இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (198)

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்களுடன் ஒருவார இடைவேளையின் பின்னால் உங்களுடன் மனந்திறப்பதில் மகிழ்வடைகிறேன். வாழ்வெனும் ஓட்டப்பந்தயத்தில் முன்னால் ஓடிக் கொண்டிருக்கிறோமோ அன்றி கடைசியில் ஓடிக் கொண்டிருக்கிறோமோ இல்லை இடைநடுவில் ஓடிக் கொண்டிருக்கிறோமோ எமது நிலை என்னவெனினும் ஓடிக்கொண்டிருக்க வேண்டியது எமது நியதி.

ஒரு ரயிலில் உட்கார்ந்திருக்கும்போது நாம் எதுவுமே செய்யாமல் இருந்தாலும் அந்த ரெயில் எம்மைச் சுமந்து கொண்டு ஓடிக்கொண்டேயிருக்கும். யன்னலுக்கு வெளியே தெரியும் காட்சிகள் அதிவேகத்தில் எம்மைக் கடந்து செல்வதைப் பார்க்கும் போதுதான் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பது எமக்குப் புரிகிறது.

ஏறக்குறைய அதுபோலத்தான் நாம் முன்னேற முயற்சிக்கிறோமோ இல்லையோ காலம் எம்மைக் கடந்து அதேவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. எமக்காக காலம் காத்திருக்கப் போவதில்லை. இது யதார்த்தம். எங்கோ பிறந்து ஏதோ ஒரு கலாசாரப் பின்னணியில் வளர்ந்து இன்று எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கும் என்னைக் கடந்து காலம் கனவேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது . இங்கிலாந்தில் எனது ஆரம்பகால வாழ்விற்கும் இன்றைய வாழ்விற்கும் இடையிலான மாற்றங்களைக் கண்டது மட்டுமல்ல, அம்மாற்றங்கள் கொடுத்த தாக்கங்களை அனுபவித்தும் இருக்கிறேன் என்பதே உண்மை.

இலண்டனில் மாணவனாக வாழ்ந்த முதல் ஜந்து வருடங்களுக்கும் அதன் பின்னான வருடங்களுக்கும் இடையில் பெரியதொரு வேற்றுமை என் மனத்தளவில் இருந்தது என்பதே உண்மை. கல்வி முடிந்ததும் திரும்பவும் நான் தாய்நாட்டிற்குத் திரும்பப் போகிறேன் எனும் எண்ணம். அந்த எண்ணத்தின் ஆனந்தத்தின் அடித்தளம் நான் வாழ்ந்து கொண்டிருந்த இங்கிலாந்து நாட்டை ஒரு வாடகை வீடாகவே பார்க்க வைத்தது.

இங்கிலாந்தில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், அம்மாற்றங்கள் ஏற்படுத்திய சமுதாயத் தாக்கங்கள் என்பனவற்றின் மீதான எனது பார்வை மேலோட்டமாகவே இருந்தது. உண்மையான யதார்த்தமான நிலைமைகளைச் சரிவரப் புரிந்துகொள்ள நான் முயற்சிக்கவில்லை என்பதுவே உண்மை.

இதன் காரணம் பலவாக இருக்கலாம். எனது வாலிப வயதின் அறிவு முதிர்ச்சியின்மை, என்ன இந்த நாடு என்ன என் தாய்நாடா? அந்நியநாடுதானே எனும் எண்ணம், ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய பழைய வரலாற்றின் அடிப்படையில் எழுந்த ஆங்கிலேயர் மீதான காரணமில்லா வெறுப்பு என்பன சில காரணங்களாக இருக்கலாம்.

பிந்தைய வருடங்களில் வாழ்வின் மீதான என் பார்வையின் திருப்பம் மாறியது. என் தாய்நாட்டிற்குத் திரும்பப் போகிறோம் எனும் ஆர்வம் குறைந்தது. இப்பார்வையின் மாற்றத்திற்கு காரணமோ தெரியவில்லை. உள்ளத்தில், உணர்வுகளில் ஏற்பட்ட மாற்றம். நான் வாழ்ந்து கொண்டிருந்த நாட்டு மக்கள் மீதான எனது அபிப்பிராயம் தவறானது என்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்கிய காலமது. எனது தொடரும் வாழ்க்கை நான் வாழும் அந்நாட்டிலேயே நிகழப்போகிறது என்பதை உணரத் தொடங்கிய பொழுது அது.

இன்று என் வாழ்க்கையின் பெரும்பாகத்தை அதாவது உலகத்தில் உதித்த 59 வருடங்களில் 41 வருடத்தை இங்கிலாந்தில் கழித்துவிட்ட நிலையில் , இங்கிலாந்தின் அரசியல் மாற்றங்கள், சமுதாய மாற்றங்கள் என்பன என் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்கள், ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள் என்பனவற்றை உள்வாங்கிக் கொள்ளும் ஒரு நிலையிலிருக்கிறேன்.

இத்தகைய நிலையிலேயே அடுத்தமாதம் அதாவது ஜீன் மாதம்23ஆம் திகதி நிகழவிருக்கும் ஜரோப்பிய ஒன்றியத்தில் ஜக்கிய இராச்சியம் அங்கத்தினராக நிலைத்திருப்பதா இல்லையா என்பதன் மீதான சர்வஜன வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் நிலை.

இன்றைய தபாலில் அச் சர்வஜன வாக்கெடுப்புக்கான எனது வாக்குப்பதிவுச் சீட்டு வந்து விழுந்தது. “நிலைத்திருப்பதா?”  “விலகுவதா?” என்பதே இவ்வாக்கெடுப்பின் சாரம். இருதரப்பினரும் அன்றாடம் அனைத்து ஊடகங்களிலும் வாதப் பிரதிவாதங்களை முன்வைக்கிறார்கள். இங்கிலாந்து அரசாங்கம், எதிர்க்கட்சி, இங்கிலாந்து வங்கி, சர்வதேச நிதி ஒன்றியம், இங்கிலாந்து நிதியமைச்சு என அனைவரும் இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது பொருளாதாரத் தற்கொலைக்குச் சமானம் என்கிறார்கள்.

இங்கிலாந்தின் நட்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் இங்கிலாந்தின் தொடர்ந்த ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தை வற்புறுத்தி வருகிறார்கள். மாறாக, இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது ஒன்றே இங்கிலாந்தின் தொலைநோக்கான பொருளாதாரச் செறிவுக்கு உத்தரவாதம் அளிக்கும் என வெளியேற வேண்டும் எனும் வாதத்தை முன்வைக்கிறார்கள்.

அவர்கள் அணியில் சில அமைச்சர்கள், முன்னாள் நிதியமைச்சர்கள் எனப் பலர் இணைந்துள்ளனர்.

இவர்களது வாதத்தினால் மக்கள் தெளிவடைகிறார்களா இல்லை மேலும் குழப்பமடைகிறார்களா என்பது கேள்விக்குறியே! ஒரு அணியினர் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்பதை வலியுறுத்துவதிலேயே அடுத்த அணியினர் கவனம் செலுத்துகிறார்களேயன்றி, தமது வாதத்திற்கான நிரூபணமான உண்மைகள் எதையும் கூறுவதாகத் தெரியவில்லை.

ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரஜைகள் இலட்சக்கணக்கில் இங்கிலாந்துக்குள் நுழைகிறார்கள். இது இங்கிலாந்து மக்களுக்கு இன்னல்களை விளைவிக்கிறது எனும் வாதமே பலமாக முன்வைக்கப்படுகிறது. இது இங்கிலாந்து மக்களிடையே ஒருவிதமான இனத்துவேஷத்துக்கு அத்திவாரமிடுகிறதோ எனும் அச்சம் எழுவதைத் தவிர்க்கமுடியாது.

ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்தினராக இங்கிலாந்து இருப்பதை அனுபவபூர்வமாக உணர்ந்த எமக்கு இங்கிலாந்து விலகினால் எப்படி  இருக்கும் என்பதைக் கற்பனை பண்ணித்தான் பார்க்க முடிகிறது. அந்தக் கற்பனை உலகில் காலடி வைப்பது அவசியமா? எனும் கேள்வி நிச்சயம் நெஞ்சில் எழுகிறது.

ஒரு புலம்பெயர்ந்து வாழும் இங்கிலாந்துப் பிரஜையாக இதை இரண்டு கோணங்களில் பார்க்க முடிகிறது.

  1. அளவில்லாத வெளிநாட்டு மக்கள் இங்கிலாந்துக்குள் நுழைவதால் இங்கு ஏற்படும் வீட்டுப் பற்றாக்குறை,வேலையில்லாத் திண்டாட்டம்,தேசிய சுகாதாரச் சேவையின் தாக்கங்கள் என்பன இங்குள்ள இங்கிலாந்து மக்களுக்கு ஏற்படுத்தும் இன்னல்களினால் அவர்களின் கோபம் அனைத்தும் வேற்றினத்தவர் மீது திரும்பினால் பாதிக்கப்படுவோரில் நாமும் எமது தலைமுறையும் அடங்குவோம்.
  1. இங்கிலாந்தின் குடியேற்றக் கொள்கையே இச்சர்ச்சையில் பிரதானமாக்கப்படுவதால் இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்போரின் கோஷம் வெற்றியடைந்தால், அடுத்து இங்கு ஏற்கனவே குடியேறி வாழ்ந்துவரும் எம்போன்றோரின் மீது அவர்களின் துவேஷம் திரும்பாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இவ்விரண்டு கோணங்களின் அடிப்படையில் நாம் எமது அரசியல் கண்ணோட்டத்தை மேலெடுக்க வேண்டும். இன்றைய நிலையில் எமது நாடு இங்கிலாந்து. இங்கிலாந்தின் தத்துப்பிள்ளைகளாக வாழும் நாம் எம்மைத் தத்தெடுத்த பெற்றோரின் வாழ்வு நன்றாக அமையக்கூடிய வகையில் எமது வாக்குகளை அளிக்க வேண்டியது எமது கடப்பாடாக உள்ளதை உணர வேண்டியது அவசியம்.

யார் எத்தகைய வாதத்தை முன்வைத்தாலும் இது இறுதியில் இங்கிலாந்து மக்களின் முடிவாகவே இருக்கப் போகிறது. அம்மக்களின் எண்ணிக்கையில் நாமும் அடங்குகிறோம் என்பதுவே யதார்த்தம். அனைத்துக்கும் விடை  ஜூன் மாதம் 23-ஆம் திகதி கிடைக்கும்.

ஆம்! மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!

மீண்டும் அடுத்தமடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *