் காலத்தவரான கிறீஸ்தவ மதகுருவானசுவாமி ஞானப்பிரகாசரும் மிகச்சிறந்த புலமையாளராவர். அவராலும் மெய்ஞ்ஞான வழியில் பயணிக்கமுடிந்ததையும்காண்கின்றோம். நாவலரும் ஞானப்பிரகாசரும் இரண்டு கோணங்களில் நின்றாலும் அவர்களூடாக மெய்ஞ்ஞான இலக்கியம் செழுமைபெற்றது என்பது மனங்கொள்ளத் தக்கதே.

    ஐரோப்பியர் வருகையினால் அரசியல் மாற்றமும், சமயசமூக மாற்றங்களும் ஏற்பட்டன. அன்னிய மதங்களைப் பரப்பவந்த மதபோதகர்கள் பலர் தமிழைக் கற்றார்கள். கற்றதுடன் நின்றுவிடாது தத்தம் சமயங்களைப் பரப்பும் முகமாக மெய்ஞ்ஞான இலக்கியங்களைத் தமிழிலே தந்து தமிழிலக்கியத்துக்கு மேலும் வலுவூட்டி நின்றமை மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும்.   இந்தப் புதிய வரவு ஓர் எழுச்சியென்று கூடச்சொல்லலாம். தேம்பாவணி என்னும் இலக்கியம் கம்பராமாயணம், சீவசிந்தாமணி அளவுக்குச் சுவைமிகுந்த இலக்கியமாகி நிற்கிறது. இதனை ஆக்கியவர் பெஸ்கி என்னும் தனது பெயரினையே வீரமாமுனிவர் என ஆக்கிக்கொண்டார் என்பது இவரின் தமிழ்க் காதலைக் காட்டிநிற்கிறது எனலாம். தத்துவ போதக சுவாமிகள், ரேனியுஸ் ஐயர், ஜி.யூ.போப், டாக்டர் கால்டுவெல் ஆகியோர் மெய்ஞ்ஞான இலக்கியங்களைத் தந்த தமிழர் அல்லாதவர்கள் என்பது மிகவும் முக்கியமான செய்தியாகும்.

    பாரதியார் தேசியக்கவிஞனாக விளங்கிய பொழுதிலும் அவரின் படைப்புகளிலும் மெய்ஞ்ஞானச் சிந்தனைகள் நிறையவே காணப்படுகின்றன. திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், மெய்கண்டார் ஆதீனம், அளவிறந்த மெய்ஞ்ஞான இலக்கியங்களை உரைநடையிலும், செய்யுளிலும் வழங்கியிருக்கின்றன. இன்றுவரை அப்பணிகள் தொடர்ந்தபடியே இருக்கின்றன.

    பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் பலர் மெய்ஞ்ஞான இலக்கிய கர்த்தாக்களாக மிளிர்ந்தமையையும் காணமுடிகிறது. இந்த வகையில் மு.தளையசிங்கத்தை நோக்கலாம். மிகக்குறுகிய காலம்… அதாவது பாரதியார் போலவாழ்ந்தாலும் வாழ்ந்தகாலத்தில் மெய்ஞ்ஞானம் பற்றிய நிலையினுக்கு ஆட்பட்டு பகவான் ஶ்ரீநந்த கோபாலகிரியிடம் தீட்சையும் பெற்றுக்கொண்டார். “சர்வமதங்களும் சமமானவையல்ல. எல்லாம் ஒன்றே” என்ற ஞானம் சகல மக்களினதும் இன, மத, மொழி, கலாசார ஆணவத்தடைகளை அறுப்பதோடு அதன் இடத்தில் எழுகின்ற புது யுகத்தின் எல்லாப் பொதுமைகளையும் நிலைநாட்டவும், சகலமக்களையும் மெய்யை நோக்கி ஆற்றுப்படுத்தவும் சர்வமத ஐக்கியத்துவம் தூண்டுகிறது. இத்தூண்டுதலின் கலை ஒலிப்பே பாரதிகண்ட கிருதயுகம். பாரதி விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதாவின் சீடனாவர். அரவிந்தரோடும் உறவாடியவர். இந்த அனுபவச் சூழலின் தரிசன வார்ப்பாகவே மு.தளையசிங்கம் அவர்கள் விளங்குகின்றார். அவரின் மெய்ஞ்ஞான நிலை இதுவேயாகும். இந்த அடிப்படையில்தான் அவரின் மெய்ஞ்ஞானத் தத்துவவப் படையலாக “போர்ப்பறையும்”, மெய்யுளும் ” அமைந்து  இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். சர்வோதய சிந்தனைகளைத் தனது மனத்தில் நிறைத்தவராக தளையசிங்கம் இருந்தததால் அவரின் மெய்ஞ்ஞான இலக்கியச்சிந்தனையும் அதன்வழியிலேயே சென்றிருக்கின்றது. பாரதியை மிகவும் நேசித்த சிந்தனைவாதியாக மு. தளையசிங்கம் இருந்தமையால் அவரின் மெய்ஞ்ஞான இலக்கியமும் அதனையொட்டியே நகர்வதனையும் காண்கின்றோம்.

    மெய்ஞ்ஞான இலக்கியத்தின் உச்சம் என்பது தமிழிலக்கிய வரலாற்றில் சங்கமருவிய காலத்தின் பின்னர் ஆராம்பித்துச் சோழர்காலத்தில் உச்சம்பெற்று நாயக்கர் காலத்தில் புதுவடிவம்தாங்கி வந்திருக்கிறது என்றுதான் சொல்லலாம்.

    மெய்ஞ்ஞான இலக்கியம் என்று நோக்கும்பொழுது – இன்றும் அதன் நிலை உச்சம் என்று கொள்ள முடியாவிட்டாலும் வீழ்ச்சி என எடுத்துக் கொள்ளமுடியாமலே இருக்கின்றது. ஏனென்றால் இன்றும் மெய்ஞ்ஞான இலக்கியமானது எப்படியோ வந்துகொண்டேயிருப்பதைக் காண்கின்றோம்.

    வடிவம் மாறியிருக்கலாம்; ஆனால் வண்ணம் மாறவில்லை எனலாம். உரைநடையில் பல மெய்ஞ்ஞான இலக்கியங்கள் இன்றும் வந்தபடிதான் இருக்கின்றன. சினிமாக்கவியாக வளர்ச்சிபெற்றாலும் நல்ல சிந்தனைக் கவியாயும் விளங்கியவர்தான் கவியரசு கண்ணதாசன். அவர் செய்யுளினால் இயேசுகாவியத்தையும், உரைநடையால் அர்த்தமுள்ள இந்துமதத்தையும் மெய்ஞ்ஞான இலக்கியமாக்கித் தந்துள்ளதை  மறுக்கமுடியுமா!

    புராணங்களை அடிப்படையாகக் கொண்டு பேச்சுமுறை இலக்கியத்தாலும், சமயதத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு உரைநடை இலக்கியங்களாலும் வையத்துள் வாழ்வாங்குவாழும் வழிவகைகளைக் கற்றாரும் மற்றாரும் மனங்கொள்ளும் வகையில் மெய்ஞ்ஞான இலக்கியங்களை வழங்கிநின்ற வாரியார் சுவாமிகளை மறக்கமுடியுமா! பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்களினால் வழங்கப்பட்ட அரிய பெரிய மெய்ஞ்ஞான இலக்கியங்களைத்தான் மறக்க முடியுமா!

     கணனியுக காலத்திலும்கூட மெய்ஞ்ஞான இலக்கியமாக வெளிரும் பக்திவிகடன், ஞானபூமி, பக்திக் குமுதம், தமிழ்நாட்டில் அரசினால் வெளியிடப்பட்ட திருக்கோயில் சஞ்சிகை இவையெல்லாம் மெய்ஞ்ஞான இலக்கியம் பற்றிய சிந்தனை இப்பொழுதும் இருக்கிறது என்பதைக் காட்டுகிறதல்லவா!

    நாத்திகமும், ஆத்திகமும் உலகம் உருவான காலந்தொடக்கமே இருந்து வருகிறது. அதற்கேற்பவே அவ்வக்காலத்து எழுந்த இலக்கியங்களும் அமைந்தும் வந்திருக்கின்றன. இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்பதை ஏற்றுக்கொள்வோமேயானால் மெய்ஞ்ஞான இலக்கியம் ஒருகுறிப்பிட்ட காலத்தில் அக்காலச் சூழலினைவைத்து உச்சநிலை எய்தியிருக்கலாம் என எண்ணமுடிகிறது. அதேவேளை தற்கால சூழலில் மெய்ஞ்ஞான இலக்கியம் பற்றிய சிந்தனைக்கு ஏற்பவே அந்தவகை இலக்கியங்களும் வருகின்றன.

    இன்று நிலவும் சூழலானது நூறுசதவீதம் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண் டதேயாகும். இங்கு விஞ்ஞானமே எல்லாவற்றிலும் முன்னிற்பதை எவராலும் தவிர்த்துவிடவோ அன்றித் தடுத்துவிடவோ முடியாது. விஞ்ஞானம் அரியாசனத்தில் வீற்றிருக்கின்ற நிலையில் மெய்ஞ்ஞானம் சற்று அடக்கி வாசிக்கவேண்டிய சூழலே ஏற்பட்டிருக்கின்றது. அதனால் மெய்ஞ்ஞானம் பற்றிய சிந்தனை இல்லாமற்போய்விட்டது என்பது அர்த்தமல்ல.

    இலக்கியம் காலத்தைப் புலப்படுத்தும் பாங்கில் இருப்பதால் இக்கால நிலைமையினை அனுசரித்துப் பலவகைஇலக்கியக்கியங்கள் பல்கிப்பெருகி வந்துகொண்டே இருக்கின்றன.அதற்கிடையில் மெய்ஞ்ஞானபடைப்புகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இதனால் மெய்ஞ்ஞான இலக்கியம் என்று பெரியளவில் அதாவது உச்சம் என்று சொல்லும் அளவுக்குக் காணப்படவில்லை என்பது நோக்கத்தக்கதே. ஆனாலும் மெய்ஞ்ஞானம் என்னும் சிந்தனை மனங்களில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

     

    Share
  • “கரையைத் தேடும் அலைகள்” – நூல் மதிப்புரை

    உமாஸ்ரீ 

    நான் ரசித்த புத்தகம் – லக்ஷ்மி ரமணனின் “கரையைத் தேடும் அலைகள்”

    சிறுகதை எழுதுவது ஒரு கலை. சிறப்பாகச் சிறுகதை எழுதுவது ஒரு தனித்திறமை. எழுத்தாளர் லக்ஷ்மி ரமணனிடம் அது மிகுதியாக இருக்கிறது. லக்ஷ்மி ரமணன் ஒரு அருமையான எழுத்தாளர். குடத்திலிருக்கும் விளக்குப் போல் அடக்கம் மிகுந்தவர். வாசகர்களின் அன்புக்கும் மதிப்புக்கும் உரியவர்.

    book-reviewஅவர் எழுதிய ”கரையைத் தேடும் அலைகள்” என்னும் புத்தகத்தைப் படிக்கும் பாக்கியம் கிடைத்தது. ஒரு நாவலும், ஒரு குறு நாவலும், ஒன்பது சிறுகதைகளும் ஆக மொத்தம் 11 கதைகளைக் கொண்ட ஒரு அருமையான தொகுப்பு. மொத்தம் 224 பக்கங்கள்.  கண்ணில் பட்டால் விட்டுவிடாதீர்கள்.

    கரையைத் தேடும் அலைகள்” அமரர் ரங்கநாயகி அம்மாள் நினைவாகப் பரிசு பெற்ற நாவல். 15 அத்தியாயங்கள். 105 பக்கங்கள். பிருந்தா, சபேசன் தம்பதிகள் அமெரிக்காவில் டெட்ராயிட் விமான நிலையத்தில் இறங்குகிறார்கள். அமெரிக்காவில் நிகழ்ந்த சம்பவங்கள். மகிழ்ச்சி பொங்க மனநிறைவைத் தந்த சம்பவங்களுடன் அவர்களது அமெரிக்க விஜயம் நிறைவு பெற்றது! என்று  நாவலை முடிக்கிறார் ஆசிரியர்.

    நேற்று இல்லாத மாற்றம்”  சிறுகதையும் அமெரிக்காவில் உள்ள இந்தியக் குடும்பத்தில் ஏற்பட்ட விரிசலைப் பற்றியும் அது எப்படிச் சாதுர்யமாகத் தீர்க்கப்படுகிறது என்பதையும் அழகாக விவரிக்கிறது.

    அமுதசுரபி சிறுகதைப் போட்டியில் பரிசு வாங்கியbook-review-1 கதைகள் “ பத்து பவுன் சங்கலி”  மற்றும் ”அத்தையின் கட்டில். ” லோகநாயகி அத்தை அபூர்வ பிறவி. பத்து வருடமாய்த் தனக்கு அடைக்கலம் தந்த கட்டில், இங்கேயே என் உயிர் பிரியட்டும்னு சந்தோஷமாச் சொன்னா. முடிவு வந்துடுத்தேன்னு கலங்கவே இல்லை. போர் பூமியில் நிற்கிற வீரன் மாதிரி… “

    அவர் பிரிவு கேட்டு அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். கட்டில் மள மளவென்று முறிஞ்சி பீஸ் பீஸாய் விழுந்துடுத்தாம்.

    என் கண்களில் பொங்கிய நீரை அடக்கிக் கொண்டேன். அத்தைக்கு அழுதால் பிடிக்காது“ என்று கதையை முடித்திருப்பார் ஆசிரியர். ஆனால் கதையைப் வாசிக்கும் வாசகரின்  கண்ணில்வரும் நீரை அடக்க முடியாது என்பது உறுதி.

    கலைமகள் அமரர் சூடாமணி நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதைதான் “சொல்லாமலே” .

    இலக்கிய பீடம் இதழில் வெளியான துணை, தேவி வார இதழில் வெளி வந்த  ஒரு கைத்தடியின் பயணம் மற்றும் பந்தம் ஆகிய இரண்டு சிறுகதைகளும் குறுநாவலான லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்த காற்று நகரில் ஒரு காதல் கதை என எல்லாமே அருமையான கதைகள்.

    இப்போது தில்லி தூரமில்லை  – இலக்கியப் பீடம் பரிசுபெற்ற கதை –சிவாவின் காதல் நிறைவேறாமல் போய்விடுகிறது. அதற்கு விதிதான் காரணம் என்பது கதையின் கரு.

    ஒரு கதை  – சுதேசமித்திரனில் வெளிவந்த கதை. இது என்னைப் பற்றிய கதையல்ல என்று ஆரம்பிக்கும் ஆசிரியரின் கதை சொல்லும் உத்தி மனதைக் கவருகிறது.

    நல்ல கதை, ஆற்றோட்டமான நடை, ஒரு முறை படித்தால் மறுபடியும் படிக்கத் தூண்டுமளவுக்கு மிகவும் சுவாரஸ்யமான எழுத்து. சிறுகதை எழுத ஆவலாயிருப்பவர்கள் அவர் கதைகளை முன்னோடியாய்க் கொள்ளலாம்.

    எழுத்தாளர் லக்ஷ்மி ரமணன் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்!

     

    Share
  • கண்கள் உடைக்கின்ற பாறை

     

     

    ராஜகவி ராகில் 

     

     

    உன்னிடம் குதிரையிருக்கலாம்

    குதிரை நீயென ஆசைப்படு

    உன் கால்களால் நடக்கவும் ஓடவும் பாயவும் குதிக்கவும்

    விரைந்து கடக்கவும்

     

    உன் கால்கள் சக்கரங்கள்

    உன் கால்கள் சிறகுகள்

    உன்னை நகர்த்திச் செல்லவும்

    உயரம் ஏறி நீ தொடவும்

    பறந்து வானம் பிடிக்கவும்

     

    அறுந்து போன ஒற்றைச் செருப்பு

    ஒரு கால் உடைந்த ஆசனம் என

    எண்ண இயந்திரம் உன் எரிபொருள் பெறுமாகிடின்

    உயிர்க்கும் உன் அவ நம்பிக்கை

     

    அவநம்பிக்கைப் புயல் சோம்பற் கோடை

    நெருங்கச் செய்திடின்

    பட்டுப் போய்விடும் வாழ்க்கை வேர்

     

    நம்பிக்கை

    தலையிலிருக்கும் மலையையும் சிறு கல்லாக்கிவிடும்

    அவ நம்பிக்கை

    தலையில் படிகின்ற தூசையும்

    மலையாக்கிவிடும்

     

    காற்று பாறை ஆனால்

    உன் மூக்குச் சம்மட்டி கொண்டு உடைத்துச் சுவாசி

    கண்களால் மெழுகுவர்த்தி ஏற்று

    பாதை இருளென்றால்

     

    உனக்குள் மழை இருக்கும் போது

    கோடையிடம் முறையிடாதே

    உனது நீரூற்றை நீதான் கண்டு பிடிக்க வேண்டும்

     

    மரம் நிற்கிறது என்கிறாய்

    அது வேர்களால் நீர் நோக்கி நகர்வது மறந்து

    தீ நேசி

    அதன் சுறு சுறுசுறுப்புக்காக .

     

    Share