மார்கழி மணாளன் 15
க. பாலசுப்பிரமணியன்
திருவான்புருஷோத்தமம்- அருள்மிகு புருஷோத்தமப் பெருமாள் திருக்கோவில்
அசையும் காற்றும் அசையாப் பொருளும்
இசையும் விசையும் இயங்கும் செயலும்
திசைகளும் வழியும் தசைகளின் நெளிவும்
பசையுள்ள வாழ்வும் பரமனின் அருளே !
அரவுடன் ஊர்வதும் பறப்பதும் மிதப்பதும்
அலையுடை ஆழியும் நதியும் நெடுமலையும்
அறுவடைப் பயிரும் மலரும் கொடியும்
அரங்கனே ! அதிசயம் உன்னுள் தரிசனம் !
அண்டங்கள் உலவிடும் அழகுடை உடலினுள்
அகிலத்தின் கோள்கள் அனைத்தும் ஒளிர்ந்திடும்
அன்னையர் தந்தையர் முன்னவர் முனியவர்
அனைவரும் அடைந்திடும் புகலிடம் புண்ணியா!
விருப்பும் வெறுப்பும் வாழ்வை முடக்கும்
பிறப்புடன் இறப்பும் மீண்டும் தீண்டும்
நெருப்புடன் நீருடன் காற்றினில் கரையும்
இருப்பின்றி வாழ்க்கை உன்னிடம் முடியும் !
மூன்றாய் ஒன்றாய் முழுதாய் முதல்வா
முதலாய் முடிவாய் மூச்சாய் நின்றாய் !
முளைக்கும் பயிருக்கும் முன்னுரை தந்தாய் !
மூப்பும் பிறப்பும் முடித்திடும் முகுந்தா !
ஒருதுணை வாழ்வை உவமையாய்ப் படைத்து
மறுமனை நாடா மனத்துடன் வாழ்ந்து
உயர்வினை உணர்த்திய உத்தமா ஒப்பிலி!
உன்னையே நம்பினோர் உள்ளங்கள் ஒளிருமே!