நாகேஸ்வரி அண்ணாமலை

கம்பெனிகள் பல பொருள்களில் பல ரசாயனக் கலவைகளை உபயோகிக்கின்றன.  இவற்றை இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறார்களாம்.  முதல் வகை அமெரிக்காவில் 1976-ஆம் ஆண்டு நச்சுப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் (Toxic Substances Control Act)  கொண்டுவரும் முன் உபயோகத்தில் இருந்தவை; 60,000-க்கும் மேற்பட்ட இந்த ரசாயனங்களின் உபயோகத்தை அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் (Environment Protection Agency) கண்காணித்து வருகிறது.  1976-க்குப் பிறகு இன்னும் 20,000 ரசாயனங்கள் சந்தைக்கு வந்திருக்கின்றன.  இவற்றையும் கண்காணிக்க வேண்டியது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் பொறுப்பு.  கட்டுப்பாடுகள் இருந்தும் டுபான்ட் (DuPont) என்னும் நிறுவனம் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக PFOA (perfluorooctanoic acid) என்னும் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் கேடு விளைவிக்கும் ரசாயனத்தை உபயோகித்து வந்திருக்கிறது.

மேற்கு வர்ஜீனியா மாநிலத்திலுள்ள பார்க்கர்ஸ்பர்க் என்னும் ஊரில் டெனன்ஸ் சகோதரர்கள் நான்கு பேர் தங்களுடைய தந்தை விட்டுச்சென்ற 600 ஏக்கர் நிலத்தில் 200 மாடுகளை வளர்த்து வந்தனர்.  டெனன்ஸ் சகோதரர்களில் ஒருவரான ஜிம் டெனன்ஸும் அவரது மனைவியும் தங்கள் பங்கான 66 ஏக்கர் நிலத்தைப் பணத் தேவை  ஏற்பட்டதால் டுபான்ட் நிறுவனத்திற்கு விற்றுவிட்டனர்.  அந்த நிறுவனம் தன்னுடைய தொழிற்சாலைக் கழிவுகளைக் கொட்டுவதற்குரிய இடமாக அதை ஆக்கிக்கொண்டது.  அந்தக் கழிவுகளிலிருந்து PFOA (இது ஒரு ரசாயனக் கலவை; ஃப்ளோரின் (Florine) என்னும் தனிமத்திலிருந்து தயாரிக்கப்பட்டது) கசிந்து அருகிலுள்ள நிலத்தடி நீரில் கலந்தது.  இது தெரியாமலேயே இந்த இடத்தைச் சுற்றியுள்ள பல ஊர்களில் வாழ்ந்த ஒரு லட்சம் பேர் இந்த ரசாயனம் கலந்த தண்ணீரைக் குடித்து வந்தனர்.

1951-இல் டுபான்ட், 3M கம்பெனியிலிருந்து (இது செய்யும் பல பொருள்களில் ஸ்காட்ச் டேப்பும் ஒன்று) PFOA-ஐ வாங்கி, சமைக்கும் பாத்திரங்களில் உணவு ஒட்டாமல் இருப்பதற்காக டெஃப்லான் (Teflon) என்னும் பொருளைச் சேர்க்கும்போது இதையும் சேர்த்து உபயோகிக்கத் தொடங்கியது.  3M இதற்கு நான்கு வருடங்களுக்கு முன் PFOA-ஐ கண்டுபிடித்திருந்தது.  டுபான்ட்டும் 3M-உம் சேர்ந்து நடத்திய ஆராய்ச்சிகளில் PFOA மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் அவர்களுடைய உடலில் கேடு விளைவிக்கக்கூடிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்று கண்டறியப்பட்டது.  ஆனாலும் இரண்டு கம்பெனிகளும் இதை வெளியில் சொல்லவில்லை.  தொண்ணூறுகளில் PFOA-க்குப் பதில் இன்னொரு ரசாயனத்தை டுபான்ட் கண்டுபிடித்தது.  ஆனாலும் டுபான்ட் அதை உபயோகிக்க விரும்பவில்லை.  அதனுடைய உற்பத்திப் பொருள்களில் PFOA-னின் பங்கு அவ்வளவு.  அதனால் கிடைக்கும் நூறு கோடி டாலர் லாபத்தை அந்தக் கம்பெனி இழக்க விரும்பவில்லை.

பார்க்கர்ஸ்பர்க் ஊரைச் சேர்ந்த டெனன்ஸ் சகோதரர்கள் வளர்த்துவந்த கால்நடைகளும் PFOA கலந்த நீரைக் குடித்துவந்ததால் பல நோய்களுக்கு ஆளாகின.  டெனன்ஸ் சகோதரர்கள் டுபான்ட் மீது வழக்குத் தொடர முயன்றபோது அந்த ஊரில் உள்ள எந்த வழக்கறிஞரும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை.  பல நெருங்கிய நண்பர்கள் கூட அவர்களிடம் பேச விரும்பவில்லை.  அந்த ஊரில் பலருக்கு டுபான்ட் நிறுவனம் வேலைவாய்ப்புக் கொடுத்ததே இதற்குக் காரணம்.  கடைசியில் பெரிய வணிக நிறுவனங்களுக்குச் சட்ட ஆலோசகராக இருந்த பலாட் என்னும் வழக்கறிஞரை டெனன்ஸ் சகோதரர்கள் அணுகினர்.   எவ்வளவோ முயன்றும் PFOA கலந்த நீரைக் குடித்ததால்தான் டெனன்ஸ் சகோதரர்களின் கால்நடைகள் இறந்துகொண்டிருந்தன என்று அவரால் வாதிட்டு ஜெயிக்க முடியவில்லை.  டுபான்டும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையும் சேர்ந்து நியமித்த கால்நடை மருத்துவர்கள் குழு டெனன்ஸ் சகோதரர்களுக்குக் கால்நடை பராமரிப்புப் பற்றி தெரியாதலால் அவர்களுடைய கால்நடைகள் இறந்துகொண்டிருந்தன என்று அறிக்கை அளித்தனர்.  தற்செயலாக பலாட் டுபான்ட் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புத் துறைக்கு அனுப்பிய ஒரு கடிதத்தைப் படிக்க நேர்ந்தது.  அதில் அவர் இதுவரை கேள்விப்பட்டிராத PFOA என்ற பெயரைக் கண்டார்.  அது பற்றி தெரிந்துகொள்ள டுபான்ட் நிறுவனத்திடம் இந்த வழக்குப் பற்றிய ஆவணங்களைக் கேட்டார்.  அவர்கள் மறுத்தும் நீதிமன்றத்தின் மூலம் கேட்டு வாங்கி டுபான்ட் நிறுவனத்தின் ரகசிய ஆவணங்களை வாங்கிப் பரிசீலித்தார்.

டுபான்ட் அனுப்பிய நூற்றுக் கணக்கான ஆவணங்களைப் பரிசீலித்த பலாட் முதல் முதலாக PFOA என்ற ரசாயனக் கலவையைப் பற்றித் தெரிந்துகொண்டார்.  டுபான்ட் கம்பெனிக்கு PFOA பற்றித் தெரிந்திருந்தும் அது தொடர்ந்து தங்கள் கம்பெனி தயாரிக்கும் பொருள்களில் அதை உபயோகிப்பது பற்றியும் பலாட்டிற்குத் தெரிய வந்தது.  பார்க்கர்ஸ்பர்க் ஊரில் நிலத்தடி நீர் PFOA-வினால் மாசுபட்டிருப்பதையும் விவரித்து 972 பக்க அறிக்கை ஒன்றைத் தயாரித்து 2001-இல் அதை அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறைக்கும் அமெரிக்க உள்துறை அமைச்சகத்துக்கும் அனுப்பிவைத்தார்.  இது அரசுக் கொள்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.  பலாட் இந்த உண்மைகளை வெளிக்கொண்டுவரும்வரை, ‘கேடு விளைவிக்கும் ரசாயனம் இருந்தால் அதை அரசு கட்டுப்படுத்தியிருக்கும்’ என்று மக்கள் நம்பிக்கொண்டிருந்ததால், கேள்வி கேட்பாரின்றி கார்ப்பரேட் நிறுவனங்கள் தடையில்லாமல் ரசாயனங்களை உபயோகித்து வந்தன.  உண்மை என்னவென்றால் குறிப்பிட்ட ரசாயனம் கேடு விளைவிக்கும் என்று ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டாலொழிய அவற்றை அரசு தடை செய்யாது.  கம்பெனிகளே கேடு விளைவிக்கும் ரசாயனங்களை உபயோகிக்காது என்று நினைத்து அரசு கட்டுப்பாட்டைக் கொண்டுவரவில்லை.  1976-இல் நச்சுப்பொருள்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் இயற்றப்பட்டபோது அப்போது புழக்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசாயனங்களில் ஐந்திற்கு மட்டுமே அரசு தடை விதித்திருந்தது.

கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக 3M-உம் டுபான்டும் ஆராய்ச்சிகளின் மூலம் அவர்களுடைய ஆய்வுக் கூடங்களில் எலி போன்ற மிருகங்களுக்கு ஏற்பட்ட உடல் கோளாறுகள் பற்றியும் அவர்கள் தொழிற்சாலைகளில் வேலைபார்ப்பவர்களுக்கு ஏற்பட்ட கோளாறுகள் பற்றியும் தெரிந்திருந்தும் அந்த முடிவுகளை ரகசியமாக வைத்திருந்து தொடர்ந்து PFOA-வை தங்கள் உற்பத்திப் பொருள்களில் உபயோகித்து வந்தனர்.  இப்போது பலாட் எடுத்த நடவடிக்கைகளால் டுபான்ட்டின் ஊழல் வெளியானதும் அது சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையோடு ஒன்றரை கோடி டாலருக்கு ஒப்பந்தம் செய்துகொண்டது.  இருப்பினும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை டுபான்ட்டை அந்தத் தவறுகளுக்குப் பொறுப்பேற்கும்படி கூறவில்லை.  அமெரிக்க அரசு எப்போதுமே கார்ப்பரேட்டுகளைப் பகைத்துக்கொள்ளத் தயங்கும்.

இதையடுத்து டுபான்ட் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட PFOA கலந்த கழிவுகளால் மாசுபட்ட நீரைக் குடித்தவர்கள் டுபான்ட் மீது வழக்குத். தொடர விரும்பினர்.  அவர்கள் குடித்துக்கொண்டிருந்த தண்ணீரில் டுபான்டே ஆராய்ச்சி மூலம் கூறியிருந்த அளவைவிட அதிகமாக PFOA இருந்தது.  பைலாட் வழக்குத் தொடரலாம் என்று அறிந்ததும் டுபான்ட்டின் விஞ்ஞானிகளும் மேற்கு வர்ஜீனியா மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை விஞ்ஞானிகளும் சேர்ந்து ஆராய்ச்சி செய்து நீரில் அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பான PFOA அளவை அதிகரித்துக்கொண்டனர்.  அதாவது முதலில் நூறு கோடி துகள்களில் PFOA ஒரு துகளுக்கு மேல் இருந்தால் அது மாசுபடுத்தப்பட்ட நீர் என்று கணக்கிடப்பட்டது.  இப்போது நூறு கோடி துகள்களில் PFOA 150 துகள்கள்வரை இருக்கலாம் என்று டுபான்ட் கூறிக்கொண்டது.

பலாட் விடவில்லை.  அவர் நியமித்த நச்சுப்பொருள் ஆராய்ச்சியாளர்கள் (toxicologists) நூறு கோடி துகள்களில் 0.2 துகள்கள் மட்டுமே இருக்கலாம் என்று முடிவுசெய்தனர்.  ஆனால் மேற்கு வர்ஜீனியா மாநிலமோ டுபான்ட் வழக்கறிஞர்கள் மூவரை மாநிலச் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறைக்கு நியமித்தது.  அதில் ஒருவர் அந்தத் துறைக்கே அதிகாரப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.  டுபான்ட் ஆராய்ச்சியாளர்கள் முடிவுசெய்த 150 துகள்களையே மேற்கு வர்ஜீனியா மாநிலம் பாதுகாப்பான அளவாக எடுத்துக்கொண்டது.

பலாட் இன்னொரு யுத்தியைக் கையாண்டார்.  இம்மாதிரி மாசுபட்ட நீரைக் குடித்துக்கொண்டிருந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு தாங்கள் அந்த நீரைக் குடித்துக்கொண்டிருந்ததாக நிரூபித்தால் வாதியின் எல்லா வகை மருத்துவ சோதனைகளுக்கும் பிரதிவாதி பணம் கொடுக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தை மேற்கு வர்ஜீனியா நிறைவேற்றியிருந்தது.  மேலும், பின்னால் அந்த வாதி நோய்வாய்ப்பட்டாலும் பிரதிவாதியிடமிருந்து நஷ்ட ஈடு பெறலாம் என்றும் அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்தச் சட்டத்தின் உதவியால் பலாட் பலர் சேர்ந்து வழக்குத் தொடுக்கும் முறையில் (class-action suit) டுபான்ட் மீது மாநில நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதற்கிடையில் பலாட்டின் ஆராய்ச்சியைத் தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை தன்னுடைய சொந்த ஆராய்ச்சியை PFOA பற்றி நடத்தியது.  2002-இல் அது வெளியிட்ட அறிக்கையில் PFOA கலந்த நீரைக் குடிப்பவர்களுக்குத் தீமை விளையும் என்பதோடு (PFOA அதிலும் கலந்திருக்கிறது என்பதால்) டெஃப்லான் பாத்திரங்களை உபயோகிப்பவர்களுக்கும் கேடு விளையலாம் என்றும் கூறியிருந்தது.  ஒவ்வொரு அமெரிக்கனின் ரத்தத்திலும் ஐந்து துகள்கள் PFOA இருப்பதாகவும் கண்டுபிடித்தது.  இந்த உண்மை டுபான்ட்டிற்கும் 3M கம்பெனிக்கும் 1976-லேயே தெரிந்திருந்தது.  2000-த்திலேயே 3M PFOA தயாரிப்பதை நிறுத்திவிட்டது.  டுபான்டோ வட கரோலினா மாநிலத்தில் தனக்கென்று ஒரு சொந்தத் தொழிற்சாலை ஆரம்பித்து PFOA தயாரிப்பைத் தொடர்ந்தது.  இன்னொரு ரசாயனத்தை மாற்றாக உபயோகிக்க விரும்பவில்லை.  ஆனாலும் இறுதியாக டுபான்ட் ஏழு கோடி டாலர் இழப்பீட்டுத் தொகை கொடுக்க மட்டும் ஒப்புக்கொண்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை மூலம் PFOA கலந்த நீரைக் குடித்த 70,000 பேர்களின் உடல் நலத்தை ஆராய்ந்து அவர்கள் குடித்த நீருக்கும் PFOA –க்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பதை ஆராய ஒரு விஞ்ஞான ஆராய்ச்சிக் குழு நியமிக்கப்பட்டது.  ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குழு சம்பந்தம் இருப்பதாக அறிவித்தது.  அந்த முடிவிற்குப் பின் டுபான்ட் 2013-இல் PFOA-வை உபயோகிப்பதை நிறுத்தியது.  PFOA-விற்கு மாற்றாக டுபான்ட் உபயோகிக்க ஆரம்பித்த ரசாயனக் கலவையிலும் மனிதர்களுக்குக் கேடு விளைவிக்கும் தன்மை இருக்கிறதாம்.

ஃப்ளோரின் என்னும் தனிமத்திலிருந்து தயாரிக்கப்படும் ரசாயனக் கலவைகள் அனைத்திலும் மனிதர்களிடம் பல வியாதிகளை உண்டுபண்ணும் தன்மை இருப்பதாக 2015 மே மாதம் ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட 200 விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டனர்.  அமெரிக்காவிலும் சரி, உலகின் மற்ற நாடுகளிலும் சரி எத்தனை மக்களுக்கு PFOA பற்றியோ அம்மாதிரியான ரசாயனங்கள் பற்றியோ அவை மனிதனுக்கு எவ்வளவு கேடு விளைவிக்கலாம் என்பது பற்றியோ தெரியும் என்று தெரியவில்லை.

அடிப்படைத் தனிமங்கள் 120 தான்.  அவற்றிலிருந்து பல வகையான ரசாயனக் கலவைகள்  தயரிக்கிறார்கள்.  இவற்றில் பல மனிதர்கள் உபயோகிக்கும் பல பொருள்களில்  உபயோகப்படுத்தப்படுகின்றன.  மேலே சொன்னபடி பல கட்டுப்பாடுகள் இருக்கும் அமெரிக்காவிலேயே 60,000 ரசாயனப் பொருள்களில் ஐந்து மட்டும்தான் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.  இந்தியாவில் இந்த அளவுகூட கட்டுப்பாடுகள் கிடையாது.  அப்படி இருந்தாலும் லஞ்சம் கொடுத்து அரசு அதிகாரிகளை விலைகொடுத்து வாங்கிவிடுவார்கள்.

11-1436596887-4-non-stick-cookware

நான் வல்லமை வாசகர்களுக்குக் கூற விரும்புவதெல்லாம் டெஃப்லான் பாத்திரங்கள் எதையும் உபயோகிக்காதீர்கள் என்பதே.  அவை நமக்குத் தெரியாமலே நம் உடம்பில் பல வியாதிகளை உண்டுபண்ணக் கூடியவை.  தொண்ணூறுகளுக்கு முன்புவரை டெஃப்லான பாத்திரங்கள் புழக்கத்திற்கு வரவில்லை.  இப்போது பல கம்பெனிகள் உணவுப் பண்டங்கள் ஒட்டாத பாத்திரங்களை உற்பத்தி செய்கின்றன.  அவற்றையெல்லாம் வாங்கும் பழக்கத்தை நிறுத்துங்கள்.  மண் பாத்திரங்களும் இரும்புப் பாத்திரங்களும் மட்டுமே மனிதனுக்குக் கேடு விளைவிக்காதவை.  மண் பாண்டங்கள் உபயோகிப்பது நடைமுறை சாத்தியமல்ல.  ஆனால் இரும்புப் பாத்திரங்களையும் எவர்சில்வர் பாத்திரங்களையும் உபயோகிக்கலாமே.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.