Month: May 2016

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    b27f401c-669f-4c16-907d-4a04b9629396

    ”முதலைவாய் சிக்கி மதகளிறு ஆதி
    முதலைவா வென்றைக்க மூன்றில் -முதலாய்
    கருடன் அமர்ந்து கஜேந்திரனைக் காத்த
    புருடனைப் போற்றல் பிழைப்பு’’….(1)

    ”அடிசறுக்கி ஆனை துடிதுடித்த போது
    நொடிக்கணக்கில் வந்தகால நேமி! -வடிவெடுத்து,
    ஆவென வாய்பிளந்த பாவத்தின் பற்களுற்றேன்
    ஆவன செய்யவா தேவு’’….(2)

    காலநேமி -சுதர்ஸன சக்கிரத்தான்….

    ”பீதாம் பர(ம்)அவிழ, போட்ட நகைசிதற,
    வேதப்புள் வாகனனை தோள்சுமந்து, -பாதாதி
    கேசம் குலுங்க, களிறுக்கன்(று) ஏகிய
    நேசனக் கேசவனை நம்பு’’….(3)
    ’’கூப்பிட்டால் ஆயர்க்காய்க், கூச்சலிட்டால் ஆனைக்காய்ச்,
    சாப்பிட்டால் நட்புக்காய்ச், சோர்வின்றிக் -காப்பிட்ட
    ராதை கரம்விலக்கிக், கீதை உரைநிறுத்தி,
    ஆதரவுக்(கு) ஓடும் அரி’’…(4)….கிரேசி மோகன்….

    Share
  • ”கண்ணா கனியவை நாற்பது’’…. (3)

     
    ’’விலக்க விருப்பம் , விரைந்து நெருங்கும்
    விளக்கம் தெளிவு விடியல் -கலக்கம்
    இனிநமக்(கு) இல்லைநாம் கண்ணனைப் போல
    தனிமரத் தோப்பில் திளைப்பு’’….(13)

    ’’திளைப்பாய், இளைப்பாய், களைப்பாய் புலனார்
    அலைக்கழிப்பால் ஆயுள் அடைப்பாய் -முலைப்பால்
    அருந்திட மீண்டும் அவனிக்கு வருவாய்
    திருந்திட ஏற்பாய் துறவு’’….(14)

    ’’துறவில் மரமாய், உறவில் கிளையாய்
    பிரிவில் கனியாய்ப் பழுத்து -நிறைவில்
    நிலைத்திருப்பாய் நெஞ்சமே ஞானக் கடலின்
    அலைக்கரத்தால் மண்தொட்(டு) அகன்று’’….(15)

    ’’அகன்று விரியும், அணுவாய்க் குறையும்
    உகந்த உறவில் உலவும் -புகன்ற
    மறைகளும் காணா மகத்துவம் நெஞ்ச
    அறைதனில் வாழும் அவன்’’….(16)

    ’’அவனால் அவனி, அவன்தான் புவனி
    அவனை அவனால் கவனி -அவனே
    வருவான் குருவாய் அறிவைத் தருவான்
    பெருவாய் பரம பதம்’’….(17)

    ’’பதப்பருக்கை பானை புசிக்கின்ற பூதம்
    முதற்கொண்டிங்(கு) எல்லாமே மாயை -எதற்காக
    அம்மா பசியென்றிங்(கு) ஆலாய்ப் பறக்கின்றாய்
    சும்மா இருக்க சுகம்’’….(18)….கிரேசி மோகன்….

    Share
  • நாளென வரும் வாள்!

    -மேகலா இராமமூர்த்தி

    மண்ணில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் ஒருநாள் மடியவேண்டியவையே; அதுவே இயற்கையின் நியதி. வாழ்வின் தன்மையை நன்குணர்ந்த சான்றோர் இதனையே ‘நிலையாமை’ (Impermanence; This concept is known as Anicca in Buddhism, and Anitya in Hinduism) என்ற பெயரால் சாற்றினர். இளமையும் செல்வமும் யாக்கையும் (உடல்) அழிவற்றது என்றெண்ணி இறுமாப்புக் கொள்வது பேதைமையுள்ளெல்லாம் பேதைமை!

    நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
    பெருமை உடைத்திவ் வுலகு
    என்றார் பொய்யில் புலவர்.

    நேற்றிருந்தவனை இன்றில்லை என்று ஆக்குவது உலகுக்குப் பெருமையளிக்கும் ஒன்றாக இருக்கலாம்; ஆனால் அவனையே நம்பியிருக்கும் அவனுடைய குடும்பத்தின் அவலநிலை பெருமைக்குரியதா…? இல்லை…அது வார்த்தைகளில் வடிக்கவியலாக் கொடுமையானது!

    தூணென நின்று தன்னைச் சார்ந்தோரைக் காத்தவன், படுக்கையில் படுத்தான்; தன்கேள் அலற இவ்வுலகையே விடுத்தான் என்று கூறும்படியான நிலையற்ற தன்மையுடையதுதானா இவ் வாழ்க்கை? ஆம்…என்கிறது நாலடியார். புல்லின்மேல் நிற்கும் நீர்த்துளியை யொத்ததே மானுட வாழ்க்கை என்பது நாலடியார் நவிலும் உண்மை. 

    புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
    இன்னினியே செய்க அறவினை – இன்னினியே
    நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
    சென்றான் எனப்படுத லால்
    . (நாலடியார் – 29)

    நாளது சின்மையும் இளமையது அருமையும் கருதித்தான் வாழ்வில் செய்யவேண்டிய நல்லறங்களையெல்லாம் உடனடியாகச் செய்துவிடச் சொல்லுகின்றனர் அறவுணர்வுடைய ஆன்றோர். நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்று நற்காரியங்கள் ஆற்றுவதை நாம் தள்ளிப்போட்டால் அவற்றைச் செய்வதற்கு நாளை நாமிருப்போம் என்பது என்ன நிச்சயம்? ’இன்னினியே (இப்பொழுதே) செய்க அறவினை’ என்று நாலடியார் நம்மை துரிதப்படுத்துவதுபோலவே, சிலப்பதிகாரக் கதை மாந்தனான மாடல மறையோனும் சேரன் செங்குட்டுவனிடம்,

    நாளைச் செய்குவம் அறமெனில் இன்றே
    கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்
    இதுவென வரைந்து வாழுநா ளுணர்ந்தோர்
    முதுநீர் உலகில் முழுவது மில்லை
    (சிலப்: நடுகல்: 179-182)

    என்று கூறி நல்வினையாற்றலின் அவசரத்தை – அவசியத்தை வலியுறுத்துகின்றான்.

    மரணம் என்றவுடனேயே நாம் எண்ணுவது மீளமுடியாத அல்லது மீண்டுவாராத வாழ்வின் இறுதிப்பயணம் ஒன்றைத்தான்! ஆனால் அதுமட்டுந்தானா சாவு? இல்லை! வாழ்வில் ஒவ்வொரு பருவத்தின் இறுதியுமே சாவுதான். குழந்தைப் பருவம் செத்துத்தான் நமக்கு வாலிபப் பருவம் பிறக்கின்றது. வாலிபம் செத்துத்தான் வயோதிகம் வருகின்றது. ஆனால் நாமோ உடலை உயிர்நீங்கிச் செல்லும் நிலை ஒன்றுக்குத்தான் அழுகிறோமேயன்றி தினந்தோறும் நாம் ஒவ்வொருவரும் செத்துக்கொண்டிருப்பதை அறியவுமில்லை; அதற்காக அழவுமில்லை என்று நம் அறியாமையைச் சுட்டிச்செல்கின்றது பௌத்தக் காப்பியமான குண்டலகேசி!

    பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் 
    காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
     
    மீளும்இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி
     
    நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ?
    (குண்டலகேசி – 9)

    சாவு குறித்த இப்பாடலின் சிந்தனை புதிதாய் மட்டுமின்றிப்  பொருத்தமானதாகவுமே எனக்குப் படுகின்றது.

    புவியில் பிறந்து, இன்பத்திலும் துன்பத்திலும் உழன்று, சலித்துப்போகும் மன்னுயிர்களுக்கு நிரந்தர விடுதலையளிக்கும் நாயகன் ஒருவன் இருக்கின்றான். அவனே யமபுரிக்குத் தலைவனான காலன். காலம் பார்த்திருந்து உயிர்களின் கதையை முடிப்பதில் வல்லவன் அவன். ’காலனும் காலம் பார்க்கும்’ என்று அவனுடைய பண்பைக் குவலயத்துக்கு உணர்த்தினார் கோவூர்கிழார் எனும் புலவர்பெருந்தகை. வேந்தனின் உயிரும் சாதாரண மாந்தனின் உயிரும் மறலிக்கு ஒன்றுதான்! கொல்லுவதில் சமரசத்தைப் பேணுவதில் அவனை வெல்லுபவர் யார்?

    கணக்கற்ற மனித உயிர்களைப் போரிலே கொன்றுகுவித்துக் காலனுக்குப் படையலிட்டுவந்த சோழவேந்தன் கிள்ளிவளவன் ஒருநாள் மாண்டுபோனான். அதனைக் கண்டார் ஆவடுதுறை மாசாத்தனார் எனும் அருந்தமிழ்ப் புலவர். மறலியிடம் மண்டியது சீற்றம் அவருக்கு! நனிபேதையும், (அடிமுட்டாள் என்று மக்கள்வழக்கில் சொல்லலாம்!) அறனற்றவனுமான மறலியே! யாரேனும் பசிக்கிறது என்று விதைநெல்லைச் சமைத்து உண்பார்களா? உன் உறுபசிக்கு உயிர்களைத் தட்டாது தந்துவந்தானே எங்கள் வளவன்! அவனையுமா உன் கோரப்பசி கொன்று புசித்தது? என்னே உன் விரகின்மை! பகைவர்க்குக் கூற்றாய்த் திகழ்ந்த எம் கொற்றவனைக் கொண்டனையே…இனி நின்னுடைய அழிபசி தீர்ப்போர் ஆர்? என்று சீறுகின்றார்.

    நனிபே தையே நயனில் கூற்றம்
    விரகின் மையின் வித்தட்டு உண்டனை
    இன்னுங் காண்குவை நன்வாய் ஆகுதல்
    ஒளிறுவாள் மறவரும் களிறும் மாவும்,
    குருதியும் குரூஉப்புனற் பொருகளத்து ஒழிய
    நாளும் ஆனான் கடந்தட்டு என்றுநின்
    வாடுபசி அருத்திய பழிதீர் ஆற்றல்
    நின்னோர் அன்ன பொன்னியற் பெரும்பூண்
    வளவன் என்னும் வண்டுமூசு கண்ணி
    இனையோற் கொண்டனை ஆயின்,
    இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே?  
    (புறம் – 227: ஆவடுதுறை மாசாத்தனார்)

    ஈதொப்ப, தம்முடைய அருமைத்தலைவன் பெருஞ்சாத்தன் மறைந்தான் என்றறிந்து அவன் ஊர்நோக்கி விரைந்தார் ஓர் வண்டமிழ்ப்புலவர். வளமிகு அவ்வூரில் வழியெங்கும் முல்லைமலர்கள் கொள்ளையாய் கொள்ளையாய்ப் பூத்துக்கிடந்ததைக் கண்டு உள்ளம் நொந்தார். அம் மணமலரை நோக்கி, ”முல்லையே! இல்லோரைப் புரந்துவந்த நல்லோனான எம் தலைவன் ஒல்லையூர் பெருஞ்சாத்தன் இறந்துவிட்டான். அதனால் ஒல்லையூரே ஆற்றொணாத் துயரில் அமிழ்ந்து கிடக்கின்றது. துயர்க்கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கும் இவ்வூரின் இளையோரும், வளையோரும் (பெண்கள்) உன்னை இப்போது பறித்துச் சூடப்போவதில்லை; மன்னனை நாடிவரும் பாணனும், பாடினியும் அவர்தமைப் புரப்போர் இன்மையால் உன்னைச்சூடி மகிழப்போவதில்லை. இந்நிலையில் நீ வீணே மலர்ந்திருப்பது யாருக்காக?” என்று மனங்கவன்று பேசுகின்றார் முல்லையிடம்!

    இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
    நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
    பாணன் சூடான் பாடினி யணியாள்
    ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
    வல்வேற்
    சாத்தன் மாய்ந்த பின்றை
    முல்லையும் பூத்தியோ வொல்லையூர் நாட்டே.
    (புறம் – 242: குடவாயிற்கீரத்தனார்)

    அமங்கலமான வேளையிலே மங்கலப் பொருள்களைக் காணும்போது மனிதமனத்தின் வேதனை மீதூருவது இயற்கையே போலும்!

    மனிதரின் வாழ்நாள் என்பது அவர் வாழுங்காலத்தை வைத்துக் கணக்கிடப்படுவது. காலம் என்பது நாள்களின் தொகுப்பால் நிர்ணயிக்கப்படுவது. வாழ்வில் புதிதாய் மலரும் ஒவ்வொரு நாளையும் மனிதர் உற்சாகத்தோடு தொடங்கவேண்டும் எனும் எண்ணங்கொண்டவன் பாரதிப் புலவன். அதனால்தான்,

    இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில் 
    எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
    தின்று விளையாடி இன்புற் றிருந்து வாழ்வீர் என்றான்.

    வாழ்வியல் அறிஞரான வள்ளுவரின் பார்வையோ வேறுவிதமானது. புதிதாய்ப் பிறக்கின்ற ஒவ்வொரு நாளும் நம் வாழ்நாளில் ஒன்றைக் கழித்துக்கொண்டே – அறுத்துக்கொண்டே வருகின்ற வாள்போன்றது என்பது அவரது எண்ணம்.

    நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈறும்
    வாளது உணர்வார்ப் பெறின்.
    (334)

    ஊக்கத்தோடு ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ள பாரதியின் வரிகளும், வாழ்வின் நிலையாமையை உணர்ந்து மனஅடக்கத்தோடு வாழ வள்ளுவமும் நமக்கு வழிகாட்டுகின்றன எனலாம்.

    அறிவியல் வளர்ச்சியும், மருத்துவச் சாதனங்களின் பயன்பாடுகளும் மிகுந்துவிட்ட இந்தத் தொழில்நுட்ப யுகத்தில்கூட மரணமிலாப் பெருவாழ்வை மானுடர்க்கு நல்கவல்ல மருந்துகள் ஏதும் இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை.

    ஆதலால், மாந்தர் செய்யவேண்டியதெல்லாம் வரையறைக்குட்பட்ட தம் வாணாளை வீணாளாகக் கழிக்காமல், பயனுள்ளதாய்க் கழிப்பதும், வாழ்ந்து மறைந்தபின்னும் தம் பீடும் பெயரும் நிலைக்கும்வண்ணம் வையத்தில் அருஞ்செயல்கள் ஆற்றிச்செல்வதுமே ஆகும். ’மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே’ என்ற வழுதியின் வாக்கும் இதனையே உறுதிசெய்கின்றது.

     

     

     

    Share
  • நாசாவின் அசுர விண்வெளி மீள்கப்பல்கள் புரிந்த அண்டவெளிப் பணிகள்

    aj

    Space Shuttle Launches Hubble Telescope

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear), கனடா

    ++++++++

     

     

     

     

    அண்டவெளி வேட்கையில் அமெரிக்கத் திட்டங்களின் இரண்டாம் கட்டம்!

    முதற் கட்டத்தில் விண்வெளி விமானி ஒருவர் ஓட்டும் மெர்குறித் [Project Mercury] திட்டம், அடுத்து இருவர் இயக்கும் ஜெமினித் [Project Gemini] திட்டம், மூன்றாவது மூவர் செல்லும் அபோலோ [Project Apollo] போன்ற திட்டங்கள் பல வெற்றிகரமாய் நிறைவேறிச் சந்திரன், செவ்வாய், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்களை ஆராய்ந்த பிறகு, நாசா [NASA] விண்வெளிப் படையெடுப்பின் அடுத்த கட்டத்தை ஆரம்பித்தது. இரண்டாம் கட்டத்தில் ஏழு நபர் பயணம் செய்யும் விண்வெளி மீள்கப்பல், கொலம்பியா [Space Shuttle, Columbia] 1970 இல் உதயமாகி, 1977 இல் உருவாகி, 1981 ஏப்ரல் 12 ஆம் தேதி அதைப் பயிற்சிப் பயணத்திற்கு அனுப்பி, புதிய விண்வெளி யுகத்தை நாசா திறந்து வைத்தது! கொலம்பியா மீள்கப்பல் இருபதாம் நூற்றாண்டு உருவாக்கிய ஓர் நூதனப் பறக்கும் வாகனம்! அது ஏவுகணை போல் [Missile] ஏவப்பட்டு, அண்டவெளிச் சிமிழ்போல் [Spacecraft] சுழல்வீதியில் [Orbit] சுற்றி வந்து, இறக்கை முளைத்த ஜெட் விமானம் போல் [Aircraft], தரைதொட்டு இறங்கும் முத்திறம் உடைய, ஓர் ஒப்பில்லா பொறி நுணுக்க யந்திரம்!

    மீள்கப்பல் ராக்கெட் முதுகில் ஏற்றப் பட்டு, பூமியின் சுழல்வீதியில் [Earth Orbit] சுற்றி வந்து, பணி முடிந்தபின் பூமிக்குச் சாதாரண ஊர்தி போல் மீளும் ஓர் சுமைதாங்கிக் கப்பல் [Cargo Ship]. மீண்டும் மீண்டும் பயன்படும் விண்வெளிப் பணிகளுக்காகவே, மீள்கப்பல் உருவாகி விருத்தி செய்யப் பட்டது. முதலில் தோன்றிய மெர்குரி, ஜெமினி, அபோலோ ஆகிய விண்சிமிழ்கள் யாவும் ஒருமுறை பயன்படுத்திய பின்பு உபயோகம் இல்லாமல், பின்னர் பொருட் காட்சியகத்தில் சரித்திர நினைவுச் சின்னங்களாய் ஓய்வு பெற்றன!

    விண்வெளி மீள்கப்பல் திட்டத்தின் குறிக்கோள்கள்

    விண்வெளி மீள்கப்பலின் சுமைதாங்கி அறை மிகவும் அகண்டது! அதில் ஐந்து ஆஃப்ரிக்க யானைகளை ஏற்றிக் கொண்டு விடலாம்! விண்வெளி ஆய்வகத்தைத் [Space Lab] தூக்கிச் செல்வது, அண்டவெளி நிலையத்திற்குப் [Space Station] பண்டங்கள் கொண்டு செல்வது, ஆய்வு செய்யும் பயணிகளை ஏற்றிச் செல்வது, பூமிச் சுழல்வீதியில் சுற்றி வரும் ஹப்பிள் தொலை நோக்கியைச் [Hubble Space Telescope] செப்பனிடுவது அல்லது புதுப்பிப்பது, செயலற்ற துணைக் கோள்களைக் [Satellites] கைப்பற்றிப் பூமிக்குக் கொண்டு வருவது, சுற்றி வரும் துணைக் கோள்களைப் பராமரிப்பது, அண்டவெளி ஆய்வகத்தில் ஆராய்ச்சிகள் நடத்துவது, அரசாங்கப் படைத்துறையின் உளவுப் பணிகளுக்கு [Military Missions] உதவுவது ஆகியவை குறிப்பிடத் தக்கவை.

    Space Shuttle -6

    திட்டப்படிக் கொலம்பியா [Columbia], சாலஞ்சர் [Challenger], டிஸ்கவரி [Discovery], அட்லாண்டிஸ் [Atlantis], என்னும் நான்கு மீள்கப்பல்கள் உருவாக்கப் பட்டு அண்டவெளியில் யாத்திரை செய்து வருகின்றன. 1980-1990 ஆண்டுகளுக் குள் இவை குறைந்தது ஆண்டுக்கு 50 பயணங்கள் வீதம் பணி புரியத் திட்டங்கள்! இவற்றில் சாலஞ்சர் 1986 இல் ஏவுதளத்தில் புறப்பட்டு ஏறும் போது வெடித்து விபத்துக்குள்ளாகி [Challenger Disaster] உள்ளிருந்த ஏழு விண்வெளி நிபுணர்களும் உயிரோடு வெந்து சாம்பலாயினர்! பிறகு சால்ஞ்சர் இடத்தைப் பூர்த்தி செய்ய எண்டவர் [Endeavour] மீள்கப்பல் அமைக்கப் பட்டது.

    விண்வெளி மீள்கப்பல் அமைப்பாடு சமயத்தில் அமெரிக்காவும், ரஷ்யாவும் பொறியியற் துறை நுணுக்கங்களைப் பரிமாறிக் கொண்டன என்பது மெச்சத் தகுந்த நிகழ்ச்சி! ரஷ்யாவில் 1978 இல் உதயமாகி, 1987 இல் மனிதரற்றுச் சுயக் கட்டுப்பாட்டில் ஏவப்பட்டு, 155 மைல் உச்சி வீதியில் சுற்றி 3:25 மணி நேரம் பயிற்சிப் பயணம் செய்து, வெற்றிகரமாய்ப் பூமிக்கு மீண்ட புரான் விண்வெளி மீள்கப்பல் [Buran Space Shuttle] ஏதோ ஒரு காரணத்தால் 1993 இல் தடைபட்டுப் பிறகு பயன்படுத்தப் படாமல் போனது! ஆனால் அமெரிக்கா தான் முதன் முதல் ஆக்கிய கொலம்பியா மீள்கப்பலை, ரஷ்யாவின் புரான் மீள்கப்பலின் பிரதியாக உருவாக்கிச் சில வேறுபாடுகளுடன் மாற்றி அமைத்தது!  ஐந்து அண்டவெளி மீள் கப்பல்கள் தயாரிக்கப்பட்டு அவற்றில் இரண்டு விபத்துக்குள்ளாகி, அனைத்து விமானிகளும் இறந்தனர்.  அவைகள் 1981 முதல் 2011 வரை 135 விண்வெளிக் குறிப்பணிகள் புரிந்து, மூன்று நிரந்தரமாய் ஓய்வெடுத்தன.  முக்கியப் பணிகள் : ஹப்பிள் தொலைநோக்கி ஏவியது; பல துணைக்கோள்கள் ஏவியது;   அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சாதனங்கள் கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கவை.

    Space Shuttle -5

    விண்வெளி மீள்கப்பல் கட்டமைப்பின் முக்கிய உறுப்புக்கள்

    கொலம்பியா மீள்கப்பல் 9 பில்லியன் டாலர் செலவில் ராக்வெல் கார்பொரேசன், பாம்டேல், காலிஃபோர்னியா [Rockwell Corporation, Palmdale, California] தொழிற் கூடத்தில் 1978 ஆண்டு உருவான விண்வெளி யந்திரம்! ஆரம்பத் தளச் சோதனைகள் முடிந்தபின், டிரைடென் பறப்பாய்வு மையகத்தில் [Dryden Flight Research Centre, Edwards California] அதன் பறப்பு முறைகள் யாவும் பயிற்சி செய்யப் பட்டன. ஏவு தளத்தில் நின்ற 187 அடி உயரமும், 2000 டன் எடையும் கொண்ட கூட்டமைப்பில் [Space Shuttle Assembly] இறக்கை யுள்ள சுற்று ஊர்தி [Winged Orbiter], எரித்திரவ வெளிக்கலன் [Liquid Fuel External Tank], எரித்திடவ இரட்டை ராக்கெட்டுகள் [Solid Fuel Twin Rockets] யாவும் ஒருங்கே இணைக்கப் பட்டிருந்தன. 154 அடி நீளமும் 29 அடி விட்டமும் கொண்டது, எரித்திரவ வெளிக்கலன். அதன் இருபுறமும் 150 அடி நீளம், 14 அடி விட்டமுள்ள ராட்சத ராக்கெட்கள்! விண்ணோக்கிய மூக்குடன் DC-9 ஜெட் விமானத் தோற்ற முடைய கொலம்பியா மீள்கப்பல், நீண்ட வெளிக்கலன் முதுகில் ஏறிக்  கொண்டிருந்தது.

    இரட்டை ராக்கெட்டுகள் அதி தீவிரமாய்ப் பற்றி எரியும் அலுமினியப் பொடியைத் [Aluminium Powder] திடக்கன எரிபொருளாய்ப் [Solid Fuel] பயன்படுத்தின. வெளிக்கலனில் திரவ ஹைடிரஜன் [Liquid Hydrogen 380,000 gallon], திரவ ஆக்ஸிஜன் [Liquid Oxygen 140,000 gallon] தனித்தனி கலன்களில் நிறைக்கப் பட்டிருந்தன. ராக்கெட் ஏவுதளத்தில் சுடப் படும் போது, இரண்டு திரவ வாயுக்களும் அதிக அழுத்தத்தில் கலந்து கனல் பற்றி, மீள்கப்பலின் பிரதம எஞ்சின் மூன்றும் இயங்கின. ஒவ்வொரு வினாடியும் 1000 பவுண்டு எரிதிரவம் எஞ்சின்களுக்குத் தேவைப்படுகிறது. மீள்கப்பல் பூமியின் சுழல்வீதியை நெருங்கும் முன்பே, வெளிக்கலன் காலியாகி அற்று விடப்பட்டு, வாயு மண்டல வெப்பத்தில் எரிந்து தூள் தூளாகிறது!

    விண்வெளி மீள்கப்பலின் சாதனங்கள், இயக்க முறைகள்

    மீள்கப்பலில் முன்புறம் கருவிகளை இயக்கும் விமானிகள், பல ஆய்வுச் சாதனங்கள், கட்டுப்பாடு செய்யும் மின்கணனிகள், மின்னியல் வன்கலன்கள் [Electronic Hardwares], நடுவே சுமை தாங்கும் கூடாரம், வால்புறத்தில் மூன்று பிரதம உந்து எஞ்சின்கள் யாவும் பொருத்தப் பட்டிருந்தன. 67 அடி நீளம், 15 அடி விட்டமுள்ள நடுக் கூடாரம் 29.5 டன் சுமையை விண்வெளிக்குத் தூக்கிச் செல்ல முடியும்! ஆனால் மீண்டும் பூமிக்கு இறங்கும் போது 14.5 டன் சுமையைத்தான் ஏற்றிக் கொள்ள முடியும்! சுமைதாங்கி அறையில் தொலைத் தொடர்பு [Communication], படைத்துறை [Military], வானியல் [Astronomical] ஆகியவற்றின் பணிகளைப் புரியும் துணைக்கோள்கள் [Satellites] சுழல்வீதி யிலிருந்து ஏவப்பட எடுத்துச் செல்லப்படலாம். மீள்கப்பல் பூமியின் சுழல்வீதியில் சுற்றி வரும் போது நுண்ணீர்ப்பு [Micro-gravity] என்று சொல்லப்படும் எடையின்மையை [Weightlessness] ஆராயலாம். நாசா பிற நாட்டினர் ஆய்வகங்களை ஏற்றிச் சென்று, விண்வீதியில் ஏவி விடலாம்.

    Space Shuttle -8

    ஏவுதளத்தில் 2000 டன் எடையுள்ள கொலம்பியா விண்வெளிக் கூட்டமைப்பு, பல்வேறு உந்து விசைச் சாதனங்களால் [Multiple Propulsion Systems] 3000 டன் உதைப்பில் [Thrust] நேர் செங்குத்தாக மேலே எழுகிறது! மீள்கப்பல் பூமியின் சுழல்வீதியில் பணிகளை முடித்து விட்டு, தனது ராக்கெட் எஞ்சின்களை இயக்கி, விண்வெளி யிலிருந்து திரும்பி, பூமியை நோக்கிக் கீழே பாய்ந்து, பூகோள வாயு மண்டலத்தின் கடும் வெப்ப உராய்வில் [Intense Friction Heat] வெந்து சிதைந்து விடாமல், பாதுகாப்பாய் இறங்கி, ஓர் சாதாரண விமானம் போல் தளமட்டத்தில் [Horizontal] தரையைத் தொடுகிறது! மீள்கப்பலில் விமானக் குழுவகத்தின் பின்னால் அமைந்த, தூரக் கையாட்சி ஏற்பாட்டில் [Remote Manipulator System] சுயமாய் இயங்கி, 50 அடி நீளும் கனடாக் கரம் [Canada Arm] சுமையைத் தூக்கவும், சுமையை இறக்கவும் பயன்படுகிறது.

    பூமி நோக்கிப் பாயும் மீட்சிப் [Re-entry] பயணத்தில், வாயு மண்டலத்தின் உராய்வு வெப்பத்தில் மீள்கப்பல் எரிந்து போகாதவாறு, சிலிகேட் நார் சூட்டுத் தடுப்புத் தகடுகள் [Silicate Fibre Thermal Insulation Tiles] உறைபோல் ஒட்டப்பட்டு பாதுகாப்பு செய்கின்றன. மீள்கப்பலின் சிலிகேட் நார்கள் குறைந்தது 100 விண்வெளிப் பயணங்களுக்குப் பிறகு நீக்கப் பட்டுப் புதுப்பிக்கப்பட வேண்டும். நலிந்த எடை கொண்ட அந்த காப்பு நார்கள் 1260 டிகிரி C உஷ்ணத்தைக் கூடத் தாங்கும் வலிமை யுள்ளவை!

    Space Shuttle -16

    டிரைடென் பறப்பாய்வு மையகத்தில் ஆரம்பச் சோதனைகள் யாவும் வெற்றிகரமாக முடிந்து கொலம்பியா மீள்கப்பல் போயிங் 747 [Boeing 747] முதுகில் ஏற்றப் பட்டு, பிளாரிடா கனாவரல் முனை [Cape Canaveral, Florida] ஏவு தளத்திற்குத் தூக்கிச் செல்லப் பட்டது!

    முதல் மீள்கப்பல் கொலம்பியாவின் முன்னோடிப் பயிற்சிப் பயணம்

    அமெரிக்காவின் கனாவெரல் ராக்கெட் ஏவுதள முனையில் 1981 மார்ச் 14 ஆம் தேதியே 187 அடி உயரக் கொலம்பியா கோபுரக் கூட்டமைப்பு தயாராக நின்று கொண்டிருந்தது. அதன் முதல் பயிற்சிப் பயணச் சோதனை நீடிப்பது, இரண்டு அல்லது மூன்று நாட்களே! அது பூமியைச் சுற்றி வரப் போகும் சுழல்வீதி [Earth Orbit] உயரம் 150 மைல், பயிற்சிக்காகத் தணிவாக்கப் பட்டுள்ளது! அதை இயக்கி முதலில் செல்பவர் இருவர்! அண்டவெளி விமானிகள் ஜான் யங், அடுத்தவர் ராபர்ட் கிரிப்பென் [Astronauts John Young, Robert Grippen]. கொலம்பியா வின் ஆணையாளர், 50 வயதுள்ள ஜான் யங் அபோலோ விண்வெளி நிலவுத் திட்டத்தில் [Apollo Moon Program] நான்கு முறை அண்ட வெளியில் சுற்றிச் சிறப்புற்றவர்! ராபர்ட் கிரிப்பென் முதலில் பயணம் செய்யும் ஓர் விமானி.

    Space Shuttle -21

    அவர்கள் இருவரும் கொலம்பியா மீள்கப்பல் இறக்கைகளின் நிலைபாட்டை [Stability of Wings] அண்டவெளியில் சோதிக்க 36 தடவைப் பூமியைச் சுற்றி வரப் போகிறார்கள்! முடிவில் செங்குத்தாகப் பாய்ந்து, மொஜாவே பாலைவனத்தில் [Mojave Desert, California] இறக்கம்! அந்த முதல் சோதனைப் பயிற்சி வெற்றிகரமாக முடிந்தால், அடுத்து 36 மீள்கப்பல் பயண ஏற்பாடுகள் தொடரத் திட்டமிடப் பட்டன! மீள்கப்பலில் எதிர்பாராத விபத்து எதுவும் ஏற்பட்டால், இருவரும் உயிர் தப்பிக் கொள்ள, வெளியேற்றும் ஆசனங்கள் [Ejection Seats] அமைக்கப் பட்டிருந்தன!

    திரட்சி எரிபொருள் [Solid Fuel] இயக்கும் முதற் கட்ட இரட்டை ஊக்கி ராக்கெட்டுகள் [First Stage Twin Booster Rockets], மற்றும் மூன்று மீள்கப்பல் ராக்கெட்டுகள் முதல் இரண்டு நிமிடங்கள் சுடப் பட்டு, மீள்கப்பல் மணிக்கு சுமார் 3000 மைல் வேகத்தில் நேர் மேலே எழுச்சி பெற்று 31 மைல் உயரத்தில் சென்றதும், இரட்டை ராக்கெட்டுகள் அற்றுக் குடை பிடித்துக் [Parachute] கொண்டு கடலில் விழுகின்றன. பிளாரிடாவுக்கு அருகே கடலில் காத்திருக்கும் கப்பல் ஒன்று, அவற்றைக் கடலில் கண்டு பிடித்து மறுபடியும் பயன்படுத்தக் கரை சேர்க்கிறது. இரண்டு ஊக்கி ராக்கெட்டுகள் ஓய்ந்த பின்னும், மீள்கப்பலின் மூன்று பிரதம ராக்கெட்டுகள் தொடர்ந்து இன்னும் ஆறு நிமிடங்கள் இயங்கி, மீள்கப்பலை 1200 டன் உதைப்புடன் [Thrust] 59 மைல் உயரத்தில் தள்ளி, 99% சுற்று வேகம் [Orbital Velocity] அடைந்து, பூமியின் சுழல்வீதியை நெருங்குகிறது. அப்போது, வெளிக்கலன் அற்று விடப்பட்டுத் தூளாகிச் சிதறி இந்து மகாக்கடலில் விழுகிறது. முடிவில் கப்பலின் இரண்டு சிறு எஞ்சின்கள் இறுதி உந்து விசை தந்து, மணிக்கு 17,500 மைல் வேகத்தில் மீள்கப்பல் பூமியின் சுழல்வீதியில் [Earth Orbit] சுற்றி வர 150 மைல் உயரத்தில் தள்ளி விடப் படுகிறது.

    Control Room

    அண்டவெளி மீள்கப்பல் ஆட்சி அறை. 

    Click to enlarge

    அண்டவெளிப் பணிகளை முடித்த பிறகு, மீள்கப்பலின் சிறு எஞ்சின்கள் இயங்கி மணிக்கு 17,600 மைல் வேகத்தில், கப்பல் சுழல்வீதி யிலிருந்து விடுபட்டுக் கொண்டு [De-Orbiting], அதன் மூக்கு பூமியை எதிர் நோக்கித் திரும்புகிறது. 50 மைல் உயரத்தில் வாயு மண்டலத்தின் கடும் உராய்வுக் கனலைத் தாங்கிக் கொள்ளக், கப்பல் சாய்ந்து 40 டிகிரிக் கோணத்தில் வயிற்றைக் காட்டிக் கொண்டு, புவியை நோக்கிப் பாய்கிறது. அப்போது அதன் அசுர வேகத்தைத் தணிக்க, கப்பலின் எதிர்ப்புற ராக்கெட்டுகள் [Retro-rockets] சுடப்படுகின்றன. மீள்கப்பல் அதன்பின் ஒரு விமானம் போல் தனது இறக்கைகளை இயக்கிக் கட்டுப்பாடு முறைகளைக் கையாண்டு தரையில் கம்பீரமாக வந்து இறங்குகிறது. அப்போது மணிக்கு 220 மைல் வேகத்தில் தரையில் ஓடும் விமானத்தின் வேகத்தைத் தணிக்க, வால்புறத்தில் ஒரு பாராசூட் குடை விரிகிறது. மீள்கப்பலின் தரைதொடும் [Touchdown] இயக்கப்பாடுகள் எல்லாம் சுமார் அரை மணி நேரத்துக்குள் நிகழ்ந்து விடுகின்றன.

    Space Shuttle -22

    Click to enlarge

    விண்வெளி மீள்கப்பல்கள் ஆற்றிய அண்டவெளிப் பணிகள்

    கொலம்பியா தனது முதற் சோதனைப் பயிற்சிப் பயணத்தை 1981 ஏப்ரலில் வெற்றிகரமாய் முடித்த பிறகு, ஐந்தாண்டுகள் சிறப்பான பணிகள் பல செய்யப் பட்டுள்ளன. 1983 ஏப்ரலில் சாலஞ்சர் தன் முதல் பயணத்தை முடித்து, நவம்பரில் அடுத்து அமெரிக்க, ஈரோப்பிய நாடுகளின் 71 விஞ்ஞானத் தேர்வுகள் [Scientific Experiments] புரிய, முதல் விண்வெளி ஆய்வகத்தைத் [Space Lab] தூக்கிச் சென்றது. 1984 ஏப்ரலில் பரிதியின் உச்சத் துணைகோள் [The Solar Maximum Satellite] சுழல்வீதியிலே செப்பனிடப் பட்டது.

    Space Shuttles -7

    Click to enlarge 

    Space Shuttle Path

    அதே வருடம் நவம்பரில் முடமாய்ப் போன பலாப, வெஸ்டார் [Palapa, Westar] துணைக்கோள்கள் சுழல்வீதியிலிருந்து பற்றி இழுக்கப் பட்டு, பூமிக்கு எடுத்து வரப்பட்டன. 1985 ஆகஸ்டில் முதன் முதல் விண்வெளியில் ஒரு துணைக்கோள் [Syncon IV-3] ஏவப்பட, சாலஞ்சர் உதவி செய்தது. அடுத்து 1986 ஜனவரியில் சாலஞ்சர் புறப்படும் போது வெடித்து [Challenger Disaster] ஏழு நபர்கள் மாண்டபின், ஏறக் குறைய மூன்று ஆண்டுகள் மீள்கப்பலின் பயணங்கள் ஒத்திப் போடப் பட்டன! அச்சமயம் அதுபோல் விபத்து எதுவும் நேராதவாறு மீள்கப்பல்களில் பல புதிய பாதுகாப்புச் சாதனங்கள் சேர்த்திடப் பட்டன.

    1986 ஆம் ஆண்டிலிருந்து 50 மேற்பட்ட மீள்கப்பல் குறிப்பணிகள் [Space Shuttle Missions] எவ்வித விபத்தும் நேராமல் முடிந்துள்ளன. முக்கியமாக மே மாதம் 1989 இல் வெள்ளி விண்கோளை நோக்கி ஏவிய மாஜெல்லன் [Magellan], அக்டோபர் 1989 இல் வியாழன் விண்கோளை நோக்கி ஏவிய காலிலியோ [Galileo], ஏப்ரல் 1990 இல் ஏவிய ஹப்பிள் விண்தொலை நோக்கி [Hubble Space Telescope], அக்டோபர் 1990 இல் பரிதியை ஆராய ஏவிய யுலிஸிஸ் [Ulysses] யாவும் சிறப்பாக, மீள்கப்பல் சுமைதாங்கி அறை யிலிருந்து ஏவிவிடப் பட்டவை.

    Launching Space Hubble Telescope

    1993 டிசம்பரில் முதன் முதல் ஹப்பிள் தொலைநோக்கிப் பராமரிப்புக் குழு காட்சிச் சாதனத்தைச் [Optics] செப்பனிட்டு, மின்னியல் ஏற்பாடுகளைச் [Electronic Systems] சீர்திருத்தியது. 1995-1998 ஆண்டுகளில் அமெரிக்காவின் மீள்கப்பல்கள் ஒன்பது தடவைப் பயணம் செய்து, ரஷ்யாவின் அண்டவெளி நிலையம், ‘சமாதானம் ‘ [MIR Space Station] என்பதோடு இணைப்பு [Docking or Linkup] செய்து, சரித்திரப் புகழ் பெற்றன. அப்பயிற்சி முறை அனுபவங்கள், அடுத்து 1998 ஆண்டில் தயாராகப் போகும் அகில நாட்டு அண்ட வெளி நிலைய [International Space Station] இணைப்புக்குப் பயன்படும்.

    Space Shuttle -20

    ஹப்பிள் தொலைநோக்கி ஏவுதல்

    விண்வெளி மீள்கப்பல் சாலஞ்சர் ஏவிய பிறகு போது மரண விபத்து!

    வெண்ணிலவை நோக்கி முயன்ற விண்வெளிப் படையெடுப்பில், அமெரிக்காவின் முதல் உயிர்ப்பலி 1967 ஜனவரி 27 ஆம் தேதி நிகழ்ந்தது! அபோலோ விண்சிமிழில் தினமும் பங்கு கொள்ளும் பயிற்சியின் போது, உள்ளே தீப்பற்றி மூன்று சிறந்த விமானிகள் எட்வர்டு ஒயிட் [Ed White], ராஜர் காஃபி [Roger Chaffee], விர்ஜில் கிரிஸ்சம் [Virgil Grissom] உயிரோடு எரிந்து சாம்பலாயினர்! பத்தொன்பது ஆண்டுகள் கழித்து, அதை விடக் கோர மரணம் 1986 ஜனவரி 28 ஆம் தேதி அன்று நிகழ்ந்தது! 1981 முதல் பயிற்சிக்குப் பின்பு 26 மீள்கப்பல் பயணங்கள் வெற்றிகரமாக நடந்தேறின. 1986 ஜனவரி 28 இல் ஏவுதளத்தில் எழும்பிடத் தயாராக இருந்த சாலஞ்சர் மீள்கப்பலில் ஏழு நபர்கள் தமது ஆசனத்தில் அமர்ந்திருந்தனர். ராக்கெட் எஞ்சின்கள் திட்ட நேரத்தில் தீக்கனலைக் கக்கி, சாலஞ்சர் மீள்கப்பல் பெருமிதமோடு மேலே கிளம்பியது. ஒரு நிமிடம் கழித்து 50,000 அடி உயரத்தில் பாய்ந்து ஊடுருவிச் செல்லும் போது, அடுத்த நிமிடப் பணி முடிந்து, ஊக்கி ராக்கெட்கள் [Booster Rockets] அற்று வீழ்ந்தன. அப்போது எதிர்பாரதவாறு ஏதோ தவறு நிகழ்ந்து விட்டது! அது மரணத் தவறு! மாபெரும் சிறு தவறு! மறக்க முடியாத தவறு! மன்னிக்க முடியாத தவறு!

    உயிரிழந்த சாலஞ்சர் மீள் கப்பல் விமானிகள் 

    பயணம் துவங்கி ஒன்றரை நிமிடத்தில், சாலஞ்சர் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்த மாபெரும் எரித்திரவ வெளிக்கலன் [Liquid Fuel External Tank] திடாரென வெடித்தது! உடனே மீள்கப்பல் சுக்கு நூறாய் உடைந்து சிதறியது! அண்டவெளிப் பயணம் தொடங்கும் முன்பே, எல்லாம் முடிந்து விட்டது! உள்ளே அடைபட்டிருந்த ஏழு நபர்களுக்கும் வெளியே என்ன நிகழ்ந்து விட்டது என்பது தெரியாமலே போய் விட்டது! அகால மரணம் எய்த திறமை சாலிகளின் பெயர்கள் [இடமிருந்து வலம் முன்புறம்]: மைகேல் ஸ்மித், ஃபிரான்சிஸ் ஸ்கோபி, ரோனால்டு மெக்நாயர், [பின்புறம்] எல்லிஸன் ஓனிசுகா, கிரிஸ்டா மெக்காலிஃப், கிரிகரி யார்விஸ், ஜூடி ரெஸ்னிக்.

    விபத்தின் விளைவுகளைச் சீராக உளவு செய்ததில், ஊக்கி ராக்கெட்டின் மேலுறை இணைப்பில் [Booster Rocket Casing Seams] உள்ள ரப்பர் O வளையத்தில் [Rubber O-Ring] பழுது ஏற்பட்டு அது பிளந்து, தீப்பற்றிய திடப் பொருள் கசிந்து, வெளியே உள்ள எரித்திரவ வெளிக்கலனைச் [Liquid Fuel External Tank] சூடாக்கவே, 154 அடி நீளமுள்ள வெளிக்கலன் வெடித்தது! ஒரு சிறு ரப்பர் வளையப் பழுது ஏழு விண்வெளி வீரர்கள் கோர மரணத்துக்கும், 9 பில்லியன் டாலர் பண விரையத்துக்கும் காரணம் ஆனது! அடுத்து மூன்று ஆண்டுகளுக்குத் திட்டமிட்ட பயணங்கள் யாவும் தடைப் பட்டு, அது போன்ற அபாய விபத்து எப்போதும் நேரா வண்ணம் பல பாதுகாப்புச் சாதனங்கள் மீள்கப்பலில் சேர்க்கப் பட்டன!

    Space Shuttle -12

    அண்டவெளி மீள் கப்பல் கீழ் இறங்குகிறது.

    நாசாவின் எதிர்கால விண்வெளி மீள்கப்பலின் குறிப்பணிகள்

    இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில், அகில நாட்டு அண்டவெளி நிலைய அமைப்புப் [International Space Station] பணிகளுக்கு மீள்கப்பல்களின் பெரும்பான்மையான பயணங்கள் திட்டமிடப் பட்டுள்ளன. அப்பணிகள் 2004 இல் முடிவு பெறும். அகில நிலையம் தயாரானதும் அங்கு விமானிகள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், பொறி நுணுக்கர், பராமரிப்பாளர் அடிக்கடி போய்வர விண்வெளி மீள்கப்பல் பயன்படும். 1998 இல் அட்லாண்டிஸ் [Atlantis] மீள்கப்பல் புது நிலையப் பணிகளுக்காகப் புதுப்பிக்கப் பட்டது. புதிய காட்சி முகப்புகள் [New Displays], முற்போக்கான கப்பல் நகர்ச்சிச் சாதனங்கள் [Navigational Equipment], அகில நிலையத்தோடு இணைக்க காற்றடைப்பு அறை [Airlock Chamber] ஆகிய புது ஏற்பாடுகள் சேர்க்கப் பட்டன. அதன் உந்து சக்தியும், குளிர்ப்புச் சாதனமும் [Power & Cooling System] பெருக்கப் பட்டன. அத்துடன் மீள்கப்பல்கள், ஹப்பிள் விண்தொலை நோக்கிப் பராமரிப்பு, துணைக்கோள் ஏவுதல், செயலற்ற துணைக் கோள் மீட்டுதல் போன்ற ஒழுங்காய் நிகழ்ந்து வரும் பணிகளுக்கும் பயன்படும்.

    Shuttle Parts

    நாசா மீள் கப்பல் கட்டமைப்பு உறுப்புகள்

    திட்டப்படி விண்வெளி மீள்கப்பல்கள் யாவும் 2012 ஆண்டில் ஓய்வு பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது! நாசா தற்போதைய மீள்கப்பலைப் போன்ற, சிறப்பு X-38 விண்கப்பலை அகில நிலையத்தின் அபாயக் காப்பு யந்திரமாக [Emergency Lifeboat] உருவாக்க திட்டமிட்டுள்ளது. 1998 இல் பயிற்சிச் சோதனைகள் யாவும் முடிந்து, X-38 பாதுகாப்புக் கப்பல் 2003 ஆண்டில் பறப்பதற்குத் தயாராகும்!

    ‘ஒரு கட்ட சுழல்வீதி எழுச்சி ராக்கெட் ‘ [Single Stage to Orbit Rocket] உடைய புதிய ராட்சதக் விண்கப்பல் [X-33] ஒன்று சோதனைக் களத்தில் இயங்கிச் சீரான முறையில் வளர்ச்சியாகி வருகிறது! 21 நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் உருமிக் கொண்டு உயரப் போகும் அந்த அசுர ராக்கெட், ஒரே மூச்சில் ஊதப்பட்டு, ஒரே பாய்ச்சலில் தாவி விண்கப்பலைப் பூகோளச் சுழல்வீதியில் எறிந்துவிடும்!

    Linking Space Station

    ****************************

    1. https://youtu.be/SvaG0xDdP8g
    2. https://youtu.be/PsHljHRM67c

    தகவல் :

    1. https://www.nasa.gov/externalflash/the_shuttle/

    2.https://www.nasa.gov/externalflash/the_shuttle/

    3. http://science.howstuffworks.com/space-shuttle.htm

    4. https://www.nasa.gov/mission_pages/shuttle/main/index.html

    5. https://en.wikipedia.org/wiki/Space_Shuttle  [May 24, 2016]

    +++++++++++++++++++++++++++++

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  May 25, 2016  [R-1]

    Share
  • அசரீரி!

    –மீ.விசுவநாதன்

    இதோஇதோ உன்மனசு – அதை
    இறுக்கிப் பிடிக்கப் பழகு
    அதோஅதோ என்றலையும் – அதை
    அமைதி யாக்கப் பழகு!

    எதாவது எண்ணியெண்ணி – கவலை
    இருட்டில் கிடக்கும் மனது
    சதாவது தவிக்கிறது – அதைத்
    தவத்தில் நிறுத்தப் பழகு!

    அழுக்கிலே ஊறியூறி – அது
    அகந்தை யோடு கிடக்கு!
    அழுக்கினை அன்பினாலே – ஒளி
    அடித்து வெளியில் விரட்டு!

    நடப்பிலே இன்பதுன்பம் – வெறும்
    நடிப்பு மாய உறவு
    கிடப்பிலே போட்டுநட -உள்
    கிடைக்கும் ஞானத் தெளிவு!

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (198)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் ஒருவார இடைவேளையின் பின்னால் உங்களுடன் மனந்திறப்பதில் மகிழ்வடைகிறேன். வாழ்வெனும் ஓட்டப்பந்தயத்தில் முன்னால் ஓடிக் கொண்டிருக்கிறோமோ அன்றி கடைசியில் ஓடிக் கொண்டிருக்கிறோமோ இல்லை இடைநடுவில் ஓடிக் கொண்டிருக்கிறோமோ எமது நிலை என்னவெனினும் ஓடிக்கொண்டிருக்க வேண்டியது எமது நியதி.

    ஒரு ரயிலில் உட்கார்ந்திருக்கும்போது நாம் எதுவுமே செய்யாமல் இருந்தாலும் அந்த ரெயில் எம்மைச் சுமந்து கொண்டு ஓடிக்கொண்டேயிருக்கும். யன்னலுக்கு வெளியே தெரியும் காட்சிகள் அதிவேகத்தில் எம்மைக் கடந்து செல்வதைப் பார்க்கும் போதுதான் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பது எமக்குப் புரிகிறது.

    ஏறக்குறைய அதுபோலத்தான் நாம் முன்னேற முயற்சிக்கிறோமோ இல்லையோ காலம் எம்மைக் கடந்து அதேவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. எமக்காக காலம் காத்திருக்கப் போவதில்லை. இது யதார்த்தம். எங்கோ பிறந்து ஏதோ ஒரு கலாசாரப் பின்னணியில் வளர்ந்து இன்று எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கும் என்னைக் கடந்து காலம் கனவேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது . இங்கிலாந்தில் எனது ஆரம்பகால வாழ்விற்கும் இன்றைய வாழ்விற்கும் இடையிலான மாற்றங்களைக் கண்டது மட்டுமல்ல, அம்மாற்றங்கள் கொடுத்த தாக்கங்களை அனுபவித்தும் இருக்கிறேன் என்பதே உண்மை.

    இலண்டனில் மாணவனாக வாழ்ந்த முதல் ஜந்து வருடங்களுக்கும் அதன் பின்னான வருடங்களுக்கும் இடையில் பெரியதொரு வேற்றுமை என் மனத்தளவில் இருந்தது என்பதே உண்மை. கல்வி முடிந்ததும் திரும்பவும் நான் தாய்நாட்டிற்குத் திரும்பப் போகிறேன் எனும் எண்ணம். அந்த எண்ணத்தின் ஆனந்தத்தின் அடித்தளம் நான் வாழ்ந்து கொண்டிருந்த இங்கிலாந்து நாட்டை ஒரு வாடகை வீடாகவே பார்க்க வைத்தது.

    இங்கிலாந்தில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், அம்மாற்றங்கள் ஏற்படுத்திய சமுதாயத் தாக்கங்கள் என்பனவற்றின் மீதான எனது பார்வை மேலோட்டமாகவே இருந்தது. உண்மையான யதார்த்தமான நிலைமைகளைச் சரிவரப் புரிந்துகொள்ள நான் முயற்சிக்கவில்லை என்பதுவே உண்மை.

    இதன் காரணம் பலவாக இருக்கலாம். எனது வாலிப வயதின் அறிவு முதிர்ச்சியின்மை, என்ன இந்த நாடு என்ன என் தாய்நாடா? அந்நியநாடுதானே எனும் எண்ணம், ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய பழைய வரலாற்றின் அடிப்படையில் எழுந்த ஆங்கிலேயர் மீதான காரணமில்லா வெறுப்பு என்பன சில காரணங்களாக இருக்கலாம்.

    பிந்தைய வருடங்களில் வாழ்வின் மீதான என் பார்வையின் திருப்பம் மாறியது. என் தாய்நாட்டிற்குத் திரும்பப் போகிறோம் எனும் ஆர்வம் குறைந்தது. இப்பார்வையின் மாற்றத்திற்கு காரணமோ தெரியவில்லை. உள்ளத்தில், உணர்வுகளில் ஏற்பட்ட மாற்றம். நான் வாழ்ந்து கொண்டிருந்த நாட்டு மக்கள் மீதான எனது அபிப்பிராயம் தவறானது என்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்கிய காலமது. எனது தொடரும் வாழ்க்கை நான் வாழும் அந்நாட்டிலேயே நிகழப்போகிறது என்பதை உணரத் தொடங்கிய பொழுது அது.

    இன்று என் வாழ்க்கையின் பெரும்பாகத்தை அதாவது உலகத்தில் உதித்த 59 வருடங்களில் 41 வருடத்தை இங்கிலாந்தில் கழித்துவிட்ட நிலையில் , இங்கிலாந்தின் அரசியல் மாற்றங்கள், சமுதாய மாற்றங்கள் என்பன என் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்கள், ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள் என்பனவற்றை உள்வாங்கிக் கொள்ளும் ஒரு நிலையிலிருக்கிறேன்.

    இத்தகைய நிலையிலேயே அடுத்தமாதம் அதாவது ஜீன் மாதம்23ஆம் திகதி நிகழவிருக்கும் ஜரோப்பிய ஒன்றியத்தில் ஜக்கிய இராச்சியம் அங்கத்தினராக நிலைத்திருப்பதா இல்லையா என்பதன் மீதான சர்வஜன வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் நிலை.

    இன்றைய தபாலில் அச் சர்வஜன வாக்கெடுப்புக்கான எனது வாக்குப்பதிவுச் சீட்டு வந்து விழுந்தது. “நிலைத்திருப்பதா?”  “விலகுவதா?” என்பதே இவ்வாக்கெடுப்பின் சாரம். இருதரப்பினரும் அன்றாடம் அனைத்து ஊடகங்களிலும் வாதப் பிரதிவாதங்களை முன்வைக்கிறார்கள். இங்கிலாந்து அரசாங்கம், எதிர்க்கட்சி, இங்கிலாந்து வங்கி, சர்வதேச நிதி ஒன்றியம், இங்கிலாந்து நிதியமைச்சு என அனைவரும் இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது பொருளாதாரத் தற்கொலைக்குச் சமானம் என்கிறார்கள்.

    இங்கிலாந்தின் நட்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் இங்கிலாந்தின் தொடர்ந்த ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தை வற்புறுத்தி வருகிறார்கள். மாறாக, இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது ஒன்றே இங்கிலாந்தின் தொலைநோக்கான பொருளாதாரச் செறிவுக்கு உத்தரவாதம் அளிக்கும் என வெளியேற வேண்டும் எனும் வாதத்தை முன்வைக்கிறார்கள்.

    அவர்கள் அணியில் சில அமைச்சர்கள், முன்னாள் நிதியமைச்சர்கள் எனப் பலர் இணைந்துள்ளனர்.

    இவர்களது வாதத்தினால் மக்கள் தெளிவடைகிறார்களா இல்லை மேலும் குழப்பமடைகிறார்களா என்பது கேள்விக்குறியே! ஒரு அணியினர் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்பதை வலியுறுத்துவதிலேயே அடுத்த அணியினர் கவனம் செலுத்துகிறார்களேயன்றி, தமது வாதத்திற்கான நிரூபணமான உண்மைகள் எதையும் கூறுவதாகத் தெரியவில்லை.

    ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரஜைகள் இலட்சக்கணக்கில் இங்கிலாந்துக்குள் நுழைகிறார்கள். இது இங்கிலாந்து மக்களுக்கு இன்னல்களை விளைவிக்கிறது எனும் வாதமே பலமாக முன்வைக்கப்படுகிறது. இது இங்கிலாந்து மக்களிடையே ஒருவிதமான இனத்துவேஷத்துக்கு அத்திவாரமிடுகிறதோ எனும் அச்சம் எழுவதைத் தவிர்க்கமுடியாது.

    ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்தினராக இங்கிலாந்து இருப்பதை அனுபவபூர்வமாக உணர்ந்த எமக்கு இங்கிலாந்து விலகினால் எப்படி  இருக்கும் என்பதைக் கற்பனை பண்ணித்தான் பார்க்க முடிகிறது. அந்தக் கற்பனை உலகில் காலடி வைப்பது அவசியமா? எனும் கேள்வி நிச்சயம் நெஞ்சில் எழுகிறது.

    ஒரு புலம்பெயர்ந்து வாழும் இங்கிலாந்துப் பிரஜையாக இதை இரண்டு கோணங்களில் பார்க்க முடிகிறது.

    1. அளவில்லாத வெளிநாட்டு மக்கள் இங்கிலாந்துக்குள் நுழைவதால் இங்கு ஏற்படும் வீட்டுப் பற்றாக்குறை,வேலையில்லாத் திண்டாட்டம்,தேசிய சுகாதாரச் சேவையின் தாக்கங்கள் என்பன இங்குள்ள இங்கிலாந்து மக்களுக்கு ஏற்படுத்தும் இன்னல்களினால் அவர்களின் கோபம் அனைத்தும் வேற்றினத்தவர் மீது திரும்பினால் பாதிக்கப்படுவோரில் நாமும் எமது தலைமுறையும் அடங்குவோம்.
    1. இங்கிலாந்தின் குடியேற்றக் கொள்கையே இச்சர்ச்சையில் பிரதானமாக்கப்படுவதால் இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்போரின் கோஷம் வெற்றியடைந்தால், அடுத்து இங்கு ஏற்கனவே குடியேறி வாழ்ந்துவரும் எம்போன்றோரின் மீது அவர்களின் துவேஷம் திரும்பாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

    இவ்விரண்டு கோணங்களின் அடிப்படையில் நாம் எமது அரசியல் கண்ணோட்டத்தை மேலெடுக்க வேண்டும். இன்றைய நிலையில் எமது நாடு இங்கிலாந்து. இங்கிலாந்தின் தத்துப்பிள்ளைகளாக வாழும் நாம் எம்மைத் தத்தெடுத்த பெற்றோரின் வாழ்வு நன்றாக அமையக்கூடிய வகையில் எமது வாக்குகளை அளிக்க வேண்டியது எமது கடப்பாடாக உள்ளதை உணர வேண்டியது அவசியம்.

    யார் எத்தகைய வாதத்தை முன்வைத்தாலும் இது இறுதியில் இங்கிலாந்து மக்களின் முடிவாகவே இருக்கப் போகிறது. அம்மக்களின் எண்ணிக்கையில் நாமும் அடங்குகிறோம் என்பதுவே யதார்த்தம். அனைத்துக்கும் விடை  ஜூன் மாதம் 23-ஆம் திகதி கிடைக்கும்.

    ஆம்! மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!

    மீண்டும் அடுத்தமடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    Share
  • எல்லோர்க்கும் நன்மையன்றோ!

    -எம் . ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா

    தேர்தல்தனில் வெற்றிபெற்றால் தெளிந்தமனம் வரவேண்டும்
    வாக்களித்த மக்களது மனங்கோணா திருத்தல்வேண்டும்
    நோக்கமின்றிச் செயல்பட்டு நோகடிக்கா திருந்துவிடின்
    வாக்களித்த மக்களென்றும் வாய்ப்பளிக்க வந்திடுவார்!

    சொல்லுகின்ற திட்டமெல்லாம் தொய்வின்றிச் செய்துவிடின்
    நல்லாட்சி  எனும்சான்றை நாட்டுமக்கள் வழங்கிடுவார்
    வல்லமையால் வென்றுவிட்டோம் என்றெண்ணம் வந்துவிடின்
    வாக்களித்த மக்களெலாம் மனம்நொந்தே போயிடுவார்!

    வாக்குப் பெற்றுவிட்டதனால் வாய்ப்புவந்து விட்டதென
    நாற்காலி தனைப்பிடித்து நல்லதெல்லாம் தாம்சுருட்டிச்
    சாக்குப்போக்கு தனைச்சொல்லிச்  சதிராட்டம் போட்டுநின்றால்
    வாக்களித்த மக்களெலாம் வசைபாடி நின்றிடுவார்!

    தேர்தல்தனில் செலவுசெய்த காசதனைத் தேடுதற்குத்
    தேர்ந்தெடுத்த தேர்தல்தனைத் தீர்வாக்கல் முறையாமோ?
    ஊர்திரிந்து சேகரித்த வாக்கினினால் வந்தவுயர்
    பேருடைந்து போகாமல் காப்பதுதான் பெரும்பொறுப்பு!

    காரும்வரும் வீடும்வரும்  கணக்கின்றிப் பணமும்வரும்
    ஆருமென்ன சொன்னாலும் அதைக்கேட்கா மனமும்வரும்
    ஆனாலும் அவற்றையெல்லாம் அரவணைத்து நில்லாமல்
    ஆனமட்டும் அனைவரையும் அணைத்துநிற்றல் அறமாகும்!

    வள்ளுவத்தைப் படித்தொழுகி வாய்மையினை வாழ்வாக்கி
    உள்ளமெலாம் நல்லஎண்ணம் உறைந்துவிடச் செய்துவிடின்
    நல்லபடி ஆட்சிசெய்யும் நல்வழியில் சென்றிடலாம்
    நாட்டிலுள்ள மக்களெலாம் நல்வாழ்த்துக் கூறிநிற்பார்!

    அறமதனை அச்சாணி ஆக்கிவிடும் ஆட்சிதனை
    ஆட்சிபீடம் அமர்ந்தவர்கள் அனுசரித்தல் அவசியமே
    இனவாதம் மதவாதம் எதையும்மனம் கொள்ளாமல்
    இணக்கமுற ஆட்சிசெய்தால் எல்லோர்க்கும் நன்மையன்றோ!

     

     

    Share
  • பெண்கள் சுதந்திரம்

     

     

    பாவலர் கருமலைத்தமிழாழன்

     

    பெண்கள்தம்   சுதந்திரமோ  பூத்த   பூவாய்ப்

    பெருமையாகத்   தெரிந்தாலும்   தாளின்   பூவே

    கண்களெனப்   பெண்களினைச்    சொல்லு   வோரே

    கறுப்பாடி   அணிவித்துக்   குருடாய்ச்   செய்வார்

    உண்மையான   இறையென்றே   போற்றிக்   கோயில்

    உள்ளிருக்கும்    சிலையாக   வீட்டுள்   வைப்பர்

    மண்மீதில்   மாதவத்தால்   பிறந்தாள்   என்றே

    மாபெருமை   தருவதுபோல்   அடிமை   செய்வார் !

     

    உடல்முழுதும்    மறைக்கின்ற்   சுடுதார்   ஆடை

    உடுத்துதற்கும்    எதிர்ப்புதனைத்   தெரிவிப்   பார்கள்

    முடக்காமல்   தெருவினிலே    அழைத்துச்   செல்ல

    முழமெட்டு    சேலையினை    உடுத்தென்   பார்கள்

    மடமச்சம்   பயிர்ப்புநாணம்    பண்பு    நான்கில்

    மண்மகளைக்    கண்பார்க்க   வேண்டு   மென்பர்

    படபடென்று    பேசுவது   பொதுவி   டத்தில்

    பண்பாட்டுக்   கிழுக்கென்றே   ஏசு   வார்கள் !

     

    உயர்கல்வி   படித்துயர்ந்த   பதவி   தன்னில்

    உட்கார்ந்த   போதும் ! நாள்    கூலி   யாக

    வயல்களிலே    நாற்றுநட்டு    களைபி   டிங்கி

    வளைந்துடலில்   வியர்வைசிந்த    உழைத்த   போதும்

    தயக்கமின்றிப்   புகுந்தவீட்டில்    அனைவ   ருக்கும்

    தாதியாக   நாள்முழுதும்    செய்த    போதும்

    சுயமாகத்   தன்விருப்பில்    செய்வ   தற்குச்

    சுதந்திரத்தை    யார்தந்தார்    பேதை   யர்க்கே !

     

     

     

    தேர்தலிலே    நின்றுவெற்றி   பெற்ற   போதும்

    தெரிவதுவோ    கணவன்தான்   அதிகா   ரந்தான்

    போர்வையாகப்    பண்பாடு   ஒழுக்கம்    தன்னைப்

    போர்த்திநேராய்ப்    பேசுதற்கும்   உரிமை   யின்றிக்

    கூற்றுகளை     சங்கநூல்கள்    காப்பி   யங்கள்

    கூறியவர்    சுதந்திரத்தைப்    பறித்த   போல

    சீர்திருத்தம்    பகுத்தறிவு    கல்வி    என்று

    சிறப்புக்கள்    வந்தபோதும்   கானல்   நீரே !

     

    Share
  • ‘’கண்ணா கனியவை நாற்பது’’(அந்தாதி தொடர்ச்சி)

     

    “பயனற்ற பாண்டம் பழுதாக மீண்டும்

    வியனுலகை விட்டேக வேண்டும் -அயனோ
    அரனோ, அரியோ அவதாரம் வந்தும்
    மரணத்தில் தானே முடிவு’’….(7)

    ’’முடிவற்ற ஆசை முதலுக்கே மோசம்
    வெடிவைத்து வந்திடுமா வானம் -படியற்ற
    சொர்கத்தைக் காண செடியேறு கின்றாயே
    தர்கத்தைத் தாண்டல் தவம்’’….(8)

    ’’தவமாய்த் தவமிருந்து தத்துவங்கள் தேர்ந்து
    சவமாய் சுடுகாடு செல்வீர் -சிவஞானம்
    சிந்திக்க வாராது சித்தம் ஒருமிக்க
    சந்திக்க முந்துவான் சம்பு’’….(9)

    ’’சம்பு மஹேசனை நம்பியவன் நானென்று
    கும்பிடப் போக வரும்குறுக்கே -ஒன்பது
    வாசலுடற் கோசத்தில் நேசமுறக் காண்போமே
    ஈசனிடம் சாத்தான் இயல்பு’’….(10)

    ’’இயல்பாய் இருத்தல் இயலாமல் பாடும்
    குயில்கரையும் காகத்தின் கூட்டில் -பயில்வீர்
    பெருக்கெடுக்கும் கங்கையும், பாழான நீரும்
    சிரம்தெளித்துக் கொள்ளும் சமம்’’….(11)

    ’’சமர்த்தஅவ் ஆன்மனை சிந்தா சனத்தில்
    அமர்த்தி இகபரம் ஆளு -நிமிர்த்த
    முடியாத நாய்வால், மரம்தாவும் மந்தி
    விடியாத நெஞ்சை விலக்கு’’….(12)….கிரேசி மோகன்….

    Share
  • ‘’கண்ணா கனியவை நாற்பது’’….

    இது ‘’இன்னா நாற்பதும்” அல்ல “இனியவை நாற்பதும்” அல்ல
    ‘’கண்ணா கனியவை நாற்பது’’….
    ———————————————————————-

    images

    ஆக்கப் பொறுத்தாலும் ஆறப் பொறுத்தாலும்
    காக்கும் கடவுள் கவலைப்படான் -நோக்கு(உனக்கு)
    விதித்ததை ஏற்றி வினையால் அணைத்து
    புதைப்ப(து) அவன்பொழுது போக்கு….(1)

    போக்கத்(து) உலகில் பொழுதைக் கழித்திரு
    காக்கும் கடவுளுடன் கைகோர்த்து -தாக்கும்
    செடியாய வல்வினைகள் செங்கரும்பாம், ஊன்றத்
    தடியாகும் பட்டினத் தார்….(2)

    தாரில் மலரவன் நாராம் மணக்கும்நாம்
    சோறில் சுவையவன், சக்கைநாம் -நேரில்
    வரத்தயங்கும் கீதமவன் வந்துவிட்ட நாமக்
    கரத்தியங்கும் புல்லாங் குழல்….(3)

    குழலுற்ற கீதத்தைக் காதுற்றுக் கேளீர்
    விழலுக்(கு) இறைக்காதீர் வீணாய் -தழலுக்குள்
    வேகாது, தண்ணீரில் வீழ்ந்தும் நனையாது
    சாகாத அவ்வுணர்வே சத்து….(4)

    சத்துக்கு ஆனந்தம் சித்தின் விளையாட்டு
    அத்தனையும் வேடிக்கை ஆகப்பார் -புத்தி
    மனமுள்ளம் நெஞ்சென்ற மாயங்கள் நால்வர்
    உனையுண்ணத் தூக்கும் உறவு….(5)

    உறவும் பகையும் துறவும் தெளிவும்
    வரவு செலவாகும் வாழ்க்கை -பறவை
    ஒருகூடு விட்டு மறுகூடு போகும்
    பெறுவீடு காணப் பயன்….(6)….கிரேசி மோகன் (தொடரலாம் !)…..

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    29667334-6103-47aa-9ddb-ca30c5710701
    ”GOVINDHA PATTABHISHEGAM”…..
    ———————————————————–

    “அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
    சந்திர வம்சத்து ஸ்ரீரங்கன்,-நந்தனின்,
    வீட்டுச்சேய் பால்வெளியில், வேந்தனாய் ஆவதைக்,
    காட்டிய கேசவ் கவி”….

    “பாலா பிஷேகமே பட்டா பிஷேகமாய்
    கோலோ கலமாகக் கொண்டாடும் -மாலோலன்;
    ஆவிந்தன் பாலில் அபிஷேக நீராடி
    கோவிந்தன் கொற்றவைக் கூத்து”

    “ராம கிரணமாய் ,ராத்திரி வந்தவனுக்கு,
    நாம கரணம் நடக்கும்முன், -காமதேனு,
    பால்சுரக்கப் போச்சு, பழையரா மாயணம்போய்
    மால்பிறப்பு பாகவத மாச்சு”….கிரேசி மோகன்…

    Share
  • நாவற்குடா இளையதம்பி தங்கராசாவின் “நான் என் அம்மாவின் பிள்ளை” புதினம் குறித்த மதிப்பீடு

    முனைவர் மு.இளங்கோவன்
    பட்டமேற்படிப்பு மையம்
    புதுச்சேரி – 605 008

     

    ammavin Pillai

    ஈழத்துப்பூராடனார் என்னும் முதுபெரும் தமிழறிஞர் வழியாக ஈழத்து இலக்கிய அறிமுகமும் இலக்கிய அறிஞர்களுடனான தொடர்பும்  எனக்குக்  கிடைக்கலாயிற்று (1993). அதன்பிறகு வளர்பிறைபோல் ஈழத்து இலக்கியத் தொடர்பு வளர்ந்துகொண்டுள்ளது. அண்மைக்காலமாகப் பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் வழியாக ஈழத்துத் தொடர்பைப் புதுப்பித்த வண்ணம் உள்ளேன்.

    அண்மையில் பிரான்சுக்குச் சென்றிருந்தபொழுது ‘மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் பிள்ளையார் மான்மியம்’ என்னும் பெயரில் அமைந்த தமிழ் மற்றும் ஆங்கில நூல்களைப் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் வழங்கினார்கள். நூலினை மேலோட்டமாகப் பார்த்தபொழுது, நூலாசிரியர் நாவற்குடா இளையதம்பி தங்கராசா என்ற பெயர் எனக்கு மிகவும் அறிமுகமானதாக  இருந்தது.

    ஒருநாள், ஈழத்து அன்பர் சிவபாதசுந்தரம் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபொழுது, அவரின் அருகில் இருந்த இளையதம்பி தங்கராசா அவர்களுடன் உரையாடும் வாய்ப்பு அமைந்தது. அப்பொழுது தங்கராசா அவர்கள் தமக்கும் ஈழத்துப்பூராடனாருக்கும் அமைந்த தொடர்பைக் கூறியதும் அவரின் மேல் மிகுந்த மதிப்பு உண்டானது.

    Thangarajaஇளையதம்பி தங்கராசா தாம் ஒரு புதினம் எழுதியுள்ளதாகவும் அதன் இருதொகுதிகளை அனுப்புவதாகவும் கூறினார். சொல்லியவண்ணம் அனுப்பியும் வைத்தார். “நான் என் அம்மாவின் பிள்ளை” என்னும் பெயரில் அமைந்த 1098 பக்கங்கள் கொண்ட இரு தொகுதிகளும் (27+484=511 பாகம்-1; 27+560= 587 பாகம்-2) கிடைத்ததும் உருவுகண்டு மலைத்தேன். எனக்கிருந்த பல்வேறு பணிகளுக்கிடையே இதனைப் படித்து முடிக்கக் காலம் ஆகலாம் என்று நினைத்தபடி மேலோட்டமாகப் பார்வையிட்டேன்.

    பேராசிரியர் இ.பாலசுந்தரம், திரு.எதிர்மன்னசிங்கம், செல்வி க.தங்கேஸ்வரி ஆகியோரின் மதிப்புரைகளும், பண்டிதர் ம. செல்வராசா அலெக்சாந்தர் அவர்களின் வெண்பாக்களும் நூலாசிரியரின் முன்னுரையும் உடனடியாக இந்த நூலினைப் படிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தந்தன.

    தமிழகத்தில் புதின ஆசிரியர்கள் சிலர் தங்கள் படைப்புகளை எழுதுவதற்கும், அதனைப் பரப்புவதற்கும் கைக்கொண்டிருக்கும் பல்வேறு உத்திகளைக் கண்டு கண்டு, உண்மை உணர்ந்தவன் என்ற அடிப்படையில் தரமான புதினங்களை மட்டும் தேடிப்பிடித்துப் படிப்பது என் வழக்கம். புலம்பெயர்ந்தோர் ஆய்வுநூல்கள், மரபிலக்கியங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகளைப் படித்துள்ளேனே தவிர, பெரிய அளவில் புதினங்களைப் படித்ததில்லை.

    நாவற்குடா இளையதம்பி தங்கராசா அவர்களின் “நான் என் அம்மாவின் பிள்ளை” புதினம் மிகச்சிறந்த நோக்கத்துடனும் திட்டமிடலுடனும் படைக்கப்பட்டுள்ளது. உயர்வு நவிற்சியில் அமையும் சில செய்திகளை நோக்காது, இதில் இடம்பெறும் கதைக்கூறுகளையும், நாட்டார் வழக்காற்று மரபுகளையும் எடுத்துரைப்பு உத்திகளையும் முன்கதைத் தொடர்ச்சிகளை உரிய இடங்களில் நினைவூட்டிச் செல்லும் உத்தி முறைகளையும் நோக்கும்பொழுது இந்தப் புதினத்தின் தேவையும் முக்கியத்துவமும் தெரியவரும்.

    ஹினெர் சலீம் அவர்களின் “அப்பாவின் துப்பாக்கி” என்ற புதினத்தைப் பேராசிரியர் வெங்கட சுப்புராய நாயகர் அவர்களின் தமிழ்மொழிபெயர்ப்பில் படித்தபொழுது சலீம் என்ற குர்திஸ்தான் போராளியின் வாழ்க்கை வரலாற்று வழியாக அவர்களின் நாட்டுவரலாறு, பழக்கவழக்கங்கள், இன்றையநிலை முதலியவை மிக நுட்பமாகச் சித்திரித்துக் காட்டப்பட்டிருப்பதைக் கண்டு வியந்ததுண்டு. அப்பாவின் துப்பாக்கிபோல் கதையமைப்பில் மொழி, இன, நாட்டுச்சிறப்பு உணர்த்தும் படைப்புகள் வெளிவருமா? என ஏங்கிக்கொண்டிருந்த என் மனக்குறையை ‘நான் என் அம்மாவின் பிள்ளை’ என்ற புதினம் நீக்கியது.

    இளையதம்பி தங்கராசா அவர்களின் புதினத்தில் கிழக்கிலங்கை மக்களின் பண்பாட்டு மரபுகள் மிக நுட்பமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற ஆவணப்படுத்தல் முயற்சிகளில் தமிழர்கள் ஈடுபடாததால் பலவற்றை இழந்து நிற்கின்றோம். இளையதம்பி தங்கராசா அவர்களைப் போலும் படைப்பாளிகள் ஈழத்திலும் தமிழகத்திலும் நிலவும் நம் மரபுகளையும் பண்பாடுகளையும் தங்கள் படைப்புகளில் ஆழமாகப் பதிவுசெய்ய வேண்டும். மொழி, இன, நாட்டுக்குப் பயன்படாத எந்தப் படைப்புகளையும் அது என்ன வகையான விளம்பரங்களுடன் வெளிவந்தாலும் அவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டிய தேவையில்லை. அதேபொழுது மொழி, இன, நாட்டு மீட்சிக்குப் பயன்படும் ஆக்கங்களை இந்த உலகின் எந்த மூலையிலிருந்து எவர் தந்தாலும் அவர்களை உச்சிமேல் வைத்துக் கொண்டாடும் நிலை தமிழுலகிற்குத் தேவையாகும்.

    இளையதம்பி தங்கராசா அவர்கள் புதினம் எழுதுவதன் ஊடாக மட்டக்களப்பு மக்களின் வாழ்வியல், பொருளாதாராம், பண்பாடு, மொழி வழக்கு, இலக்கியம், கலைகள், தொழில்முறைகள், சமூக அமைப்பு எனப் பல செய்திகளைப் பதிவுசெய்துள்ளார் என்று முனைவர் இ.பாலசுந்தரம் அவர்கள் தம் அணிந்துரையில் முன்மொழிவு தந்துள்ளார்.

    இலங்கையில் பிறந்த அகத்தியன் என்னும் இளைஞன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கப்பலில் பயணம்செய்து, அமெரிக்கத் துறைமுகம் ஒன்றில் அகதியாக இறங்குகின்றான். பத்தி என்ற பெயருடன் கப்பலில் பணிசெய்த பணியாளன் ஒருவன் அந்த நேரத்தில் நேர்ச்சியில் இறந்துவிட, அவன் பெயரில் அமெரிக்காவில் நுழைந்து கல்விகற்று, அணுசக்தி குறித்த பேரறிவு பெற்ற அறிவியலாளனாக, அமெரிக்காவின் சொத்தாக உயர்வு பெறுகின்றான். பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து, தாயக நினைவுடன் இலங்கை வந்து, தம் மட்டக்களப்பு மக்களின் கல்வி முன்னேற்றத்திற்குப் பலவகை முயற்சிகளைச் செய்வதும், தாயகத்தில் தாம் திருமணம் செய்துகொள்வதுடன் தம்மைச் சார்ந்தவர்களுக்குத் திருமணம் செய்துவைத்து, அனைவருடன் மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்லும் நிகழ்வுகளும்தான் புதினத்தின் கதைக்களமாகும்.

    இந்தக் கதையை இளையதம்பி தங்கராசா அவர்கள் மிகச் சிறப்பாகப் புனைந்து, படிப்பவர்களை உடன் பயணிக்கவைக்கின்றார். அமெரிக்காவிலிருந்து ஆப்பிரிக்கா செல்லுதல்,  அங்கிருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு வருவது, அங்குச் சரயு என்ற பெண்ணைச் சந்திப்பது, மெனிக்கே என்ற சிங்களப் பெண்ணைக் காண்பது, சென்னைக்கு வருதல், சிதம்பரம், மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஊர்களில் அமைந்துள்ள கோயில்களைப் பார்த்துக்கொண்டு, சென்னைக்குத் திரும்புவது என்பவை கதைப்போக்காக உள்ளன. இடையிடையே கோயில்கள் குறித்து அளித்துள்ள விளக்கங்கள் தங்கராசா அவர்களின் சமய ஈடுபாட்டையும் இசைப்புலமையையும் காட்டுகின்றன.

    அகத்தியன் சென்னையிலிருந்து இலங்கை வருவது; ரங்கதுரை என்ற தம் குடும்ப நண்பரைச் சந்திப்பது; வீட்டிற்குத் தேவையான பொருள்களைக் கொழும்பில் வாங்குவது; மட்டக்களப்பில் உள்ள தன் இல்லத்தை அகத்தியன் அடைவது; பெற்றோர் மற்றும் நண்பன் மாணிக்கன் உள்ளிட்டவர்களின் அன்பில் மகிழ்தல்; தாய்மாமன் குடும்பத்தாரின் தப்புக்கணக்கு, நண்பன் மாணிக்கனின் தங்கை சுவனீயை மணக்கத் திருமண ஏற்பாடு, தம்பி ஆனந்தனுக்குக் கராச்சியில் கண்ட பெண் சரயுவையும், நண்பன் மாணிக்கனுக்கு மெனிக்கே என்ற சிங்களப் பெண்ணையும் மணம்செய்ய நடைபெறும் முயற்சிகள் யாவும் கதையை இன்பமுடிவு நோக்கி நகர்த்துகின்றன. அகத்தியன் புதிய வீடு கட்டுவது, வயலில் வீடுகட்டுவது, மிகுதியான திருமணங்கள், மட்டக்களப்புப் பல்கலைக்கழகத்தை அமெரிக்க வாஷிங்டன் பல்கலைக்கழகம் பொறுப்பேற்று நடத்தும் ஒப்பந்தம், பட்டமளிப்பு விழாக்கள், அனைத்துப் பணிகளும் நிறைவுற்றதும் அகத்தியன் குடும்பத்தாருடன் அமெரிக்கா திரும்புவது, அமெரிக்க அதிபர் இலங்கைக்கு வருவது என்று கதைப்போக்கு நீள்கின்றது.

    பாத்திரப் படைப்புகள்

    ‘நான் என் அம்மாவின் பிள்ளை’ புதினத்தில் இடம்பெறும் கதைப்பின்னலின் ஊடே, நனவோடை உத்தி வழியாகத் தங்கராசா சில பாத்திரங்களைத் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். கதையோட்டத்தில் பல்வேறு பாத்திரங்கள் அறிமுகமாகின்றன. தெவ்வியம்மா, மாணிக்கன், சுவனீ, வேலப்போடியார், இரேவதி, மார்க்கண்டர், யோகராணி, ஆறுமுகம், நாராயணன், பார்வதி அம்மா, ரங்கவடிவேல், ஆனந்தன், சரயு, மெனிக்கே, செல்லம்மா, இளையவர், கோபாலகிருஷ்ணன், மாதவி, மாஅக் கிறகர், நன்சி, தொம்சன், உவட்சன், பற்றீரிசியா, காண்டிராக்டர் சுப்பிரமணியம், அலிஹாஜியார், அப்துல்லா, அதுறலிய, மச்சந்தி, தரணி, தவசி, மகேந்திரன், ஜெகதீஸ்வரி, வரகுணபாண்டியன், வாசுகி, சாமி உள்ளிட்ட பாத்திரங்கள் நம் நெஞ்சைவிட்டு நீங்காதவையாகும்.

    இளையதம்பி தங்கராசா அவர்களின் மண் பற்று இந்தப் புதினத்தில் சிறப்பாக வெளிப்பட்டு நிற்கின்றது. தம் மட்டக்களப்புப் பிரதேசத்தின் இயற்கை வளம், விருந்தோம்பல், வழக்கில் உள்ள மந்திரச்சடங்கு, வழிபாடுகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், மீன்பிடித்தொழில்கள், அறுவடைத்தொழில்கள், உணவுப் பழக்கவழக்கம், மக்களின் திருமண உறவுகள், நாட்டார் வழக்குகள், பாடல்கள், பழமொழிகள், கல்விமுறைகள் என யாவற்றையும் இந்தப் புதினத்தில் பொருத்தமான இடங்களில் அமைத்து, கற்பார்க்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் வழங்கியுள்ளார்.

    மட்டக்களப்புப் பகுதியில் உள்ள அவணம், கிறுகி, குளுத்தி, கொட்டான், பொடியன், நுளம்பன், போடியார், மடைப்பெட்டி, மயண்டை, முல்லைக்காரன், வாவி, வரம்பு, பதைச் சுழுந்து, ஆள்வெருட்டி, உப்பட்டி, வரவை, பூச்சி பட்டை, கொல்லா / விசாள், சேருவக்கால், கரத்தை, தேசிக்காய், குடுகு, பசளை, சவள், வாடி, சல்லு, கூடு, குசினி, களிசான், கோப்பிசம், வக்கடைகள், கண்ணாக்காடு, கரச்சை, திராய் (192), விசளம், வட்டாமடை, கொல்லா, புறியாணி, றீ(டீ), சிக்கின், பிளேன்ரீ போன்ற வழக்குச் சொற்களை இந்த நூலில் பெய்து எழுதியுள்ளார். இலங்கை மக்களுக்குப் புரியும் இச்சொற்கள் தாயகத் தமிழ்மக்களுக்குப் புரிய வாய்ப்பில்லை.

    இளையதம்பி தங்கராசா அவர்கள் கற்பவர்களுக்குச் சலிப்பு ஏற்படாதவாறு பல்வேறு உத்திகளைப் பின்பற்றிப் புதினத்தை உருவாக்கியுள்ளார். பத்தி என்பவனை அறிமுகப்படுத்தி, அவன் அகத்தியனாக நம் இதயத்தில் பதியும்வரை உள்ள பகுதிகள் ஒரு மர்மப் புதினம் படிக்கும் உணர்வை உண்டாக்குகின்றன. அமெரிக்காவிலிருந்து புறப்படும் பத்தி, ஆப்பிரிக்காவில் தரையிறங்கும்பொழுது அகத்தியனாகின்றான். அங்கிருந்து கராச்சிக்குச் சென்று, தங்கி இந்தியாவுக்குப் பயணமாவதும் அவனுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகளும் மிகச் சிறப்பாக உலகியல் நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. கதையின் முக்கியப் பாத்திரங்களாக மாறப்போகும் சரயு, மெனிக்கே ஆகியோரைக் கராச்சியில் சந்திக்கவைத்து, உரையாடல் புனைவுகளால் கதையை மிகச்சிறப்பாக நகர்த்தியுள்ளார்.

    கராச்சியை நோக்கி விமானம் பறந்தபோது தமது பழைய வாழ்க்கையை அகத்தியன் அசைபோடுவதாகப் புதின ஆசிரியர் பழைய நிகழ்வுகளை நமக்கு எடுத்துரைக்கின்றார். தம்மைத் தற்காத்துக்கொள்ளக் கொலைசெய்யவும் துணிந்த அகத்தியனைக் காத்த தெவ்வியம்மாளின் வழியாக அகத்தியனின் இளமை வாழ்க்கை அறிமுகம் செய்யப்படுகின்றது. அகத்தியன் திறமையானவன் என்பதும் அவன் வளர்ச்சி, புகழ்கண்டு மாமன்மகன் மோகன் பொறாமையால் ஆள்வைத்து அடிக்க முயற்சி செய்வதும் அதில் நிகழஇருந்த கொலை தடுக்கப்படுவதும் அதிலிருந்து விடுபட அகத்தியன் வெளிநாட்டுக்குப் புறப்படுவதும் என அமெரிக்கா புறப்பட்டதற்கான புதிர் விடுவிக்கப்படுகின்றது. அகத்தியன் மந்திரக்கலையில் வல்லவன் என்று குறிப்பிடும் வகையில் மட்டக்களப்புப் பிரதேசத்தில் வழக்கில் உள்ள மந்திரம், சடங்கு, அஞ்சன மைபோட்டுப்பார்க்கும் பழக்கம், காட்டுப்பிள்ளையார் வழிபாடு என்று பல செய்திகளைப் புதின முகப்பில் ஆசிரியர் அறிமுகம் செய்கின்றார்.

    இளையதம்பி தங்கராசா அவர்களின் புதினத்தில் தமிழ் இலக்கியச் செய்திகள், திரைப்படப்பாடல்கள், இசைப்பாடல்கள் சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளன. திருமுறைகளையும், கம்பராமாயணத்தையும் (II. 475), பெருங்கதையையும், கீதையையும் பாரதியார், பாரதிதாசன் பாடல்களையும் அயல்நாட்டுப் பழமொழிகளையும் வழக்கில் உள்ள தமிழ்ப் பழமொழிகளையும் பொருத்தமாக ஆண்டுள்ளார். எல்லாளன், துட்டுகைமுனு வரலாற்றையும் உரிய இடத்தில் நினைவூட்டுகின்றார் (II, 476). இவ்வாறு மரபுவழிப்பட்ட செய்திகளையும் முன்னோர் மொழிபொருள்களையும் எடுத்தாளும் உள்ளம் பண்பாடு காக்க முனைவோர்க்கே வாய்த்த ஒன்றாகும். 

    தமிழ்சிங்கள உரையாடல்

    இளையதம்பி தங்கராசாவின் புதினத்தில் சிங்களச் சொற்களும் உரையாடல்களும் பொருத்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கொழும்பு – குருணாகலை செல்பவர்கள் அன்னாசிப் பழங்கள் விற்கும் கடவத்தை என்னும் இடத்தில் இறங்கி அன்னாசிப் பழங்களை வாங்கிக்கொண்டு செல்வார்கள். அகத்தியன் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு செல்லும் வழியில் தேநீர் குடிக்க வண்டியை நிறுத்தியபொழுது, அங்கு,

    “அனாசிக்கெடி ஓணதை மகாத்தையா”

    “றத்தாங் பகட்ட றவும முரிசு கேடி தியணவத?”

    “ஓணதறங் தியனவா மகாத்தையா,

    மகாத்தைஐயாட்ட கெடி கீயதோணே”

    அபிட்ட கெடி விஸ்சக் தோறலா தெண்ட”(பக்கம் 189)

    என்று தொடரும் உரையாடல்கள் சிங்கள-தமிழ் மக்களின் வணிக உறவைக் காட்டும் தொடர்களாகும்.

    மெனிகேயின் தந்தை கராச்சியில் இலங்கை அரசின் தூதுவராகப் பணியாற்றுபவர். தம் மகளுக்குத் திருமண வாழ்க்கை அமைய உள்ள மகிழ்வில் இரகசியமாக மட்டக்களப்பு வருவதும் தன் மகளின் மகிழ்ச்சியான வாழ்க்கையை நினைத்து, மாணிக்கனுக்கு அவளைத் திருமணம் செய்துவைக்க விரும்புவதும், தன் மகளுடன் சிங்களத்தில் உரையாடுவதும் இந்தப் புதினத்தில் நெஞ்சை உருக்கும் பகுதிகளாகும். மெனிகே, “வேண்டாம் தாத்தே”, ”துக்கத்தில் அழவில்லையடா துவே” “பூஞ்சி அம்மே, நங்கி, மல்லிலா, கொகோமத தாத்தே”, “சியலுதெனாம ப்பெயிங் இன்னவா துவே” (பக்கம் II, 132), சீயா, (136)) என்னும் சிங்களச் சொற்களும் உரிய உரையாடல் சூழலில் ஆளப்பட்டுள்ளன.

    மாலு மாலு மாலு
    ரஞ்ஜனீட்ட மாலு
    ரஞ்ஜனீட்ட மாலு கெனவா

    மாலு மாலு மாலு
    ரஞ்ஜனீட்ட மாலு
    ரஞ்ஜனீட்ட மாலு கெனவா

    என்ற இலங்கையில் பாடப்படும் பைலா பாட்டினை அதுறலிய அவர்கள் பாடியதாகக் காட்டியுள்ளது இலங்கை நாட்டின் இசைமுறையை நாம் அறிந்துகொள்ளும் வாய்ப்பாக அமைகின்றது(147).

    கொட்டைகுத்திப் புல்லுக்கு விளக்கம் தருவது (230, 231), புதிர் எடுத்தலும் புதிர் சாப்பிடுவதும் (469, 470), சூடடித்தல், களவட்டிப் பொங்கல் (II 62), பொலிப்பாடல், அறக்குப்புதையல் (II 173), வலதுகால் எடுத்து வைத்தல் (II 188), பாடும் மீன்கள், யானைக்கல் (II 225), சாவல் காக்காவின் சாப்பாட்டுக்கடை, பரவற்கல் (II 252), மீனவர் வாழ்க்கை (II 257), மீன்கடிக்கும் நேரம் (II 262), மடைப்பெட்டி எடுத்தல் (I. 76), றாகத்தான சாப்பாடு (I 199), தாலிக்குப் பொன்னுருக்குதல் (II 282), மட்டக்களப்பு வாவி, மாணிக்கக்கற்கள் (II. 328), கொழுக்கட்டைப்பெட்டி (II. 405) முதலிய செய்திகளோடு விபுலானந்த அடிகளாரின் பணிகள் மற்றும் இசைப்புலமையையும் (I.101), (I. 429, 444), (II 237-240,) உரிய இடங்களில் நினைவு கூருவதும் நாட்டார் மரபைப் போற்றும் இளையதம்பி தங்கராசா அவர்களின் உள்ளத்திற்குச் சான்றாகும். 

    பழமொழிகள்

    தங்கராசா அவர்கள் தம் புதினத்தில் பழமொழிகள், வழக்குச்சொற்கள், பட்டறிவு மொழிகளை மிகுதியாக ஆண்டுள்ளார்.

    “செட்டிக்கு வெள்ளாமை ஜென்மப் பகை”

    “பசு தம்பிரானுக்கு பால் நம்பியானுக்கு”

    “தாரமும் குருவும் தலை எழுத்துப் படி”

    “போன மச்சான் திரும்பி வந்தான்
    பூமணத்தோட”

    “காகமும் இருக்கக் குரும்பட்டியும் அதன்மேல் விழுந்த கதை” (1, 232)

    “ஆத்தாத நாய் கழிக்கோலைக் கடிக்குமாம்” (1, 278)

    “எட்டாத பழம் புளிக்கும்தானே”

    “Good things no cheep and cheep things no good” சீனப் பழமொழி

    “இருண்ட வானத்திலும் ஒருவெள்ளிக்கரை தெரியும்” (1,.331)

    “எறும்புக்கு எருமை மாட்டின் சிறுநீர்,
    ஏகப்பட்ட ஏரியாகத் தெரியுமாம்” (1, 456)

    “பல்லால கிழிக்க வேண்டிய பனங்கிழக்குக்கு
    வல் இட்டுக் கிட்டியும் ஆப்பையும் பாவிப்பது  மாதிரி” (1, 477)

    “கைப்புண்ணைப் பார்ப்பதற்குக்
    கண்ணாடி என்னத்திக்கிடா” (II 477)

    “மந்திரம் கால், மதி முக்கால்”(II 479)

    “அகத்தி ஆயிரம் காய்களைத்தான் காய்த்தாலும் அது புறத்தி புறத்தி தானே”(II,90)

    “முதலைக்குட்டிக்கு நீந்தக் கற்றுக்கொடுக்கத் தேவை இல்லை”(I 29)

    ஆள்பாதி ஆடை பாதி,(I 181),

    “Footwear and headwear” – ஆங்கிலச் சொலவடை

    “தலையால் வருகின்ற செல்வத்தைக் காலால் உதைத்துத் தள்ளிவிடாதே”(I. 295)

    முதலிய பழமொழிகளைப் பொருத்தமாக ஆண்டுள்ளார். இவை நாட்டார் இலக்கியம் குறித்த ஆய்வுலகிற்குப் பயன்படும் செய்திகளாகும்.

    “காத்தான்குடி முஸ்லீம்கள் நண்டு உண்பதில்லை” (IV 140) என்றும் “கரடியனாற்று கட்டித் தயிரையும், வாகனேரித் தேனையும்” (II.165). முருங்கைக் கீரை, முருங்கைக் காயின் மகத்துவம், ஏறாவூர் சந்தை (I, 192), ஆள்வெருட்டி (I 371) பற்றியும் அரிய உண்மைகளைப் பதிவு செய்துள்ளமை தங்கராசாவின் படைப்புத்திறனுக்குச் சான்று பகரும் இடங்களாகும்.

    பில்லிவிடுதல், சூனியம், கொழுந்து முறித்தல், நெட்டை முதலான மந்திரம் தொடர்பான செய்திகளையும் தம் புதினத்தில் விளக்குகின்றார்.

    இலங்கையின் சிறப்பு இசைக்கூறாகப் பொலிப்பாடல்கள் விளங்குகின்றன. நாட்டார் இசையில் சிறப்பிடம் பெறும் பொலிப்பாடல்களை உழவர்கள் ஆர்வமுடன் பாடுவது மட்டக்களப்புப் பிரதேசத்தில் வழமையான நிகழ்வாகும். இந்தப் புதினத்தில் பொலிப் பாடல்கள் உயிர்பெற்று விளங்குகின்றன,

    “தாயே பொலி, தம்பிரானே பொலி
    பூமிபொலி, பூமாதேவித் தாயே
    மண்ணின் களமே, மாதாவே நிறைகுடமே
    பொன்னின் களமே, பொலி பொலியோ!

    முன்னங்கால் வெள்ளையல்லோ
    பொலியம்மா தாயே – நீ
    முகம் நிறைந்த சீதேவி
    பொலி பொலியோ!

    வெள்ளி வெளிச்சத்திலே – நீ
    விளையாடி வா பொலியோ
    வாரி சொரியப் பொலி தன்ம தாயே – இந்த
    வளநாடு பொன் சொரியப் பொலி பொலியோ” (II, 74)

    என்பன பொலிப்பாட்டுக்குச் சான்றாகும் பாடல்களாகும்.

    குழுக்குறிச் சொற்கள்

    மட்டக்களப்புப் பிரதேசத்தில் உழவுத்தொழிலின்பொழுது சூடடிக்கும் இடத்தில் சில குழூக்குறிச் சொற்களைத்தான் பயன்படுத்துவார்கள் என்று கூறி, அதற்குரிய காரணத்தையும் புதின ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

    இலங்கையை இராவணன் ஆண்டபொழுது நிகும்பலை யாகம் செய்தான். அந்த யாகத்திலிருந்து பல பூதங்கள் வெளியேறின. அந்தப் பூதங்கள் சக்தி வாய்ந்தவை. இவைகளைக் கொண்டு இராவணன் மக்களுக்குத் தேவையான ஆக்கப் பணிகளைச் செய்தான் எனவும் அவன் மறைவுக்குப் பிறகு அந்தப் பூதங்கள் 108-உம் கைவிடப்பட்ட நிலையில் உணவுதேடி அங்கும் இங்கும் அலைந்தன எனவும், பகலில் குகை ஒன்றில் இவை ஒளிந்துகொள்வதாகவும் மக்கள் நம்பினர். இராம பக்தையாகிய ஆடக சௌந்தரி என்னும் இளவரசி இராம மந்திரம் ஓத, அப்பூதங்கள் அவளை வணங்கி, அவள் அடிபணிந்தன. அவற்றை அழைத்துச்சென்று, நாளொன்றுக்கு 24 கலம் அரிசிக் கஞ்சி வழங்குமாறு இளவரசி தம் பணியாளர்களுக்குக் கட்டளையிட்டாள். அந்தப் பூதங்களைக் கொண்டு பல நீர்த்தேக்கங்களைக் கட்டினாள் எனவும் 140-ஆம் வயதில் அவள் இறையடி சேர்ந்த பின்னர் மீண்டும் அப்பூதங்கள் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் திரிகின்றன எனவும் மக்கள் நம்புகின்றனர். எனவே சூடடிக்கும் களங்களில் மக்களின் வழக்கில் உள்ள சொற்களைச் சூடுமிதிப்பவர்கள் பேசினால் அப்பூதங்கள் புரிந்துகொண்டு தொல்லை விளைவிக்கும் என நம்பி, அதனால் வயற்களத்தில் பலவகையான குழுக்குறிச் சொற்களை மக்கள் பயன்படுத்துகின்றனர் என்று கூறி, 32 குழுக்குறிச் சொற்கள் நமக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    அவையாவன:

    1. பொலி – நெல்
    2. களம் – சூடுமிதிக்கும் இடம்
    3. வெள்ளம் / கலங்கல் – தண்ணீர்
    4. வேலைக்காரன் – வைக்கோலைக் கிளறும் வளைதடி
    5. போர் – சூடு – நெற்கதிர் குவியல்
    6. வாரிக்காலன் – சூடுமிதிக்கும் மாடுகள்
    7. கரைஞ்சான் – வாழைப்பழம்
    8. வலிச்சான் – உறட்டி
    9. வெள்ளோடன் – தேங்காய்
    10. கூரைக்கோடு – வீடு
    11. பொலிக்கொடி – வைக்கோல் / வைக்கோல் கயிறு
    12. கணக்கன் – மரைக்கால்
    13. குஞ்சுவாயன் – கைப்பெட்டி
    14. பெருவாயன் – கடகம்
    15. நெடுமுளவன் – கயிறு
    16. கட்டு – வா / போ
    17. பெருக்கம் – குறைவு / முடிந்துவிட்டது
    18. மின்னிக்கட்டுதல் – நித்திரை கொள்ளல்
    19. நெடுமின்னி – மரணம்/ இறப்பு
    20. வாடி கட்டுதல் – ஓரம் கட்டுதல்(களவட்டியின்)
    21. வருணன் – மழை
    22. கூளக்கையன்- பேய் – பூதம்
    23. பெருமாள் – ஆண்பிள்ளை
    24. அடைக்கலச்சல்லி – பெண்பிள்ளை
    25. கடற்கரும்பு – மீன்
    26. கருங்காய் – பாக்கு
    27. புகைஞ்சான் – புகையிலை
    28. களம் பொலிதல் – சூடடித்து முடிதல்
    29. வெள்ளப்பெருக்கம் – தண்ணீர் குறைவு – இல்லை
    30. அரக்கன் – சூடு மிதிக்கும் முல்லை மாடு
    31. வெட்டி வாயன் – மண்வெட்டி
    32. அவுரி – பொலிதூற்றப் பாவிக்கப்படும் முக்காலி

    இளையதம்பி தங்கராசா அவர்கள் இசை ஈடுபாடும் நாட்டிய ஈடுபாடும் உடையவர் என்பதை இந்த நூலில் எடுத்து வழங்கியிருக்கும் இசைப்பாடல்களிலிருந்தும் நாட்டியம் குறித்த செய்திகளிலிருந்தும் அறிந்துகொள்ளலாம். மாதவி அம்மா, கோபால கிருஷ்ணன், மச்சந்தி, அகத்தியன், சரயு உள்ளிட்ட யாவரும் ஒவ்வொரு கலைகளில் தேர்ந்த அறிவுடையவர்களாக இந்தப் புதினத்தில் காட்டப்பட்டுள்ளனர். இவர்கள் இசையிலும் நாட்டியத்திலும் சிறப்புற்று விளங்குவதாகப் புதின ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

    “மகா கணபதி”,

    “எந்தரோ மகானுபாவலு அந்தரீக்கு வந்தனம்”(II, 181)

    “தலையைக் குனிந்த தாமரையே (II,183),

    ஓர் ஆயிரம் பார்வையிலே (II, 184),

    “ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை

    காணக் கண் ஆயிரம் வேண்டாமோ” (II 209 ),

    “தங்கத் தடாகத்தில்” (II 234),

    “மன்மத லீலையை”

    “நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே”

    “தண்டலை மயில்கள் ஆட” (II 256),

    போன்ற இசைத்தொடர்புடைய வரிகளை ஆண்டுள்ளமை இவர்தம் இசையீடுபாட்டுக்குச் சான்று பகர்வனவாகும்.

    உணவு வகைகள்

    ஈழத்தில் வழக்கில் இருந்த உணவுகளை இந்த நூலாசிரியர் வாய்ப்பு நேரும் இடங்களில் எல்லாம் பதிந்துவைத்துள்ளார். இவற்றைச் சமைப்பதையும், பரிமாறுவதையும் நயம்பட உரைக்கும் நூலாசிரியர் கற்போருக்கு இந்த உணவு வகைகளின்மேல் ஈர்ப்பு உண்டாகும்படிச் செய்துவிடுகின்றார்.

    அவற்றுள், கைக்குத்தரிசி மாவால் தயார் பண்ணப்பட்ட இடியாப்பம், கூனி இறால் சுண்டல், ஒட்டி மீன் தீயக்கறி, தேங்காய்ப்பூ போட்டு அவித்த அரிசிமாப்புட்டு, மணலைமீன் கறி, இறால் பாலணம், பாலப்பம், இறால் கருவாட்டுச் சம்பல் (II, 192), இறால் கறி, மாசிச்சுண்டல், இட்டிலி, தோசை, இஞ்சிப் பிளையின் டீ, பறங்கி வாழைக்குலை, முட்டைக் கொத்து, சிக்கின் கொத்து, இறால், மீன் பொரியல், கொத்து ரொட்டி, சினை நண்டுப் பொரியல், மட்டுறால் பொரியல், உவைன், நண்டின் சினை, முட்டை, பச்சை மிளகாய் கீறல், ஒம்லெட், ஒட்டி மீனும் முருங்கைக்காயும் சேர்த்துச் சமைத்த வெள்ளைக்கறி, முட்டையப்பம், குத்தரிசி மா இடியாப்பம், மட்டன் குறுமா, சிக்கின் புரியாணி, கரடியனாற்றுக் கட்டித்தயிர், வாகரைத்தேன், கட்டுச்சோறு, கோப்பி, இடியாப்பம், ஆணம், கட்டித்தயிர், தேன், புட்டு, பிஞ்சுப் பலாக்காயுடன் மாசியும் போட்டுக் காய்ச்சிய ஆணம், மாம்பழ ஒட்டி மீன் தீயக்கறி, நண்டுச்சினை ஓம்லெட், மாம்பழங்கள், மணலைமீன் பொரியல், பால் றால் பொரியல், சீனி காய்ச்சி வார்த்த முந்திரியம் பருப்புகள், நண்டு.றால், கணயான் கருவாடு போட்ட கத்தரிக்காய் குழம்பு, துண்டு, முருங்கை இலைச்சுண்டல், முருங்கைக்காய் கறி, கட்டுச்சோறும் கட்டாப்பாரை கருவாட்டுக்கறி, நாட்டுக்கோழிக் கறி, சீனி அப்பம், சாவல் ஸ்பெசல் மட்டுறால் (Tigher shrimps), கீரிமீன் பொரியல், முட்டைக்கொத்து, முடிச்சுசோறு (Lump rice) என மட்டக்களப்புப் பகுதியில் பரிமாறப்படும் உணவு வகைகளை அறியும்பொழுது தமிழர்களின் உணவுப்பழக்கம் நமக்கு அறிமுகம் ஆகின்றது.

    “நான் என் அம்மாவின் பிள்ளை” என்ற புதினம் பல்வேறு உண்மைகளைத் தமிழ் உலகுக்குச் சொல்லி நிற்கின்றது. கல்விஅறிவில் எந்த உயர்நிலைக்குச் சென்றாலும் பிறந்த மண்ணையும் மக்களையும் நினைக்க வேண்டும்; ஒரு மனிதனுக்குத் தேவையான உயர்ந்த பண்புகளுள் நன்றியுணர்வு குறிப்பிடத்தக்க பண்பாகும்; எளியவர்களுக்கும், தேவையானவர்களுக்கும் உதவுவதற்கு வாய்ப்பு அமையும்பொழுது முன்னுரிமை தந்து உதவ வேண்டும்; மரபுகளையும், பழைமையையும் போற்றுவதில் ஆர்வம்காட்ட வேண்டும்; பெற்றோரை மதிப்பதில் அனைவரும் ஆர்வம்காட்ட வேண்டும் என்பன போன்ற அறவுரைகளை இந்தப் புதினம் வழியாக அறியமுடிகின்றது. அதற்குத் தகுந்தாற்போல் பாத்திரப் படைப்புகள் வார்க்கப்பட்டுள்ளன.

    அகத்தியன் போன்ற மக்கள் பற்றாளர்கள், அறிவை ஆக்கப்பணிகளுக்குப் பயன்படுத்த முன்வந்துள்ளமையும், தம் செல்வத்தையும், செல்வாக்கையும் மக்கள் முன்னேற்றத்திற்கு வழங்கியுள்ளதையும் புதினம் உணர்த்தி நிற்கின்றது.

    பல இனங்களைச் சேர்ந்தவர்களும், பல மதங்களைச் சேர்ந்தவர்களும், பல தொழில்களைச் செய்பவர்களும் இந்தப் புதினத்தில் தோன்றித் தங்கள் மரபுகளைப் பேணியுள்ளதை நுட்பமாகப் புதினத்தைப் படிக்கும்பொழுது விளங்கிக்கொள்ளலாம். தமிழர்களின் விருந்தோம்பல் பண்பை இந்தப் புதினம் பல இடங்களில் அடையாளப்படுத்தியுள்ளது. உழவுத் தொழிலை மேற்கொள்ளும் மக்கள் காலவரிசையில் செய்யும் தங்கள் தொழில்சார்ந்த முன்னேற்பாடுகளும் வேலைகளும் மிகச்சரியாக இந்தப் புதினத்தில் காட்டப்பட்டுள்ளன. நடவு தொடங்கி அறுவடை வரையிலான அனைத்துப் பணி நிலைகளையும் புதின ஆசிரியர் கதையின் வழியாகக் கட்டமைத்துக் காட்டியுள்ளார்.

    மட்டக்களப்புப் பிரதேசத்தின் முதன்மைத் தொழில்களுள் ஒன்றான மீன்பிடித்தொழில் குறித்த பல்வேறு நுட்பங்களை இந்தப் புதினத்தில் புதின ஆசிரியர் படைத்துள்ளார். மீன்பிடி கருவிகள், மீன்பிடி முறைகள், மீன்வகைகள், மீன் சமைத்தல், மீன் விற்பனை, மீன் வலைகள், மீனவர்களின் சோகம் நிறைந்த வாழ்க்கை, படகுகள், கட்டுமரங்கள் குறித்த பல விவரங்களை இந்தப் புதினம் வழியாக அறியமுடிகின்றது.

    அகத்தியன், மாணிக்கம், ஆனந்தன், தரணி உள்ளிட்டவர்களின் திருமணத்தை ஒட்டி நடைபெறும் பல்வேறு நடைமுறைகள், சடங்குகள், பழக்கவழக்கங்கள், பண்பாட்டுக்கூறுகள், உடைகள், யாவும் தமிழர்களிடம் தொன்றுதொட்டுக் காணப்படும் மரபுத்தொடர்ச்சியை உலகுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கும். திருமணத்தின்பொழுது செய்யப்படும் தாலி செய்தல், குண்டு செய்தல் என்பன முக்கியச் செயல்களாகும். அதனை நினைவிற்கொண்ட புதின ஆசிரியர், அகத்தியன் தந்தையார் வழியாக தம் மரபுநிலைப் பழக்கவழக்கங்களை அழகாக மொழிந்துள்ளார். இன்றைய வேலை வாய்ப்பு, பணிச்சூழலில் பெண்கள் தாலி அணிவதில் உள்ள சிக்கல்களை நினைவூட்டி, அதே பொழுது தாலியின் அவசியத்தை வலியுறுத்துவது அவரின் உள்ள விருப்பத்தை நமக்குக் காட்டுகின்றது. மெட்டி அணிதல், மோதிரம் எடுத்தல், வலதுகால் எடுத்துவைத்தல், கெட்டிமேளம் போன்ற சடங்குகளின் முக்கியத்துவத்தைப் புதின ஆசிரியர் விளக்கிச் செல்வது அவர்தம் பல்துறைப் புலமையை மதிப்பிட உதவுகின்றது.

    சிங்கள மக்களின் ஆடை அலங்கார முறை, பெண்களின் திருமணத்தின்பொழுது வழங்கும் சீர்ப்பொருள்கள், அவர்களின் நாகரிகமும், வளமும் நிறைந்த பொருளாதார வாழ்க்கையை மெனிகே திருமணத்தின் வழியாகவும், மெனிகேயின் தாயினுக்குக் கொடுக்கப்பட்ட சீர்ப்பொருள்களின் வழியாகவும் அறிந்துகொள்ளமுடிகின்றது. முதல் மனைவியின் மகளான மெனிகே மீது அவளின் தந்தை கொண்டிருந்த பாசமும், மகளுக்குத் தன் இரண்டாம் மனைவி மற்றும் பிள்ளைகளைப் பிரிந்துவந்து, அவளுக்குத் திருமணம் நடைபெற உள்ள சூழலை அறிந்து அவர் அடைந்த மகிழ்ச்சியும் படிப்பவர்களைக் கரைந்துருகச் செய்யும் பகுதிகளாகும். மெனிகேயின் தாத்தா மெனிகேக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று சேர்த்துவைத்துள்ள சீதனப் பொருள்களை அறியும்பொழுது ஒட்டுமொத்தக் குடும்பமும் மெனிகே மீது வைத்திருந்த அன்பும், அவளுக்கு அவர்கள் எதிர்பார்த்த திருமண வாழ்வு அமைந்த முறையும் புதினத்தின் சிறப்புப் பகுதிகளாகும். பேராதேனியப் பல்கலைக்கழகத்தின் பௌதீகப் பேராசிரியர் மகன் லலித், சிறீமா திருமணம் பற்றிய குறிப்புகளிலும் சிங்கள மக்களின் செல்வச் செழிப்பைக் காணமுடிகின்றது (I. 261).

    முசுலிம் மக்களின் பண்பாடு, பழக்கவழக்கம், வணிகம், மீன்பிடித்தொழில் குறித்த செய்திகளையும் புதின ஆசிரியர் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். காலம் காலமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள முசுலீம் மக்களின் பிரதிநிதிகளாக வெள்ளையன் காக்காவும், சுல்தான் காக்காவும், மீன் வியாபாரி செய்யதும் காட்டப்படுகின்றனர். பீதாம்பரம் என்னும் மீன்பிடிக்காரர், மெண்டிஸ் போன்றவர்களையும் கடல்பயணத்தில் காண முடிகின்றது. சட்டத்திற்குப் புறம்பாக மீன்பிடிப்பதற்கான காரணங்களையும் இந்தப் புதினம் குறிப்பாகச் சுட்டுகின்றது.

    மட்டக்களப்பு வாவியில் மீன்பாடும் பகுதியையும் மீன்கள் பாடுவதற்கான காரணத்தையும் நமக்கு அங்கு வழங்கும் பல்வேறு செய்திகளின் அடிப்படையில் புதின ஆசிரியர் வழங்கியுள்ளார். விபுலானந்த அடிகள் அவர்கள் மீன்பாடும் செய்திகுறித்தும் இசை குறித்தும் சொன்ன செய்திகளை புதினம் பொருத்தமாக நமக்குக் அறிமுகம் செய்துள்ளது.

    இலங்கையில் பார்த்து மகிழத்தக்க கல்லடி லேடி மஅனிங் பாலம், பாசிக்குடா கடற்கரை, பூநொச்சிமுனைக் கடற்கரை, கதிர்காமம், அறுகம்பே வாடிவீடு, குமணை சரணாலயம், பொத்துவில் வில்லுக்குளத்து யானைக்கூட்டம் போன்ற இடங்களையும் அந்த இடத்தின் சிறப்புகள் குறித்த செய்திகளையும் நமக்கு இந்தப் புதினம் வழியாக ஆசிரியர் விளக்கியுள்ளார்.

    புதினத்துடன் தொடர்புடைச் செய்திகளை விளக்கும் வண்ணப்படங்களையும் ஆசிரியர் இணைத்துள்ளமை மட்டக்களப்புப் பிரதேசப் பழக்கவழக்கங்களை அறிய விரும்புவார்க்குப் பேருதவிபுரியும்.

    “நான் என் அம்மாவின் பிள்ளை” என்ற அரிய புதினம் புலம்பெயர்ந்த தமிழர்களின் பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் உரிய நூலாக உள்ளது. பெரும் தொகுதியை உருவாக்கியதன் வழியாக மட்டக்களப்புப் பகுதியின் சிறப்பினையும் பண்பாட்டு மரபுகளையும் நிலைப்படுத்தி, வாழ்விக்க வழிசெய்த இளையதம்பி தங்கராசா நம் பாராட்டுக்கும் மதிப்புக்கும் உரியவர்.

    *****

    நூல்: நான் என் அம்மாவின் பிள்ளை(இரண்டு பகுதிகள்)
    ஆசிரியர்: நாவற்குடா இளையதம்பி தங்கராசா, கனடா வெளியீடு: 2015

     

     

    Share
  • காந்தியம் – ஒரு வாழ்க்கைநெறி

    –முனைவர் இராம. இராமமூர்த்தி

    அண்ணல் காந்தியடிகளைத் தேசப்பிதா என்று மிகப் பலரறிவர்; போற்றுவர். இந்திய விடுதலைக்கு வித்திட்ட மகான் என்பர்; அகிம்சைப் போராட்ட வீரர் எனப் புகழுவர். சத்தியமே பேசிய மாமனிதர், எளியவாழ்க்கை வாழ்ந்த உத்தமர் என்றெல்லாம் ஏத்துவர். இப்பாராட்டுரைகள் – புகழுரைகள் உண்மையேயாகும்.

    தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் காந்தியடிகளை மிக நன்றாக அறிந்தவர். அதுமட்டுமன்று! காந்தியநெறியைப் பின்பற்றியொழுகிய மிகச்சிலருள் திரு.வி.க. குறிப்பிடத்தக்கவர். அதனாலேயே காந்தியடிகளைப் பற்றித் தாமெழுதிய நூலுக்கு ‘மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும்’ எனப் பெயரிட்டழைத்தார்.

    சால்புள்ள மனிதவாழ்க்கை, அதாவது குறிக்கோளுடைய நன்மனித வாழ்வு – ‘An ideal human life’ எவ்வாறிருக்குமெனில், அஃது காந்தியடிகளின் வாழ்க்கையைப் போல ஒளிவுமறைவு சிறிதுமின்றிச் ’சத்திய சோதனை’யாகக் காட்சியளிக்குமென்பார் தமிழ்த்தென்றல்.

    அவர்கண்ட காந்தியடிகளை – அம் மகாத்மாவை, இக்கால இளந்தலைமுறையினர் அறிதல் வேண்டும். அறிந்துகொள்வது அவர்கட்கு மட்டுமல்ல, பாரதப் பெருநாட்டிற்கும் நன்மை பயப்பதாகும். அண்ணல் காந்தியடிகள், வாழ்க்கை நெறியாகப் பன்முகப் பார்வையை யளித்துள்ளார். அவர் இந்திய நாட்டிற்கு, இந்தியர்கட்குத் தேவையான கல்விமுறை பற்றிச் சிந்தித்துள்ளார். அவர்தம் கல்விச் சிந்தனையின் செயல்வடிவமே ’ஆதாரக் கல்வித் திட்டம்’ என்றழைக்கப்படும் அடிப்படைக் கல்வித்திட்டமாகும். இதனையே ஆங்கிலத்தில் ‘Basic Education’ என்று குறிப்பிடுவர்.’வார்தாக் கல்வித் திட்டம்’ எனவும் (Wardha Scheme of Education) இதனை வழங்குவர்.

    இதற்குச் செயல்வடிவம் தந்து நடைமுறைப்படுத்த அமைப்புமுறையை வகுத்தளித்தவர் காலஞ்சென்ற குடியரசுத் தலைவர் ஜாஹீர் ஹுசைன் அவர்கள். இக்கல்வித் திட்டம் கைத்தொழில் ஒன்றை அடிப்படையாக – முதன்மையாகக் கொண்டது. இக்கல்வித்திட்டம் மனிதனின் உடல், உள்ளம், ஆன்மா ஆகிய முத்திற வளர்ச்சிக்கும் துணைபுரிவதாகும்.

    காந்தியடிகள் இந்தியர்களின் மேம்பாட்டிற்காகக் கல்வித்திட்டம் மட்டும் அளிக்கவில்லை. சிறந்த பொருளாதாரத் திட்டத்தையும் வகுத்துத் தந்தார். காந்தியடிகளின் பொருளாதாரத் திட்டம் கிராமியப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவில் கிராமங்கள் ஏராளம். சாதாரண மக்களே கோடிக்கணக்கில் வாழுகின்ற நாடு பாரதநாடு. கைத்தொழிலை – சிறுதொழிலை அடிப்படையாகக் கொண்டது காந்தியின் பொருளாதாரத் திட்டம். இஃது ஓர் தற்சார்புப் பொருளாதாரத் திட்டமாகும். காந்தியடிகளுக்கு செய்யும் செயலின் முடிவு மட்டும் முக்கியமன்று! அம்முடிவினை நோக்கிச்செல்லும் வழியும் நல்லவழியாக அமைதல் வேண்டும். பழியைத் தரூஉம் தீயவழியில் வரும் செல்வத்தை அவர் ஒருபோதும் விரும்பியதில்லை.

    நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
    அன்றே ஒழிய விடல்
    (113) எனும் வள்ளுவத்தை ஒத்தது அண்ணலில் வாழ்க்கைநெறி.  

    ஆனால் தற்காலப் பொருளாதார மேதைகளான ஆடம் ஸ்மித் (Adam Smith – pioneer of political economy), ஆல்பிரட் மார்ஷல் (Alfred Marshall – one of the most influential economists of his time) போன்றோர் தம்முடைய திட்டங்களின் இலக்குகளைப் பற்றிப் பேசுவரேயன்றி, அதற்கு அவர்கள் மேற்கொள்ளும் பாதையினைப் பற்றிக் கவலைப்பட்டாரில்லை. மேனாட்டாரைச் சொல்வானேன்? நம் இந்தியப் பொருளாதார அறிஞர் சாணக்கியர்கூட முடிவிற்கே – இலக்கிற்கே முதன்மை தந்துள்ளார். வழியைப் பற்றிச் சிறிதும் கவலவில்லை.

    நேரிய வழியை மையமாகக்கொண்ட காந்தியப் பொருளாதாரத் திட்டத்தையே, காலஞ்சென்ற காந்தியப் பொருளாதார மேதை ஜே. சி. குமரப்பா (J. C. Kumarappa – is credited for developing Gandhian economics) அவர்கள், தாய்மைப் பொருளாதாரத் திட்டம் என்று குறிப்பிடுகின்றார்.

    கல்வியும் பொருளாதாரமும் மட்டுமல்ல; எளிய வாழ்க்கைமுறையையும் நமக்குக் காட்டியவர் காந்தியடிகள். மறந்தும் பகைவர்க்கும் இன்னாசெய்வதை அறியாதவர் அம்மகான். ஆம், அரசியல் எதிரிகளிடமும் பகையற்ற போராட்டமுறையை நடத்திக் காட்டியவர்.

    இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
    என்ன பயத்ததோ சால்பு
    எனும் குறளுக்குச் சான்றாய்த் திகழ்ந்தவர் அண்ணல் காந்தியடிகள்.

    வன்முறையை எந்தவடிவிலும் விரும்பாத அந்தப் பெருந்தகை, அகிம்சை நெறியை அரசியலில் ஓர் ஆயுதமாகக் கொண்டவர் – கண்டவர் ஆவார். தனிவாழ்க்கையிலும் சத்தியத்தை – வாய்மையைப் பேசுவதையே தன் நோன்பாகப் பின்பற்றி வாழ்ந்தவர். உள்ளத்தாற் பொய்யா தொழுகியதால் உலகத்தார் உள்ளத்துளெல்லாம் அவர் உறைந்தார்; நிறைந்தார்.

    காந்தியாரிடம் விளங்கிய மற்றுமோர் உயர்பண்பு காலந்தவறாமை. புலால் உண்ணாமை, மது அருந்தாமை போன்ற தனித்த உயர்பண்புகளாலும் காந்தியார் உலகிற்கோர் எடுத்துக்காட்டாய் விளங்குகின்றார். அதனாலேயே அவர் புகழொளி உலகெங்கும் பரவிக்கொண்டிருக்கின்றது.  

    எனவே, இந்தியர்களின் எதிர்காலம் ஒளிமயமாய்த் திகழ்ந்திட, காந்திய நெறியைப் போற்றுவோம்; அந்நெறி பற்றி ஒழுகுவோம்; ஏனெனில், காந்தியம் ஒரு கோட்பாடன்று; அது மானுடர் கைக்கொள்ளவேண்டிய வாழ்க்கைநெறி!

    Share