2016 எனும் பாதை நடந்த ஒரு வழிப்போக்கனின் அலசல்

0

-சக்தி சக்திதாசன்

காலவாகனத்தின் சக்கரம் இத்தனை வேகமாகச் சுழன்று விட்டதா ? எதோ 2016 ஜனவரி நேற்றுத்தான் ஆரம்பித்தது போன்றுள்ளது. அதற்குள்ளாகவே பறந்து சென்று டிசம்பர் முடிவில் வந்து நிற்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும்போது எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன், எத்தனையோ ஏக்கங்களுடன், எத்தனையோ கனவுகளைத் தாங்கியவாறு பிறக்கிறது. எப்போது அடுத்த ஆண்டு பிறக்கும் என்று எதிர்பார்க்கும் ஒரு சாரார், ஏன் தான் அடுத்த ஆண்டு பிறக்கப் போகிறதோ என்று எண்ணும் மறுசாரார் என பல்வேறு உள்ளங்களில் இருக்கும் பல்வேறு தாக்கங்களைப் பிரதிபலித்தபடியே ஒவ்வொரு ஆண்டும் பிறக்கிறது., ஆனால் அவ்வாண்டின் முடிவில் எதிர்பார்ப்புகளை மனத்தராசில் எடைபோட்டு பார்த்தால் அவை ஏமாற்றங்களாக மிஞ்சுவதும் சகஜமே!

இங்கிலாந்தைப் பொறுத்த மட்டில் 2016ஆம் ஆண்டின் ஆரம்பம் பலவிதமான எதிர்பார்ப்புகளுடனேயே ஆரம்பித்தது. ஆமாம் அன்றைய பிரதமராக இருந்த டேவிட் கமரன் அவர்களின் மனதிலும் பல எதிர்பார்ப்புகள். அவ்வெதிர்பார்ப்புகளின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கை வலுவாகவே இருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜக்கிய இராச்சியத்தின் அங்கத்துவம் டேவிட் கமரன் தலமையிலான கன்சர்வேடிவ் கட்சியின் உள்ளே பலத்த விரிசலைப் பலகாலங்களாகக் கொண்டிருந்தது என்பதுவே உண்மை. டேவிட் கமரன் அவர்கள் தலைமைப் பதவியை ஏற்பதற்கு முன்னரே அக்கட்சிக்குள் பலவிதமான உட்பூசல்களை ஜரோப்பிய ஒன்றியம் உருவாக்கி விட்டிருந்தது என்பதும் உண்மை.

ஆனால் முதற்தடவையாக 2010ஆம் ஆண்டு பிரதமரான டேவிட் கமரன் அவர்களால் இவ்விடயத்தில் எதுவுமே செய்ய முடியாமல் போனதற்குக் காரணம் அவரது கட்சி தனியாக அரசமைக்கும் வகையில் அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றியடையவில்லை. ஆதலால் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிர ஆதரவுக் கட்சியான லிபரல் கட்சியுடன் இணைந்த கூட்டரசாங்கமே அவரால் அமைக்க முடிந்தது. அதன் பக்க விளைவாக ஜரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஐக்கிய இராச்சியம் வெளியேற வேண்டும் எனும் கோஷமெழுப்பிய நைஜல் வெராஜ் தலைமையிலான யூகிப் (UKIP) எனும் கட்சிக்குப் பல கன்சர்வேடிவ் கட்சி ஆதரவாளர்கள் வாக்களிக்கத் தொடங்கினர்.

இந்த இக்கட்டான சூழல் பிரதமர் டேவிட் கமரன் அவர்களை 2015ஆம் ஆண்டு நடக்கவிருந்த பொதுத்தேர்தலில் தமது கட்சி பதவிக்கு வந்து தான் மீண்டும் பிரதமரானால் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்தவராக நிலைத்திருப்பதா அல்லது வெளியேறுவதா எனும் சர்வஜனவாக்கெடுப்பை மக்கள் மத்தியில் நடத்தி அதன் முடிவுக்குத் தலைசாய்ப்பேன் எனும் கோஷத்தை முன்வைத்துத் தேர்தலில் போட்டியிட வைத்தது. விளைவாக அனைத்துக் கருத்துக் கணிப்புகளுக்கும் மாறாக டேவிட் கமரன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் அரசமைத்து டேவிட் கமரன் மீண்டும் பிரதமரானார். அதுவே அவரது அரசியல் வாழ்வுக்கு 2016இல் முற்றுப்புள்ளி வைக்கும் என்று அவர் எண்ணியிருந்தாரா என்ன?

இதுவே 2016இன் இங்கிலாந்து அரசியல் வரலாற்றில் மாபெரும் அத்தியாயமாயிற்று. தன் நாட்டு மக்கள் நிச்சயமாகத் தமது வாதத்திற்குச் செவிசாய்ப்பார்கள் எனும் நம்பிக்கையில் 2016ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் திகதி ஜரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய இராச்சியம் நிலைத்திருப்பதா? இல்லையா? எனும் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினார் அப்போதைய பிரதமர் டேவிட் கமரன். நிலைத்திருக்க வேண்டும் எனும் வாதமே வெற்றியடையும் எனப் பல கருத்துக் கணிப்புகள் குறிப்பிட்ட போதிலும் அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக 52%  மக்கள் ஐக்கிய இராச்சியம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று வாக்களித்தனர். ஜனநாயக மரபுகளுக்கமைய தனது வாதத்தை பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் தனக்கு எதிரான கொள்கையைச் செயற்படுத்தும் அரசாங்கத்தின் தலைமைப் பதவியில் தான் இருப்பது முறையல்ல என்றுகூறிப் பிரதமர் பதவி மட்டுமன்றித் தனது பாரளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார் பிரதமர் டேவிட் கமரன்.

ஐக்கிய இராச்சியத்தை 52% , 48% எனும் விகிதாசாரத்தில் இந்த சர்வஜனவாக்கெடுப்புப் பிரித்து விட்டது என்றே கூறவேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் “தனிச் சந்தை” (Single Market) எனும் அமைப்பிலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவது ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரத்தை மிகவும் பின்னோக்கிய நிலை அடையச் செய்யும் எனும் பல பொருளாதார நிபுணர்களின் கருத்துப் பலரது மனங்களிலும் ஒருவகையான அச்சத்தைத் தோற்றுவித்திருக்கிறது என்பதுவே உண்மை.அதுமட்டுமின்றி இந்தச் சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுக்கான காரணம் வெளிநாட்டவரின் கட்டுப்பாடற்ற குடியேற்றம் என்பதே பொதுப்படையான கருத்தாகிறது. இந்த சர்வஜன வாக்கெடுப்பிற்கான பிரச்சாரங்களில் ஐக்கிய இராச்சியம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என வாதிட்டவர்கள் தொடர்ந்து வெளிநாட்டவரின் குடியேற்றக் கட்டுப்பாட்டை முன்வைத்து பிரச்சாரம் செய்ததினால் இன்று ஐக்கிய இராச்சியத்தில் இனத்துவேஷம் என்றுமில்லாதவகையில் தூண்டிவிடப்பட்டுள்ளது. இது ஐக்கிய இராச்சியத்தின் கொள்கையான பல்லினக் கலாசாரத்தை சீரழிக்கத் தொடங்கியுள்ளது. இது ஐக்கியிராச்சியத்தின் அரசியல் வரலாற்றில் 2016ஆம் ஆண்டை ஒரு மிகமுக்கியமான ஆண்டாகப் பதிவுசெய்யப் போகிறது என்பதுவே மறுக்கப்படமுடியாத உண்மையாகிறது.

2016ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி இங்கிலாந்து வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் படைத்துள்ளது. 2016ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற லண்டன் மாநகர மேயரின் தேர்தல் முடிவுகளால் அமையப் பெற்றதே அந்நிகழ்வாகும். ஐரோப்பிய நாடுகளிலேயே முதன்முறையாக ஒரு நகரத்தின் மேயராக ஒரு முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த ஆசியப் பின்னணி கொண்ட ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டது லண்டன் மாநகரிலேயே எனும் பெருமையை லண்டன் மாநகரம் தட்டிக் கொண்டு தனது அரசியல் வரலாற்றில் அதனைப் பதிவு செய்து கொண்டது. லேபர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சாதிக் கான் டூட்டிங் எனும் பகுதியின் பாரளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ஒரு சாதரண பஸ் சாரதியின் மைந்தனான இவர் ஒரு பட்டம் பெற்ற வழக்கறிஞனாவார். மனித உரிமை அமைப்புக்களின் சார்பில் வழக்குரைஞராகச் செயற்பட்டவர். கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளரான சாக் கோல்ட்சிமித் அவர்களுடன் கடும் போட்டியின் மத்தியில் சாதிக் கான் பலமான பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றியீட்டினார்.

அடுத்து 2016 உலக அளவில் கொடுத்த ஒரு பேரதிர்வளிக்கும் நிகழ்வு ஐக்கிய அமெரிக்காவின் பொதுத்தேர்தல் முடிவாகும். யாருமே எதிர்பார்த்திராத, யாராலும் எண்ணிப்பார்க்க முடியாத வகையில் மிகவும் அரசியல் நேரோட்டத்துக்கு முரண்பட்ட பெரிய வியாபார முதலாளியும், செல்வந்தருமாகிய டானால்ட் ட்ரம்ப் அவர்கள் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டமையே. இவர் அரசியல் அவதானிகளால் புரிந்து கொள்ளப்படமுடியாத ஒருவராகவே கணிக்கப்படுகிறார். காரணம் இதுவரை இவர் எந்தவொரு அரசியல் பதவியையும் கொண்டிருந்தவரல்ல. எதுவித அரசியல் அறிவோ அன்றி அனுபவமோ அற்றவர். வெற்றியளிக்கும் பல வியாபார நிறுவனங்களை நிர்வகித்த என்னால் ஐக்கிய அமேரிக்காவை ஒரு வெற்றிபெறும் நாடாக அமைக்க முடியும் என்பதே இவரது வாதம். இவரது அரசியல் கொள்கைகள் இதுவரை ஐக்கிய அமேரிக்க ஜனாதிபதிகளாகப் பதவி வகித்த அனைவரது கொள்கைகளுக்கும் முரண்பட்டதாகவே காணப்படுகிறது. சர்வதேச அளவில் அரசியல் நாகரீகத்தில் 2016ஆம் ஆண்டு ஒரு முக்கியமான ஆண்டாகவே தென்படுகிறது. 

மேற்கத்திய நாடுகள் என்று கருதப்படும் மேலைநாடுகளின் இன்றைய அரசியல் போக்கு மிகுந்த மனக்கிலேசத்தை உருவாக்குகிறது. பிரான்சு, இத்தாலி, ஜேர்மனி போன்ற ஜரோப்பிய நாடுகளின் அரசியல் காட்சிகள் மிகவும் தீவிர வலதுசாரக் கருத்துக்களுடையதாக மாறுவது போன்றதோர் நிலைமை. வலதுசாரக் கருத்துக்கள் என்று சொல்லும்போது அதன் பின்னணி மிகவும் விசனத்துக்குரியதொன்றாகவே இருக்கிறது.வெளிநாட்டவரின் குடியேற்றத்துக்கு எதிரான கருத்துக்களின் அடிப்படையிலேயே இவ்வரசியல் மாற்றங்கள் நடப்பது போலத் தோன்றுகிறது. இனத்துவேஷம் எனும் உணர்வு ஐரோப்பிய நாட்டு மக்களின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக வேரூன்றத் தலைப்பட்டுள்ளது. இந்த எண்ணங்களை வளர்த்தெடுப்பதற்கு இனத்துவேஷத்தின் அடிப்படையில் சில அரசியல் கட்சிகள் தாம் தேசிய உணர்வினை முன்னேப்பது போன்ற பாவனையில் தமது பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளது. மக்கள் மனதிலுள்ள ஐயங்கள் வலுப்பெறுவதற்கு வெளிநாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் மக்கள் பங்களிக்கவில்லை என்று சொல்ல முடியாது. தமது கலாசார விழுமியங்களைத் தாம் புலம்பெயர்ந்தாலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது எந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய வாதமோ அதேயளவில் அந்த நோக்கத்தில் தமது கலாசாரங்களை வலுக்கட்டாயமாக அடுத்தவர் மீது திணிக்கிறார்கள் என்று அந்நாட்டு மக்கள் எண்ணும் வகையில் செயற்பாடுகள் அமையக் கூடாது என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதோர் வாதமே!

அது மட்டுமின்றி ஜரோப்பிய நாடுகளான பிரான்ஸ் , பிரஸ்ஸல்ஸ் , மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் மதங்களின் பெயரால் நடத்தப்பட்ட மனிதப்படுகொலைகள் அந்நாட்டு மக்களின் மனங்களில் இத்தகைய செயல்களைப் புரிவோர் அகதிகள் எனும் பெயரில் தம் நாட்டுக்குள் கட்டுப்பாடின்றி நுழைவோர் எனும் எண்ணம் கொடுத்த தாக்கங்கள் அவர்களே எதிர்பார்த்திராத வகையில் இனத்துவேஷ உணர்வுகள் தலையெடுக்கக் காரணமாக இருந்திருப்பதும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய உண்மையாகிறது.

இவ்வரசியல் மாற்றங்கள் இந்நாடுகளில் எத்தகையதோர் களமாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை 2017ஆம் ஆண்டு பிரான்சு, மற்றும் ஜெர்மனி நாடுகளில் நடைபெறப்போகும் அதிபர் தேர்தல் முடிவுகள் பறைசாற்றும். இந்நாடுகளில் வலுப்பெற்று வரும் வலதுசார அரசியல் பிரசாரங்கள் தேர்தல் களத்தில் எண்ணியிருக்க முடியாத தீர்ப்புகளைத் தூக்கிப் போட்டுவிடுமோ எனும் கருத்து அரசியல் அவதானிகள் மத்தியில் நிலவுகின்றன. ஜரோப்பிய நாடுகளில் வாழும் மத்தியதர உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் காலம்காலமாக தொடர்ந்து தம்மை ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் தமது நலன்களை முன்னெடுக்கத் தவறி விட்டார்கள் எனும் கருத்தினால் முற்றுமுழுதாக ஒரு மாற்றம் வேண்டித் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கிறார்கள் என்பதுவே பொதுப்படையான கருத்தாக அமைகிறது.

இந்த 2016ஆம் ஆண்டில் மிகவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டது சிரியா நாடு என்பதும் அதன் போரினால் பாதிப்படைந்த மக்களும் என்பது மறுக்க முடியாத உண்மை. உலக வல்லரசுகள் தமது பலத்தினை நிரூபிப்பதற்கான களமாக சிரியா நாட்டினைப் பயன்படுத்துகின்றனவோ எனும் கருத்து மனதில் எழத்தான் செய்கிறது. மானிட தர்மத்தையும், மக்கள் நலன்களையும் காப்பதற்கான யுத்தங்கள் காலகாலமாக நிகழ்ந்து வந்துதான் இருக்கின்றன. ஆனால் யுத்தத்தின் வெற்றியையும், தமது நிலைப்பாடுகளையும் முதன்மைப்படுத்தி மனிதர்களின் நலனைக் கணிப்பிலெடுக்காது உலக நாடுகளின் முன்னணி நாடுகள் செயற்படுவது போலத் தென்படுகிறது. மக்கள் தமது இல்லங்களையும் தொழில்களையும் இழந்து பலர் அங்கவீனர்களாகி அயல்நாடுகளின் அகதிகள் முகாம்களில் தமது வாழ்வினை வருடக் கணக்கில் நடத்தி வருவது மனிதாபிமானமிக்க உள்ளங்களை வருந்தத்தான் செய்கிறது. இனிவரும் இப்புத்தாண்டிலாவது இந்நாடுகளில் ஓரளவு இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும் என்பதுவே அனைவரினது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இவ்வாண்டின் அதிமுக்கிய நிகழ்வு அது தனது அரசியல் தலைவியும், முதலமைச்சருமான செல்வி டாக்டர் ஜெயலலிதா அவர்களைக் காவு கொண்டதுவே. இவ்வரசியல் அதிர்வு கொடுத்த அலைகள் இன்னும் ஓய்வில்லாமல் அடித்துக் கொண்டேயிருக்கின்றது. அடுத்து தமிழகத்தின் முன்னணி மூத்த அரசியல் விமர்சகர் திரு சோ அவர்களையும் காலம் கவர்ந்து சென்றது. இந்தியாவின் பிரதமரால் கொண்டுவரப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ரத்து எனும் அறிவித்தல் நாடுமுழுவதும் பரந்து பட்ட விவாதங்களை முன்னெடுத்து வைத்துள்ளது. இதன் பலாபலன்கள் வித்தியாசமானவர்களினால் வித்தியாசமாக விளக்கப்படுகின்றது. இதன் உண்மையான பலன்களைக் காட்டும் ஆண்டாக 2017 அமையப் போகிறது என்பதுவே நிதர்சனமான உண்மை.

நான் பிறந்த மண்ணான இலங்கையின் அரசியல் மாற்றங்கள் இன்னும் எதிர்பார்ப்புக்களாகவே இருக்கின்றது. அமைதியும், சமாதானமும் கொண்ட சம உரிமை கொண்ட மக்களாக அவர்கள் வாழும் ஒரு நிலையை வருகின்ற 2017ஆம் ஆண்டாவது கொடுக்காதா? எனும் ஏக்கம் எனைப்போன்ற புலம்பெயர் மக்களின் மனங்களில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

எனது பிரத்தியேக வாழ்வில் 2016  மகிழ்வான,சோகமான, ஆச்சரியமான நிகழ்வுகளை உள்ளடக்கிய ஒரு ஆண்டாகவே அமைந்திருக்கிறது. 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்த எமது வருடாந்த சென்னை விஜயம் ஒரு வெறுமையானதாக அமைந்ததன் காரணம் எனக்குத் திருமணமான காலம் முதல் 2015ஆம் ஆண்டு அவர் மறையும் வரை ஒரு தந்தையாக என்னை ஆதரித்த எனது அன்பு மாமனார், எனது மனைவியின் தந்தை இல்லை என்பதுவே. அதேநேரம் எமது வாழ்வில் ஒரு புதுவரவாக, புது வசந்தமாக வந்திருக்கும் எனது பேத்தியின் வருகை இவ்வருடத்தின் நிகழ்வுகளுக்கு மகுடமாக அமைந்தது.

ஒவ்வொரு ஆண்டும் அவசர வேகத்தில் ஓடிக் கொண்டேயிருக்கிறது. போகிற ஆண்டு கொடுத்த அனுபவத்தில் அடுத்துவரும் ஆண்டினை எமக்கு ஏற்ற வகையில் செதுக்கிக் கொள்வோம் எனும் நம்பிக்கையோடுதான் நாமனைவரும் அடுத்த ஆண்டுக்குள் நுழைகிறோம்; ஆனால் அனைத்தும் அனைவரினதும் எண்ணப்படி நடப்பதில்லையே! சில எதிர்பார்ப்புகள் எமாற்றங்களாக முடிகின்றன, சில நிகழ்வுகள் எதிர்பாராதவையாக அமைகின்றன. இதுதான் வாழ்க்கை. இதுதான் யதார்த்தம். ஆனால் அதற்காக எமக்கென ஒரு பாதையை வகுக்காது, திட்டங்களில்லாமல் வாழ்வது சாத்தியமாகாது. முயற்சி நம்முடையதாக, நியாயமானதாக,நேர்வழியானதாக இருந்தால் இலக்கை அடைகிறோமோ இல்லையோ எமக்கு வெற்றியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *