செல்வ மாணிக்கம் பழனியப்பன்

சகுணம்,  ராசியை நம்பு பவர்களா நீங்கள். நம் கதையின் நாயகன் ராஜாவிற்கு நேற்று  வரை அந்த நம்பிக்கை இருந்தது. காலையில் எழுந்திருக்கும்  போது,  கண்ணாடியில் அவன் முகத்தை முதலில் பார்த்து விட்டுத்தான் அவனுடைய வேலையைத் தொடங்குவான். வீட்டை விட்டு வெளியே கால் எடுத்து வைக்கும் முன் யார் எதிரே வருகிறார்கள் என்று பார்த்துத் தான் வெளியே கிளம்புவான். எதிரே சுமங்கலி யாராவது வர வேண்டும், இல்லாவிட்டால் கோவில் மணி காதில் கேட்க வேண்டும், இல்லா விட்டால் பசு மாடு எதிரே வர வேண்டும். சுபச்சொல் தான் காதில் விழ வேண்டும்.இவ்வளவு ஏன்,ராஜாவின் பூர்வாசிரம பெயர் என்ன தெரியுமா செல்வநிதி . அப்பா, அம்மா ஆசையுடன் வைத்த பெயர். கொஞ்ச நாட்களுக்கு முன் பெயரை மாற்றி ராஜா என்று வைத்துக்கொண்டான். பெயரில் செல்வம் என்று இருந்தால் காசு தங்காதாம். ராஜாவிற்கு சொந்த வீடு இருந்தது. அப்பா கட்டிய அழகான வீடு. வீட்டின் எண் ஏழு. கொஞ்சம் நாட்களுக்கு முன், சென்னை மாநகராட்சி கைங்கரியத்தினால், ராஜாவின் வீட்டு எண் எட்டு என்று மாற்றப்பட்டு விட்டது. உடனே ராஜா என்ன செய்தான் தெரியுமா?  வீட்டை வந்த விலைக்கு விற்று விட்டு, வாடகை வீட்டுக்குப்போய் விட்டான். திருமணத்திற்கு, பெண் பார்த்தபோது கூட, லெட்சுமி என்ற பெயருள்ள பெண், அதுவும் அக்கா இல்லாத பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து கொண்டான். லெட்சுமியின் அக்கா மூதேவி என்ற ஐதீகத்திற்காக!

தப்பித்தவறி அவனுடைய விதவை பாட்டி  இவன் கிளம்புவது தெரியாமல் வெளியே  எதிர்ப்பட்டு விட்டால் தொலைந்தது, அம்மாவையும், மனைவியையும் திட்டித் தீர்த்து விடுவான். துக்க வீட்டுக்கு போக மாட்டான். வெள்ளிக்கிழமை என்ன அவசரம் என்றாலும் எதையும் வாங்க மாட்டான். தனலெட்சுமி வீட்டை விட்டு போய் விடுவாளாம். எத்தனையோ தடவை கேஸ் சிலிண்டர் வெள்ளிக்கிழமைகளில் வந்து விட்டு திரும்பப்போயிருக்கிறது. சனிக்கிழமைகளில் டாக்டரிடம்  போனால் தொடர்ந்து போக வேண்டி இருக்கும் என்று சனிக்கிழமைகளில் டாக்டரிடம் போக மாட்டான். இதனால் ராஜா  இழந்தது ஏராளம். இருந்தாலும் வர வேண்டிய பெரிய இழப்பு, அவன், ராசி, சகுணம் பார்த்ததால் தான் இந்த அளவோடு போனது, என்று சப்பைக்கட்டு  கட்டுவான். நேற்று காய் வாங்க மார்கெட்டுக்கு போய் இருந்தான் ராஜா. காய்காரம்மா ராஜாவைப் பாத்து, சாமி நீ தான் முதல் போனி.என்ன வேணுமோ எடுத்துக்கோ. காய் வாங்கி கணக்கு பார்த்ததில் 160 ரூபாய் வந்தது. 10ரூபாய் தள்ளி 150ரூபாய் காய்காரம்மா மகிழ்ச்சியாய் வாங்கிக் கொண்டாள். ராஜாவுக்கு அவனுடைய ராசியில் எப்போதும் பெரிய நம்பிக்கை  உண்டு. அவனுடைய ராசியால்  தான்  அவன் வேலை பார்க்கும் நிறுவனம் மிகப் பெரிய லாபம் ஈட்டி வருவதாக சொல்லிக்கொண்டிருப்பான்.

அவன் மனதில் நினைத்துக்கொண்டான், அவன், காய்காரம்மாவின் வியாபாரத்தை அன்று ஆரம்பித்து வைத்ததால் அந்த அம்மாவிற்கு வியாபாரம் அமோகமாக இருக்கும்  என்று. அன்று மாலையே மீண்டும் அந்த காய் கடைக்கு போக வேண்டி வந்தது ராஜாவிற்கு. காலையில் மேக மூட்டமாக இருந்ததால், மழை வரும் என குடை கொண்டு போய் இருந்தான். அதை கடையிலே மறந்து வைத்துவிட்டான். அதை எடுத்து வருவதற்காக மாலை அந்தக்கடைக்குச் சென்றான். கடையைச்சுற்றி ஒரே கூட்டம். ராஜாவிற்கு பெருமை தாங்கவில்லை. அவன் நினைத்துக்கொண்டான், தான் காலையில் ஆரம்பித்து வைத்த வியாபாரம் இன்னும் தொடர்கின்றது என்று. அருகில் சென்றவுடன் , அந்த காய்காரம்மாவின் அழுகையுடன் கூடிய கூச்சல் கேட்டது. கடை அருகே காய் அனைத்தும் நசுங்கியும், மிதிபட்டும் சிதறிக்கிடந்தன. கடை முழுதும் நொறுக்கப்பட்டுக் கிடந்தது. பக்கத்தில் சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.”காலையில ஒரு ஆளை நாலஞ்சு பேர் தொரத்திக்கிட்டு வந்திருக்காங்க. ஏதோ தகராறு. அவன் பயந்து இந்தக் கடையிலெ நுழைஞ்சுட்டான். அவன அடிக்கிற மும்முரத்தில, இந்தக் கடைய அடிச்சு உடைச்சிட்டாங்க. அந்த காய்காரம்மா புலம்பிக்கொண்டிருந்தாள்.”நானும் இருவது வருசமா வியாபாரம் பன்னிக்கிட்டு இருக்கேன். இப்பிடி நடந்தது இல்ல. காலையில ஒரு புண்ணியவான்  முதல்  போனி பண்ணி என் வியாபாரத்துக்கே வேட்டு வைச்சிட்டானே! “

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *