இலக்கியம்கவிதைகள்

தீவாக்கிய தொலைப்பேசி

 

 

பாவலர் கருமலைத்தமிழாழன்

Girl hand touching screen on modern mobile smart phone. Close-up image with shallow depth of field focus on finger.

செல்லிடக்கை    அலைப்பேசி    என்றே    இன்று

செப்புகின்ற   அறிவியலின்    பேசி   யாலே

இல்லத்தில்    இருந்தபடி     உலகில்    எங்கோ

இருப்பவரைத்   தொடர்புகொண்டு    பேசு   கின்றோம்

செல்கின்ற     இடத்திருந்தே    வீட்டா    ரோடு

செய்திகளைப்    பரிமாறி    மகிழு    கின்றோம்

எல்லைகளை    நாடுகளைக்    கடந்தி   ருந்தும்

எதிர்நின்று   பேசுதல்போல்   பேசு   கின்றோம் !

 

எழுத்தாலே    அனுப்பிவைத்த    செய்தி   தம்மை

ஏற்றவகை    படங்களொடு    அனுப்ப   லானோம்

கழுத்துவலி   எடுக்கமேசை    முன்ன   மர்ந்து

கணினியிலே    செய்கின்ற   பணியை  யெல்லாம்

அழுத்திவிரல்    படுத்தபடி   சாய்ந்த   மர்ந்தும்

அடுத்தஊர்க்குச்   செலும்போதும்   செய்ய   லானோம்

பழுதின்றி   முகநூலைக்   கூடக்   கையுள்

படமாகக்   காண்கின்ற   வசதி   பெற்றோம் !

 

கற்பனைக்கும்    எட்டாத   அற்பு   தங்கள்

கரத்திருக்கும்   பேசியிலே   செய்யும்   நாமோ

நற்காலம்   காட்டுகின்ற   கடிகா   ரத்தை

நாள்காட்டி   கணக்கியினை   துறந்து  விட்டோம்

பற்றியெங்கும்    எடுத்துசென்று   செய்தி   யோடு

பாடல்கேட்ட   வானொலியைத்   தொலைத்து  விட்டோம்

நற்றமிழில்   நலம்கேட்டு   எழுதி   வந்த

நற்கடிதப்   பழக்கத்தை   விட்டு  விட்டோம் !

 

பக்கத்தில்   பெற்றோர்கள்   அமர்ந்தி   ருக்கப்

பக்கத்தில்   உடன்பிறந்தோர்   அமர்ந்தி   ருக்கப்

பக்கத்தில்   சுற்றத்தார்   அமர்ந்தி   ருக்கப்

பக்கத்தில்   நின்றிருந்தும்   வாயால்   பேசித்

துக்கத்தை   இன்பத்தைப்   பகிர்ந்தி   டாமல்

தூரத்தே   யாரிடத்தோ   பேசிப்  பேசித்

திக்கில்லா   தீவினிலே    இருத்தல்   போன்று

திரிகின்றோம்   காதினிலே   பேசி   வைத்தே !

 

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க