பவள சங்கரி

தலையங்கம்

2016ஆம் ஆண்டில் விதவிதமான அனுபவங்களைச் சந்தித்தாகிவிட்டது நம் நாடு. சில  வெற்றிகளோடு சோதனைகளும், சோகங்களும் சேர்ந்து நாட்டையே உலுக்கி விட்டன. பொருளாதார சீர்திருத்தம் பொறுத்தவரை  பல்வேறு நாடுகளும் முடிவெடுக்கத் தயங்கக்கூடிய விசயங்களில் நம் நாட்டுப் பிரதமர் அதிரடியாக, துணிவுடன் எடுத்த முடிவின்படி 50 நாட்களில் நிலைமை சீர்பெறும் என்ற அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் இன்னும் திறக்கப்படாத 60 சதவிகித ஏடிஎம்கள் , பல இடங்களில்  செயல்படாத வங்கிகள் என மக்கள் சிரமங்கள் இன்னும் தீராத நிலையிலேயே உள்ளது. மத்திய வங்கி போதுமான உயர் மதிப்பு நோட்டுகள் இருப்பில் உள்ளதாக அறிவித்துள்ளது. ஜனவரி 1, 2017, அதாவது நாளை முதல் ஏடிஎம்களிலிருந்து ₹ 2500 க்கு பதிலாக ₹4000 எடுக்கலாம் என்று அறிவித்திருந்தாலும், பெரும்பாலான திறக்கப்படாத வங்கிகளிலிருந்து எப்படி பணம் பெற இயலும் என்பதே மக்களின் தீராத பிரச்சனையாக உள்ளது. பொதுவாக வங்கிகளைப் பொறுத்தவரை நிலைமை ஓரளவிற்குச் சீரடைந்துள்ளது என்றே சொல்லமுடிகிறது. அனைத்து ஏடிஎம்களும் சரியாக செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலாளர்கள் வேதனையின் உச்சத்தில் உள்ளதையும் மறுக்க முடியவில்லை. தொழிலாளத் தோழர்களின் வேலையின்மையும் அதிகரித்துள்ளன. வியாபாரங்களும் சரிவைச் சந்தித்துள்ளன. இந்த வகையில் 2016 ஆம் ஆண்டு சலசலப்புடனேயே நிறைவடைந்துள்ளது. 2017இல் ஜிஎஸ்டி மூலமாக வியாபாரங்கள் செழிப்படைந்தும், விவசாயப் பெருங்குடி மக்களின் வேதனைகள் தீர்ந்து, அனைத்து மக்களும் வளமான வாழ்வைப் பெறவும் வாழ்த்தி வரவேற்போம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.