பழந்தமிழ்இலக்கியத்தில் இயற்கை நன்னெறிகள்
முனைவர்(திருமதி)மா.பத்ம பிரியா
தனிமனிதனும் அவன் சார்ந்திருக்கும் சமுதாயமும் முழுநிறைவுடன் வாழத்துணைசெய்வது நன்னெறிகள் ஆகும். ‘அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இது கேள், மன்னுயிர்க்கெல்லாம் உண்டியும் உறையுளும் அல்லது கண்டது இல்’ என்று மணிமேகலை கூறும் அறக்கருத்தானது சூழல் நோக்கம் கொண்டது. உணவு, உடை, இருப்பிடம் என்ற தேவைகள் நமக்கு கிடைப்பது நம்மை சூழ்ந்திருக்கும் இயற்கையின் பான்மையால் தான். அத்தேவைகள் வழங்கும் தன்மை அறமென்றால் அதன் வரவு தடையில்லாமல் கிடைக்க நாம் இயற்கையின் நலத்தினை மேம்படுத்த வேண்டும். சுகாதாரமான உணவு, சுத்தமான ஆடை, ஆரோக்கியமான உறைவிடம் பெறுவது இயற்கையின் கையில் தான் உள்ளது. மனிதர்கள் இயற்கையின் இயல்பினை தரமாற்றம் செய்யும் நடைமுறைப்போக்கு இன்று அதிகரித்து வருகின்றது. உச்சகட்டத்தை அடைந்திருக்கும் உணவுக்கலப்படம், சுகாதாரமற்ற உறைவிடம் போன்றன பேரழிவையும் பேராபத்தையும் நோக்கியே உலகை இட்டுச் செல்கின்றன. அதனை தடுக்கும் வழிமுறையாக சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ள சூழல் நன்னெறிகளை இக்கட்டுரை ஆராய்கிறது.
இயற்கையின் இயல்புநெறி
மனிதன் தான் வாழும் இடத்தின் சூழலைப் பேணிப் பாதுகாப்பது கடமை. இயற்கையில் எழும் சீற்றங்கள் தன்னளவில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தாது. அப்படியே பாதித்தாலும் இயற்கை தானாகவே சீரமைத்துக் கொள்ளும் ஆற்றலைப் பெற்றுள்ளது. பஞ்சபூதங்களுக்குத் தம்மை சீரமைத்துக் கொள்ளும் தன்மை உண்டு. மனிதன் உண்டாக்கும் தொழில்நுட்பம் எனும் சதியால் தான் இயற்கைச் சீற்றம் பெருந்சேதத்தை விளைவிக்கின்றன. இயற்கையின் சீற்றத்தில் மீள இயற்கை அரண்களை நாம் அமைத்தல் அவசியம்.
இயற்கை வளம் பற்றி காந்தியடிகள் கூறுகையில், “இந்தப் புவி உங்கள் தேவைகளை நிறைவு செய்ய போதுமான வளங்களைக் கொண்டுள்ளது. ஆனால் உங்கள் பேராசையை நிறைவு செய்ய அல்ல” என்கிறார். மனிதன் பேராசையால் இயற்கை அரண்களை குறிப்பாக காட்டரண்களை வெட்டிச் சாய்க்கின்றான்.
இயற்கையரண் – காடு
நீரால் ஏற்படும் அழிவினைத் தடுக்க மரங்கள் அவசியம் தேவை. மரங்கள் நிலச்சரிவினைத் தடுப்பது மட்டுமன்றி அடா்ந்து உயா்ந்து பருத்துத் தோப்புகளாக அமைந்திருந்தால் மழை நன்கு பொழியும் என்பதையும் நமது முன்னோர்கள் அறிந்திருந்தனா். இதனால் தான் சங்க இலக்கியத்தில் மரங்கள் நிரம்பிய முல்லை நிலம் சுட்டப்பட்டுள்ளது.
“சுற்றுச்சூழலை மேம்படுத்த முக்கியமான வழிமுறை மரக்கன்றுகளையும், மற்ற தாவரங்களையும் நடுதல் ஆகும்”1
காட்டழிவால் காற்றில் கலந்திருக்கும் கார்பன்டை- ஆக்ஸைடு பிராணவாயுவாகத் தாவரங்களின் மூலம் மாற்றப்படும் நிகழ்வு தடைபடுகிறது. இதனால் சுவாசிக்கும் காற்றில் கார்பன்டை – ஆக்ஸைடு அதிகரித்து நோய் பரவ வழிகோலும் எனவே தான் மரங்கள் நடல் இன்றியமையாததாகிறது.
“பத்து குளிர் சாதன கருவிகள் தொடர்ந்து ஓடுவதால் கிடைக்கும் குளிர்ச்சியானது ஒரு தனி மரத்தின் நிழல் மூலம் கிடைக்கிறது. 18 பேர்களுக்கு ஓர் ஆண்டுக்கு சுவாசிக்கத் தேவையான பிரணவாயு ஓர் ஏக்கர் நிலத்தில் வளர்ந்த மரங்கள் தருகின்றன என்கிறார் கல்கத்தார.”2 என்பவர்.
மரத்தினைப் பாதுகாக்கும்நெறி பண்டை காலத்தில் இருந்தமை பின்வரும் பாடலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தா்”
(நற்றிணை. 226)
மருத்துவப் பொருட்கள் தயாரிப்புக்கு கூட மரத்தினை வெட்டக்கூடாது என்ற பழந்தமிழர் உணர்வு போற்றத்தக்கது.
“மரம் கொல் தச்சன் கைவல்………….”
(புறநானூறு.206)
மேற்கண்ட புறநானூற்றுப்பாடல் மரத்தினை வெட்டும் தொழிலை “கொல்லும்” தொழிலுக்கு இணையாக வைத்துப் பேசியுள்ளது. “மரம் கொல்” என்ற சொல்லாடலுக்கான அழுத்தம் உயர்திணைக்கு உரிய மரபினை மரங்களுக்கு அளித்துள்ளமை பற்றி விவாதிக்கின்றது.
மரம் நடுதல்
இயற்கையோடு வாழ்ந்த பழந்தமிழா் மரக்கன்றுகளை நட்டுள்ளனரா? என்ற வினா எழுப்பினால் சான்றுகள் காணக்கிடைக்கின்றன. வெள்ளப் பெருக்கில் ஆற்றின் மிதவையால் தள்ளப்பட்ட காந்தள் செடியினை எடுத்து தங்கள் இல்லத்திற்கு கொணர்ந்து, அதனை நன்முறையில் நட்டு வளர்க்கும் சூழல் நன்னெறியினை காணமுடிகின்றது. குறுந்தொகைப் பாடல் இச்செய்தியை பதிவுசெய்துள்ளது.
“மாலைப் பெய்த மணம் கமழ் உந்தியொடு
காலை வந்த காந்தல் முழுமுதல்
இல் உய்த்து நடுதலும்……….”
(குறுந்தொகை. 361)
மரத்தினை தன் வீட்டின் அங்கத்தினராக கருதும் உயிரின நேயம் அளவிடற்கரியது. புன்னை மரத்தினை தனது சகோதரியாக எண்ணும் தலைவியின் மனநிலை நற்றிணைப் பாடலில் இடம்பெற்றுள்ளது.
“விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய்பெய் தீம்பால் நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே”
(நற்றிணை. 172)
மணலில் அழுத்தப்பட்ட விதையானது முளைவிடும் பருவம் எய்தி மரமாக உருமாறும் வளர்ச்சி வரை அம்மரத்தைப் பேணிபாதுகாத்த திறம் இப்பாடலால் அறியப்படுகின்றது. விதையின் மறு உற்பத்தி திறன் அறிந்து நிகழ்ந்த செயல்பாடாகவும் இதனை கருதலாம்.
விதையின் மறுஉற்பத்தித் திறன் அறிதல்
பழந்தமிழர்கள் விதையின் மேன்னையை உணர்ந்துள்ளனர். விதைகள் தான் உற்பத்தியின் அடிநாதம் விதை என்பது அறியப்பட்டு இயற்கைவளம் பேணப்பட்டுள்ளது. விதையின் காவலராக விவசாயிகள் இல்லாது போனால் உணவு உற்பத்தியின் நிலைதான் என்ன? என்ற வருத்தம் இன்று ஓங்கி ஒலிக்கின்றது. “விதை என்பது வெறும் விதை என்ற பொருளை மட்டும் குறிப்பதல்ல, உணவுக்கான தானியமாகவும், புதிய தாவரங்களுக்கான உற்பத்தி ஆதாரமாகவும் இருப்பது இந்த விதையே ஆகும். அதாவது உற்பத்தி செய்யும் விவசாயி, உற்பத்திக்கான ஆதாரத்தை மறு உற்பத்தி செய்கிறான்.”3 குறிஞ்சி நிலத்தில் சிற்சில தினை விதைகள் அதிக அளவு உற்பத்தி ஈட்டுவதைப் பின்வரும் பாடல் பதிவுசெய்துள்ளது.
“கிழங்குகீழ் வீழ்ந்து, தேன்மேல் தூங்கி
சிற்சில வித்திப் பற்பல் விளைந்து”
(நற்றிணை.329)
காடு பாதுகாப்புக்கான ஏற்பாடே பரிசிலாக ஊர்
இயற்கை சூழல் நிலைகளைச் சமாளித்து அணுசரித்து வாழ்ந்தாலே சுற்றுச்சூழல் அழிவினைத் தடுக்க முடியும். வனங்கள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை வழங்குவதோடு, மனித உடல் நலத்தையும்,நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்துகின்றன. எனவே தான் மன்னர்கள் புலவருக்குப் பரிசாக மரங்கள் செறிந்த நாட்டினைத் தானமாக வழங்கியுள்ளனா்.
“நல் மரம் துவன்றிய நாடு பல தரீஇ”
(பதிற்றுப்பத்து.85)
பதிற்றுப்பத்தில் இடம்பெறும் “நல்ல மரங்கள்“ என்ற அடைமொழி மரங்களின் சிறப்பினை உணர்த்துகின்றது.
”…………….நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து
குறும்பொறை, நல்நாடு கோடியர்க்கு ஈந்த
காரிக் குதிரை…………..”
(சிறுபாணாற்றுப்படை 107-110)
கடையேழு வள்ளல்களில் ஒருவரான காரி, மரங்கள் சூழப்பெற்ற நாட்டினை தானமாக வழங்குகிறான். இந்நிகழ்வால், பின்னைய தலைமுறையினருக்கு என்ற எதிர்காலவியல் விழிப்புணர்வுடன் காடுபாதுகாப்புச் சிந்தனையும் இருந்துள்ளமை தெளிவாகிறது.
மரப்பாதுகாப்பு குறித்த நம்பிக்கை
சங்கமாந்தர்கள் இறைவழிபாட்டுடன் மரவளா்ப்பினை மேற்கொண்டுள்ளனர். அதாவது தெய்வங்கள் உறையும் எந்தப் பொருளையும் மனிதன் தீங்கிழைக்கத் தயங்குவதுண்டு. எனவே தான் கடவுள் மரங்களில் வீற்றிருப்பதாக சூழலை உருவாக்கியுள்ளனர். “மரங்களை மனிதர்கள் அழித்து விடக்கூடாது என்ற நோக்கில் இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு மரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை,
- ஆலமரம்: பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரி, கிருஷ்ணன், இலட்சுமி, குபேரன்
- துளசி: இராமன், நாராயணன்
- வில்வம்: சிவன், துா்க்கை, சூரியன்
- மா: கோவிந்தன்
- வேம்பு: காளியம்மன்
- அரசு: கிருஷ்ணன்
- வைணவ கோயில்: துளசி இலை
- சிவன் கோயில்: கொன்றை, வில்வ இலைகள்”4 இது பற்றி குறிப்பினை மெய்ப்பிக்கும் சங்கப்பாக்கள் பின்வருவன,
“கடவுள் முதுமரத்து………………….”
(நற்றிணை. 83)
கடவுள் உறைந்த முதிய மரம் சுட்டப்பட்டுள்ளது.
“எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்”
(நற்றிணை. 216)
“தொன்று உறை கடவுள் சோ்ந்த பராரை”
(நற்றிணை. 303)
“நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து”
(நற்றிணை.343)
“தெய்வம் சோ்ந்த பராரை வேம்பில்”
(அகநானூறு 309)
“கடவுள் வாகை…………….”
(பதிற்றுப்பத்து. 66)
வேங்கை,பராரை,ஆலமரம்,வாகை,வேம்பு போன்ற மரத்தில் கடவுள் குடியிருக்கும் செய்திகள் இடம்பெற்றுள்ளது.இங்ஙனம் மரங்களைப் பாதுகாக்கும் சூழல்சார் விழிப்புணா்வு அறியமுடிகிறது.
இயற்கை வாழ்த்து
உலகில் அறத்தை விட இன்பம் பயப்பது வேறு எதுவுமில்லை. பண்டைய காலத்தில் எவ்வளவு வறட்சி ஏற்பட்டாலும் அறம் செய்வதில் தவறாமல் செயல்பட்டுள்ளனர். உடன் போக்கு மீளும் வேளையில் தலைவனைப் பாதுகாத்தருளிய குன்றுக்கு நன்றி தெரிவிக்கிறாள் தலைவி. வறட்சி ஏற்பட்டாலும் அறம் உண்டாகட்டும் என்ற உணர்வு பழந்தமிழரிடம் இருந்துள்ளது. இஃது இயற்கை மீதான நன்னெறிக்கு நல்ல சன்றாகும்.
“அறஞ்சா லியரோ வறஞ்சா லியரோ
வறனுண் டாயினு மறஞ்சா லியரோ
கோள்வ லென்னையை மறைத்த குன்றே”
(ஐங்குறுநூறு. 312)
இப்பாடல் அறச்செயல் புரியும் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையின.
சங்க கால மக்கள் பேதமின்றி நல்வளம் செழிக்க, உற்பத்தி நல்கும் இயற்கை அன்னையை வாழ்த்தியுள்ளனர். இச்செய்தியினை,
“வாழி யாதன் வாழி யவினி
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
(ஐங்குறுநூறு. 1)
“வாழி யாதன் வாழி அவினி
மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க”
(ஐங்குறுநூறு. 10)
நாட்டில் மழைவளம், இயற்கை வளம்,உணவுவளம் பெருகிடவும் வாழ்த்துகின்றது. இஃது சூழல் நன்னெறிக்கு தக்க சான்றாக அமைகிறது.
தொகுப்புரை
- பழந்தமிழா்கள் சுற்றுப்புற ஆர்வலராக இருந்துள்ளமையை இலக்கியங்கள் வழி அறியலாம்.
- பஞ்சபூதங்களின் தன்மையறிந்து மரஞ்செடி, கொடிகள் நட்டு இயற்கை வளத்தைப் பண்படுத்தியவர் பழந்தமிழரே என்றால் மிகையாகாது.
- காடுகள் செழிக்க மழைவளம் வேண்டியும் இயற்கை வழிபாடு நிகழ்த்தியும் “ சூழல் நன்னெறி” என்னும் கொள்கையை கடைப்பிடித்துள்ளனர்.
- நாம் இயற்கையைப் பாதுகாத்தால் தான் இயற்கை நம்மை பாதுகாக்கும் என்னும் நியதி பேணப்பட்ட காலம் சங்ககாலம்.
- தெய்வங்கள் மரங்களில் உறைவதாக கட்டவிழ்க்கப்பட்டதன் காரணம் “மர வளா்ப்பும் மரப் பாதுகாப்பும்” ஆகும்.
அடிக்குறிப்புகள்
- யோனாஃபிரைடுமேன், சுற்றுச்சூழலும் தற்சார்பும் , ப.28
- இரா.வரலெட்சுமி, திருவள்ளுவரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வும், ப.33
- இரா.பசுமைக்குமார், தமிழக சுற்றுச்சூழல் கல்வி , ப. 48
- ச.மி.ஜான் கென்னடி, நிலநங்கை, ப.15.