மார்கழி மணாளன் 14
க. பாலசுப்பிரமணியன்
திருக்கண்ணன்குடி- அருள்மிகு தாமோதர நாராயணப் பெருமாள் திருக்கோவில்
பாற்கடலில் படுத்திருக்கும் பரந்தாமன் போற்றியே
பார்வையிலே பாலகனாய் மறைமுனியும் வடித்தெடுத்து
பால்கடைந்த வெண்ணையால் உருவத்தில் வண்ணமிட
ஆலிலையில் படுத்தவனும் ஆனந்தமாய் ரசித்தானே !
உறிகொண்ட மண்பானை ஒருகல்லால் உடைத்தவனே
மறைகண்ட மாமுனிவன் மனம்காண நினைத்தவனே
கலைகொண்ட சிலையிருக்கும் வெண்ணையை விருந்தாக்க
நிலைகுலைந்த தவத்தோனும் வேதவனைத் தொடர்ந்தானே!
அலையாளும் கடலிலே அசைவின்றி உறங்கியவனே
விளையாட வந்தவனே விரும்பியே கட்டுண்டான்
மகிழத்தில் கட்டுண்டோன் மாயத்தில் விலகிவிட
மாமுனியும் மாதவனின் மனம்கண்டே வியந்திட்டான் !
தீராவழக்கும் ஊராக்கிணறும் உறங்காப்புளியும் படைத்தே
மாறாமனதுடன் மகிழத்தடியில் உறங்கிடும் கலியனே
தீராப்பசிக்குத் தானேவந்து அமுதம் படைத்தாய்
காயாமகிழைக் கண்டவர் அருளிடும் கலியுகத்தேவா !
கண்ணிருந்து பார்த்தோர்க்குக் கண்ணன்குடி கலையழகே !
விண்ணிருந்து பார்போர்க்கு விடிவெள்ளி உன்னழகே !
முன்னிருந்து பார்ப்போர்க்கும் பின்னிருந்து பார்ப்போர்க்கும்
முடிவின்றி நிறைந்திருக்கும் மூவுலகிலன் பேரழகே !
ஒன்றாய் இரண்டாய் பலவாய் உருவானவனே
கன்றாய் தாயாய் கருவாய் நிறைந்தவனே
நின்றாய் கிடந்தாய் நிறைந்தாய் நினைவுள்ளே
மறைந்தே இருந்தும் அருள்வாய் மனத்துள்ளே !