காந்தியம் – ஒரு வாழ்க்கைநெறி
–முனைவர் இராம. இராமமூர்த்தி
அண்ணல் காந்தியடிகளைத் தேசப்பிதா என்று மிகப் பலரறிவர்; போற்றுவர். இந்திய விடுதலைக்கு வித்திட்ட மகான் என்பர்; அகிம்சைப் போராட்ட வீரர் எனப் புகழுவர். சத்தியமே பேசிய மாமனிதர், எளியவாழ்க்கை வாழ்ந்த உத்தமர் என்றெல்லாம் ஏத்துவர். இப்பாராட்டுரைகள் – புகழுரைகள் உண்மையேயாகும்.
தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் காந்தியடிகளை மிக நன்றாக அறிந்தவர். அதுமட்டுமன்று! காந்தியநெறியைப் பின்பற்றியொழுகிய மிகச்சிலருள் திரு.வி.க. குறிப்பிடத்தக்கவர். அதனாலேயே காந்தியடிகளைப் பற்றித் தாமெழுதிய நூலுக்கு ‘மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும்’ எனப் பெயரிட்டழைத்தார்.
சால்புள்ள மனிதவாழ்க்கை, அதாவது குறிக்கோளுடைய நன்மனித வாழ்வு – ‘An ideal human life’ எவ்வாறிருக்குமெனில், அஃது காந்தியடிகளின் வாழ்க்கையைப் போல ஒளிவுமறைவு சிறிதுமின்றிச் ’சத்திய சோதனை’யாகக் காட்சியளிக்குமென்பார் தமிழ்த்தென்றல்.
அவர்கண்ட காந்தியடிகளை – அம் மகாத்மாவை, இக்கால இளந்தலைமுறையினர் அறிதல் வேண்டும். அறிந்துகொள்வது அவர்கட்கு மட்டுமல்ல, பாரதப் பெருநாட்டிற்கும் நன்மை பயப்பதாகும். அண்ணல் காந்தியடிகள், வாழ்க்கை நெறியாகப் பன்முகப் பார்வையை யளித்துள்ளார். அவர் இந்திய நாட்டிற்கு, இந்தியர்கட்குத் தேவையான கல்விமுறை பற்றிச் சிந்தித்துள்ளார். அவர்தம் கல்விச் சிந்தனையின் செயல்வடிவமே ’ஆதாரக் கல்வித் திட்டம்’ என்றழைக்கப்படும் அடிப்படைக் கல்வித்திட்டமாகும். இதனையே ஆங்கிலத்தில் ‘Basic Education’ என்று குறிப்பிடுவர்.’வார்தாக் கல்வித் திட்டம்’ எனவும் (Wardha Scheme of Education) இதனை வழங்குவர்.
இதற்குச் செயல்வடிவம் தந்து நடைமுறைப்படுத்த அமைப்புமுறையை வகுத்தளித்தவர் காலஞ்சென்ற குடியரசுத் தலைவர் ஜாஹீர் ஹுசைன் அவர்கள். இக்கல்வித் திட்டம் கைத்தொழில் ஒன்றை அடிப்படையாக – முதன்மையாகக் கொண்டது. இக்கல்வித்திட்டம் மனிதனின் உடல், உள்ளம், ஆன்மா ஆகிய முத்திற வளர்ச்சிக்கும் துணைபுரிவதாகும்.
காந்தியடிகள் இந்தியர்களின் மேம்பாட்டிற்காகக் கல்வித்திட்டம் மட்டும் அளிக்கவில்லை. சிறந்த பொருளாதாரத் திட்டத்தையும் வகுத்துத் தந்தார். காந்தியடிகளின் பொருளாதாரத் திட்டம் கிராமியப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவில் கிராமங்கள் ஏராளம். சாதாரண மக்களே கோடிக்கணக்கில் வாழுகின்ற நாடு பாரதநாடு. கைத்தொழிலை – சிறுதொழிலை அடிப்படையாகக் கொண்டது காந்தியின் பொருளாதாரத் திட்டம். இஃது ஓர் தற்சார்புப் பொருளாதாரத் திட்டமாகும். காந்தியடிகளுக்கு செய்யும் செயலின் முடிவு மட்டும் முக்கியமன்று! அம்முடிவினை நோக்கிச்செல்லும் வழியும் நல்லவழியாக அமைதல் வேண்டும். பழியைத் தரூஉம் தீயவழியில் வரும் செல்வத்தை அவர் ஒருபோதும் விரும்பியதில்லை.
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல் (113) எனும் வள்ளுவத்தை ஒத்தது அண்ணலில் வாழ்க்கைநெறி.
ஆனால் தற்காலப் பொருளாதார மேதைகளான ஆடம் ஸ்மித் (Adam Smith – pioneer of political economy), ஆல்பிரட் மார்ஷல் (Alfred Marshall – one of the most influential economists of his time) போன்றோர் தம்முடைய திட்டங்களின் இலக்குகளைப் பற்றிப் பேசுவரேயன்றி, அதற்கு அவர்கள் மேற்கொள்ளும் பாதையினைப் பற்றிக் கவலைப்பட்டாரில்லை. மேனாட்டாரைச் சொல்வானேன்? நம் இந்தியப் பொருளாதார அறிஞர் சாணக்கியர்கூட முடிவிற்கே – இலக்கிற்கே முதன்மை தந்துள்ளார். வழியைப் பற்றிச் சிறிதும் கவலவில்லை.
நேரிய வழியை மையமாகக்கொண்ட காந்தியப் பொருளாதாரத் திட்டத்தையே, காலஞ்சென்ற காந்தியப் பொருளாதார மேதை ஜே. சி. குமரப்பா (J. C. Kumarappa – is credited for developing Gandhian economics) அவர்கள், தாய்மைப் பொருளாதாரத் திட்டம் என்று குறிப்பிடுகின்றார்.
கல்வியும் பொருளாதாரமும் மட்டுமல்ல; எளிய வாழ்க்கைமுறையையும் நமக்குக் காட்டியவர் காந்தியடிகள். மறந்தும் பகைவர்க்கும் இன்னாசெய்வதை அறியாதவர் அம்மகான். ஆம், அரசியல் எதிரிகளிடமும் பகையற்ற போராட்டமுறையை நடத்திக் காட்டியவர்.
“இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு எனும் குறளுக்குச் சான்றாய்த் திகழ்ந்தவர் அண்ணல் காந்தியடிகள்.
வன்முறையை எந்தவடிவிலும் விரும்பாத அந்தப் பெருந்தகை, அகிம்சை நெறியை அரசியலில் ஓர் ஆயுதமாகக் கொண்டவர் – கண்டவர் ஆவார். தனிவாழ்க்கையிலும் சத்தியத்தை – வாய்மையைப் பேசுவதையே தன் நோன்பாகப் பின்பற்றி வாழ்ந்தவர். உள்ளத்தாற் பொய்யா தொழுகியதால் உலகத்தார் உள்ளத்துளெல்லாம் அவர் உறைந்தார்; நிறைந்தார்.
காந்தியாரிடம் விளங்கிய மற்றுமோர் உயர்பண்பு காலந்தவறாமை. புலால் உண்ணாமை, மது அருந்தாமை போன்ற தனித்த உயர்பண்புகளாலும் காந்தியார் உலகிற்கோர் எடுத்துக்காட்டாய் விளங்குகின்றார். அதனாலேயே அவர் புகழொளி உலகெங்கும் பரவிக்கொண்டிருக்கின்றது.
எனவே, இந்தியர்களின் எதிர்காலம் ஒளிமயமாய்த் திகழ்ந்திட, காந்திய நெறியைப் போற்றுவோம்; அந்நெறி பற்றி ஒழுகுவோம்; ஏனெனில், காந்தியம் ஒரு கோட்பாடன்று; அது மானுடர் கைக்கொள்ளவேண்டிய வாழ்க்கைநெறி!