இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-11
–மீனாட்சி பாலகணேஷ்
பெருங்களிவரச் சிறுகுறும்பு செய்முருகன்!
முன்புகண்ட இலக்கியச்சித்திரங்களுள் ஒன்றில் குழந்தை விநாயகன் தந்தை சிவபிரானின் மடிமீதேறிக் குறும்புகள் செய்வதனைக்கண்டு களித்தோம். அவன் தம்பி முருகன், தான் அண்ணனுக்குச் சளைத்தவனில்லை எனும்வண்ணம் குறும்புகள் செய்வதனை குமரகுருபரர் இயற்றியருளியுள்ள முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழில் கண்டு களிக்கலாம். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழே இவர் இயற்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூலாகும். பின்பு வைத்தீசுவரன் கோவிலில் உறையும் முத்துக்குமாரசுவாமி எனும் முருகப்பெருமான் மீது இப்பிள்ளைத்தமிழை இயற்றினார் என அறிகிறோம். பெரும்புலவர்கள் அனைவரின் சிந்தனைகளும் கருத்துக்களும் ஒன்றாகவே இருக்கும் என்பதற்கு இந்தப்பாடல்கள் சிறந்த எடுத்துக்காட்டு. குமரகுருபரரின் காலம் 17-ம் நூற்றாண்டாகும். இவருடைய பிள்ளைத்தமிழ் நூல்களே தமிழில் முதலில் எழுதப்பட்ட நூல்கள். பிற்காலத்துப் புலவர்களும் (18-ம் நூற்றாண்டு) இத்தகைய சிந்தனைகளைத் தம் நூல்களில் புகுத்தியுள்ளனர். இனிச் சித்திரத்தினைக் காணலாமே!
*******
குழந்தை முருகன் தன் தாய்தந்தையருடன் விளையாடியவண்ணம் இருக்கிறான். அதனைப்பார்ப்போருக்கு அதுவொரு கண்கொள்ளாக் காட்சியாக உள்ளதாம். குழந்தைகள் என்ன குறும்பு செய்தாலும் அதனை அனைவருமே ரசித்து மகிழ்வோமல்லவா?
அன்னை பார்வதியின் மடிமீதர்ந்துள்ளவனின் இனிய இளமையான வாயிலிருந்து தேன்போலும் நீர் (எச்சில்) ஒழுகுகின்றது; அது அவன் அணிந்துள்ள வெண்பட்டாடையை நனைக்கின்றது. ஓரிடத்தில் அமரக்கூடிய குழந்தையா இவன்? தாயின் மடியிலிருந்து தாவித் தன் தந்தை சிவபிரானின் மார்பில் ஏறிவிடுகின்றான்; அங்கும் தன் பிஞ்சுக்கால்களால் துவைத்துக் களித்து ஆடுகிறான்; காண்பவர்க்கு இது முருகன் குரவைக்கூத்தாடுவதாகத் தெரிகின்றதாம். அழகான, இன்பமான கற்பனை!
ஐயன்கையில் உள்ள உடுக்கை (துடி) மத்தளம்போல் மிகுந்த ஒலியை எழுப்புவது. அதனைத் தனது சிறுகைகளில் எடுத்துக்கொண்டுவிட்ட முருகப்பெருமான் அதனைச் சிறிய பறைபோன்று ஒலி எழுமாறு முழங்கச் செய்து மகிழ்கிறான். அவர் ஒருகையில் ஏந்தியுள்ள அனலை அவருடைய (மோலி)சடையிலிருந்து ஒழுகும் கங்கைப்புனலைச் சொரிந்தே அணைத்துவிடுகின்றான். தலையில் அணிந்துள்ள இளம்பிறையைக் கையாலெடுத்து அவருடைய கழுத்தில் நெளிகின்ற பாம்பின் வாயிலிட்டுவிடுகிறான் இளங்குமரன்! அவர்கையில் ஏந்தியுள்ள சிறுமானுக்கு, சடையினின்று அறுகம்புல்லை எடுத்து உண்ணக்கொடுக்கின்றான்.
அண்ணன் கணேசனுக்கு, தான்சளைத்தவனில்லை என நிரூபிக்கிறானோ என வியக்கவைக்கின்றதல்லவா?
இனி என்ன செய்யலாம் என எண்ணியவன், தந்தையான சிவபிரானின் அழகுமிகுந்த சிவந்த திருமேனியினை மிதித்துத் துவைத்து விளையாடுகின்றான். இந்தக்கூத்தினால் அவர் மேனியில் பூசியுள்ள வெண்ணீற்றுத்துகள்கள் மேலே பரந்தெழும்படி புழுதியாடல் செய்கின்றான் அவன். அவருடைய சடை காடெனப்பரந்து விரிந்துகிடக்கின்றது; அதிலிருந்து கங்கைநீர் பெருகிவழிகின்றது. இதில் குழந்தை முருகன் தனது விழிகளெல்லாம் சிவக்குமாறு (சேப்ப) முழுகித்துளைந்து நீராடி விளையாடுகிறான்.
‘இவ்வாறு, தான் வளர்ந்துவரும் காலத்தில் (இளமை முதிர்ந்து வரும் பருவத்தில்- குழவுமுதிர்) காண்போர் பெரும்களிப்புக்கொள்ளுமாறு சிறுசிறு குறும்புகளைச் செய்தவனே! வருக! குரவமலர்களின் நறுமணம் கமழும் கந்தபுரியில் குடிகொண்டிருக்கும் குமரகுருபரனே வந்தருள்க!’ எனத்தாயின் நிலையில் நின்று குமரகுருபரனார் வேண்டுகின்றார்.
இதில் வெளிப்படும் கருத்துக்கள் ஆச்சரியம் விளைவிப்பன. குழந்தைகள் வளர்ந்துவரும் அறியாப்பருவத்தில் எவ்விதமான குறும்புகளைச் செய்யினும், தாய்தந்தையர் அதனை மகிழ்ச்சியுடன் இரசிப்பதனைக் கண்கூடாகக் காண்கிறோம். அன்னையும் அத்தனும் தம்குழந்தை முருகனின் குறும்புச்சேட்டைகளை அமைதியாக அனுபவித்து மகிழ்வதனை நாம் குமரகுருபரர் வாக்கில் படித்துமகிழ்வது மிக்க இன்பமளிப்பதாகும்.
மழவுமுதிர் கனிவாய்ப் பசுந்தேறல் வெண்டுகில்
மடித்தல நனைப்பவம்மை
மணிவயிறு குளிரத் தவழ்ந்தேறி எம்பிரான்
மார்பினில் குரவையாடி
முழவுமுதிர் துடியினில் சிறுபறை முழக்கிஅனல்
மோலிநீர் பெய்தவித்து
முளைமதியை நெளியரவின் வாய்மடுத் திளமானின்
முதுபசிக்கு அறுகருத்தி
விழவுமுதிர் செம்மேனி வெண்ணீறு தூளெழ
மிகப்புழுதி யாட்டயர்ந்து
விரிசடைக் காட்டினின் றிருவிழிகள் சேப்பமுழு
வெள்ளநீர்த் துளையமாடிக்
குழவுமுதிர் செவ்விப் பெருங்களி வரச்சிறு
குறும்புசெய் தவன்வருகவே
குரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட
குமரகுரு பரன்வருகவே.
(முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்)
குமரனின் குறும்பு விளையாட்டுகள் இத்துடன் நிற்பதாயில்லை. இப்போது அவனுடைய விளையாட்டு பார்வதி அன்னையிடமும் தொடர்கின்றது.
தமது படர்ந்த சடைக்காட்டினிடையில் சிவபிரான் ஒரு கலைமதியை- பிறைச்சந்திரனை வைத்துள்ளார். உமையம்மையின் அழகான கொண்டையில் முத்துக்களால் (நித்திலம்) செய்யப்பட்ட பிறைபோன்ற ஒரு அணிகலன் அழகுசெய்கின்றது. “அட! இரு பிறைச்சந்திரன்கள். இரண்டையும் இணைத்தால் முழுநிலவாகுமே,” என எண்ணுகிறான் குமரன். இரு இளம்பிறைகளையும் ஒன்றாக இணைக்கிறான். அது அழகான முழுமதியாகக் காட்சியளிக்கின்றதனைக்கண்டு மகிழ்ச்சியில் குழந்தை தனது கைகளைக் கொட்டிக் ‘கலகல’வெனச் சிரித்து மகிழ்கின்றான்.
முருகன் செய்துவைத்துள்ள இந்த முழுமதி போன்ற அணிகலனை உண்மையான முழுமதியே என எண்ணி, சிவபிரான் சடையில் அணிந்துள்ள பாம்பு அதனை உண்பதற்காக ஓடோடி வருகின்றது. அதன் படத்தைக்கண்ட முருகன் அதனைக் காந்தள்மலர் என எண்ணிக்கொண்டுவிட்டன்; அதனை முடியிலணிந்துகொண்டு அழகு செய்துகொள்ளலாமே எனப்பறிப்பதற்காக அதனருகில் சென்றான். அப்போது அப்பாம்பு பயங்கொண்டு வெகுவேகமாக ஓடலாயிற்று.
சிவபிரான் ஊழிமுதல்வனாகையினால் தனது திருமுடியில் ஒரு மண்டையோட்டை அணிந்திருப்பார். அந்த மண்டையோட்டின் ஒருபல் வெளியே துருத்திக்கொண்டு அது நகைப்பதைப்போலக் காணப்படும். இத்தகைய குறும்புகளினிடையே குமரப்பெருமான் தனது தலையை நிமிர்த்தி அதனை நோக்கியபோதில் அந்த மண்டையோடு தனது இச்செயல்களைக்கண்டு நகைப்பதாகக் கருதிச் சினம்கொண்டானாம். தனது தந்தையான சிவபிரான் முன்பொருநாள் சினங்கொண்டு கிள்ளிய மலரயனின் தலைதான் அது எனக்கருதினான் முருகன். உதட்டினைச் சுழித்தவண்ணம் சினத்துடன் அத்தலையினை நோக்கி, “நீ முன்பு என்கையால் உன்தலையில் குட்டுப்பட்டதை மறந்தனையோ? இப்போது நகைக்கலாயிற்றோ?” எனக்கேட்டான்.
சின்னஞ்சிறுகுமரனின் அதட்டுதலும் சினமும் நமக்கும்தான் நகைப்பை வருவிக்கின்றது. ஆயினும் பிள்ளைப்பிராயத்தில் பெரியபெயர் பெற்றவனல்லவா? நாம் நகைக்கலாகுமோ? ஆகவே ஆசையினாலும் அன்பினாலும் புன்னகைக்கிறோம்.
“இதழினை அதுக்கி (உதட்டினைச் சுழித்து) இவ்வாறு கேட்கும் குமரநாயகனே வருவாயாக! குரவமலர்கள் நிறைந்த கந்தபுரியில் குடிகொண்ட குமரகுருபரனே வருக!” எனப்புலவர் குமரகுருபரர் பாடிவேண்டுகிறார்.
கட்டுண்ட படர்சடைக் காட்டெம்பி ரான்வைத்து
கலைமதியோ டையநீயக்
கவுரிதிரு முடியின்நித் திலமிட் டிழைத்திட்ட
கதிரிளம் பிறையிணைப்பத்
தெட்டுண்ட போல்முழுத் திங்களென்று ஏக்கறும்
சுழுமணிச் சூட்டுமோட்டுச்
செம்பாம்பு பைவிரித் தாடுதலும் ஓடிநின்
சிறுநறுங் குஞ்சிக்கிடும்
மட்டுண்ட பைங்குலைக் காந்தளென் றணையஅம்
மாசுணம் வெருண்டோடலும்
மணிமுடியின் நகுதலையை மற்றெமை நகைத்தியால்
மலரயன் தலைநீமுனம்
குட்டுண்ட தறியாய்கொல் எனவித ழதுக்கும்
குமாரநாய கன்வருகவே
குரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட
குமரகுரு பரன்வருகவே.
(முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்)
பிள்ளைத்தமிழ் சிற்றிலக்கியங்கள் இத்தகைய அருமையான கற்பனைநயம் செறிந்த பாடல்களை மிகுதியாகக் கொண்டவையாகும். தேடிப்பிடித்துப் பயிலுவோமானால், இவற்றின் அருமைகளையும் பெருமைகளையும் உணர்ந்து களிப்பெய்தலாம். இன்னும்வரும் அத்தியாயங்களில் தொடர்ந்து இவற்றைக்காண்போம்.
மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}
********************************