Month: July 2016

  • தெய்வ தரிசனம்: ஆடிக் கிருத்திகை: முருகன் துதி

    ரமணி

    தெய்வ தரிசனம்: ஆடிக் கிருத்திகை: முருகன் துதி

    images

    (எழுசீர்ச் சந்த விருத்தம்:
    தான/தனன தானன/தனன தான/தனன தானன/தனன
    . தான/தனன தானன/தனன தானனா)

    ஆறு படைகளில் ஆல யங்கொளும் ஆறு மாமுக வேலனே
    ஏறு மாமயில் சேரும் மாவிணை ஈச னுமைமகன் பாலனே
    கூறு மாவடி யார்ம னத்தினில் கோலம் கொண்டமர் குமரனே
    சேறு வொன்றையே சீந்து மென்மனம் சேயெ னக்கருள் அமரனே. … 1 (2)

    [மாவிணை = அழகிய இரு மனைவியர்]

    ஓது மாமறை உன்ன தம்வரும் உன்னைப் பாடிடும் போதிலே
    யாதும் நீயெனும் ஞானம் வந்திடும் யானி லங்குள மீதிலே
    சோத னைபல தந்த ருள்குகன் சூர பதுமனின் காலனே
    தீத ழிந்துளம் நன்மை நாடவே சேயெ னக்கருள் பாலனே. … 2 (2)

    ஆழ்ம னத்துயர் நீக்கி ஞானமென் றாழ்ம னத்துயர் வாகவே
    பாழ்ம னத்தினில் பற்று நீங்கிடும் பான்மை யென்நெறி யாகவே
    ஊழ்வி னையடி யோடு நீங்ககண் ணொற்றி னேன்குகன் பாதமே
    வாழ்வி லேயினி வைய மேயிது மாயை யாமெனும் போதமே. … 3 (2)

    –ரமணி, 28-07-2016, கலி.13/04/5117

    *****

    Share
  • தொல்காப்பிய அளவியலும் சங்கக் கவிதை மரபும்

    முனைவர் ப. தமிழரசி, பேராசிரியர் மற்றும் தலைவர், கற்பகம் பல்கலைக்கழகம், கோவை  – 21.

     

    முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப்பழம்பொருளே

    பின்னைப்  புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே   (மாணிக்கவாசகர்)

    என்ற மாணிக்கவாசகரின் வரிகள் மேற்கண்ட தலைப்புக்கு முற்றும் பொருந்தும். தமிழனின்  மிகப்பழம் இலக்கண, இலக்கியங்களான தொல்காப்பியமும், சங்க இலக்கியமும்  நீண்ட நெடிய தமிழ் இலக்கிய செழுமையில் கரைந்து, மறைந்து விடாது தனக்கென தனித்த இடத்தை இன்று வரை தக்க வைத்துத் தகவமைத்துக் கொண்டுள்ளன என்பதே அதன் பெருமைக்குச் சான்றாகும்.

    இன்று நமக்கு கிடைக்கும் தமிழ் நூல்களில் மிகப்பழமையானது தொல்காப்பியமே.  மனித வரலாற்றின் பழமையை மறந்துவிடாமல் ஆனால் அதே சமயம் புதுமையை மையப்படுத்தி எழுதப்பட்ட தலைசிறந்த நூல் இது. அகத்தியர் எழுதியது அகத்தியம். பன்னிருவர் எழுதியது பன்னிரு படலம். இந்திரன் எழுதியது ஐந்திறம். காக்கைப் பாடினியார் பாடியது காக்கைபாடினியம். அதுபோல  தொல்காப்பியரால் எழுதப்பட்ட இலக்கண நூல் தொல்காப்பியமாகும்.  எழுத்து, சொல் என்ற இரண்டு குறித்து மட்டுமே அதிகம் பேசிவந்த காலத்தில் பொருள் குறித்து முதலில் பேசியவர் தொல்காப்பியர் தான்.

    தமிழன் உலகில் முதல் தோன்றியவன் என்பது உண்மையோ இல்லையோ ஆனால் முதன் முதலில் ஒலி என்பதை அடிப்படையாகக் கொண்டு மொழியை உருவாக்கியவன் தமிழன் தான்.  தொல்காப்பியம்  ஒலியை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டிருக்கிறது.  எழுத்தை மையப்படுத்தி எழுதாமையும் தொல்காப்பியத்தின் தனிச்சிறப்பு. ஒலியின் அளவு மாறுபாடுகளைச் சொல்வதே அளவியல் எனலாம்.

    தமிழனின் அளவை முறைகள் மிகவும் விசித்திரமானவை. அந்தக் காலகட்டங்களில் தமிழர்கள் மனக்கணக்குகள் செய்தார்கள். பழந்தமிழர் அளவைகள், பெரும்பாலும் இக்காலத்திலும் உள்ள தமிழர் அளவைகள் ஆகும். அவை எண்ணல், எடுத்தல், முகத்தல்,  சார்த்தல் என்ற நான்காகும்.

    எண்ணல்        1 2 3 4  என வரிசையாக எண்ணிச் சொல்வது  வாய்பாடுகள்

    எடுத்தல்    (சார்த்தி அளத்தல்) ஒப்புமை கூறுதல் அதனை விட இது மேலானது என்பது போல மாத்திரை சுரம், ஒலி, நிறம், உரு முதலியவற்றைக் கூறி “இப்படி”, “அதைப்போல” என்று ஒப்பிட்டு அளப்பது சார்த்தல் அளவை ஆகும்.

    முகத்தல்    பால், எண்ணெய்களை (நீர்மம்) அளப்பதற்குத் தமிழர்கள் உழக்கு என்ற அளவை உருவாக்கி இருக்கிறார்கள். அதற்குச் சான்றாக ஓர் உழக்கு, இரு உழக்கு

    நீட்டல்   பண்டைய கட்டடக்கலைகளிலும் முழம் என்ற அளவையே தமிழர்கள் பின்பற்றியிருக்கிறார்கள். இதற்குச் சான்றாகப் பல முழக்குச்சிகளை (ஒன்று அல்லது இரண்டு முழம் நீளம் உள்ள) பயன்படுத்தியதாகத் ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளார்கள். ஆகவே தமிழர்களின் அளவை முறைகள் தரப்படுத்தப் பட்டுள்ளதை நாம் தீர்க்கமாகச் சொல்லமுடியும்.

    தமிழ் நாட்டிலும், கேரளத்திலும் பெரும் அளவான கல்வெட்டுக்கள் இன்னும் படிக்கப்படாமலும், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமலும், இருப்பதால் தென்னிந்தியாவின் அறிவியலை முழுதாக இன்னும் அறியமுடிவதில்லை. அளவை மையமாகக் கொண்ட(உழக்கு) செப்பு, பித்தளை, வெள்ளிப் பாத்திரங்கள் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றும் பயன்படுத்துவதைக் காணலாம். ஆகவே தமிழர்களின் அளவை முறைகள் தனித்துவம் வாய்ந்ததாக அமைகின்றன.

    ஒலியை மையப்படுத்தியே தொல்காப்பியம் எனும் போது  அந்த ஒலியின் அளவை மையப்படுத்தியே நூற்பாக்கள் எழுதப்பட்டன

    அவற்றுள்

    அ இ உ

    எ ஒ என்னும் அப்பால் ஐந்தும்

    ஓரளபு இசைக்கும் குற்றெழுத் தென்ப(3)

    என குற்றெழுத்துக்களுக்கு அளவு வரையறை செய்கிறார்

    ஆ ஈ ஊ

    ஏ ஐ

    ஒ ஓள என்னும் அப்பால் ஏழும்

    ஈரளபு இசைக்கும் நெட்டெழுத் தென்ப(4)

    என்று நெட்டெழுத்துக்களுக்கு அளவு வரையறை செய்கிறார்.

    மூவளபு இசைத்தல் ஓரெழுத்து இன்றே(5)

    நீட்டம் வேண்டின் அவ்வள புடைய

    கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்(6)

    அம்மா….. என அழைப்பது போலத் தேவை நேரிடின் எழுத்துக்களைக் கூட்டிக் கொள்ளவும் சுதந்திரம் தருகிறார்.

    கண்ணிமை நொடிஎன அவ்வே மாத்திரை

    நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே(7)

    கண்ணிமை நொடி என எப்படி அளவு வைப்பது என்று கேட்பவர்களுக்கும் பழைய நூல் ஒன்றில் அளவு கூறப்படுகிறது அதாவது  மாத்திரை என்பதாவது

    எண்ணல் (கால்)  எடுத்தல் (அரை)  முறுக்கல் (முக்கால்)  விடுத்தல் (ஒன்று)

    அதாவது கை நொடிப்பொழுது என்பதனை நமது கையை நாம் சொடக்குப் போட எண்ணுவதும் எடுத்தலும் கையை முறுக்கலும்  சொடக்கு விடுவதுமாகிய நேரமே மாத்திரையின் அளவாக வரையறை செய்வதன் மூலம்நம் முன்னோர்களின் அறிவார்ந்த புலமையை அறிந்து கொள்ள இயலும்.

    அரையளபு குறுகல் மகரம் உடைத்தே

    இசையிடன் அருகும் தெரியுங் காலை(13)

    சரி மாத்திரையின் அளவைக் குறைக்க வேண்டுமா  அழைத்தலைச் சுருக்குங்கள் என்கிறார்.

    அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்

    உளவென மொழிப இசையொடு சிவணிய

    நரம்பின் மறைய என்மனார் புலவர்(33)

    உருவினும் இசையினும் அருகித் தோன்றும்

    மொழிக்குறிப் பெல்லாம் எழுத்தின் இயலா

    ஆய்தம் அஃகாக் காலை யான(40)

    உந்தி முதலா முந்துவளி தோன்றித்

    தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்

    பல்லும் இதழும் நாவும் மூக்கும்

    அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்

    உறுப்புற்று அமைய நெறிப்பட நாடி

    எல்லா எழுத்தும் சொல்லுங் காலைப்

    பிறப்பின் ஆக்கம் வேறுவேறு இயல

    திறப்படத் தெரியும் காட்சி யான(83)

    எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து

    சொல்லிய பள்ளி எழுதரு வளியின்

    பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து

    அகத்தெழு வளியிசை அரில்தப நாடி

    அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே

    அஃது இவண் நுவலாது எழுந்துபுறத் திசைக்கும்

    மெய்தெரி வளியிசை அளபுநுவன் றிசினே(102)

    மேற்காண் நூற்பாக்கள் அனைத்தும் நாம் பேசும் முறையில் வரும் ஒலிக்குறிப்பை கொண்டே அமைந்திருப்பதைக் காணலாம். எல்லா எழுத்தும் வெளிப்படையாக வரும் ஒலிக்குறிப்புகளை கொண்டே அமைக்கப்பெற்றிருப்பினும் சில ஒலிகளின் அளவுகளை வரையறை செய்வதை நம்மையே முடிவு செய்து கொள்ளச் சொல்கிறார் அது தான் அளவிற் கோடல் அந்தணர்  மறைத்தே என்னும் வரியாகும். அதாவது எழுத்தின் அளவினை சொல்லுபவன் தேவை கருதி நீட்டித்தலும் அல்லது சுருக்குதலும் செய்யலாம் என்கிறார். தொல்காப்பியத்தில் வரும் பிறப்பியல் முழுக்க அளவியலுக்குரியதே.  அதே போல புணரியல் முழுக்க ஒலி மோதல்கள் குறித்த செய்திகளை உள்ளடக்கியதே அதனால் தான் பெரும்பாலான சூத்திரங்கள் ஈறுகெடும்,முதல் மாறும் என்பதாக அமைகின்றன. ஆனால் தெளிவாக தொல்காப்பியர் காலம் உருண்டோடுவதைப் போன்றே எழுத்துக்களும் உருளும் மாறும் என்பதனை அவரின்

    உட்பெறு புள்ளி உருவா கும்மே(14)

    என்ற சூத்திரத்தை மையப்படுத்தி தெளிவாகச்  சொல்லிச் சென்றதைக் கொண்டே நாம் இங்கு சங்கப்பாடல்களை ஆராயப் போகிறோம்.

    சங்கக் கவிதை மரபு

    மரபு என்பது நாம் இன்று வரை சங்க இலக்கியம் என்று வரையறை செய்து வைத்திருப்பது 2379 பாடல்களைக் கொண்ட எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்களைத்தான்.  அதைத்தாண்டி நாம் எதையும் ஆராய முற்பட்டதில்லை. அன்றைய சங்ககாலம் என்பதை வரலாற்று அறிஞர்கள் கிறித்துவின் தோற்றத்தோடு ஒப்பிட்டு, சம காலத்தது என்று வரையறுப்பதும் சங்க இலக்கியத்தின்  காலத்தை நிர்ணயம் செய்ய உதவும். சங்க காலத்திற்கு முற்பட்டோ அல்லது சம காலத்திலேயோ தோன்றிய இலக்கண நூலான தொல்காப்பியம்  தன்னுடைய நூலில் கூறியுள்ள அடிப்படை மரபுகளை சங்க இலக்கியம் தன்னுள் கொண்டுள்ளதா என்று ஆய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.  மனிதன் என்று தோன்றினானோ அன்றே  மரபுகளும் தோற்றம் பெற்றுவிட்டன என்றுதான் கூற வேண்டும். மனித சமூகம் எதைக் கற்றதோ, எத்தகைய செயல்களை மேற்கொண்டதோ, எதில் பயிற்சி பெற்றதோ அந்த அனுபவங்களை எல்லாம் பதிவு செய்து வைத்திருத்தலே மரபாகும். தமிழர் பண்பாடு என்பது தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைக்கும் பண்பாடு மட்டுமன்று: மரபுகளோடு இணைந்த ஒன்றே ஆகும். அதனால் தான் தொல்காப்பியர் மரபுகளைப் பற்றிக் கூறவரும்போது

    பாடலுள்  பயின்றவை நாடுங்காலை

    பாடல் சான்ற புலனெறி வழக்கம்

    உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின்

    மரபுநிலை திரிதல் செய்யுட்கில்லை

    என்கிறார். அதாவது தன்னுடைய வேலை என்பது செய்யுட்களில் பெரும்பான்மையாக இருப்பதை ஆராய்வது, செய்யுட்களில் பெரும்பான்மையாகப் பின்பற்றப்படும் மரபுகள், காலம் சார்ந்த  மரபுகளைப் பின்பற்றிப் பெரியோரால் எழுதப்பட்ட பாடல்கள்,  மரபு நிலை திரியாது இருத்தலைக் கண்டறிதல் என்று கூறுவதன் மூலம், அவர் தன்னுடைய முன்னோர்கள் பாடிய செய்யுட்களில் காணலாகும் மரபார்ந்த சிந்தனைகளை மட்டுமே தன்னுடைய கருத்துக்களின் அடிநாதமாகக் கொள்கிறார் எனலாம்.

    தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே தோற்றம் பெற்றவை சங்கப் பாடல்கள். அவை  பல்நெடுங் காலமாக மக்களின் வாய்வழியே பல்வேறு ஊர்களுக்கு பாணன் வாயிலாக பயணம் செய்தவை. நமக்கு இன்று கையில் கிடைக்கும் பாடல்களைக் கொண்டு இதுதான் சங்க மரபு என்று வரையறை செய்ய நம்மால் நிச்சயம் முடியாது.பல்வேற காலகட்டங்களில் தொகுக்கப்பட்ட வாய்மொழிப் பாடல்களில் தொகுப்பாக உள்ள சங்கப் பாடல்களை மரபு சார்ந்து பார்க்க நேரிடின், அவை தோன்றிய காலச் சூழல், மரபு சார்ந்த பின்புலம், பாடல்களை உள்வாங்கிய செய்யுள் மரபு, அவற்றை வளர்த்தெடுத்த தொல்காப்பியம் போன்ற இலக்கண மரபு  என்ற நிலைகளில் வைத்தே ஆராய வேண்டும். மேற்காண் முறையில் பார்க்கும் போது தான் சங்க இலக்கியங்களின் அமைப்பு மரபினையும், ஒலி மற்றும் ஓசை மாற்றங்களையும், சமுதாய மாற்றங்களையும் உள்வாங்கிக் கொள்ள முடியும்..

    அன்றைய சங்கக் கவிதைகள் முழுக்க ஓசை அடிப்டையிலேயே எழுதப்பட்டன. கேட்போனுக்கு உணர்வை உண்டாக்குதலே அதன் தேவையாக இருந்திருக்கிறது. செய்யுளியல் முழுக்க ஓசை அடிப்படையில் அமைந்திருப்பதே அதன் சாட்சி.

    அசை, சீர், தளை ஓசை தான் அடிப்படை

    நேர் நேர்    தேமாங்காய்

    ஓசைக்கு ஓசையே ஒப்புமை – சார்த்தி அளத்தல்

    நீளமான ஓசைக்கு  சான்றாக – பசுபதி

    எழுத்துப் புறத்திசைத்த என்ற நூற்பாவை காணும் போது தமிழில் உள்ள அனைத்து எழுத்துக்களும் இசை கலந்தனவே என்று உறுதியாவதால் பாணனுக்கு இருந்த முதன்மை விளங்கும்.  தமிழில் அனைத்து எழுத்துக்களும்ஓசை ஒட்டி வரக்கூடியவையே. இல்லாத ஓசை எழுத்தில் வராது உள்ள ஓசை விடுபடாது. இது அடிப்படை மரபு. அன்றிலிருந்து இன்று வரை தொடர்வது.  வரி வடிவம் இல்லாத எழுத்தை தமிழில் நாம் உச்சரிப்பது இல்லை. இதுவும் மரபு தான்.  (அஃகு, Knife)  இன்றைய நிலையில் நாட்டார் பாடல்களை ஆய்வு செய்ய நேரிடின் அதில் காணலாகும் மரபார்ந்த செய்திகளை, தாள அமைப்பைக்  காணின் இதில் உள்ள உண்மை விளங்கும்.   தாலாட்டுப் பாடல்கள், தொழில் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் அவற்றைக்  கேட்போன்  தானாகவே தூக்க மற்றும் துக்க நிலைக்கும், துள்ளல் நிலைக்கும் ஆளாவான். அதன் மாற்றுப் பதிப்புத்தான் இன்று சென்னை எங்கும் மாறி ஒலிக்கும் கானாப் பாடல்கள் என்று கூடக் கூறலாம்.

    சுட்டி ஒருவர்  பெயர் கொளப்பெறார் என்ற சூத்திரத்தின் அடிப்படையே சங்க அகப்பாடல்களின் அடிஓட்டமாகக் கொள்ளலாம்.  அந்த அடிப்படை சங்கப் பாடல்களில் எந்த இடத்திலும் மாறுபடவில்லை. அப்படியே பெயர் அல்லது ஊர் கூறப்பட்டாலும் அது புறத்தில் சேர்க்கப்பட்டுள்ளமை அதற்குச் சான்றாகும். சான்று – நெடுநல்வாடை.  அதே போலப்  அன்பின் ஐந்திணை என்று  அகத்திணைக்குப் பெயர் தரினும் நால்வகை நிலங்களைக் கொண்டே தலைவன் அழைக்கப்படுவதும் அதனைக் கொண்டே நாம் திணையை முடிவு செய்து சொள்வதும் இயல்பாக அமைந்துள்ளமையைப் பார்க்கலாம்.

    புறத்திணையின் அடிப்படை மரபுகளான வழிபடல், வாழ்த்தல், புகழ்தல், கையற்றுப் புலம்பல் என்ற சில நிலைகளை எளிதாக வாசிப்போன் புரிந்து கொள்ள வேண்டும் எனில் ஓளவையார்  –  அதியமான் பாடல்களைப் படித்தால் போதுமானது.  ஔவைக்கும் அதியமானுக்கும் இருந்த நுட்பமான உறவு அவரின் 59 (அகம் 26, புறம் 33) பாடல்களிலும் புலப்படும்.  26 அகப்பாடல்களையும் பெயர் கூறாது ஒருவரிடம் கொடுத்துப் படிக்கச் செய்யின் காதல் நிறைவேறாத ஒரு முதிர் கன்னியின்  புலம்பல்களாக அல்லது ஏக்கங்களாகவே பல பாடல்கள் இருப்பதை உணர முடியும்.

    ஒரு நாள் கழியினும்  வேறுபடுஉம்  ( நற் 129)

    மெய்ம்மலி காமத்து   (நற்  187 )

    காதல் மிகுதியால் ஒரு பெண் கூறுவது போல எழுதப்பட்ட

    முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்

    ஆஅ ஒல்லெனக் கூவுவேன்  கொல்  ( குறுந்  28)

    போன்ற  பாடல்களைச் சான்றாகக் கூறும்  போது மேற்கண்ட பாடல்கள் அனைத்தும் தொல்காப்பியரின் விதிகளை மீறி படைக்கப்பட்ட பாடல்களாகவே காட்சி அளிப்பதைக் காணலாம்.  அதே போல ஔவை பாடிய புறப்பாடல்கள் 33இல் 16 பாடல்கள் அதியனைப் பாடியது.  அவனின் வாழ்க்கை முழுவதையும் உடனிருந்து பாடியிருக்கிறார் எனும் போதும் விதிகள் புறந்தள்ளப்படுவதைக் காணலாம்.  அதியனின் அவைபுலவர் ஔவை கிடையாது. ஆனால் அவன் வாழ்க்கை முழுக்க ஔவை பயணிக்கிறார். இது அழகிய முரண்.   எண்தேர் செய்யும் தச்சனின் ஆற்றலோடு  (புறம் 87) அதியனை ஒப்பிடுவதாகட்டும், பொருநரும் உளரோ நீ களம் புகினே (புறம் 90) என்ற பாடலாகட்டும் நாம் காணும் ஔவை சங்க மரபுகளுக்கு மாறானவர் என்பது திண்ணம்.  இதே போல சங்கப் பாடல்கள் பலவற்றையும் நாம் இனம் காண முடியும். நீட்சி கருதி ஒன்றை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.

    ஓசை ஒழுங்கால் இசை கலந்து இயற்றப்பட்ட செய்யுள்களையே பா அல்லது பாட்டு என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.  அவ்வகையில் சங்க இலக்கியப் பாடல்களில் பதிற்றுபத்து மட்டுமே இசை, வண்ணம், ஓசை ஆகியவை வகுக்கப்பெற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. பா தான் நான்காகப் பகுக்கப்பட்டு ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, வெண்பா என கட்டமைக்கப்பட்டது. பிற்காலத்தில்  பாக்களுக்கென தனித்த நூல்களும் தனித்த பாடல்களும் இயற்றப்பட்டது வரலாறு.   இசையின் ஒரு பகுப்பாக வண்ணங்கள் கூறப்பட்டன.இது பாட்டின் ஓசை நயத்தைக் குறிப்பது. தொல்காப்பியர் வண்ணங்களை 20 என வகைப்படுத்தினார். பின்னாளில் இசைக்கு அளவு குறிக்கப்பட்டது.  அவ்வண்ணங்களுக்கும்  மாற்று கண்டறியப்பட்டு இன்று 20 ஆக இருந்த வண்ணங்கள் 200 வரை பல்கிப் பெருகி நிற்கின்றன.

    மேற்குறிப்பிட்டவை மட்டுமின்றி தொல்காப்பியர் பண்ணத்தி என்ற மற்றொரு வகையையும் குறிப்பிடுகிறார்.  இது பாடப்படும் இசைப்பாடலில்  எடுத்தாளப்படும் பாடுபொருளைக் குறிப்பிடுகிறது.  இதனை பல உரையாசிரியர்களும் பல்வேறு பொருளில் எடுத்தாளினும் இதுவே நாட்டுப்புற மரபு சார்ந்த பாடல்களைக் குறிப்பிடும் உண்மையான பெயராகக் கொள்ளலாம்.  நாட்டுப்புறங்களில்  பாடும் பாடலின் உட்கருத்தாக அமைவது பெரும்பாலும் அவர்களின் வாழ்வியல் நிகழ்வுகளேயாகும். பண்களுக்கு எழுச்சி தரும் பாடல்களாக அமைவதால் பண்ணத்தி  என்று இளம்பூரணர் சொல்வது போல எடுத்துக் கொண்டாலும் அவை குறிப்பிடுபவை நாட்டுப்புற பாடல்களையே என்பது தெளிவாகும்.

    தொல்காப்பியர் தோற்றுப் போன இடம் என்ற ஒன்றை நாம் குறிப்பிட வேண்டுமெனில் அது அகப்பொருள் பற்றிச் சொல்ல வரும் போது   கலியே, பரிபாட்டு என்பார்.   அதாவது அகப்பொருள் பற்றி பாடப்பட கலியும் பரிபாட்டும் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்   அதாவது அவர் கருத்தின் படி காதல் என்ற உணர்வு மனிதனுக்கு மகிழ்வைத் தரக்கூடியது  கலி எனில் துள்ளல்  அதாவது காதல் சுகம் என்றும் பரிபாட்டு இசை இசையும் மகிழ்வைத் தரக்கூடியது என்றும் அர்த்தம் தொனிக்க கூறியுள்ளார் இந்த மரபு சங்கச் செய்யுட்களில் பல்வேறு இடங்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம்.  கலித்தொகை மட்டுமே அந்த மரபை ஒட்டி பாடப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.

    சங்கச் செய்யுள் மரபில் பத்துப்பாட்டு வேறுபட்டு நிற்கிறது.  மதுரைக் காஞ்சி முழுக்க முழுக்க வஞ்சி நெடும்பாட்டாகும்.  வஞ்சி  – தூங்கலோசை அதைப் பயன்படுத்தி அதிகப்பாட்டுக்கள் பாடப்பட்டுள்ளது பத்துப்பாட்டில் தான்.  ஆற்றுப்படை என்கிற நெடும்பாடல்கள் அதிகம் பாடப்பட்டது பத்துப்பாட்டில் தான்.  பதிற்றுப் பத்தின் ஐந்தாம் பத்து அந்ததாதித் தொடையில் பாடப்பட்டுள்ளது அந்தாதி என்ற புதிய இலக்கிய வகை தோற்றம் பெற உதவிற்று எனலாம்.  தொல்காப்பியர் தொகுத்தளித்த செய்யுள் மரபுகளுக்கும், சங்கப் பாடல்களில் காணலாகும் மரபுகளுக்கும் மிகுந்த வேறுபாடுள்ளது. எனினும்   செய்யுள் என்பது மரபின் சாரம் என்ற  திறனாய்வுக் கருத்து இங்கு நினைவு கூறத்தக்கது.  அதுவே இந்தக் கட்டுரையின் செய்தியாகவும் அமைகிறது.

    Share
  • இலக்கியம் எழுதாத நட்பு  (இரண்டாம்  பகுதி)

    க. பாலசுப்பிரமணியன்

     

    நண்பனே !

    நமது அமைதியான பயணத்தில்

    ஆயிரம் கேள்விகள்..

    என் உள்ளத்தில் …

     

    நண்பனே,

    நீ எதை நேசிக்கிறாய்?

    என் உடலையா ?

    அல்லது உயிரையா?

     

    உயிரின்றி இந்த உடலுக்கு

    என்ன பொருள்?

    உடல் என்றால் என்ன?

     

    உடலுக்குள் உயிரா ?

    உயிரால் உணர்வுற்ற உடலா?

     

    உடல்…

    எலும்புத் துண்டுகளை..

    இசைவாய் காற்றினில் அடுக்கி..

    ஈரக் காற்றில் ..

    மிதக்க விட்ட மாளிகையா?

     

    எங்கேயோ மிதக்கும் எண்ணங்கள்

    இளைப்பாற இடமின்றி

    களைப்பு நீங்க ஒதுங்கிவிடும்

    உலகத்தின் பூங்காவனமா?

     

    காதலென்றும் ..

    காமமென்றும் ..

    சுகமென்றும்..

    சொந்தமெடுத்து ..

    சுவைக்கின்ற  உணர்வுகளில்..

    உடலுக்குச்  சொந்தமெது?

     

    ஆணென்றும் பெண்ணென்றும்

    அங்கங்களில் அலங்கரித்தாய் !

    ஆசைகள் ஆர்ப்பரிக்க

    அங்கமெல்லாம் எரிந்துவிட ..

    அலைபாயும் மனதிற்கு

    உடலை அடிமையிட்டாய் !

     

    கூற்றுவனின் கொடும்பசிக்கு

    நாற்றுநாட்டு ..

    பயிர்வளர்த்து..

    கதிர் அறுக்கும் ..

    அறுவடையோ…

    இந்த உடல்?

     

    “உடலென்றும் உண்மையில்லை

    ஓடுகின்ற பாம்பு ..

    உறிக்கின்ற சட்டையது ..”

    ஓதுகின்ற மாமுனிவர்…

    உதடுகளில் உண்மையுண்டோ ?

     

    இந்தக் கூண்டுக்குள்

    எதைச் சிறை வைத்தாய்?

    தமனிகளும் நரம்புகளும்

    தானாக வந்தனவா?

    அல்லது…

    தரகுக்குத் தந்தாயா

    ஒரு வாழ்வுக்கு?

     

    ஜீவநதியாய் குருதிப்புனலை

    ஓடவிட்டு..

    உடலெல்லாம் கோலமிட

    யார் கற்றுக்கொடுத்தது ?

     

    பசியெடுத்தால் அறுசுவை..

    பாலுணர்வுக்கு  ஒரு சுவை..

    பாரமில்லா வாழ்வுக்குப் பணச்சுவை..

     

    பகடையாய் உடலைப் படைத்தாய்…

    பாம்பென்றும் ஏணியென்றும் படம்வரைந்து

    பரமபதத்தில் ஆடவிட்டாய் !

     

    ஒரு மூச்சுக் காற்றை நிறுத்திவிட்டு

    உடலுடன்  உறவை நீக்கி

    அழுகிவிடும் என்ற அச்சத்தில்

    ஊரெல்லாம் தேரோட்டி

    நடுக்காட்டில் சுட்டெரிக்க ..

    ஏனிந்த அவலம் ?

    யார் கேட்டது இந்த உடலை?

     

    நண்பனே!

    கதை அறியாமல்

    நான் நடிக்கும் ..

    இந்த  நாடகத்தில்

    நான் கோமானா ?

    அல்லது கோமாளியா?

    நாடகத்தில் உன் வேடமென்ன ?

     

    உடலுக்குப் பெயர்கொடுத்து

    உயிரோட்டம் உள்ளவரை

    உலாவ  விட்டது

    நீயா அல்லது நானா ?

    இந்த உயிரோட்டம் எதுவரை?

    என் விருப்பமா?

    அல்லது உன் விருப்பமா?

     

    இந்த உடல்

    உன் கட்டிடக் கலையின்

    திறனுக்கு ஒரு பரிமாணமா ?

     

    இதில் அழகு என்பது என்ன?

     

    கண்ணுக்கும் முகத்திற்கும்

    கட்டான உடலுக்கும்

    கற்பனையில் அழகென்ற

    பரிமாணம் ஏன் கொடுத்தாய்?

     

    அழகையும் அருவருப்பையும்

    எப்படிக் கற்பனை செய்தாய் ?

     

    ஆயிரம் உள்ளுணர்வுகளை

    அழகாகக் கோர்த்து ..

    எப்படி இதயத்தின் உள்ளே வைத்தாய் ?

    எதற்காக ?

     

    நீ..

     

    விஞ்ஞானியா?

    விவேகியா?

    விகடகவியா ?

     

    யார் உன்னைப் படைத்தது?

    உன் படைப்பில் என் பங்கு என்ன?

     

    நண்பனே!! …

    ஆலமரத்தடியில் அமர்ந்து

    ஆனந்த தத்துவத்தை

    சொல்லாமல் சொன்னவேனே !

    உன் அமைதியின் பொருளென்ன ?

     

    இந்த நெடிய பயணத்தில்

    நிச்சயமாக…

    நீ என்னோடு வருவாய்..

    எனக்குத் தெரியும்…

    ஆண்டுகள் தோறும்..

    யுகங்கள் தோறும்…

    நீயும் நானும்…

     

    ஆனால்

    ஏன் இந்த அமைதி?

    என் கேள்விகளுக்கு

    நான் எங்கே பதில் தேடுவது?

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     
    ”வீட்டுக்குள் விஸ்வரூபம்’’
    ————————————————

    88ea18a7-04eb-4dca-89f6-31f0712b8b7b

    ‘’மதிய உதயம் கதிர்மதியம் போல்முகத்தான்’’(மாட்னி ஷோ….!அசோதைக்கு(யசோதை)….!

    ”அந்தரங்க ராஜன்தன் அன்னை அசோதையை
    அந்தரங்க மாக அழைத்துப்போய், -தந்திரமாய்
    வட்டக் கதிர்மதியோன் வாய்பிளந்து காட்டுகிறான்
    விட்ட உறிக்கு வளர்ந்து’’(விஸ்வரூபம்)….கிரேசி மோகன்….

    வளர்ப்பு அன்னைக்கு ஸ்பெஷலாய் வளர்ந்து காட்டுகிறான்,
    அதேசமயம் கண்ணன் இதை சாக்காக வைத்து விட்டத்து உறி
    தொங்கும் வெண்ணைய்க்கு வேட்டு வைக்கிறானோ மாயாவி….!

    Share
  • ஆதி சங்கரரின் ‘’நிர்வாண சதகம்’’

    images

    ஆதி சங்கரரின் ‘’நிர்வாண சதகம்’’ வெண்பாக்களாக முயற்சி….எழுதிய வரையில்….குரு வாரமாக இருப்பதால் ஆரம்பித்தேன் , பகிர்கின்றேன்….

    ’’நிர்வாண சதகம்’’….(1)
    ——————————————-
    ’’புத்தி, விவேகம், புலனகந்தை, பூர்வஜென்மம்
    பத்தி அறிவோனும், புலனைந்தாம் -சுத்திவரக்
    காணும்கண், கைநாக்கு, காதுநாசி, போன்றவைகள்
    நானல்ல வென்றறிவேன் நன்கு’’….

    ‘’நிர்வாண சதகம்’’….(2)
    ——————————————–
    ’’அஞ்சும்தீ , அணைக்கும்நீர், ஆகாசம், மண்காற்று
    பஞ்சபூ தங்கள் பகிர்வதால் -செஞ்சவன்
    நானல்ல, நித்ய நிர்குண நிராகார
    ஆனந்தமான அந்த அரன்’’….(2)

    நிர்வாண சதகம்….3
    ———————————

    ‘’அஞ்சும் பிராணனல்ல, அஞ்சுவிதக் காற்றல்ல
    அஞ்சொடு ரெண்டாம் அவசியமும், -அஞ்சுவிதக்
    கோசம், புலனைந்து,கொல்லைக் கருவியல்ல:
    வாசமா னந்தசி வம்’’….கிரேசி மோகன்….

    ’’நிர்வாண ஷட்கம்’’
    ———————————

    ‘’வேறு’’
    ——————

    ‘’தவம்நான், தளர்ச்சிநான்,
    அவம்நான், அலட்டல்நான்
    சவம்நான், சைதன்ய ரூப
    சிவம்நான் சிவானந்தமயம்நான்’’….

    பாயும் பூனைநான்
    பதுங்கும் புலியும்நான்
    தாயும் தந்தைமகனும்நான்
    ஓய்வும்நான், உழைப்பும்நான்
    ஓங்கார வடிவும்நான்
    வாயுவெளி நீர்மண் காற்று
    வடிவான சிவானந்தமயம்நான்

    அஞ்சாத சிங்கம்நான் அஞ்சுமணிற்பிள்ளைநான்
    பிஞ்சுநான் பூவாகிக் காய்க்கும் புடலைநான்
    பஞ்சாயுதன்நான் ,பஞ்சாங்க பிரம்மன்நான்
    பஞ்சபூதத்தாலான பரமானந்தசிவம்நான்….கிரேசி மோகன்….

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். விண்மீன் வெளி வெடிப்பில் நீர்ப்பனி அணிவகுப்புக் காட்சி

    Stellar Outburst -1

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++++

    +++++++++++++
    Stellar Outburst -2
    ++++++++++++++++++

    காந்த விண்மீன்கள்
    தீவிரக் கதிர்கள் வெளியேற்றும் !
    இளம்பரிதிக் கனலில் கோள் உருவாக்க
    நீர்ப்பனி அணிவகுக்கும் !
    பூதள விண்ணோக்கி
    முதன்முறை நீர்ப்பனி காணும்.
    கோள் உருவாகும் போதே
    நீர்ப்பனி சேரும்.
    அபூர்வக் காட்சி !
    உயிரினத் துக்குச் சீர்கேடு
    உண்டாக்கும்
    நியூட்ரான் விண்மீன்கள் !
    எரிசக்தி தீர்ந்த பின்
    வறிய விண்மீனாகி
    சிறிய தாகிப்
    பரிதிபோல் திணிவு நிறைப்
    பன்மடங்கு பெருத்துக்
    பூமியைக் குள்ள விண்மீனின்
    காமாக் கதிர்கள்
    வெளியேறித் தாக்கும்  !

    ++++++++++++++

    Stellar Outburst -3

    அல்மா [ALMA] கருவியின் அற்புதக் காட்சி  எங்களை வியக்க வைத்தது.   கோள் உருவாகும் தட்டு சிதைவாவதைப் படமெடுக்கத்தான் நாங்கள் விண்ணோக்கி மூலம் திட்டமிட்டோம்.   அம்முறைப்படிதான் பூதக் கோள்கள் உருவாகின்றன.  நிறை பேரளவு இருந்த போதிலும், கோள் தட்டு சூடாக இருந்ததால், அவ்விதம் நாங்கள் காணவில்லை.  அதற்குப் பதிலாக நாங்கள் கண்டது, 40 AU [1 AU = பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம்] தூரத்தில் ஒரு வளையம்.  அதுதான் நாங்கள் எதிர்பாராத அல்மா கருவியின் மாறுபட்ட காட்சி.

    லூகாஸ்  சையஸா [வானியல் விஞ்ஞானி,  டியாகோ போர்டலெஸ் பல்கலைக் கழகம், சில்லி]

    இளம்பரிதி [Young Star] ஒன்றைச் சுற்றிலும் நீர்ப்பனி சூழ்ந்திருப்பது, கோள் உருவாகத் தேவையான அடிப்படையாகும்.  பூமி போன்ற கோள்களில் உயிரின வளர்ச்சிக்கு வேண்டுவது.  அல்மா கருவியின் விண்ணோக்கு, இளம்பரிதி வளர்ந்து வரும்போது,  எங்கே, எவ்விதம் முன்னோடிக் கோள்களுக்கு [Protoplanetary Disks]  இது நிகழ்கிறது என்பதைக் காட்டுவது. பரிதியைச் சுற்றிலும் கோள் உருவாகத் தேவைப்படும் நீர்ப்பனித் தள இருப்பு உள்ளதற்கு இப்போது எங்களுக்கு நேரடிச் சான்று கிடைத்துள்ளது.

    ஸவோஹுவான் இஸ்ஸு [Zhaohuan Zhu] [வானியல் விஞ்ஞானி பிரின்ஸ்டன் பல்கலைக் கழகம், நியூ ஜெர்ஸி]

    Fig 1F High Energy Observatories

    விண்மீன் வெளி வெடிப்பில் [Stellar Outburst] நீர்ப்பனி வெளியேற்றம்

    2016 ஜூலை 13 இல் V883 ஓரியனிஸ் என்னும் இளம்பரிதி [Young Star V883 Orionis] ஏற்பாட்டில், வானியல் விஞ்ஞானிகளுக்கு முன்னோடிக் கோள் தட்டு [Protoplanetary Disk] உருவாக நீர்ப்பனி இருப்பது முதன்முதல் தெரிய வந்தது.  தணிந்த வெப்பத்திலும், அழுத்தத்திலும் பரிதியைச் சுற்றிலும் உள்ள மாறுபாடு கோளில் நீர்ப்பனி தோன்றக் காரணமாகிறது. விண்மீனின் வெளிச்சத்தில் திடீர் ஒளிக்காட்சி மிகுதி, கோளின் உட்பகுதியைச் சூடாக்கி நீர்ப்பனி அணிவகுப்பை [Water Snowline] உண்டாக்கி உள்ளது.  இந்த அரிய காட்சியைப்  படமெடுத்த துல்லிய கருவியின் பெயர் அல்மா [ALMA – Atacama Large Millimeter/ Submillimeter Array].  2016 ஜூலை 14  இல் இச்செய்தி இயற்கை இதழில் [Nature Magazine] வெளியிடப்பட்டுள்ளது.  

    பொதுவாகப் பரிதியின் 3 AU ஆரத்துக்குள் [1 AU = பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம்], 450 மில்லியன் கி.மீ. தூரத்தில் இளம்பரிதியின் கனல்சூடு நீர் மூலக்கூறுகள், பனியாக உறைவதைத் தடுக்கும்.  V883 ஓரியனிஸ் விண்மீனில் திடீரென எழுந்த வெளிச்சம் நீர்ப்பனி அணிவகுப்பை 40 AU [6 பில்லியன் கி.மீ.] தூரத்துக்குத் தள்ளியது.  நீர்ப்பனி தூசிகள் சேமிப்பைக் [Agglomeration of Dust Grains] கட்டுப்படுத்தி பெரிய துகள்கள் உண்டாக ஏதுவாகும்.  நீர் ஆவியாகி நீங்கும் போது, பூமி, செவ்வாய் போல் சிறிய பாறைக் கோள்கள் உருவாகும். நீர்ப்பனி இருப்பு, வால்மீன் போன்ற கோள்களில் விரைவாகப் பனி உருண்டைகள் [Snowballs] உண்டாக்கும்.

    Magnetar

    “பால்வீதியில் (Milky Way) குறைந்தது 100 காந்த விண்மீன்கள் (Magnetars) இருக்கலாம்.  அவற்றால் பூதளத்துக்குக் கேடுகள் விளையலாம் !  அதிகமாக அவை இருந்தால் எதிர்பார்த்ததற்கும் மாறாகப் பேரளவில் காமாக் கதிர் வெடிப்புகள் (Gamma Ray Bursts) நேரிடலாம்.  அதனால் உயிரினத்துக்கு அபாயப் பாதிப்புகள் நிகழ வாய்ப்புள்ளன !  பூமிக்கருகில் அத்தகைய காமா வெடிப்பு (பாதுகாப்பான) ஓஸோன் கோளத்தை ஒழித்துவிடலாம் !  அதாவது பிரளய முடிவு போல் மனிதரும் விலங்குகளும் ஒருங்கே முழுமையாய் அழிந்து போகலாம் (Mass Extinction).”

    டோனால்டு ஃபைகர் (Donald Figer, Rochester Institute of Tecnology, USA)

    காந்த விண்மீனைச் சுற்றியிருக்கும் காந்த தளத்தின் (Magnetic Field of Magnetar) தீவிரத்தின் ஆழத்தைக் காண்பது கடினம் ! பூகாந்த தளத்தின் அளவு சுமார் அரை காஸ் (0.5 Gauss) (Gauss – Unit of Magnetism).  குளிர்ச் சாதனப் பெட்டியின் காந்த அளவு 100 காஸ். ஆனால் ஒரு சாதாரணக் காந்த விண்மீனின் அசுரக் காந்த தளம் குவாடிரில்லியன் காஸ் (Quadrillion Gauss —> 10^15 Gauss. USA) !  அதன் விளைவு உயிரினத்துக்குப் பேராபத்தை உண்டாக்கக் கூடியது !  அதன் காந்த சக்தி வீரியம் பூகோள மாந்தரின் உடல் மூலக்கூறுகளை உடனே திரித்து முரணாக்கும் வல்லமை பெற்றது !

    விஞ்ஞான விளக்க வெளியீடு (Science Illustrated Magazine) (Jan-Feb 2009)

    unnamed (1)

     

    விண்வெளியில் பூதக் கதிர்கள் வீசும் காந்த விண்மீன்கள் !

    1987 ஆம் ஆண்டில்தான் முதன்முதல் வானியல் விஞ்ஞானிகள் ராபர்ட் டங்கனும் கிரிஸ்டஃபர் தாம்ஸனும் (Robert Duncan & Christopher Thompson) அசுரக் காந்த ஆற்றல் கொண்ட நியூட்ரான் விண்மீன்களின் இருப்பைக் கண்டுபிடித்தனர்.  அவையே பின்னால் “காந்த விண்மீன்கள்” (Magnetars) அல்லது “சாவூட்டும் விண்மீன்கள்” (Deadly Magnetars) என்று பெயரிடப் பட்டன.  காந்த விண்மீன்கள் அசுரக் காந்த ஆற்றல் மட்டுமல்ல பூதச் சக்தி கொண்ட காமாக் கதிர்கள் (Mammoth Bursts of Energetic Gamma Rays) வீசி நாசமூட்டும் தீவிர விண்மீன்களாகவும் கருதப் படுகின்றன !  இந்தப் புதிரான மரண விண்மீன்கள் எப்படித் தீவிரக் காமாக் கதிர்களை வீசுகின்றன ஏன் வீசுகின்றன என்று விஞ்ஞானிகள் ஆழ்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.

    Fig 1B Gamma Ray Flares from Magnetars

    நியூட்ரான் விண்மீன், துடிப்பு விண்மீன், காந்த விண்மீன் (Neutron Star, Pulsar & Magnetar) ஆகியவற்றின் வேறுபாடுகளை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.  எரிசக்தி தீர்ந்து போன நியூட்ரான் விண்மீன்களின் தனித்துவம் என்ன ?  ஒரு சூப்பர்நோவாவில் (Supernova) உருவான பெருத்த விண்மீன் (Massive Star) ஒன்றின் உட்கருவாய் மிஞ்சி விட்ட திணிவு மிக்க எச்சம் (Dense Remnant) அது !  அத்தகைய விண்மீன்கள் நமது பரிதியை விட இரண்டு மடங்கு நிறை கொண்டு சுமார் 12 மைல் (20 கி.மீ.) விட்டமுள்ள ஒரு சிறு கோளமாய்ச் சுருங்கி விடுகின்றன !  துடிப்பு விண்மீன் என்பது வெகு வேகமாய்த் தன்னச்சில் சுழலும் உருவித நியூட்ரான் விண்மீன் !  அதன் காமாக் கதிர்க் கற்றைகள் (Radiation Beams) ஒவ்வொரு சுழற்சியிலும் ஒரு துடிப்பை உண்டாக்கிப் பூமியை ஊடுருவுகின்றன !  மெகனடார் எனப்படும் காந்த விண்மீனின் தனித்துவம் என்ன ?  ஒரு நியூட்ரான் விண்மீன் இயல்பு நிலையைப் போல் (Normal Staus) ஆயிரம் மடங்கு ஆற்றலுள்ள காந்த சக்தியை அடையும் போது அது காந்த விண்மீன் ஆகிறது.

    Fig 1B Magnetar SGR 1806-20

    இருபது ஆண்டுகளாய் விஞ்ஞானிகளிடையே ஐயப்பாடுகள் இருந்த பிறகு 2007 இல் காந்த விண்மீன்களின் மெய்யான இருப்பு ஏற்றுக் கொள்ளப் பட்டது.  புதிரான இந்த நியூட்ரான் விண்மீன்கள் ஒருவிதத் துடிப்பு விண்மீன்கள்தான் !  வெகு வேகமாய்ச் சுழலும் தீவிரக் காந்த ஆற்றல் கொண்டவை !  சூப்பர்நோவா வெடிப்பில் திணிவு நிறை மிக்க எச்ச விண்மீனாய் மரண நிலையில் இருப்பவை !  இந்த காந்த விண்மீன்கள் எப்படி உண்டாகின்றன ?  அவற்றின் அசுரத்தனமான காந்த ஆற்றலின் தீவிரம் எத்தனை அளவு ?  ஏன் சில விண்மீன்கள் மட்டும் புதிராகக் கருந்துளை யாகாமல் காந்த விண்மீன்களாக மாறுகின்றன ?  பிரபஞ்சத்தில் காந்த விண்மீன்களின் இருப்புத் தொகை (Abundance) என்ன ?  இவை போன்ற வினாக்களுக்கு வானியல் விஞ்ஞானிகள் விடை தேடிக் கொண்டிருக்கின்றனர் !

    Fig 1C The Mighty Magnetar SGR 1806-20

    புதிரான காமாக் கதிர்வீசும் பூதக் காந்த விண்மீன்கள்

    1992 ஆம் ஆண்டில்தான் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கிரிஸ்டஃபர் தாம்ப்ஸனும், ராபர்ட் டன்கனும் காந்த விண்மீன் நியதியை முதன்முதலில் நிலைநாட்டினர்.  அதற்கு ஆதாரமாக 1979 ஆம் ஆண்டிலே காந்த விண்மீன் ஒன்றிலிருந்து எழுந்த காமாக் கதிர்வீச்சுக்களை முதலில் அவரிருவரும் பதிவு செய்தனர்.  அதன் பிறகு அடுத்த பத்தாண்டுகளில் காந்த விண்மீன் நியதி பரவலாகப் பலரால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.  சூப்பர்நோவா (Supernova) வயிற்றிலிருந்து பிறந்து சுருங்கிப் பேரளவு திணிவுள்ள காந்த விண்மீன்கள் (Super-Dense Magnetars) பூமியின் காந்த தளத்தைப் போன்று 1000 டிரில்லியன் மடங்கு தீவிரக் காந்த சக்தியைக் கொண்டவை !  காந்த வின்மீன்கள் என்பவை வாயு எரிசக்தி தீர்ந்து போன ஒருவகை நியூட்ரான் விண்மீன்களே (Neutron Stars) !  அவற்றை அதி தீவிர ஆற்றல் உள்ள காந்தத் தளம் சூழ்ந்திருக்கிறது.  அந்தக் காந்த தளமே தேய்வடைந்து பேரளவு சக்தி வாய்ந்த மின்காந்த கதிர்வீச்சாக (High Energy Electromagnetic Radiation) குறிப்பாக எக்ஸ்ரே, காமாக் கதிர்களாக (X-Rays & Gammar Rays) மாறி எழுகின்றன.

    Fig 1E Magnetars Discovered

    இதுவரை (2007) விண்வெளியில் 16 காந்த விண்மீன்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.  அவற்றில் இரண்டு விதங்கள் உள்ளன.  முதல் வகை : “SGR” என்று அழைக்கப்படும் “மென்மைக் காமாக் கதிர் மீளெழுச்சி மீன்கள்” (Soft Gamma Ray Repeaters). அடுத்த வகை : AXP என்று குறிப்பிடப்படும் “முரண் எக்ஸ்ரே துடிப்பு மீன்கள் (Anomalous X-Ray Pulsars).  இதுவரைப் பிரபஞ்சத்தில் பதிவு செய்த காந்த விண்மீன்களில் அதி தீவிரக் காந்த தளம் கொண்டது : SGR 1806-20.  அதன் கணிக்கப்பட்ட காந்த தளம் : 2 X (10^11) Teslas OR 2 X (10^15) Gauss (1 Teslas = 10,000 Gauss). பூத வல்லமை உடைய அந்த காந்த விண்மீனின் தீவிரத்தை ஒப்பாகக் காட்ட வேண்டுமானால் இப்படிக் கூறலாம்.  பூமியின் காந்த தளம் : அரை காஸ்.  மருத்துவ மனையில் உள்ள “காந்த இணைத் துடிப்புப் படவரைவு யந்திரம்” (MRI – Magnetic Resonance Imaging Machine) 32,000 காஸ். ஆய்வுக் கூடங்களில் இதுவரை தயாரிக்க முடிந்த காந்த தளம் : 40 டெஸ்லாஸ் (400,000 காஸ்).

    Fig 1E Neutron Stars

    தீவிரக் காமாக் கதிர் வீசும் காந்த விண்மீன்

    2007 ஆண்டுவரை விஞ்ஞானிகள் 16 காந்த விண்மீன்களைக் கண்டுபிடித்துள்ளார்.  அவற்றின் பெயர்கள், இருப்பிடங்கள், சுழற்சி வேகங்கள், கண்டுபிடித்த ஆண்டுகள் ஆகிய விபரங்களை அட்டவணையில் காணலாம்.  அவற்றில் 1979 இல் கண்டுபிடிக்கப் பட்ட காந்த விண்மீன் SGR 1806-20 டிசம்பர் 27 2004 தேதி அன்று இதுவரைப் பதிவு செய்யப் படாத அளவு கதிர்ச் சக்தியை வெளியிட்டிருக்கிறது.  அந்தப் பேரளவு சக்தி நமது சூரியன் 250,000 ஆண்டுகள் தொடர்ந்து வெளியிடும் வெப்ப சக்தி அளவுக்கு ஒப்பாகும்.  வெளியிட்ட நேரம் : 0.2 வினாடி !  வெளியிட்ட அளவு : வினாடிக்கு 1 மில்லியன் ஒளித்துகள் (1000,000 Photons per Sec) !  இந்தக் காந்த விண்மீன் ஓர் எக்ஸ்-ரே துடிப்புக் களஞ்சியம் (Pulsating X-Ray Source).  பூமியிலிருந்து 50,000 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது.  அதன் சுழற்சி வேகம் : 7.56 வினாடிக்கு ஒரு சுற்று.  அதன் அசுரக் காந்த ஆற்றல் : 10^15 காஸ் (Gauss).  ஒப்பு நோக்கினால் பூமியின் காந்த தளத்தின் ஆற்றல் : 0.6 காஸ் !  அகில உலக விஞ்ஞானிகள் 2004 டிசம்பர் 27 ஆம் தேதி அன்று விளைந்த சம்பவங்களை ஆராய்ந்து டங்கன் தாம்ஸன் கோட்பாடுகளை ஒப்புக் கொண்டுள்ளனர்.  அதாவது காந்த விண்மீனின் முறிவுகளில் கதிர் வீச்சுகள் வெளிப்படுகின்றன என்றும் இந்த காந்த தளங்கள் விண்மீனின் மேற்தட்டைப் (Magnetar’s Crust) பல மைல் தூரம் தகர்த்துக் கிழிக்கின்றன !  இந்த முறிவு அரங்குகள் பூமியிலுள்ள பூகம்பப் பழுதுக் கோடுபோல் (Earth’s Tectonics Fault Line) காணப் படுகின்றன.  1998 ஆகஸ்டு மாதம் 20,000 ஒளியாண்டு தூரத்தில் உள்ள SGR 1900+14 காந்த விண்மீன் மிகச் சக்தி வாய்ந்த காமா கதிர்களையும் எக்ஸ்-ரே கதிர்களையும் உமிழ்ந்தது !

    Fig 2 Making a Magnetar

    நியூட்ரான் விண்மீன்களில் காமாக்கதிர் வெடிப்புகள்

    பிரபஞ்சத்தில் பிறந்த ஒரு விண்மீனின் இறுதி மரண நிலைகளில் ஒன்று நியூட்ரான் விண்மீன் எனப்படும் முடிவான வடிவம்.  சூரியப் பளுவைப் போல் 4 முதல் 8 மடங்கு பெருத்த திணிவு விண்மீன்கள் சிதைவாகி விளைவதே ஒரு நியூட்ரான் விண்மீன் !  பொதுவான விண்மீன்கள் தமது அணுக்கரு எரிசக்தி யாவும் எரிந்து போன பிறகு, சூப்பர்நோவாவாக வெடித்து விடுகின்றன !  அந்த வெடிப்பில் விண்மீனின் மேலடுக்குகள் சிதறிப் போய் அது வனப்புள்ள ஓர் சூப்பர்நோவாவின் மிச்சமாகிறது.  விண்மீனின் உட்கருவானது பேரளவு ஈர்ப்பு விசை அழுத்தத்தில் சின்னா பின்னம் ஆகச் சிதைகிறது !  அப்படிச் சிதைவாகும் போது விண்மீனில் உள்ள நேர் மின்னியல் புரோட்டான்களும், எதிர் மின்னியல் எலெக்டிரான்களும் இணைந்து (1 புரோட்டான் + 1 எலெக்டிரான் = 1 நியூட்ரான்) நியூட்ரான்களாக மாறிகின்றன.  அதனால் அவை நியூட்ரான் விண்மீன் என்று அழைக்கப் படுகின்றன.

    Fig 2 Neutron Stars & Magnetars

    ஒரு நியூட்ரான் விண்மீன் சுமார் 20 கி.மீடர் (12 மைல்) விட்டம் கொண்டது.  அதன் பளு சூரியனைப் போல் சுமார் 1.4 மடங்குள்ளது.  அதாவது நியூட்ரான் விண்மீன் குள்ளி ஆயினும், பளு திண்மையானது (Mass is Dense with High Density).  நியூட்ரான் விண்மீனின் சிறு பிண்டம் கூட பல டன் பளுவைக் கொண்டதாய் இருக்கும்.  நியூட்ரான் விண்மீனின் பளு அடர்த்தி ஆனதால், அதன் ஈர்ப்பாற்றலும் பேரளவில் பிரமிக்க வைப்பதாய் உள்ளது.  ஒரு நியூட்ரான் விண்மீனின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசைபோல் (2 X 10^11) மடங்கு மிகையானது !   அதே போல் நியூட்ரான் விண்மீனின் காந்த சக்தி பூமியின் காந்த சக்தி போல் 1 மில்லியன் மடங்கு மிகுந்தது !

    Fig 4 Spitzer Space Telescope

    சூப்பர்நோவா மிச்சங்களாக (Supernova Remnants) நியூட்ரான் விண்மீன்கள் தோன்றலாம் !  தனிப்பட்ட நியூட்ரான் விண்மீன்களாகவும் பிறக்கலாம் !  இரட்டைப் பிறவிகளாக (Binary Systems) காட்சி அளிக்கலாம் !  அவ்விதம் இரட்டையாக அமைந்துள்ள நியூட்ரான் விண்மீனின் பளுவைக் கணிப்பது எளியது.  அப்படிக் கண்டுபிடித்ததில் நியூட்ரான் விண்மீன்களின் பளு, பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு (சந்திரசேகர் வரம்பு) இருந்ததாக அறியப்பட்டது. இரட்டை அமைப்பில் நான்கு நியூட்ரான் விண்மீன்கள் அண்டக் கோள்களைக் கொண்டுள்ளதாக அறியப் படுகிறது !  கருந்துளைகள் (Black Holes) மிகவும் கனமானதால் “சந்திரசேகர் வரம்பு” ஒரு பிண்டத்தை நியூட்ரான் விண்மீனா அல்லது கருந்துளையா என்று அடையாளம் காண உதவுகிறது !

    Fig 3 Supervova Explosion

     

    பால்வீதி விண்மீன் கொத்துக்களில் காந்த விண்மீன்களைத் தேடல்

    அமெரிக்காவின் ராச்செஸ்டர் தொழில் நுணுக்கக் கூடத்தின் வானியல் விஞ்ஞானி டோனால்டு ஃபைகர் நமது பால்வீதி காலக்ஸியின் விண்மீன் கொத்துக்களை (Star Clusters) உளவி குறைந்தது 100 காந்த விண்மீன்கள் அவற்றில் ஒளிந்து கொண்டிருக்கலாம் என்று கூறுகிறார்.  அப்பணிகளுக்கு நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி, ஸ்பிட்ஸர் விண்ணோக்கி, சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கி, கிளாஸ்ட் தொலைநோக்கி போன்றவையும் ஹவாயியில் உள்ள உட்சிவப்புக் கருவிகள் பயன்படுகின்றன.  நாசாவின் கிளாஸ்ட் தொலைநோக்கி [Gamma-Ray Large Area Space Telescope (GLAST)] காமாக் கதிர் வெடிப்புகளைக் காணும்.  நியூட்ரான் விண்மீன், துடிப்பு விண்மீன் ஆகியவற்றைக் கண்டுபிடிக்கும்.  கருந்துளை, கரும் பிண்டம், அகிலக் கதிர்களைப் பற்றி அறிய உதவும். அதாவது இதுவரை 10% காந்த விண்மீன்களைத்தான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்.  இத்தகைய அசுரக் காந்த விண்மீன்களை ஏன் விஞ்ஞானிகள் தேடிப் பதிவு செய்ய வேண்டும் என்னும் வினா நம்மிடையே எழுகிறது.  உதாரணமாக 2004 டிசம்பர் 27 ஆம் தேதி அடித்த பேரளவுக் காமாக் கதிர்ப் புயலின் பூதள விளைவுகள் பல விஞ்ஞானிகளுக்கு அச்சத்தை உண்டாக்கி யிருக்கிறது !  விண்வெளியில் ஏற்படும் இயற்கையின் விந்தை நிகழ்ச்சிகளால் பூமியில் விளையும் பூகம்பங்கள், எரிமலைகள், சுனாமிகள், மின்காந்த அலை அபாயங்கள் ஆகியவற்றுக்கு எந்தத் தொடர்பும் உள்ளதா என்று உளவி ஆராய உதவியாய் இருக்கும்.

    Fig 6 Gamma Ray Bursts Initiate Extinction

    +++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies (2005)
    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    10 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40802141&format=html(Gamma Ray Bursts)
    10 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40801031&format=html(Neutron Stars)
    10 (c) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40905121&format=html(Death Stars)
    10(d) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40905281&format=html(Harmful Death Stars)
    11 Space Com – Origins of the Universe’s Most Powerful Magnets (The Magnetars) By : Michael Schirber (Feb 1, 2005)
    12 Extreme Universe : Magnetic Fields & Magnetars Posted By : Jcconwell in Astronomy (Mar 12, 2009)
    13 Science Illustrated – Death Star – Could the Most Magnetic Objects (Magnetars) in the Universe Cause Extinction on Earth ? (Jan-Feb 2009)
    14 From Wikipedea – Magnetar (May 1, 2009).
    15 Space & Earth – Integral Looks at Earth to Seek Source ogf Cosmic Radiation (Mar 16, 2006)
    16 BBC News – NASA’s Eye on the Violent Cosmos By Paul Rincon [June 6, 2008]
    17 BBC News – A Glimpse of Ancient Dying Stars By Victoria Gill (Sep 7, 2009)
    18 Astronomy – Gammy Rays from Monster Stars By Philips Plait (Feb 7, 2007)
    19 Thunderbolt Info – Magnetic Monsters (May 22, 2009)
    20 Astronomy Magazine – In Search of the Galaxy’s Magnetic Monsters By : Steve Nadis (September 2009)

    21. http://phys.org/news/2016-07-stellar-outburst-snowline-view.html  [July 13, 2016]

    22. https://www.eso.org/public/news/eso1626/  [July 13, 2016]

    23. http://www.spacedaily.com/reports/Stellar_outburst_brings_water_snowline_into_view_999.html  [July 26, 2016]

    ++++++++++++++++
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) (July 27, 2016) [R-1]

    Attachments area
    Preview YouTube video Snow in Space? Stellar Outburst Brings Water Snow Line Into View

    Snow in Space? Stellar Outburst Brings Water Snow Line Into View

    Preview YouTube video ASTOUNDING SCIENTIST HAVE SPOTTED SNOW IN SPACE “first stellar snow line “

    ASTOUNDING SCIENTIST HAVE SPOTTED SNOW IN SPACE “first stellar snow line “

    Preview YouTube video Water Snow Line around Young Star

    Water Snow Line around Young Star
    Share
  • புதுக்கவிதையின் நோக்கும், போக்கும்

    .தமிழ் அழகன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அரசு கலைகல்லூரி, அரியலூர்

    ஆதி இலக்கியங்கள் கவிதை வடிவின. தொல்காப்பியம் கூறும் செய்யுளியல் இலக்கணம் அவர்காலத்திற்கு முன்னர் எழுந்த இலக்கியங்களின் வடிவங்களை விளக்கும். காரிகை கற்று எவரும் கவிதை இயற்றுவதில்லை. யாப்பருங்கலக்காரிகை எனும் யாப்பிலக்கணநூல் தொல்காப்பியத்திற்கு பின்னர் தோன்றியது. வடிவம் மட்டும் கவிதையாகிவிடாது. தேமா, புளிமா சேர்க்கையோடு எதுகை, மோனையுடன் கருத்துணர்வு நிலையும் சேர்ந்தால்தான் கவிதை உயிர்பெறுகிறது. தற்காலத்தில் கவிஞர்கள் பலர் முற்றிலும், வடிவிலும், பொருளிலும் மாறுபட்டு புதிய பிறவியாகக் காட்சியளிக்கும் புதுக்கவிதைகளை இயற்றிவருகின்றனர். அத்தகைய புதுக்கவிதைகளின் நோக்கும் போக்கும் பற்றி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    நோக்கம்

              அக்காலக் கவிதைகளில் அகமும், புறமும் பாடுபொருளாயின. இன்று மனித சமுதாயத்தின் பல்வேறு படிநிலைகள் பாடுபொருளாக்கப்படுகின்றன. நிற்கவே நேரமில்லாத இயந்திர உலகத்தில் விரைந்து படிக்கவேண்டும். எளிதில் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கவிஞர்கள் தத்தம் அனுபவ கருத்துக்கள் விரைவில் மக்களைச் சென்றடைய வேண்டும் எனக் கருதுகின்றனர்.

              சொல் புதிது, பொருள் புதிது என்று பாரதி கூறியிருப்பதும் மரபிலிருந்து மாற்றம் தேவை என்பதையே குறிக்கிறது. அதனால்தான் மானிடவர்க்கத்தின் பாடுகளையும், பட்டினிக் கோலங்களையும், பெண்களின் நிலைகளையும் கருத்துப்பொருளாகக் கொண்டு படைப்புகளைப் படைக்கின்றனர்.

              புதுக்கவிதை பிரெஞ்சுப்புரட்சியின் விளைவாகப் பிரான்சு நாட்டில் தோன்றியதாகும். ஆங்கிலக் கவிஞர் ‘வால்ட் விட்மன்’, ‘புல்லின் இதழ்கள்’ என்ற கவிதையைப் படைத்தார். தொடக்கக்காலத்தில் ஆங்கிலம் படித்த கவிஞர்கள் மட்டுமே பிறநாட்டுக் கவிஞர்களின் புதுக்கவிதைகளைப் படித்து தமிழ் மொழியில் புதுக்கவிதைகளை எழுதினர். எனினும் கவிதை வடிவங்களில் காலந்தோறும் புதுமைகள் நிகழ்ந்துள்ளன. நாட்டுப்புற பாடல்களிலும் புதுக்கவிதைகளின் வடிவங்களைக் காணலாம். ஜப்பான் நாட்டு ஹைகூ கவிதைகள் தமிழில் குறும்பாக்கள் தோன்றக் காரணமாயின. இருப்பினும், தமிழ் விடுகதைப்பாடல்களை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

              எருக்கிலைப் பழுப்பதேன்

               எறுமைக் கன்று சாவதேன்

               பாலின்மையால்”

    இவ்விடுகதைப் பாடல் ஜப்பானிய ‘ஹைகூ’ பாடலின் வடிவம் கொண்டதுதான் என்றாலும், ஒலிநயச் சேர்க்கை இருப்பதாலும், எதுகை மோனை அமைவதாலும், இதனை மரபுக்கவிதையில் அடக்கிவிடுகின்றனர். கருத்து வடிவத்தை நோக்கின் இது ஹைகூ வடிவமேயாகும்.

              மரபுக்கவிஞர்கள் உவமை, உருவகம், உள்ளுறை, இறைச்சி போன்ற உத்திகளைப் பயன்படுத்தி யாப்பிற்கு உட்பட்டு கவிதைகளை யாத்தனர். அவற்றைப் புரிந்துகொள்ள விளக்கவுரை, பொழிப்புரை, கருத்துரை என உரையாசிரியர்களின் உரை விளக்கங்கள் தேவைப்பட்டன. புதுக்கவிதைப் படைப்பாளர்கள், உருவம், உள்ளடக்கம், படிமம், குறியீடு, அங்கதம், முரண் என்பன போன்ற நவீன உத்திகளைப் பயன்படுத்தி யாப்பின்றி கவிதைகளை எழுதுகின்றனர். மரபு மீறலிலும் புதுமைகள் பொலிகின்றன. புதிய வகையான உவமைகளைப் பயன்படுத்தி யதார்த்தப்போக்கில் கருத்துக்களை கவிதையாக்குகின்றனர். நமக்குப் பரிச்சயமான உவமைகளைக் கையாளும்போது கவிதை சிறக்கின்றது. சிலர் பிற கவிஞர்களின் படைப்புகளைப் படித்துவிட்டு அதைப்போல எழுத முயல்கின்றனர். சிலர் தங்கள் விருப்பத்தை நிறைவுசெய்யும் பொருட்டு முறையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி கவிதைகளைக் குறைப் பிரசவமாக்கிவிடுவதால் தரமற்ற கவிதைகள் தோன்றுகின்றன. அவை நீர்க்குமிழிபோல மறைந்து விடுகின்றன.

    புதிய பாடுபொருள்

              கடவுளர்களையும், அரசர்களையும் பாடிவந்த காலம்மாறி சமுதாய அவலங்களை விளக்க பாட்டாளிகள், பாமரர்கள், சமூக விரோதிகள், அரசியல்வாதிகள், பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள், விபச்சாரிகள் போன்றவர்களையும் வேலையில்லாத் திண்டாட்டம், வரதட்சணைக் கொடுமை, வறுமை, லஞ்சம், பெண்ணியம், தலித்தியம் என்பன போன்ற அன்றாட நடப்புகளையும் புதுக்கவிதையின் பாடுபொருளாக்குகின்றனர்.

    படிமம்

              பொருளையும், அனுபவத்தையும், உணர்ச்சிகளையும் படிப்பவர் மனதில் எழுப்பிக் காட்டுவதையே ‘படிமம்’ என்கின்றோம்.  இன்றைய புதுக்கவிதைகள் நிலைத்து நிற்பதற்கும், இலக்கியத் தகுதிபெறுவதற்கும் படிமம், குறியீடு, அங்கதம், முரண் போன்ற கருத்துச்செறிவுகள் அவசியமாகின்றது.

              புதிதாகக் கவிதை எழுத நினைப்பவர்கள் எடுத்த எடுப்பில் காதலைப் பற்றி எழுதுகின்றனர். ஆகையால் புதுக்கவிதைகளில் காதல் கவிதைகள் பெருகிவருகின்றன.

              இனியவளே                       

               ஈரக்கூந்தலை இறுக்கி

               முடியாதே

               எனக்கு இதயம் வலிக்கிறது”      (. பன்னீர்செல்வம்)

    புரியாத புதிர்

              சிலர்தம் விருப்பம்போல சொற்களைப் பயன்படுத்திப் புலனுக்கோ, புத்திக்கோ புரியாத வண்ணம் புதுக்கவிதை படைக்கின்றனர்.

              நிஜம் நிஜத்தை நிஜமாக

              நிஜமாக நிஜம் நிஜத்தை

              நிஜத்தை நிஜமாக நிஜம்

              நிஜமும் நிஜமும் நிஜமாக

              நிஜமோ நிஜமே நிஜம்

              நிஜம் நிஜம் நிஜம்” (ஆத்மாநாம் கவிதைகள், . 120)

    இக்கவிதை நிஜமாகவே புரியாத புதிராகும். இவ்வகைக் கவிதைகள் படைப்பாளருக்கும், வாசகருக்கும் உள்ள தூரத்தை அதிகரிக்கின்றது.

    அரசியல்வாதி

              சமூக அக்கறையுள்ள கவிஞன் சில சமூகச்சீர்கேடுகளைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றான். கவிஞர் ஈரோடு தமிழன்பன்,

             லுகைகள்

              சீர்திருத்தங்கள்

              வாக்குறுதிகள்’      

              புரட்சி தவத்தைக் கலைக்க

              ஆதிக்க

              புரியிலிருந்து புறப்பட்டுவரும்

              மேனகை ரம்பை

            திலோத்தமை ஊர்வசியாய்”

    என்று தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவீசும் அரசியல்வாதிகள் மக்களின் உள்நிலையைப் புரிந்துகொண்டு செயல்படுவதைச் சுட்டிக்காட்டுகின்றார்.

    வேலையில்லாத் திண்டாட்டம்

              கவிஞர் அறிவுமதி வேலைவாய்ப்பு அலுவலகத்தின் நிலையை,

              எம்ப்ளாய்மெண்ட்

              எக்சேஞ்சுக்கு

              புறப்பட்டுப்போன

              மகனிடம் கேட்டுக்கொண்டார்

              தந்தை

              என்னுடையதையும்

              ரெனிவல் செய்துகொண்டு

              வந்துவிடப்பா”

    என்று பாடியுள்ளார். இக்கவிதையில் ஆங்கிலச் சொற்கள் தமிழ் ஒலிக்கேற்ப பயின்று வந்துள்ளன. இது பிறபொழிச்சொற்கள் சரளமாகக் கையாளப்பட்டுள்ள போக்கினைக் காட்டுகிறது.

    பெண்ணியக் கருத்துக்கள்

              பெண்ணிய எழுத்தாளர்கள் பலர் தங்கள் கவிதைகளில் பெண்ணியக் கருத்துக்களைக் கையாண்டுள்ளனர். கவிஞர் மு. மேத்தா பெண்சிசுக் கொலையை,

              பெண்கள் கிளிகளாம்

                உவமை சரி

               நெல்மணி”

    எனும் கவிதை வரிகளில் பாடியுள்ளார். வரதட்சணைக் கொடுமையால் மணமாகாத முதிர்கன்னியின் நிலையை,

              விழிகள்

              நட்சத்திரங்களை வருடினாலும்

              விரல்கள் என்னவோ

              ஜன்னல் கம்பிகளோடுதான்”

    என்று கண்ணில் கனவுகளையும், நெஞ்சில் காதலையும் சுமந்து கொண்டு வாழும் பெண்களின் அவலநிலையை இக்கவிதை விளக்குகிறது.

              கவிதை என்ற சொல் மரபுக்கவிதையைக் குறித்தமையால் வடிவாலும், பொருளாலும் புதுமையாக விளங்கும் கவிதைகளைப் புதுக் கவிதைகள் என்று அழைக்கின்றனர். யாப்பு மீறல் மட்டுமே புதுக்கவிதைப் பண்பாகாது. யதார்த்த பாடுபொருளாலும் உணர்வு நிலையாலும், சொல்லாடல்களாலும் புதுமை பெற்று விளங்குவதால் புதுக்கவிதை நிலைத்து நிற்கிறது. ஆண்கவிஞர்களும், பெண் கவிஞர்களும் தங்கள் அனுபவங்களையும், சமூகச் சீர்கேடுகளையும் சுட்டிக்காட்டிக் குறைந்த அடிகளில் எளிய சொற்களைப் பயன்படுத்துவதால் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சிறந்த கவிதைகள் நிலைத்தும், தரமற்ற கவிதைகள் அழிந்தும் போவதை அறிய முடிகிறது.

    Share
  • தமிழ்க்குடில் கவிதை மற்றும் கட்டுரைப் போட்டி

    unnamed

    போட்டி எண் 1 – திரு. காமராசர் அவர்களின் 113 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் மூன்றாம் ஆண்டு கட்டுரைப்போட்டி

    தலைப்பு : ‘இன்றைய நெருக்கடியான கல்விச்சூழலில் காமராசர்’

    விதிமுறைகள்:

    போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம்.(பள்ளி மாணவர்கள் தவிர)
    குறைந்தது 4 பக்கம் முதல் 10 பக்கம் வரை இருக்கவேண்டும்.
    படைப்புகள் வேறு எங்கும் பகிர்ந்ததாகவோ, அச்சிடப்பட்டதாகவோ இல்லாமல் தமிழ்க்குடிலின் போட்டிக்கென எழுதி அனுப்பவேண்டும்.
    உங்கள் பார்வையில் நீங்கள் திரு.காமராசரை உணர்ந்த விதத்தில், இன்றைய கல்விச்சூழலை அவர் எப்படி கையாண்டு இருப்பார் என கட்டுரைகள் படைக்க வேண்டுகிறோம்.
    படைப்பாளிகள் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரியுடன் படைப்புகளை மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பி வைக்கப்படவேண்டும் குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது.
    படைப்புகளை லதா, பாமினி ஒருங்குறியில் தட்டச்சு செய்து வேர்டு ஆவணமாக அனுப்பவேண்டுகிறோம். தங்கள் படைப்புகள் எழுதியிருக்கும் பக்கத்தில் தங்கள் பெயர், முகவரி குறிப்பிடாமல் மின்னஞ்சலில் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது. முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்.

    பரிசு விவரம்:

    முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு, வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இலச்சினை(சின்னம்-Logo) பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னம் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

    *******
    போட்டி எண் : 2 – தமிழ்க்கடல் திரு. மறைமலை அடிகளாரின் 140 வது பிறந்தநாளை (15 ஜூலை) முன்னிட்டு கவிதைப்போட்டி

    தலைப்பு : பொதுவான தலைப்பு இல்லை – விருப்பமான, பொருத்தமான தலைப்பில்…

    விதிமுறைகள் :
    போட்டியில் பங்குகொள்பவர்கள் தங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதையைத் தங்கள் சொந்தக்குரலில் ஒலிப்பதிவு செய்து (MP3 Format ) தமிழ்க்குடில் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

    ஒலிப்பதிவு செய்யும்பொழுது தங்களைப்பற்றிய எந்த சுய விவரமும் கொடுக்காமல் கவிதையின் தலைப்பு, கவிதை, கவிதைக்கான களம், கவிதையின் சூழல் மற்றும் கவிதை என்ன சொல்கிறது என்பதையும் குறிப்பிடவும்.

    மின்னஞ்சலில் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரி இவற்றோடு தாங்கள் பதிவு செய்த கவிதையினை தட்டச்சு செய்து மின்னஞ்சலில் அனுப்பிட வேண்டுகிறோம்.

    பரிசு விவரம்:

    முதல் பரிசு மற்றும் இரண்டாவது பரிசு: வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இலச்சினை(சின்னம்-Logo) பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னமும், சான்றிதழும் வழங்கப்படும்.

    மூன்றாவது பரிசு : நூலும், சான்றிதழும் வழங்கப்படும்.

    அனுப்பவேண்டிய மின்னஞ்சல் – tamilkkudil@gmail.com

    அனுப்பவேண்டிய கடைசி நாள் கட்டுரைக்கு…. 15.08.16கவிதைக்கு……10.08.16

    தொடர்ந்து தமிழ் தொடர்பான போட்டிகளை அறிவித்து அதை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்க்குடில் அறக்கடளையின் இந்தப் போட்டிகளும் சிறப்புற அனைவரும் கலந்து கொள்ளுங்கள். தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொண்டு அவர்களையும் எழுதச் சொல்லுங்கள்.

    Share
  • போராட்டத்தின் முற்றுப்புள்ளி?

    எம்.ரிஷான் ஷெரீப்

    irome_sharmila

                ‘நான் இருப்பேனா வாழ்வேனா என்பது பற்றி எனக்கு எந்தப் பயமும் இல்லை. நாம் எல்லோரும் சாகத்தான் பிறந்திருக்கிறோம் என்பது உண்மை. என் ஆத்மா கடவுளின் பாதுகாப்பில் இருக்கிறது. நாம் நினைத்தபடி நாம் வாழ முடியாது; நினைத்தபடி சாகவும் முடியாது. எல்லாம் கடவுளின் கையில் இருக்கிறது. வாழ்வும் சாவும் அவன் கையில் இருக்கிறது. சாவு குறித்து எனக்கு எந்த அச்சமும் இல்லை. 

         இப்போது நான் செய்வதெல்லாம் கடவுளின் விருப்பமும் என் மக்களின் விருப்பமும்தான். ஒரு மனித உயிர் வாழும்போது அவனோ அவளோ பல தவறுகளைச் செய்யலாம். நம் பெற்றோர் நமக்குப் பிறப்பளித்தாலும் அவர்கள் குணங்கள் எல்லாம் நமக்குண்டு என்று சொல்லிக்கொள்ள முடியாது. எனது தாய் தந்தையிடம் வேண்டாத குணங்கள் உண்டு. அவர்கள் என்னை வளர்த்த போது அவர்கள் சரி என்று கருதிய முறையில் வளர்த்தார்கள். ஆனால் நான் வளர்ந்து பெரியவளாகி எது சரி, எது தவறு என்பதை உணர்ந்தபோது, அவர்கள் செய்ததில் எது சரி, எது தவறு என்பது எனக்குத் தெரிந்தது. அவற்றைத் திருத்தும் ஆசை ஏற்பட்டது. அதுபோலவே என் தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் ஆசைப்படுகிறேன்.’

                சம கால வீர மங்கையான மணிப்பூர் இரோம் ஷர்மிளாவின் மேற்படி கருத்து சாவை எதிர்கொள்வது பற்றிய கேள்விக்கு பதிலாக அமைந்தது. வீர மங்கை. மனித மற்றும் சமூக உரிமை ஆர்வலர், அரசியலாளர் என அறியப்பட்டுள்ள அவர், மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பதிகாரச் சட்டத்தை விலக்கக் கோரி கடந்த பதினாறு ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வந்தவர்.

         அயல் தேசத்தவர்களின் சட்ட விரோதமான ஊடுருவலைத் தடுப்பதற்காக, 1958 ஆம் ஆண்டு முதல் மணிப்பூர் உள்ளிட்ட ஏழு வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதனால் அந்த மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் முற்றுமுழுதாக ஆயுத மற்றும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர். படையினருக்கு கூடுதல் அதிகாரங்களை இச் சட்டம் வழங்குவதால் இராணுவம் மிக மோசமான வன்முறைகளை அம் மாநில பொதுமக்கள் மீது பிரயோகிக்க ஆரம்பித்தது. அம் மாநிலங்களில் மனித உரிமைகள் அதிக அளவில் மீறப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள்  எழுந்து கொண்டேயிருந்தன.

         இந்த நிலையில் ‘மலோம் படுகொலை’ என மனித உரிமை தன்னார்வலர்களால் குறிப்பிடப்படும், மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மலோம் என்ற சிற்றூரில் இந்தியப் படைத்துறையின் துணைப்படையான அசாம் ஆயுதப் படையினால் பேருந்து நிறுத்தமொன்றில் நின்றிருந்த பொதுமக்களில் பத்துப் பேர் சுடப்பட்டு இறந்த சம்பவம், 2000.11.02 அன்று நிகழ்ந்தது.

         அந்தப் பிரதேசத்தின் கால்நடை சேவகரொருவரின் மகளான இரோம் ஷர்மிளா, மணிப்பூரின் வரலாற்றில் இருண்ட தினமாகப் பதியப்பட்டிருக்கும் அன்று முதல்,  தனது இருபத்தெட்டாம் வயதில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். போராளி என சந்தேகத்திற்கிடமாகக் கைது செய்யப்படும் எவரையும் காலவரையின்றி காவலில் வைக்க அதிகாரம் வழங்கும் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை, (1958-AFSPA) மீளப்பெற வேண்டும் என்பதே இவரது முதன்மையான கோரிக்கையாக அமைந்தது.

    rea_arrested

         உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்து ஒரு வாரத்திற்குள்ளாக, தற்கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு காவல்துறையால்  அவர் கைது செய்யப்பட்டார். தற்கொலை முயற்சிக்கு, இந்திய சட்டத்தின் பிரகாரம் ஒரு வருடமே சிறைத்தண்டனை வழங்க இயலும் என்பதால், நீதித்துறை காவலில் இருந்தவரை, ஒரு வருடத்திலேயே விடுவித்து, பின்னர் பல்வேறுபட்ட வழக்குகளில் மீண்டும் கைது செய்தது. இவ்வாறு திரும்பத் திரும்ப நடந்து கொண்டேயிருந்தது. இடையில், சிறையில் வைத்து காவல்துறையினர் ஷர்மிளாவுக்கு பலவந்தமாக உணவு புகட்ட முனைந்ததும், மூக்கு வழியாக ஆகாரம் செலுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

                நிலைமை இவ்வாறிருக்கையில், தனது பதினாறு வருட கால உண்ணாவிரதப் போராட்டத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம், 09 ஆம் திகதியன்று முடித்துக் கொள்ளப் போவதாக திடீரென்று நேற்று அறிவித்திருக்கிறார் இரோம் ஷர்மிளா. அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் மணிப்பூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடுவதற்காகவே இந்த முடிவை எடுத்திருக்கிறார் எனத் தெரிய வருகிறது.

                ‘எனது உண்ணாவிரதத்தால் மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை பொய்த்துவிட்டது. எனவே அரசியலில் இணைந்து அதன் மூலமாக எனது போராட்டத்தை தொடருவேன்.’ எனக் குறிப்பிட்டிருக்கும் வீர மங்கையின் இத்திடீர் முடிவு அவரது சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கு ஆனந்தத்தையும், அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சியையும் அளித்திருக்கிறது.

         இன்றும் கூட அந்த மாநிலங்களில் இந்திய இராணுவத்தால் மிக மோசமான வன்முறைகள் தினந்தோறும் பொதுமக்கள் மீது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அரசின் மீதுள்ள அச்சம் காரணமாக ஊடகங்கள் இவ் வன்முறைகளை வெளிக்கொண்டு வருவதில்லை.

         உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் இரோம் ஷர்மிளாவின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன். பதினாறு வருடங்களாக அவரது போராட்டத்துக்கு செவி சாய்க்காத அரசு, இனியும் செவி சாய்க்கும் என்ற நம்பிக்கை துளியுமில்லை. பதினாறு வருடங்கள் உண்ணாமல், குடிக்காமல் ஒரு பெண்ணால் மன உறுதியுடன் போராட முடியுமானால், அதே மன உறுதியுடன் அரசியலிலும் நுழைந்து, நிச்சயமாக தனது மக்களின் நல்வாழ்வுக்காக ஒன்றிணைந்து அவ் வீர மங்கை போராடலாம். அது மிகவும் மகோன்னதமான வெற்றியையே தரும்.

         பெண்களை பலவீனமான ஆத்மாக்கள் எனச் சொல்லிப் புறந்தள்ளி வைக்கிறோம். ஆனால், ஏழு மாநிலங்களின் அதிகாரச் சூழ்நிலையை, அதன் அவல நிலையை, அங்கு மக்கள் அனுபவிக்கும் துயரங்களை சர்வதேசத்தின் முன்னால் எடுத்துச் செல்ல, அதற்காக உயிரைக் கொடுக்கத் துணிந்து போராட ஒரு பெண்ணால் முடிந்திருக்கிறது. பதினாறு வருடங்கள் இடைவிடாப் போராட்டம். இடைக்கிடையே அந்தகாரச் சிறை வாசம்.

    இறுதியாக இக் கணத்தில் எழுத்தாளர் அம்பை மொழிபெயர்த்த இரோம் ஷர்மிளாவின் கவிதையொன்று நினைவுக்கு வருகிறது.

    சிறை உலகை

    என்னால் மறக்க முடியவில்லை

    பறவைகள் சிறகடிக்கும்போது
    விழிகளில் நீர் பொங்கும்
    நடக்க முடியாத இந்தக் கால்கள் எதற்கு
    என்னும் கேள்வி எழும்
    பார்க்க முடியாத விழிகள் பயனற்றவை
    எனக் கூவத் தோன்றும்

    என்னைப் போன்றவர்கள்
    கண்ணில்படாமல் மறைந்துவிடு ஓ சிறையே!

    உன் வலிமையான சங்கிலிகளின் கொடுமையில்
    வாழ்க்கைகள் சிதறுண்டன
    உன்னால்தான் கடவுளுக்குச் சாபம்
    உன்னால்தான் அதிகாரத்தை
    நாங்கள் வெறுக்கிறோம்.

    எம்.ரிஷான் ஷெரீப்

    27.07.2016

    mrishanshareef@gmail.com

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    f6b16233-3793-4a1e-821c-6a1dadc8d5a0

    ”பார்த்தனின் தேரேறி பாரதம் செய்,கீதைக்
    கீர்த்தன வாய்,அல்லிக் கேணியின் -மூர்த்தியே,
    தாளமிடும், தம்பி தனஞ்செயன் போலெனக்கு,
    மாலத்தா நட்பாய் மலர்’’….கிரேசி மோகன்….

    மாலத்தா -மால் அத்தன்….!

    Share
  • இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 7

    அவ்வை மகள்

    திரிகரணத்தைப் பறைசாற்றும் மும்முகச் சிம்மம்

    இறையியல் சிந்தனைகள்

    திரிகரண சுத்தியும் அத்வைதமும் வள்ளலாரின் இறைமார்க்கத்தில் இரண்டறக் கலந்திருப்பதை நம்மால் உணரமுடிகிறது என்றோம். திரிகரண சுத்தியை சைவ சித்தாந்தம் வெகுமிக முக்கியமாக வலியுறுத்தும் பாங்கு வெகு நேர்த்தியான விஷயம். பதஞ்சலி எனும் ஆத்ரேயரிடம் திரிகரணசுத்தியின் வாக்கு வடிவத்தின் ஆரம்பப்புள்ளியைக் காணலாம் என்பர். திருமூலரும் திரிகரண சுத்தியைப் பற்றிப் பகர்வதாகவும் காண்கிறோம்.

    உடல், சொல், மனம் என்கிற மூன்று ஜீவாதார மையங்கள் மனிதனது இயக்கங்களுக்கு ஓயாமல் அடிமைகளாகி, அவனது/அவளது இயக்கங்களால் பாதிக்கப்பட்டு – உருமாற்றம் அடைந்து, அவன்/அவள் எத்தகையவர் என்பதை அவரறியாமலேயே பரிபாஷையாக பிறருக்கு அப்பட்டமாய் அறிவிக்கின்றன. அந்த அறிவிப்பால் பிறருக்கு சிலபல பாதிப்புகள் எழுகின்றன என்பதால், இந்த மூன்றையும் ஒவ்வொரு தனி நபரும் சுத்தி செய்வது அவசியமாகிறது. ஆக, தனிமனிதர்களின் மெய், வாக்கு, சிந்தையின் தூய்மையானது – சமுதாயத்தின் – பிரபஞ்சத்தின் – புனிதத்தின் – இறைமையின் இலக்கணம் என்பது திரிகரண சுத்தியின் அடிப்படை.

    உடல், சொல், மனம் என்கிற மூன்றும் ஏன் அதிமுக்கியமானவையாகின்றன என்றால் அவை மனிதனால் ஓயாமல் கையாளப்படும் கரணங்களாய் அதாவது ஆயுதங்களாய் இருக்கின்றன.

    உணவும், உடுப்பும், உறையுளும், மனிதனது உடல் அவனுக்காய்ப் பேசுகின்ற பாஷையாகின்றன. மனிதன் பேசுகின்ற சொல் அவன்/அவள் குலத்தையும், ஒழுக்கததையும், பூர்வீகத்தையும், பக்குவத்தையும், முதிர்ச்சியையும், சகவாசத்தின் தன்மையையும் வெளிக்காட்டும். மனிதனின் மனம் அவனது இலக்கு, சிந்தனை, கருத்து ஆகியவற்றில் புலப்படும்.

    குடித்திருப்பவனின் உடல் தள்ளாட்டம் காணும் அல்லவா?. கேவலமான வார்த்தை பேசுகிறவனிடம் ஒழுக்கம் இருக்காது தானே? பேருந்தில், “மகளிர்” என்று பேர் போட்டிருக்கிற சீட்டில் அமர்ந்துகொண்டு நிற்கும் பெண்ணுக்கு இருக்கையை காலி செய்து அவள் உட்கார இடம் கொடுக்காமல், பார்த்தும் பாராமுகமாய் வேண்டுமென்றே அழுத்தமாய் அமர்ந்திருக்கிறவனின் உள்ளத்தில் பெண்ணார்ந்த சிந்தனை நல்லதாக இல்லை என்று வெளிப்படையாய் அவன் நடத்தை சொல்லுகின்றதல்லவா?

    ஆக, மெய், வாக்கு, மனம் எனும் மூன்றுமே தாமே முந்துறுத்தி வந்து ஒருவன் அல்லது ஒருத்தியின் தராதரத்தை வெளிக்காட்டும் வல்லமை உடையன எனக் காண்கிறோம்.

    இப்போது சிலர் கேள்வியை எழுப்பலாம்: அவனவன் சொந்த வாழ்வில் எப்படியோ பேசட்டுமே, எப்படியோ நடந்து கொள்ளட்டுமே – அப்படியே கெட்டும் கூடப் போகட்டுமே. அது அவனது தனிப்பட்ட விஷயம். அவன் தனிவாழ்வால் இங்கே என்ன குடி முழுகிப்போய்விடுமா என்று.

    நல்ல கேள்வி தான்.

    இத்தகைய கேள்வியை எழுப்புவோர்கள் புரிந்து கொள்ளவேண்டிய உண்மை என்னவென்றால், தனிமனிதர்களின் நடத்தைதான் குடியை – குலத்தை – சமுதாயத்தை ஆக்குகிறது அல்லது பாழாக்குகிறது என்பதையே.

    குடும்பங்கள்-சமுதாயம் இரண்டும் பிரிக்கவியலா ரெட்டையர்கள். இந்தப் பிரிக்கவியலா அமைப்பை Domino விளையாட்டுடன் ஒப்பிடலாம். சமுதாயம் என்பது Domino விளையாட்டின் கடைசிப் பலகை போன்றது. குடும்பங்கள் Dominoவின் பிற பலகைகள். கடைசிப் பலகைதான் எல்லாப்பலகைகளிலும், மிகப் பெரிதானதும் வலிதானதுமான பலகையாகும். இந்த வலிய பலகை சரிந்து வீழ நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் – அங்குள்ள பலகைகள் யாவற்றுக்குள்ளும் மிகமிகச் சிறியதான அந்த “தம்மாத்துண்டு” எனும்படியான குட்டிப்பலகையை இலேசாக அசைத்தால் போதும். காண்க Domino விளையாட்டை:

    https://www.youtube.com/watch?v=y97rBdSYbkg

    Domino effect எனப்படும் தொடர் வினை எவ்வாறு நிகழ்கிறதோ அவ்வாறே தான் குடும்பங்களின் தாழ்ச்சியும் வீழ்ச்சியும் சமுதாயத்தைத் தாழ்த்துகின்றன.

    maxresdefault

    சிந்தித்துப் பாருங்கள்: பக்கத்துவீட்டுக்காரர் குடித்துவிட்டு வந்து அவர் வீட்டுக்குள் அவர் அட்டகாசம் செய்ய நாம் நம் வீட்டை காலி செய்துகொண்டு வேறிடம் குடிபுகும் முயற்சியில் இறங்குகிறோம். எதிர் வீட்டு ஆளின் பார்வை சரியில்லை – மனைவியை ஒரு மாதிரி பார்க்கிறான் என்று அந்த ஊரையே விட்டு வெளியேறுகிறோம். மகனுடன் படிக்கும் குழந்தைகள் மிக்க கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகித்துப் பேசுகிறார்கள் என்று நம் குழந்தையை வேறு பள்ளிக்கூடத்துக்கு மாற்றுகிறோம் அப்பள்ளி எத்தனைத் தொலைவானாலும் பரவாயில்லை என்று. இவற்றையெல்லாம் நாம் ஏன் செய்கிறோம் என்றால் பிறரது மெய், வாக்கு, மனம் ஆகியனவற்றால் நாம் பாதிக்கப்படுவதால் தான்.

    இங்கு வாக்கு என்பதனை பேச்சு என்று மட்டும் கொள்ளாமல் எழுத்து என்றும் கொள்வது வேண்டும். இன்றைய ஊடக யுகமான காலகட்டத்தில், தனி நபர்களின் எழுத்துக்கள் – சினிமாப் பாடல்கள் – சினிமா வசனங்கள் – சில அரசியல்வாதிகளின் கூக்குரல்கள் – சில மதவாதிகளின் அணுகுமுறைகள் – சில பயங்கரவாதிகளின் கொடூரச் சிந்தனைகள் – மாமிசத்துக்காய் பசுக்களையும் இளம் கன்றுகளையும் கொன்றுகுவிக்கும் சில புலால் வர்த்தகர்களின் வலைப்பின்னல் வசனங்கள் ஆகியன – எத்தனை ஆக்ரோஷணமாய்ச் சென்று சமுதாயத்தைச் சின்னாபின்னமாக்குகின்றன என்பதனை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். தனிமனிதனின் வாக்கிலே விஷமும், நெருப்பும், போதையும், ஏமாற்றும் கலந்து போவதன் விளைவுகளை நாம் நம் கண்முன்னே காண்கிறோம். கெடுதல் செய்யும் உள்ளெண்ணம் உள்ள மனிதர்களின் நாக்கு, பிண்ணாக்காய் நஞ்சு கக்குகிறபோது சமுதாயமே கொலைக்களமாகிறது.

    ஆக, தனி மனிதர்களே சமுதாயத்தை உயர்த்தவும் தாழ்த்தவும் வல்லவர்கள் என்பதை உணர்க. இது நிற்க.

    பொதுவாக, நம் வழக்கில், ஒருவர் சொல்வதை பிறர் கேட்கிறார்கள் என்றால் அவரை செல்வாக்கு நிறைந்தவர் என்கிறோம். செல்லுபடியாகும் வாக்கு வைத்திருப்பவர் அவர்.

    வள்ளுவர் கூறுவார்:
    நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும்

    என்று.
    ஒரு நிலத்தில் நிலைத்துத் தங்கியிருக்கும் வேதங்களும், சாத்திரங்களும், பழமொழிகளும், இலக்கியங்களும் அம்மண்ணில் வாழ்ந்த – வாழுகிற மேலோர்கள் எத்தகையவர்கள் என்பதையே காட்டுகிறது என்பதை வள்ளுவர் வெகு அனாயாசமாகச் சொல்லிப்போனார்.

    ஆக, சமுதாயம் என்பது ஒரு ஜடப் பொருள் அல்ல என்பதைத் தெளிவாய்ப் புரிந்து கொள்கிறோம்.

    ஆம்! சமுதாயம் என்பது ஜீவிதம் நிறைந்தது மட்டுமல்ல – அது அங்கு வாழும் அனைத்து மக்களின் ஜீவாதாரத்தின் அடிப்படைத் தளமுமாகும். மேலும், சமுதாயம் என்பது எந்நாளும் ஒரு சிறுகுழந்தையைப் போன்றது. ஒரு சிறு குழந்தை தன் இயக்கங்களுக்கும் போக்கிற்கும் டக்கென்று பார்த்து – டக்கென்று பழக பளிச்சென்ற முன்னுதாரணங்களை எதிர்பார்த்து நிற்கிறது. அதைப்போலத்தான் எந்த ஒரு சமுதாயமும், டக்கென்று பார்த்து – டக்கென்று பழகவென பளிச்சென்ற முன்னுதாரணங்களை எந்நாளும் எதிர்பார்த்து நிற்கின்றது. இந்நிலையில் சமுதாயத்தில் கிளப்பப்படும் முன்னுதாரணங்கள் நல்லவையானால் சமுதாயம் நல்லதாகும் அம்முன்னுதாரணங்கள் அல்லவை என்றால் சமுதாயமும் அல்லவையாகும்.

    மனிதன் வாசம் செய்வதாக அவன் வசிக்கும் இடத்தில், அக்கம் பக்கம் உள்ள மனிதர்களின் பழக்க வழக்கங்கள், சொல், சிந்தனை ஆகியவை எவ்வாறு மனிதனை வடிவமைக்கின்றன – எவ்வாறு அவனை அடையாளம் காட்டுகின்றன என்று பார்க்கவேண்டும் என்றால் – நம் வாழ்வில் நாம் எப்போதாவது சந்தித்தேயாகவேண்டிய ஒரு நிகழ்வைப் பார்ப்போம். நீங்கள் ஆணாக இருந்து எங்கோ வெளி ஊருக்குப் போயிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம் – அப்போது அங்கு நீங்கள் சென்றுள்ள இடத்தில், உங்களைப் பார்த்து ஒரு பெரியவர் கேட்கிறார், “நீங்கள் எந்த ஊர்?” என்று. ஏன் அவர் அவ்வாறு கேட்கிறார் என்றால் ஊர் எனும் சமுதாயத்தை நீங்கள் சுமந்து கொண்டபடியே எங்கும் செல்கிறீர்கள் என்பதால் தான். அவரது கேள்விக்கு நீங்கள், “நான் மும்பையிலிருந்து வருகிறேன்” என்று சொல்வதாக வைத்துக் கொள்ளவோம். “மும்பையா அது? பாம்பாய் தானய்யா அது! பேரைத் தான் மாத்திப்புட்டானுகளே! அது சரி, அந்த ஊர் அப்படி இப்டின்னு கேள்விப்பட்டிருக்கேனே – ரெட் லைட் ஏரியாக்கள் சர்வ சகஜமா இருக்குமாமே – நீயும் அங்கல்லாம் போனதுண்டா?” என்பார். உங்களுக்கு அவர் சொன்னது அசவுகரியமாகக் கூட இருந்திருக்கும் – உங்களுள் கோபம் கூடக் கொப்புளித்திருக்கும் – இப்படிப் பச்சையாய்ப் பேசிவிட்டாரே என்று கொதிப்பீர்கள். ஆனால் உள்ளத்தில் உள்ளதுவாறு அவர் பேசுகிறார். அவர் பேசியது மும்பையைப்பற்றி அவரறிந்த உண்மை. அவர் வாய் பேசியதெல்லாம் அவர் உள்ளத்து மொழி. அவர் கள்ளம் கபடம் அல்லாதவர் – இதுவரையிலும் மும்பை செல்லாத காரணததால் அறிவுத்தேடலோடு தன் சிற்றறிவை வெளிப்படுத்தியிருக்கிறார். அவ்வளவே.

    நாம் வெளியிடத்துக்கு எங்கு சென்றாலும் பிறர் நம்மை இவ்வாறு விசாரிப்பத்து வெகு சகஜம். இதில் சங்கோஜப்பட்டோ – கோபப்பட்டோ இலாபமில்லை – ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் நம் சமுதாயத்தை தேகத்திலும், அங்கத்திலும், தோற்றத்திலும், பார்வையிலும், பேச்சிலும் சுமந்தபடியே செல்கிறோம். இவ்வகையில் நாம் நம் சமுதத்தின் பிரசிங்கிகள் – அரசாங்கம் நியமிக்கும் ஏதோ ஓரு பிரசிங்கியா (Ambassador) நம் ஊரை – நம் நாட்டை – நம் கலாச்சாரத்தைப் பரப்புகிறார்? நாம் தாமன்றோ உண்மைப் பிரசிங்கிகள்?

    இன்னொன்றையும் பாருங்கள்: ஒரு நாட்டின் தலைவராக ஒருவரை நியமிக்க பல தகுதிகளை – பல யோக்கியதாம்சங்களை முன்வைக்கிறார்கள். அது ஏன் என்று நிச்சயம் நீங்கள் யோசித்திருப்பீர்கள். இருப்பினும் சுருக்கமாக அதனைக் கொஞ்சம் பார்ப்போம். நன்னடத்தையும், நற்சிந்தையும், ஒழுக்கமான பரிபாஷைகளும் கொண்ட ஒருவர் மட்டுமே சமுதாயத்தில் ஒரு நல்ல முன்மாதிரியாக இருந்து இந்த சமுதாயத்தை வழிநடத்த முடியும் என்கிற ஒரே காரணம் தான் நாட்டின் தலைவருக்கு வைக்கப்படும் யோக்கியதாம்சங்களின் அடிப்படை.

    சமுதாய மனித முன்னுதாரணங்களை, சமுதாயப் பிரதிநிதிகளைப் பற்றி, வெகு எளிமையாக – வெகு அருமையாகப் பேசிப்போயிருக்கிறவர் வள்ளுவர்:

    காட்சிக்கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
    மீக்கூறும் மன்னன் நிலம்

    விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது
    சொல்லுதல் வல்லார்ப் பெறின்

    தக்காங்கு நடித்த தலைச் செல்லா வண்ணத்தால்
    ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து

    அல்லவைதேய அறம்பெருகும் நல்லவை
    நாடி இனிய சொலின்

    சமுதாயத்தை நெறிநடாத்திச் செல்லும் தனிமனிதர்களின் திரிகரண சுத்தியின் தனிப்பெரும் வல்லமையை வள்ளுவர் வெகு சாதுரியமாகவே சொல்லிப் போஇருக்கிறார் அல்லவா?

    இவ்வகையில் வள்ளலார் முன்வைத்த சமரச சன் (சத்) மார்க்கம் என்பது தனிமனிதர்களின் திரிகரண சுத்திக்கு முதன்மை ஸ்தானம் அளித்தது. கரணம் எனும் சொல்லுக்கு – ஆயுதம் – வித்தை – ஒரு கால அளவு என்று பல அர்த்தங்கள் இருக்கின்றன. இவற்றில், திரிகரணம் எனப்படும் மும்முனைத் தூய்மையில், மெய், வாக்கு, மனம் என்கிற மூன்று ஆயுதங்களைக் கையாளுவதிலே அப்பழுக்கற்ற தூய ஆளுகை வேண்டும் என்பது முன்னிறுத்தப்படுகிறது. கரணம் தப்பினால் மரணம் என்பதன் பொருளை இங்கு முழுமையாக உணரமுடிகிறது. மெய், வாக்கு, மனம் என்ற மூன்றும் ஆயுதங்கள் எனும்போது, ஒரு கத்தியைப் போல், ஒரு சுத்தியைப்போல், ஒரு கோடரியைப் போல், ஒரு துப்பாக்கியைப்போல் இவை செயல்படும் வீரியம் கொண்டவை என்பதையும், இவற்றைக் கையாளுபவர்கள் நெறிபிறழும்போது இந்த ஆயுதங்கள் பதம் பார்த்துவிடும் என்பதும் புலப்படுகிறது.

    கரணத்தின் பிற இரண்டு அர்த்தங்களும் கூட, திரிகரண சுத்திக்கு மிகவும் பொருந்துகின்றன. எப்படியெனில், திரிகரண சுத்தியை, பிள்ளைப் பிராயத்திலேயே வேரூன்றவேண்டும் – அப்போது தான் அது தனிமனிதர்களின் வாழ்வில் நிலைபேற்றுக்கு நிற்கும். வளர்ந்த பிறகு கற்றுக்கொள்ளலாம் என நினைப்பது – கடல் ஓய்ந்தபின் – குளிக்கலாம் எனக் காத்திருப்பதை போன்றது. ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையுமா என்பார்கள் அல்லவா? இளமையிற் கல்வி சிலைமேல் எழுத்து என்பது சத்தியம் மட்டுமல்ல – சாத்தியமான விஷயமும் ஆகும். திரிகரண சுத்தியை, அன்றாட நடைமுறைக்குக் கொணர்ந்து நிறுத்த – சரியான பெற்றோர்கள் – சரியான பள்ளி போதனைகள் – சரியான ஆசிரியர்கள் – சரியான இறைமை சிந்தனைகள் உள்ள மக்கட்பிரதிநிதிகள் என நாம் சமுதாய விஸ்தாரத்துக்குள்ளே தான் மீண்டும் பயணிக்க வேண்டி இருக்கிறது.

    இளம் பிராயத்தில் திரிகரண சுத்தியை நாம் நம் குழந்தைகளுக்குக் கற்றுத் தந்துவிட்டோமேயானால் – அது தனிமனிதர்களின் வாழ்வியல் வித்தையாக – சமுதாயத்தின் ஒருமித்த வாழ்வியல் வித்தகமாக எழுமிக்கிறது. அந்நிலையில், நம் சமுதாயம் தாழ எந்நாளும் வாய்ப்புகள் இல்லை. இல்லறவாழ்வில், குடும்பங்களில் இருப்பவர் யாவரும் வாய்மையை மேவினால் அது

    மனத்தொடு வாய்மை மொழியும் தவத்தோடு
    தானஞ்செய் வாரின் தலை

    என்ற வள்ளுவரின் வாக்கை மனதில் அசைபோட்டபடியே நம் நாட்டின் அசோக சக்கரச் சின்னத்தைப் பாருங்கள், “வாய்மையே வெல்லும்” என்று நம் சின்னத்தின் மூன்று சிம்மக்குரல்களும் உலகம் முழுதும் ஒலிக்கும்படி கர்ஜிப்பது என்ன? “எங்கள் நாட்டில் தனிமனிதர்கள் யாவரும் மெய், வாக்கு, மனம் என்கிற திரிகரணங்களால் வாய்மை பயிர் செய்து, வாய்மை அறுவடை செய்து, வாய்மையையே உணவாகவும், நீராகவும், மூச்சாகவும் கொண்டு வாழ்கின்றார்கள்” என்பதல்லவா?

    ஆன்ம நேயத்தில், திரிகரண சுத்தியில் அசோகச் சக்கரவர்த்தி ஒரு தலைசிறந்த சமுதாயப் பிரதிநிதி. இவ்வகையில் ஞானத் துறவியாகிய வள்ளலாரும், தொழில்நுட்பத் துறவியாக ஸ்டீவ் ஜாப்ஸும் கொண்டிருந்த வாய்மை ததும்பிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டுச் சிந்தனை பிரிந்தும் ஒத்ததாய் விளங்கும் சீர்மை ஒரு சிறப்புறு மேன்மை. சமுதாயச் சிந்தனையில், திரிகரண சுத்தியையும் அருள், ஒளி, கருணை என்கிற திரிசூலத்தையும் இவர்கள் இருவரும் கலந்த இலகுவை உணர்தல் பேரின்பமே.

    மேலும் பேசுவோம்

    Share
  • பழந்தமிழ்இலக்கியத்தில் இயற்கை நன்னெறிகள்

    முனைவர்(திருமதி)மா.பத்ம பிரியா

    தனிமனிதனும் அவன் சார்ந்திருக்கும் சமுதாயமும் முழுநிறைவுடன் வாழத்துணைசெய்வது நன்னெறிகள் ஆகும். ‘அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இது கேள், மன்னுயிர்க்கெல்லாம் உண்டியும் உறையுளும் அல்லது கண்டது இல்’ என்று மணிமேகலை கூறும் அறக்கருத்தானது சூழல் நோக்கம் கொண்டது. உணவு, உடை, இருப்பிடம் என்ற தேவைகள் நமக்கு கிடைப்பது நம்மை சூழ்ந்திருக்கும் இயற்கையின் பான்மையால் தான். அத்தேவைகள் வழங்கும் தன்மை அறமென்றால் அதன் வரவு தடையில்லாமல் கிடைக்க நாம் இயற்கையின் நலத்தினை மேம்படுத்த வேண்டும். சுகாதாரமான உணவு, சுத்தமான ஆடை, ஆரோக்கியமான உறைவிடம் பெறுவது இயற்கையின் கையில் தான் உள்ளது. மனிதர்கள் இயற்கையின் இயல்பினை தரமாற்றம் செய்யும் நடைமுறைப்போக்கு இன்று அதிகரித்து வருகின்றது. உச்சகட்டத்தை அடைந்திருக்கும் உணவுக்கலப்படம், சுகாதாரமற்ற உறைவிடம் போன்றன பேரழிவையும் பேராபத்தையும் நோக்கியே உலகை இட்டுச் செல்கின்றன. அதனை தடுக்கும் வழிமுறையாக சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ள சூழல் நன்னெறிகளை இக்கட்டுரை ஆராய்கிறது.

    இயற்கையின் இயல்புநெறி

    மனிதன் தான் வாழும் இடத்தின் சூழலைப் பேணிப் பாதுகாப்பது கடமை. இயற்கையில் எழும் சீற்றங்கள் தன்னளவில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தாது. அப்படியே பாதித்தாலும் இயற்கை தானாகவே சீரமைத்துக் கொள்ளும் ஆற்றலைப்  பெற்றுள்ளது. பஞ்சபூதங்களுக்குத் தம்மை சீரமைத்துக் கொள்ளும் தன்மை உண்டு. மனிதன் உண்டாக்கும் தொழில்நுட்பம் எனும் சதியால் தான் இயற்கைச் சீற்றம் பெருந்சேதத்தை விளைவிக்கின்றன. இயற்கையின் சீற்றத்தில் மீள இயற்கை அரண்களை நாம் அமைத்தல் அவசியம்.

    இயற்கை வளம் பற்றி காந்தியடிகள் கூறுகையில், “இந்தப் புவி உங்கள் தேவைகளை நிறைவு செய்ய போதுமான வளங்களைக் கொண்டுள்ளது. ஆனால் உங்கள் பேராசையை நிறைவு செய்ய அல்ல” என்கிறார். மனிதன் பேராசையால் இயற்கை அரண்களை குறிப்பாக காட்டரண்களை வெட்டிச் சாய்க்கின்றான்.

    இயற்கையரண்காடு

    நீரால் ஏற்படும் அழிவினைத் தடுக்க மரங்கள் அவசியம் தேவை. மரங்கள் நிலச்சரிவினைத் தடுப்பது மட்டுமன்றி அடா்ந்து உயா்ந்து பருத்துத் தோப்புகளாக அமைந்திருந்தால் மழை நன்கு பொழியும் என்பதையும் நமது முன்னோர்கள் அறிந்திருந்தனா். இதனால் தான் சங்க இலக்கியத்தில் மரங்கள் நிரம்பிய முல்லை நிலம் சுட்டப்பட்டுள்ளது.

    “சுற்றுச்சூழலை மேம்படுத்த முக்கியமான வழிமுறை மரக்கன்றுகளையும், மற்ற தாவரங்களையும் நடுதல் ஆகும்”1

                    காட்டழிவால் காற்றில் கலந்திருக்கும் கார்பன்டை- ஆக்ஸைடு பிராணவாயுவாகத் தாவரங்களின் மூலம் மாற்றப்படும் நிகழ்வு தடைபடுகிறது. இதனால் சுவாசிக்கும் காற்றில் கார்பன்டை – ஆக்ஸைடு அதிகரித்து நோய் பரவ வழிகோலும் எனவே தான் மரங்கள் நடல் இன்றியமையாததாகிறது.

    “பத்து குளிர் சாதன கருவிகள் தொடர்ந்து ஓடுவதால் கிடைக்கும் குளிர்ச்சியானது ஒரு தனி மரத்தின் நிழல் மூலம் கிடைக்கிறது. 18 பேர்களுக்கு ஓர் ஆண்டுக்கு சுவாசிக்கத் தேவையான பிரணவாயு ஓர் ஏக்கர் நிலத்தில் வளர்ந்த மரங்கள் தருகின்றன என்கிறார் கல்கத்தார.”என்பவர்.

    மரத்தினைப் பாதுகாக்கும்நெறி பண்டை காலத்தில் இருந்தமை பின்வரும் பாடலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

                            “மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தா்”

    (நற்றிணை. 226)

    மருத்துவப் பொருட்கள் தயாரிப்புக்கு கூட மரத்தினை வெட்டக்கூடாது என்ற பழந்தமிழர் உணர்வு போற்றத்தக்கது.

                            “மரம் கொல் தச்சன் கைவல்………….”

    (புறநானூறு.206)

    மேற்கண்ட புறநானூற்றுப்பாடல் மரத்தினை வெட்டும் தொழிலை “கொல்லும்” தொழிலுக்கு இணையாக வைத்துப் பேசியுள்ளது. “மரம் கொல்” என்ற சொல்லாடலுக்கான அழுத்தம் உயர்திணைக்கு உரிய மரபினை மரங்களுக்கு அளித்துள்ளமை பற்றி விவாதிக்கின்றது.

    மரம் நடுதல்

    இயற்கையோடு வாழ்ந்த பழந்தமிழா் மரக்கன்றுகளை நட்டுள்ளனரா? என்ற வினா எழுப்பினால் சான்றுகள் காணக்கிடைக்கின்றன. வெள்ளப் பெருக்கில் ஆற்றின் மிதவையால் தள்ளப்பட்ட காந்தள் செடியினை எடுத்து தங்கள் இல்லத்திற்கு கொணர்ந்து, அதனை நன்முறையில் நட்டு வளர்க்கும் சூழல் நன்னெறியினை காணமுடிகின்றது. குறுந்தொகைப் பாடல் இச்செய்தியை பதிவுசெய்துள்ளது.

                            “மாலைப் பெய்த மணம் கமழ் உந்தியொடு

                            காலை வந்த காந்தல் முழுமுதல்

                            இல் உய்த்து நடுதலும்……….”  

    (குறுந்தொகை. 361)

    மரத்தினை தன் வீட்டின் அங்கத்தினராக கருதும் உயிரின நேயம் அளவிடற்கரியது. புன்னை மரத்தினை தனது சகோதரியாக எண்ணும் தலைவியின் மனநிலை நற்றிணைப் பாடலில் இடம்பெற்றுள்ளது.

                            “விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி

                            மறந்தனம் துறந்த காழ் முளை அகைய

                            நெய்பெய் தீம்பால் நுவ்வை ஆகும் என்று

                            அன்னை கூறினள் புன்னையது நலனே”

    (நற்றிணை. 172)

    மணலில் அழுத்தப்பட்ட விதையானது முளைவிடும் பருவம் எய்தி மரமாக உருமாறும் வளர்ச்சி வரை அம்மரத்தைப் பேணிபாதுகாத்த திறம் இப்பாடலால் அறியப்படுகின்றது. விதையின் மறு உற்பத்தி திறன் அறிந்து நிகழ்ந்த செயல்பாடாகவும் இதனை கருதலாம்.

    விதையின் மறுஉற்பத்தித் திறன் அறிதல்

            பழந்தமிழர்கள் விதையின் மேன்னையை உணர்ந்துள்ளனர். விதைகள் தான் உற்பத்தியின் அடிநாதம் விதை என்பது அறியப்பட்டு இயற்கைவளம் பேணப்பட்டுள்ளது. விதையின் காவலராக விவசாயிகள் இல்லாது போனால் உணவு உற்பத்தியின் நிலைதான் என்ன? என்ற வருத்தம் இன்று ஓங்கி ஒலிக்கின்றது. “விதை என்பது வெறும் விதை என்ற பொருளை மட்டும் குறிப்பதல்ல, உணவுக்கான தானியமாகவும், புதிய தாவரங்களுக்கான உற்பத்தி ஆதாரமாகவும் இருப்பது இந்த விதையே ஆகும். அதாவது உற்பத்தி செய்யும் விவசாயி, உற்பத்திக்கான ஆதாரத்தை மறு உற்பத்தி செய்கிறான்.”3  குறிஞ்சி நிலத்தில் சிற்சில தினை விதைகள் அதிக அளவு உற்பத்தி ஈட்டுவதைப் பின்வரும் பாடல் பதிவுசெய்துள்ளது.

                            “கிழங்குகீழ் வீழ்ந்து, தேன்மேல் தூங்கி

                            சிற்சில வித்திப் பற்பல் விளைந்து”

    (நற்றிணை.329)

    காடு பாதுகாப்புக்கான ஏற்பாடே பரிசிலாக ஊர்

    இயற்கை சூழல் நிலைகளைச் சமாளித்து அணுசரித்து வாழ்ந்தாலே சுற்றுச்சூழல் அழிவினைத் தடுக்க முடியும். வனங்கள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை வழங்குவதோடு, மனித உடல் நலத்தையும்,நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்துகின்றன. எனவே தான் மன்னர்கள் புலவருக்குப் பரிசாக மரங்கள் செறிந்த நாட்டினைத் தானமாக வழங்கியுள்ளனா்.

                            “நல் மரம் துவன்றிய நாடு பல தரீஇ”  

    (பதிற்றுப்பத்து.85)

    பதிற்றுப்பத்தில் இடம்பெறும் “நல்ல மரங்கள்“ என்ற அடைமொழி மரங்களின் சிறப்பினை உணர்த்துகின்றது.

                            ”…………….நளிசினை

                            நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து

                            குறும்பொறை, நல்நாடு கோடியர்க்கு ஈந்த

                            காரிக் குதிரை…………..” 

     (சிறுபாணாற்றுப்படை 107-110)

    கடையேழு வள்ளல்களில் ஒருவரான காரி, மரங்கள் சூழப்பெற்ற நாட்டினை தானமாக வழங்குகிறான். இந்நிகழ்வால், பின்னைய தலைமுறையினருக்கு என்ற எதிர்காலவியல் விழிப்புணர்வுடன் காடுபாதுகாப்புச் சிந்தனையும் இருந்துள்ளமை தெளிவாகிறது.

    மரப்பாதுகாப்பு குறித்த நம்பிக்கை

    சங்கமாந்தர்கள் இறைவழிபாட்டுடன் மரவளா்ப்பினை மேற்கொண்டுள்ளனர். அதாவது தெய்வங்கள் உறையும் எந்தப் பொருளையும் மனிதன் தீங்கிழைக்கத் தயங்குவதுண்டு. எனவே தான் கடவுள் மரங்களில் வீற்றிருப்பதாக சூழலை உருவாக்கியுள்ளனர். “மரங்களை மனிதர்கள் அழித்து விடக்கூடாது என்ற நோக்கில் இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு மரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை,

    1. ஆலமரம்: பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரி, கிருஷ்ணன், இலட்சுமி, குபேரன்
    2. துளசி: இராமன், நாராயணன்
    3. வில்வம்: சிவன், துா்க்கை, சூரியன்
    4. மா: கோவிந்தன்
    5. வேம்பு: காளியம்மன்
    6. அரசு: கிருஷ்ணன்
    7. வைணவ கோயில்: துளசி இலை
    8. சிவன் கோயில்: கொன்றை, வில்வ இலைகள்”4 இது பற்றி குறிப்பினை மெய்ப்பிக்கும் சங்கப்பாக்கள் பின்வருவன,

                            “கடவுள் முதுமரத்து………………….” 

     (நற்றிணை.  83)

    கடவுள் உறைந்த முதிய மரம் சுட்டப்பட்டுள்ளது.

                            “எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்” 

    (நற்றிணை.  216)

                             “தொன்று உறை கடவுள் சோ்ந்த பராரை” 

    (நற்றிணை. 303)

                            “நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து” 

    (நற்றிணை.343)

                            “தெய்வம் சோ்ந்த பராரை வேம்பில்”

     (அகநானூறு 309)

                            “கடவுள் வாகை…………….”

    (பதிற்றுப்பத்து. 66)

    வேங்கை,பராரை,ஆலமரம்,வாகை,வேம்பு போன்ற மரத்தில் கடவுள் குடியிருக்கும் செய்திகள் இடம்பெற்றுள்ளது.இங்ஙனம் மரங்களைப் பாதுகாக்கும் சூழல்சார் விழிப்புணா்வு அறியமுடிகிறது.

    இயற்கை வாழ்த்து

            உலகில் அறத்தை விட இன்பம் பயப்பது வேறு எதுவுமில்லை. பண்டைய காலத்தில் எவ்வளவு வறட்சி ஏற்பட்டாலும் அறம் செய்வதில் தவறாமல் செயல்பட்டுள்ளனர். உடன் போக்கு மீளும் வேளையில் தலைவனைப் பாதுகாத்தருளிய குன்றுக்கு நன்றி தெரிவிக்கிறாள் தலைவி. வறட்சி ஏற்பட்டாலும் அறம் உண்டாகட்டும் என்ற உணர்வு பழந்தமிழரிடம் இருந்துள்ளது. இஃது இயற்கை மீதான நன்னெறிக்கு நல்ல சன்றாகும்.

                            “அறஞ்சா லியரோ வறஞ்சா லியரோ

                            வறனுண் டாயினு மறஞ்சா லியரோ

                            கோள்வ லென்னையை மறைத்த குன்றே” 

    (ஐங்குறுநூறு. 312)

    இப்பாடல் அறச்செயல் புரியும் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையின.

    சங்க கால மக்கள் பேதமின்றி நல்வளம் செழிக்க, உற்பத்தி நல்கும் இயற்கை அன்னையை வாழ்த்தியுள்ளனர். இச்செய்தியினை,

                            “வாழி யாதன் வாழி யவினி

                            நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க

     (ஐங்குறுநூறு.  1)

    “வாழி யாதன் வாழி அவினி

                            மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க”  

                                                                                                                            (ஐங்குறுநூறு. 10)

    நாட்டில் மழைவளம், இயற்கை வளம்,உணவுவளம் பெருகிடவும் வாழ்த்துகின்றது.  இஃது சூழல் நன்னெறிக்கு தக்க சான்றாக அமைகிறது.

    தொகுப்புரை                  

    • பழந்தமிழா்கள் சுற்றுப்புற ஆர்வலராக இருந்துள்ளமையை இலக்கியங்கள் வழி அறியலாம்.
    • பஞ்சபூதங்களின் தன்மையறிந்து மரஞ்செடி, கொடிகள் நட்டு இயற்கை வளத்தைப் பண்படுத்தியவர் பழந்தமிழரே என்றால் மிகையாகாது.
    • காடுகள் செழிக்க மழைவளம் வேண்டியும் இயற்கை வழிபாடு நிகழ்த்தியும்  “ சூழல் நன்னெறி” என்னும் கொள்கையை கடைப்பிடித்துள்ளனர்.
    • நாம் இயற்கையைப் பாதுகாத்தால் தான் இயற்கை நம்மை பாதுகாக்கும் என்னும் நியதி பேணப்பட்ட காலம் சங்ககாலம்.
    • தெய்வங்கள் மரங்களில் உறைவதாக கட்டவிழ்க்கப்பட்டதன் காரணம் “மர வளா்ப்பும் மரப் பாதுகாப்பும்” ஆகும்.

    அடிக்குறிப்புகள்

    1. யோனாஃபிரைடுமேன், சுற்றுச்சூழலும் தற்சார்பும் , ப.28
    2. இரா.வரலெட்சுமி, திருவள்ளுவரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வும், ப.33
    3. இரா.பசுமைக்குமார், தமிழக சுற்றுச்சூழல் கல்வி ,  ப. 48
    4. ச.மி.ஜான் கென்னடி, நிலநங்கை, ப.15.

    Share
  • ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி

    மீ. விசுவநாதன்

    4f59dcc4-110d-4011-8f93-a72c20f30e7e

    எதையெதைநாம் பார்த்தாலும் இறையாய்த் தோன்றி 

           இல்லாத இடமில்லை என்றே நிற்கும் !

    அதையறியும் ஆற்றலினை எவரே பெற்றார்

          அணுவாக உள்ளுக்குள் அதனைத் தொட்டார் !

    விதையேதும் இல்லாமல் மரமாய் ஓங்கும் !

         விளக்கேது மில்லாமல் ஒளியை வீசும் !

    கதைபோலக் கேட்டாலும் கருத்தில் நீளும் !

          கவிகோடி சொன்னாலும் இன்னும் மிஞ்சும் !   (1)

     

    ஆதிசக்தி அவளேதான் அன்று தன்னை

        அழகான “பாலையாய்” மாற்றிக் கொண்டு

    ஜோதிமிகு சின்னப்பெண் உயிராய் வந்தாள் !

        ஒன்பதுதான் வயதுகொன்டாள் ! ஓர்நாள் போரில்

    மோதிபண்டா சுரனுடைய மகனைக் கொன்றாள் !

       முகமெல்லாம் பௌர்ணமியின் நிலவை வென்றாள் !

    ஒதிநித்தம் வணங்குகின்ற யோகிக் குள்ளே

        ஒளியாகி உபதேசம் இவளே செய்வாள் !          (2)

     

    வாலைப்பெண் இவளைநாளும் வாஞ்சை யோடு

       வாவென்றே இதயத்துள் இருக்கச் செய்து

    காலைகையை நன்னீரால் கழுவி விட்டு

       கருத்தோடு கங்கைநீர் கொண்டே ஆட்டி

    காலையிளங் கதிரோன் போன்ற வண்ணக்

       கஸ்தூரி மஞ்சளாலே அழகு கூட்டி

    ஓலைதனில் மையெடுத்து  கண்ணில் தீட்டி

      உச்சிதனில் சுட்டிவைத்துச் சொக்கச் செய்வோம் !  (3)

     

    பரந்திருக்கும் நெற்றியிலே பொட்டு மிட்டு

        பந்துபோன்ற கன்னத்தில் திருஷ்டி வைத்து

    அரன்நாமம் கேட்க்கின்ற செவியில் வைர

       அலங்காரக் குண்டலங்கள் பூட்டி வைப்போம் !

    சிரம்மீது வழிகின்ற முடியைப் பின்னி

       செண்பகப்பூ மல்லியென மணமாய் வைப்போம் !

    கரங்களிலே கல்யாண வளையல் சேர்த்துக்

       கலகலென சிரித்துவர மகிழ்ந்தி ருப்போம் !        (4)

     

     

    எடுப்பான சிவப்பினிலே ஆடை தைத்து

        இளம்பச்சை வண்ணத்தில் சட்டை போட்டு

    இடுப்பினிலே ஒட்டியாணம் மணிகள் கட்டி

         இருகாலில் தங்கத்தால் கொலுசும் போட்டு

    துடுக்கான பெண்கழுத்தில் நகைகள் கூட்டம்

         தொங்குகின்ற மங்கலத்தை நிறைந்து காட்டி

    கொடுப்பினைநீ எனக்கம்மா என்று அந்தக்

         குஞ்சுவிரல் பாதத்தில் பணிய வேண்டும் !       (5)

     

    நறுமணத்தைச் சுமந்திருக்கும் மலர்கள் கொண்டு

          நாமணக்க அவள்நாமம் சொல்லிச் சொல்லி

    சிறுமைகளைப் போக்கென்று கண்ணீர் சிந்தி

          சிறுமியவள் நினைப்பினிலே உருக வேண்டும் !

    அறுசுவையில் உணவெல்லாம் செய்து வைத்து

          அவளுண்ண அன்பாகத் தருதல் வேண்டும் !

     குறுநகையைச் சிந்துகின்ற குழந்தை கையில்

          கொத்தாகத் தாம்பூலம் கொடுக்க வேண்டும் !  (6)

     

    தூபதீப கற்பூர ஜோதி காட்டி

        பொல்லாத  திருஷ்டிதனைப் போக்க வேண்டும் !

    வேதகோஷக் குரலாலும் நல்ல பாட்டு

        இனிமைதரும் சுகத்தாலும் இன்பம் பொங்க

    பேதமின்றி வழிபாடு செய்ய வேண்டும் !

        பீடைகளே நெருங்காது நம்ப வேண்டும் !

    ஆதரவு தருகின்ற அருளாம் பெண்ணை

         அம்மாவென உணர்ந்தேநாம் போற்ற வேண்டும் ! (7)

     

    அபயமென ஒருகரமும் பாதம் காட்டும்

        அழகுயென ஒருகரமும், சுவடி, மாலை

    தவமெனவே இருகரமும், கருணை கொட்டும்

        தாமரையாய்த் திருமுகமும், நம்முள் சக்தி

    சிவமெனவே காட்சிதரும் வாலைப் பெண்ணை

        சிந்தித்தே இருப்போர்க்கு இறப்பு இல்லை !

    அவமானம் பெரும்புகழும் பேத மில்லை !

        அவனியிலே அவருக்கு இணையு மில்லை !       (8)

      

    அதிகாலை வேளையிலே வாலைப் பெண்ணை

         அவளுக்காம் மந்திரத்தால் தியானம் செய்தால்

    விதிகூட மெல்லமெல்ல விலகிப் போகும் !

          வீண்கோபம் விரக்திகூட நெருங்கி டாது !

    எதிலுமொரு ஆனந்தம் எளிதாய்க் கூடும்

          இதற்கொரு குருமூலம் தானே வாய்க்கும் !

     புதியதொரு பொற்காலம் உள்ளே பூக்க

           பூமகளாம் “பாலையின்” தாளைப் பற்று.             (9)

     

    (எண்சீர் விருத்தம்:

    அரையடி வாய்பாடு : காய், காய், மா, தேமா)

    Share
  • சினிமா என்னும் மாயை

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அறிஞர் அண்ணா ஆரிய மாயையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல சினிமாவையும் பயன்படுத்தினார்.  இப்போது சினிமாவே மாயை ஆகிவிட்டது.

    கபாலி படம் வெளிவருவதற்கு முன்பே எத்தனை ஆர்ப்பாட்டங்கள்.  சினிமா நடிகர்கள் மீது ஏன் இத்தனை மோகம் நம் மக்களுக்கு?  இவர்களுக்கு வேறு எதிலும் பிடிப்பில்லையா?  சினிமா என்பது ஒரு சக்தி வாய்ந்த மீடியம்தான்.  ஆனால் அதையே கதி என்று நினைத்து சினிமா நடிகர்களை வழிபடும் அளவுக்குச் சிலர் போவதை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது.  எங்கோ படித்த ஞாபகம்,.  தமிழ்நாட்டு அரசியலில் பங்கு வகிப்பவர்களில் முக்கால்வாசிப் பேர் சினிமாவோடு தொடர்புடையவர்கள் என்று.  தமிழ் அரசியல் கலாச்சாரம் இவ்வளவு கீழிறங்கிப் போய்விட்டதா?

    தமிழ்நாட்டில் மட்டுமல்ல கர்நாடகத்திலும் ரஜினிகாந்த் ரசிகர்கள் கடவுள் ஸ்தானத்திற்கே அவரை ஏற்றியிருக்கிறார்கள்.  மிகப் பெரிய கட் அவுட்டுகளைத் தியேட்டர் முன் நிறுத்தி அதற்குப் பால் அபிஷேகம் செய்திருக்கிறார்கள்.  கடவுள் சிலைகளுக்கே எந்த விதமான அபிஷேகமும் செய்யத் தேவையில்லை என்று பெரியார் சொன்னார்.  இவர்கள் மனிதர்களின் கட் அவுட்டுகளுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.  எப்படிப்பட்ட அறியாமை!

    ரஜினிகாந்த் என்னும் நடிகர் சிறந்த நடிகராக இருக்கலாம்.  மக்களை மகிழ்விப்பதில் பெரிய விற்பன்னராக இருக்கலாம்.  தினசரி வாழ்க்கையின் கஷ்டங்களை மறப்பதற்கு ஒரு மருந்தாக அவர் படங்கள் அமையலாம்.  எதுவாக இருந்தாலும் அவருடைய படம் வெளிவருவதற்கு முன்பே இப்படியா பித்தம் பிடித்து அலைவது?  படம் திரையிடப்படுவதற்கு முந்திய நாள் சென்னை நகரமே கபாலி என்ற மாயையில் உழன்றுகொண்டிருந்ததாக ஒரு பத்திரிக்கைச் செய்தி கூறியது.  கபாலி படத்தைப் பற்றி இந்து நாளிதழில் தேவைக்கு மேலேயே செய்திகள் வந்தன.  இதைப் பார்த்துப் பல வாசகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.  இந்து பத்திரிக்கை கூட இந்த அளவிற்குத் தன் தரத்தைத் தாழ்த்திக்கொள்ள வேண்டுமா என்பது இவர்களுடைய குற்றச்சாட்டு.  அதற்குப் பதில் அளிக்கும் முகமாக எழுத்தாளர் ஒருவர் இந்து பத்திரிக்கை சார்பில் மற்ற முக்கியமான செய்திகளை விட்டுவிட்டு இந்து கபாலி படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும் நாட்டு மக்களை உற்சாகப்படுத்தும் ஒரு விஷயமாக இருப்பதால் இதை வெளியிட்டது சரியே என்றும் கூறுகிறார்.  மக்களில் பலர் அறியாமையால் ஒரு காரியம் செய்தால் பொறுப்புள்ள ஒரு பத்திரிக்கையும் இப்படிச் செய்ய வேண்டுமா?

    ஒரு ஆட்டோ டிரைவர் எல்லா ரஜினி படங்களையும் படம் வெளியான முதல் நாள் முதல் காட்சியையே பார்த்துவிடுவாராம்.  இப்போதும் அப்படிச் செய்யப் போவதாகக் கூறியிருக்கிறார்.  அவருடைய நண்பர் ஒருவர் உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறாராம்.  அவரும் இவரைப்போல் ரஜினி படங்களை முதல் நாளே முதல் காட்சியையே பார்க்கும் வழக்கம் உடையவராம்.  ரஜினியின் கபாலி படம் வெளிவரும் அன்று அவரை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பும் அளவுக்கு அவருடைய உடல்நலம் தேறியிருக்காது என்று அவரைக் கவனித்துவரும் மருத்துவர் கூறியிருக்கிறார்.  ஆனாலும் எப்படியாவது முதல் நாள் முதல் காட்சிக்கே கபாலி படத்தைப் பார்க்க வந்துவிடுவார் என்று அவருடைய நண்பரான ஆட்டோ ஓட்டுநர் அவரைப் பற்றிப் பெருமையாகக் கூறியிருக்கிறார்.  உடல்நலத்தைக்கூட கவனித்துக்கொள்ளாமல் ஒரு சினிமாப் படத்தைப் பார்ப்பதில் என்ன வீரம் இருக்கிறது?  இது கின்னஸ் புக்கில் இடம் பெறக் கூடிய சாதனைபோல் கூறுவது எவ்வளவு மடமை?

    சினிமா மோகம் நம் மக்களைப் பிடித்து ஆட்டுவது மட்டுமல்ல,  சினிமாவில் நடப்பதை அப்படியே உண்மை வாழ்க்கையில் நடப்பதாக நினைத்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க நினைக்கிறார்கள் சிலர்.  எல்லாப் படங்களிலும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்களிடையே, வெவ்வேறு சமூக அந்தஸ்தில் உள்ளவர்களிடையே காதல் கனிந்து திருமணம் நடப்பதாகக் காட்டுகிறார்கள்.  உண்மை வாழ்க்கையில் நடப்பது என்ன?  வெவ்வேறு சமூக அந்தஸ்தில் இருப்பவர்கள் திருமணம் செய்துகொள்வதில்லை.  வீட்டு எஜமானன் மகனுக்கும் வேலைக்காரப் பெண்ணிற்கும் இடையே காதல் மலர்வதில்லை.  ஒரே சமூக அந்தஸ்தில் இருக்கும் வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொண்டால் அவர்களை நிம்மதியாக வாழவிடுவதில்லை.  இருவரையும் எப்படியாவது பிரிப்பது, இருவரையும் கொல்ல முயற்சிப்பது இவைதான் நடக்கின்றன.  சினிமாவில் நடப்பதுபோல் நிஜத்தில் உப்பரிகையில் வாழும் கதாநாயகி குடிசையில் உழலும் கதாநாயகனை மணந்துகொள்வதில்லை.  இந்த நிதர்சனத்தை ஏன் நம் இளைஞர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்?

    படிக்காதவன் என்று ஒரு படம்.  2009-இல் வெளிவந்தது.  ஊரிலேயே பணக்காரப் பெண்ணை அவளுடைய கார் டிரைவர் கல்லூரிக்கு அழைத்துச் செல்கிறான்.  வழியில் காரில் ஏதோ கோளாறு ஏற்பட, சாதாரண வசதி உள்ள, படிக்காத ஒரு பையனிடம் அந்தப் பெண்ணைக் கல்லூரியில் விட்டுவிடச் சொல்கிறார் டிரைவர்.  அவள் கதாநாயகனின் ஸ்கூட்டரின் பின்னால் உட்கார்ந்தவுடனேயே கதாநாயகன் கனவு காண ஆரம்பித்து அதில் அவளோடு ஒரு டூயட் பாடுகிறான்.  கண்டதும் காதல் என்றாலும் இப்படியா.  இவன் படிக்காதவன் என்றாலும், வாழ்க்கையில் உருப்படியாக எதுவும் செய்யாதவன் என்றாலும் எப்படியாவது அவளைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொள் என்று அவனுடைய நண்பர்கள் அவனை உசுப்பிவிடுகிறார்கள்.  அவனும் உடனே அவளைக் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறான்!

    இந்தக் கதைதான் சமீபத்தில் அநியாயமாகக் கொலைசெய்யப்பட்ட சுவாதியின் கொலைக்கு ஆதாரமாக அமைந்தது எனலாம். சுவாதியைக் கொலைசெய்த ராம்குமார் எந்த வகையிலும் – அழகு, அறிவு, படிப்பு, சமூக அந்தஸ்து – அவளுக்கு நிகரானவன் இல்லை.  இருந்தாலும் படிக்காதவன் போன்ற படங்களின் தாக்கத்தால் அவள் எப்படியாவது தன்னைக் காதலிப்பாள் என்று நம்புகிறான்.  படத்தில் போலவே ராம்குமாரின் நண்பர்களும் ‘அவளை எப்படியாவது உன்னைக் காதலிக்கும்படிசெய்’ என்று உசுப்பிவிடுகிறார்கள்.  படிக்காதவன் போன்ற படங்கள் எடுக்கப் போய் சுவாதி போன்ற இளம்பெண்கள் கொலைசெய்யப்படுகிறார்கள்.  ராம்குமார் போன்ற பையன்களும் குற்றம் புரியத் தூண்டப்பட்டுச் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள்.

    கபாலி படத்திற்கு பல நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டனவாம்.  இது இந்திய நிலை.  அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் கபாலி படம் வசூலில் சாதனை படைத்திருக்கிறதாம்.  சினிமா மாயையில் மூழ்கியிருப்பவர்கள் இந்தியாவில் வாழும் இந்தியர்கள் மட்டுமல்ல, அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் குடியேறியிருக்கும் இந்தியர்களும்தான் என்பது புலனாகிறது.

    சினிமாத் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.  சினிமா மக்களை மயக்கும் ஒரு ஊடகம்.  அதைத் தயவுசெய்து தவறாக உபயோகித்து இளைஞர்களைத் திசை திருப்பாதீர்கள்.  சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் ‘தற்போது சமுதாயத்தில் நடக்கும் பல குற்றச் சம்பவங்களுக்கு சமீபத்திய திரைபடங்களின் தாக்கமே காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை’ என்று கூறியிருக்கிறார்.  சினிமா மாயையில் இருக்கும் பாமர மக்களை ஆக்கபூர்வ செயல்களுக்குத் திருப்புங்களேன்.

    Share
  • வாழ்த்துவோம் வாழுவோம்!

    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா  

    சிரித்து மகிழ்கின்ற நிலையானது மனிதனுக்கு மட்டுமே சிறப்பான ஒன்றாகும். விலங்குகளுக்குச் சிரிக்கத் தெரியாது.மனிதனைப்போன்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தவோ அதனை அனுபவிக்கவோ தெரியாது. அதுபற்றி எதுவுமே புரிந்து கொள்ளும்நிலையிலும் அவைகள் இருப்பதில்லை. ஆனால் மனிதர்களில் பலர் தமக்கு கிடைத்த இந்த அருமையான பண்பினை உணருவதே இல்லை.

    ஒருவரை ஒருவர் சந்திக்கின்ற வேளையில் முதலில் அவரைப்பார்த்து ஒரு புன்முறுவலையாவது செய்யவேண்டும். நலமாக இருக்கிறீர்களா என்று ஒரு வார்த்தையாவது பேசமுயலுதல் வேண்டும். இப்படிச் செய்கின்றவர்கள் இன்று குறைந்து கொண்டே வருகிறார்கள். அவரைப் பார்த்து நாம்  ஏன் சிரிக்க வேண்டும்? அவரிடம் ஏன் நலன்விசாரிக்க வேண்டும்? இதனால் பெரிதாக என்னதான் வந்துவிடப் போகிறது என்று எண்ணுகின்ற மனப்பாங்கே அதிகம் இருப்பதைக் காண்கின்றோம்.

    நண்பர் ஒருவரைச் சந்திக்கின்றோம் என வைத்துக் கொள்வோம். நீண்ட நாட்களுக்குப் பின்னர்அவர்எதிர்படுகின்றார். கண்டவுடன் முதலில் சிரித்தால் அவர் மகிழ்ச்சிப் படுவார் அல்லவா? அவரைப் பற்றி அக்கறையுடன் அன்பாக நாலு வார்த்தை விசாரித்தால் மேலும் மனமகிழ்வார் அல்லவா? அவர் சொல்லுவதை அக்கறையுடன் கேட்டு அதற்கு இயைபாக நாமும்  பேசினால் குறைந்தா போய்விடுவோம்! நாம் பேசும் வார்த்தைகள் நண்பரின் மனத்துக்கு இதமாக அமையுமானால் அவரின் முகமும் மலரும். அதே வேளை அவரது அகமும் மலரலாம் அல்லவா!

    அதைவிடுத்து அவரைக் கண்டும் காணாமல் போவதும், கண்டு அவர் பேச்சுக் கொடுத்த போதும் அதனைக் கருத்தில் கொள்ளாமல் புறக்கணிக்கும் நிலையில் இருப்பதும், அவர் புன்முறுவல் காட்டிய போதிலும்  வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொள்ளலும், பண்பாகுமா அல்லது மனிதனுக்கு அடுக்குமா

    அவர் நமக்கு முன்னர் ஏதாவது மனம்நோகச் செய்தவராகக் கூட இருக்கலாம். ஆனால் அவர் நண்பராக இருந்திருக்கிறார். நீண்ட நாளின் பின்னர் சந்திக்கின்றார். அப்பொழுது பழைய விஷயங்களை மனதில் ஏற்றிக்கொண்டு பாராமுகமாக, பண்பில்லாமல் நடப்பது என்பது சரியானதா என்பதை சற்று நின்று நிதானித்துப் பார்ப்பது அவசியமாகிறது அல்லவா?

    ஒருவருடைய வீட்டுக்குப் போகின்றோம். அங்கு சிலவேளை நமக்கு பிடித்தமில்லாத சாப்பாடுகள் தரப்படலாம். நமக்கு பிடிக்காத சூழல்கூடக் காணப்படலாம்.ஆனால் நாம் சிரித்து மகிழ்ந்து அங்கே அவர்களுடன் உறவாடும்பொழுது அவர்களும் மகிழ்வார்கள். அங்கே நல்லதொரு சூழலும் உருவாகியிருக்கும்.

    அதை விடுத்து யாவற்றையும் விமர்சனம் செய்து அவர்களை அசெளகரியத்துக்கு ஆளாக்குவோமேயானால் நமக்கு கிடைக்கும் இலாபம் தான் என்ன? நாம் உயர்ந்தவர்கள் ஆகிவிடுவோமா ? மற்றவர்களை வாழ்த்த வேண்டுமே அன்றி அவர்களை வீழ்த்தும் வகையில் நடந்து கொள்ளுதலை விட்டுவிடுதல் தான் சிறந்த பண்பு எனலாம்.

    ஒருவரை சந்திக்கின்றோம். சில வேளை அடுத்த விநாடியோ அல்லது அடுத்த ஒரு மணி நேரத்திலோ அல்லது அடுத்த நாளோ கூட அவர் இந்த உலகத்தை விட்டு இல்லாமலும் போகலாம். சந்திக்கும் நமக்கும் அந்தநிலை  வந்தாலும் வந்திடலாம்.

    இதனால் முதல் சந்திப்பு இருவருக்குமே முடிவான சந்திப்பாகவும் அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆதலால் கிடைக்கும் பொழுதை நல்லதாக்க  செய்வதுதான்  மிகவும் உயர்ந்த வாழ்க்கை முறை எனலாம்.

    எதனை நாம் மற்றவர்களுக்கு வழங்குகின்றோமோ அதுவே நமக்கும் வந்து சேரும். அன்பையும், பாசத்தையும், ஆதரவையும், கருணையையும், மகிழ்ச்சியையும், புன்சிரிப்பையும்ஆறுதலான இனிமையான வார்த்தைகளையும்,  பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் வழங்கிப் பாருங்கள் கிடைத்தவர்களும் திருப்தி அடைவார்கள். கொடுத்த நாமும் பெருந் திருப்தியைப் பெற்று விடுவோம்.இது பெரிய தத்துவமாக இருக்கிறது அல்லவா?

    சமயங்களும், சமயப் பெரியவர்களும் இதனையே நாளும் பொழுதும் நமக்கு சொல்லுகிறார்கள். அவர்கள் சொல்லும் விதங்கள் வித்தியாசமானதாக இருக்கலாம். ஆனால் அவர்களின் உள்ளார்ந்த தத்துவங்கள் இவையாகத் தான் இருக்கின்றன. 

    மனிதர்களிடயே மகிழ்ச்சியைக் காண்பது அரிதாகவே இருக்கிறது. மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டவர்கள் தான் அநேகம் பேராவர். மகிழ்ச்சியத் தேடி அதற்காகப் பல மருத்துவ முறைகளையும்  மருந்துகளையும் நாடுவதை நடைமுறையில்  நாளும் காணக்கூடியதாக இருக்கிறது.

    இதற்கெல்லாம் அடிப்படை ஒவ்வொருவர் மனங்களிலும் நல்ல பண்புகள் உதயமாகாமையும் , அதைப் பற்றி அக்கறை கொள்ளாமையுமேயாகும். சிரிப்பது நமக்குக் கிடைத்திருக்கும் பெருவரமாகும். முகமலர்ச்சியுடன் இருந்தாலே முயற்சியெல்லாம் சிறப்பாகும். மற்றவராலும் மதிக்கப்படுவோம். மற்றவர்களது விருப்பமும் நம் மேல் வந்துகுவியும்.

    புறக்கணிப்பு என்பதை எவருமே பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். புறக்கணித்தல்  எனும் குணத்தை புறந்தள்ளல் அவசியமே. விமர்சனம் எனும்பெயரால் வீண்வாதம் எழுகிறது. வீண்வாதம் முற்றிவிடின் விபரீதம் விளைந்துநிற்கும். இலக்கியத்தை விமர்சியுங்கள். எழுதுக்களை விமர்சியுங்கள். எழுதிநிற்கும் மனிதர்களை விமர்சிக்க முயலவேண்டாம்.

    பலவீனமுடையாரை பலவீனமாக்கல் நல்லதல்ல. பலவீனமாக்க முயன்றால்   நம்மையும்  பலவீனம் பிடித்துக் கொள்ளலாம். விமர்சனம் செய்வது இலகுவானது. அதனை எதிர்கொள்வது அவ்வளவு இலகுவானதல்ல.ஆகவே விமர்சனத்தை எல்லாருக்கும் , எல்லாவற்றுக்கும், எல்லா இடத்தும் செய்வது உகந்த செயலும் அல்ல.

    செய்யக்கூடாது என்றவுடன் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் வரும். தொடக்கூடாது.  பார்க்கக்கூடாது, பேசக்கூடாது, என்றெல்லாம் சொல்லும்பொழுது – சொல்லுவதற்கு எதிராகவே செய்யவேண்டும் என்னும் எண்ணம் உருவாவதையும்

    நாளாந்த வாழ்க்கையில் காணுகின்றோம். சொன்னவை சரியானதாக இருந்தாலும் இங்கே சொல்லும் முறைதான் சிக்கலுக்கு வழியாகி நிற்கிறது. 

    ஆகவே சொல்லும் வழியை கட்டாயம் மாற்றவேண்டும். செய்யக்கூடாது என்னும் வார்த்தையினை எடுத்துவிட்டு – இப்படிச்செய்தால் நன்மையாஇருக்கும். செய்துதான் பாருங்களேன் என நயமாக – கட்டளையாக இல்லாமல் சொன்னால் நிச்சயம் நினைத்த கருமம் நிறைவேறுவது இலகுவாகிவிடும். அதைவிடுத்து செய் அல்லது செத்துமடி என சர்வாதிகார தோரணையில் சொன்னால் இருப்பதுகூட இல்லாமலேயே போனாலும் போய்விடலாம். சொல்லும் விதம்தான் மிகவும் முக்கியம் என்பதை எல்லோரும் மனத்தில் இருத்துவது மிகமிக அவசியமானதாகும்.

    இருண்ட மனமும், இருண்ட வார்த்தைகளும், இடருக்கு வழியாக அமைந்தே விடுகின்றன. தெளிந்த மனமும், திறந்த வார்த்தைகளும், செம்மைக்கு வழிசமைத்து விடுகின்றன. விற்பனை நிலையங்களிலே வேலைபார்க்கின்றவர்கள் – தங்களுக்கு எவ்வளவு வருத்தங்கள் இருந்தாலும் வருகின்ற மக்களை இன்முகத்துடன் வாருங்கள் !

    உங்களுக்கு என்ன தேவை என்று புன்முறுவலுடன் தான் வரவேற்று நிற்கிறார்கள்! வருகிறவர்கள் அவர்களுக்குத் தெரிந்தவராகவோ அல்லது உறவினராகவோ இருக்க மாட்டார்கள்,  என்றாலும் முகமலர்ச்சியுடன் வரவேற்பது அங்கு போகும் அனைவருக்கும் அகமகிழ்வை ஏற்படுத்துவதாக அமைகிறதல்லவா ? இது நமக்கு நல்லதொரு பாடமாக இருக்கிறதல்லவா?

    பலபட்டங்கள் பெற்று உயர்பதவிகளில் இருந்தாலும்  முகமலர்ச்சியுடன் இருக்க முடியாவிட்டால் படித்த படிப்பும்,பார்க்கும் பதவிகளும், பயனற்றதாகிவிடாதா?

    அகத்தின் அழகு முகத்திற் தெரியும்” என்பதை அனைவரும்   அறிந்திருக்கிறோம். ஆனால் அகத்தை மட்டும் அசையாமல் வைத்தும் இருக்கின்றோம். எனவேதான் நம் அகத்தின் இயலாமையை மற்றவரிடம் பிரதிபலித்து நின்று விடுகின்றோம். படிப்பு, பதவி, பணம், அந்தஸ்தத்து  இருந்தாலும்  சிரிப்பையும் மகிழ்ச்சியையும் வாங்கிவிட முடியுமா? இவைகள் அனைத்தும் நிறைந்தவர்களிடம்  சிரிப்பையும் மகிழ்ச்சியையும் பற்றிப் பேசினாலே அதற்கும்  சேர்த்து விலைபேசும் நிலையிலேதான் அவர்கள் காணப்படுகிறார்கள்.

    வாழ்க்கையிலே கிடைக்கவேண்டியது அனைவருக்கும் மகிழ்ச்சியும் நல்ல முகமலர்ச்சியுந்தான். இதனைக் கொடுத்தால் தான் பெற்றுக்கொள்ள முடியும். தேடியெங்கும் ஓடவேண்டாம். பணம் கொடுத்தும் வாங்கவும் வேண்டாம். யாவும் உங்களிடம்தான் இருக்கிறது. வெளியில் கொண்டு வருவதுதான் கஷ்டமாக இருக்கிறது.

    எனவே சிரித்து வாழுவோம். சிரிக்க வாழ்ந்திடாமல் சிறக்க வாழுவோம் !

    காணும் பொழுதெல்லாம் கைகுலுக்கி , கண்களால் மகிழ்வைக்காட்டி அன்றலர்ந்த  தாமரையாய் அகமும் முகமும் மலர இன்று  முதல் செய்து பாருங்கள் எல்லாமே இனிப்பாயும் இன்பமாயும் தெரியும் !

    Share