முனைவர் சங்கரராமன்

நல்லதையே நினைப்போம்!  

Man on top of mountain. Conceptual design.

 

” எல்லாப் பதிவுகளும் நம்பிக்கை பற்றியே எழுதுறீங்களே . உங்கள் 5 நூல்களுமே நம்பிக்கை பத்திதான் சொல்லியிருக்கீங்க ?. நம்பிக்கை குறித்து சலிப்பே வராதா ?” சற்று முன்னர் நண்பர் ஒருவனுடைய அலைபேசி கேள்வி …நம்பிக்கையோடு அவரிடம் பேசிவிட்டு பின்னர் எழுத ஆரம்பித்துவிட்டேன் .

சலிப்பை விரட்டவே நம்பிக்கையோடு எழுத தொடங்கினேன் . இந்த வாழ்வே அடுத்த நொடிக்கான நம்பிக்கையில்தானே நகர்ந்து வருகிறது .

நீ பிறப்பதற்கு முன்னரே

உன் தாயின் மார்பகங்களில்

பாலினைச் சுரக்கச் செய்தவன்

இறைவன்

என்ற வரிகளை நாம் எங்கோ படித்திருக்கிறோம். பிறப்பதற்கு முன்னரே நாம் வாழ்வதற்கான நம்பிக்கையை இறைவனும் இயற்கையும் வழங்கியுள்ளது என்றால் நாம் நம்பிக்கையோடு இயங்க வேண்டுமல்லவா . இன்னமும் 10 ஆண்டுகள் கழித்து நிகழப்போகும் ஏதோ ஒரு நல்ல நிகழ்வுகளுக்காக ஓவ்வொரு வீட்டிலும் பணமும் குணமும் சேர்த்து வைப்பதே நம்பிக்கை தானே . அத்தனை எளிதல்ல நம்பிக்கையோடு எழுதுவதும் இயங்குவதும் . மனதிலே சலிப்பும் சோம்பலும் தோன்றிவிட்டால் நம்பிக்கை நம்மைவிட்டு வெளியேறி விடும் . இந்த முகநூலிலே நான் இதுவரை எழுதிய அத்தனையுமே நூலாக்கம் பெற்றுவருகின்றன . இதோ இப்போது உங்களிடம் பேசுவதை எழுதுகிறேன் . இதுவும் நூலாகவே வரும் . ” உங்கள் பேச்சு என் தற்கொலை எண்ணத்தை மாற்றியது ” என்ற வகையில் என்னைக் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு கதறிய பெரியவர் எனக்கு நம்பிக்கை வழங்கியவர் . தம்பி உங்கள் எழுத்துக்கள் என் தாத்தாவை நினைவூட்டியது என்றே கலங்கிய உறவுகள் , ” தயவுசெய்து நான் தரும் இந்த அன்புப் பரிசை வாங்கிக் கொள்ளுங்கள் ” என்றபடியே தினமலர் கட்டுரையை வாசித்து விட்டு சால்வை அனுப்பி வைத்த நெசவாள பெரியவர் எனக்கு நம்பிக்கை ஊட்டியவர்.

” இப்போது தைரியமாக பேசுகிறேன். உங்களுக்கு பரிசு அனுப்பியுள்ளேன் . பெற்றுக் கொள்ளுங்கள் ” என்று திக்குவாயோடு அவமானப்படுத்தப்பட்ட பெண் மேடை ஏறி பரிசு வாங்கிய தருணத்திலே நான் நம்பிக்கையை பெறுகிறேன் .

” உங்களுக்கு இங்கு வேலை வழங்க இயலாது . தகுதி இல்லை ” என்று சொல்லி வெளியே அனுப்பிய பள்ளிக்கே 6 ஆண்டுகள் கழித்து சிறப்பு அழைப்பாளாராக அழைக்கப்பட்டபோது எனது நம்பிக்கை எனக்கு முன்னால் நின்றது …

வள்ளுவனையும் பாரதியையும் படித்த யாராலும் அத்தனை எளிதாக நம்பிக்கை இழப்பதில்லை . இன்னமும் எத்தனை நம்பிக்கை தருணங்கள் எனக்காக காத்திருக்கின்றனவோ என்ற நம்பிக்கையிலேதான் பயணப்படுகிறேன் . ஒவ்வொரு நாளும் புதிய சிந்தனைகளை விதைக்க முற்படுகையில் அது அவர்களுக்கான விதையாக எடுத்துக்கொண்டு அகமலர்ந்து நன்றி சொல்கையில் என் நம்பிக்கையை வணங்கி நிற்கிறேன்

தினம்தோறும் மாணவர்களைச் சந்திக்கிறேன் . அவர்களைப்பற்றியே சிந்திக்கிறேன் . அவர்களிடம் பூத்துக்குலுங்கும் மகிழ்ச்சியும் சந்தோசமும் என் மேலான மரியாதை கலந்த நட்புறமும் இருக்கும் போது நமக்கென்ன கவலை வந்திடப்போகிறது . இயற்கையாகவே நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள் . அதை வெற்றி தோல்வியாக பிரிக்காதீர்கள் . வெற்றி என்று நாம் கொண்டாடி மகிழ்ந்த தருணங்கள் பிற்காலத்தில் நமக்கு பல கசப்பான அனுபவங்களைத் தரலாம் . தோல்வியாக நினைத்த பலவும் மிகச்சிறந்த அனுபவத்தை தரும் . வரும் அனைத்தையும் நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள் . தினமும் நாம் சந்திக்கும் எளிய மனிதர்களைக் கவனியுங்கள் . எத்தனை பெரிய நம்பிக்கைகளை நமக்குள்ளே விதைத்துச் செல்கிறார்கள். எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும் . அதை மட்டுமே தேடி வாழ்வைத் தொலைத்து விடாதீர்கள்!

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *