Month: May 2016

  • ஒரு தாயின் நினைவு!  

    -ரா.பார்த்தசாரதி

    பண்டிகை நாட்களில் யாரோ
    உணவு கொடுத்து உதவுகிறார்கள்! 
    தலைவாழையில் விதவிதமான 
    உணவு வகைகள் பல… 

    வடையைப் பார்த்ததும்  பெரிய 
    மகனுக்குப் பிடிக்குமே என்றது மனசு! 

    மெல்லிய பூரியும், சப்பாத்தியும்
    மகளுக்குப் பிடிக்கும் என்றது மனசு! 

    இலையில் போட்ட பருப்பும், நெய்யும்
    பேரனுக்குப் பிடிக்கும் என நினைத்தது! 

    அப்பளம்  இளைய மகளுக்குப் பிடிக்குமே 
    என எண்ணியது  மனசு! 

    பால்பாயசம் மறைந்த கணவனுக்கு 
    மிகவும் பிடிக்குமே என்றது உள்ளம்! 

    இப்படி எல்லாவற்றையும் பார்த்துச் 
    சாப்பிடப்  பிடிக்காமல் தன் விருப்பங்களைத் தள்ளிவைத்து 
    நினைவலையில் நீந்திக்கொண்டு, தன்னலமற்ற தனிமரமாய் 
    முதியோர் இல்லத்தில்  வசிக்கிறாள்  ஓர்  தாய்! 

    தாய்மனம்  பித்து, பிள்ளைகள் மனம் கல்லு 
    யாவரும் அறிந்த  பழமொழியன்றோ!

     

     

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பிரபஞ்சம் எத்தனை பெரியது ?

     How big image -1

    [Click to view larger image]

    (கட்டுரை: 2)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++

    ++++++++++

    பிரபஞ்சம் சோப்புக் குமிழிபோல்

    விரிகிறது யார் ஊதி ?

    பரிதி மண்டலக் கோள்களை

    கவர்ச்சி விசை

    ஈர்க்கிறது யார் ஓதி ?

    சுருள் சுருளாய்

    ஆக்டபஸ் கரங்களில்

    ஒட்டிக் கொண்ட

    ஒளிமயத் தீவுகள் நகர்பவை

    கால வெளியினிலே !

    ஓயாத

    பாய்மரப் படகுகளின்

    உந்து சக்தியை

    அலைகள் எதிர்க்க மாட்டா !

    விலக்கு விசை விரிவுப் பயணத்தில்

    ஒளிமய மந்தைகள்

    சுழலும் சோப்புக் குமிழி !

    ++++++++++++++

    How big image -4

     

    “பிரபஞ்சத்தின் முழுத் தோற்றம் அது கொண்டுள்ள சக்தி மயமான அண்டப் பிண்டங்களின் கூட்டுத் தொகையை விடப் பெரியது !”

    ********

    பிரபஞ்ச மெய்ப்பாடுகளைத் தேடிச் செல்லும் நமது விஞ்ஞான விதிகள் எல்லாம் குழந்தைதனமாய் முதிர்ச்சி பெறாத நிலையில் உள்ளன ! ஆயினும் அவைதான் நமது ஒப்பற்ற களஞ்சியமாக உதவிடக் கைவசம் இருக்கின்றன !

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)

    கிறித்துவத் தேவாலயம் விஞ்ஞானிகளைச் சமயப் பகைவர்கள் என்ற தரத்தில் எடை போட்டிருக்கிறது ! ஆனால் பிரபஞ்ச ஒழுங்கமைப்பை உறுதியாக நம்பும் அவர்கள்தான் உண்மையான மதச்சார்பு மனிதர்கள் !

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

    இதுவரை வானியல் விஞ்ஞானிகள் காணாத பூர்வீக ஒளிமய மந்தையை (Galaxy), விண்வெளியில் ஊர்ந்து செல்லும் ஹப்பிள் தொலைநோக்கி நெடுந்தூரத்தில் படமெடுத்து அனுப்பியுள்ளது.

    டாக்டர் டேவிட் ஒயிட்ஹௌஸ் பி.பி.ஸி விஞ்ஞான பதிப்பாசிரியர் (ஜனவரி 16, 2004)

    விரியும் பிரபஞ்சம் [The Expanding Universe]

    ஹப்பிள் தொலைநோக்கி கண்ட பூர்வீக அகிலக் காலாக்ஸி

    2003 செப்டம்பர் முதல் நான்கு மாதங்கள் ஹப்பிள் தொலைநோக்கி தொடர்ந்து கூர்மையாய்ப் பார்த்து 2004 ஜனவரி 16 ஆம் தேதி பிரபஞ்ச விளிம்பிலே ஓரிடத்தில் படம் பிடித்து அனுப்பிய காலாக்ஸியின் பிம்பம் மகத்தானது ! அது பிரபஞ்சத் தேடல் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகிப் பிரபஞ்சத்தின் பரிமாணத்தை ஓரளவு துல்லியமாய்க் கணக்கிட ஓரரிய வாய்ப்பளித்தது ! 2003 செப்டம்பர் முதலே ஹப்பிள் விண்ணோக்கி விண்வெளியில் அக்குறியை நோக்கிக் கண்வைக்க ஏற்பாடு செய்தவர் வானியல் விஞ்ஞான ஆளுநர், ஸ்டீவன் பெக்வித் [Steven Beckwith Director Space Science Institute]. அவரின் குறிக்கோள் பிரபஞ்சத்தில் நெடுந்தூரத் துளை ஒன்றையிட்டு மிக மங்கலான பூர்வீகக் காலாக்ஸி ஒன்றை ஆராய வேண்டும் என்பதே ! அந்தப் பணியைத் துல்லியமாகச் செய்ய “ஹப்பிள் நெடுந்தூர வெளிநோக்கி” [Hubble Deep Field (HDF)] கருவி பயன்படுத்தப்பட்டது. ஹப்பிள் படமெடுத்த அந்த பூர்வ காலாக்ஸியின் ஒளிப் பண்பாடுகள், வாயுப் பண்டங்கள் ஆராயப் பட்டதின் மூலன் அதன் வயதைக் கணிக்கிட முடிந்தது. அந்த விண்வெளி இடத்தின் ஒளியாண்டு தூரம் [Distance in Light Years (ஒளி ஓராண்டில் செல்லும் தூரம்)] கணிப்பாகிப் பிரபஞ்சத்தின் அந்த விளிம்பின் தோற்ற காலம் கண்டுபிடிக்கப்பட்டது !

    asj

    பால்வீதி ஒளிமந்தை [The Milky Way Galaxy]

    பிரபஞ்சம் எத்தனை பெரிய வடிவம் உடையது ?

    யுக யுகமாகக் கேட்கப்படும் ஒரு கேள்வி “பிரபஞ்சத்தின் பரிமாணம் என்ன ?” என்பதே. அதன் பரிமாணத்தை அளப்பதற்கு எந்த அளவுகோலைப் பயன்படுத்துவது என்று இரண்டு வானியல் விஞ்ஞான வல்லுநர்கள் தர்க்கம் புரிந்தனர் ! ஒருவரின் பெயர் ஹார்லோ ஷேப்லி [Harlow Shapley]. இரண்டாமவரின் பெயர் ஹெர்பர் கெர்டிஸ் [Herber Curtis]. நடந்த இடம்: சுமித்ஸோனியன் கண்காட்சிக் கூடம், இயற்கை வரலாற்றுப் பகுதி அரங்கம். வாஷிங்டன். டி.சி. [Natural History Museum Smithsonian Institution Washington. D.C.] 1920 ஆண்டு ஏப்ரல் தர்க்கம் நிகழ்ந்த காலம். அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்புதான் அமெரிக்க வானியல் நிபுணர் எட்வின் ஹப்பிள் (1889-1953) காலாக்ஸிகளின் இயல்பான பண்பாடுகளை தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்து எழுதினார்.

    கால நீட்சி  [Time of Expansion]

    வளர்வேக நீட்சி [Accelerating Expansion]

    ஹெர்பர் கர்டிஸ் கூறியது: அகிலமானது (The Cosmos) பல்வேறு தனித்தனி பிரபஞ்சத் தீவுகளைக் (Islands of Universes) கொண்டது. அதாவது சுருள் நிபுளாக்கள் [Spiral Nubulae or Galaxy] என்பவை நாம் வாழும் பால்மய வீதி (Milky Way) காலாக்ஸிக்கும் வெகு தூரத்துக்கு அப்பால் இருக்கிறது என்னும் அனுமானத்தில் தர்க்கம் செய்தார். ஹார்லோ ஷேப்லி சொல்லியது: “சுருள் நிபுளாக்கள் என்பவை பால்மய வீதியின் வாயு முகில்களே.” அத்துடன் பரிதியின் இடத்தைப் பிரபஞ்சத்தை முழுமையாகக் கருதிப் பால்மய வீதியின் விளிம்பில் கொண்டு வைத்தார். ஆனால் கர்டிஸ் பரிதியை காலாக்ஸியின் மத்தியில் வைத்தார். கர்டிஸ் பிரபஞ்சத்தின் பேரளவைப் பற்றிக் கூறியது உண்மையாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது. ஆனால் பரிதியானது பால்மய வீதியின் மத்தியில் உள்ளது என்பது தவறென அறியப்பட்டது. ஷேப்லி கூறியபடி பால்மய வீதியின் விளிம்பில் பரிதி இருப்பது மெய்யென நம்பப் படுகிறது. அதே சமயத்தில் ஷேப்லி சொன்ன சிறிய பிரபஞ்சம் என்பது தவறாக ஒதுக்கப்பட்டது.

    உள் விரிப்பு நியதி [The Inflation Theory]

    எழுபத்தியைந்து ஆண்டுகள் கடந்து மீண்டும் தர்க்கம்

    பல்வேறு காலாக்ஸிகளைக் கண்டுபிடித்த பிறகு மீண்டும் 1996 ஆம் ஆண்டில் பிரபஞ்சத்தின் பரிமாணத்தின் மீது தர்க்கம் எழுந்தது. பிரபஞ்சத்தின் வயதுக்கும் அதன் பரிமாணத்துக்கும் ஓர் உடன்பாடு உள்ளது. இரண்டும் ஹப்பிள் நிலையிலக்கத்தின் (Hubble Constant) மூலம் கணிக்கப் பட்டவை. விண்மீன்கள் பூமியை விட்டு விலகிச் செல்லும் வேக வீதத்தை அறிந்து கொண்டு ஹப்பிள் நிலையிலக்கம் நிர்ணயமாகும். அதாவது காலாக்ஸி தொடர்ந்து மறையும் வேகத்தை அதன் தூரத்தால் வகுத்தால் வருவது ஹப்பிள் நிலையிலக்கம். அந்த நிலையிலக்கின் தலைகீழ் எண்ணிக்கை [Reciprocal of the Hubble Constant] பிரபஞ்சத்தின் வயதைக் காண உதவும். அப்போது தர்க்கத்தில் கலந்து கொண்டவர் சிட்னி வான் டன் பெர்க் (Sidney Van den Bergh) & கஸ்டாவ் தம்மன் (Gustav Tammann).

    ஹப்பிள் நிலையிலக்கம் [Hubble Constant]

    வானியல் நிபுணர் சிட்னி தன் தொலைநோக்கிக் கண்டுபிடிப்புகள் மூலம் பெரிய ஹப்பிள் நிலையிலக்க மதிப்பைக் (Hubble Constant: 80 km/sec/Mpc) (படத்தில் Mpc பற்றி விளக்கம் உள்ளது) கூறினார். அதாவது ஓர் இளைய வயது, சிறிய வடிவுப் பிரபஞ்சத்தை அவர் சான்றுகளுடன் விளக்கினார். ஆனால் கஸ்டாவ் தன் கண்டுபிடிப்புகள் மூலம் ஒரு சிறிய ஹப்பிள் நிலையிலக்கத்தை (சுமார்: 50 km/sec/Mpc) கணித்தார். அதாவது அவரது பிரபஞ்சம் பூர்வீகமானது ! பிரமாண்டமானது ! இவர்கள் இருவரது கணிப்பு எண்ணிக்கைகள் போதாத சான்றுகளால் உருவாக்கப் பட்டதால், அவரது கொள்கைகளும் முழுவதும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை !

    How big image -5

    பிரபஞ்சத்தின் முடிவான பரிமாணத் தீர்மானங்கள்

    கடந்த நூற்றாண்டுக் கண்ணோக்க முடிவுகளிலிருந்து, பிரபஞ்சத்தின் பரிமாண எல்லைகளை ஓரளவு வரையறுக்க முடியும். உலகிலே இருக்கும் ஆற்றல் மிக்க தொலைநோக்கிகளின் பதிவுகளை ஒழுங்கு படுத்தி ஆராய்ந்ததில், வானியல் வல்லுநர்கள் 10-12 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் காலாக்ஸிகளைப் பார்க்க முடிந்தது. (ஓர் ஒளியாண்டு = 6 டிரில்லியன் மைல் அல்லது 10 டிரில்லியன் கி.மீ.) ஆதலால் மனிதக் கண்ணோக்கு வானத்தில் (Human Vision Horizon) 24 (12+12) மில்லியன் ஒளியாண்டு விட்ட முள்ள பிரபஞ்ச வெளியை நாம் காண முடிகிறது !

    ஹப்பிள் விண்ணோக்கி மூலம் பரிதி மண்டலத் தோற்றம்

    ஆனால் அந்தப் பரிமாண பிரபஞ்சம் பூதளத்தில் நிற்கும் மனிதக் கண்களுக்கு மட்டுமே ஏற்ற முறையில் இருக்க முடியும். ஆனால் விண்வெளியில் நகரும் காலாக்ஸியில் ஒருவர் நின்று விண்வெளி விளிம்பைப் பார்த்தால் எத்தனை அளவுப் பேரளவு பிரபஞ்சம் தெரியும் என்பது அறியப் படவேண்டும். நிச்சயமாக நமது பூதள அரங்கிலிருந்து பார்க்கும் பிரபஞ்சத்தை விட, காலாக்ஸியில் நின்று பார்ப்பவருக்குப் பிரபஞ்சம் பேரளவு பெரிதாகத் தென்படும்.

    அத்தகைய “வீக்க நியதியை” (Inflation Hypothesis) எடுத்துச் சொன்ன எம்.ஐ.டி. நிபுணர் அலன் கத் (M.I.T.’s Alan Guth) தனது கருத்துக்கு விளக்கம் தந்தார். மிக இளமையான பிரபஞ்சம் தீவிரமாய் உப்பிப் பெருகியிருக்க வேண்டும் என்றார். அதாவது ஒப்புமையாகக் கூறினால் அணு வடிவிலிருந்த பிரபஞ்சம் ஒரு நொடியில் பலமடங்கு பெருத்துப் பந்தளவுக்கு பலூனாய் உப்பியது ! அத்தகைய அகில வீக்கம் ஒன்று ஏற்பட்டிருந்தால் நமது தற்கால உளவுச் சாதனங்களி லிருந்து ஒரு பேரளவுள்ள பிரபஞ்சத்தை எதிர்பார்க்கலாம் !

    கெப்ளர் விண்ணோக்கி

    பிரபஞ்சத்தின் குறைந்தளவுப் பரிமாணக் கணிப்பு என்ன ?

    அலன் கத்தின் வீக்க நியதியில் ஒரு பெரும் ஐயம் எழுகிறது ! அவ்விதம் கண்ணுக்குத் தெரியாமல் அகில வானுக்கு அப்பால், காலவெளித் தொடர்வாக (Space-Time Continuum) எழுந்த வீக்கம் ஒன்றா ? இரண்டா ? மூன்றா ? முன்னூறா ? மூவாயிராமா ? அல்லது முடிவில்லா எண்ணிக்கையா ? அந்த வினாவுக்கு விடை இல்லாத தால் அந்தக் கொள்கையும் தர்க்கத்துக்குள் வீழ்ந்தது. அந்த நியதி மெய்யானால் நமக்கு தெரியாமல் இருந்து, நம்மால் நிரூபிக்க முடியாத இன்னும் பல பிரபஞ்சங்கள் இருந்திட லாம் ! ஆனால் தற்போதுள்ள தொலைநோக்குச் சாதனங்களிலிருந்து விஞ்ஞானிகள் தீர்மானமாக அறிவது நாமிருக்கும் பிரபஞ்சத்தின் குறுக்களவு குறைந்தது 150 பில்லியன் டிரில்லியன் மைல்கள் ! அதாவது அதன் விட்டம் 25 பில்லியன் ஒளியாண்டுக்கு (25 Billion Light Years Diameter) மிகையாக இருக்கலாம் என்பதே !  விரியும் பிரபஞ்சத்தின் விளிம்பை எல்லையிட்டுக் கூறுவது துல்லியமாக ஒருபோதும் இருக்காது.  எல்லை இல்லாப் பிரபஞ்சத்தின் வடிவம் மாறிக் கொண்டே இருக்கும்.  முடிவில் பிரபஞ்சம் முற்றிலும் அழிந்து, புதியதோர் பிரபஞ்சம் உருவாகலாம் !

    பிரபஞ்ச அரங்கம்

    (தொடரும்)

    *********************

    தகவல் :

    Picture Credit : 1. Astronomy (August 21, 2007) 2. Universe 6th Edition (2002) 3. National Geographic Encyclopedia of Space (2005) 5. 50 Years of Space (2004)

    1. Astronomy Magazine : 50 Greatest Mysteries of the Universe (Aug 21, 2007)

    2. Universe By Roger Freedman & William Kaufmann III (2002)

    3. National Geographic Encyclopedia of Space By Linda Glover.

    4. The World Book Atlas By World Book Encyclopedia Inc (1984)

    5. Scientific Impact of WMAP Space Probe Results (May 15, 2007)

    6. BBC News – Hubble Obtains Deepest Space View By Dr. David Whitehouse, Science Editor (Jan 16, 2004)

    7.  http://www.pbs.org/wgbh/nova/space/how-big-universe.html  [November 11, 2000]

    8.  http://www.nasa.gov/audience/foreducators/5-8/features/F_How_Big_is_Our_Universe.html  [July 15, 2004]

    9. http://www.universetoday.com/37409/how-big-is-the-universe/    [August 15, 2009]

    10. http://www.space.com/24073-how-big-is-the-universe.html  [December 24, 2013]

    11. http://www.universetoday.com/113786/how-big-is-the-universe-2/  [August 14, 2014]

    12. https://youtu.be/5NU2t5zlxQQ  [How big is the Universe ?]  Video

    13. https://youtu.be/yaX4iGw-b_Y  [How large is the Universe]

    14. https://youtu.be/ndS3kIWrjk8

    15. https://en.wikipedia.org/wiki/Universe  [April 28, 2016]

    16. https://youtu.be/UoCcIXi2auw

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) May 7, 2016  [R-1]

    Attachments area
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கண்ணன் என் அன்னை…
    ———————————————

    அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்….
    ———————————————————-

    2a453a49-e705-461a-a2c7-30ff324e112e
    பள்ளிதனைக் கொண்டதால், பிள்ளை பெறுவதால்,
    வெள்ளலைப் பாற்கடல் உள்ளமால், -புள்ளேறும்
    கார்மேக வண்ணனும், ஓர்மகன் அன்னையும்
    நேர்நிகர் ஆவார் நமக்கு….

    மாதவன் கேசவன் மாலவன் மோகினி
    மா(து)அவன் சபரீசன் மாதாவாம் -ஆதலால்
    அன்னையென்(று) எண்ணி அணுகுவோரைக் காத்தருள்வான்
    தன்னையே கன்னையன் தந்து….
    ‘’பார்த்தனின் சாரதி பார்த்தன் பரிதவிக்க,
    கீர்த்தனை செய்தனன் கீதையை, -தீர்த்தம்
    திருவல்லிக் கேணி திகழ்பெரிய தெய்வம்
    திருத்துழாய்க் கண்ணனே தாய்’’….
    ——————————————————————————-

    சுகந்த துளசி சிலிர்க்க வலிமை
    மிகுந்த இருதோளில் பூணும் -முகுந்தன்
    நிதர்ஸனம் என்று நடப்போர் வழியை
    சுதர்ஸனம் காக்கும் சுழன்று….
    திருப்பாற்க் கடலில் திருவனந்தப் பாய்மேல்
    விருப்பாய்க் கிடக்கும் வரமே -திருத்துழாய்
    பூண்டெங்கள் ஸ்ரீவில்லிப் புத்தூர் பெரியாழ்வார்
    ஆண்டாள் மணந்தோய் அருள்….

    திருவிருந்த மார்பன் திருத்துழாய் மார்பன்
    மருவிருந்த மார்பன் மகனாய்ச் -சிறையில்
    கருவிருந்த மார்பன் தெருவிருந்த மண்ணை
    பெருவிருந்தாய் உண்ட புதிர்….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    முழங்கால் முடிச்சேறி மொட்டையிட்டு மாலை தொழுங்கால் துயரம் தொலையும் -விழுங்கிஆல் தன்னில் மிதந்த தவசுப்ர பாதனவன் முன்னில் அவிழும் முடிச்சு….

    ஹரிச் சுவடி
    —————-

    844b3be2-a7f2-4812-bd9f-0f08e6f1caf6

    அந்தரி அண்ணா கோவிந்தா
    ஆவுடை அப்பா கோவிந்தா
    இந்திர லோகம் கோவிந்தா
    ஈ கொசு எனக்கு கோவிந்தா
    உந்தன் மலையில் கோவிந்தா
    ஊர்வேன் புழுவாய் கோவிந்தா
    எந்த நாளுமே கோவிந்தா
    ஏகாந்த சேவை கோவிந்தா
    ஐந்து பொறிகட்கு கோவிந்தா
    ஐயமிட்டிடு கோவிந்தா
    ஒன்றி உரைப்போம் கோவிந்தா
    ஓம் நம நாரண கோவிந்தா….கிரேசி மோகன்….

    Share
  • அகத்தில் வைத்துப் பூசிப்போம்

    எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா 

    230c7ee8-a9f0-4f48-b2c7-42cd28a6da39

    பெற்றவளோ தவித்திருக்க பெருஞ்செலவில் ஊரழைத்து
    நற்றமிழும் மறந்துவிட்டு நாகரிகம் தனிலமர்ந்து
    சுற்றமெலாம் சூழ்ந்திருக்க சுவையாக விருந்தளித்து
    வெற்றிக் களிப்பிலவர் வீற்றிருந்து மகிழ்ந்திடுவார் !

    தான்சுமந்து பெற்றபிள்ளை தலைநிமிர்ந்து வாழ்வதற்கு
    தனக்குவரும் வலியனைத்தும் தாயேற்று நின்றிடுவாள்
    ஊணுறக்கம் தனைப்பாராள் ஒருகணமும் தனையெண்ணாள்
    தான்பெற்ற பிள்ளைதனை தரமாக்கத் துடித்துநிற்பாள் !

    பள்ளிசெல்லும் பிள்ளைபார்த்து துள்ளிநிற்கும் அவள்மனது
    கள்ளமில்லா மனத்துடனே கன்னமதில் கொஞ்சிடுவாள்
    பள்ளிவிட்டுப் பிள்ளைவரும் பாதைதனில் நின்றுஅவள்
    துள்ளிவரும் பிள்ளதனைத் தூக்கிடுவாள் அன்பொழுக !

    உச்சிமுகந்திடுவாள் ஊரார் கண்படா வண்ணம்
    குட்டியாப் பொட்டுவைப்பாள் குளிவிழும் அக்கன்னமதில்
    கட்டியணைத் தணைத்து கற்கண்டே எனவிழித்து
    தொட்டிலே இட்டபடி தூங்கத்தமிழ் பாடிநிற்பாள் !

    ஏங்கித் தவிக்கும்தாய் இதையெல்லாம் எண்ணுகின்றாள்
    எதையுமே மனங்கொள்ளா இருக்கின்றான் அவர்பிள்ளை
    தூங்காமல் கண்விழித்த தூயவளைப் பாராமல்
    துரையாக வாழ்ந்துகொண்டு தூரவைத்தான் தாயவளை !

    தாயவளோ காப்பகத்தில் தனையனையே நினைக்கின்றாள்
    தாய்மைநிறை அவளுள்ளம் தவியாகத் தவிக்கிறது
    தவிப்பறியா மனத்துடனே தனயனுமே இருக்கின்றான்
    தாய்மனதை நோகடித்து தாம்வாழ்தல் முறையன்றோ !

    காப்பகத்தில் தாயைவிட்டுக் களியாட்டம் நடத்துகின்ற
    கருணையில்லா உள்ளங்களே கடவுளுமை மன்னிக்கார்
    கர்ப்பத்தில் சுமந்தவளை கண்போலக் காத்தவளை
    கவலையிலே மூழ்கவிட்டு வாழ்வதுதான் முறையாமோ !

    நோய்வந்து படுக்கையிலே நூறுமுறை கண்விழித்து
    பாய்மீதும் படுக்காமல் பஞ்சணையில் உறங்காமல்
    கண்விழிக்கும் காலம்வரை கண்ணுறங்கா இருந்தவளை
    காப்பகத்தில் விட்டுவிட்டு கண்ணுறங்க மனம்வருமா !

    பரிசுபெற வேண்டுமென்று பலகனவு கண்டவளை
    உரிமையுடன் பாராமல் ஒதுக்கிடுதல் முறையாமோ
    கருவுற்ற நாள்முதலாய் பெற்றெடுக்கும் காலம்வரை
    எமைநினைத்து நின்றவளை ஏங்கவிடல் முறையன்றோ !

    அன்னைதனை அரவணையார் அகமகிழ வாழார்கள்
    அன்னையவள் அடிதொழுவார் அனைத்துமே பெற்றிடுவார்
    அன்னையது கண்ணீரால் அனைத்துமே அற்றுவிடும்
    அன்னையவள் தினமதனில் அவளாசி பெற்றுநிற்போம் !

    ஆர்மனதும் நோகாமல் வாழ்ந்துவந்த அன்னையவள்
    ஆருமற்ற வெறுமையிலே அழவிடுதல் முறயன்றோ
    அன்னைதினம் கொண்டாடும் அனைவருமே கேளுங்கள்
    அன்னையது மனம்மகிழ அகத்தில்வைத்துப் பூசிப்போம் !

    நோய்க்கு மருந்தாவாள்
    நொடியிலவள் விருந்தளிப்பாள்
    சேய்க்கு முகஞ்சுழியாள்
    சிந்தனையின் வித்தாவாள்
    ஆர்க்குமவள் உதவிடுவாள்
    அன்புநிறை மனமுடையாள்
    அகிலத்தில் அன்னையவள்
    அனைவருக்கும் தெய்வமாவாள் !

    Share
  • கீதாஞ்சலி கவிஞருக்கு ஒரு நினைவாஞ்சலி (7 மே 1861)

     

    க. பாலசுப்பிரமணியன்

    thahoor_2272119a

    வங்கத்தில் பிறந்த தங்கமொன்று
    சிங்கமென உருவெடுத்து வந்தது…
    அங்கமெல்லாம் இறையுணர்வை
    தங்கவைத்து இன்பம்கண்டது !

    இருளினிலும் ஒளியினிலும்
    இசையினிலும் அசைவினிலும்
    இமைகளின் நீர்கசிவினிலும்
    இறைவனின் நடைகண்டது !

    முத்துப் பனித்துளிகளிலும்
    முத்தான வியர்வைமழையினிலும்
    மூப்புடையோர் சிரிப்பினிலும்
    மூவுலகின் வளம்கண்டது!

    நாதங்களை காற்றில்நிறுத்தி
    நாசியிலே சுவாசித்தது;
    நாளங்களின் தாளங்களில்
    நானைக் கரைத்தது !

    விண்ணுலகின் விந்தைகளை
    மண்ணுலகின் கவலைகளை
    கண்ணுலகின் பார்வைகளில்
    சொல்லழகில் சமைத்தது !

    பேரழகு உள்ளிருந்தால்
    பெயரழகு நமக்கெதற்கு?
    பேரன்பில் தன்னைவைத்து
    பாரெல்லாம் அணைத்தது !

    வங்கம்பெற்ற தங்கமது
    பங்கமில்லா பாரதத்தை
    மங்கிவிடா சொற்களிலே
    மனங்களிலே வடித்தது!

    Share
  • உயிர் பிரிந்து போகும் காண்!

     

    திவாகர்

    755f9efe-8196-4e23-bb3e-1723b76204b1

    மழையே மழையே மனமகிழ்
    மழையே மிதமாய் மிதமாய்
    பெய்யும் மழையே சுகமாய்
    சுகமாய் பொழியும் மழையே
    பையப் பையப் பெய்கின்றாய்
    வையம் வாழ்த்தப் பொழிகின்றாய்
    பார்க்கப் பார்க்க பரவசம்
    பாரெல்லாம் நனைகின்றதே
    சிறகு நனைக்கும் பறவைகளோடு
    பறந்து திரிந்து மழையுனூடே
    பரந்துகிடக்கும் வான்வெளியில்
    வரும்நீர் பருகத் தோன்றுதே

     

    பச்சை மரங்கள் அசைந்தாட
    இச்சைகொண்ட இலைகள்மேல்
    வலியும்தெரியா உணர்வுடனே
    வலுவில்லாமல் விழுகின்றாய்
    கருப்பைநிறைந்த மேகங்களின்
    கருவினைத் திறந்துவெளிவந்த
    பிறந்தகுழந்தைக்கிணையாக
    மிருதுவாய் வந்து விழுகின்றாய்
    பூவெல்லாம் கூட இதழ்தாங்கி
    சாவகாசமாய் கீழனுப்பி
    பூமித்தாய்க்கு பாரமிலாமல்
    சாமிதந்த வரம்போல
    வருத்தம்தராமல் பொழிகின்றாய்
    கருமேகத்தின் வண்ணம்கொண்ட
    குறும்புக்கண்ணன் அம்புகளாய்
    கரும்புத்தமிழ்மகள் கோதைசொல்படி
    சரங்களாய்மண்ணில் விழுந்துகொண்டு
    சரசரசடசடவென சப்தம்செய்து
    நிறைவாய் நித்தமும் பெய்கின்றாய்
    குறைகள்நிறைந்த பூவுலகில்
    குறையை நீக்கமுயல்கின்றாய்
    இறையும் இனிக்கப் பெய்கின்றாய்

     

    மறையாப்புகழ் கம்பனும்கூட
    இறையாய் உன்னைப்பாடினான்
    உப்புக்கடலுள் உள்ளேபாய்ந்து
    உப்பையெடுத்து உவர்ப்பைநீக்கி
    சிறப்பாய் செய்தநன்னீராக்கி
    வறுமையைப்போக்க பொறுப்புடனே
    மண்ணுலகமெல்லாம் உய்யப்பெய்த
    உன்னதமழையே உயர்ந்தமழையே
    என்னதவம் யாம் செய்தோமோ
    உன்னைப்பெறவே உலகத்தோரெலாம்

     

    ஒளியைப்பாய்ச்சும் நிலவுவேண்டாம்
    பளிச்சிடும்தோழன் மின்னலேபோதும்
    சுட்டெரிக்கும் சூரியனும் வேண்டாம்
    படபடவென முழங்கும் இடியேபோதும்
    கண்சிமிட்டும் தாரகைவேண்டாம்
    வண்ணம்காட்டும் வானவில்போதும்
    மழைத்தோழர்களே மழையோடுவாரும்
    விழாவெடுப்போம் வாழ்நாள்முழுதும்
    எங்கும்மழையால் பச்சைப்புற்களும்
    தங்கம்போல மின்னுகின்றனவே
    புல்லும்பூவும் மரமும்செடியும்
    நல்மழையால் நன்குசெழிக்கின்றதே
    மழையே நீயேஎம்தெய்வம்
    மழையே யாம்போற்றுகின்றோம்.

     

    அடடா என்ன இது.. ஏன் இப்படி
    படுக்கையிலிருந்து ஏன்விழுந்தேன்
    அடடே கனவும் ஏதும் கண்டேனோ
    சடசடவெனப்பொழிந்த மழைஎங்கே
    பளிச்சிட்டுவீசிய மின்னலெங்கே
    களிநடனத்தோசை இடியுமெங்கே
    சில்லென்ற சீரானகாற்றெங்கே
    அலகைநனைத்த அந்தப்பறவையெங்கே
    ஊரெல்லாம்சிறக்க உயர்வுதனைகொடுக்க
    சீராகப்பெய்தாய் எனக் கண்டதெலாம்
    கனவுதானா? பகலிலோர்கனவுதானோ
    கனவில்தான் சுகமானமழையோ
    கனவில்தான் மிதமானமழையோ
    கனவில்நான் கண்டதெல்லாம்பொய்யோ
    மாயைமழையில் நனைந்தேனா
    பொய்யாய்ப் பொழுதைக்கழித்தேனா

     

    சுட்டெரிக்கும் வெப்பமே சுடாதே
    சுடராய் கண்ணைப்பறிக்கும் சூரியனே
    இன்னும் எத்தனைநாள் இப்படித்தான்
    மன்னுயிரை மாய்ப்பாய் இங்கே
    அங்கேயும் எங்கேயும் பச்சைமரங்கள்
    எங்கள்கண்ணெதிரே கருகிப்போகுதே
    புல்லும்பூவும் காய்ந்துபோகுதே
    கல்லில் பாதம்பட்டு புண்ணாகுதே
    செய்தவமெல்லாம் வீணாகிப்போகின்றதே
    வெய்யிலே வாராமல் போய்விடு
    வெந்தணலில் துடிக்கவிடுவது நியாயமோ
    எந்தைமழையை எங்கேனும்கண்டால்
    கண்டவுடன் வரச்சொல்வீர் காத்திருப்போம்.
    வான்மழையின் ஒருதுளியேனும் இனியும்
    காணாதுபோனால் உயிர்பிரிந்துபோகும்காண்!
    —————————————————————————
    திவாகர்

     

    விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
    பசும்புல் தலைகாண் பரிது. (திருக்குறள்-16)

    (மேகத்திலிருந்து மழைத்துளி விழுந்தால் அல்லாமல் இவ்வுலகில் பசுமையான ஒரு புல்லின் நுனியையும் காண இயலாது)

    கூகிள் படத்திற்கு நன்றி.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    9c6604b1-74c1-4a53-845a-9c40dee81c70

    ”சோதரர்க்குள் பேதமற தூதுசென்ற யாதவனை
    சோதனையால் வேதனைநம் மீதணையும் -போதினிலே
    கீதையை மூதுரைத்த மாமதுரை மாதவனை
    ஆதிமது சூதனென்று ஓது”….

    ”சுதாமர் அவலுக்கு சொத்தை அளித்த
    உதாரகுணக் கண்ணன் உனக்கு -பிதாவாம்,
    அலர்மேல் அன்னை அகமுடையான் அன்பால்,
    மலரும்நாள் காசின் பிறப்பு’’….கிரேசி மோகன்….

    சுதாமர் -குசேலர்….

    Share
  • மக்கள் கேள்வி மேடை அழைப்பிதழ்

    பவள சங்கரி 

    91e3a5a0-ec6d-4132-bc8a-0988c99c4f5f

    வீடுதோறும் வாக்குகள் சேகரித்தீர்
    வீதிதோறும் வேட்பாளர் அணிவகுத்தீர்
    நகரெங்கும் வாக்குறுதிகள் வீசிச்சென்றீர்
    நாடு முற்றிலும் சுற்றியுரைத்தீர்
    தேடுதல் வேண்டியிங்கும் வாக்காளர்
    வாடுதல் காண்பீர் நன்னெஞ்சே
    கேடுதீர்க்கும் சொல்லின் சுடரேற்றி
    வாடுமனத்தின் வயிற்றுத்தீத் தணியத்
    தாமுணர்ந்து இரங்கி யிருப்போரை
    நாமுணர்ந்து வரவேற்கும் தருணமிது!

    ஈரோடு மாநகரில் வாக்காளர் – வேட்பாளர் சந்திப்பு! மூன்று கேள்விகள் உங்களுக்காக உயர்ந்து நிற்கிறது. வாருங்கள் தோழர்களே வாக்களிக்குமுன் வாக்குறுதி பெறுவோம்!

    வாக்காளர்களும், வேட்பாளர்களும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களும், வேட்பாளர்களும், சந்திக்கக்கூடிய மக்கள் கேள்வி மேடை எனும் இனிய நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை 7.5 2016 அன்று யாளி ரெசிடெண்சியில் நடைபெற உள்ளது. அது சமயம் தாங்கள் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களின் எண்ண பிரதிபலிப்புகளை தங்களுடைய பத்திரிக்கைகளின் வாயிலாக பொது மக்களைச் சென்றடையும் வண்ணம் பத்திரிக்கைத்துறை நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . ( 195 )

    அன்பினியவர்களே,

    இனிய வணக்கங்கள். இந்தவார மடலில் என் இதயம் தொடும் இனிய உணர்வினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அவாவுடன் உங்களை அண்மிக்கிறேன்.

    யார் நான் இவ்வுலகில் ஓர் உயிராக அவதரிக்க மூலகாரணமாக இருந்தவரோ, யார் என்னைக் கருவாக்கிய கர்த்தாவோ அவர், அதாவது என் தந்தை, அமரர் சக்திவேல் அவர்கள் இவ்வுலகில் அவதரித்தது நேற்று; அதாவது மே மாதம் 4-ஆம் திகதி.

    வருடங்கள் நூறாகிறது. ஆம், எனது தந்தையின் நூறாவது பிறந்தநாள்.

    பிறந்தது முதல் மறைந்தது வரை என் தந்தை சந்தித்த நிகழ்வுகள் பல. அவையனைத்தையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொண்ட ஓர் உன்னத இதயத்தின் சொந்தக்காரர் என் தந்தை. என் எழுத்துக்களின் ஆரம்பம் எங்கே என்பதைத் தேடிச் செல்லும்போது அதன் ஆரம்பத்தளிர்கள் என் தந்தை எனும் தோட்டத்தில் துளிர்த்திருப்பதே உண்மையாகும்.

    பிறந்தது முதல் மறைந்தது வரை அசைவமே உட்கொள்ளாத என் தந்தையின் குடும்பத்தில் அவரைத்தவிர அவரது மனைவி, குழந்தைகள் அனைவரும் அசைவ உணவுக்காரர்களாகவே இருந்தோம். ஆனால் உணவு, உடை, கல்வி, வாழ்க்கைத்துணைத் தெரிவு எனும் அனைத்திலும் எமக்குப் பரிபூரண சுதந்திரம் அளித்தவர் எனது தந்தை.

    யாழ்நகரில் ஒரு சாதாரண குடும்பத்தில் மூத்தவர் குழந்தைப் பிராயத்திலே தவறிப்போக, தலைப்பிள்ளையானார் என் தந்தை சக்திவேல். இரண்டு சகோதரிகளுக்கு மூத்தவரான இவர் என்ன பெரிய தலைவரா? சுதந்திரப் போராட்ட வீரரா? எழுத்தாளரா?கவிஞரா? இல்லை பெரிய அறிவாளியா?

    இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்திலே உதவித் தொழில்நுட்பவியலாளராக தனது சேவையைத் தொடங்கித் தனது கடின உழைப்பினால் நிறைவேற்றுப் பொறியிலளாராக கடமையாற்றி ஓய்வுபெற்ற அவர் எனது தந்தை எனும் தகுதியைத் தவிர வேறு எதையும் பெரிதாகச் சாதித்தவரல்ல.

    தந்தை எனும் பதத்தின் வரைவிலக்கணத்தை எனக்குப் போதித்தவர். தந்தை எனும் ஸ்தானத்தின் தாத்பரியத்தை உணர்த்தியவர். பொறுமைக்கோர் உதாரணமாகக் கண்முன்னே காணும் உதாரணமாகத் திகழ்ந்தவர் என் தந்தை.

    நான் பிறந்தது முதல் அவர் மறையும் வரை விளையாட்டாகக் கூட அவர் கைகள் என்னை தண்டித்ததேயில்லை. அவர் என்னை நோக்கிக் கடுமையான சொற்களை வீசிய கணங்களை ஒற்றைக் கையில் எண்ணி விடலாம். என்ன விதமான தவறிழைத்தாலும் அதனைத் திருத்தும் விதம் பொறுமையாக அறிவுரை கூறிவதில் அவருக்கு நிகர் அவரேதான்.

    என்றுமே எதையும் எவரிடமும் பெரிதாக எதிர்பார்த்தவரில்லை என் தந்தை. அவர் இதயத்தில் தன் வாரிசுகளின் எதிர்காலத்தைப் பற்றி என்ன கனவு கண்டிருந்தாலும் நாம் தேடிக் கொண்ட, எமக்குக் கிடைத்த வாழ்வினை மிகவும் மகிழ்வாக ஏற்றுக் கொண்டவர் என் தந்தை.

    அவர் வாயிலிருந்து எத்தனையோ பொன்மொழிகள் எத்தனையோ முறை கேட்டிருந்தாலும் அதை அப்போது புரிந்து கொள்ளமுடியாதவகை என் நெஞ்சினை வாலிபம் எனும் முறுக்கு மாயத்திரை கொண்டு மறைத்திருந்தது.

    இன்று என் எழுத்தில் தொனிக்கும் எத்தனையோ எழுத்துத்துளிகளைப் பொழியும் மேகத்தின் சொந்தக்காரர் என் தந்தை என்றால் அது மிகையாகாது. அவரது பணிவான சுபாவத்தை அவரது ஏமாளித்தனமாக எண்ணிக்கொண்டோர் பலருண்டு. ஆனால் அதை எப்போதும் பொருட்படுத்தியதில்லை. எதற்குமே ஒரு புன்னகையைப் பதிலாகத் தந்து விடுவார்.

    தான் எடுத்துக் கொண்ட பணியில் நேர்மையைக் கடைப்பிடிப்பார். செல்லும் பாதையில் அடுத்தவர் மனம் நோகக்கூடாது என்பதில் மிகுந்த கவனமெடுப்பார். தன் குடும்பம், தனது குழந்தைகள், மனைவி அனைவரும் மகிழ்வாக இருக்க வேண்டும் என்பதில் சிரத்தை எடுப்பார்.

    இன்றும் என் மனதில் பசுமையாக நிற்கும் நினைவொன்று… எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும். ஒரு சைக்கிள் விபத்தில் என் காலில் காயம் ஏற்பட, என்னைத்தூக்கிக் கொண்டு வீடு கொண்டு சென்றார்கள். ஓடோடி வந்த என் தந்தை என்னைத் தனது கைகளில் தாங்கிக் கொண்டார், அவரின் கண்களில் தெரிந்த கலக்கம் என்னை வாட்டியது.

    அக்காயம் ஆறுவதற்காக தொடர்ந்து ஏறத்தாழ ஒரு மாதம் எனக்கு பென்சுலின் ஊசி ஏற்றினார்கள். கதிரையில் என்னை உட்கார்த்தி, அக்கதிரையைத் தூக்கி காரில் வைத்து வைத்தியர் வீட்டில் தூக்கிக் கொண்டு செல்வார் என் தந்தை.

    பின்பு நான் ஒரு குழந்தைக்குத் தந்தையான பின்பும், லண்டனில் எம்மோடு வசிக்கும்போது எப்போதாவது என் முகம் வாடியிருந்தால், ” என்ன ராசா, உடம்புக்கு என்ன செய்கிறது?”என்பார் என் தந்தை.

    என்னைப் பொறுத்தவரை என் தந்தை சக்திவேல் ஒரு சகாப்தம். அவர் எனக்கு வாழ்வு மட்டும் தரவில்லை இன்று நான் யாராக இருக்கிறேன் என்பதற்கு அத்திவாரமாக இருந்தவர்.

    என் தந்தையின் நூற்றாண்டு வேண்டுகோளாக இந்தச் சகோதரன் உங்களிடம் வேண்டுவதெல்லாம் உங்கள் பெற்றோர் உயிரோடு இருப்பார்களானால் அவர்களின் பெருமையை, அவர்கள் உங்களுக்காக ஆற்றிய அரும்பெரும் சேவைகளை அவர்கள் வாழும்போதே போற்றி அவர்களுடன் மகிழுங்கள்.

    என் தந்தை குற்றமேதுமற்றவர் என்பதல்ல என கருத்து. அவரும் சாதாரண மனிதனே… எனது கண்களுக்குக் குறையாகத் தென்படாதது எல்லாம் நிறைவானது என்று வாதிடும் முட்டாளல்ல நான். ஆனால் அவர் என் தந்தை என்பதில் நான் பெருமை கொள்கிறேன். எனது பெயரில் உள்ள “சக்தி”சக்திதாசனில், சக்தியாகத் திகழ்வது அவரே!

    என் தந்தை மறைந்து இவ்வருடத்தோடு பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் எத்தனை, எத்தனை பதினெட்டு ஆண்டுகள் ஆனாலும் அவரின் நினைவுகள் என் இதயத்தில் இனிய ராகங்களை இசைத்த வணமே இருக்கும்.

    அப்பா எனும் ஒரு சொல்லில்
    இத்தனை அர்த்தங்களா?
    இத்தனையையும் அம்மூன்றெழுத்துக்களில்
    அடக்கியதால் தான் நீங்கள்
    சக்திவேல் ஆகினோர்களோ?
    நீங்கள் காட்டிய பொறுமை
    உங்களுக்கேயுரித்தான விவேகம் அப்பா!
    இவற்றில் ஓரிரு வீதமாவது
    என்னோடு இயைந்திட அருளுங்கள்!
    என் கைவிரலில் வலுவிருக்கும் நாள்வரைச்
    “சக்தி” எனும் உங்கள் ஆயுதம் எனக்கு
    ஓயாது எழுதும் சக்தியைக் கொடுக்கட்டும்!
    புவியில் நீங்கள் பிறந்து ஒருநூறு வருடங்கள்
    பறந்தே போயின அப்பா!
    நீங்கள் மறைந்து கூட பத்தோடு ஓரெட்டு அகவைகள் கடந்து போயின…
    உங்கள் நினைவுகளோடு பாதங்களைப் பணிந்து
    ஆசி வேண்டுகிறேன் அன்புத் தந்தையே!

    எனது அன்பு உறவுகளே ! எனது மனதில் நிழலாடிய இனிமையான உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிற அருமையான சந்தர்ப்பத்தையளித்த ’வல்லமை’ குழுவினரையும், எழுத்து எனும் பெயரில் நான் கிறுக்கும் அனைத்தையும் படிக்கும் அன்பு உள்ளங்களையும் எனக்கு அளித்தது இறைபதம் அடைந்தஎன் பெற்றோரின் ஆசிகளே என்பது உண்மையாலும், உங்கள் அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • ரைட் அபூர்வ சகோதரர்கள் யந்திர ஊர்தியில் முதலில் பறந்து நூறாண்டுகள்

    Space Rockets

    [1903-2003]

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


    மனிதனால் பறக்க முடியும் என்று சில ஆண்டுகளாக எனக்கொரு நம்பிக்கை பீடித்திருந்தது.  எனது நோய் தீவிரமாய் மிகுந்து,  அது என்னுயிரைத் தாக்கா விட்டாலும், விரைவாய்ப் பேரளவு நிதிச் செலவை உண்டாக்கியது.

    வில்பர் ரைட்

    ரைட் சகோதர்கள் நுணுக்க அறிவாளிகள். துல்லிய யந்திரத் திறமைசாலிகள். மூலக் காரணங்களை ஆழ்ந்து ஆராயும் கூரியச் சிந்தனையாளர்கள். விடா முயற்சி மிக்க கடின உழைப்பாளிகள். ஈடிணையற்ற சோதனையாளர்கள். தொழில் நுணுக்க மேதைகள். பறக்கும் ஊர்தியைப் படைத்து இந்தப் பூமியின் வரலாற்றையே மாற்றி விட்டவர்கள்.

    சார்லஸ் டால்ஃபஸ், ஃபிரென்ச் விமானச் சரித்திரவாதி [Charles Dollfus, French Aviation Historian]

    முன்னுரை: 2003 டிசம்பர் 17 ஆம் தேதி அமெரிக்கவின் வட கரோலினா கிட்டி ஹாக்கில் உள்ள கில் டெவில் கில் [Kill Devil Kill, Kitty Hawk, North Carolina] கடல்மேட்டுக் கரையில், நூறாண்டுகளுக்கு முன்பு 1903 டிசம்பர் 17 ஆம் தேதி ஆர்வில் ரைட் [Orville Wright] முதன்முதலில் பனிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து நிரூபித்த நிகழ்ச்சியை மறுமுறை அதேபோல் ஒரு மாடலைத் தயாரித்துப் பார்வையாளர்களுக்குச் செய்து காட்ட முயன்றார்கள்! அது ரைட் சகோதரர் கனவை, ஆழ்ந்த அந்தரங்க வேட்கையை மெய்ப்பித்த நிகழ்ச்சியை நினைவூட்டியதோடு, அமெரிக்க விடுதலைப் புத்துணர்ச்சியைப் புலப்படுத்துவதாகவும் தோன்றியது! சரித்திரப் புகழ்பெற்ற அந்தப் பனிரெண்டு வினாடிகள் உலக ஆகாயப் போக்குவரத்திலும், அண்டவெளிப் பயணத்திலும் மாபெரும் புரட்சியை உண்டாக்கி விட்டது! விண்வெளிப் பயணத்துக்கு விதையிட்ட சரித்திரத் தீரர்கள் ஆர்வில், வில்பர் ரைட் சகோதரர் களின் நினைவாக கிட்டி ஹாக், கில் டெவில் கில்லில் 1932 ஆம் ஆண்டு 60 அடி உயரமுள்ள கற்கோபுரம் ஒன்று 90 அடி மலை உச்சியில் கம்பீரமாக நிறுத்தப் பட்டுள்ளது.

    asj

    First Flight -1

    பறக்கும் யுகத்தைத் திறந்து வைத்த படைப்பு மேதைகள்!

    படைப்புக்குத் தேவை, ஆக்க உணர்வு ஒரு சதவீதம், வேர்வை சொட்டும் விடா முயற்சி தொன்னூற்றி ஒன்பது சதவீதம் என்று உலக ஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிஸன் கூறுகிறார்! படிக்காத, பட்டம் பெறாத தாமஸ் ஆல்வா எடிஸனைப் போன்ற நிபுணத்துவ உழைப்பாளிகளின் அணியில் வருபவர் ஆர்வில், வில்பர் ரைட் சகோதரர்கள். எடிஸனைப் போல் நூற்றுக் கணக்கான நூதனச் சாதனங்களைக் கண்டுபிடிக்கா வித்தாலும், பறக்கும் ஊர்தியை மட்டும் படைத்த ரைட் சகோதரரின் ஆக்கம் தரத்தில் எடிஸனின் படைப்புகளுக்கு நிகரானது! 1903 டிசம்பர் 17 ஆம் தேதி ஆகாயத்தில் பறந்த ரைட் சகோதரர்களின் ஆரம்ப வெற்றி நிகழ்ச்சியே, அறுபத்தி ஆறு ஆண்டுகள் கடந்து 1969 இல் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் அண்டவெளியில் பறந்து சந்திர மண்டலத்தில் தடம்பதிக்க அடிகோலியது! ஆர்வில், வில்பர் இருவரும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியைக் கூட முடிக்காமல், படிப்பை விட்டுத்தள்ளிச் சைக்கிள் மெக்கானிக்காகப் பணி புரிந்து வந்தவர்கள்!

    First Flight -2

    ajb

    முதன்முதலில் பறந்த கிட்டி ஹாக்கில் நூற்றாண்டுப் பாராட்டு விழா

    2003 டிசம்பர் 17 ஆம் தேதி கிட்டி ஹாக், கில் டெவில் கில்லில் சுமார் 35,000 பேர் நூறாண்டுப் பாராட்டு விழாவைக் கொண்டாடக் கூடியிருந்தனர். ‘ரைட் சகோதரர்களின் பறக்கும் விமானப் படைப்பு பரந்த இந்த உலகுக்குச் சொந்தமானது! ஆனால் அவர்கள் இருவரும் அமெரிக்காவுக்குச் சொந்தமானவர்கள் ‘ என்று ஆர்வில், வில்பர் ஆகியோரைப் புகழ்ந்து, கடல்கரைத் திடல் நூறாண்டு நினைவு விழாவில் உரையாற்றினார் அமெரிக்க ஜனாதிபதி புஷ். விமானியும், நியூயார்க் ராச்செஸ்டர் பொறியியற் பேராசிரியருமான கெல்வின் கோசெஸ்பெர்கர் 1903 இல் ரைட் சகோதரர் செய்த ஒற்றை எஞ்சின் இரட்டைச் சுழலி ஊர்தியின் மாடலை அக்காலப் பொருட்களில் அமைத்து, அவர்கள் முதலில் பறந்து பயின்ற முறைகளை மீண்டும் நிகழ்த்திக் காட்ட ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அம்மாடலை ஓட்டிக் காட்டுகையில் பெருமழை உண்டாகி ஏதோ பழுதுகள் ஏற்பட்டு, ஊர்தி தரை விட்டு எழுந்து பறக்க முடியாமல் முடங்கிக் கொண்டது! முதல் நிகழ்ச்சியைக் காண வந்திருந்த அனைவருக்கும், அத்தோல்வி ஏமாற்றத்தை உண்டாக்கியது. அடுத்து இரண்டாம் முறையாக மறுபடியும் அப்பணியை முயல்வதாகத் திட்டம் இருந்தது.

    First Flight -3

    அடுத்து சந்திரனில் கால்வைத்த இரண்டாவது விண்வெளி விமானி பஸ் ஆல்டிரின் [Buzz Aldrin], சினிமா நடிகர் ஜான் டிரவோல்டா [John Travolta] ஆகியோர் இருவரும் பேசினார்கள். ஜனாதிபதி புஷ் அடுத்து நாசா திட்டமிடும் புதிய சந்திரப் பயணத்தை, அக்கூட்டத்தில் அறிவிக்கப் போவதாக எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் புஷ் அன்று ஏனோ அதை வெளியிட விரும்பவில்லை!

    1903 டிசம்பர் 17 ஆம் தேதி முதலாக ஆர்வில் ரைட் எஞ்சின் ஊர்தியை இயக்கி 12 வினாடிகள் பூமிக்கு மேல் பறக்க முடிந்தது! அடுத்து வில்பரும், ஆர்விலும் அன்றைய தினம் மாறி மாறி நான்கு தடவைகள், பறந்து காட்டி, ஊர்தியின் பறப்பியல் திறனை நிரூபித்தார்கள். வில்பர் ரைட் முற்பட்ட மூன்றாவது இறுதி முயற்சியில், ஊர்தி 59 வினாடிகள் பறந்து 852 அடி தூரம் சென்றது! அம்மூன்று முதல் முயற்சிகளும் இருபதாம் நூற்றாண்டின் புதிய படைப்புச் சாதனையாக சரித்திரத்தில் இடம் பெறுகின்றன.

    First Flights -1

    வானில் பறக்க முயன்ற முன்னோடி வல்லுநர்கள்

    1783-1785 ஆண்டுகளில் பிளான்ச்சார்டு [Blanchard] போன்ற பிரென்ச் நிபுணர்கள் வாயு பலூன்களில் பறந்து காட்டினர்! 1804-1848 ஆண்டுகளில் ஜியார்ஜ் கேய்லி [George Cayley], 1842 இல் ஸாமுவெல் ஹென்ஸன் [Samuel Henson], 1894 இல் பிரிட்டிஷ் நிபுணர் ஹிராம் மாக்ஸின் [Hiram Maxin] ஆகியோரும் எஞ்சின் ஊர்தியை அமைக்க முன்னோடியாக முயன்றவர்கள். 1898 ஆம் ஆண்டு பிரேஸில் வல்லுநர் ஆல்பர்ட் ஸன்டாஸ் துமான்ட் [Alberto Santos-Dumont] எஞ்சின் இணைத்த வாயுக்கப்பலில் [Powered Airship] பறந்து சென்று பாரிஸ் ஐஃபெல் கோபுரத்தை நான்கு தடவைகள் சுற்றிக் காட்டினார்!

    Parts of an Air Plane

    ஆனால் 1891 ஆம் ஆண்டில் ஜெர்மெனியின் ஆட்டோ லிலியென்தால் [Otto Lilienthal] பறவையைப் போல இறக்கைகளைக் கொண்ட ஊர்திகளில் 2000 தடவை வெற்றிகரமாகப் பறந்ததாக அறியப்படுகிறது! ஆனால் 1896 இல் விமானக் கட்டுப்பாடு சீர்குலைந்து, ஊர்தி தரையில் விழுந்து லிலியென்தால் மாண்டு விட்டார்! பிரென்ச் அமெரிக்கரான ஆக்டேவ் சனூட் [Octave Chanute] ரைட் சகோதரர் காலத்தில் (1896-1901) பறக்கும் ஊர்திகளைப் பற்றி எழுதியும், முயன்று கொண்டும் இருந்தார். ஆக்டேவ் சனூட் எழுதிய ‘பறக்கும் யந்திரங்களின் வளர்ச்சி ‘ [Progress of Flying Machines] நூலே ரைட் சகோதரர்களுக்கு ஆரம்ப கால உதவிப் புத்தகமாக அமைந்தது. அவர்கள் சனூட்டுடன் தமது பறப்பியல் அனுபவ நுணுக்கங்களை அடிக்கடிப் பகிர்ந்து தொடர்பு கொண்டிருந்தனர்.

    First Flights -8

    ஆட்டோ லிலியென்தால்தான் ரைட் சகோதரர்களின் முதற் குரு! அவர்களது விமான வேட்கைக்கு முக்கிய காரணமானவர். ஆட்டோ லிலியென்தால் எழுதிய ‘பறப்பியல் பிரச்சனை, பறப்பியல் உந்து சோதனைகள் ‘ [The Problem of Flying & Practical Experiments in Soaring] என்னும் நூலும், ஸாமுவெல் லாங்கிலி எழுதிய [Samuel Langley] ‘பறப்பியல் யந்திரவியல் சோதனைகள், வாயு வளைபோக்கு ‘ [Experiments in Mechanical Flight & Aerodynamics] என்னும் நூலும், அவர்கள் 200 வித இறக்கைகளைச் சோதிக்க செய்த ‘புயல் குகைச் ‘ [Wind Tunnel] சோதனைகளுக்கு உதவின.

    First Flights -16

    வான மண்டலத்தில் பல ஆண்டுகளாய்ப் பறக்க முயன்ற பல மேதைகள் தோல்வி யுற்ற போது, ரைட் சகோதரர்கள் மட்டும் முதலில் வெற்றி பெற்றதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன! முதல் முதலாக இறக்கை ஊர்திப் பறப்பியல் பயிற்சி முறையில் ‘முன்னுந்தல் ‘ [Thrust], ‘மேலெழுச்சி ‘ [Lift], ‘திசைதிருப்பி ‘ [Rudder] எனப்படும் ‘முப்புற உந்தல் கட்டுப்பாடு ‘ நுணுக்கத்தைக் கையாண்டவர்கள், ரைட் சகோதரர்கள். இரண்டாவது ஊர்திக்கு முன்னுந்தல் ஆற்றலைத் தருவதற்கு ஆயில் எஞ்சினைப் புகுத்தி அதிக வேகத்தை அளித்தனர். மூன்றாவதாக 1900-1903 ஆண்டுகளில் ஆர்வில், வில்பர் இருவரும் ‘புயல் குகை ‘ [Wind Tunnel] ஒன்றைத் தயாரித்து 200 விதமான இறக்கைகளைச் சோதித்துத் தகுதியான வாயு வளைபோக்குள்ள ஒன்றைத் தேர்ந்தெடுத்தனர்.

    Space Shuttle

    விண்வெளி மீட்சி ஏவுகணை

    அமெரிக்கா வட கரோலினா கிட்டி ஹாக்கில் [Kitty Hawk, North Carolina] 1903 டிசம்பர் 17 ஆம் தேதி ஆர்வில் ரைட் 12 H.P. ஆற்றல் கொண்ட பெட்ரோல் எஞ்சின் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் ஆகாயத்தில் 30 mph வேகத்தில் 59 வினாடிகள் 852 அடி தூரம் பறந்து காட்டிச் சரித்திரப் புகழடைந்தார்! 1901 ஆம் ஆண்டில் மார்க்கோனி ரேடியோத் தொடர்பை முதலில் நிரூபித்துக் காட்டியபின், இருபதாம் நூற்றாண்டின் மகத்தான இரண்டாவது சாதனையாக 1903 இல் ரைட் சகோதரரின் வான ஊர்திப் பறப்பு கருதப்படுகிறது!

    Jumbo Jets

    நவீன ஜம்போ ஜெட் விமானம்

    நவீன உலகில் விமானப் போக்குவரத்துகள் விருத்தியும் பெருக்கமும்

    1904, 1905 ஆண்டுகளில் ரைட் சகோதரரின் பறக்கும் ஊர்தி பல முறையில் முற்போக்காகி மேன்மைப் படுத்தப்பட்டு, 1908 இல் அமெரிக்க ஈரோப்பிய விமானப் போக்குவரத்துகள் சீராக ஆரம்பமாயின. முதல் உலகப் போரில் [1914-1918] வானிலிருந்து குண்டு போட முதன்முதல் விமானங்கள் பயன்படுத்தப் பட்டன! 1939 முதல் சுழற்தட்டு எஞ்சின்கள் நீக்கப்பட்டு, கடந்த 50 ஆண்டுகளாக ஆற்றல் மிஞ்சிய ஜெட் எஞ்சின்கள் விமானங்களைத் இழுத்துச் செல்கின்றன! 1903 இல் ரைட் சகோதரர் ஊர்தி 600 பவுண்டு எடை கொண்டிருந்தது! தற்கால பூதவுருப் புறாவான 747 போயிங் ஜம்போ ஜெட் விமானம் 500 நபர்களை ஏற்றிக் கொண்டு, 350 டன் எடையைத் ஏந்திக் கொண்டு, மணிக்கு 580 மைல் வேகத்தில் பறந்து செல்கிறது!

    First Flights -5 Wright brothers -5

    ஒவ்வொரு நாளும் சுமார் 3 மில்லியன் பயணிகள் ஆகாய விமானத்தில் பறந்து செல்கிறார்கள்! 2002 ஆண்டில் மட்டும் 1.3 பில்லியன் நபர்கள் விமானங்களில் பயணம் செய்துள்ளதாகத் தெரிகிறது! அந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 4% வீதம் இப்போது மிகையாகி வருகிறது! விமானப் பயணத்தின் சிறப்பு பெருகி வரும் சமயத்தில், சென்ற 100 ஆண்டுகளில் விமானங்கள் பழுதாகி விழுந்து தகர்ந்து போய் 46,000 பேருக்கு மேற்பட்டு மரணம் அடைந்துள்ளனர்! ஆயினும் மக்கள் விமானப் பயணத்திற்குப் பயந்தது போய் அவற்றைப் புறக்கணிதாகவும் தெரியவில்லை!

    Moon Rocket Saturn

    நிலவுக்கு மனிதர் தடம் வைக்க ஏற்றிச் சென்ற ராக்கெட்

    கடந்த பல வருடங்களாக மணிக்கு 185 டன் எடையுடன் 1200 மைல் வேகத்தில், 140 பேர் பயணம் செய்யும் ‘ஒலி மீறிய ஜெட் ‘ [Supersonic Jet] விமானங்களைப் பிரிட்டனும், பிரான்சும் ஈரோப்புக்கும் அமெரிக்கவுக்கும் இடையே அனுப்பி வந்தன. அவற்றில் பிரச்சனைகள், விபத்துகள் ஏற்பட்டுத் தற்போது நிரந்தரமாக நிறுத்தப் பட்டு விட்டன. 1965 இல் தயாரான அமெரிக்காவின் புதிய X-15 விமானம் பூமிக்கு மேல் 60 மைல் உயரத்தில், ஆறு மடங்கு ஒலி வேகத்தில் [Six times the Speed of Sound (Mach:6) (4380 mph)] பறந்து செல்கிறது! எதிர்காலத்தில் வரவிருக்கும் நாசாவின் ஸ்கிராம்ஜெட் விமானம் [NASA ‘s X-43C ScramJet Plane] 7 மடங்கு ஒலி வேகத்தில் [4800 mph] பாய்ந்து செல்லும் என்று அறியப்படுகிறது!

    Moon Landing

    இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் ஒரு சாதனையாக வரலாற்றில் இடம்பெறும், சந்திர மண்டல மனிதப் பயணத்துக்கு அடிகோலியவர் ரைட் சகோதரர்கள் என்பதை நினைத்துப் பார்க்கும் போது, நமக்கு எல்லையிலா மகிழ்ச்சி உண்டாகிறது!

    Memorial

    தகவல்:

    1. A Century of Powered Flight, Wright Brothers ‘ Take-off Launched Modern Aviation 100 years ago

    [Dec 13, 2003].

    2. The Wright Brothers ‘How They Conquered the Air ‘ Invention & Technology [Fall 2003]

    3. Wilbur & Orville Wright By: Gary Bradshaw.

    4. Wright Brothers History: The Tale of Aeroplane.

    5. CBS News [Wright Re-Enactment Goes Wrong] (Dec 17, 2003)

    6. அமெரிக்காவில் பறந்த அபூர்வ சகோதரர்கள், சி. ஜெயபாரதன், கனடா [மே 30, 2002] திண்ணைக் கட்டுரைhttp://www.thinnai.com/sc0330021.html

    7. https://www.rqriley.com/wrights.htm

    8. https://en.wikipedia.org/wiki/Wright_brothers  [May 3, 2016]

    9.  http://www.outerbanks.com/wright-brothers-national-memorial.html

    10.  https://en.wikipedia.org/wiki/Wright_Brothers_National_Memorial

    [May 5, 2016]

    ************************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  May 5, 2016

    Share
  • வாக்காளப் பெருமக்களே

     
    மீ.விசுவநாதன்

    voter_1835206f

    பொய்யும் புரட்டும் செய்கின்ற
    பொல்லா தவரைத் தள்ளுங்கள் !
    கையும் வாயும் வேலைபெரும்
    கள்ளுக் கடையை மூடுங்கள் !
    ஐயா எனக்கு ஓட்டுயென
    அவர்கள் வந்து கேட்கையிலே
    செய்த செயல்கள் என்னவென
    சீறிப் பாய்ந்து கேளுங்கள் !

    சென்ற தேர்தல் சமயத்தில்
    ஜீப்பில் வந்த சீமானே
    மன்றம் போன பின்னாலே
    மறந்து போன தேனென்று
    நன்றாய் நாலு வார்த்தைகள்
    நறுக்கெனக் கேட்டு வையுங்கள் !
    ஒன்றும் கெட்டுப் போகாது
    உண்மை யாகப் பேசுங்ககள் !

    ஆற்று மணலை அள்ளியவன்
    கையில் நெருப்பைக் கொட்டுங்கள் !
    ஊற்றுக் கண்ணாம் ஊழலவர்
    முகத்தில் காறித் துப்புங்கள் !
    காற்றைக் கூட விற்கின்ற
    கயவரைத் துரத்தி யடியுங்கள் !
    நேற்று போல இன்றில்லை
    நிமிர்ந்து நேராய்க் கேளுங்கள் !

    தேசத் திற்காய் பணிசெய்ய
    தேர்ந்த மனிதர் வந்திடுவார் !
    காசுக் காகக் கைநீட்டா
    கருத்து மிக்கோர் வெல்வதற்கு
    காசு வாங்கா நல்லோராய்
    கடமை வாக்குத் தந்திடுவோம் !
    மாசு இல்லா பாரதத்தை
    மக்கள் நாமே அமைத்திடுவோம் !
    ( 05.05.2016)

    Share
  • நினைவு நல்லது வேண்டும் …. (5)

    முனைவர் சங்கரராமன்

    நல்லதையே நினைப்போம்!  

    Man on top of mountain. Conceptual design.

     

    ” எல்லாப் பதிவுகளும் நம்பிக்கை பற்றியே எழுதுறீங்களே . உங்கள் 5 நூல்களுமே நம்பிக்கை பத்திதான் சொல்லியிருக்கீங்க ?. நம்பிக்கை குறித்து சலிப்பே வராதா ?” சற்று முன்னர் நண்பர் ஒருவனுடைய அலைபேசி கேள்வி …நம்பிக்கையோடு அவரிடம் பேசிவிட்டு பின்னர் எழுத ஆரம்பித்துவிட்டேன் .

    சலிப்பை விரட்டவே நம்பிக்கையோடு எழுத தொடங்கினேன் . இந்த வாழ்வே அடுத்த நொடிக்கான நம்பிக்கையில்தானே நகர்ந்து வருகிறது .

    நீ பிறப்பதற்கு முன்னரே

    உன் தாயின் மார்பகங்களில்

    பாலினைச் சுரக்கச் செய்தவன்

    இறைவன்

    என்ற வரிகளை நாம் எங்கோ படித்திருக்கிறோம். பிறப்பதற்கு முன்னரே நாம் வாழ்வதற்கான நம்பிக்கையை இறைவனும் இயற்கையும் வழங்கியுள்ளது என்றால் நாம் நம்பிக்கையோடு இயங்க வேண்டுமல்லவா . இன்னமும் 10 ஆண்டுகள் கழித்து நிகழப்போகும் ஏதோ ஒரு நல்ல நிகழ்வுகளுக்காக ஓவ்வொரு வீட்டிலும் பணமும் குணமும் சேர்த்து வைப்பதே நம்பிக்கை தானே . அத்தனை எளிதல்ல நம்பிக்கையோடு எழுதுவதும் இயங்குவதும் . மனதிலே சலிப்பும் சோம்பலும் தோன்றிவிட்டால் நம்பிக்கை நம்மைவிட்டு வெளியேறி விடும் . இந்த முகநூலிலே நான் இதுவரை எழுதிய அத்தனையுமே நூலாக்கம் பெற்றுவருகின்றன . இதோ இப்போது உங்களிடம் பேசுவதை எழுதுகிறேன் . இதுவும் நூலாகவே வரும் . ” உங்கள் பேச்சு என் தற்கொலை எண்ணத்தை மாற்றியது ” என்ற வகையில் என்னைக் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு கதறிய பெரியவர் எனக்கு நம்பிக்கை வழங்கியவர் . தம்பி உங்கள் எழுத்துக்கள் என் தாத்தாவை நினைவூட்டியது என்றே கலங்கிய உறவுகள் , ” தயவுசெய்து நான் தரும் இந்த அன்புப் பரிசை வாங்கிக் கொள்ளுங்கள் ” என்றபடியே தினமலர் கட்டுரையை வாசித்து விட்டு சால்வை அனுப்பி வைத்த நெசவாள பெரியவர் எனக்கு நம்பிக்கை ஊட்டியவர்.

    ” இப்போது தைரியமாக பேசுகிறேன். உங்களுக்கு பரிசு அனுப்பியுள்ளேன் . பெற்றுக் கொள்ளுங்கள் ” என்று திக்குவாயோடு அவமானப்படுத்தப்பட்ட பெண் மேடை ஏறி பரிசு வாங்கிய தருணத்திலே நான் நம்பிக்கையை பெறுகிறேன் .

    ” உங்களுக்கு இங்கு வேலை வழங்க இயலாது . தகுதி இல்லை ” என்று சொல்லி வெளியே அனுப்பிய பள்ளிக்கே 6 ஆண்டுகள் கழித்து சிறப்பு அழைப்பாளாராக அழைக்கப்பட்டபோது எனது நம்பிக்கை எனக்கு முன்னால் நின்றது …

    வள்ளுவனையும் பாரதியையும் படித்த யாராலும் அத்தனை எளிதாக நம்பிக்கை இழப்பதில்லை . இன்னமும் எத்தனை நம்பிக்கை தருணங்கள் எனக்காக காத்திருக்கின்றனவோ என்ற நம்பிக்கையிலேதான் பயணப்படுகிறேன் . ஒவ்வொரு நாளும் புதிய சிந்தனைகளை விதைக்க முற்படுகையில் அது அவர்களுக்கான விதையாக எடுத்துக்கொண்டு அகமலர்ந்து நன்றி சொல்கையில் என் நம்பிக்கையை வணங்கி நிற்கிறேன்

    தினம்தோறும் மாணவர்களைச் சந்திக்கிறேன் . அவர்களைப்பற்றியே சிந்திக்கிறேன் . அவர்களிடம் பூத்துக்குலுங்கும் மகிழ்ச்சியும் சந்தோசமும் என் மேலான மரியாதை கலந்த நட்புறமும் இருக்கும் போது நமக்கென்ன கவலை வந்திடப்போகிறது . இயற்கையாகவே நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள் . அதை வெற்றி தோல்வியாக பிரிக்காதீர்கள் . வெற்றி என்று நாம் கொண்டாடி மகிழ்ந்த தருணங்கள் பிற்காலத்தில் நமக்கு பல கசப்பான அனுபவங்களைத் தரலாம் . தோல்வியாக நினைத்த பலவும் மிகச்சிறந்த அனுபவத்தை தரும் . வரும் அனைத்தையும் நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள் . தினமும் நாம் சந்திக்கும் எளிய மனிதர்களைக் கவனியுங்கள் . எத்தனை பெரிய நம்பிக்கைகளை நமக்குள்ளே விதைத்துச் செல்கிறார்கள். எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும் . அதை மட்டுமே தேடி வாழ்வைத் தொலைத்து விடாதீர்கள்!

    தொடருவோம்

    Share
  • இன்னம்பூரான் பக்கம்: III:6 இந்திய தணிக்கைத்துறையும், நானும்[6]

    மானம் பறக்குது !

    இன்னம்பூரான்

    b4904e24-d17b-4131-93b9-9c2046fd0a0e

    ஒரு பென்சில் தயாரிக்கும் கம்பெனி. போர்டு தீர்மானம் போட்டு, அதன்படி ஒரு யானை வாங்கினார்கள். கம்பெனி ஆடிட்டர் போர்டு தீர்மானம் இருப்பதால் டிக் அடித்து விட்டார். அது கவர்மெண்ட் கம்பெனி. ஆடிட்டர் ஜெனரல் காரன் விடாப்பிடியாக பென்சில் கம்பெனிக்கு யானை எதற்கு என்று துளைத்து எடுத்து விட்டான்.

    அந்த மாதிரி இந்த அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் விவகாரம் இந்தியாவின் மானத்தை பறக்க வைத்து விட்டது. ஹிந்து இதழில் தெரிவித்த ஆசிரியர் கருத்தின் சாராம்சம்: நாடாளும் மன்றத்தில் இந்த ஊழலை பற்றி பேசியது எல்லாம் பொருளற்றவை. இத்தாலிய்ன் கோர்ட்டில் இந்திய ராணுவத்தில் லஞ்ச லாவண்யம் அலசப்பட்டது. சோனியா போன்ற பிரமுகர்களை பற்றி குறை காணப்பட்டது என்றாலும், அவை ருசுவாகாத குற்றங்கள். ஆனால் நாம் அவற்றை தீவிரமாக விசாரிக்கவேண்டும். அந்த கட்டுரையின் மீது நான் எழுப்பிய வினாக்கள்: (1) ஸோனியா போன்றோர் ஒரு பிரமாணபத்திரம் தாக்கல் செய்யலாமே, பார்லிமெண்ட்டில் குய்யோ முறையோ என்று கூவாமல்.

    (2)இந்த விமானங்கள் ராணுவ உபயோகத்தை முன்னிட்டு ஆர்டர் செய்யப்படவில்லை. அரசியல் தலைவர்கள் உயர பறக்க ஒரு எல்லை வகுத்து, அதற்கு, இந்த கம்பேனி மட்டும் லாயக்கு என்றல்லவா செயல்பட்டார்கள். இந்த குட்டை ஏன் ஒரு ஊடகமும் எழுப்பவில்லை? நோ ரிப்ளை !

    இப்போது, நாக்கைப் பிடுங்கிகிறாப்போல ஆடிட்டர் ஜெனெரல் இரண்டு வருடங்கள் முன்னால் கேட்ட பத்து கேள்விகளையாவது பார்ப்போம்.

    ஆரம்பித்திலிருந்து ராணுவ இலாக்கா விதிகளை ஏன் மீறின?

    இந்த ஹெலிகாப்டர்கள் எத்தனை உயர பறக்க வேண்டும் என்ற நிர்ணயத்தை , இந்த ஒரு கம்பெனி மட்டுமே தரக்கூடும் என்ற செயற்கை நிர்ணயம் ஏன் வகுத்தீர்கள்?

    ராணுவத்தின் தேவைகளுக்கு ஏற்ப இல்லாமல், விஐபி தேவைக்கு உகந்த டெண்டர் பொருளற்றதாக இருக்க செய்ததின் பின்னணி என்ன?

    விலை நிர்ணயம் தீர விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லையே, ஏன்?

    சோதனை ஓட்டங்கள் இந்தியாவில் தான் செய்யப்படவேண்டும் என்ற விதி ஏன் மீறப்பட்டது?

    விதி மீறி வெளி நாட்டில் செய்த பரிசோதனை ஓட்டங்கள் இந்த விமானங்களில் செய்ய்ப்படவில்லை. வேறு வகை விமானங்களில் செய்யப்பட்டன. ஏன்?

    விவகாரம் முற்றுவதற்குள் மூன்று விமானங்கள் வந்து சேர்ந்தன. ஏன்?

    ஊழல் விவகாரம் வெளிச்சத்தற்கு வந்த பின்னும், அந்த கம்பெனியுடம் பண விவகாரம் நீடித்தது.

    சிபிஐ ஆய்வு 2012லியே தொடங்கினாலும், ஏன் சூடு பிடிக்கவில்லை.

    சொல்லிக்றாப்லெ இல்லை! எங்கே எங்கே எல்லாம் ஏமாந்தோமோ? இது முதல் தடவை இல்லை. போஃபோர்ஸ் ஆடிட் ரிப்போர்ட்டில் ஜவானின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய விவகாரம் ஆடிட்டால் கேட்கப்பட்டது. பீரங்கியை தயார் செய்து குண்டு வைக்கும் பெட்டியை திறந்தால், அது காலி. அதற்குள் எதிரி நம் ஜவானை சுட்டுத்தள்ளி விடுவான். இந்த கேள்வியை ஆடிட் எப்படி எழுப்பலாம்? காசா? பணமா? என்றார்கள், வசூல் ராஜாக்கள்.🚁
    -#-
    படித்தது: ஆடிட் ரிப்போர்ட் + Printable version | May 4, 2016 7:50:29 PM | http://www.thehindu.com/opinion/editorial/editorial-on-debate-in-parliament-on-agustawestland-helicopter-deal-more-noise-than-light/article8533351.ece
    © The Hindu

    சித்திரத்துக்கு நன்றி:
    http://www.aircraftcompare.com/aircraft_images/382.jpg
    இன்னம்பூரான்

    Share
  • எஸ்.எஸ்.எம். சமுதாய வானொலிக்கு தேசிய விருது!

    வல்லமையின் மனமார்ந்த வாழ்த்துகள்!

    வணக்கம். இந்த இனிய தருணத்தில். நமது எஸ்.எஸ்.எம். சமுதாய வானொலிக்கு நடுவண் அரசு வழங்கும் 2016ம் ஆண்டிற்கான தேசிய விருது கிடைத்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    சமுதாய வானொலிகளுக்கான போட்டியில், அழிந்து வரும் கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் – பாரம்பரிய கலாச்சாரம் என்ற நிகழ்ச்சியில் தொல்கலைப் பயணம் என்ற தலைப்பில் பங்கு கொண்டு நமது அரசிடமிருந்து பெற்றுள்ளது என்பதனை மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    நன்றி,
    இப்படிக்கு,
    பு.மு. ஜாகீர் உசேன்
    நிலைய மேலாளர்
    எஸ்.எஸ்.எம். சமுதாய வானொலி

    52ad3c8b-4022-451e-8472-89484d0c7af6

    Share