Year: 2016

  • இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    பவள சங்கரி

    dsc00113

    நேற்றைய பாடமும், இன்றைய வாழ்வும், நாளைய நம்பிக்கையும், சத்தியமும், சாதுர்யமும், உடன்வர புத்தாண்டின் ஒவ்வொரு நாளும் இனிய நிகழ்வுகளையும், கனவுகளையும் சுமந்துவந்து இன்ப அதிர்ச்சிகளால் உள்ளம் குளிரச்செய்ய வாழ்த்துகள்!

    கலையாத கல்வியும், குறையாத வயதும்,
    ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும்,
    குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,
    சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்,
    தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும்,
    மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,
    தொலையாத நிதியமும், கோணாத கோலும்,
    ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்,
    துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப்,
    பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்;
    அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே!
    ஆதி கடவூரின் வாழ்வே!
    அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
    அருள் வாமி! அபிராமியே! (1)

    சகல செல்வங்களும் தரும் இமயகிரிராச
    தனயை மாதேவி! நின்னைச்
    சத்யமாய் நித்ய முள்ளத்தில் துதிக்கும் உத்
    தமருக்கு இரங்கி மிகவும்
    அகிலமதில் நோயின்மை கல்வி தனதானியம்
    அழகு புகழ் பெருமை இளமை
    அறிவுசந்தானம் வலிதுணிவு வாழ்நாள் வெற்றி
    ஆகு நல்லூழ் நுகர்ச்சி
    தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ
    சுகானந்த வாழ் வளிப்பாய்.
    சுகிர்த குணசாலி! பரிபாலி! அனுகூலி! திரி
    சூலி! மங்கள விசாலி!
    மகவுநான் நீதாய் அளிக்கொணாதோ? மகிமை
    வளர்திருக் கடவூரில் வாழ்
    வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமிமகிழ்
    வாமி! அபிராமி உமையே!

    அபிராமி பதிகம்

     

    Share
  • விடைபெறும் 2016!

    பவள சங்கரி

    தலையங்கம்

    2016ஆம் ஆண்டில் விதவிதமான அனுபவங்களைச் சந்தித்தாகிவிட்டது நம் நாடு. சில  வெற்றிகளோடு சோதனைகளும், சோகங்களும் சேர்ந்து நாட்டையே உலுக்கி விட்டன. பொருளாதார சீர்திருத்தம் பொறுத்தவரை  பல்வேறு நாடுகளும் முடிவெடுக்கத் தயங்கக்கூடிய விசயங்களில் நம் நாட்டுப் பிரதமர் அதிரடியாக, துணிவுடன் எடுத்த முடிவின்படி 50 நாட்களில் நிலைமை சீர்பெறும் என்ற அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் இன்னும் திறக்கப்படாத 60 சதவிகித ஏடிஎம்கள் , பல இடங்களில்  செயல்படாத வங்கிகள் என மக்கள் சிரமங்கள் இன்னும் தீராத நிலையிலேயே உள்ளது. மத்திய வங்கி போதுமான உயர் மதிப்பு நோட்டுகள் இருப்பில் உள்ளதாக அறிவித்துள்ளது. ஜனவரி 1, 2017, அதாவது நாளை முதல் ஏடிஎம்களிலிருந்து ₹ 2500 க்கு பதிலாக ₹4000 எடுக்கலாம் என்று அறிவித்திருந்தாலும், பெரும்பாலான திறக்கப்படாத வங்கிகளிலிருந்து எப்படி பணம் பெற இயலும் என்பதே மக்களின் தீராத பிரச்சனையாக உள்ளது. பொதுவாக வங்கிகளைப் பொறுத்தவரை நிலைமை ஓரளவிற்குச் சீரடைந்துள்ளது என்றே சொல்லமுடிகிறது. அனைத்து ஏடிஎம்களும் சரியாக செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலாளர்கள் வேதனையின் உச்சத்தில் உள்ளதையும் மறுக்க முடியவில்லை. தொழிலாளத் தோழர்களின் வேலையின்மையும் அதிகரித்துள்ளன. வியாபாரங்களும் சரிவைச் சந்தித்துள்ளன. இந்த வகையில் 2016 ஆம் ஆண்டு சலசலப்புடனேயே நிறைவடைந்துள்ளது. 2017இல் ஜிஎஸ்டி மூலமாக வியாபாரங்கள் செழிப்படைந்தும், விவசாயப் பெருங்குடி மக்களின் வேதனைகள் தீர்ந்து, அனைத்து மக்களும் வளமான வாழ்வைப் பெறவும் வாழ்த்தி வரவேற்போம்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”பைகொண்ட பாம்பணை பாயில் படுத்துறங்கும்
    வைகுண்ட வாசலின் வாட்ச்-மேனை -மைகொண்ட
    கண்ணாள் திருவில்லி கெஞ்சித் திருப்பாவை
    சொன்னாள் திறந்திடஸீ ஸே’’….கிரேசி மோகன்….!

    Share
  • புத்தாண்டு வாழ்த்துக்கள்….

     

    images

    ’’நேற்று நடந்ததை நாளை நடப்பதை
    மாற்ற முயலாய் மடமனமே -காற்றுன்னுள்
    வீசுகையில் தூற்றிக்கொள் வாய்க்கும்பார் புத்தாண்டு
    காசுமலர் நாளாய்ப் பிறப்பு’’….

    ”மத்தாண்ட கண்ணா மகாபா ரதம்செய்தோய்
    புத்தாண்டை, ஸ்ரீவில்லிப் புத்தூரின் -தத்தைமேல்
    காதல் வயப்பட்டு கல்யாணம் கொண்டவரே
    தீதில்லா ஆண்டாகத் தா”….கிரேசி மோகன்….!

    Share
  • மார்கழி மணாளன் 16

     

     

    திருச்சித்ரக்கூடம் (சிதம்பரம்) – அருள்மிகு கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோவில்

     ag

    கண்களில் மகிழ்வும் கழுத்தினில் மாலையும்

    கைகளில் சூலமும் கால்களில் சலங்கையும்

    மார்பினில் சாம்பலும் மனத்தில் வேகமும்

    அகத்தில் சக்தியும்  ஆனந்தத் தாண்டவமே !

     

    தாண்டவமாடும் தாள்கள்கூடத் தமனிகள் ஆடும்

    தாளங்கள்போட்டு நாளங்களுள்ளே நினைவுகள் ஆடும் 

    கோளங்களாடக் குவலயமாடக் கோவிந்தன் பார்வையிலே

    கூத்தவனாடும் காட்சிகள் காண்பது தில்லையிலே!

     

    போட்டியிலாடிய  பூவை தில்லை போற்றிடவே 

    பார்த்தனின் சாரதி பார்வையிலங்கே பேரருளே!

    சேடனின் ஆசையும் சடுதியில் நிறைந்திட 

    கயிலையும்  வைகுந்தமும் காணக்  கிடைத்ததுவே !

     

    அரவணை மேலுறை அரங்கன் ஆனந்தன்

    வருவினை தீர்த்திடும் வாமனன் விக்ரமன்

    அஞ்சனை புதல்வனை அன்புடன் அணைத்தவன்

    தஞ்சம் கொண்டவர் நெஞ்சம்  நிலைப்பவன்

     

    குறையெல்லாம் தீர்ப்பான் குணசீலன் கோபாலன்

    நிறைவான மனம்கொண்ட நிர்மாலன் நீர்வண்ணன்

    மலைவாழும் கோவிந்தன் மனமிறங்கி வந்திடுவான்

    இணையாகத் தெய்வமில்லை இதயத்தில் அவனிருக்க!

     

    எழுவாய் எழுவாய் எழுத்துக்குள் அடங்காதவனே

    எழுகடல் அலைகளென எண்ணில்லாத் துயரங்கள்

    ஏக்கத்துடன் விழியிறங்கி நின்பாதம் தேடுகையில்

    ஏளனம் தேவையில்லை ஏதுவாய் வந்திடுவாயே !

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav
    ’கொல்லையில் பூத்தவள், கோதை திருப்பாவை
    சொல்லையே நம்பினாள் ஸ்ரீவில்லி -வல்லியவள்
    மாலிடம் காதல், மணமடைந்தாள் நோன்பிருந்து,
    தோளிடைப் பூண்டளித்தாள் தார்’’….கிரேசி மோகன்….!

    கொல்லையில் பூத்தவள் -புழக்கடை துளஸி வனத்தில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப் பட்டவள் கோதை நாச்சியார்….!
    தார் -மாலை -சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆண்டாள்….!

    Share
  • ராசி

    செல்வ மாணிக்கம் பழனியப்பன்

    சகுணம்,  ராசியை நம்பு பவர்களா நீங்கள். நம் கதையின் நாயகன் ராஜாவிற்கு நேற்று  வரை அந்த நம்பிக்கை இருந்தது. காலையில் எழுந்திருக்கும்  போது,  கண்ணாடியில் அவன் முகத்தை முதலில் பார்த்து விட்டுத்தான் அவனுடைய வேலையைத் தொடங்குவான். வீட்டை விட்டு வெளியே கால் எடுத்து வைக்கும் முன் யார் எதிரே வருகிறார்கள் என்று பார்த்துத் தான் வெளியே கிளம்புவான். எதிரே சுமங்கலி யாராவது வர வேண்டும், இல்லாவிட்டால் கோவில் மணி காதில் கேட்க வேண்டும், இல்லா விட்டால் பசு மாடு எதிரே வர வேண்டும். சுபச்சொல் தான் காதில் விழ வேண்டும்.இவ்வளவு ஏன்,ராஜாவின் பூர்வாசிரம பெயர் என்ன தெரியுமா செல்வநிதி . அப்பா, அம்மா ஆசையுடன் வைத்த பெயர். கொஞ்ச நாட்களுக்கு முன் பெயரை மாற்றி ராஜா என்று வைத்துக்கொண்டான். பெயரில் செல்வம் என்று இருந்தால் காசு தங்காதாம். ராஜாவிற்கு சொந்த வீடு இருந்தது. அப்பா கட்டிய அழகான வீடு. வீட்டின் எண் ஏழு. கொஞ்சம் நாட்களுக்கு முன், சென்னை மாநகராட்சி கைங்கரியத்தினால், ராஜாவின் வீட்டு எண் எட்டு என்று மாற்றப்பட்டு விட்டது. உடனே ராஜா என்ன செய்தான் தெரியுமா?  வீட்டை வந்த விலைக்கு விற்று விட்டு, வாடகை வீட்டுக்குப்போய் விட்டான். திருமணத்திற்கு, பெண் பார்த்தபோது கூட, லெட்சுமி என்ற பெயருள்ள பெண், அதுவும் அக்கா இல்லாத பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து கொண்டான். லெட்சுமியின் அக்கா மூதேவி என்ற ஐதீகத்திற்காக!

    தப்பித்தவறி அவனுடைய விதவை பாட்டி  இவன் கிளம்புவது தெரியாமல் வெளியே  எதிர்ப்பட்டு விட்டால் தொலைந்தது, அம்மாவையும், மனைவியையும் திட்டித் தீர்த்து விடுவான். துக்க வீட்டுக்கு போக மாட்டான். வெள்ளிக்கிழமை என்ன அவசரம் என்றாலும் எதையும் வாங்க மாட்டான். தனலெட்சுமி வீட்டை விட்டு போய் விடுவாளாம். எத்தனையோ தடவை கேஸ் சிலிண்டர் வெள்ளிக்கிழமைகளில் வந்து விட்டு திரும்பப்போயிருக்கிறது. சனிக்கிழமைகளில் டாக்டரிடம்  போனால் தொடர்ந்து போக வேண்டி இருக்கும் என்று சனிக்கிழமைகளில் டாக்டரிடம் போக மாட்டான். இதனால் ராஜா  இழந்தது ஏராளம். இருந்தாலும் வர வேண்டிய பெரிய இழப்பு, அவன், ராசி, சகுணம் பார்த்ததால் தான் இந்த அளவோடு போனது, என்று சப்பைக்கட்டு  கட்டுவான். நேற்று காய் வாங்க மார்கெட்டுக்கு போய் இருந்தான் ராஜா. காய்காரம்மா ராஜாவைப் பாத்து, சாமி நீ தான் முதல் போனி.என்ன வேணுமோ எடுத்துக்கோ. காய் வாங்கி கணக்கு பார்த்ததில் 160 ரூபாய் வந்தது. 10ரூபாய் தள்ளி 150ரூபாய் காய்காரம்மா மகிழ்ச்சியாய் வாங்கிக் கொண்டாள். ராஜாவுக்கு அவனுடைய ராசியில் எப்போதும் பெரிய நம்பிக்கை  உண்டு. அவனுடைய ராசியால்  தான்  அவன் வேலை பார்க்கும் நிறுவனம் மிகப் பெரிய லாபம் ஈட்டி வருவதாக சொல்லிக்கொண்டிருப்பான்.

    அவன் மனதில் நினைத்துக்கொண்டான், அவன், காய்காரம்மாவின் வியாபாரத்தை அன்று ஆரம்பித்து வைத்ததால் அந்த அம்மாவிற்கு வியாபாரம் அமோகமாக இருக்கும்  என்று. அன்று மாலையே மீண்டும் அந்த காய் கடைக்கு போக வேண்டி வந்தது ராஜாவிற்கு. காலையில் மேக மூட்டமாக இருந்ததால், மழை வரும் என குடை கொண்டு போய் இருந்தான். அதை கடையிலே மறந்து வைத்துவிட்டான். அதை எடுத்து வருவதற்காக மாலை அந்தக்கடைக்குச் சென்றான். கடையைச்சுற்றி ஒரே கூட்டம். ராஜாவிற்கு பெருமை தாங்கவில்லை. அவன் நினைத்துக்கொண்டான், தான் காலையில் ஆரம்பித்து வைத்த வியாபாரம் இன்னும் தொடர்கின்றது என்று. அருகில் சென்றவுடன் , அந்த காய்காரம்மாவின் அழுகையுடன் கூடிய கூச்சல் கேட்டது. கடை அருகே காய் அனைத்தும் நசுங்கியும், மிதிபட்டும் சிதறிக்கிடந்தன. கடை முழுதும் நொறுக்கப்பட்டுக் கிடந்தது. பக்கத்தில் சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.”காலையில ஒரு ஆளை நாலஞ்சு பேர் தொரத்திக்கிட்டு வந்திருக்காங்க. ஏதோ தகராறு. அவன் பயந்து இந்தக் கடையிலெ நுழைஞ்சுட்டான். அவன அடிக்கிற மும்முரத்தில, இந்தக் கடைய அடிச்சு உடைச்சிட்டாங்க. அந்த காய்காரம்மா புலம்பிக்கொண்டிருந்தாள்.”நானும் இருவது வருசமா வியாபாரம் பன்னிக்கிட்டு இருக்கேன். இப்பிடி நடந்தது இல்ல. காலையில ஒரு புண்ணியவான்  முதல்  போனி பண்ணி என் வியாபாரத்துக்கே வேட்டு வைச்சிட்டானே! “

    Share
  • பொலிந்துவிட வா !

     

        ( என் .ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

     

    இரண்டாயிரத்துப் பதினேழே

    இன்முகத்துடனே எழுந்தோடிவா

    இயலாமைபோக்கிட எழுச்சியொடுவா

    வறுமையொடு பிணியகல

    வரம்கொண்டு வா

    வளங்கொளிக்கும் வாழ்வுவர

    மனங்கொண்டு வா

    அறியாமை இருளகல

    அறிவொளியாய் வா

    அரக்ககுணம் அழித்துவிட

    அஸ்த்திரமாய் வா

    நிலையாக தர்மமெங்கும்

    நிறுத்திவிட வா

    நிம்மதியாய் வாழ்வுவர

    நீநினைந்து  வா !

     

    சாதிமதச் சண்டையினை

    சம்கரிக்க வா

    சமாதானம் குலைப்பார்க்கு

    சவுக்காக வா

    நீதியொடு சமாதானம்

    நிலைநிறுத்த வா

    நிட்டூரம் செய்வாரை

    குட்டிவிட வா

    வாதமிட்டு வம்புசெய்வார்

    வாயொடுக்க வா

    வாழ்வென்றும் வசந்தம்வர

    மனம்சிரித்து வா !

     

    சாந்தியுடன் சமாதானம்

    கொண்டுநீ வா

    சச்சரவு ஒழித்துவிடும்

    தீர்வுடனே வா

    காந்திபோல பலமனிதர்

    பிறக்கவெண்ணி வா

    கசடெல்லாம் கழன்றோட

    காத்திரமாய் வா

    பூந்தோட்டமாய் உலகு

    பொலிந்துவிட வா

    புதுத்தெம்பு வாழ்வெல்லாம்

    புறப்படநீ வா !

     

     

    ஆட்சிபுரி உள்ளங்கள் மாறவேண்டும்

    அவர்மனதில் அறவுணர்வு தோன்றவேண்டும்

    அதிகாரம் காட்டுவார் திருந்தவேண்டும்

    அமைதிபற்றி அவர்மனது நினைக்கவேண்டும்

    காட்டுத்தனம் நாட்டைவிட்டு நீங்கவேண்டும்

    கருணைபற்றி யாவருமே எண்ணல் வேண்டும்

    நாட்டினிலே நலன்கள்பல பெருகுதற்கு

    நன்மைதரும் ஆண்டாக வருவாய் நீயும்!

     

    உன்னைவரவேற்க உவப்புடனே இருக்கின்றோம்

    முன்னைக் கவலையெலாம் முழுதாகபோக்கிவிடு

    அன்னை எனநினைத்து ஆவலுடனிருக்கின்றோம்

    அரவணைத்து ஆதரிக்கும் ஆண்டாகநீவருக !

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (224)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். ஆண்டின் முடிவிலே, அடுத்தொரு ஆண்டின் ஆரம்பத்திலே எனதி 2016ஆம் ஆண்டின் இறுதி மடலினூடாக உங்களுடன் இணைகிறேன். அடுத்த மடல் உங்களோடு பேசும்போது அது புதியதோர் ஆண்டின் புதுமடலாக மலர்ந்திருக்கும் என்பதுவே உண்மையாகிறது. முடியும் ஒவ்வொரு ஆண்டும் தனக்குள்ளே அவிழ்க்காத பல முடிச்சுக்களை அடுக்கி வைத்துக் கொண்டே மறைகிறது. உள்ளத்தை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் பல உன்னத நிகழ்வுகளைத் தன்னுள்ளே தாங்கிக் கொள்கிறது. தொட்ட பல மைல் கற்களையும், ஏக்கங்களாகத் தொங்கிக் கொண்டிருக்கும் பல நிறைவேறாத எதிர்பார்ப்புகளையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டினை உதைத்துச் சரித்திரம் எனும் ஆழியினுள் தள்ளிக்கொண்டே அடுத்த ஆண்டு பிறக்கிறது. புதிய உத்வேகம், புதிய எதிர்பார்ப்புகள், புதிய முனைப்போடு எதிர்கொள்ளும் காலச் சவால்கள் என அனைத்தையும் எதிர்பார்த்துக் கொண்டு புதிய ஆண்டினுள் நாம் நுழைகிறோம்.

    2017 எனும் ஆண்டு நான் வாழும் இந்த ஐக்கிய இராச்சியம், உலக நாடுகள் என அனைத்திலும் பல மாற்றங்களை எதிர்நோக்கிக் கொண்டே பிறக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் இலக்கு, ஒவ்வோர் எதிர்பார்ப்பு, ஒவ்வோர் இலட்சியம் என பலதரப்பட்ட எண்ணங்களைத் தாங்கிக் கொண்டே நாம் வரும் புது ஆண்டினை எதிர்கொள்கிறோம். இவைகளில் நாம் எதிர்பார்த்தவைகள் எத்தனை நிறைவேற்றப்படப் போகின்றதோ அறியேன். ஆனால் நிச்சயம் எமக்கு மகிழ்ச்சி தரக்கூடிய அல்லது அதிர்ச்சி தரக்கூடிய மாற்றங்கள் நிச்சயம் அடுத்த ஆண்டில் நிகழத்தான் போகின்றது. நிகழும் அம்மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு அவற்றை எமக்கு அனுகூலமானவைகளாகவும், எமது வாழ்வை மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் வாழக்கூடியதாகவும் அமைத்துக் கொள்ளும் வல்லமை எமக்கு எந்த அளவில் இருக்கிறது என்பதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது.

    நாமனைவரும் வரும் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு தாங்கிக் கொண்டு வாழும் தைரியம் படைத்தவர்களாக இருக்க வேண்டும் எனும் பிரார்த்தனையோடு வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும், எனக்கு ஆக்கமும் ஊக்கமும் ஆதரவும் அளித்து வரும் வல்லமை நிர்வாகக் குழுவினருக்கும் எனது அன்பான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    ***

    செடியொன்றில் புதுமலர்
    பூப்பது போலவே இங்கு
    ஆண்டொன்று அவனியில்
    அழகாய்ப் புலருது பாரீர்!

    நிறைவேறிய நிகழ்வுகள்
    நிகழ்வுறாக் கனவுகள் என
    நிகழ்வுகள் பலவற்றைத் தாங்கிய
    ஆண்டொன்று மெதுவாய் மறையுது!

    துடித்திடும் உணர்வுகள் எமக்குள்
    துளிர்த்திடும் உன்னத எண்ணங்கள்
    மிளிர்ந்திடட்டும் வருமிந்த இனிய
    பிறந்திடும் வருடத்தில் தோழர்களே!

    ஒவ்வொன்றாய்ப் பல வருடங்கள்
    ஓடியோடிப் புதைந்திட்டன
    தேடி நாம் ஓடிய பயணங்கள்
    தொடர்ந்தும் தேடல்களிலே

    பூக்கட்டும் பல புன்னகைப் பொழுதுகள்
    போகட்டும் வருத்திய பல நிகழ்வுகள்
    சிந்தைநிறை உள்ளங்கள் அனைத்துக்கும்
    சிறப்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    Share
  • 2016 எனும் பாதை நடந்த ஒரு வழிப்போக்கனின் அலசல்

    -சக்தி சக்திதாசன்

    காலவாகனத்தின் சக்கரம் இத்தனை வேகமாகச் சுழன்று விட்டதா ? எதோ 2016 ஜனவரி நேற்றுத்தான் ஆரம்பித்தது போன்றுள்ளது. அதற்குள்ளாகவே பறந்து சென்று டிசம்பர் முடிவில் வந்து நிற்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும்போது எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன், எத்தனையோ ஏக்கங்களுடன், எத்தனையோ கனவுகளைத் தாங்கியவாறு பிறக்கிறது. எப்போது அடுத்த ஆண்டு பிறக்கும் என்று எதிர்பார்க்கும் ஒரு சாரார், ஏன் தான் அடுத்த ஆண்டு பிறக்கப் போகிறதோ என்று எண்ணும் மறுசாரார் என பல்வேறு உள்ளங்களில் இருக்கும் பல்வேறு தாக்கங்களைப் பிரதிபலித்தபடியே ஒவ்வொரு ஆண்டும் பிறக்கிறது., ஆனால் அவ்வாண்டின் முடிவில் எதிர்பார்ப்புகளை மனத்தராசில் எடைபோட்டு பார்த்தால் அவை ஏமாற்றங்களாக மிஞ்சுவதும் சகஜமே!

    இங்கிலாந்தைப் பொறுத்த மட்டில் 2016ஆம் ஆண்டின் ஆரம்பம் பலவிதமான எதிர்பார்ப்புகளுடனேயே ஆரம்பித்தது. ஆமாம் அன்றைய பிரதமராக இருந்த டேவிட் கமரன் அவர்களின் மனதிலும் பல எதிர்பார்ப்புகள். அவ்வெதிர்பார்ப்புகளின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கை வலுவாகவே இருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜக்கிய இராச்சியத்தின் அங்கத்துவம் டேவிட் கமரன் தலமையிலான கன்சர்வேடிவ் கட்சியின் உள்ளே பலத்த விரிசலைப் பலகாலங்களாகக் கொண்டிருந்தது என்பதுவே உண்மை. டேவிட் கமரன் அவர்கள் தலைமைப் பதவியை ஏற்பதற்கு முன்னரே அக்கட்சிக்குள் பலவிதமான உட்பூசல்களை ஜரோப்பிய ஒன்றியம் உருவாக்கி விட்டிருந்தது என்பதும் உண்மை.

    ஆனால் முதற்தடவையாக 2010ஆம் ஆண்டு பிரதமரான டேவிட் கமரன் அவர்களால் இவ்விடயத்தில் எதுவுமே செய்ய முடியாமல் போனதற்குக் காரணம் அவரது கட்சி தனியாக அரசமைக்கும் வகையில் அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றியடையவில்லை. ஆதலால் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிர ஆதரவுக் கட்சியான லிபரல் கட்சியுடன் இணைந்த கூட்டரசாங்கமே அவரால் அமைக்க முடிந்தது. அதன் பக்க விளைவாக ஜரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஐக்கிய இராச்சியம் வெளியேற வேண்டும் எனும் கோஷமெழுப்பிய நைஜல் வெராஜ் தலைமையிலான யூகிப் (UKIP) எனும் கட்சிக்குப் பல கன்சர்வேடிவ் கட்சி ஆதரவாளர்கள் வாக்களிக்கத் தொடங்கினர்.

    இந்த இக்கட்டான சூழல் பிரதமர் டேவிட் கமரன் அவர்களை 2015ஆம் ஆண்டு நடக்கவிருந்த பொதுத்தேர்தலில் தமது கட்சி பதவிக்கு வந்து தான் மீண்டும் பிரதமரானால் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்தவராக நிலைத்திருப்பதா அல்லது வெளியேறுவதா எனும் சர்வஜனவாக்கெடுப்பை மக்கள் மத்தியில் நடத்தி அதன் முடிவுக்குத் தலைசாய்ப்பேன் எனும் கோஷத்தை முன்வைத்துத் தேர்தலில் போட்டியிட வைத்தது. விளைவாக அனைத்துக் கருத்துக் கணிப்புகளுக்கும் மாறாக டேவிட் கமரன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் அரசமைத்து டேவிட் கமரன் மீண்டும் பிரதமரானார். அதுவே அவரது அரசியல் வாழ்வுக்கு 2016இல் முற்றுப்புள்ளி வைக்கும் என்று அவர் எண்ணியிருந்தாரா என்ன?

    இதுவே 2016இன் இங்கிலாந்து அரசியல் வரலாற்றில் மாபெரும் அத்தியாயமாயிற்று. தன் நாட்டு மக்கள் நிச்சயமாகத் தமது வாதத்திற்குச் செவிசாய்ப்பார்கள் எனும் நம்பிக்கையில் 2016ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் திகதி ஜரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய இராச்சியம் நிலைத்திருப்பதா? இல்லையா? எனும் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினார் அப்போதைய பிரதமர் டேவிட் கமரன். நிலைத்திருக்க வேண்டும் எனும் வாதமே வெற்றியடையும் எனப் பல கருத்துக் கணிப்புகள் குறிப்பிட்ட போதிலும் அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக 52%  மக்கள் ஐக்கிய இராச்சியம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று வாக்களித்தனர். ஜனநாயக மரபுகளுக்கமைய தனது வாதத்தை பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் தனக்கு எதிரான கொள்கையைச் செயற்படுத்தும் அரசாங்கத்தின் தலைமைப் பதவியில் தான் இருப்பது முறையல்ல என்றுகூறிப் பிரதமர் பதவி மட்டுமன்றித் தனது பாரளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார் பிரதமர் டேவிட் கமரன்.

    ஐக்கிய இராச்சியத்தை 52% , 48% எனும் விகிதாசாரத்தில் இந்த சர்வஜனவாக்கெடுப்புப் பிரித்து விட்டது என்றே கூறவேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் “தனிச் சந்தை” (Single Market) எனும் அமைப்பிலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவது ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரத்தை மிகவும் பின்னோக்கிய நிலை அடையச் செய்யும் எனும் பல பொருளாதார நிபுணர்களின் கருத்துப் பலரது மனங்களிலும் ஒருவகையான அச்சத்தைத் தோற்றுவித்திருக்கிறது என்பதுவே உண்மை.அதுமட்டுமின்றி இந்தச் சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுக்கான காரணம் வெளிநாட்டவரின் கட்டுப்பாடற்ற குடியேற்றம் என்பதே பொதுப்படையான கருத்தாகிறது. இந்த சர்வஜன வாக்கெடுப்பிற்கான பிரச்சாரங்களில் ஐக்கிய இராச்சியம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என வாதிட்டவர்கள் தொடர்ந்து வெளிநாட்டவரின் குடியேற்றக் கட்டுப்பாட்டை முன்வைத்து பிரச்சாரம் செய்ததினால் இன்று ஐக்கிய இராச்சியத்தில் இனத்துவேஷம் என்றுமில்லாதவகையில் தூண்டிவிடப்பட்டுள்ளது. இது ஐக்கிய இராச்சியத்தின் கொள்கையான பல்லினக் கலாசாரத்தை சீரழிக்கத் தொடங்கியுள்ளது. இது ஐக்கியிராச்சியத்தின் அரசியல் வரலாற்றில் 2016ஆம் ஆண்டை ஒரு மிகமுக்கியமான ஆண்டாகப் பதிவுசெய்யப் போகிறது என்பதுவே மறுக்கப்படமுடியாத உண்மையாகிறது.

    2016ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி இங்கிலாந்து வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் படைத்துள்ளது. 2016ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற லண்டன் மாநகர மேயரின் தேர்தல் முடிவுகளால் அமையப் பெற்றதே அந்நிகழ்வாகும். ஐரோப்பிய நாடுகளிலேயே முதன்முறையாக ஒரு நகரத்தின் மேயராக ஒரு முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த ஆசியப் பின்னணி கொண்ட ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டது லண்டன் மாநகரிலேயே எனும் பெருமையை லண்டன் மாநகரம் தட்டிக் கொண்டு தனது அரசியல் வரலாற்றில் அதனைப் பதிவு செய்து கொண்டது. லேபர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சாதிக் கான் டூட்டிங் எனும் பகுதியின் பாரளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ஒரு சாதரண பஸ் சாரதியின் மைந்தனான இவர் ஒரு பட்டம் பெற்ற வழக்கறிஞனாவார். மனித உரிமை அமைப்புக்களின் சார்பில் வழக்குரைஞராகச் செயற்பட்டவர். கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளரான சாக் கோல்ட்சிமித் அவர்களுடன் கடும் போட்டியின் மத்தியில் சாதிக் கான் பலமான பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றியீட்டினார்.

    அடுத்து 2016 உலக அளவில் கொடுத்த ஒரு பேரதிர்வளிக்கும் நிகழ்வு ஐக்கிய அமெரிக்காவின் பொதுத்தேர்தல் முடிவாகும். யாருமே எதிர்பார்த்திராத, யாராலும் எண்ணிப்பார்க்க முடியாத வகையில் மிகவும் அரசியல் நேரோட்டத்துக்கு முரண்பட்ட பெரிய வியாபார முதலாளியும், செல்வந்தருமாகிய டானால்ட் ட்ரம்ப் அவர்கள் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டமையே. இவர் அரசியல் அவதானிகளால் புரிந்து கொள்ளப்படமுடியாத ஒருவராகவே கணிக்கப்படுகிறார். காரணம் இதுவரை இவர் எந்தவொரு அரசியல் பதவியையும் கொண்டிருந்தவரல்ல. எதுவித அரசியல் அறிவோ அன்றி அனுபவமோ அற்றவர். வெற்றியளிக்கும் பல வியாபார நிறுவனங்களை நிர்வகித்த என்னால் ஐக்கிய அமேரிக்காவை ஒரு வெற்றிபெறும் நாடாக அமைக்க முடியும் என்பதே இவரது வாதம். இவரது அரசியல் கொள்கைகள் இதுவரை ஐக்கிய அமேரிக்க ஜனாதிபதிகளாகப் பதவி வகித்த அனைவரது கொள்கைகளுக்கும் முரண்பட்டதாகவே காணப்படுகிறது. சர்வதேச அளவில் அரசியல் நாகரீகத்தில் 2016ஆம் ஆண்டு ஒரு முக்கியமான ஆண்டாகவே தென்படுகிறது. 

    மேற்கத்திய நாடுகள் என்று கருதப்படும் மேலைநாடுகளின் இன்றைய அரசியல் போக்கு மிகுந்த மனக்கிலேசத்தை உருவாக்குகிறது. பிரான்சு, இத்தாலி, ஜேர்மனி போன்ற ஜரோப்பிய நாடுகளின் அரசியல் காட்சிகள் மிகவும் தீவிர வலதுசாரக் கருத்துக்களுடையதாக மாறுவது போன்றதோர் நிலைமை. வலதுசாரக் கருத்துக்கள் என்று சொல்லும்போது அதன் பின்னணி மிகவும் விசனத்துக்குரியதொன்றாகவே இருக்கிறது.வெளிநாட்டவரின் குடியேற்றத்துக்கு எதிரான கருத்துக்களின் அடிப்படையிலேயே இவ்வரசியல் மாற்றங்கள் நடப்பது போலத் தோன்றுகிறது. இனத்துவேஷம் எனும் உணர்வு ஐரோப்பிய நாட்டு மக்களின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக வேரூன்றத் தலைப்பட்டுள்ளது. இந்த எண்ணங்களை வளர்த்தெடுப்பதற்கு இனத்துவேஷத்தின் அடிப்படையில் சில அரசியல் கட்சிகள் தாம் தேசிய உணர்வினை முன்னேப்பது போன்ற பாவனையில் தமது பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளது. மக்கள் மனதிலுள்ள ஐயங்கள் வலுப்பெறுவதற்கு வெளிநாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் மக்கள் பங்களிக்கவில்லை என்று சொல்ல முடியாது. தமது கலாசார விழுமியங்களைத் தாம் புலம்பெயர்ந்தாலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது எந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய வாதமோ அதேயளவில் அந்த நோக்கத்தில் தமது கலாசாரங்களை வலுக்கட்டாயமாக அடுத்தவர் மீது திணிக்கிறார்கள் என்று அந்நாட்டு மக்கள் எண்ணும் வகையில் செயற்பாடுகள் அமையக் கூடாது என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதோர் வாதமே!

    அது மட்டுமின்றி ஜரோப்பிய நாடுகளான பிரான்ஸ் , பிரஸ்ஸல்ஸ் , மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் மதங்களின் பெயரால் நடத்தப்பட்ட மனிதப்படுகொலைகள் அந்நாட்டு மக்களின் மனங்களில் இத்தகைய செயல்களைப் புரிவோர் அகதிகள் எனும் பெயரில் தம் நாட்டுக்குள் கட்டுப்பாடின்றி நுழைவோர் எனும் எண்ணம் கொடுத்த தாக்கங்கள் அவர்களே எதிர்பார்த்திராத வகையில் இனத்துவேஷ உணர்வுகள் தலையெடுக்கக் காரணமாக இருந்திருப்பதும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய உண்மையாகிறது.

    இவ்வரசியல் மாற்றங்கள் இந்நாடுகளில் எத்தகையதோர் களமாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை 2017ஆம் ஆண்டு பிரான்சு, மற்றும் ஜெர்மனி நாடுகளில் நடைபெறப்போகும் அதிபர் தேர்தல் முடிவுகள் பறைசாற்றும். இந்நாடுகளில் வலுப்பெற்று வரும் வலதுசார அரசியல் பிரசாரங்கள் தேர்தல் களத்தில் எண்ணியிருக்க முடியாத தீர்ப்புகளைத் தூக்கிப் போட்டுவிடுமோ எனும் கருத்து அரசியல் அவதானிகள் மத்தியில் நிலவுகின்றன. ஜரோப்பிய நாடுகளில் வாழும் மத்தியதர உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் காலம்காலமாக தொடர்ந்து தம்மை ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் தமது நலன்களை முன்னெடுக்கத் தவறி விட்டார்கள் எனும் கருத்தினால் முற்றுமுழுதாக ஒரு மாற்றம் வேண்டித் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கிறார்கள் என்பதுவே பொதுப்படையான கருத்தாக அமைகிறது.

    இந்த 2016ஆம் ஆண்டில் மிகவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டது சிரியா நாடு என்பதும் அதன் போரினால் பாதிப்படைந்த மக்களும் என்பது மறுக்க முடியாத உண்மை. உலக வல்லரசுகள் தமது பலத்தினை நிரூபிப்பதற்கான களமாக சிரியா நாட்டினைப் பயன்படுத்துகின்றனவோ எனும் கருத்து மனதில் எழத்தான் செய்கிறது. மானிட தர்மத்தையும், மக்கள் நலன்களையும் காப்பதற்கான யுத்தங்கள் காலகாலமாக நிகழ்ந்து வந்துதான் இருக்கின்றன. ஆனால் யுத்தத்தின் வெற்றியையும், தமது நிலைப்பாடுகளையும் முதன்மைப்படுத்தி மனிதர்களின் நலனைக் கணிப்பிலெடுக்காது உலக நாடுகளின் முன்னணி நாடுகள் செயற்படுவது போலத் தென்படுகிறது. மக்கள் தமது இல்லங்களையும் தொழில்களையும் இழந்து பலர் அங்கவீனர்களாகி அயல்நாடுகளின் அகதிகள் முகாம்களில் தமது வாழ்வினை வருடக் கணக்கில் நடத்தி வருவது மனிதாபிமானமிக்க உள்ளங்களை வருந்தத்தான் செய்கிறது. இனிவரும் இப்புத்தாண்டிலாவது இந்நாடுகளில் ஓரளவு இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும் என்பதுவே அனைவரினது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இவ்வாண்டின் அதிமுக்கிய நிகழ்வு அது தனது அரசியல் தலைவியும், முதலமைச்சருமான செல்வி டாக்டர் ஜெயலலிதா அவர்களைக் காவு கொண்டதுவே. இவ்வரசியல் அதிர்வு கொடுத்த அலைகள் இன்னும் ஓய்வில்லாமல் அடித்துக் கொண்டேயிருக்கின்றது. அடுத்து தமிழகத்தின் முன்னணி மூத்த அரசியல் விமர்சகர் திரு சோ அவர்களையும் காலம் கவர்ந்து சென்றது. இந்தியாவின் பிரதமரால் கொண்டுவரப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ரத்து எனும் அறிவித்தல் நாடுமுழுவதும் பரந்து பட்ட விவாதங்களை முன்னெடுத்து வைத்துள்ளது. இதன் பலாபலன்கள் வித்தியாசமானவர்களினால் வித்தியாசமாக விளக்கப்படுகின்றது. இதன் உண்மையான பலன்களைக் காட்டும் ஆண்டாக 2017 அமையப் போகிறது என்பதுவே நிதர்சனமான உண்மை.

    நான் பிறந்த மண்ணான இலங்கையின் அரசியல் மாற்றங்கள் இன்னும் எதிர்பார்ப்புக்களாகவே இருக்கின்றது. அமைதியும், சமாதானமும் கொண்ட சம உரிமை கொண்ட மக்களாக அவர்கள் வாழும் ஒரு நிலையை வருகின்ற 2017ஆம் ஆண்டாவது கொடுக்காதா? எனும் ஏக்கம் எனைப்போன்ற புலம்பெயர் மக்களின் மனங்களில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

    எனது பிரத்தியேக வாழ்வில் 2016  மகிழ்வான,சோகமான, ஆச்சரியமான நிகழ்வுகளை உள்ளடக்கிய ஒரு ஆண்டாகவே அமைந்திருக்கிறது. 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்த எமது வருடாந்த சென்னை விஜயம் ஒரு வெறுமையானதாக அமைந்ததன் காரணம் எனக்குத் திருமணமான காலம் முதல் 2015ஆம் ஆண்டு அவர் மறையும் வரை ஒரு தந்தையாக என்னை ஆதரித்த எனது அன்பு மாமனார், எனது மனைவியின் தந்தை இல்லை என்பதுவே. அதேநேரம் எமது வாழ்வில் ஒரு புதுவரவாக, புது வசந்தமாக வந்திருக்கும் எனது பேத்தியின் வருகை இவ்வருடத்தின் நிகழ்வுகளுக்கு மகுடமாக அமைந்தது.

    ஒவ்வொரு ஆண்டும் அவசர வேகத்தில் ஓடிக் கொண்டேயிருக்கிறது. போகிற ஆண்டு கொடுத்த அனுபவத்தில் அடுத்துவரும் ஆண்டினை எமக்கு ஏற்ற வகையில் செதுக்கிக் கொள்வோம் எனும் நம்பிக்கையோடுதான் நாமனைவரும் அடுத்த ஆண்டுக்குள் நுழைகிறோம்; ஆனால் அனைத்தும் அனைவரினதும் எண்ணப்படி நடப்பதில்லையே! சில எதிர்பார்ப்புகள் எமாற்றங்களாக முடிகின்றன, சில நிகழ்வுகள் எதிர்பாராதவையாக அமைகின்றன. இதுதான் வாழ்க்கை. இதுதான் யதார்த்தம். ஆனால் அதற்காக எமக்கென ஒரு பாதையை வகுக்காது, திட்டங்களில்லாமல் வாழ்வது சாத்தியமாகாது. முயற்சி நம்முடையதாக, நியாயமானதாக,நேர்வழியானதாக இருந்தால் இலக்கை அடைகிறோமோ இல்லையோ எமக்கு வெற்றியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    Share
  • மார்கழி மணாளன் 15

    க. பாலசுப்பிரமணியன்

     

     

    திருவான்புருஷோத்தமம்-  அருள்மிகு புருஷோத்தமப் பெருமாள் திருக்கோவில்

    ag 

    அசையும் காற்றும் அசையாப் பொருளும்

    இசையும் விசையும் இயங்கும் செயலும்

    திசைகளும் வழியும் தசைகளின் நெளிவும்

     பசையுள்ள வாழ்வும் பரமனின் அருளே !

     

    அரவுடன்  ஊர்வதும்  பறப்பதும் மிதப்பதும்

    அலையுடை ஆழியும் நதியும் நெடுமலையும்

    அறுவடைப் பயிரும் மலரும் கொடியும்

    அரங்கனே ! அதிசயம் உன்னுள் தரிசனம் !

     

    அண்டங்கள் உலவிடும் அழகுடை உடலினுள்

    அகிலத்தின் கோள்கள் அனைத்தும் ஒளிர்ந்திடும்

    அன்னையர் தந்தையர் முன்னவர் முனியவர்

    அனைவரும் அடைந்திடும் புகலிடம் புண்ணியா! 

     

    விருப்பும் வெறுப்பும் வாழ்வை முடக்கும்

    பிறப்புடன் இறப்பும் மீண்டும் தீண்டும்

    நெருப்புடன் நீருடன் காற்றினில் கரையும்

    இருப்பின்றி வாழ்க்கை உன்னிடம் முடியும் !

     

    மூன்றாய் ஒன்றாய்  முழுதாய் முதல்வா

    முதலாய் முடிவாய்  மூச்சாய் நின்றாய் !

    முளைக்கும் பயிருக்கும் முன்னுரை தந்தாய் !

    மூப்பும் பிறப்பும் முடித்திடும்  முகுந்தா !

     

    ஒருதுணை வாழ்வை உவமையாய்ப் படைத்து

    மறுமனை நாடா மனத்துடன் வாழ்ந்து

    உயர்வினை உணர்த்திய உத்தமா ஒப்பிலி!

    உன்னையே நம்பினோர் உள்ளங்கள் ஒளிருமே!

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    unnamed
    ”புழக்கடை தோட்டத்துப் பூக்களைகேட் டுப்பார்
    வழக்கிடும் தூங்காய் வனிதா, -கிழக்கிடை
    ஆதித்யன் தோன்றிவிட்டான் அம்பலம் சென்றோது
    சோதிவட்டச் சங்கன் சிறப்பு’’….கிரேசி மோகன்….!

    ’’சோதிவட்டம் -சுழலும் சுதர்ஸனத் திகிரி’’….!

    Share
  • இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகம் உலகிலே முதன்மையாக ஒரே ராக்கெட்டில் 83 துணைக் கோள்களை ஏவப் போகிறது

    இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகம் உலகிலே முதன்மையாக ஒரே ராக்கெட்டில் 83 துணைக் கோள்களை ஏவப் போகிறது.

    Image result for Aryabhata Satellite

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++

    வானை அளப்போம்! கடல் மீனை அளப்போம்!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்! ……
    ஆயுதம் செய்வோம்! நல்ல காயுதம் செய்வோம்!
    ஆலைகள் வைப்போம்! கல்விச் சாலைகள் வைப்போம்!

    மகாகவி பாரதியார் (பாரத தேசம்)

    புவிச்சுற்று இணையியக்க ஏவு வாகனப் பூத ராக்கெட்  [GSLV Mk III Rocket] பயன்பாடுகள், பெருத்த பளுவுள்ள துணைக் கோள் அன்னிய டாலர் நாணய மாற்று நிதிச் [Foreign Exchange] சேர்ப்பைப் பேரளவு தரும். இப்போது விண்வெளி ஆணையகம் 4 டன் எடை தூக்கும் கனமான ராக்கெட்டு 2017 ஜனவரியில் முதன்முதல் GSLV Mk III இயங்கப் போகிறது.

    ஏ. எஸ். கிரண் குமார் [Indian Space Research Organization Chairman]

    அபாய நிற்பு உந்து எஞ்சின் [Scramjet Engine] சூழ்வெளி ஆக்சிஜனை உறிஞ்சிக் கொண்டு எரித்திரவத்தை எரித்து ஏவு ஆற்றல் உண்டாக்கும். அதனால் ராக்கெட்டின் சுயப்பளு குறைகிறது.  அதே சமயம் ராக்கெட் தூக்கிச் செல்லும் பளு மிகையாகக் கூடுகிறது.  அதனால்  ராக்கெட் தயாரிப்புச் செலவும் பேரளவு குறைகிறது.  அன்னிய நாடுகளின் துணைக் கோள்களைக் குறைந்த செலவில் ஏவிச் செல்ல இந்தியா விண்வெளி ஆணையகத்துக்கு ஏதுவாகிறது.

    கே. சிவன் [ஆளுநர்,  விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்]

    Image result for Aryabhata Satellite

    “முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை!  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்!  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”

    டாக்டர் விக்ரம் சாராபாய், பாரத விண்வெளிப் பயணப் பிதா (1919-1971).

    indian-rockets

    இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகத்தின் துணிகர முயற்சி

    2016 ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகத்துக்கு [ISRO – Indian Space Research Organization] பேரதிர்ஷ்டப் பொறிநுணுக்கச் சாதனை வெற்றி பெற்ற வருடமாகக் கருதப்படும்.  ஒரே சமயத்தில் ஒரே இந்திய ஏவுகணையில் 20 துணைக்கோள்கள் ஒரே பாதையில் சுற்ற ஏவப்பட்டன ! அத்துடன் முதன்முதல் “மீள்பயன்பாடு ஏவுகணை வாகனம்” [Reusable Launch Vehicle (RLV)]  & “அபாய நிற்பு உந்து எஞ்சின்” [Scramjet Engine] பயன்படுத்தப் பட்டன.  ஆக மொத்தம் 33 துணைக்கோள்கள் இந்திய ஏவுகணைகளில் ஏவப்பட்டன.  அவற்றில் 22 துணைக்கோள்கள் அயல் நாடுகளைச் சேர்ந்தவை. 11 துணைக்கோள்கள் இந்தியாவுக்குச் சொந்தமானவை.  அவற்றால் இந்தியாவுக்கு வருமானம் : 500 கோடி ரூபாய் [73 மில்லியன் டாலர்]. அயல் நாடுகளின் அடுத்து ஓர் ஆணை [Order] மேலும் 500 கோடி ரூபாய் வரவுக்கு வந்திருக்கிறது.  அகில நாட்டுத் துணைக்கோள்கள் எதிர்கால ஏவு நிதி மதிப்பு சுமார் 5 பில்லியன் டாலர் ! அதில் பன்முறை எரிப்பு நுணுக்கம் [Multi-burn Technology] பயன்படுத்தும் இந்தியாவுக்குப் பங்கெடுத்துக் கொள்ள பெரு வாய்ப்பு உள்ளது.

    Image result for Astrosat

    2017 முதல் காலாண்டு இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகம், முதன்முறையாக ஒரே ராக்கெட் ஏவுதலில் 83 துணைக்கோள்களைத் தூக்கிக் கொண்டு ஓரிரு சுற்றுப் பாதைகளில் ஒரே சமயத்தில் இறக்கி விடப் போகிறது !  இதுவரை எந்த மேனாடும் இத்துணிகர முயற்சியைச் செய்து காட்டியதில்லை.  இந்திய விண்வெளி வல்லுநருக்கு இவ்வாறு பற்பலத் துணைக்கோள்களை ஒரே ராக்கெட் ஏவுதலில் நல்ல அனுபவம் உள்ளது.  கடந்த ஓராண்டாகப் பன்முறைச் செய்து காட்டிய பயிற்சிதான் இந்தச் சாதனை முயற்சிக்கு அடிகோலியது.  2017 ஆண்டு ஜனவரியில் முதன்முறையாக கனமான புவிச்சுற்று இணையியக்கத் துணைக்கோள் [Geosynchronous Satellite]  அனுப்ப பூத ராக்கெட் [Geosatellite Launch Vehicle (GSLV Mk III)] சோதிக்கப்படப் போகிறது.  அது 4 டன் பளு தூக்கும் ஆற்றல் உள்ளது.  அந்த ராக்கெட்தான் 2017 ஆண்டில் முதன்முறை 83 துணைக் கோள்களைச் சுமந்து செல்லும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

      Image result for ISRO Orbital Vehicle

    பாரத விண்வெளி ஏவுகணைகளின் ஒப்புமைத் திறன்பாடு

    உலகத்தில் விண்வெளித் திட்டங்களை மும்முரமாகச் செய்துவரும் நிர்வாகத் துறைகளான அமெரிக்காவின் நாசா, ஐரோப்பாவில் ஈசா, ஜப்பானில் ஜாக்ஸா [NASA, ESA, JAXA (Japan Aerospace Expolation Agency)] மற்றும் ரஷ்யா, பிரான்ஸ், சைனா, பிரேஸில் ஆகிய நாடுகளின் வரிசையில் இப்போது பாரதமும் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. 2006 நாணய மதிப்பில் அமெரிக்கா: 16 பில்லியன் டாலர், ஐரோப்பா: 3.5 பில்லியன் டாலர், ஜப்பான்: 1.8 பில்லியன் டாலர், சைனா: 1.2 பில்லியன் டாலர், ரஷ்யா: 900 மில்லியன் டாலர், பாரதம்: 700 மில்லியன் டாலர், கனடா: 300 மில்லியன் டாலர், பிரேஸில்: 35 மில்லியன் டாலர் பணத்தை விண்வெளித் தேடலுக்கு நிதி ஒதுக்கு செய்துள்ளன. உலகத்தில் முன்னேறிவரும் நாடுகளில் பாரத தேசம் தற்போது முதன்மையாக விண்வெளிப் பயணத் திட்டங்களில் நாற்பத்தியைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பணி புரிந்து பெரும் சாதனைகளை வெற்றிகரமாக முடித்துத் தன் தலை நிமிர்த்தி வந்திருக்கிறது.

    Image result for ISRO Orbital Vehicle

    ஆசியாவிலே விண்வெளித் திட்டங்களைத் தீவிரமாகச் செய்துவரும் சைனா, ஜப்பான் ஆகிய நாடுகளோடு ஒப்பிட்டால், பாரத நாடு தயாரித்த அசுர விண்வெளி ஏவுகணை GSLV-III [Geostatioanry Satellite Launching Vehicle-III] அவற்றுக்கு ஏறக்குறைய சமமான உந்தாற்றல் உடையதாகக் கருதப் படுகிறது. அத்துடன் பாரதம் ஒருமித்த ஆற்றலில் தயாரித்த ஏவுகணைகள் மற்றவற்றை விட மலிவான நிதியில் ஆக்கப்பட்டவை.  நாசா, ஈசா, ஜாக்ஸா ஆகிய உலகப் பெரும் விண்வெளித் துறையகங்கள் துணைக்கோள் ஒன்றை அண்டவெளியில் ஏவிடத் தேவைப்படும் நிதித் தொகையில் பாதி அளவே பாரதம் தனது துணைக்கோள் ஒன்றை அனுப்பச் செலவு செய்கிறது.

    Image result for ISRO Orbital Vehicle

    விண்வெளியை நோக்கி ஏவப்பட்ட இந்தியாவின் முதல் ஏவுகணை

    அண்டை நாடான சைனாவின் பண்டை கால ஏவுகணைத் தொழில் நுணுக்கத்தைப் பின்பற்றிப் பாரதத்தின் ஏவுகணைப் படைப்புத் திட்டங்கள் உதயமாகின.  இந்தியச் சைனா கூட்டுறவின் போது பண்டத் தொழில் நுணுக்கத் துறை மாற்றல் உடன்படிக்கையில் விருத்தியான பட்டுப்பாதைத் [Silkroute] திறமை அது.  1804 ஆம் ஆண்டில் பிரிட்டனை எதிர்த்துப் போரிட்ட மைசூர் மன்னர் திப்பு சுல்தான் முதன்முதல் ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தினார்.  அதுவே வில்லியம் கங்கிரிவை [William Congreve], காங்கிரிவ் ராக்கெட் கண்டுபிடிக்கத் தூண்டியதாக வரலாற்றில் அறியப் படுகிறது.  பாரதம் விடுதலை அடைந்த பிறகு, இந்திய விஞ்ஞானிகளும், பண்டித நேரு முதலாக மற்றும் பிற அரசியல் வாதிகளும் ராக்கெட் பொறித்துறை வளர்ச்சியின் எதிர்கால ராணுவ ஆயுத மேம்பாடுகளை உணர்ந்து அவற்றைத் தொடர்ந்து பேரளவில் விருத்தி செய்தனர்.  மேலும் ஏவுகணைகள் மூலம் துணைக் கோள்களை விண்வெளியில் அனுப்பி வானிலைத் தொலைத்தொடர்பு, தூர உளவு ஏற்பாடு, அண்டவெளி ஆய்வு போன்ற துறைகளும் முன்னேற்றம் அடைந்தன.

    aj

    பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு 1962 இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சிப் பேரவையை [Indian National Committee for Space Research (INCOSPAR)] நிறுவனம் செய்து, அதன் அதிபராக டாக்டர் விக்ரம் சாராபாயை நியமித்தார்.  அதன் திட்டப்படி முதலில் தும்பா பூமத்திய ராக்கெட் ஏவு நிலையத்தை [Thumba Equatorial Rocket Launching Station (TELRS)], விக்ரம் சாராபாய் திருவனந்த புரத்தில் அமைக்க ஏற்பாடு செய்தார்.  தேர்ந்தெடுக்கப்பட்ட தும்பா ஏவுகணை மையம், ராக்கெட் ஏவிடச் சாதகமானப் பூகோளத்தின் மத்திய காந்த ரேகையில் [Earth’s Magnetic Equator] அமைந்துள்ளது!  இந்தியாவில் முதன் முதலாக ராக்கெட்டை டிசைன் செய்து, பல்வேறு அங்கங்களை இணைத்து, அதனைச் சோதனை செய்யத் திட்டங்கள் வகுத்தார்.  அடுத்து செயற்கைத் துணைக்கோள் [Artificial Satellite] ஏவும் திட்டங்களை வகுத்தார்.  அப்பணிகளில் அவருடன் உழைத்தவர் தற்போதைய இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்.  துணைக்கோள்களின் வழியாகக் கல்வியைத் தொலைக்காட்சிச் சாதனங்களின் மூலம் [Satellite Instructional Television Experiment (SITE)] பரப்பிக் கிராமங்களில் பாமர மக்களும் பயில வசதி செய்தார், விக்ரம் சாராபாய். 1963 நவம்பர் 21 ஆம் தேதி சுதந்திர பாரத்ததின் முதல் ராக்கெட் சோடியம் ஆவிப் பளுவுடன் [Sodium Vapour Payload] அண்டவெளியைத் துளைத்துகொண்டு உயரத்தில் ஊடுறுவிச் சென்றது.

    Image result for Astrosat Satellite

    Image result for Astrosat Satellite

    ஆரம்ப காலத்தில் ஏவிய முதல் ஏவுகணைகள், துணைக்கோள்கள்

    அகமதாபாத்தில் நிர்மாணிக்கப்பட்ட பௌதிக ஆராய்ச்சிக் கூடம், விண்வெளிப் பயன்பாடு மையம் [Physical Reseach Laboratory & Space Application Centre], திருவனந்தபுரத்தில் விண்வெளிப் பௌதிக ஆய்வகம் [Space Physics Laboratory], பெங்களூரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பகம் [Indian Space Research Organization] ஆகிய மையங்களில் செயற்கைத் துணைக் கோள்கள் [Satellites], ஏவுகணை வாகனங்கள் [Launch Vehicles], உளவு ராக்கெட்டுகள் [Sounding Rockets] ஆகிய விண்வெளிச் சாதனங்களின் ஆராய்ச்சி, விருத்திப் பணிகள் நிகழ்ந்து வருகின்றன.  முதல் துணைக்கோள் ஆரியபட்டா 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி ரஷ்ய ராக்கெட்டில் ஏறிக் கொண்டு போய்ச் சுழல் வீதியில் சுற்றிவர விடப்பட்டது.  அடுத்து மூன்று துணைக் கோள்களும் [பாஸ்கரா-I, பாஸ்கரா-II, ஆப்பிள்] ரஷ்ய ராக்கெட் மூலமே [1979-1981] ஆண்டுகளில் எடுத்துச் செல்லப் பட்டன.  ஐந்தாவது துணைக் கோள் ரோகினி முதன் முதல் இந்திய ராக்கெட் SLV-3 முன்பகுதியில் வைக்கப்பட்டு விண்வெளியில் விடப்பட்டது.

    Image result for Astrosat Satellite

    இதுவரை 40(?) துணைக் கோள்களை இந்தியா அண்டவெளியில் ஏவி இருக்கிறது. அவற்றில் 23 துணைக்கோள்களை இந்தியாவில் அமைக்கப் பட்ட நான்கு வித ராக்கெட்டுகள் SLV-3 [Satellite Launch Vehicle-3], ASLV [Augmented Satellite Launch Vehicle], PSLV [Polar Satellite Launch Vehicle], GSLV [Geo-Synchronous Satellite Launch Vehicle] வெற்றிகரமாக விண்வெளியில் தூக்கிச் சென்றுள்ளன.  மற்ற 17(?) துணைக் கோள்களை, ரஷ்ய, அமெரிக்க, பிரெஞ்ச், ஈரோப்பியன் ராக்கெட்டுகள் சுமந்து சுழல்வீதிகளில் எறிந்துள்ளன.  1993 இல் ஏவப்பட்ட ஒரே ஒரு துணைக்கோள் [Indian Remote Sensing Satellite (IRS-1E)] மட்டும் சுழல்வீதியைத் தொட முடியாது தவறிப்போய் இழக்கப் பட்டது!

    செயற்கைத் துணைக் கோள்கள் செய்துவரும் பணிகள்

    1983 ஆகஸ்டு 30 ஆம் தேதி அமெரிக்க விண்வெளி மீள்கப்பல் [Space Shuttle] இன்சாட் [INSAT-1B] இந்தியத் துணைக்கோளைத் தூக்கிச் சென்று சுழல்வீதியில் விட்டது.  ஏவப்பட்ட பல இன்சாட் வலைப்பணித் துணைக்கோள்களில் [INSAT Network Satellites] அதுவும் ஒன்று.  இந்திய தேசியத் துணைக்கோள் தொடர்பு ஏற்பாடு [Indian National Satellite System] உள்நாட்டுத் தொடர்பு, சூழகக் காலநிலைக் கண்காணிப்பு [Meteorology], நேரடித் துணைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பி [Direct Satellite Television Broadcasting] ஆகியவற்றுக்குப் பயன்படுகிறது.  இன்சாட் வலைப்பணியில் [INSAT Network] 167 தொலைத் தொடர்பு முனைகள் [Telecommunication Terminals], ஏறக்குறைய 4172 இருவழிப் பேச்சு இணைப்புகளை [Two-Way Speech Circuits] ஏற்படுத்த முடியும். இன்சாட் இணைப்பு இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் கிராமியத் தொலைப்பதிவு ஏற்பாடை [Rural Telegraphy] ஏற்கனவே நிலை நாட்டியுள்ளது.  இன்சாட் துணைக்கோள் இணைப்பு, சமிக்கைகளை 650 தொலைக்காட்சி அலை அனுப்பிகளுக்குப் [TV Transmitters] பரிமாறி, 80 சதவீத இந்திய மக்களுக்குக் கலைக் காட்சிகளையும், செய்திகளையும் அனுதினமும் அனுப்பி வருகிறது.

    குறிப்பாக துணைக்கோள் மூலம் தொடர்பு கொள்ளவும் [Communication through Satellite], காலநிலை முன்னறிவிப்பு செய்யவும் பூகோளச் சூழக ஆய்வு [Meteorology] புரியவும் செயற்கைத் துணைக்கோள்கள் உதவு கின்றன.  சூறாவளி, கடற்புயல் கொந்தளிப்பு [Cyclone] போன்றவை கரைப்புற ஊர்களைத் தாக்கும் முன்பே, துணைக்கோள் மூலம் பேரழிவு எச்சரிக்கை விடுக்கும் அபாய அறிவிப்பிகள், கிழக்குக் கடலோர ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடத்தில் அமைக்கப் பட்டுள்ளன. அவை சரியான சமயத்தில் எச்சரிக்கை செய்து, பெரும்பான்மையான மக்களையும், ஆடு மாடு போன்ற விலங்குகளையும் காப்பாற்றி யுள்ளன.

    Image result for Astrosat Satellite

    அத்துடன் விண்வெளித் தூர உளவு [Remote Space Sensing] வேளாண்மை, நீர்வளம், நிலவளம், தாதுக்கள் [Minerals], வனவியல் [Forestry], சூழக வெளி, [Environment], கடல்துறை வளர்ச்சி [Ocean Development], வெள்ளத்தால் சேதங்கள், மழையற்ற பஞ்சப் பகுதிகளின் விளைவுகள் போன்ற வற்றையும் கண்காணிக்க உதவுகிறது.  2002 செப்டம்பர் 12 இல் ஏவப்பட்ட மெட்சாட் [METSAT] துணைக்கோள் முதன் முதல் பூகோளச் சுற்றிஇணைவு மாற்றுச் சுழல்வீதியில் [Geo-synchronous Transfer Orbit] வெற்றிகரமாக எறியப்பட்டது.  அது 22,000 மைல் உயரத்தில் சுற்றிவரும் போது பூமியின் ஒரே முகத்தை நோக்கிக் கொண்டு தேவையான வானலைச் சமிக்கைகளை அனுப்பி வரும்!  மெட்சாட் மிகுந்த உயரத்தில் பறந்து செல்லும் போது, பூகோளம் முழுவதையும் படமெடுத்துப் பூமிக்கு அனுப்பியுள்ளது!

    Image result for Aryabhata Satellite

    +++++++++++++++++++

    (தொடரும்)

    தகவல்:

    1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]
    2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad
    3. Indian Space Program By: Subhajit Ghosh
    4  Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]
    5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]
    6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]
    7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]
    8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html  [Dr. Vikram Sarabhai Space Pioneer]
    9. Indian Space Program : Wikipedia WebSite
    10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]
    11 New Scientist – India Special: Space Program Presses Ahead By: Anil Ananthaswamy [FEb 19, 2005]
    12 An Overview of the Indian Space Program By: N. Clarkson [Jan 14, 2007]

    13. http://www.spacedaily.com/reports/ISROs_World_record_bid_Launching_83_satellites_on_single_rocket_999.html#ifrndnloc  [November 2, 2016]

    14. http://www.spacedaily.com/reports/India_achieves_advances_multiple_space_systems_in_2016_999.html  [௶எசெம்எர் 23, 2016]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  December 29, 2016 [R-1]

    Share
  • மார்கழி மணாளன் 14

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருக்கண்ணன்குடி- அருள்மிகு தாமோதர நாராயணப் பெருமாள் திருக்கோவில்

    ag 

    பாற்கடலில் படுத்திருக்கும் பரந்தாமன் போற்றியே

    பார்வையிலே பாலகனாய் மறைமுனியும் வடித்தெடுத்து

    பால்கடைந்த வெண்ணையால் உருவத்தில் வண்ணமிட

    ஆலிலையில் படுத்தவனும் ஆனந்தமாய் ரசித்தானே !

     

    உறிகொண்ட  மண்பானை ஒருகல்லால் உடைத்தவனே

    மறைகண்ட மாமுனிவன் மனம்காண நினைத்தவனே

    கலைகொண்ட சிலையிருக்கும் வெண்ணையை விருந்தாக்க

    நிலைகுலைந்த தவத்தோனும் வேதவனைத் தொடர்ந்தானே!

     

    அலையாளும் கடலிலே அசைவின்றி உறங்கியவனே

    விளையாட வந்தவனே  விரும்பியே கட்டுண்டான்

    மகிழத்தில் கட்டுண்டோன் மாயத்தில் விலகிவிட

    மாமுனியும் மாதவனின் மனம்கண்டே வியந்திட்டான் !

     

    தீராவழக்கும் ஊராக்கிணறும் உறங்காப்புளியும் படைத்தே

    மாறாமனதுடன் மகிழத்தடியில் உறங்கிடும் கலியனே

    தீராப்பசிக்குத் தானேவந்து அமுதம் படைத்தாய்

    காயாமகிழைக் கண்டவர் அருளிடும் கலியுகத்தேவா !

     

    கண்ணிருந்து பார்த்தோர்க்குக்  கண்ணன்குடி கலையழகே !

    விண்ணிருந்து பார்போர்க்கு விடிவெள்ளி உன்னழகே  !

    முன்னிருந்து பார்ப்போர்க்கும்  பின்னிருந்து பார்ப்போர்க்கும் 

    முடிவின்றி நிறைந்திருக்கும் மூவுலகிலன்  பேரழகே !

     

    ஒன்றாய் இரண்டாய் பலவாய் உருவானவனே

    கன்றாய் தாயாய்  கருவாய் நிறைந்தவனே

    நின்றாய் கிடந்தாய் நிறைந்தாய் நினைவுள்ளே

    மறைந்தே இருந்தும் அருள்வாய் மனத்துள்ளே !

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”கிருஷ்ண லீலையைக் கூறும் பாகவதம் எழுதிய சுகமுனி கிளிரூபம் கொண்டவர்….ஆண்டாள் கரத்தில் ஏந்தியதும் கிளி (சுகர் என்றும் கூறலாம்)….திருப்பாவை பாகவதம் PART -2….!

    kesav

    ’’பாக வதப்பழமது ஏகருசி ஆனது
    தேகம் ஒழித்தசுக தேவனவர் -நாகவண்ண
    மேனியன் லீலையை முன்னமே உண்டவராம்:
    தோணியவர் ஆண்டாள் துடுப்பு’’….கிரேசி மோகன்….!

    (OR)
    ”சீனியவர்(தித்திக்கும் பழம்) ஆண்டாள் சிரப்பு’’(SYRUP-ஜூஸ்)

    Share