பெண்கள் சுதந்திரம்
பாவலர் கருமலைத்தமிழாழன்
பெண்கள்தம் சுதந்திரமோ பூத்த பூவாய்ப்
பெருமையாகத் தெரிந்தாலும் தாளின் பூவே
கண்களெனப் பெண்களினைச் சொல்லு வோரே
கறுப்பாடி அணிவித்துக் குருடாய்ச் செய்வார்
உண்மையான இறையென்றே போற்றிக் கோயில்
உள்ளிருக்கும் சிலையாக வீட்டுள் வைப்பர்
மண்மீதில் மாதவத்தால் பிறந்தாள் என்றே
மாபெருமை தருவதுபோல் அடிமை செய்வார் !
உடல்முழுதும் மறைக்கின்ற் சுடுதார் ஆடை
உடுத்துதற்கும் எதிர்ப்புதனைத் தெரிவிப் பார்கள்
முடக்காமல் தெருவினிலே அழைத்துச் செல்ல
முழமெட்டு சேலையினை உடுத்தென் பார்கள்
மடமச்சம் பயிர்ப்புநாணம் பண்பு நான்கில்
மண்மகளைக் கண்பார்க்க வேண்டு மென்பர்
படபடென்று பேசுவது பொதுவி டத்தில்
பண்பாட்டுக் கிழுக்கென்றே ஏசு வார்கள் !
உயர்கல்வி படித்துயர்ந்த பதவி தன்னில்
உட்கார்ந்த போதும் ! நாள் கூலி யாக
வயல்களிலே நாற்றுநட்டு களைபி டிங்கி
வளைந்துடலில் வியர்வைசிந்த உழைத்த போதும்
தயக்கமின்றிப் புகுந்தவீட்டில் அனைவ ருக்கும்
தாதியாக நாள்முழுதும் செய்த போதும்
சுயமாகத் தன்விருப்பில் செய்வ தற்குச்
சுதந்திரத்தை யார்தந்தார் பேதை யர்க்கே !
தேர்தலிலே நின்றுவெற்றி பெற்ற போதும்
தெரிவதுவோ கணவன்தான் அதிகா ரந்தான்
போர்வையாகப் பண்பாடு ஒழுக்கம் தன்னைப்
போர்த்திநேராய்ப் பேசுதற்கும் உரிமை யின்றிக்
கூற்றுகளை சங்கநூல்கள் காப்பி யங்கள்
கூறியவர் சுதந்திரத்தைப் பறித்த போல
சீர்திருத்தம் பகுத்தறிவு கல்வி என்று
சிறப்புக்கள் வந்தபோதும் கானல் நீரே !
ஐயா வணக்கம்.
எ ன்னுடைய கவிதையை வெளியிட்டமைக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.