மீ. விசுவநாதன்

4f59dcc4-110d-4011-8f93-a72c20f30e7e

எதையெதைநாம் பார்த்தாலும் இறையாய்த் தோன்றி 

       இல்லாத இடமில்லை என்றே நிற்கும் !

அதையறியும் ஆற்றலினை எவரே பெற்றார்

      அணுவாக உள்ளுக்குள் அதனைத் தொட்டார் !

விதையேதும் இல்லாமல் மரமாய் ஓங்கும் !

     விளக்கேது மில்லாமல் ஒளியை வீசும் !

கதைபோலக் கேட்டாலும் கருத்தில் நீளும் !

      கவிகோடி சொன்னாலும் இன்னும் மிஞ்சும் !   (1)

 

ஆதிசக்தி அவளேதான் அன்று தன்னை

    அழகான “பாலையாய்” மாற்றிக் கொண்டு

ஜோதிமிகு சின்னப்பெண் உயிராய் வந்தாள் !

    ஒன்பதுதான் வயதுகொன்டாள் ! ஓர்நாள் போரில்

மோதிபண்டா சுரனுடைய மகனைக் கொன்றாள் !

   முகமெல்லாம் பௌர்ணமியின் நிலவை வென்றாள் !

ஒதிநித்தம் வணங்குகின்ற யோகிக் குள்ளே

    ஒளியாகி உபதேசம் இவளே செய்வாள் !          (2)

 

வாலைப்பெண் இவளைநாளும் வாஞ்சை யோடு

   வாவென்றே இதயத்துள் இருக்கச் செய்து

காலைகையை நன்னீரால் கழுவி விட்டு

   கருத்தோடு கங்கைநீர் கொண்டே ஆட்டி

காலையிளங் கதிரோன் போன்ற வண்ணக்

   கஸ்தூரி மஞ்சளாலே அழகு கூட்டி

ஓலைதனில் மையெடுத்து  கண்ணில் தீட்டி

  உச்சிதனில் சுட்டிவைத்துச் சொக்கச் செய்வோம் !  (3)

 

பரந்திருக்கும் நெற்றியிலே பொட்டு மிட்டு

    பந்துபோன்ற கன்னத்தில் திருஷ்டி வைத்து

அரன்நாமம் கேட்க்கின்ற செவியில் வைர

   அலங்காரக் குண்டலங்கள் பூட்டி வைப்போம் !

சிரம்மீது வழிகின்ற முடியைப் பின்னி

   செண்பகப்பூ மல்லியென மணமாய் வைப்போம் !

கரங்களிலே கல்யாண வளையல் சேர்த்துக்

   கலகலென சிரித்துவர மகிழ்ந்தி ருப்போம் !        (4)

 

 

எடுப்பான சிவப்பினிலே ஆடை தைத்து

    இளம்பச்சை வண்ணத்தில் சட்டை போட்டு

இடுப்பினிலே ஒட்டியாணம் மணிகள் கட்டி

     இருகாலில் தங்கத்தால் கொலுசும் போட்டு

துடுக்கான பெண்கழுத்தில் நகைகள் கூட்டம்

     தொங்குகின்ற மங்கலத்தை நிறைந்து காட்டி

கொடுப்பினைநீ எனக்கம்மா என்று அந்தக்

     குஞ்சுவிரல் பாதத்தில் பணிய வேண்டும் !       (5)

 

நறுமணத்தைச் சுமந்திருக்கும் மலர்கள் கொண்டு

      நாமணக்க அவள்நாமம் சொல்லிச் சொல்லி

சிறுமைகளைப் போக்கென்று கண்ணீர் சிந்தி

      சிறுமியவள் நினைப்பினிலே உருக வேண்டும் !

அறுசுவையில் உணவெல்லாம் செய்து வைத்து

      அவளுண்ண அன்பாகத் தருதல் வேண்டும் !

 குறுநகையைச் சிந்துகின்ற குழந்தை கையில்

      கொத்தாகத் தாம்பூலம் கொடுக்க வேண்டும் !  (6)

 

தூபதீப கற்பூர ஜோதி காட்டி

    பொல்லாத  திருஷ்டிதனைப் போக்க வேண்டும் !

வேதகோஷக் குரலாலும் நல்ல பாட்டு

    இனிமைதரும் சுகத்தாலும் இன்பம் பொங்க

பேதமின்றி வழிபாடு செய்ய வேண்டும் !

    பீடைகளே நெருங்காது நம்ப வேண்டும் !

ஆதரவு தருகின்ற அருளாம் பெண்ணை

     அம்மாவென உணர்ந்தேநாம் போற்ற வேண்டும் ! (7)

 

அபயமென ஒருகரமும் பாதம் காட்டும்

    அழகுயென ஒருகரமும், சுவடி, மாலை

தவமெனவே இருகரமும், கருணை கொட்டும்

    தாமரையாய்த் திருமுகமும், நம்முள் சக்தி

சிவமெனவே காட்சிதரும் வாலைப் பெண்ணை

    சிந்தித்தே இருப்போர்க்கு இறப்பு இல்லை !

அவமானம் பெரும்புகழும் பேத மில்லை !

    அவனியிலே அவருக்கு இணையு மில்லை !       (8)

  

அதிகாலை வேளையிலே வாலைப் பெண்ணை

     அவளுக்காம் மந்திரத்தால் தியானம் செய்தால்

விதிகூட மெல்லமெல்ல விலகிப் போகும் !

      வீண்கோபம் விரக்திகூட நெருங்கி டாது !

எதிலுமொரு ஆனந்தம் எளிதாய்க் கூடும்

      இதற்கொரு குருமூலம் தானே வாய்க்கும் !

 புதியதொரு பொற்காலம் உள்ளே பூக்க

       பூமகளாம் “பாலையின்” தாளைப் பற்று.             (9)

 

(எண்சீர் விருத்தம்:

அரையடி வாய்பாடு : காய், காய், மா, தேமா)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.