பழமொழி கூறும் பாடம்

– தேமொழி.

 

பழமொழி: சிறிதேனும் இன்னாது இருவர் உடன் ஆடல் நாய்

 

ஒருவ ருரைப்ப உரைத்தால், அதுகொண்
டிருவரா வாரும் எதிர்மொழியற் பாலா.
பெருவரை நாட! சிறிதேனும் இன்னா
திருவர் உடனாடல் நாய்.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

 

பதம் பிரித்து:
ஒருவர் உரைப்ப உரைத்தால், அது கொண்டு
இருவர் ஆவாரும் எதிர் மொழியற் பாலா;-
பெரு வரை நாட!-சிறிதேனும் இன்னாது,
இருவர் உடன் ஆடல் நாய்.

பொருள் விளக்கம்:
ஒருவர் ஒரு கருத்தினை உரைக்க, அவருக்கு மாற்றுக் கருத்துள்ளவர் அதனை மறுத்து மறுமொழி சொன்னால், அதைப் பற்றி மேற்கொண்டு இருவரும் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் எதிர்த்து வாதிட்டுக் கொண்டிருப்பது சரியாகுமா? (அது சரியான முறையல்ல). பெரிய மலைநாட்டைச் சேர்ந்தவரே, சிறிது காலப்பொழுதிற்குத்தான் என்றாலும் அது நன்மை பயக்காது. (அச்செயல்) இருவர் ஒரே ஒரு நாயின் உதவி கொண்டு தங்கள் இருவரது வேட்டையாடுதலையும் செய்வது போல (மிகுந்த துன்பத்தைக் கொடுப்பதாக) அமையும்.

பழமொழி சொல்லும் பாடம்: தங்கள் வாதக் கருத்தை எடுத்துக் கூறுபவர்கள் ஒரே நேரத்தில் எதிர்த்து உரையாடிக் கூச்சலிடுவது பயன் தராது. வேட்டையாடச் செல்லும் இருவர், அவரவருக்கென்று ஆளுக்கொரு ஒரு நாயைப் பயன்படுத்தினால் மட்டுமே வேட்டையாடுவது எளிதாக இருப்பது போல; வாதிடுவோர் ஒருவர் மாற்றி ஒருவர் தங்கள் கருத்தை முன் வைத்தாலே அவ்வாதத்தால் பயன் விளையும். இருவரும் ஒரே நேரத்தில் கூக்குரலிட்டுக் கொண்டிருப்பது வாதத்திற்கு உதவாது. நேரத்தையும் நிலைமையையும் அறிந்து கருத்தை முன்வைக்க வேண்டும் என்பதை வள்ளுவர்,

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர். (குறள்: 712)

சொற்களின் தன்மையை நன்கு உணர்ந்தவர்கள், கேட்பவர்கள் விரும்பிக் கேட்கும் வகையில், நிலைமையைக் கருத்தில் கொண்டு, சொல்வதைத் தெளிவாகச் சொல்லத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்கிறார்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க