இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . ( 195 )
அன்பினியவர்களே,
இனிய வணக்கங்கள். இந்தவார மடலில் என் இதயம் தொடும் இனிய உணர்வினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அவாவுடன் உங்களை அண்மிக்கிறேன்.
யார் நான் இவ்வுலகில் ஓர் உயிராக அவதரிக்க மூலகாரணமாக இருந்தவரோ, யார் என்னைக் கருவாக்கிய கர்த்தாவோ அவர், அதாவது என் தந்தை, அமரர் சக்திவேல் அவர்கள் இவ்வுலகில் அவதரித்தது நேற்று; அதாவது மே மாதம் 4-ஆம் திகதி.
வருடங்கள் நூறாகிறது. ஆம், எனது தந்தையின் நூறாவது பிறந்தநாள்.
பிறந்தது முதல் மறைந்தது வரை என் தந்தை சந்தித்த நிகழ்வுகள் பல. அவையனைத்தையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொண்ட ஓர் உன்னத இதயத்தின் சொந்தக்காரர் என் தந்தை. என் எழுத்துக்களின் ஆரம்பம் எங்கே என்பதைத் தேடிச் செல்லும்போது அதன் ஆரம்பத்தளிர்கள் என் தந்தை எனும் தோட்டத்தில் துளிர்த்திருப்பதே உண்மையாகும்.
பிறந்தது முதல் மறைந்தது வரை அசைவமே உட்கொள்ளாத என் தந்தையின் குடும்பத்தில் அவரைத்தவிர அவரது மனைவி, குழந்தைகள் அனைவரும் அசைவ உணவுக்காரர்களாகவே இருந்தோம். ஆனால் உணவு, உடை, கல்வி, வாழ்க்கைத்துணைத் தெரிவு எனும் அனைத்திலும் எமக்குப் பரிபூரண சுதந்திரம் அளித்தவர் எனது தந்தை.
யாழ்நகரில் ஒரு சாதாரண குடும்பத்தில் மூத்தவர் குழந்தைப் பிராயத்திலே தவறிப்போக, தலைப்பிள்ளையானார் என் தந்தை சக்திவேல். இரண்டு சகோதரிகளுக்கு மூத்தவரான இவர் என்ன பெரிய தலைவரா? சுதந்திரப் போராட்ட வீரரா? எழுத்தாளரா?கவிஞரா? இல்லை பெரிய அறிவாளியா?
இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்திலே உதவித் தொழில்நுட்பவியலாளராக தனது சேவையைத் தொடங்கித் தனது கடின உழைப்பினால் நிறைவேற்றுப் பொறியிலளாராக கடமையாற்றி ஓய்வுபெற்ற அவர் எனது தந்தை எனும் தகுதியைத் தவிர வேறு எதையும் பெரிதாகச் சாதித்தவரல்ல.
தந்தை எனும் பதத்தின் வரைவிலக்கணத்தை எனக்குப் போதித்தவர். தந்தை எனும் ஸ்தானத்தின் தாத்பரியத்தை உணர்த்தியவர். பொறுமைக்கோர் உதாரணமாகக் கண்முன்னே காணும் உதாரணமாகத் திகழ்ந்தவர் என் தந்தை.
நான் பிறந்தது முதல் அவர் மறையும் வரை விளையாட்டாகக் கூட அவர் கைகள் என்னை தண்டித்ததேயில்லை. அவர் என்னை நோக்கிக் கடுமையான சொற்களை வீசிய கணங்களை ஒற்றைக் கையில் எண்ணி விடலாம். என்ன விதமான தவறிழைத்தாலும் அதனைத் திருத்தும் விதம் பொறுமையாக அறிவுரை கூறிவதில் அவருக்கு நிகர் அவரேதான்.
என்றுமே எதையும் எவரிடமும் பெரிதாக எதிர்பார்த்தவரில்லை என் தந்தை. அவர் இதயத்தில் தன் வாரிசுகளின் எதிர்காலத்தைப் பற்றி என்ன கனவு கண்டிருந்தாலும் நாம் தேடிக் கொண்ட, எமக்குக் கிடைத்த வாழ்வினை மிகவும் மகிழ்வாக ஏற்றுக் கொண்டவர் என் தந்தை.
அவர் வாயிலிருந்து எத்தனையோ பொன்மொழிகள் எத்தனையோ முறை கேட்டிருந்தாலும் அதை அப்போது புரிந்து கொள்ளமுடியாதவகை என் நெஞ்சினை வாலிபம் எனும் முறுக்கு மாயத்திரை கொண்டு மறைத்திருந்தது.
இன்று என் எழுத்தில் தொனிக்கும் எத்தனையோ எழுத்துத்துளிகளைப் பொழியும் மேகத்தின் சொந்தக்காரர் என் தந்தை என்றால் அது மிகையாகாது. அவரது பணிவான சுபாவத்தை அவரது ஏமாளித்தனமாக எண்ணிக்கொண்டோர் பலருண்டு. ஆனால் அதை எப்போதும் பொருட்படுத்தியதில்லை. எதற்குமே ஒரு புன்னகையைப் பதிலாகத் தந்து விடுவார்.
தான் எடுத்துக் கொண்ட பணியில் நேர்மையைக் கடைப்பிடிப்பார். செல்லும் பாதையில் அடுத்தவர் மனம் நோகக்கூடாது என்பதில் மிகுந்த கவனமெடுப்பார். தன் குடும்பம், தனது குழந்தைகள், மனைவி அனைவரும் மகிழ்வாக இருக்க வேண்டும் என்பதில் சிரத்தை எடுப்பார்.
இன்றும் என் மனதில் பசுமையாக நிற்கும் நினைவொன்று… எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும். ஒரு சைக்கிள் விபத்தில் என் காலில் காயம் ஏற்பட, என்னைத்தூக்கிக் கொண்டு வீடு கொண்டு சென்றார்கள். ஓடோடி வந்த என் தந்தை என்னைத் தனது கைகளில் தாங்கிக் கொண்டார், அவரின் கண்களில் தெரிந்த கலக்கம் என்னை வாட்டியது.
அக்காயம் ஆறுவதற்காக தொடர்ந்து ஏறத்தாழ ஒரு மாதம் எனக்கு பென்சுலின் ஊசி ஏற்றினார்கள். கதிரையில் என்னை உட்கார்த்தி, அக்கதிரையைத் தூக்கி காரில் வைத்து வைத்தியர் வீட்டில் தூக்கிக் கொண்டு செல்வார் என் தந்தை.
பின்பு நான் ஒரு குழந்தைக்குத் தந்தையான பின்பும், லண்டனில் எம்மோடு வசிக்கும்போது எப்போதாவது என் முகம் வாடியிருந்தால், ” என்ன ராசா, உடம்புக்கு என்ன செய்கிறது?”என்பார் என் தந்தை.
என்னைப் பொறுத்தவரை என் தந்தை சக்திவேல் ஒரு சகாப்தம். அவர் எனக்கு வாழ்வு மட்டும் தரவில்லை இன்று நான் யாராக இருக்கிறேன் என்பதற்கு அத்திவாரமாக இருந்தவர்.
என் தந்தையின் நூற்றாண்டு வேண்டுகோளாக இந்தச் சகோதரன் உங்களிடம் வேண்டுவதெல்லாம் உங்கள் பெற்றோர் உயிரோடு இருப்பார்களானால் அவர்களின் பெருமையை, அவர்கள் உங்களுக்காக ஆற்றிய அரும்பெரும் சேவைகளை அவர்கள் வாழும்போதே போற்றி அவர்களுடன் மகிழுங்கள்.
என் தந்தை குற்றமேதுமற்றவர் என்பதல்ல என கருத்து. அவரும் சாதாரண மனிதனே… எனது கண்களுக்குக் குறையாகத் தென்படாதது எல்லாம் நிறைவானது என்று வாதிடும் முட்டாளல்ல நான். ஆனால் அவர் என் தந்தை என்பதில் நான் பெருமை கொள்கிறேன். எனது பெயரில் உள்ள “சக்தி”சக்திதாசனில், சக்தியாகத் திகழ்வது அவரே!
என் தந்தை மறைந்து இவ்வருடத்தோடு பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் எத்தனை, எத்தனை பதினெட்டு ஆண்டுகள் ஆனாலும் அவரின் நினைவுகள் என் இதயத்தில் இனிய ராகங்களை இசைத்த வணமே இருக்கும்.
அப்பா எனும் ஒரு சொல்லில்
இத்தனை அர்த்தங்களா?
இத்தனையையும் அம்மூன்றெழுத்துக்களில்
அடக்கியதால் தான் நீங்கள்
சக்திவேல் ஆகினோர்களோ?
நீங்கள் காட்டிய பொறுமை
உங்களுக்கேயுரித்தான விவேகம் அப்பா!
இவற்றில் ஓரிரு வீதமாவது
என்னோடு இயைந்திட அருளுங்கள்!
என் கைவிரலில் வலுவிருக்கும் நாள்வரைச்
“சக்தி” எனும் உங்கள் ஆயுதம் எனக்கு
ஓயாது எழுதும் சக்தியைக் கொடுக்கட்டும்!
புவியில் நீங்கள் பிறந்து ஒருநூறு வருடங்கள்
பறந்தே போயின அப்பா!
நீங்கள் மறைந்து கூட பத்தோடு ஓரெட்டு அகவைகள் கடந்து போயின…
உங்கள் நினைவுகளோடு பாதங்களைப் பணிந்து
ஆசி வேண்டுகிறேன் அன்புத் தந்தையே!
எனது அன்பு உறவுகளே ! எனது மனதில் நிழலாடிய இனிமையான உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிற அருமையான சந்தர்ப்பத்தையளித்த ’வல்லமை’ குழுவினரையும், எழுத்து எனும் பெயரில் நான் கிறுக்கும் அனைத்தையும் படிக்கும் அன்பு உள்ளங்களையும் எனக்கு அளித்தது இறைபதம் அடைந்தஎன் பெற்றோரின் ஆசிகளே என்பது உண்மையாலும், உங்கள் அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்!
மீண்டும் அடுத்த மடலில்…
அன்புடன்
சக்தி சக்திதாசன்