Month: February 2016

  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: சிறிதேனும் இன்னாது இருவர் உடன் ஆடல் நாய்

     

    ஒருவ ருரைப்ப உரைத்தால், அதுகொண்
    டிருவரா வாரும் எதிர்மொழியற் பாலா.
    பெருவரை நாட! சிறிதேனும் இன்னா
    திருவர் உடனாடல் நாய்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    ஒருவர் உரைப்ப உரைத்தால், அது கொண்டு
    இருவர் ஆவாரும் எதிர் மொழியற் பாலா;-
    பெரு வரை நாட!-சிறிதேனும் இன்னாது,
    இருவர் உடன் ஆடல் நாய்.

    பொருள் விளக்கம்:
    ஒருவர் ஒரு கருத்தினை உரைக்க, அவருக்கு மாற்றுக் கருத்துள்ளவர் அதனை மறுத்து மறுமொழி சொன்னால், அதைப் பற்றி மேற்கொண்டு இருவரும் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் எதிர்த்து வாதிட்டுக் கொண்டிருப்பது சரியாகுமா? (அது சரியான முறையல்ல). பெரிய மலைநாட்டைச் சேர்ந்தவரே, சிறிது காலப்பொழுதிற்குத்தான் என்றாலும் அது நன்மை பயக்காது. (அச்செயல்) இருவர் ஒரே ஒரு நாயின் உதவி கொண்டு தங்கள் இருவரது வேட்டையாடுதலையும் செய்வது போல (மிகுந்த துன்பத்தைக் கொடுப்பதாக) அமையும்.

    பழமொழி சொல்லும் பாடம்: தங்கள் வாதக் கருத்தை எடுத்துக் கூறுபவர்கள் ஒரே நேரத்தில் எதிர்த்து உரையாடிக் கூச்சலிடுவது பயன் தராது. வேட்டையாடச் செல்லும் இருவர், அவரவருக்கென்று ஆளுக்கொரு ஒரு நாயைப் பயன்படுத்தினால் மட்டுமே வேட்டையாடுவது எளிதாக இருப்பது போல; வாதிடுவோர் ஒருவர் மாற்றி ஒருவர் தங்கள் கருத்தை முன் வைத்தாலே அவ்வாதத்தால் பயன் விளையும். இருவரும் ஒரே நேரத்தில் கூக்குரலிட்டுக் கொண்டிருப்பது வாதத்திற்கு உதவாது. நேரத்தையும் நிலைமையையும் அறிந்து கருத்தை முன்வைக்க வேண்டும் என்பதை வள்ளுவர்,

    இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
    நடைதெரிந்த நன்மை யவர். (குறள்: 712)

    சொற்களின் தன்மையை நன்கு உணர்ந்தவர்கள், கேட்பவர்கள் விரும்பிக் கேட்கும் வகையில், நிலைமையைக் கருத்தில் கொண்டு, சொல்வதைத் தெளிவாகச் சொல்லத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்கிறார்.

    Share
  • “ஆத்துப் பாலக் கச்சேரி”

    மீ.விசுவநாதன்

    “ஆசிரியரே…வாரும் பாலத்துல நடுசெண்டர்ல ஒக்காந்து பேசுவோம்..காத்து நல்லா வீசுதில்லா…”
    “அது என்னவே நடுசென்டறு….நம்மூரு கேட்டுவாசல் தெருமாரில்லாருக்கு ஒம்மோடு பேச்சு…..”
    “ஆசிரியரே…நீங்க மெட்ராசுக்குப் போனாலும் போனீய..எங்களுக்கு இங்க ஊர் நடப்பச் சொல்ல ஆளே இல்லபோம்…மெட்ராசுல என்ன சமாசாரம்,,,எதாவது உப்பு புளி தேறுமா”
    “மெட்ராசுல புத்தகக் காட்சிக்குப் போனேன்…ஒரு நாலு புத்தகம் வாங்கினேன்…அதுலயே முங்கிட்டேன் போம்”

    “எங்களப்போல திண்ணை தேய்க்கரவரா நீரு…படிப்பாளியாச்சே….என்ன புத்தகம் வாங்கியாந்தீரு…நமக்கு எதாவது அதுல தீனி உண்டா?”

    “நீதிபதி சந்துரு எழுதின ” அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்”, ” நீதிபதி சந்துரு” (நேர்காணல்கள்), கி.ரா.வுக்கு எழுதிய கடிதங்கள், கோபல்லபுர மக்கள், அசோகமித்திரனின் “காந்தி” சிறுகதைத் தொகுப்பு” எல்லாம் வாங்கியாந்தேன்…கி.ரா.வுக்கு வந்த கடிதங்கள் புத்தகத்துல வல்லிக்கண்ணன், கு.அழகிரிசாமி, நா.பா.,தீப. நடராஜன், ஜெயகாந்தன், வண்ணதாசன், வண்ணநிலவன் கடிதமெல்லாம் படிச்சிட்டேன்…இன்னும் அதுல படிக்க நிறைய விசயம் இருக்குவே…”

    “அப்படி என்னதான் எழுதுவாங்க ஆசிரியரே…உங்க வீட்டுல எப்படி என்கவீட்டுல எப்படின்னு எழுதறதுக்கு ஒரு புத்தகமா..”

    “என்னவே கூறுகெட்டதனமா பேசுதேறு…ஒரு தரமாது அந்த எழுத்தப் படிச்சு பாருமைய்யா…கு. அழகிரிசாமி எழுத்துலதான் எத்தனை நட்பும், பாசமும் தெரியுது…அவருக்கு எழுத்து ஒண்ணுதான்வே உசிரா இருந்திருக்கு….அதெல்லம் படிச்சீர்னா இப்படி வெட்டிப் பேச்சு பேச மட்டீரு…அவருதுதான் அப்படின்னா வண்ணதாசன், வண்ணநிலவன் கடிதத்துல கதையேலாவே இருக்கு..வண்ணநிலவன் எழுத ஆரம்பிச்சது, திடீர்னு கல்யாணம் கட்டிக்கிட்டது…துள்ளக் பத்திரிக்கைல சேர்ந்தது, விட்டது, சினிமாவுக்கு வந்து போனதுன்னு எல்லாத்தையும் இலக்கியமால்லவே எழுதிருக்காரு…எல்லாரோடு கடித்துலயும் ஒரு பசை இருக்குவே…அதான் ஊர்ப்பாசம்….”

    “ஆசிரியருக்கு இல்லாத ஊர்ப்பாசமா…அவங்களுக்கெலாம் வரப்போவுது..”

    “.குறுக்க சால் பாச்சாதவே…முழுசும் கேளும்..பொறவு பேசும்”

    “சரி….நீதிபதி சந்துருன்னு எதோ சொன்னீரே”

    “ஆமாம்…”அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்”ன்னு ஒரு புத்தகம்…நல்ல தெளிவா எழுதிருக்காருவே…தலித் மக்களுக்கு அவர் சொன்ன தீர்ப்பெல்லாம் கேக்க இப்ப நம்ம பாரதியார் இருந்தார்னா “பலே பண்டியான்னு” நீதிபதி சந்துரு தோள்பட்டைல ஒரு தட்டு தட்டிருப்பாருவே…அந்த புத்தகத்த ரெண்டு மொறை படிச்சுட்டேன்….”

    “ஆசிரியரே…ஒங்களுக்குத் தெரியாததா..நம்மூரு தியாகி கோமதி சங்கர தீட்ச்சிதரு, சர்மாஜி எல்லாரும் சேந்துக்கிட்டு எகாம்பரபுரம் தெருவுல வச்சு “தலித்துகளோட சேர்ந்து சமபந்தி போஜனம்” போட்டங்களாமே” அந்தகாலத்துலையே….கோமதி சங்கர தீச்சிதரு எம்.எல்.ஏ. வா இருந்தபோது எத்தனை தலித்து குடும்பத்து புள்ளைகளுக்கு வேலை வாங்கிக் கொடுத்தாரு…..ஒரு சல்லி காசு வாங்கிருப்பாரா…இப்ப நம ஊரு கவுன்சிலரு கூட கார்லல்லாவே பறக்கானுவ..துட்டடிக்க அலையரானுவளே…”

    “சரி…விசயத்தக் கேளும்வே….அந்தப் புத்தகத்தைப் படிச்சுப்புட்டு அதுல உள்ள நியாயத நெனைச்சே மனசு துடிச்சுக்கிட்டிருக்கு…இன்னிக்கு நெலமைல இடஒதுக்கீடுன்னு பார்த்தா நம்ம கிராமத்துலயே எத்தன ஏழை பிராமணப் புள்ளைங்க நல்ல மார்க்கு வாங்கிட்டு மேல படிக்க முடியாம சமையலுக்கும், அப்பளாம் விக்கவும் போகுது…அவ்வளவு வருமானம் இல்லாத அந்தக் குடும்பத்துப் புள்ளைகளும் இந்தக் காலத்துல “தலித்து” தான்வே…இடஒதுக்கீட்டுல நல்லா படிச்சு முன்னுக்கு வந்த கீழ்த்தட்டு மக்களே, தானே முன்னுக்கு வந்து ,” நாங்க மூணு நாலு தலைமுறையா மேல வந்தாச்சு…இனிமே எங்க குடும்பத்துக்கான இடஒதுக்கீடு எங்களுக்கு வேண்டாம்…அத இன்னும் தேவையா இருக்கற புள்ளைங்களுக்குக் கொடுங்கன்னு சொல்லற மனசும், காலமும் வரணும்வே…பொறவுதான் இது சுதந்திர நாடு….அன்னிக்கு இருந்த சாதிக் கொடுமை இன்னிக்கு வேற மாறில்லாருக்கு….”

    “நல்லகாலம் பொறக்குது…நல்ல காலம் பொறக்குது..சாத்திரம் எல்லாம் மாறப்போகுது…ஓட்டப் பிச்சுக்கிட்டு துட்டு வரப்போகுது”….

    “ஆசிரியரே…குடுகுப்பைக்காரன் நம்ம ஊருக்குள்ளல்ல
    போறான்…ஓட்டப் பிச்சுக்கிட்டு துட்டு வரப்போகுதுங்கானே…வரப்போற தேர்தலைச் சொல்லுதானோ….”

    “அவன் சொன்னதெல்லாம் நடக்கு பாரும்….எல்லாப்பயலும் நல்ல ஏமாத்தக் கத்துக்கிட்டானுங்க..இங்க இருக்கறவன் அங்க போறான் அங்க இருக்கறவன் இங்க வரான்….இவங்கள நம்பி ஓட்டுப் போடக் கூடாதுவே.. ஓட்டப் பிச்சுதான் போடணும்….சரி..மிச்சத்த நாளைக்குப் பாப்போம்….”

    “ஆரிசியரே..போறபோது அந்த அம்பிகடைல சூடா ரெண்டு பச்சி தின்னுட்டுப் போவோம்…”
    அன்புடன்,
    மீ.விசுவநாதன்
    03.02.2016 00.15 AM

    Share
  • ரசாயனக் கலவைகளால் ஏற்படும் கேடுகள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    கம்பெனிகள் பல பொருள்களில் பல ரசாயனக் கலவைகளை உபயோகிக்கின்றன.  இவற்றை இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறார்களாம்.  முதல் வகை அமெரிக்காவில் 1976-ஆம் ஆண்டு நச்சுப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் (Toxic Substances Control Act)  கொண்டுவரும் முன் உபயோகத்தில் இருந்தவை; 60,000-க்கும் மேற்பட்ட இந்த ரசாயனங்களின் உபயோகத்தை அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் (Environment Protection Agency) கண்காணித்து வருகிறது.  1976-க்குப் பிறகு இன்னும் 20,000 ரசாயனங்கள் சந்தைக்கு வந்திருக்கின்றன.  இவற்றையும் கண்காணிக்க வேண்டியது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் பொறுப்பு.  கட்டுப்பாடுகள் இருந்தும் டுபான்ட் (DuPont) என்னும் நிறுவனம் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக PFOA (perfluorooctanoic acid) என்னும் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் கேடு விளைவிக்கும் ரசாயனத்தை உபயோகித்து வந்திருக்கிறது.

    மேற்கு வர்ஜீனியா மாநிலத்திலுள்ள பார்க்கர்ஸ்பர்க் என்னும் ஊரில் டெனன்ஸ் சகோதரர்கள் நான்கு பேர் தங்களுடைய தந்தை விட்டுச்சென்ற 600 ஏக்கர் நிலத்தில் 200 மாடுகளை வளர்த்து வந்தனர்.  டெனன்ஸ் சகோதரர்களில் ஒருவரான ஜிம் டெனன்ஸும் அவரது மனைவியும் தங்கள் பங்கான 66 ஏக்கர் நிலத்தைப் பணத் தேவை  ஏற்பட்டதால் டுபான்ட் நிறுவனத்திற்கு விற்றுவிட்டனர்.  அந்த நிறுவனம் தன்னுடைய தொழிற்சாலைக் கழிவுகளைக் கொட்டுவதற்குரிய இடமாக அதை ஆக்கிக்கொண்டது.  அந்தக் கழிவுகளிலிருந்து PFOA (இது ஒரு ரசாயனக் கலவை; ஃப்ளோரின் (Florine) என்னும் தனிமத்திலிருந்து தயாரிக்கப்பட்டது) கசிந்து அருகிலுள்ள நிலத்தடி நீரில் கலந்தது.  இது தெரியாமலேயே இந்த இடத்தைச் சுற்றியுள்ள பல ஊர்களில் வாழ்ந்த ஒரு லட்சம் பேர் இந்த ரசாயனம் கலந்த தண்ணீரைக் குடித்து வந்தனர்.

    1951-இல் டுபான்ட், 3M கம்பெனியிலிருந்து (இது செய்யும் பல பொருள்களில் ஸ்காட்ச் டேப்பும் ஒன்று) PFOA-ஐ வாங்கி, சமைக்கும் பாத்திரங்களில் உணவு ஒட்டாமல் இருப்பதற்காக டெஃப்லான் (Teflon) என்னும் பொருளைச் சேர்க்கும்போது இதையும் சேர்த்து உபயோகிக்கத் தொடங்கியது.  3M இதற்கு நான்கு வருடங்களுக்கு முன் PFOA-ஐ கண்டுபிடித்திருந்தது.  டுபான்ட்டும் 3M-உம் சேர்ந்து நடத்திய ஆராய்ச்சிகளில் PFOA மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் அவர்களுடைய உடலில் கேடு விளைவிக்கக்கூடிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்று கண்டறியப்பட்டது.  ஆனாலும் இரண்டு கம்பெனிகளும் இதை வெளியில் சொல்லவில்லை.  தொண்ணூறுகளில் PFOA-க்குப் பதில் இன்னொரு ரசாயனத்தை டுபான்ட் கண்டுபிடித்தது.  ஆனாலும் டுபான்ட் அதை உபயோகிக்க விரும்பவில்லை.  அதனுடைய உற்பத்திப் பொருள்களில் PFOA-னின் பங்கு அவ்வளவு.  அதனால் கிடைக்கும் நூறு கோடி டாலர் லாபத்தை அந்தக் கம்பெனி இழக்க விரும்பவில்லை.

    பார்க்கர்ஸ்பர்க் ஊரைச் சேர்ந்த டெனன்ஸ் சகோதரர்கள் வளர்த்துவந்த கால்நடைகளும் PFOA கலந்த நீரைக் குடித்துவந்ததால் பல நோய்களுக்கு ஆளாகின.  டெனன்ஸ் சகோதரர்கள் டுபான்ட் மீது வழக்குத் தொடர முயன்றபோது அந்த ஊரில் உள்ள எந்த வழக்கறிஞரும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை.  பல நெருங்கிய நண்பர்கள் கூட அவர்களிடம் பேச விரும்பவில்லை.  அந்த ஊரில் பலருக்கு டுபான்ட் நிறுவனம் வேலைவாய்ப்புக் கொடுத்ததே இதற்குக் காரணம்.  கடைசியில் பெரிய வணிக நிறுவனங்களுக்குச் சட்ட ஆலோசகராக இருந்த பலாட் என்னும் வழக்கறிஞரை டெனன்ஸ் சகோதரர்கள் அணுகினர்.   எவ்வளவோ முயன்றும் PFOA கலந்த நீரைக் குடித்ததால்தான் டெனன்ஸ் சகோதரர்களின் கால்நடைகள் இறந்துகொண்டிருந்தன என்று அவரால் வாதிட்டு ஜெயிக்க முடியவில்லை.  டுபான்டும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையும் சேர்ந்து நியமித்த கால்நடை மருத்துவர்கள் குழு டெனன்ஸ் சகோதரர்களுக்குக் கால்நடை பராமரிப்புப் பற்றி தெரியாதலால் அவர்களுடைய கால்நடைகள் இறந்துகொண்டிருந்தன என்று அறிக்கை அளித்தனர்.  தற்செயலாக பலாட் டுபான்ட் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புத் துறைக்கு அனுப்பிய ஒரு கடிதத்தைப் படிக்க நேர்ந்தது.  அதில் அவர் இதுவரை கேள்விப்பட்டிராத PFOA என்ற பெயரைக் கண்டார்.  அது பற்றி தெரிந்துகொள்ள டுபான்ட் நிறுவனத்திடம் இந்த வழக்குப் பற்றிய ஆவணங்களைக் கேட்டார்.  அவர்கள் மறுத்தும் நீதிமன்றத்தின் மூலம் கேட்டு வாங்கி டுபான்ட் நிறுவனத்தின் ரகசிய ஆவணங்களை வாங்கிப் பரிசீலித்தார்.

    டுபான்ட் அனுப்பிய நூற்றுக் கணக்கான ஆவணங்களைப் பரிசீலித்த பலாட் முதல் முதலாக PFOA என்ற ரசாயனக் கலவையைப் பற்றித் தெரிந்துகொண்டார்.  டுபான்ட் கம்பெனிக்கு PFOA பற்றித் தெரிந்திருந்தும் அது தொடர்ந்து தங்கள் கம்பெனி தயாரிக்கும் பொருள்களில் அதை உபயோகிப்பது பற்றியும் பலாட்டிற்குத் தெரிய வந்தது.  பார்க்கர்ஸ்பர்க் ஊரில் நிலத்தடி நீர் PFOA-வினால் மாசுபட்டிருப்பதையும் விவரித்து 972 பக்க அறிக்கை ஒன்றைத் தயாரித்து 2001-இல் அதை அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறைக்கும் அமெரிக்க உள்துறை அமைச்சகத்துக்கும் அனுப்பிவைத்தார்.  இது அரசுக் கொள்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.  பலாட் இந்த உண்மைகளை வெளிக்கொண்டுவரும்வரை, ‘கேடு விளைவிக்கும் ரசாயனம் இருந்தால் அதை அரசு கட்டுப்படுத்தியிருக்கும்’ என்று மக்கள் நம்பிக்கொண்டிருந்ததால், கேள்வி கேட்பாரின்றி கார்ப்பரேட் நிறுவனங்கள் தடையில்லாமல் ரசாயனங்களை உபயோகித்து வந்தன.  உண்மை என்னவென்றால் குறிப்பிட்ட ரசாயனம் கேடு விளைவிக்கும் என்று ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டாலொழிய அவற்றை அரசு தடை செய்யாது.  கம்பெனிகளே கேடு விளைவிக்கும் ரசாயனங்களை உபயோகிக்காது என்று நினைத்து அரசு கட்டுப்பாட்டைக் கொண்டுவரவில்லை.  1976-இல் நச்சுப்பொருள்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் இயற்றப்பட்டபோது அப்போது புழக்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசாயனங்களில் ஐந்திற்கு மட்டுமே அரசு தடை விதித்திருந்தது.

    கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக 3M-உம் டுபான்டும் ஆராய்ச்சிகளின் மூலம் அவர்களுடைய ஆய்வுக் கூடங்களில் எலி போன்ற மிருகங்களுக்கு ஏற்பட்ட உடல் கோளாறுகள் பற்றியும் அவர்கள் தொழிற்சாலைகளில் வேலைபார்ப்பவர்களுக்கு ஏற்பட்ட கோளாறுகள் பற்றியும் தெரிந்திருந்தும் அந்த முடிவுகளை ரகசியமாக வைத்திருந்து தொடர்ந்து PFOA-வை தங்கள் உற்பத்திப் பொருள்களில் உபயோகித்து வந்தனர்.  இப்போது பலாட் எடுத்த நடவடிக்கைகளால் டுபான்ட்டின் ஊழல் வெளியானதும் அது சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையோடு ஒன்றரை கோடி டாலருக்கு ஒப்பந்தம் செய்துகொண்டது.  இருப்பினும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை டுபான்ட்டை அந்தத் தவறுகளுக்குப் பொறுப்பேற்கும்படி கூறவில்லை.  அமெரிக்க அரசு எப்போதுமே கார்ப்பரேட்டுகளைப் பகைத்துக்கொள்ளத் தயங்கும்.

    இதையடுத்து டுபான்ட் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட PFOA கலந்த கழிவுகளால் மாசுபட்ட நீரைக் குடித்தவர்கள் டுபான்ட் மீது வழக்குத். தொடர விரும்பினர்.  அவர்கள் குடித்துக்கொண்டிருந்த தண்ணீரில் டுபான்டே ஆராய்ச்சி மூலம் கூறியிருந்த அளவைவிட அதிகமாக PFOA இருந்தது.  பைலாட் வழக்குத் தொடரலாம் என்று அறிந்ததும் டுபான்ட்டின் விஞ்ஞானிகளும் மேற்கு வர்ஜீனியா மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை விஞ்ஞானிகளும் சேர்ந்து ஆராய்ச்சி செய்து நீரில் அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பான PFOA அளவை அதிகரித்துக்கொண்டனர்.  அதாவது முதலில் நூறு கோடி துகள்களில் PFOA ஒரு துகளுக்கு மேல் இருந்தால் அது மாசுபடுத்தப்பட்ட நீர் என்று கணக்கிடப்பட்டது.  இப்போது நூறு கோடி துகள்களில் PFOA 150 துகள்கள்வரை இருக்கலாம் என்று டுபான்ட் கூறிக்கொண்டது.

    பலாட் விடவில்லை.  அவர் நியமித்த நச்சுப்பொருள் ஆராய்ச்சியாளர்கள் (toxicologists) நூறு கோடி துகள்களில் 0.2 துகள்கள் மட்டுமே இருக்கலாம் என்று முடிவுசெய்தனர்.  ஆனால் மேற்கு வர்ஜீனியா மாநிலமோ டுபான்ட் வழக்கறிஞர்கள் மூவரை மாநிலச் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறைக்கு நியமித்தது.  அதில் ஒருவர் அந்தத் துறைக்கே அதிகாரப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.  டுபான்ட் ஆராய்ச்சியாளர்கள் முடிவுசெய்த 150 துகள்களையே மேற்கு வர்ஜீனியா மாநிலம் பாதுகாப்பான அளவாக எடுத்துக்கொண்டது.

    பலாட் இன்னொரு யுத்தியைக் கையாண்டார்.  இம்மாதிரி மாசுபட்ட நீரைக் குடித்துக்கொண்டிருந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு தாங்கள் அந்த நீரைக் குடித்துக்கொண்டிருந்ததாக நிரூபித்தால் வாதியின் எல்லா வகை மருத்துவ சோதனைகளுக்கும் பிரதிவாதி பணம் கொடுக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தை மேற்கு வர்ஜீனியா நிறைவேற்றியிருந்தது.  மேலும், பின்னால் அந்த வாதி நோய்வாய்ப்பட்டாலும் பிரதிவாதியிடமிருந்து நஷ்ட ஈடு பெறலாம் என்றும் அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்தச் சட்டத்தின் உதவியால் பலாட் பலர் சேர்ந்து வழக்குத் தொடுக்கும் முறையில் (class-action suit) டுபான்ட் மீது மாநில நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

    இதற்கிடையில் பலாட்டின் ஆராய்ச்சியைத் தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை தன்னுடைய சொந்த ஆராய்ச்சியை PFOA பற்றி நடத்தியது.  2002-இல் அது வெளியிட்ட அறிக்கையில் PFOA கலந்த நீரைக் குடிப்பவர்களுக்குத் தீமை விளையும் என்பதோடு (PFOA அதிலும் கலந்திருக்கிறது என்பதால்) டெஃப்லான் பாத்திரங்களை உபயோகிப்பவர்களுக்கும் கேடு விளையலாம் என்றும் கூறியிருந்தது.  ஒவ்வொரு அமெரிக்கனின் ரத்தத்திலும் ஐந்து துகள்கள் PFOA இருப்பதாகவும் கண்டுபிடித்தது.  இந்த உண்மை டுபான்ட்டிற்கும் 3M கம்பெனிக்கும் 1976-லேயே தெரிந்திருந்தது.  2000-த்திலேயே 3M PFOA தயாரிப்பதை நிறுத்திவிட்டது.  டுபான்டோ வட கரோலினா மாநிலத்தில் தனக்கென்று ஒரு சொந்தத் தொழிற்சாலை ஆரம்பித்து PFOA தயாரிப்பைத் தொடர்ந்தது.  இன்னொரு ரசாயனத்தை மாற்றாக உபயோகிக்க விரும்பவில்லை.  ஆனாலும் இறுதியாக டுபான்ட் ஏழு கோடி டாலர் இழப்பீட்டுத் தொகை கொடுக்க மட்டும் ஒப்புக்கொண்டது.

    சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை மூலம் PFOA கலந்த நீரைக் குடித்த 70,000 பேர்களின் உடல் நலத்தை ஆராய்ந்து அவர்கள் குடித்த நீருக்கும் PFOA –க்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பதை ஆராய ஒரு விஞ்ஞான ஆராய்ச்சிக் குழு நியமிக்கப்பட்டது.  ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குழு சம்பந்தம் இருப்பதாக அறிவித்தது.  அந்த முடிவிற்குப் பின் டுபான்ட் 2013-இல் PFOA-வை உபயோகிப்பதை நிறுத்தியது.  PFOA-விற்கு மாற்றாக டுபான்ட் உபயோகிக்க ஆரம்பித்த ரசாயனக் கலவையிலும் மனிதர்களுக்குக் கேடு விளைவிக்கும் தன்மை இருக்கிறதாம்.

    ஃப்ளோரின் என்னும் தனிமத்திலிருந்து தயாரிக்கப்படும் ரசாயனக் கலவைகள் அனைத்திலும் மனிதர்களிடம் பல வியாதிகளை உண்டுபண்ணும் தன்மை இருப்பதாக 2015 மே மாதம் ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட 200 விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டனர்.  அமெரிக்காவிலும் சரி, உலகின் மற்ற நாடுகளிலும் சரி எத்தனை மக்களுக்கு PFOA பற்றியோ அம்மாதிரியான ரசாயனங்கள் பற்றியோ அவை மனிதனுக்கு எவ்வளவு கேடு விளைவிக்கலாம் என்பது பற்றியோ தெரியும் என்று தெரியவில்லை.

    அடிப்படைத் தனிமங்கள் 120 தான்.  அவற்றிலிருந்து பல வகையான ரசாயனக் கலவைகள்  தயரிக்கிறார்கள்.  இவற்றில் பல மனிதர்கள் உபயோகிக்கும் பல பொருள்களில்  உபயோகப்படுத்தப்படுகின்றன.  மேலே சொன்னபடி பல கட்டுப்பாடுகள் இருக்கும் அமெரிக்காவிலேயே 60,000 ரசாயனப் பொருள்களில் ஐந்து மட்டும்தான் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.  இந்தியாவில் இந்த அளவுகூட கட்டுப்பாடுகள் கிடையாது.  அப்படி இருந்தாலும் லஞ்சம் கொடுத்து அரசு அதிகாரிகளை விலைகொடுத்து வாங்கிவிடுவார்கள்.

    11-1436596887-4-non-stick-cookware

    நான் வல்லமை வாசகர்களுக்குக் கூற விரும்புவதெல்லாம் டெஃப்லான் பாத்திரங்கள் எதையும் உபயோகிக்காதீர்கள் என்பதே.  அவை நமக்குத் தெரியாமலே நம் உடம்பில் பல வியாதிகளை உண்டுபண்ணக் கூடியவை.  தொண்ணூறுகளுக்கு முன்புவரை டெஃப்லான பாத்திரங்கள் புழக்கத்திற்கு வரவில்லை.  இப்போது பல கம்பெனிகள் உணவுப் பண்டங்கள் ஒட்டாத பாத்திரங்களை உற்பத்தி செய்கின்றன.  அவற்றையெல்லாம் வாங்கும் பழக்கத்தை நிறுத்துங்கள்.  மண் பாத்திரங்களும் இரும்புப் பாத்திரங்களும் மட்டுமே மனிதனுக்குக் கேடு விளைவிக்காதவை.  மண் பாண்டங்கள் உபயோகிப்பது நடைமுறை சாத்தியமல்ல.  ஆனால் இரும்புப் பாத்திரங்களையும் எவர்சில்வர் பாத்திரங்களையும் உபயோகிக்கலாமே.

     

    Share
  • மேடையில் மலர்ந்த காதற் பொதுமறை !

    — வில்லவன்கோதை.

    downloadமேடைப்பேச்சைக் கேட்பதில் இருந்த ஆர்வம் எப்போதுமே மேடையேறுவதில் இருந்ததில்லை. அதற்கான மனநிலையையும் இதுவரை நான் ஏற்படுத்திக்கொண்டதேயில்லை. எனது கடந்து போன வாழ்க்கையில் வெறும் ஐந்தாறுமுறை பல்வேறு நிர்பந்தங்களால் மேடையேறியபோது அல்லது ஏற்றப்பட்டபோது வெறும் கடமையைச் செய்து இருக்கைக்கு வந்தவன். அந்தச் சாதுரியமான வித்தையை வசப்படுத்திக்கொள்ள முயலாதவன்.

    இத்தனைக்கும் பள்ளி நாட்களில் எப்போதாவது நடந்தேறும் இலக்கியக் கூட்டங்களுக்காக ஆவலோடு காத்திருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய மாணவர்களில் நான் ஒருவன்.

    ஐம்பதுகளில் இருந்து ஏறத்தாழ எழுபதுவரை மேடைப்பேச்சே வாழ்க்கையின் சுவாரஸ்யம் என்று கருதிய காலம். அப்போதெல்லாம் சென்னை நகர வீதிகளில் தினந்தோறும் அரசியல் சொற்பொழிவுகள் கனல்கக்க பொழிந்து கொண்டிருக்கும். மேடைப்பேச்சுகளின் பொற்காலம் என்று சொல்லலாம். மேடைப்பேச்சுகளில் முக்கியமாக எனது விருப்பம் திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு சிந்தனைகள் தாம் என்றாலும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் பேருரைகளையும் விரும்பிக்கேட்டவன். அதுமட்டுமல்லாமல் வாழ்வியல், இலக்கியம் சார்ந்த கூட்டங்களையும் நான் விட்டு வைக்கவில்லை. பள்ளிநாட்களில் தேனாம்பேட்டை எல்டாமஸ் சாலை பாலசுப்ரமணியர் திருக்கோயிலில் நிகழ்ந்த கி வா ஜெகனாதனுடைய தொடர் சொற்பொழிவுகள் இன்றும் நினைவில் நிற்கிறது.

    இவையெல்லாம் இன்று நான் பெற்றிருக்கிற விரிந்த பார்வைக்கு ஏற்பட்டுவிட்ட அடித்தளம் என்று நம்புகிறவன்.

    கடந்த மாதம் ஒரு வெள்ளிக்கிழமை 22- 01- 2016 மாலை நேரத்தில் சென்னை பாம் குரோவ் நட்சத்திர விடுதியில் நேர்த்தியான குளிரூட்டப்பட்ட அரங்கொன்றில் நண்பர் காவிரி மைந்தனின் காதல்பொதுமறை என்ற நூல் வெளியிடப்பெற்றது. பல்வேறு அறிஞர் பெருமக்களும் புலம் பெயர்ந்த தமிழார்வலர்களும் திரண்டிருந்த அந்த நிகழ்வில் நானும் கலந்து கொண்டேன்.

    நூல் வெளியீட்டு விழாக்களிலே ஒரு புதுமையாக காவிரிமைந்தனின் காதல்பொதுமறை வெளியிடப்பெற அதன் பெருமைபேசும் பேராசிரியை வைகைமலர் எழுதிய இரண்டு ஆய்வு நூல்களும் அந்த அரங்கத்தில் கைகோத்துக்கொண்டன.

    நெடுந்தொலைவில் இருந்து வந்திருந்த தமிழார்வலர்கள் அறிஞர் பெருமக்கள் காவிரி மைந்தனையும் அவர் நூலைப்பற்றியும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். பெரும்பாலான வல்லமை இணைய ஆஸ்தான எழுத்தாளர்கள் மேடையேறி தங்கள் சகாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்கள். என் நண்பர் பழனிசாமிகூட மேடையேறி இயல்பாகப் பேசி இறங்கினார்.

    அன்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நானும் கலந்துகொண்டு ஒரு நூலுக்கு மதிப்புரை தரவேண்டுமென்று நண்பர் காவிரி மைந்தன் சொன்னபோது அதிர்வுற்றேன். பக்கம்பக்கமாக எழுதத்தெரிந்த எனக்குப் பத்து நிமிடம் பதற்றம் தவிர்த்துப் பேசமுடியும் என்ற நம்பிக்கையின்மைதான்.

    உங்களால் முடியும் என்ற காவிரிமைந்தனின் குரலுக்கு பணிகிறேன்.

    வேறுவழியின்றி பேச்சுக்கு ஆதாரமாக நிரம்பக் குறிப்புகள் கைவசம் இருந்தாலும் தொடர்ந்து பேசமுடியும் என்ற நம்பிக்கையின்மையால் பேச்சை வெகுவாக சுருக்கிக்கொண்டு இருக்கையில் அமர்ந்தேன்.

    வெகு சிறப்பாக நிகழ்ந்த அந்த விழா நிறைவான நேர்த்தியான சிற்றுண்டியுடன் முடிவுக்கு வந்தது.

    இன்னொன்றையும் நான் குறிப்பிடவேண்டும்.

    நான் எண்ணுகிற பேசுகிற எழுதுகிற அத்தனையுமே சமூக அவலங்களை மையமிட்டே இருக்கும் அதில் காதலுக்கு என்றும் இடமளித்ததாக நினைவில்லை. காதலை மனிதவாழ்க்கையின் ஒரு அங்கமாகக் கருதுகிறேன்… அதுதான் வாழ்க்கையென்றோ அதுமட்டும்தான் இலக்கியம் என்றோ நான் கருதியதில்லை.

    எப்படியோ மேடையில் மலர்ந்த நண்பர் காவிரி மைந்தனின் காதற் பொதுமறை என் நினைவுகளைக் கிளறியது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    552bb52c-0f8d-436e-a09c-ef7f046b70a1

    ’’மீசைக்கு பாரதி, ஆசைக்கு ருக்மணி
    ஓசைக்கு வெண்சங்கின் ஓங்காரம் -பூசைக்கு
    ஆழ்வார்கள் பாசுரம்,அர்ஜுனர்க்கு கீதையாய்,
    வாழ்வோனை நெஞ்சே வணங்கு’’….கிரேசி மோகன்….

    Share
  • ‘’ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….

    ’’ஏக பில்வம் சிவார்ப்பணம்’’
    பில்வாஷ்டகம் படித்த பாதிப்பில் எழுதியது
    ‘’ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….
    ————————————————-
    ‘’சங்குசக்ரம் சாரங்கம் தெண்டம்வாள் நந்தகி
    அங்கையேந்தும் அவதார விஷ்ணு
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(1)

    ‘’மூணுமோர் மறைகள் மீட்க மீனமாய்க் கடலுள் சென்ற
    வானவைகுந்தனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(2)

    ‘’கடல்கடைந்த போதன்று வடவரையை வழுவிடாது
    உடல்சுமந்த ஆமையே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(3)

    ’’கொம்பிலே குவலயத்தை கால்சிலம்பில் கோள்குலுங்க
    நெம்பிய வராகரே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(4)

    ‘’தானாடும் துட்டனைத் தரைமட்டம் ஆக்கிட
    தூணாடும் துரைசிங்கனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(5)

    ‘’வந்தபின் வரம்வாங்கி அந்தவான் உலகளந்த
    அந்தணன் வாமனனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(6)

    ’’ராமபரசு ராமஅரசு ராமபல ராமனாய்
    நாமமொன்று நடிப்புவேறு
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(7)

    ‘’பூபாரம் போக்கவன்று பாரதப் போர்முடித்த
    கோபாலக் கண்ணனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(8)

    ———————————————————————-

    Share
  • விடியல் இன்று…

    — பால நிவேதிதா.

    “எதுக்கும் இன்னொரு டாக்டர்கிட்ட கேட்கலாமா…”, கீதாவின் குரல் கம்மி ஒலித்தது.

    “ப்ச் ……பார்ப்போம் ….”, நம்பிக்கை இல்லா ரமேஷின் குரல் கீதாவை என்னவோ செய்தது.

    “இன்னைக்கு கருணை இல்லத்தில் இருந்து போன் வந்தது கீதூ …”, திரும்பிப் படுத்து தூங்குவதாகப் பாவனை செய்தாள் கீதா.

    ரமேஷ், கீதா தம்பதியருக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை.

    ஒரு குழந்தையை தத்து எடுப்போம் என ரமேஷ் கூறிய போதும் ஏனோ கீதாவின் மனம் அதை ஏற்க மறுக்கிறது.

    பொழுது புலர்ந்த அதிகாலை வேளையில் வாசலில் தண்ணீர் சத்தம் கேட்டு கண் விழித்தாள் கீதா. அதற்குள் வந்து விட்டாளா கிருஷ்ணம்மா பாட்டி…

    ஜன்னல் வழியே பார்த்த கீதா கதவை திறந்து வெளியே வந்தாள்.

    அவள் செல்ல டாமி வாலை ஆட்டியபடி கீதாவிடம் பாய அதை வாஞ்சையுடன் தடவிய படியே,” என்ன பாட்டிமா இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க? ” என்றாள்.

    “எனக்கு என்ன கண்ணு…ஒத்தக்கட்ட விடிஞ்சதும் அப்படியே நடந்துட்டேன்”….கூறிய கிருஷ்ணம்மாவை ஏறெடுத்த கீதா,

    “என்ன பாட்டி கைய நல்லா கழுவ மாட்டீங்களா பாருங்க அங்க சுவர்ல உங்க கைத்தடம் அழுக்காய்……போனவாரம் தான் ஒயிட் வாஷ் பண்ணினோம்…..ப்ச். ..” எரிச்சலுடன் உள்ளே போன கீதாவை பரிதாபமாய் பார்த்த படியே மீதி வேலைகளைச் செய்ய நகர்ந்தாள் கிருஷ்ணம்மா.

    ரமேஷும் கீதாவும் ஆபிசுக்கு ரெடியாகி ஹாலுக்கு வரும் போது வேலைகள் அனைத்தையும் முடித்து இருந்த கிருஷ்ணம்மா வாசலில் யாரிடமோ பேசிய படி உள்ளே பார்த்து,

    “கண்ணு….அந்தியில வாரேன். ..ரேஷன் கடை சோலி இருக்கு…”, கீதாவின் ஒப்புதலை எதிர்பாராதவளாய் நடையைக் கட்டினாள்..

    ஆளுக்கு ஒரு புறமாக ரமேஷும் கீதாவும் தங்கள் அலுவலுக்குப் பறந்தனர். ..

    மதிய உணவு இடைவேளை.

    “அப்ப தத்து எடுக்க விரும்பலைன்னு ரமேஷிடம் சொல்லி விட வேண்டியது தானே “உயிர்த் தோழி சுரேகாவின் குரல் தெளிவாய் தான் விழுந்தது கீதாவிற்கு.

    ” ஆமாம்டி …என்னையறியாம என்னமோ தடுக்குது என்னை. .. எப்படியும் இன்னிக்கு உறுதியா சொல்லிடுவேன்”.

    வழிநெடுக இதை யோசித்தபடியே மாலை வீடு வந்து சேர்ந்தாள். ..

    பக்கத்து வீட்டு சுட்டிப் பெண் ஓடி வந்து “ஆன்ட்டி, கிருஷ்ணம்மா பாட்டி வரவே இல்லை, இந்தாங்க ….எனச் சாவியை கொடுத்து ஓடியது.

    ஸ்ஸ் எப்ப பார்த்தாலும் சொல்லாம லீவ் போடுவதில் இந்தப் பாட்டிக்கு ஈடு இணை வராது. .. நாளை வரட்டும் ..நல்லா நாலு வார்த்தை போட்டாதான் சரிவரும்…மனசுக்குள் திட்டியபடியே வீட்டிற்குள் நுழைந்தாள். ..

    அவளுக்குத் தெரியுமா நாளைய விடியலின் பயங்கரம். .

    இரவு டாமியின் குரல் கீதாவின் அடிவயிற்றைப் புரட்ட… ஊளளளள….. என்னாச்சு இதுக்கு. .. அபாய மணிக்குரலாக தோண …ரமேஷை எழுப்பினாள்.

    அவனுக்கும் முரணாகப் பட, இருவரும் எழுந்து வெளிவராண்டா விளக்கைப் போட்டு வாசலுக்கு வரவும் அது நடந்தது. ஆம். ..கணநேரத்தில். ..நிலநடுக்கம். …பெரிய சத்தத்துடன் தாறுமாறாய் நிலை குலைய கண்ணிமைக்கும் நேரத்தில் பூகம்பம் நடந்தேறி முடிந்தது. .

    ஆங்காங்கே கட்டிடங்கள் இடிந்து விழுவதும்,, பெரிய பெரிய பிளவுகளும் கண்ணெதிரே பார்க்க முடிந்தது.

    ரமேஷும் கீதாவும் டாமியை பார்க்க வெளியே வந்ததால் தடுமாற்றத்துடன் தப்பினர்.

    இயற்கையின் செயல்களுக்கு தடுப்பு சுவர் ஏது ?என்ன கொடுமை ..மனித வலிகளுக்கு மருந்திடக் கடவுள் இப்படியும் வருவாரா? இல்லை இயற்கை தன் அன்பைக் காட்டும் விதமோ? நடந்தேறியது என்னமோ பயங்கரம் தான். ….

    ஆயிற்று இன்றோடு பத்து நாட்களுக்கு மேல். … அனைவரும் சிரமங்களுக்கு நடுவில் இயல்புக்குத் திரும்பி கொண்டு இருந்தனர்.கீதாவும் ரமேஷும் உறவுகளுக்கு எல்லாம் தாங்கள் நன்றாக இருப்பதைத் தெரிவித்து ஓய்ந்து போனார்கள்.

    தொடர் விடுப்புக்குப் பிறகு அலுவலைத் தொடரத் தீர்மானிக்கும் போது தான் கீதாவிற்கு கிருஷ்ணம்மா பாட்டி நினைவே வந்தது .

    ஐயையோ கிருஷ்ணம்மா பாட்டி இருந்தது ரொம்பவும் நெருக்கடியான ஒரு பகுதியாச்சே, இந்தப் பத்து நாட்களாக எந்தத் தகவலும் இல்லையே ….ஒண்டி கட்டை என அடிக்கடி புலம்புவாளே ..என்ன ஆனாள் ?..இயற்கையோடு ஐக்கியமாகிப் போனாளா ?…எப்படி நான் அவளை மறந்தேன் ? உயிர் உடைமை என வரும் போது தன்னைக் காப்பாற்றத் தோன்றியதே தவிர வேலை பார்க்கும் கிருஷ்ணம்மாவா நினைவிற்கு வருவாள் .இருந்தாலும் இத்தனை வருடம் பழகிய ஆன்மா …

    விடு விடுவென தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள் கீதா, கிருஷ்ணம்மா இருப்பிடத்தை நோக்கி ……

    சுக்கு நூறாய் மாறி இருந்தது அந்த இடம் ..இங்கு தானே அவள் வீடு .சுற்றும் முற்றும் பார்த்தாள் .பல இடங்களில் பருந்துகள் வட்டமிட்டபடி இருந்தது .தென்பட்ட சிலரிடம் அவ்விடத்தில் இருந்தவர்களை பற்றி விசாரித்தாள். பாதிக்கும் பேர் இறந்து போனதாகவும், பாதி பேர் மருத்துவமனையிலும், எஞ்சியவர்கள் கோயில் மண்டபத்திலும் இருப்பதாகக் கூறினர்.

    குளமாகிய கண்களுடன் கோயில் மண்டபத்தை நோக்கி தொய்ந்து நடந்தாள். அன்று சுவரில் அவள் அழுக்கு கைப் பட்டதற்குத் திட்டினேன். இன்று அந்த சுவரே இல்லை ..தான் நடந்து கொண்ட விதத்தை நினைத்து அவளுக்கே அவமானமாய் இருந்தது. விழும் கண்ணீரைத் துடைக்க கூடத் தோன்றாமல் நடந்தவளுக்கு ,..

    “சாப்பிடு கண்ணு ..என் செல்லம், ராசா…கிருஷ்ணம்மாவின் குரல் …கிருஷ்ணம்மா இருக்கிறாள்.

    திரும்பி குரல் வந்த திசையை நோக்கிப் பாய்ந்தாள். அங்கே கிருஷ்ணம்மா தன் இடுப்பில் ஒரு குழந்தையும், இடக்கையில் ஒரு குழந்தையும் பிடித்தபடி அழுது கொண்டிருந்த மற்றொரு சிறு குழந்தைக்குத் தட்டில் இருந்த உணவை ஊட்டிக் கொண்டு இருந்தாள். அந்தக் குழந்தை வாங்க மறுக்க அதனைச் செல்லம் ,ராசா எனத் தாஜா பண்ணிக் கொண்டு இருந்தாள்.

    திகைக்க இக்காட்சியைப் பார்த்தபடி நின்றாள் கீதா.

    தற்செயலாய் இவள் பக்கம் திரும்பிய கிருஷ்ணம்மா துள்ளி ஓடி வந்தாள் ….”ஏ ..கண்ணு ..எப்டிமா இருக்க ….?இன்னிக்கி நானே வரணும்னு நினைச்சேன் தாயி ..” சொல்லும் போதே கண்ணீர் முட்டி இருந்தது .

    “உங்களுக்கு ஒண்ணும் இல்லையே பாட்டி ….?”

    “நான் நல்லா இருக்கேன் தாயி …இன்னும் நான் இருக்கணும்னு எழுதி இருக்கான் போல..”

    “நீங்கப் பிழைத்ததே சந்தோஷம் பாட்டி ….கூறிய கீதாவின் கண்கள் கிருஷ்ணமாவிடம் இருந்த குழந்தைகளை பார்த்தது

    புரிந்தவளாய் குழந்தைகளை உட்கார வைத்து விட்டு “கொஞ்சம் அப்டி வா கண்ணு ..எனச் சற்று தள்ளி வந்து குழந்தைகள் அறியாவண்ணம் …”அந்த சின்னதுக இரண்டும் எங்க தெருவுல தான் இருந்தாக. அதுங்க தாயும் தகப்பனும் போய்ட்டாக …”கைகளை வானத்தை நோக்கி காமித்த பாட்டியால் விழும் கண்ணீரை துடைக்க முடியவில்லை ..” தெய்வ புண்ணியத்துல பிள்ளைகளுக்கு ஒண்ணும் ஆகலை ….”

    அவளிடம் சாப்பிட மல்லுக்கட்டிக் கொண்டிருந்த சிறுவனைக் காமித்து ,”இவன் யாருன்னு தெரியல கண்ணு ,அவனுக்கு சரியாப் பேசவும் வரல, இங்கன அழுதுகிட்டு நேத்துல இருந்து சுத்தி சுத்தி தேடிகிட்டு அலையறான் ….பச்சபுள்ள வயித்து பசி கூட தெரியாம தேடுது …அதான் சாப்பாட்டுப் பொட்டலம் வாங்கியாந்து ஊட்டினேன் “

    காதுகள் அடைத்து கண்ணீரை விழுங்கிய கீதா, “எப்படி பாட்டி சிறு குழந்தைகளை ……கீதா முடிக்கவில்லை .

    “எது யார் கைல இருக்கு கண்ணு …போன வாரம் வரைக்கும் வாழ்நாள் முழுதும் தன் தாய் தகப்பனோட வாழுற நினைப்புல தான் பிறந்திருக்கும், இப்போ அவுக இல்ல நான் பார்த்துக்குறேன் ….இதோ இவனுக்கு நேத்துவரை யாரோ, இன்னைக்கு தாயாய் ஊட்டுறேன் ..நாளைக்கு என்னமோ நடந்துட்டு போகுது ..எத்தனை யோசனையாய் இருந்தாலும் நிமிஷத்துல ஆண்டவன் தான் இருக்கேன்னு காமிக்கிறானே ..இருக்கிறவரை இந்தப் பிள்ளைகளுக்கு தாயா இருக்கேன் “……இன்னும் கிருஷ்ணம்மா சொல்லி கொண்டே போக, கீதாவிற்கு எதுவும் காதில் விழவில்லை .எத்தனை உண்மை வார்த்தைகள் பெரியவளிடமிருந்து ….

    பெற்று வந்த பாசமா இது …தாயின் முகங்கள் தான் வேறு, தாய்மை எனும் குணம் ஒன்று தான் என்பது “ணங் “என்று கீதாவின் மண்டையில் பட்டது.கிருஷ்ணம்மாவின் கண்ணீர் கண்களைத் துடைத்து விட்டு வீடு வந்தாள் தெளிவாக ….

    அவள் கைபேசியிலிருந்து கருணை இல்லத்திற்குப் போன் பறந்தது ..தான் வளர்க்கப் போகும் குழந்தையின் வரவுக்காக…தாயாய் காத்திருந்தாள். .

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    ஹரிச் சுவடி
    —————-

    9d10d919-85a3-4648-b41b-3a08d4a3dbf4

    அந்தரி அண்ணா கோவிந்தா
    ஆவுடை அப்பா கோவிந்தா
    இந்திர லோகம் கோவிந்தா
    ஈ கொசு எனக்கு கோவிந்தா
    உந்தன் மலையில் கோவிந்தா
    ஊர்வேன் புழுவாய் கோவிந்தா
    எந்த நாளுமே கோவிந்தா
    ஏகாந்த சேவை கோவிந்தா
    ஐந்து பொறிகட்கு கோவிந்தா
    ஐயமிட்டிடு கோவிந்தா
    ஒன்றி உரைப்போம் கோவிந்தா
    ஓம் நம நாரண கோவிந்தா….

    Share
  • இன்றும் ஒரு சுகப் பிரசவம் ..!! .. 

    க. பாலசுப்பிரமணியன்

     

    காலை நான்கு மணி முப்பது நிமிடம்

    ஒரு சுகப் பிரசவம்!

    கடிகாரக் கூரையிலிருந்து கோழிகள்

    தாதியராய் கண்விழித்துக் கை கொடுக்க…….

    இன்றும் எனக்கு ஒரு சுகப் பிரசவம் !

     

    எண்ணக் குழந்தைகள்.. ..

    கால்களால் உதைத்து தலையால் முட்டி ..

    என் கற்பனைக் .கருவில்..

    இன்றும் எனக்கு ஒரு சுகப் பிரசவம்!

     

    “அம்மா” …….

    குழந்தைகளின் குரல் இல்லை.. இது..

    காலையில் பசுக்களின் குரல்கள் இல்லை .

    பால்  பொடிகளை நீரில் பதப்படுத்தி

    பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி

    நித்தம் பகிர்ந்திவிடும் தேவன்.குரல்….

    பெயர்… பால்காரன்!

     

    எண்ணக் குழந்தைகளுக்குத் தலைவாரி

    சீருடையில் சிங்காரித்து

    வாழ்க்கை பள்ளிக்கு நித்தம் அனுப்பும்

    நான்… ஒரு நம்பிக்கையுள்ள அன்புத் தாய் .!..

     

    பாவச்சுமைகளாய் நேற்றைய நினைவுகளைச் சுமந்து

    நித்தம் பள்ளியிலே கனவுகளை விற்கச் செல்லும்

    என் எண்ணக் குழந்தைகள் ..

     

    கற்றல் வியாபாரத்தில்

    சில விலைபோகாத கனவுகளை

    உணர்வுகளில் நனைத்து ..

    வயற்றுச் சோற்றிற்காக

    அடிமட்ட விலையில் ..

    மதிப்பெண்களாய் மாற்றி ..

     

    மாலையிலே நிலைதடுமாறி ..

    கனவுகள் விலைபோகாமல்…

    மறப்பதா இல்லை மடிவதாவென……

    எண்ணக் குழந்தைகள் துயரத்தில்…

     

    மங்கிய நிலவோ..

    மனநல மருத்துவராய்..

    “இன்று போய் நாளை வா..” வென

    நம்பிக்கை கொடுக்க..

     

    மீண்டும்..

    இன்றைய பாவச் சுமைகளுடன்..

    காந்தக் கண்களுக்குள்ளே ..

    எண்ணக் குழந்தைகள் கட்டிலுட்டு ..

    புதியதாய் ஜெனிக்க..

     

    பத்து மணி நேரக் கர்பத்தில்

    எட்டு மணியில் ..

    குறைப் பிரசவமாய் ..

     

    மீண்டும் பிறக்கும் வரை…

    நம்பிக்கையுடன்..

    உறங்கு … மகனே.. உறங்கு…!!

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    பிப்ரவரி 1, 2016

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  மாணவர் திரு. ஆண்டனி எடிசன் அவர்கள்

     

    ஆண்டனி எடிசன்

    வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப் படுபவர், “குறைந்த விலையில்” ரோபோட்டிக் செயற்கை கை (prosthetic robotic hand) ஒன்றை வடிவமைத்துச் சாதனை புரிந்துள்ள பொறியியல் கல்லூரி மாணவர் திரு. ஆண்டனி எடிசன் (Antony Edison, https://www.facebook.com/akon.antoni) அவர்கள். தஞ்சையைச் சேர்ந்த மாணவர் ஆண்டனி எடிசன் அவர்கள் கோவையின் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் (Hindusthan College of Engineering and Technology) மெக்கட்ரானிக்ஸ் பொறியியல் கல்வி பெறும் மாணவர்.

    இளம் வயதிலேயே ரோபோட்டிக்ஸ் பொறியியல் துறையில் ஆர்வம் கொண்டதால் மெக்கட்ரானிக்ஸ் படிப்பைத் தேர்ந்தெடுத்தவர் ஆண்டனி எடிசன். கோவாவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி ஒன்றில் ஜெர்மனி அறிவியலாளர் ஒருவர் காட்சிப்படுத்தியிருந்த செயற்கை கை ஒன்றில் இவரது ஆர்வம் திரும்பியது. அதனைப் பற்றி விசாரித்து அறிந்த பொழுது, அது இந்திய விலைவாசிக்குக் கட்டுப்படியாகாத ரூபாய் 50,000 வரை அதிக விலையில் அமைந்திருக்கக் கண்டார். எனவே நம் நாட்டினருக்குக் குறைந்த விலையில் எளிதில் கிடைக்கக் கூடிய ரோபோட்டிக் செயற்கை கையை வடிவமைக்கத் திட்டமிட்டார்.

    மேலைநாடுகளில் ரோபோட்டிக் செயற்கை கைகள் உருவாக்கப்பட்டு வந்தாலும் அவற்றினை இந்தியாவில் உள்ளவர் பயன்படுத்த விரும்பினால் லட்சக் கணக்கில் செலவிட நேரும். அத்துடன் அதற்கான உதிரிப் பாகங்களைத் தருவித்து இந்தியாவில் தயாரிப்பதும் ரோபோட்டிக் செயற்கை கையின் அடக்கவிலையைக் குறைக்கும்வகையில் அமைந்திருக்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்ட ஆண்டனி எடிசன், இந்தியாவிலேயே கிடைக்கக்கூடிய ஃபோம் ஷீட், மோட்டார், சென்சார்கள் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

    ஒரு பொருளைப் பிடித்து, அதனை எடுத்து மற்றொரு இடத்தில் வைப்பதுதான் பெரும்பான்மையாக உதவக்கூடிய அடிப்படை செயல் என்பதால் அதன் அடிப்படையில் செயற்கை கை இயக்கத்தை வடிவமைக்க விரும்பினார் ஆண்டனி எடிசன். செயல்முறையை நிகழ்த்தும் கட்டளைகளை குரல்வழியாக செயல்படுத்தும் முறை உள்ளது. செயற்கை கை இயக்கத்திற்காகப் பெரும்பான்மையாக இம்முறையே கையாளப்பட்டாலும், கண்ணசைவு வழியே கட்டளைகளை அளிக்கும் முறையைத் தேர்வு செய்து அதற்கான கண்ணாடி ஒன்றையும் வடிவமைத்தார். மொத்த எடை 700 கிராம்களே கொண்ட செயற்கை கை, இடது கண்ணின் அசைவுகள் மூலம் கட்டுப்படுத்தப்படும்.

    ஆண்டனி எடிசன்-x

    கண்ணாடியில் உள்ள சென்சார் கண்ணசைவுகளை செயற்கைக் கைக்குத் தெரிவிக்கும். ஒரு பொருளைப் பற்றுவதற்கு மூன்று நொடிகள் கண்ணை மூடினால் கை அதனைப் பற்றிக் கொள்ளும், அதனை வேறு இடத்தில் வைத்து மீண்டும் மூன்று நொடிகள் கண்ணை மூடினால் கை பொருளைப் பற்றுவதை நிறுத்தி விலகிவிடும். எலக்ட்ரானிக் சர்க்கியூட்கள், பாகங்கள் ஆகியவற்றைக் கைகளாலேயே இணைத்து அமைக்கப்பட்ட இந்த ரோபோட்டிக் செயற்கை கையைத் தயாரிக்க பன்னிரண்டாயிரம் ரூபாய் செலவானது என்றும், இதனைப் பெரிய அளவில் தயாரிக்கும் பொழுது மேலும் திறனை மேம்படுத்தியும், அழகாகவும், எளிமையாகவும் ஏழாயிரம் ரூபாய் அடக்க விலையில் அமையுமாறும் உருவாக்கலாம் என்பது இவரது கணிப்பு.

    இவரது விலைகுறைந்த ரோபோட்டிக் செயற்கை கையை மும்பையில் நடந்த கல்லூரி கண்காட்சியில் காட்சிப்படுத்திய பொழுது நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், சில தொழில் நுட்ப நிறுவனங்களும் ஆர்வம் காட்டியுள்ளன. கண்காட்சியில் ஆண்டனி எடிசனுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. இவர் மேலும் சில அறிவியல் போட்டிகளில் பங்கு பெற்றுத் தனது திறமையைக் காண்பித்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற NIYANTRA 2015 இயந்திரங்கள் வடிவமைப்பு போட்டியில் (NIY-37) இறுதிச் சுற்றிற்கு தகுதி பெற்றவர் இவர். சூரியமின்சக்தியில் இயங்கும் ஊர்தியை (electric solar vehicle) இவரும் இவரது குழுவினரும் வெற்றிகரமாக வடிவமைத்துள்ளனர்.

    தற்போது ரோபோட்டிக் செயற்கை கையின் காப்புரிமையினைப் பெற விண்ணப்பிப்பதற்குத் தேவையான பணத்தினை சேர்த்துக் கொண்டுள்ளார் ஆண்டனி எடிசன். ரோபோட்டிக் செயற்கை கையை மேம்படுத்தி பலரும் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்பது இவரது நோக்கம். அறிவியலிலும் மருத்துவத்துறையிலும் முன்னேற்றங்கள் பல நிகழ்ந்தாலும், புதிய பல கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டாலும் அவற்றை சாதாரண மக்கள் அடைந்து பலன் பெரும் வகையில் அவை அமையாது போனால் அதனால் கிடைக்கும் பயன் குறைவே. செயற்கை உறுப்புகளை நம்பியிருக்கும் விபத்தில் கை, கால்களை இழந்தவர்களுக்கு, அழகிற்காகப் பொருத்தப்படும் செயலற்ற உடல் உறுப்புகளைவிட, இயங்கும் கை கால்கள் கிடைத்தால் நடைமுறை வாழ்க்கையில் பிறர் தயவை அவர்கள் நாடி இருப்பதைக் குறைக்கலாம் என்பது மறுக்க முடியாத உண்மை.

    இந்த வகையில் குறைந்தவிலையில் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்ப ஆண்டனி எடிசனால் வடிவமைக்கப்பட்ட ரோபோட்டிக் செயற்கை கை புதிய பாதையை வகுத்து மாற்றத்தைக் கொண்டு வரும் என்பது நம்பிக்கைத்யைத் தருகிறது. மெக்கட்ரானிக்ஸில் மேற்படிப்பிற்காக வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களில் கல்வியைத் தொடர விரும்பும் ஆண்டனி எடிசனின் கனவுகள் மெய்ப்பட வாழ்த்துகள். அவரது ரோபோட்டிக் செயற்கை கை சாதனைக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    _______________________________________________________

    வல்லமையாளரைத் தொடர்பு கொள்ள:
    Mr. Antony Edison
    B.E. (Mechatronics), Undergraduate 2013 – 2016
    Department of Mechatronics Engineering
    Hindusthan college of Engineering and Technology
    Coimbatore – 32, Tamil Nadu, India
    Phone: +917502576366
    e-mailto:00edy00@gmail.com

    சமூக வலைத்தளங்களில்:
    https://www.facebook.com/akon.antoni
    https://in.linkedin.com/in/antony-edison-92ba00a0
    https://plus.google.com/103307734384379919513/
    http://hindusthan.academia.edu/AntonyEdison
    https://www.youtube.com/channel/UCo8U_KYSTvj2iTp2VPaH1Uw

    தகவல் மற்றும் படங்கள் பெற்ற தளங்கள்:
    குறைந்த விலையில் ரோபோட்டிக் செயற்கை கை: தமிழனின் அசத்தல் சாதனை!
    http://www.vikatan.com/news/miscellaneous/58304-robotic-artificial-hand-tamil-student-invention.art?

    Electronics for You, June 2015
    https://books.google.com/books?isbn=1329172744

    NIYANTRA 2015 Finalists!
    http://india.ni.com/niyantra/shortlist
    http://www.ni.com/en-us.html
    மற்றும் ஆண்டனி எடிசனின்
    வல்லமையாளரின் சமூக வலைத்தளங்கள்

    _______________________________________________________

    Share
  • இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-11

    மீனாட்சி பாலகணேஷ்

    பெருங்களிவரச் சிறுகுறும்பு செய்முருகன்!

    b18ccb75-7045-4cbd-bc2e-23828d505057

     

    முன்புகண்ட இலக்கியச்சித்திரங்களுள் ஒன்றில் குழந்தை விநாயகன் தந்தை சிவபிரானின் மடிமீதேறிக் குறும்புகள் செய்வதனைக்கண்டு களித்தோம். அவன் தம்பி முருகன், தான் அண்ணனுக்குச் சளைத்தவனில்லை எனும்வண்ணம் குறும்புகள் செய்வதனை குமரகுருபரர் இயற்றியருளியுள்ள முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழில் கண்டு களிக்கலாம். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழே இவர் இயற்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூலாகும். பின்பு வைத்தீசுவரன் கோவிலில் உறையும் முத்துக்குமாரசுவாமி எனும் முருகப்பெருமான் மீது இப்பிள்ளைத்தமிழை இயற்றினார் என அறிகிறோம். பெரும்புலவர்கள் அனைவரின் சிந்தனைகளும் கருத்துக்களும் ஒன்றாகவே இருக்கும் என்பதற்கு இந்தப்பாடல்கள் சிறந்த எடுத்துக்காட்டு. குமரகுருபரரின் காலம் 17-ம் நூற்றாண்டாகும். இவருடைய பிள்ளைத்தமிழ் நூல்களே தமிழில் முதலில் எழுதப்பட்ட நூல்கள். பிற்காலத்துப் புலவர்களும் (18-ம் நூற்றாண்டு) இத்தகைய சிந்தனைகளைத் தம் நூல்களில் புகுத்தியுள்ளனர். இனிச் சித்திரத்தினைக் காணலாமே!

    *******

    குழந்தை முருகன் தன் தாய்தந்தையருடன் விளையாடியவண்ணம் இருக்கிறான். அதனைப்பார்ப்போருக்கு அதுவொரு கண்கொள்ளாக் காட்சியாக உள்ளதாம். குழந்தைகள் என்ன குறும்பு செய்தாலும் அதனை அனைவருமே ரசித்து மகிழ்வோமல்லவா?

    அன்னை பார்வதியின் மடிமீதர்ந்துள்ளவனின் இனிய இளமையான வாயிலிருந்து தேன்போலும் நீர் (எச்சில்) ஒழுகுகின்றது; அது அவன் அணிந்துள்ள வெண்பட்டாடையை நனைக்கின்றது. ஓரிடத்தில் அமரக்கூடிய குழந்தையா இவன்? தாயின் மடியிலிருந்து தாவித் தன் தந்தை சிவபிரானின் மார்பில் ஏறிவிடுகின்றான்; அங்கும் தன் பிஞ்சுக்கால்களால் துவைத்துக் களித்து ஆடுகிறான்; காண்பவர்க்கு இது முருகன் குரவைக்கூத்தாடுவதாகத் தெரிகின்றதாம். அழகான, இன்பமான கற்பனை!

    ஐயன்கையில் உள்ள உடுக்கை (துடி) மத்தளம்போல் மிகுந்த ஒலியை எழுப்புவது. அதனைத் தனது சிறுகைகளில் எடுத்துக்கொண்டுவிட்ட முருகப்பெருமான் அதனைச் சிறிய பறைபோன்று ஒலி எழுமாறு முழங்கச் செய்து மகிழ்கிறான். அவர் ஒருகையில் ஏந்தியுள்ள அனலை அவருடைய (மோலி)சடையிலிருந்து ஒழுகும் கங்கைப்புனலைச் சொரிந்தே அணைத்துவிடுகின்றான். தலையில் அணிந்துள்ள இளம்பிறையைக் கையாலெடுத்து அவருடைய கழுத்தில் நெளிகின்ற பாம்பின் வாயிலிட்டுவிடுகிறான் இளங்குமரன்! அவர்கையில் ஏந்தியுள்ள சிறுமானுக்கு, சடையினின்று அறுகம்புல்லை எடுத்து உண்ணக்கொடுக்கின்றான்.

    அண்ணன் கணேசனுக்கு, தான்சளைத்தவனில்லை என நிரூபிக்கிறானோ என வியக்கவைக்கின்றதல்லவா?

    இனி என்ன செய்யலாம் என எண்ணியவன், தந்தையான சிவபிரானின் அழகுமிகுந்த சிவந்த திருமேனியினை மிதித்துத் துவைத்து விளையாடுகின்றான். இந்தக்கூத்தினால் அவர் மேனியில் பூசியுள்ள வெண்ணீற்றுத்துகள்கள் மேலே பரந்தெழும்படி புழுதியாடல் செய்கின்றான் அவன். அவருடைய சடை காடெனப்பரந்து விரிந்துகிடக்கின்றது; அதிலிருந்து கங்கைநீர் பெருகிவழிகின்றது. இதில் குழந்தை முருகன் தனது விழிகளெல்லாம் சிவக்குமாறு (சேப்ப) முழுகித்துளைந்து நீராடி விளையாடுகிறான்.

    ‘இவ்வாறு, தான் வளர்ந்துவரும் காலத்தில் (இளமை முதிர்ந்து வரும் பருவத்தில்- குழவுமுதிர்) காண்போர் பெரும்களிப்புக்கொள்ளுமாறு சிறுசிறு குறும்புகளைச் செய்தவனே! வருக! குரவமலர்களின் நறுமணம் கமழும் கந்தபுரியில் குடிகொண்டிருக்கும் குமரகுருபரனே வந்தருள்க!’ எனத்தாயின் நிலையில் நின்று குமரகுருபரனார் வேண்டுகின்றார்.

    இதில் வெளிப்படும் கருத்துக்கள் ஆச்சரியம் விளைவிப்பன. குழந்தைகள் வளர்ந்துவரும் அறியாப்பருவத்தில் எவ்விதமான குறும்புகளைச் செய்யினும், தாய்தந்தையர் அதனை மகிழ்ச்சியுடன் இரசிப்பதனைக் கண்கூடாகக் காண்கிறோம். அன்னையும் அத்தனும் தம்குழந்தை முருகனின் குறும்புச்சேட்டைகளை அமைதியாக அனுபவித்து மகிழ்வதனை நாம் குமரகுருபரர் வாக்கில் படித்துமகிழ்வது மிக்க இன்பமளிப்பதாகும்.

    மழவுமுதிர் கனிவாய்ப் பசுந்தேறல் வெண்டுகில்
    மடித்தல நனைப்பவம்மை
    மணிவயிறு குளிரத் தவழ்ந்தேறி எம்பிரான்
    மார்பினில் குரவையாடி
    முழவுமுதிர் துடியினில் சிறுபறை முழக்கிஅனல்
    மோலிநீர் பெய்தவித்து
    முளைமதியை நெளியரவின் வாய்மடுத் திளமானின்
    முதுபசிக்கு அறுகருத்தி
    விழவுமுதிர் செம்மேனி வெண்ணீறு தூளெழ
    மிகப்புழுதி யாட்டயர்ந்து
    விரிசடைக் காட்டினின் றிருவிழிகள் சேப்பமுழு
    வெள்ளநீர்த் துளையமாடிக்
    குழவுமுதிர் செவ்விப் பெருங்களி வரச்சிறு
    குறும்புசெய் தவன்வருகவே
    குரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட
    குமரகுரு பரன்வருகவே.
    (முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்)

    குமரனின் குறும்பு விளையாட்டுகள் இத்துடன் நிற்பதாயில்லை. இப்போது அவனுடைய விளையாட்டு பார்வதி அன்னையிடமும் தொடர்கின்றது.

    தமது படர்ந்த சடைக்காட்டினிடையில் சிவபிரான் ஒரு கலைமதியை- பிறைச்சந்திரனை வைத்துள்ளார். உமையம்மையின் அழகான கொண்டையில் முத்துக்களால் (நித்திலம்) செய்யப்பட்ட பிறைபோன்ற ஒரு அணிகலன் அழகுசெய்கின்றது. “அட! இரு பிறைச்சந்திரன்கள். இரண்டையும் இணைத்தால் முழுநிலவாகுமே,” என எண்ணுகிறான் குமரன். இரு இளம்பிறைகளையும் ஒன்றாக இணைக்கிறான். அது அழகான முழுமதியாகக் காட்சியளிக்கின்றதனைக்கண்டு மகிழ்ச்சியில் குழந்தை தனது கைகளைக் கொட்டிக் ‘கலகல’வெனச் சிரித்து மகிழ்கின்றான்.

    முருகன் செய்துவைத்துள்ள இந்த முழுமதி போன்ற அணிகலனை உண்மையான முழுமதியே என எண்ணி, சிவபிரான் சடையில் அணிந்துள்ள பாம்பு அதனை உண்பதற்காக ஓடோடி வருகின்றது. அதன் படத்தைக்கண்ட முருகன் அதனைக் காந்தள்மலர் என எண்ணிக்கொண்டுவிட்டன்; அதனை முடியிலணிந்துகொண்டு அழகு செய்துகொள்ளலாமே எனப்பறிப்பதற்காக அதனருகில் சென்றான். அப்போது அப்பாம்பு பயங்கொண்டு வெகுவேகமாக ஓடலாயிற்று.

    சிவபிரான் ஊழிமுதல்வனாகையினால் தனது திருமுடியில் ஒரு மண்டையோட்டை அணிந்திருப்பார். அந்த மண்டையோட்டின் ஒருபல் வெளியே துருத்திக்கொண்டு அது நகைப்பதைப்போலக் காணப்படும். இத்தகைய குறும்புகளினிடையே குமரப்பெருமான் தனது தலையை நிமிர்த்தி அதனை நோக்கியபோதில் அந்த மண்டையோடு தனது இச்செயல்களைக்கண்டு நகைப்பதாகக் கருதிச் சினம்கொண்டானாம். தனது தந்தையான சிவபிரான் முன்பொருநாள் சினங்கொண்டு கிள்ளிய மலரயனின் தலைதான் அது எனக்கருதினான் முருகன். உதட்டினைச் சுழித்தவண்ணம் சினத்துடன் அத்தலையினை நோக்கி, “நீ முன்பு என்கையால் உன்தலையில் குட்டுப்பட்டதை மறந்தனையோ? இப்போது நகைக்கலாயிற்றோ?” எனக்கேட்டான்.

    சின்னஞ்சிறுகுமரனின் அதட்டுதலும் சினமும் நமக்கும்தான் நகைப்பை வருவிக்கின்றது. ஆயினும் பிள்ளைப்பிராயத்தில் பெரியபெயர் பெற்றவனல்லவா? நாம் நகைக்கலாகுமோ? ஆகவே ஆசையினாலும் அன்பினாலும் புன்னகைக்கிறோம்.
    “இதழினை அதுக்கி (உதட்டினைச் சுழித்து) இவ்வாறு கேட்கும் குமரநாயகனே வருவாயாக! குரவமலர்கள் நிறைந்த கந்தபுரியில் குடிகொண்ட குமரகுருபரனே வருக!” எனப்புலவர் குமரகுருபரர் பாடிவேண்டுகிறார்.

    கட்டுண்ட படர்சடைக் காட்டெம்பி ரான்வைத்து
    கலைமதியோ டையநீயக்
    கவுரிதிரு முடியின்நித் திலமிட் டிழைத்திட்ட
    கதிரிளம் பிறையிணைப்பத்
    தெட்டுண்ட போல்முழுத் திங்களென்று ஏக்கறும்
    சுழுமணிச் சூட்டுமோட்டுச்
    செம்பாம்பு பைவிரித் தாடுதலும் ஓடிநின்
    சிறுநறுங் குஞ்சிக்கிடும்
    மட்டுண்ட பைங்குலைக் காந்தளென் றணையஅம்
    மாசுணம் வெருண்டோடலும்
    மணிமுடியின் நகுதலையை மற்றெமை நகைத்தியால்
    மலரயன் தலைநீமுனம்
    குட்டுண்ட தறியாய்கொல் எனவித ழதுக்கும்
    குமாரநாய கன்வருகவே
    குரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட
    குமரகுரு பரன்வருகவே.
    (முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்)

    பிள்ளைத்தமிழ் சிற்றிலக்கியங்கள் இத்தகைய அருமையான கற்பனைநயம் செறிந்த பாடல்களை மிகுதியாகக் கொண்டவையாகும். தேடிப்பிடித்துப் பயிலுவோமானால், இவற்றின் அருமைகளையும் பெருமைகளையும் உணர்ந்து களிப்பெய்தலாம். இன்னும்வரும் அத்தியாயங்களில் தொடர்ந்து இவற்றைக்காண்போம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    Share
  • கற்றல் -ஒரு ஆற்றல் (14 ) 

    க. பாலசுப்பிரமணியன்

    பள்ளியின் முதல் படிகள்

    education112

    மழலைகள் தங்கள் பள்ளி வாழ்க்கையை எப்போது ஆரம்பிக்கவேண்டும்? எத்தனை ஆண்டுகள் தங்கள் வீட்டில் அம்மா, அப்பாவுடனோ அல்லது தாத்தா பாட்டிகளுடனோ இருந்து வாழ்க்கை முறைகளை கற்றுக்கொள்ளவேண்டும்?

    உலகமே தாயையே முதல் ஆசானாகக் கருதுகிறது. அது முற்றிலும் உண்மை. வீடுதான் குழந்தையின் முதல் பள்ளிக்கூடம். ஒரு நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னே குழந்தைகள் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் வரை வீட்டிலேயே இருந்து தங்கள் கற்றலை மறைமுகமாகவும் பழக்கங்கள் மூலமாகவும்  (  Indirect & Informal  Learning ) கற்றுக் கொண்டு வந்தனர். பள்ளிகளுக்குச் செல்லும் முன் வாழ்க்கை முறைகளைப் பற்றிய சிறிதளவு அறிவு அவர்களுக்கு இருந்தது. அவர்களின் அறிவு மட்டுமின்றி அவர்களுடைய உணர்வு நிலையம் (Emotional Status) ஓரளவு பக்குவப் பட்டிருந்தது.

    காலங்களின் தேவைகளுக்கும் சமூகச் சிந்தனைகளின் மாற்றங்களாலும் இன்று குழந்தைகள் மழலையர் பள்ளிகளில்   இரண்டாவது ஆண்டு முடிவடைந்த உடனே சேர்க்கப்பட்டு விடுகின்றனர். . இந்தத் தருணத்தில் குழந்தைகள் உடலாலும் உள்ளத்தாலும் உணர்வுகளாலும் முழுமையான நேரடிக் கற்றலுக்குத் தயாரான நிலையில் இல்லை. கற்றல் என்ற செயல் இயற்கையாக இல்லாமல் குழந்தையின் மூளையில் திணிக்கப் படுகின்றது .

    எவ்வாறு திருமணமான ஒரு பெண்ணுக்கு  தன்னுடைய கணவன் வீட்டிற்குச் செல்லும் பொழுது ஒரு தவிப்பான மனநிலை இருக்கின்றதோ அதே போன்று தான் புதிதாகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தையின்  மனநிலையும் !

    புதிதாகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும்? எந்த மாதிரியான உணர்வுகள் இருக்கும்? பொதுவாகக் கீழ்கண்ட உணர்வுகளை சொல்லலாம்.

    1.அச்சம் 2. தயக்கம் 3. பாதுகாப்பின்மை    4. ஆச்சரியம்    5. புதுமை

    6, சந்தேகம் ‘ 7. நம்பிக்கையின்மை 8. திருப்தியின்மை  9. உடல்சோர்வு 10.  ஆர்வம்

    எல்லாக் குழந்தைகளுக்கும் மேற்கண்ட எல்லா உணர்வுகளும் இருப்பதில்லை. ஆனால் எல்லாக் குழந்தைகளுக்கும் இவற்றில் சில  உணர்வுகள் நிச்சயமாக இருக்க வாய்ப்புண்டு. அது குழந்தைகளின் வீட்டுச் சூழ்நிலை, சமூகச் சூழ்நிலை, பொருளாதாரச் சூழ்நிலை மற்றும் பெற்றோர் அல்லது குடும்பத்தினரின் அன்பு மற்றும் ஈடுபாடு ஆகியவற்றால் உருவாக்கப்படுகின்றது.

    குழந்தைகளுக்கு பள்ளி செல்லும் போது மேற்கண்ட உணர்வுகள் ஏற்படக் காரணம் என்ன? அவற்றின் தாக்கம் எப்படிக் குழந்தையை பாதிக்கின்றது?

    முதலாவதாக இடமாற்றம். (Change of Place) அறிந்த, பழகிய இடத்தை விட்டுத்  தெரியாத, புதிய, பழக்கமில்லாத இடத்திற்குச் செல்லும் பொழுது அது அச்சத்தையும் ஒரு பாதுகாப்பில்லாத உணர்வையும் ஏற்படுத்துகின்றது. (Moving from known to the unknown)

    இரண்டாவது காரணம் – ஒரு கட்டுப்பாடு இல்லாத சூழ்நிலையிலிருந்து கட்டுப்பாடு உள்ள சூழ்நிலைக்கு  ( from freedom to order ) குழந்தைகள் செல்கின்றன. இது ஒரு வரவேற்கத்தக்க கருத்து இல்லை. வீட்டில் இருக்கும் பொழுது அந்தக் குழந்தை எந்த விதமான உடை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். எங்கு வேண்டுமானாலும் படுத்துப் புரளலாம். என்ன விதமான ஒலியோ அல்லது சப்தமோ செய்யலாம். அதன் நகர்வுகளுக்கு பூரண சுதந்திரம் உண்டு.. ஆனால் பள்ளிக்குச் சென்றவுடன் இந்த சுதந்திரம் அனைத்தும் பறிபோகின்றது.

    ஆகவே குழந்தைகளுக்கு ஒருவிதமான தயக்கம் மற்றும் திருப்தியின்மையும் ஏற்படுத்துகின்றது. இந்த நிலைமையை சமாளிப்பது எப்படி? இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எப்படி வெளி வரலாம் என்ற எண்ணங்கள் அந்தக் குழந்தையின் மனத்தில் உருவாகின்றன.

    மூன்றாவது காரணம்  ( A sense of suspicion )- பார்க்கின்ற மனிதர்களும் சூழ்நிலையும் புதிதானது. இங்கு நான் பார்க்கும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள்? அன்புடன் இருப்பார்களா ? இவர்களால் எனக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? என் வயதில் இங்கே இருக்கின்ற எல்லோரும் என்னைப் போன்றவர்கள்தானா? அவர்களால் என்னுடைய தனித்துவத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? இவர்களோடு நான் சரிசமமமாக விளையாடலாமா? என்னைப் பற்றி இவர்கள் என்ன நினைப்பார்கள்? – என்ற பல ஐயப்பாடுகள் அந்தக் குழந்தைகளின் மனதில் ஏற்படுகின்றன..

    மேலும் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

    தொடரும். …….

    Share
  • குறளின் கதிர்களாய்…(106)

    செண்பக ஜெகதீசன்

     

     

    தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னா

    ரழுத கண்ணீரு மனைத்து.

         -திருக்குறள் -828(கூடா நட்பு)

     

    புதுக் கவிதையில்…

     

    நட்பு நாடிவரும்

    பகைவர்

    கும்பிடும் கைகளுக்குள்ளும்

    கொடிய ஆயுதம் மறைந்திருக்கும்,

    அவர்கள்

    அழும் கண்ணீரும் அப்படி

    ஆபத்து நிறைந்ததே…!

     

    குறும்பாவில்…

     

    நட்புநாடும் பகைவரிடம் ஆயுதமிருக்கும்

    நமைவணங்கும் கைகளுக்குள்,

    வஞ்சகம் நிறைந்ததேயவர் கண்ணீரும்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    நம்மிடம் வந்திடும் நட்பினிலே

         நட்பிது நாடக் கூடாததே,

    கும்பிடும் கைகளின் உள்ளேதான்

         கொடிதாய்க் கொலைவாள் மறைந்திருக்கும்,

    நம்பிட வேண்டாம் பகைவரிவர்

         நதியாய் வடித்திடும் கண்ணீரையும்,

    அம்பென அழித்திடும் ஆயுதம்தான்

        அறிவாய்க் கூடா நட்பெனவே…!

     

    லிமரைக்கூ…

     

    கும்பிடுவோர் கையில்வாள் மறைந்திருக்கும்,

    கொடியோர் காட்டும் கண்ணீரிலும்

    பகையுடன் வஞ்சமே நிறைந்திருக்கும்…!

     

    கிராமிய பாணியில்…

     

    நம்பிடாத நம்பிடாத

    நட்புலதான் நம்பிடாத

    நடிப்பப்பாத்து நம்பிடாத,

    சேத்திடாத சேத்திடாத

    சேக்காளியாச் சேத்திடாத..

     

    கும்புடுற கைக்குள்ளதான்

    கொலவாள வச்சிருப்பான்,

    கவனிச்சித்தான் பாக்காமக்

    கூட்டாளியா ஆக்கிடாத..

     

    அப்புடித்தான்

    அவஞ்சிந்தும் கண்ணீருமே,

    அதப்பாத்து ஏமாறாத

    அவனநட்பாச் சேத்துடாத..

     

    நம்பிடாத நம்பிடாத

    நட்புலதான் நம்பிடாத

    நடிப்பப்பாத்து நம்பிடாத…!

     

    -செண்பக ஜெகதீசன்…

    Share
  • உன்னையறிந்தால் …. (40)

    நிர்மலா ராகவன்

    முடியாது, மாட்டேன்! 

    உனையறிந்தால்11

    கேள்வி:
    சுயநலம் தகாது என்ற முறையில் என்னை வளர்த்தார்கள். பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு, மிக மரியாதையாகத்தான் நடந்து வந்திருக்கிறேன். இப்போது, நாற்பத்தைந்து வயதில் எதையோ இழந்துவிட்டதைப்போன்ற ஏக்கம் ஏற்படுகிறதே, ஏன்?

    விளக்கம்:
    பிறர் சொல்வதை அப்படியே கடைப்பிடிக்க வேண்டுமென்றால், நமக்கு எதற்கு தனித்தனியாக மூளை? நம் நலனைப் பேணினால்தான் பிறர் நலனில் அக்கறை செலுத்த முடியும். இதை ஏனோ பலரும் மறந்துவிடுகிறார்கள்.

    தன் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்த தாத்தா ஒருவர், போகிற போக்கில், `அம்மா சொல்றதைக் கேளு!’ என்று தன் பேத்திக்கு அறிவுரை கூறிப்போனார். பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதும், அவர்கள் கூறுவதை இம்மிபிசகாது கடைப்பிடிப்பதும் ஒன்றல்ல. அவர்களது கூற்றை ஏற்க முடியாவிட்டால், மரியாதையுடன் மறுக்கலாம். அந்தச் சுதந்தரம் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும். தலைமுறைக்குத் தலைமுறை வாழ்க்கைமுறை மாறிக்கொண்டே இருக்கிறதே!

    சிறுவர்களுக்குப் பேச்சு சுதந்திரம் கொடுத்து, அவர்களது எண்ணங்கள் சரிதானா என்று அவர்களுடன் அலசுவதே நல்ல முறை. அப்படி இல்லாவிட்டால், ஏனென்று விளக்கினால், ஏற்பார்கள். சில இல்லங்களில், யோசிக்கத் தெரிந்த சிறுமிகள் வாயைத் திறந்து ஏதாவது பேசினாலே, `வாயாடாதே! ராங்கி!’ என்று பெற்றோர் அடிப்பதுண்டு.

    இவர்களைப் போன்றவர்கள், தம்மையுமறியாது, குழந்தைகளின் தனித்தன்மையை ஒடுக்கிவிடுகிறார்கள்.

    இரண்டு வயதான குழந்தைகளை `TERRIBLE TWOS” என்று வர்ணிக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் எளிதில் பிறருக்கு அடங்க மாட்டார்கள். எது சொன்னாலும், `மாத்தேன், போ!’ என்ற பதில்தான் வரும். இதுதான் மனிதனின் பிறவிக்குணம். ஆனால், சுயமாக எது செய்தாலும் கூடாது என்ற நிலை. நமக்கு இயற்கை அளித்திருக்கும் வரப்பிரசாதமான கற்பனைத்திறன், சிந்திக்கும் ஆற்றல் பலருக்கும் சிறு வயதிலேயே ஒடுக்கப்பட்டு விடுகிறது பெரியவர்கள் சொற்படி மட்டுமே நடப்பதால்தான்.

    குழந்தைகள் சுவரில் கிறுக்குவது எல்லார் வீட்டிலும் நடக்கும் ஒன்று. வரையப் பிடித்த குழந்தைகள் தம்மைத் தாமே திருப்திப்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்றெல்லாம் பகுத்தறியத் தெரியாத வயது அது. அச்செயல் வீட்டின் அழகைக் குலைப்பது என்று நாம் எடுத்துக்கொண்டால், அது யார் தவறு?

    `சுவற்றில் கிறுக்காதே!’ என்று ஒரு சிறுமி ஓயாது கண்டிக்கப்பட்டால், தன் காலில் வரைந்துகொள்ள ஆரம்பிப்பாள். அப்படி ஒரு அடக்க முடியாத எழுச்சி கிளம்பும் அந்த வயதில். அவளுடைய ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, காகிதத்தைக் கொடுக்க வேண்டும். எதையாவது உருண்டையாகப் போட்டுவிட்டு, `கோழி’ அல்லது `புலி’ என்று பெருமையுடன் காட்டும்போது, `புத்திசாலி என்று சொல்லிவைக்க வேண்டியதுதான். நாம் சொல்வதை நம்பி, தன்னம்பிக்கை வளர, திறமைசாலியாக ஆகிவிடுவாள்.

    இப்படி வளர்க்கப்பட்ட ஒரு சிறுமி எட்டு வயதிலேயே சித்திரத்திற்கு வண்ணம் பூசும் (பெரியவர்களுக்கான) போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றாள். நீதிபதி, `இவளுடைய வண்ணச் சேர்க்கை எனக்கே தோன்றாத ஒன்று!’ என்று புகழ்ந்திருக்கிறார்.

    இரண்டிலிருந்து நான்கு வயதுவரை சில குழந்தைகள் தனிமையை நாடி, தாமே பேசிக்கொண்டு இருப்பார்கள். `என்ன பேசறே?’ என்று கேட்டால், `கதை சொல்கிறேன்!’ என்ற விளக்கமும் கிடைக்கும்! யாரிடம் என்றெல்லாம் கேட்கக்கூடாது. அவர்கள் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கோர்வையாகப் பிறரிடம் வெளிப்படுத்தத் தெரியாத வயதல்லவா! அப்போது காற்றோ, சுவரோதான் உற்ற நண்பன். அவர்களுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு அது. `இதுக்குப் பைத்தியமா!’ என்று அயராது, குழந்தையைத் தன்போக்கில் விட்டுவிட்டால், கற்பனைத்திறன் மேன்மேலும் பெருகும்.

    தனிமையை நாடுவது என்பது குழந்தைகள் தங்களைப் புரிந்துகொள்ள எடுக்கும் முயற்சி. அவர்களுக்குப் பிறரைப் பிடிக்காது என்றில்லை. பெரியவர்கள் அப்படித் தவறாக எடுத்துக்கொண்டு, `ஏன் பிறருடன் ஒத்துப்போவதில்லை?’ என்று பலவாறாக அவர்களை மாற்ற முயற்சித்தால், குழந்தைகளுக்குக் குழப்பம்தான் எழும்.

    `உனக்குப் பிடித்ததைச் சொல்வதோ, செய்வதோ சுயநலம். அது கெடுதல்!’ என்று வளர்ப்பதும் இயற்கைக்கு விரோதமானதுதானே!

    நமக்குப் பிடித்தது, வேண்டியது என்னவென்று நம்மைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்?

    எந்தக் குழந்தையும், உலகம் தன்னைச் சுற்றித்தான் இயங்குகிறது என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கும். தனக்குப் பிடித்த தின்பண்டம் ஒன்றைத் தானே தின்று தீர்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் குழந்தையிடம் பிறருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று போதிக்கலாம். அதைவிட்டு, `சுயநலம் பிடித்தது!’ என்று திட்டுவதோ, பழிப்பதோ நாம் எதிர்பார்க்கும் பலனைத் தராது.

    எல்லாக் குழந்தைகளும் ஒரேமாதிரி இருப்பதில்லை. சில குழந்தைகளுக்குப் பலர் பேசும் இடத்தில் தானும் உட்கார்ந்திருக்கப் பிடிக்கும். எவர் சொல்வதையும் கேட்டு நடந்து, நல்ல பெயர் எடுக்க முனையும்.

    இப்படி வளர்க்கப்படுகிறவர்கள் பெரியவர்களானதும், பிறரும் தாம் சொல்வதையெல்லாம் அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படி நினைத்தது நடக்காவிட்டால், ஆத்திரமடைகிறார்கள்.

    வேறு சிலரோ, எந்த வயதிலும் பிறர் சொல்வதைக் கேட்டுத்தான் நடக்க முடியும் என்ற நிலைக்கு உள்ளாகி, அதனால் விரக்தி அடைகிறார்கள். இவர்கள், `என்னால் முடியாது!’ என்று சொல்லிப் பழகாதவர்கள். உலகில் இத்தகையவர்கள் பலர் இருக்கிறார்கள் போலும்! `SAY NO‘ என்று புத்தகங்களே போடுகிறார்கள்!

    சர்வாதிகாரம் மிகப் பெரிய குடும்பங்களில் வேண்டுமானால் அவசியமாக இருந்திருக்கலாம். ஆனால், ஒரு குடும்பத்திலுள்ள ஒவ்வொரு குழந்தையும் தன் தனித்தன்மையை இழக்காது வாழ்வில் சிறக்க, கடமை உணர்ச்சி, பொறுப்பு, சுயநலம் எல்லாம் சரியான விகிதங்களில் இருத்தல் அவசியம்.

    இக்குணங்களில் ஏதாவது ஒன்று மட்டும் மிகையாக இருக்கும்போது ஒரு மனிதனுக்குப் பிறரிடம் அவன் எதிர்பார்க்கும் மரியாதையோ, பாராட்டோ கிடைக்காது. தாழ்மை உணர்ச்சி மிக, `என்னிடம் என்ன குறை?’ என்றெல்லாம் எண்ணம் போவதால், நிம்மதியும் போய்விடுகிறது.

    தீர்வு:
    `முடியாது!’ `மாட்டேன்!’ என்று சொல்லிப் பழகுங்கள். ஆனால் மரியாதை குன்றாது. வேண்டுமானால், சற்றுப் பொறுத்து, ஏன் என்று விளக்கலாம்.

    உங்களை உங்களுக்கே பிடிக்க வேண்டும். அப்போதுதான் உலகத்தினர்மேல் அன்பு செலுத்த முடியும்.

    Share
  • எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை ! (Geo-Reactor)

    Earth Georeactor Detail large

     

     

    (கட்டுரை -2)

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

     

    காலக் குயவன் ஆழியில் படைத்த

    ஞாலத்தின் நடுக் கருவில்

    அசுர வடிவில்

    அணுப்பிளவு உலை ஒன்று

    கணப்பளித்து வருகுது

    பில்லியன் ஆண்டுகளாய் !

    எருப் பொருளை இடையே

    பெருக்கும்

    வேகப் பெருக்கி அணு உலை !

    உட்கரு உள்ளே

    கட்டுப் பாடுடன் இயங்கியும்

    நிறுத்தம் அடைந்தும்

    விட்டு விட்டு வேலை செய்வது !

    வெளிக் கருவிலே

    கனல் குழம்பைச் சமைத்துக்

    கொதிக்க வைக்குது !

    குவல யத்தைக்

    குத்தூசி போல் குடைந்து

    பீறிடும் எரிமலைகள் !

    தாறு மாறாய்

    ஊர்ந்து நெளியும்

    தாரணியின் குடல் தட்டுகள் !

    அங்கிங் கெனாதபடி

    பொங்கிப் பீறிடும்

    பூதக் கனல் எரிமலைகள் !

    நர்த்தனம் புரியும் நில நடுக்கம் !

    அணு உலை வெப்ப மீறலைத்

    தணிப்பவை அவை !

    உட்கருவின்

    பூத அணு உலையே

    பூமியின்

    அச்சைச் சுழற்றி

    ஆட்டி வைக்கும் மின்ஜனனி !

    ++++++++++

    புதிய உமர் கயாம்

     

    “பூமியின் மையத்து வரை ஒரு துளையைத் தோண்டிச் சென்றால் நாம் எதைக் காண்போம் ? உட்கருவின் நடுவில் இயற்கை அணு உலையாய் இயங்கி வரும் 5 மைல் விட்டமுள்ள யுரேனியக் கோளம் ஒன்றிருப்பதை ஊகித்து உடன்பட வைக்க ஆதாரம் உள்ளது. அதை நான் ‘புவி அணு உலை’ (Geo-Reactor) என்று குறிப்பிடுகிறேன்.”

    “பிரபஞ்சம், பூகோளம் ஆகியவற்றின் மெய்யான இயற்கை அமைப்பைக் கண்டுபிடிப்பதும், அந்த அறிவை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதும் விஞ்ஞானத்தின் முக்கிய குறிக்கோளாகும். அந்தப் பணியைத்தான் நான் இப்போது செய்து வருகிறேன்.”

    மர்வின் ஹெர்ன்டன் Ph.D., (Marvin Herndon, President Transdyne Corpn, San Diego, California)

    “ஐஸ்லாந்தின் எரிசாம்பல் முகில் (Plume) விஞ்ஞானத்துக்குக் கிடைத்த ஓர் இயற்கைக் கொடை (Boon to Science).”

    பிரையன் ஹான்ட்வெர்க் (Brian Handwerk, National Geographic News)

     

    பூகோளத்தின் மையத்தில் இயங்கும் வேகப் பெருக்கி அணு உலை

     

    உலக நாகரீகக் குடிமக்களுக்குப் பெருந்தீங்கு விளைவிப்பது பூமியின் உட்கரு வெப்ப மீறலே தவிர மெதுவாக மாறிவரும் சூழ்வெளிப் பருவ நிலை மாற்றங்கள் அல்ல ! கலிலியோ பூமி நகர்கிறது என்று கண்டுபிடித்தார். காப்பர்னிக்கஸ் பூமி பரிதியைச் சுற்றி வருகிறது என்று கண்டுபிடித்தார். டெஸ்மார்க்கின் வெளியீட்டில் கவரப்பட்ட ‘டாம் சாக்கோ’ (Tom Chalko, inspired by Desmarquet’s Report) நமது பூமிக் கோளின் திண்ணிய உட்கரு (Earth’s Solid Inner Core) உண்மையில் ஓர் அணு உலை என்று 2000 ஆண்டில் கண்டுபிடித்தார். அணு உலையின் வெப்ப ஆற்றலே வெளிக்கருவில் உள்ள உலோகங்களைக் கொதிக்கும் குழம்பாக மாற்றி வைத்துள்ளது. அந்த அணுக்கரு உலை மையத் திரிவாக (Eccentric) அமைந்திருக்கிறது. தானாக இயங்கியும் இடையிடையே தானாக நிறுத்தம் அடைந்தும் வரும் மைய அணு உலையே பூமியின் மேற்தளத்தில் அடுத்தடுத்து நில நடுக்கங்களை உண்டாக்கியும், எரிமலைகளை எழுப்பியும் வருகிறது !

    பூமியின் துருவப் பனிப்பாறை முகப்புகள் உருகிப் போவதற்கு முக்கியக் காரணம் பூஜிய டிகிரி செல்ஸியஸ் உஷ்ணத்துக்கு மேல் சூடேறும் காற்றென நாம் கருதக் கூடாது ! துருவங்களின் பனிப் பாறைகளைச் சூடாக்கி உருக்குவது பூமியின் உட்கருவிலிருந்து வெளியாகும் வெப்பமே (Overheating of the Earth’s Core) தவிர பூகோளச் சூடேற்ற மில்லை என்பது இப்போது விஞ்ஞானிகள் கருதும் புதிய கருத்து ! எரிமலைகள் மீண்டும் பீறிட்டெழுவதும், நில நடுக்கம் திடீரெனத் தாக்கித் தகர்ப்பதும் சூடேறிய பூமியின் மைய அணுப்பிளவு உலை குளிர்ந்து போகத் தேவைப் படுவதால் தவிர உட்கரு ‘படிமச் சுருக்கம்’ அடைவதால் (Crystallization) அல்ல ! இயங்கும் எந்த அணுப்பிளவு உலையும் வெப்ப மீறல் ஆபத்தில் (Danger of Over-heating) சிக்கிக் கொண்டு சிதைவு அடையக் கூடாது !

    ஆர்டிக், அண்டார்க்டிக் துருவப் பனிக்குன்றுகளில் பெருமளவுப் பகுதிகள் ஏற்கனவே உருகி நீராகிக் கடல் உயரத்தை மிகையாக்கி விட்டன ! 2000 – 2003 ஆண்டுகளுக் கிடையில் மட்டும் அண்டார்க்டிக் பனிக்குன்றுகளின் உருகுதல் 8 மடங்கு அதிகரித் துள்ளது ! சரிந்த பனிக்குன்றுகள் நழுவிக் கடலில் மூழ்கும் போது சுனாமியைத் தூண்டுவதோடு கடற்கரைப் பகுதிகளைக் கடல் வெள்ளம் மூழ்க்கி விடுகிறது ! எரிமலைகள் கண்விழித்து ஆர்டிக் கடலடியிலும் அண்டார்க்டிக் ஆழப் பகுதிலும் எழும்புகின்றன ! அண்டார்க்டிக்கைச் சுற்றியிருக்கும் கடலில் 5 கி.மீ. (3 மைல்) ஆழத்தில் உள்ள நீர், திணிவு குன்றி உப்பளவும் குறைந்து (Less Dense & Less Salty) அண்டார்க்டிக்கின் அடித்தளம் உருகிப் போகிறது என்பதை உறுதிப் படுத்துகிறது ! தூயப் புதுநீர் உப்புக் கடல்நீரை விட திணிவு குறைந்து மேலே மிதக்க வேண்டுமல்லவா ? அவ்விதம் நிகழ்வதில்லை. அதாவது அண்டார்க்டிக்கின் மேற்தளம் உருகாமல் பேரளவில் அடித்தளக் குன்றுகள் மட்டும் இளகிக் கீழே தூய நீராகத் தங்கி விடுகின்றன !

     

    பூகம்ப எண்ணிக்கையும், தகர்ப்பாற்றலும் மிகையாகி வருகின்றன

     

    கடந்த நாற்பது ஆண்டுகளாக நில நடுக்கத்தின் எண்ணிக்கை, தீவிரம், வலுவாற்றல் யாவும் ஏறிக் கொண்டே போகின்றன. 1973 இல் அமெரிக்கப் பூதளவியல் ஆய்வு நோக்ககம் (USGS -US Geological Survey) 7.0 ரிக்டர் அளவுக்கு மீறிய பூகம்பங்களின் தகர்ப்பாற்றல் 6 மடங்கு அதிகரித்து உள்ளதாக வெளியிட்டிருக்கிறது. மெல்ல மெல்ல காலநிலை உஷ்ணம் ஏறும் போது ஒரு டிகிரிக்குக் குன்றிய தசமத்தில் கூடினாலும் நிலநடுக்கங்கள் 5 மடங்கு பெருகிய ஆற்றலில் தகர்க்கின்றன ! நாசா விஞ்ஞானிகள் கூறுவது : பூமியானது தான் வெப்ப சக்தியை எதிரனுப்ப முடிவதைப் போல் பரிதியி லிருந்து பெறும் சக்தியைப் பேரளவில் (0.85 MegaWatt per Sq km) உறிஞ்சிக் கொள்கிறது. சூழ்வெளி மாசுக்கள் இப்போது பெருகி வருகின்றன. பூமியைத் தாக்கும் சூரியக் கதிர்வீச்சு இயக்கங்கள் பரிதித் தேமல்களால் (Sun Spots) 2012 ஆண்டு வரை மிகையாகி வரும். 2000 -2003 இந்த மூன்று ஆண்டுகளில் ஏன் அண்டார்க்டிக் அடித்தளப் பனிக் குன்றுகளின் உருகல் 8 மடங்கு அதிகரித்திருக்கிறது ? அந்தக் கால இடை வெளியில் பரிதியின் வெப்ப வீச்சு அண்டார்க்டிக் பகுதியில் எட்டு மடங்கு மிகையாகப் பொழிய வில்லை ! பூகோளச் சூடேற்றமும் அந்த அளவுக்கு திடீரென ஏறவும் இல்லை. ஆதலால் அண்டார்க்டிக் பனிக் பாறைகள் உருகக் காரணம் பூமியின் உட்கருவில் உள்ள அணுப்பிளவு இயக்கம் பெருகி வெப்ப சக்தி உள்ளிருந்து மேலெழுந்துள்ளதையே காட்டியுள்ளது.

    பூகோளச் சூடேற்றம் அண்டார்க்டிக் கடற் பகுதி ஆழத்தில் பனி உருகி உப்பு சிறுத்த, தணிவும் குறைந்த நீர் சேமிப்புக்குக் காரணமாக இருக்க முடியாது ! புவி மையத்தில் இயங்கி வரும் அணுக்கரு உலை வெப்பம் மீறி எழுந்து அப்படிச் செய்திருக்க முடியும் என்று ஒப்புக் கொள்ளலாம். அதாவது புவி மையத்தில் உள்ள அணு உலையின் கனல் எழுச்சியைத் தணிக்க, “வெப்பத் தணிப்பியாக” (Heat-Sink) அண்டார்க்டிக் பனிக் கண்டம் ஒன்று மட்டும்தான் உதவ முடிகிறது ! அதாவது பூமியின் உட்கரு அணு உலைக்கு நேர் மேலே இருப்பது அண்டார்க்டிக் பனிப் பாறைகள் என்று நாம் ஊகிக்கலாம் !

    பூமி மையத்தில் உள்ள பூத அணுக்கருப் பிளவு உலை

    ஆதிகாலப் பிள்ளைப் பூமியானது (Baby Earth) பரிதியிலிருந்து பிரிந்து உட்கரு உலோகக் கோளமான ஓர் நீர் அண்டம் என்பதை அறிவோம். சூடான திரவக் குழம்பில் திரண்டு பரிதியை மூலத் தட்டு வடைபோல் (Primordial Disc) சுற்றிக் குளிர்ந்த ஓர் உருண்டையே நமது பூர்வ பூமி ! திணிவு மிக்க திரவ உலோகங்கள் (Densest Metals) ஈர்ப்பாற்றலால் கீழாகப் படிந்தும், நிறை மெலிந்த கனிமங்கள் மேலே மிதந்தும் பூமியின் மேற்தளம் மட்டும் குளிர்ந்தது. யுரேனியம், தோரியம் போன்ற உலோகங்கள் மிகத் திணிவு பெற்றவை.

    உதாரணமாக யுரேனியத்தின் திணிவு (Density) : 19 கிராம் /கியூபிக் செ.மீ. (19 gram per cubic cm). யுரேனியம் ஈயத்தை விட 1.6 மடங்கு திணிவு உள்ளது. தோரியத்தின் திணிவு : 11.7 கிராம் /கியூபிக் செ.மீ. புளுடோனியத்தின் திணிவு : 19.7 கிராம் /கியூபிக் செ.மீ. இம்மூன்று கன உலோகங்களும் மற்ற கன உலோகங்களோடு சேர்ந்து பூமியின் மையக் கருவில் படிந்திருக்கலாம் என்று அழுத்தமாக ஊகிக்க இடமிடுக்கிறது.

    தானாக நியூட்ரான்கள் தாக்கும் போது அணுப்பிளவில் அணுசக்தி உண்டாக்கும் மூன்று கன உலோகங்கள் : யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239. யுரேனியம் 238 உலோகத்தை வேக நியூட்ரான் தாக்கும் போது, யுரேனியம் -238 புளுடோனியம் -239 ஆக மாறுகிறது. அதுபோல் தோரியம் -232 உலோகத்தை நியூட்ரான் தாக்கும் போது, தோரியம் -232 யுரேனியம் -233 ஆக மாறுகிறது.

    யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239 ஆகிய மூன்றும் சுயமாக நியூட்ரான்களை வெளியேற்றி அவை அந்தக் கன உலோகங்களைத் தாக்கிப் பிளக்கும் போது அணுசக்தியை உண்டாக்குகின்றன. பெரும்பான்மையாகப் பூமியில் கிடக்கும் யுரேனியம் -238 இல் சிறிதளவு யுரேனியம் -235 உள்ளது. ஆகவே முதலில் நிகழும் யுரேனியம் -235 நியூட்ரான் சேர்க்கையில் சக்தி உண்டாவதுடன், பிளவுக் கழிவுகளோடு மூன்று நியூட்ரான்கள் பிறக்கின்றன. அந்த நியூட்ரான்கள் மீண்டும் யுரேனியம் -235 உலோகத்தைத் தாக்கி சக்தியும், கழிவும், 3 நியூட்ரான் களும் உண்டாகும். அணுப்பிளவுக் கழிவுகளில் இரண்டு பாதி சிறு நிறை தனிமங்கள் காணப்படும். திரவ நிலையில் சிறு நிறைத் தனிமங்கள் பிரிந்து மேலே மிதக்கும்.

    வேக நியூட்ரான்கள் யுரேனியம் -238 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும் புளுடோனியம் -239 உலோகத்தையும் முடிவில் தோற்றுவிக்கும். மேலும் வேக நியூட்ரான்கள் தோரியம் -232 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும். யுரேனியம் -233 உலோகத்தையும் தோற்றுவிக்கும். இம்மாதிரி தொடர்ந்து வேகப் பெருக்கி அணு உலைகள் போல் (Fast Breeder Reactor) தொடர்ந்து அணுசக்தியும், எரிசக்தி எருவும் பூமியின் மையத்தில் உண்டாகி வருகின்றன. அப்படி இயங்கும் அணுப்பிளவு அணு உலைகளில் கழிவுக் தனிமங்கள் உண்டாகித் தானாக அணு உலை நிறுத்தம் அடையும். காரணம் கழிவுப் பொருட்கள் நியூட்ரான் விழுங்கிகள். நிறை சிறுத்த கழிவுப் பொருட்கள் கனற் குழம்பில் மேலே ஏறி மிதக்க மறுபடியும் அணு உலை இயங்க ஆரம்பிக்கிறது. இத்தகைய வேகப் பெருக்கி அணு உலைதான் பூமியின் மையத்தில் தொடர்ந்து இயங்கியும் இடையிடையே நிறுத்தம் அடைந்தும் பிரம்மாண்ட மான வெப்ப சக்தியை உற்பத்தி செய்து வருகிறது என்று 1993 ஆம் ஆண்டில் டாக்டர் மர்வின் ஹெர்ன்டன் புதியதோர் பூமி உட்கரு நியதியை அறிவித்தார் !

     

    விஞ்ஞானி மர்வின் ஹெர்ன்டான் அறிவித்த புவி அணு உலை

     

    பூமியில் அணுசக்தி ஆற்றல் பெறும் யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் இருப்பு பல இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. வானியல் விஞ்ஞானி டாக்டர் மர்வின் ஹெர்ன்டான் முதன்முதல் அணுப்பிளவுத் தொடரியக்கம் செய்து காட்டிய இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ·பெர்மியைப் பின்பற்றி பூமிக்குள்ளே மாபெரும் ஓர் இயற்கை அணுப்பிளவு உலை (Natural Nuclear Fission Geo-Reactor) இயங்கியும் அடுத்து நிறுத்தம் அடைந்தும் வருகிறது என்னும் புதியதோர் கோட்பாட்டை வெளியிட்டார். அந்த அணுப்பிளவு உலை வேக நியூட்ரான்கள் யுரேனியத்தைத் தாக்கி சக்தியும், எரிசக்தி எருவும் ஈனுகின்ற ஒரு வேகப் பெருக்கி அணு உலை (Fast Breeder Reactor). அதற்கு ஹைடிரஜன் போன்ற மிதவாக்கி (Moderator) தேவையில்லை. மற்ற மின்சக்தி நிலையங்கள் போலின்றி, புவி அணு உலை (Georeactor) தானாக இயங்கும். தானாக நிறுத்தம் அடையும். அதன் வெப்ப சக்தி ஆற்றலைக் கூட்டிக் குறைக்கும் சுயக் கட்டுப்பாடும் கொண்டது. இயக்கத்தில் விளைந்து சேமிப்பாகும் அணுப்பிளவுக் கழிவுகள் நிரம்பி நியூட்ரான்களை விழுங்கி அணு உலை அடுத்து நிறுத்தம் அடையும். நிறை குன்றிய அணுவியல் கழிவுகள் கனற் குழம்பில் மேலேறி மிதக்கும். பிறகு தனிப்பட்டுக் கீழே யுரேனியம் -235 சேரும் போது அணு உலை தானாக இயங்கத் துவங்கும் ! இந்தக் கோட்பாடை மர்வின் ஹெர்ன்டான் 1993 இல் முதன்முதல் வெளியிட்ட போது அக்கருத்தைப் பலர் கூர்ந்து நோக்க வில்லை.

    பூமியின் உட்கரு வெப்பம் மிகுந்த கோளம் ! அதைச் சுற்றி வெளிக்கருவில் உலோகத்தால் ஆன கனற் குழம்பு ! உட்கருவின் அணு உலை வெப்ப சக்தியே திரவக் குழம்பை மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்ற வைத்திருக்கும். அந்த அணுப்பிளவு சக்தியே பூகோளக் காந்த சக்திக்கும் (Geomagnetism) மூலமாக இருக்கக் கூடும் என்பதும் அறியப் படுகிறது. செவ்வாய்க் கோள் மின் காந்த மின்றி ஈர்ப்பியல் குன்றி செத்துக் கிடக்கிறது. செவ்வாய்க் கோளின் உட்கரு அணு உலை இயக்கம் நிரந்தராக நிறுத்தம் அடைந்து அதன் காந்த சக்தி இழந்து போனது ! செவ்வாய்க் கோளின் அணு உலை சக்தியற்றுச் செத்து விட்டதால் செவ்வாயின் காந்த சக்தி மறைந்து, ஈர்ப்பாற்றல் குறைந்து போய் அதன் சூழ்வெளி வாயு மண்டலம் நிரந்தரமாய் இழக்கப் பட்டு நீர்வளம் எல்லாம் முற்றிலும் வரண்டு விட்டது. ஆனால் செவ்வாயின் உட்கரு ஒருகாலத்தில் சூடாக இருந்து அதில் இயங்கிய எரிமலை பரிதி மண்டலத்தின் மிகப் பெரிய எரிமலையாக எழுந்திருக்கிறது !

    4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நமது பூமி தன் உட்கருவில் அணுவியல் எருக்களான யுரேனியம் -235, யுரேனியம் -238, அணுப்பிளவு இயக்கத்தால் உண்டான புளுடோனியம் -239 ஆகியவற்றைப் பயன்படுத்தி வரும் 5 மைல் (10 கி.மீ.) விட்டமுள்ள வேகப் பெருக்கி அணு உலைக் கோளம் ஒன்றைக் கொண்டுள்ளது என்று கூறுகிறார் மர்வின் ஹெர்ன்டான். அது வெளியாக்கும் வெப்ப சக்தி 4 டெரா வாட்ஸ் (4000 பில்லியன் வாட்ஸ்), (4 மில்லியன் மெகாவாட்ஸ்) [4 terawatts (4X10^12 watts)] என்று கணினி மாடல் மூலம் கணக்கிடப் படுகிறது. இப்பேரளவு வெப்ப சக்தி தொடர்ந்து வெளியேறாது விட்டு விட்டு எழுவதால், அங்குமிங்கும் எரிமலையும், பூகம்பமும் உலக நாடுகளில் தலைதூக்கி குடிமக்களுக்கு அடிக்கடி இன்னல் கொடுத்து வருகின்றன !

    (தொடரும்)

    +++++++++++++++++

    Images : BBC News, National Geographic, The Times UK, & CTV Global Media

    Information :

    1. Volcanoes & Earthquakes By: Reader ‘s Digest [1992]

    2. Time & Life Books Volcanoes & Earthquakes [1995]

    3. Hutchinson Encyclopedia of the Earth Edited By: Peter Smith [1985]

    4. Encyclopedia Britannica 15 Edition [1978]

    5. Reader ‘s Digest Marvels & Mysteries of the World Around Us [1977]

    6. National Geographic Frontiers of Science [1982]

    7. The Vesuvius Volcano at the Bay of Naples.

    8. The Eruptive History of Mt.Vesuvius in Italy & Mt.Etna in Sicily.

    9. Krakatoa Volcano near Java & Sumatra of Indonesian Islands

    10. Inside the Volcano, National Geographic [November 2000].

    11 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40402051&format=html (Italian Volcano))

    11 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40402121&format=html (Hawaii Volcano)

    12. Hot Theories on the Center of the Earth National Geographic [January 1996].

    13. Hawaii ‘s Volcanic Cradle of Life, National Geographic [July 1990].

    14. Hawaii, Island of Fire & Flowers, National Geographic [March 1975].

    15. Volcano Monitoring Techniques, U.S. Geological Survey (USGS) Report [October 11, 1991]

    16. Kilauea, Hawaii ‘s Most Active Volcano.

    17. Volcanic & Seismic Hazards, USGS Publication [1997].

    18. Volcanic Toxic Gases By: Bill Harby [April 7, 1999]

    19. The Hawaii Center for Volcanology [HCV-1992]

    20. Icland Volcano’s Fountain of Fire (March 20, 2010)

    21 National Geographic News – Harmful Effcts of Volacanic Smoke By Brian Handwerk (April 16, 2010)

    22 BBC News Why Iceland Volcano Has Grounded UK Flights By : Victoria Gill (April 15, 2010)

    23 BBC News How Volcanoes Shaped History (April 15, 2010)

    24 BBC News Experts Update Ash Health Advice (April 16, 2010)

    26 BBC News Volcanic Ash Cloud (April 17, 2010)

    27 BBC News Ash Deepens Europe Travel Chaos (April 17, 2010)

    28 BBC News Ash Imperils Bone Morrow Patients (April 18, 2010)

    29 BBC News Half of European Flights to Fly (April 20, 2010)

    30 Scientific American – How Much Volcanic Ash is Too Much for a Jet Engine ? By John Matson (April 21, 2010)

    31 (a) Daily Galaxy -Are the Planets Volcanoes Being Triggered by Global Warming ? (April 16, 2010)

    31 (b) Scientific American -A Warming World Could Trigger Earthquakes, Landslides & Volcanoes By James Watson (April 21, 2010)

    32 NASA Report : What are (Volcanic) Aerosols ?

    33. Volcanoes & Climate Change ByJason Wolfe (September 5, 2000)

    34 18 Most Dangerous US Volcanoes Include Erupting Alaska Peak (Jan 20, 2006)

    35 NASA Report : Historic Volcanic Eruption Shrunk the Mighty Nile River (Nov 21, 2006)

    36 NuclearPlanet.com : Science About thre True Nature of Earth & Universe

    37 The Nuclear Heart of the Earth : The Science Behind “The Core” – An Interview with Marvin Herndon Ph.D. By : Wayne Smith (Mar 31, 2003)

    38 Encyclopedia.com : Radioactive Heat Production in the Earth By : David A. Rothery (1993)

    39 Can Climate Change Explode ? By : Ridhima (Jan 3, 2010)

    ********************

    Share