மீ.விசுவநாதன்

voter_1835206f

பொய்யும் புரட்டும் செய்கின்ற
பொல்லா தவரைத் தள்ளுங்கள் !
கையும் வாயும் வேலைபெரும்
கள்ளுக் கடையை மூடுங்கள் !
ஐயா எனக்கு ஓட்டுயென
அவர்கள் வந்து கேட்கையிலே
செய்த செயல்கள் என்னவென
சீறிப் பாய்ந்து கேளுங்கள் !

சென்ற தேர்தல் சமயத்தில்
ஜீப்பில் வந்த சீமானே
மன்றம் போன பின்னாலே
மறந்து போன தேனென்று
நன்றாய் நாலு வார்த்தைகள்
நறுக்கெனக் கேட்டு வையுங்கள் !
ஒன்றும் கெட்டுப் போகாது
உண்மை யாகப் பேசுங்ககள் !

ஆற்று மணலை அள்ளியவன்
கையில் நெருப்பைக் கொட்டுங்கள் !
ஊற்றுக் கண்ணாம் ஊழலவர்
முகத்தில் காறித் துப்புங்கள் !
காற்றைக் கூட விற்கின்ற
கயவரைத் துரத்தி யடியுங்கள் !
நேற்று போல இன்றில்லை
நிமிர்ந்து நேராய்க் கேளுங்கள் !

தேசத் திற்காய் பணிசெய்ய
தேர்ந்த மனிதர் வந்திடுவார் !
காசுக் காகக் கைநீட்டா
கருத்து மிக்கோர் வெல்வதற்கு
காசு வாங்கா நல்லோராய்
கடமை வாக்குத் தந்திடுவோம் !
மாசு இல்லா பாரதத்தை
மக்கள் நாமே அமைத்திடுவோம் !
( 05.05.2016)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *