Month: September 2016

  • கண் தானம் 

    ரா.பார்த்தசாரதி

     

    தானத்திலே  சிறந்தது அன்னதானம்

    தானத்திலே சிறந்தது ரத்ததானம்

    தானத்திலே  சிறந்தது  கண் தானம்

    இம்மூன்று  தானங்களும் சிறந்ததே

    இவ்வுலகில்  இன்றும் நடக்கின்றதே !

    அன்னதானம் பசியினைப் போக்கும்,

    இரத்ததானம்  உயிரினை   காக்கும் ,

    கண்தானம்   பார்வையை  அளிக்கும் !

    கண்ணாலே  காதல் மலரும்

    கண்ணே இரக்கத்தை உண்டாக்கும்

    இயற்கையின் எழிலை  ரசிக்கும்

    இறந்தபின்னும்  புகழ் சேர்க்கும்

    மனித வாழ்வினை ஒளிபெறச் செய்யும்

    கண் தானமே மனிதனுக்கு பெருமை சேர்க்கும்!

    கண் தானம் செய்வீர் ! அவனியில் சிறப்படைவீர் !

     

    Share
  • வெற்றி விநாயகனே

     

    ரா.பார்த்தசாரதி

     

                              பிரணவ  மந்திரத்தின்  முதலோனே 

                               வீனைதீர்க்கும் விநாயகப் பெருமானே ,

                               சங்கடங்கள்  தீர்க்கும்  இறைவனே 

                               வேழ முகத்தோடு  காட்சியளிப்பவனே 

                               அரக்கனை அழித்து மக்களை காப்பாற்றியவனே ,

                               மஹாபாரதத்தை வியாசருடன்  எழுதியவனே,

                               திருமாலின் மூத்த மருமகனே 

                               முருகனின்  மூத்த சகோதரனே 

                               அவ்வை பிராட்டிக்கு அருள் புரிந்தவனே

                               கடவுள்  எல்லாவற்றிலும் மிக எளியவனே

                               வீதியெங்கும்  எளிமையாய் காட்சியளிப்பவனே 

                               சதுர்த்தியில் பிறந்து, சங்கடங்களை போக்குபவனே,

                               உன் அருளை வேண்டுகின்றோம் வெற்றி விநாயகனே !

    Share
  • சுகமுடன் என்றுமே வாழலாம் !

    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

    சிரிப்பு ஒரு மருந்து

       தினமும் அதைநீ அருந்து

      அகத்தில் சிரிப்பு எழுந்தால்

      முகத்தில் சிரிப்பு மலரும் !

     

      குழந்தைச் சிரிப்பு குதூகலம்

      குருவின் சிரிப்பு பெருமிதம்

      தந்தை சிரிப்பு மனநலம்

      தாயின் சிரிப்போ தனித்துவம் !

     

     நட்பின் சிரிப்பு நற்கொடை

     நாட்டின் சிரிப்பு விடுதலை

     கற்பின் சிரிப்பு கண்ணகி

     கயவர் சிரிப்போ காரிருள் !

     

     அஹிம்சையின் சிரிப்பு காந்தியில்

     ஆன்மீகச் சிரிப்பு ரமணரில்

     மெளனத்தின் சிரிப்பு புத்தரில்

     வாழ்விலே சிறந்திடச் சிரித்திடு !

     

    ஆணவச் சிரிப்பு அழிவினில்

    ஆத்திரச் சிரிப்போ கொலையினில்

    நீதியின் சிரிப்பு தண்டனை

    நிம்மதி வேண்டினால் சிரித்திடு !

     

    பக்தியின் சிரிப்பு பக்குவம்

    பாவத்தின் சிரிப்பு  தண்டனை

    சத்தியச் சிரிப்பே உத்தமம்

    சாந்தியாய் இருந்திடு சிரித்திடு !

     

    நித்தமும் வாழ்க்கையில் சிரித்துநில்

    நிம்மதி உன்னிடம் வந்திடும்

    சொத்தென சிரிப்பினை நினைத்திடு

    சுகமுடன் என்றுமே வாழலாம் !

     

    Share
  • எல்லோருக்கும் சமநீதி எப்போது?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நடிகர் அருண் விஜய் போதையில் காரை ஓட்டி ஒரு காவல் நிலையத்தில் நின்றிருந்த வேனில் மோதி, அதைச் சேதப்படுத்தினார். நான்கு நாட்களுக்குமுன் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடிகை ராதிகாவின் மகளின் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு, விடிய விடிய மது அருந்தியிருக்கிறார். மறுநாள் காலை மூன்று மணிக்கு ஒட்டலிலிருந்து கிளம்பி நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் காரை ஓட்டி வந்திருக்கிறார். அவருடைய மனைவியும் உடன் இருந்தார். காரை மிகவும் வேகமாக ஓட்டிச் சென்று காவல்நிலைய வாகனத்தின் மீது மோதி அதைச் சேதப்படுத்திய.சத்தம் கேட்டு வெளியே வந்த நுங்கம்பாக்கம் காவல்துறை அதிகாரிகள் காரிலிருந்து  போதையில் தள்ளாடியபடி இறங்கிய அருண் விஜயையும் அவர் மனைவியையும் கைதுசெய்தனர். காவல்துறையினர் அருண் விஜயை விசாரித்தபோது செமபோதையில் இருந்தார். பரிசோதனையில் குடித்த மதுவின் அளவு இரத்தத்தில் சதவிகிதமாக ஐம்பது இருந்தது.

    வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க அருண் விஜய் பேரம் பேசினார். காவல் அதிகாரிகள் உடன்பட மறுத்தனர்; உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பினர். இதற்கிடையில் நடிகர் அருண் விஜயின் தந்தையான நடிகர் விஜயகுமார் அங்கு வந்து சேர்ந்தார். மகன் மீது வழக்குத் தொடர வேண்டாம் என்றும். சேதமடைந்த வாகனத்தைத் தான் சரிசெய்து தருவதாகவும்  கூறினார். தனி நபர் வாகனங்களில் சேதம் ஏற்படுத்தினால் மட்டுமே இந்திய சட்டப்பிரிவு 279இன் கீழ் சமரசம் செய்துகொள்ள முடியும். பொதுச் சொத்து என்றால் சமரசம் ஏற்படுத்த முடியாது. அதனால் அதிகாரிகள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு மாறாக விஜய்குமார் தன் அறிக்கையில் சொல்லியிருப்பது உண்மையாக இருக்க முடியாது.

    நுங்கம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு பிரிவிலிருந்து அருண் விஜயின் வழக்கு பாண்டிபஜார் காவல்நிலையத்திற்கு போக்குவரத்துக் குற்றங்களை வழக்கை விசாரிக்கும் பிரிவுக்கு மாற்றப்பட்டது. பாண்டிபஜார் காவல் நிலையத்துக்கு அருண் விஜய் போலீசார் அழைத்தபோது தந்தை விஜயகுமாரின் காரில் வருவதாகச் சொன்னார், போலீசாரும் அதை அனுமதித்தனர். ஆனால் அவர் வரவில்லை.

    அதனால், காவலிலிருந்து தப்பி ஓடியவர்களின் பட்டியலில் அருண் விஜய் சேர்க்கப்பட்டார். இதன் பிறகு அருண் விஜய் சரணடைந்தார். அதை அடுத்து வாகன சட்டப் பிரிவு 185, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 279 என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மாஜிஸ்ட்ரேட்டின் முன்னிலையில் பணம் செலுத்திய பின் ஜாமீனில் அவர்களுடைய காரை எடுத்துச் சென்றனர். அருண் விஜய் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியது, பொதுச் சொத்திற்குச் சேதம் ஏற்படுத்தியது என்ற பிரிவுகளின்கீழ்மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீஸாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

    இதே மாதிரி இன்னொரு வழக்கு. பெங்களூரைச் சேர்ந்த பவதாரணி என்பவர் ஒரு பார்ட்டியில் குடித்துவிட்டுத் தன் காரை ஓட்டிக்கொண்டுவந்த போது வேலை முடிந்து வீட்டுக்குத் தெருவில் நடந்துகொண்டிருந்த ஐம்பது வயதான ஒரு தையல்காரர் மீது காரை ஏற்றினார். அதன் பிறகு அருகில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் மீது மோதினார்; நடைப் பயிற்சியில் போய்க்கொண்டிருந்த ஒருவர் மீதும் மோதினார். நல்ல வேளையாக, இவர் சிறு காயங்களுடன் தப்பினார். ஆனால், தையல்காரர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லும் வழியில் உயிரிழந்தார். லண்டனில் MBA Pடித்துக்கொண்டிருக்கும் இப்பெண் இந்தியாவுக்கு விடுமுறையில் வந்திருக்கிறார். போலீசாரின் இரத்தப் பரிசோதனையில் இவர் அளவுக்கு அதிகமாகக் குடித்திருந்தது தெரிய வந்தது. இவரைக் காவல்துறை கைதுசெய்து காவலில் வைத்திருக்கிறது. போலீஸிடம் தான் ஒரு பத்திரிக்கையாளர்  என்று பொய் சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன பத்திரிக்கை நின்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

    ஒரு அப்பாவி தையல்காரரைக் கொன்றதற்கு இவளுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? போக்குவரத்து சம்பந்தமான கொலை என்றாலும், அமெரிக்கா போன்ற நாடுகளில் பதினைந்து ஆண்டுகளாவது சிறைத்தண்டனை கிடைக்கும் இந்தியாவில் இந்தப் பெண் ஜாமீனில் வெளியே வந்து லண்டனுக்குப் போய்விடலாம்!

    பிரபல இந்தி நடிகர் மும்பையில் கடற்கரைச் சாலையில் குடித்துவிட்டுக் காரை ஓட்டிய போது நடைபாதையில் உறங்கிக்கொண்டிருந்த ஆறு பேர் மேல் காரை ஏற்றினார். அவர்களில் ஒருவர் இறந்தார். நீதிமன்றத்தில் முதலில் விபத்து நடந்த நேரத்தில் தன் டிரைவர்தான் காரை ஒட்டினார் என்று சொல்லி, அவருக்குத் தண்டனை வாங்கிக்கொடுத்துத் தான் தப்பிக்கலாம் என்று நினைத்தார். ஆனாலும், கீழ் நீதி மன்றம் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை கொடுத்தது. ஜாமீனில் வெளிவந்து. மேல்முறையீடு செய்து பன்னிரண்டு ஆண்டுகள் வழக்கு நடந்த பின் குற்றமற்றவர் என்று   விடுதலை செய்யப்பட்டார்.

    மேலே சொன்ன குற்றங்களை ஒரு எளியவர் செய்திருந்தால் சட்டம் அவரைச் சும்மா விட்டிருக்குமா? முதல் வழக்கிலும் மூன்றாவது வழக்கிலும் ஈடுபட்டவருக்கு நடிகர் என்ற மமதை. இரண்டாவது வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் லண்டனிலிருந்து விடுமுறைக்கு வந்த இடத்தில் குடிக்கும் பார்ட்டியில் கலந்துகொண்டு ஒரு அப்பாவி உயிரைப் பலிகொள்ள வேண்டுமா? இவர்களுக்கெல்லாம் இறைவனின் கோர்ட்டில் என்ன தண்டனை காத்திருக்கிறதோ?

    Share
  • குறளின் கதிர்களாய்…(136)

    -செண்பக ஜெகதீசன்

    வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
    துணைவலியும் தூக்கிச் செயல்.    (திருக்குறள்-471:வலியறிதல்) 

    புதுக் கவிதையில்…

    தன் வலிமை,
    எதிராளியின் வலிமை
    இயற்றும் செயலின் வலிமை,
    இருவருக்கும் துணைநிற்போர் வலிமை
    எல்லாமறிந்து செயல்பட்டால்,
    இல்லையென்றும் தோல்வி…! 

    குறும்பாவில்…

    செயல் வலிமை, சேர்ந்தோர் வலிமை,
    தன் வலிமை, எதிரி வலிமை
    தெரிந்து செயல்படின் வெற்றியே…! 

    மரபுக் கவிதையில்…

    செய்யும் செயலைச் செய்யுமுன்னே
         –செயலின் வலிமை அறியவேண்டும்,
    செய்வோர் தம்வலி அறிவதோடு
       –செயலில் எதிரி வலிமையையும்
    மெய்யாய்த் தெரிந்து கொள்ளவேண்டும்,
         –மேலும் இவர்கள் இருவருக்கும்
    மெய்த்துணை வலிமையும் அறிந்தபின்னே
    –முயன்றால் செயல்தரும் முழுவெற்றியே…! 

    லிமரைக்கூ…

    தெரிந்திடு தெளிவாய்ச் செயலைப் பற்றியே,
    தன்வலிமை, எதிரியுடன், இருவர்க்கும் துணைவலிமை
    எல்லாமறிந்து செயல்பட்டால் எதிலும் வெற்றியே…! 

    கிராமிய பாணியில்…

    செயல்படு செயல்படு
    செயலத்தெரிஞ்சி செயல்படு,
    தனக்கவலிமயும் எதிரிவலிமயும்
    தெரிஞ்சபின்னே செயல்படு…
    ரெண்டுபேருக்கும் தொணயாத்தான்
    வாறவர்வலிமயும் அறிஞ்சபின்னே
    எறங்கி நீயும் செயல்படு
    எதுலயும்செயிக்கலாம் செயல்படு…
    செயல்படு செயல்படு
    செயலத்தெரிஞ்சி செயல்படு,
    வலிமயறிஞ்சிச் செயல்படு…!

     

     

    Share
  • ஆசிரியர் தினம்

    தமிழ்த்தேனீ

    புழுவாயிருந்த  என்னை  என் தாயாரும் தந்தையாரும்  கொட்டிக் கொட்டியே  தேனியாக்கினார்கள் அப்படிப்பட்ட என்னை  அதன் பின்னர் தமிழைக் கொட்டி  தமிழ்த்தேனைக் கொட்டி தமிழ்த்தேனியாக்கிய  என் ஆசிரியர்கள்  மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கம்.

    ஆசிரியருக்கும்  குருவுக்கும் வித்யாசம் என்ன   என்று ஆராய்ந்தால்  கற்றுக்கொள்ள விழைபவனுக்கு  உலகத்தில் அத்தனைபேருமே குருவாகிறார்கள். ஆனால் ஒவ்வொரு  குறிப்பிட்ட  நூலையும் கற்க ஒவ்வொரு ஆசிரியர் தேவைப்படுகிறார்.  கணக்குக்கு ஒரு ஆசிரியர், தமிழுக்கு ஒரு ஆசிரியர்  என்று. ஆனால் குரு என்பவர் தனக்குத் தெரிந்த  அத்தனையையுமே கற்பிக்கிறார்   தன்னிடம் சீடனாய் இருப்பவருக்கு, அதனால்தான் முற்காலங்களில்  குருகுலம் என்னும் முறை இருந்தது.   மாதா  பிதா குரு அதன் பிறகுதான் தெய்வத்தையே வைத்தோம்  நாம் ஆமாம் பிறந்தது முதல்  தாய், அதன் பின்னர் தாயும் தந்தையும், அதன் பின்னர்  தாயும் தந்தையும் குருவும்,  இறைவனும்.

    வாழ்க்கை முழுவதும்  நமக்கு கற்றுத் தரும்  குரு அல்லது ஆசிரியர் யார் தெரியுமா  ‘அனுபவம்’  .

    நான் அடிக்கடி சொல்வேன்  அனுபவம் கற்றுக் கொடுக்கின்ற பாடத்தை ஆன்டவனால் கூட அளிக்க முடியாது  என்று.  ஆனால் ஒவ்வொரு உயிர்க்கும்  ஆண்டவன் தான்  விதி என்கின்ற பெயரிலே  அனுபவங்களைக் கொடுக்கிறான் என்பது  உண்மையே. ஆயினும்  அனுபவம் நம்மை நேரிடையாகச் சந்திக்கிறது, பாடத்தை  அறிவை வழங்குகிறது. என்னுடைய  எட்டாம் வகுப்பு  ஆசிரியர்கள்  திரு. கம்பீர நாயனார் அவர்களும்   கிருஷ்ணமாச்சாரி என்கிற ஆசிரியரும்  எனக்கு தமிழ் போதித்தவர்கள். அப்போதெல்லாம்  தமிழ்  1  தமிழ் 2  என்று  இரு பிரிவாக வகுப்பெடுப்பார்கள்.

    அன்று அவர்கள் விதைத்த  தமிழ்தான் இன்றும் எனக்கு  உதவுகிறது.  நடிக்க, மேடையில் பேச, கதைகள் கட்டுரைகள்  கவிதைகள்  எழுத, நாடகம் எழுத இயக்க, மிக முக்கியமாக  மிகச் சரியான முறையிலே  தமிழை உச்சரிக்க. ஆகவே ஆசிரியர் தினமாகிய  இன்று நாம் தாயையும், தந்தையையும், ஆசிரியரையும், குருவையும், அனுபவங்களையும் சேர்த்தே இறைவனாகப் பார்க்கும் மனப்பான்மையை  வளர்த்துக் கொள்ளுதல்  நலம் பயக்கும்.  அனைவரையுமே  வணங்குவோமே.

     

    Tamil

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    ஆசிரியர் தினம்

    ஆசிரியன் எனைக் கடைத்தேற்ற

    அவரெடுத்த முயற்சிகள் எத்தனை

    பாசிறிய திருக்குறளும்

    ஆச்சரிய நாலடியும் நூற் சிறிய நன்னூலும்

    ஆல் போன்ற  கலித்தொகையும்

    அரண் போன்ற  பாரதமும்,வாழ்வுதாரணமாய் 

    ராமாயணமும் பூப்போன்ற மனம் கொண்ட

    பெரியோர்கள் ஆசான்கள் தேவதைகள்

    தெய்வங்கள் அல்லா ஏசு  ராமனையும்

    அறிமுகம் செய்து வைக்க எத்தனை பயிற்சிகள்

    திருமுகம் போல் ஒளிரும் ஆசிரியர்

    அறிமுகம் ஆன அந்நாள் வாழ்வின்

     மறுமுகம் காட்டிய பொன்னாள்

    இன்முகம் காட்டி இலக்கணம் மூட்டி

    தமிழ்ச்சுவை இனிதே ஊட்டி

    கனிமுகம் காட்டி கணிதம் ஊட்டி

    அஞ்ஞானம் அகற்ற மெய்ஞ்ஞானம் ,விஞ்ஞானம் ஊட்டி

    நண்பராய் பண்பிலே தெய்வமாய் பழகுதற்கு இன்பராய்

    வாழ வழிகாட்டி அருளோடு ஆன்மீகம் ஊட்டி

    அருள்கின்ற ஆசிரியர்க்கு பெரு நன்றி காட்ட

     நாம் பெற்ற  ஒரு தினம்  ஆசிரியர் தினம்

     

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல்-43

    க. பாலசுப்பிரமணியன்

    மொழி கற்றலும் கண்ணாடி நியூரான்களும்

    education

    குழந்தை பிறந்து சில வாரங்களிலிருந்தே தாய் அந்தக் குழந்தையின் வளர்ச்சிப் பாதையின் முறைகளையும் வடிவங்களையும் நுணுக்கமாகவும் துல்லியமாகவும் கவனிக்கத் தொடங்குகின்றாள். இந்த கவனிப்பு குழந்தையின் பிற்காலக் கற்றலுக்கு மிக அவசியமானதாகக் கருதப்படுகின்றது. ஒரு குழந்தையின் கண்களின் விழிகள் எப்படிச் செல்கின்றன, அதன் பார்வைகள் எல்லாப் பக்கமும் செல்கின்றனவா என்றெல்லாம் கவனித்தல் அவசியம். மேலும் அருகில் இருந்து வரும் ஒளி அலைகளுக்கு அந்தக் குழந்தையின் மறுமொழிகள் (Responses) எவ்வாறு இருக்கின்றன என்றெல்லாம் கவனித்தல் அவசியம்.

    மூளை ஆராய்ச்சியில் அறியப்பட்ட ஒரு முக்கிய தகவல் – மூளையில் உள்ள “கண்ணாடி நியூரான்களைப் (Mirror Neurons) பற்றியது தான். குழந்தைகளின் மொழி அறிதலிலும் ஆராய்ச்சியிலும் இவைகளின் பங்கு மகத்தானவை. “முகம் பார்த்துச் சிரித்தல் “போலவே “முகம் பார்த்துக் கற்றலும் ஒரு அற்புதமான செயல். குழந்தையைக் கைகளில் ஏந்திய தாய், குழந்தையின் முகம் பார்த்து “அம்மா’   அப்பா மாமா தாத்தா என்று சொல்லும் பொழுது அந்தத் தாயின் முக அசைவுகளும் ஒலி அலைகளும் ஒருங்கிணைந்து குழந்தையின்  மூளையில் உள்ள கண்ணாடி நியூரான்களை செயல்படுத்தி அந்த அசைவுகளையும் ஒலி அதிர்வுகளையும் பிரதிபலிக்கச் செய்வதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆகவே மொழி கற்றலில் தாய் தந்தை மற்றும் ஆசிரியர்களின் நேரடி உறவுகளும்” (individual relationships) உயிரோட்டங்களும்(live interactions)அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன..

    மொழி பேசும் திறன்கள், உச்சரிப்புக்கள், சொல்லாண்மை போன்ற பல வல்லமைகளை வளர்ப்பதிலும் பேணுவதிலும் இந்தக் கண்ணாடி நியூரான்களின் பங்கு முக்கியமானதாகக் கருதப்படுகின்ற்து. இதன் காரணமாகத்தான் பல மாநிலங்களில் மொழிகள் பேசும் வடிவங்கள் அந்த நிலத்தின் சமூகப் பண்பாக வெளிப்படுகின்றது. இந்தக் கண்ணாடி நியூரான்கள் ஒரு சமூகத்தின் பொதுவான பண்புகளையும் கலாச்சாரங்களையும் வளர்ப்பதில் பொறுப்பேற்கின்றன என்று “சமூக நுண்ணறிவு “(social Intelligence)  பற்றிய தன்  ஆராய்ச்சியின் அடிப்படையில் முனைவர் டேனியல் கோல்மான் ( Daniel Goleman)  கூறுகின்றார்

    தாயிடமிருந்து மொழியைக் கற்றுக்கொள்ளும் குழந்தைகள் பொதுவாக “மாமா, தாத்தா. பாப்பா” போன்ற வார்த்தைகளை எளிதாகவும் துரிதமாகவும் கற்றுக்கொள்ளுவது மட்டுமின்றி அந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் திருப்பிச் சொல்ல முயற்சிப்பதைக் காணலாம். இந்த மொழி கற்றல் பற்றிய ஆராய்ச்சியில் பல மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள நாடுகளிலுள்ள குழந்தைகளிடம் ஆராய்ச்சி செய்த மூளை நரம்பியல் விஞ்ஞானி மெர்ஸினிச் (Merzenich )  என்பவர் பொதுவாக மெய்யெழுத்தும் உயிரெழுத்தும் சேர்ந்த சொற்களை எளிதாகவும் விருப்பத்துடனும் கற்பது மட்டுமின்றி அவைகள் திருப்பிச் சொல்லப் பழகுவதில் இந்தக் கண்ணாடி நியூரான்களின் பங்கினை சிறப்பித்துக் கூறியிருக்கின்றார்.

    அது மட்டுமல்ல.. எந்தக் குழந்தைகளுக்கு சிறு வயதில் தாய் தந்தையாரின் நேர்பார்வையிலோ அல்லது குடும்பத்தினரின் நேர்பார்வையிலோ மொழி கற்றுக்கொள்ள குறைந்த நேரமோ அல்லது வாய்ப்போ கிடைக்கின்றதோ அந்தக் குழந்தைகளின் மொழித் திறன்கள் மற்ற குழந்தைகளின் மொழித் திறன்களை விட சற்றே குறைவாக இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. இதன் பொருள் அவர்களுக்கு அந்த மொழித் திறன் மற்றும் வல்லமை பின்பு வாராது என்பதல்ல. அதன் வளர்ச்சிக்கு அதிக முயற்சிகள் தேவைப் படும் என்பதுவே.

    மேலும் “கண்களைப் பார்த்துப்” பேசுதல் குழந்தையின் மன இருக்கங்களைத் தளர்த்துவதற்குப் பேருதவியாக இருக்கின்றது. “மன இறுக்கத்தால் “( Autism ) பாதிக்கப்பட்ட பல குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் போது இந்தக் குழந்தைகளின் மூளையில் கண்ணடி நியூரான்களின் செயல்பாடுகள் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.. அவர்களுடைய, மற்றவர்களோடு “கண்பார்த்துப் ” பேசும் திறனும் ஆர்வமும் அதிக அளவில் பாதிக்கப் பட்டதாகவும் அறியப்படுகின்றது.

    கண்களுக்கு கிடைக்கும் ஒளி அலைகளும் காதுகளில் விழுகின்ற ஒலி  அதிர்வுகளும் எவ்வாறு இணைந்து செயல்பட்டு மூளையில்  கருத்தோவியங்களை உருவாக்குகின்றன என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

    தொடரும் ..

    Share
  • சிவபுரி பெற்றெடுத்த சிவநேயச் செல்வர்

    -முனைவர்  சி.சேதுராமன்

    தமிழகத்தில் உள்ள ஒவ்வோர் ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடிக் கிராமமாக விளங்கும் எனது ஊரான மேலைச்சிவபுரிக்கும் தனித்ததொரு சிறப்பு உண்டு. ஆம், இங்குதான் தமிழன்னையின் உயர்விற்கு அயராதுபாடுபட்ட தமிழ்ப்பெருந்தகை மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் பிறந்தார். அவரால் மேலைச்சிவபுரி தமிழக வரலாற்றிலும் தமிழிலக்கிய வரலாற்றிலும் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றது. கதர்ச்சட்டை, கதர்வேட்டி கதர்த்துண்டு, கையில் குடை,  காலில் சாதாரண நடையன், நெற்றியில் திருநீறு இத்தகைய எளிமையான தோற்றத்துடன் தீட்சண்யமான கூர்ந்த பார்வையுடன் கம்பீரமாகத் திகழ்ந்தவர்தான் மூதறிஞர் வ.சுப.மா.

    manikkanar1987-ஆம் ஆண்டு நான் கணேசர்  செந்தமிழ்க் கல்லூரியில் பி.லிட்., முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். எனது வீட்டிற்குச் செல்லும் வழியிலேயே மூதறிஞரின் வீடு. அப்போது நான் கல்லூரிக்குப் போகும் போதெல்லாம் அவரும்என்னுடனேயே நடந்து வருவார். அவர் எங்கள் ஊர் என்பது தெரியும். அவரின் சிறப்புகளைப் பற்றி அறியாத பருவம்.

    நாள்தோறும் அவர் கல்லூரியில் உள்ள சன்மார்க்க சபைக்கு வருவார். அவ்வாறு வரும்போது ஒரு நாள் எங்களுக்கு முதலாம் ஆண்டில் நம்பியகப்பொருள் இலக்கணத்தை பேராசிரியர் தா. மணி ஐயா அவர்கள் நடத்திக் கொண்டிருந்தார். நாங்கள் அனைவரும் பாடத்தைக் கவனித்துக் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் என்னுடன் நடந்துவரும் பெரியவர் திடீரென வகுப்பறைக்குள் நுழைந்தார். எனது ஆசிரியர் மணி ஐயா அவரைக் கண்டவுடன் பணிவாக வணக்கம் ஐயா என்று மரியாதையுடன் கூறிவிட்டுத் தான் எடுக்கும் பாடம் குறித்து அவரிடம் கூறினார்.

    கருப்பொருள் குறித்த பாடம்தான் பேராசிரியர் மணி ஐயா  நடத்திக்கொண்டிருந்தார். அதனைக் கேட்ட மூதறிஞர் பாலை நிலத்திற்குரிய கருப்பொருள் குறித்த நூற்பாவைச் சிறிதுநேரம் எடுத்துரைத்து அதற்கு விளக்கம் கூறிவிட்டு அதிலிருந்து வினாக்களைக் கேட்டார். அவர்கேட்ட வினாக்களுக்கு விடைகளை எங்கள் வகுப்பிலிருந்தோர் கூறினோம். அப்போது மூதறிஞர் நூற்பாவைக் கூறுமாறு வினவ, நானும் என் நண்பர்கள் சிலரும் தெரிந்தவரை கூறினோம். அதனைக் கேட்டபின்னர் மூதறிஞர் எங்களைப் பாராட்டிவிட்டு வகுப்பறையை விட்டுச்சென்றுவிட்டார். அவர் சென்றபின்னர் அவர் யார் என்று எங்கள் பேராசிரியரிடம்கேட்டோம். அதற்கு அவர் ‘‘இவர்தான் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் என்ற தமிழறிஞர்’’ என்று எங்களுக்குக் கூறினார்.

    அதன்பின்னர் சன்மார்க்கச் சபைக் கட்டிடத்தில் மூதறிஞர் எங்களுக்குச் சிறப்பானதோர் உரையை வழங்கினார். அவரது உரையைக் கேட்ட எனக்கு அவர் மீதுபற்றுதல் ஏற்பட்டது. பலமுறை மூதறிஞர் உரையைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதனை எனது வாழ்நாளில் கிட்டிய பேறாகக் கருதுகிறேன். அவர் எழுதிய நூல்களைப்பற்றித் தெரிந்துகொண்டு அவற்றை எடுத்துப் படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

    ஆனால் எனக்கு நூல்கள் கிட்டவில்லை. எனது ஆவல் நான் பி.லிட் மூன்றாம் ஆண்டு பயின்று கொண்டிருந்தபோதுதான் நிறைவேறியது. ஆம் மூதறிஞர் எழுதிய ‘‘தமிழ்க்காதல்’’ என்ற நூலைக் கற்கின்ற வாய்ப்பு அப்போது எனக்குக் கிட்டியது. என்னுடைய ஆசிரியப் பெருந்தகை சதாசிவம் அவர்கள் தன்னிடமிருந்த அந்நூலை எனக்குக் கொடுத்துப் படிக்குமாறு தந்தார். அந்நூலைப் படிக்கப் படிக்க என்னுள் மூதறிஞரைப்பற்றிய எண்ணம் மேலோங்கி எழுந்தது. அவரது மேதைமைத் தன்மை என்னுள் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தியது. இவ்வளவு பெரிய அறிஞரின் வீட்டருகில் வாழ்ந்துகொண்டு அவரைப் பற்றி ஒன்றும் அறியாமல் இருந்துவிட்டோமே என்று வருத்தப்பட்டேன்.

    எங்கள் ஊர்ப் பெரியவர்களிடம் அவரைப் பற்றி கேட்டபோது அவர்கள்அவரைப் பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகளைக் கூறினார்கள். எங்கள் ஊரில் வாழ்ந்துமறைந்த சுதந்திரப் போராட்ட தியாகி சுவாமிநாதன் செட்டியார் அவர்களும் மறைந்த எனது பேராசிரியர் பழ. சிதம்பரம் ஐயா அவர்களும் மூதறிஞரைப் பற்றி பல செய்திகளைக் கூறினர்.

    இளம் வயதில் தாய்தந்தையை இழந்து பர்மாவில் உள்ள வட்டிக்கடைக்குப் பெட்டியடிப் பையனாகச் சேர்ந்து அக்கடையின் முதலாளி யாராவது வந்து கேட்டால் தான் இல்லையென்று கூறுமாறு பொய் சொல்லச் சொன்னபோது மூதறிஞர்  மறுத்து விட்டதாகவும், அதனால் கோபமுற்ற முதலாளி அவரை மீண்டும் ஊருக்கேஅனுப்பிவிட்டதாகவும் கூறி எந்தச் சூழலிலும் பொய்சொல்லாமல் வாழ்ந்த அவரதுநேர்மையை எங்கள் ஊர்ப் பெரியவர்களின் வாயிலாக அறிந்தபோது என்னுள் அவர் இமயமலைபோல் உயர்ந்து நின்றார்.

    மூதறிஞரை வீட்டிலேயே சந்தித்து அவரோடு உரையாட வேண்டும் என்று என்னுள் விருப்பம் எழுந்தது. அந்த நாளுக்காக நான் காத்துக்கொண்டிருந்தேன் என்பதை விடத் தவம் கிடந்தேன் என்று சொல்லலாம். பல பணிகளின் காரணமாக மூதறிஞர் பல ஊர்களுக்கும் சென்று கொண்டிருந்தார். மூதறிஞரை எவ்வாறேனும் தனித்துச் சந்தித்துவிட வேண்டும் என்ற எனது எண்ணம் மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருந்தது. பி.லிட். மூன்றாம் ஆண்டுத் தேர்வும் வர, தேர்வெழுதிக் கொண்டிருந்தோம்.

    கடைசிநாள் தேர்வு நடந்த பொழுது ஓர் அதிர்ச்சியான தகவல் எங்களை வந்தடைந்தது. தேர்வறையில் கண்காணிப்புப் பணியில் இருந்த பேராசிரியர் அங்குவந்த மற்றொரு பேராசிரியரிடம் மூதறிஞர்  இறந்துவிட்டதாகத் தகவலைக் கூறினார்.  அதைக் கேட்ட எனக்குப் பேரதிர்ச்சி.  இது உண்மையானதா என்று அறிய என் மனம் பரபரத்தது. தேர்வினை முடித்தபின்னர் விரைந்து சென்று எனதுபேராசிரியரிடம் கேட்க அவர் கூறிய தகவல் என்னுள்ளத்தைப் பிளந்தது.

    ‘‘தண்டாமரையின் உடன் பிறந்து தண்டே நுகரா மண்டூகம்’’ போன்று இருந்துவிட்டோமே! என்று என்னுள்ளம் வேதனையில் துடித்தது. நானும் எனது வகுப்புத் தோழர்  பிரான்மலை கணபதி  அவர்களும் என்  ஊர்க்கார்கள் சிலருடன் மூதறிஞரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகக் காரைக்குடிக்குச் சென்றோம். யாரைப் பார்த்து உரையாட வேண்டும் என்று  எண்ணியிருந்தேனோஅங்கு அந்தப் பெருந்தகை இறைவனடி சேர்ந்திருந்தார்.

    எனக்குச் சொல்லொணாத வேதனை ஏற்பட்டது. மூதறிஞர் அவர்களுக்கு மனமுருக எனது அஞ்சலியைச் செலுத்திவிட்டு அவரது  இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு எனது நண்பருடன் திரும்பினேன். எனது ஊரில் அனைவரும் அவரைக்குறித்த பல்வேறு தகவல்களைக் கூறி  அவரை  நினைவு கூர்ந்தனர்.

    முன்பெல்லாம் தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளைஎழுதுவதற்கு விளம்பரம் வந்தால் அதில் கல்வித் தகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் பி.லிட்.,  நீங்கலாக என்று குறிப்பிடப்பட்டிருக்கும். தமிழ் படித்தால் அரசுத்தேர்வுகளை எழுத முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதை அறிந்த மூதறிஞர் தனது முயற்சியால் அதனைப் போக்கி பி.லிட். பட்டம் பயில்வோரும் தேர்வெழுதும் நிலையைக் கொண்டுவந்தார்.  இது பலரது வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொணர்ந்தது. எங்கள் கல்லூரியில் உள்ள சன்மார்க்க சபையில் நடைபெற்ற மூதறிஞரின் அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்ட எங்கள் ஊர்க்காரர்களும் பலஊர்களிலும் இருந்து வந்த தமிழறிஞர்களும் மூதறிஞரின் சாதனைகளை நினைவுகூர்ந்தனர்.  அப்போதுதான் அவரது பெருமைகள் பல தெரியவந்தன.

    தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர் மூதறிஞர். அதோடு மட்டுமல்லாது மூதறிஞர்  எழுதிவைத்த உயிலில் தனதுசொத்தில் ஒரு பங்கினை எங்கள் ஊர்  ஏழை எளியவருக்கு உதவி செய்வதற்கு எழுதி வைத்துள்ளதை அறிந்து உள்ளம் நெகிழ்ந்தேன். கிடைப்பதை எல்லாம் சுருட்டிக்கொண்டு போகும் இன்றய உலகில் இத்தகைய மாமனிதர்  வாழ்ந்திருக்கின்றாரே என்று எண்ணி வியந்தேன். பண்டித ஜவகர்லால் நேரு இந்தியத் திருநாட்டிற்காகத் தாம்வசித்த வீட்டைக் கொடுத்ததைப் போன்று மூதறிஞர் தாம் நேர்மையாக உழைத்துச்சேர்த்த செல்வத்தைத் தாம் பிறந்த ஊருக்கென்று எழுதி வைத்தார்.

    மூதறிஞரின் இத்தகைய செயல் காலம் உள்ளளவும் சிவபுரிக்காரர்களின் உள்ளத்தில் நின்று நிலைத்திருக்கும். அவர்  பெயரால் இன்றும் பல நலத்திட்டஉதவிகள் மூதறிஞரின் பிறந்த நாளில் அவரது குடும்பத்தாரால் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.  இந்த நூற்றாண்டு விழாவில் அவரது நினைவுகள் பலசுழன்று சுழன்று என்னுள் எழுந்த வண்ணமாகவே உள்ளன. அவர்  எங்களுக்கு ஒரு நூற்பாவைக் கூறி விளக்கமளித்த பாங்கு இன்றும் மறக்க முடியாத நிகழ்வாகவேஉள்ளது.

    மூதறிஞரிடம் பாடம் கேட்ட அந்த ஒருசில மணித்துளிகள் வாழ்நாளில் மறக்கமுடியாதவையாகும்.  மூதறிஞர்  செம்மலார் பிறந்த ஊரில் நானும் பிறந்தேன் என்று கூறிக் கொள்வதில் பெருமையடைகிறேன். சிவபுரி பெற்றெடுத்த சிவநேயச் செல்வராக மூதறிஞர் விளங்கினார். கணேசர்  செந்தமிழ்க் கல்லூரியை வளர்த்தெடுத்து அதன் மூலம் என்னைப் போன்ற பலருக்கும் கல்விக் கண்ணைத்திறந்து வைத்த அந்த மாமேதையின் பெயரை மேலைச்சிவபுரி மட்டுமல்ல தமிழ்கூறும் நல்லுலகமும் என்றும் கூறிக் கொண்டே இருக்கும். அதில் தமிழ் மணம் கமழ்ந்து கொண்டிருக்கும்.

    ***

    முனைவர்  சி.சேதுராமன்
    தமிழாய்வுத்துறைத் தலைவர்
    மாட்சி தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி) புதுக்கோட்டை.

    மின்னஞ்சல்: malar.sethu@gmail.com

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் … (20)

    நிர்மலா ராகவன்

    உணவின்மூலம் அன்பா?

    நலம்-1-2
    `இன்னும் நிறையச் சாப்பிடுங்கள்!’ கல்யாண வீட்டில் பந்தி உபசாரம். நம் வயிறு கொள்ளும்வரை சாப்பிட்டிருப்போம். இருந்தாலும், உபசாரம் செய்வார்கள்.

    எனக்குத் தெரிந்த ஓர் இசைக்கலைஞர் நான் ஒவ்வொரு ஆண்டு பார்க்கும்போதும் பல கிலோ எடை கூடியிருப்பார். முப்பத்தைந்து வயதுதான். அவர் மனைவி என்னிடம் முறையிட்டார்.

    “என்ன, இப்படி குண்டாகிக்கொண்டே போகிறீர்களே! இனிப்பு வியாதி வந்துவைக்கப்போகிறது!” என்று கவலைப்பட்டேன்.

    “என்ன செய்யறது, மாமி! அடிக்கடி கல்யாணக் கச்சேரி. அப்போதெல்லாம், ஒரேயடியாக உபசாரம் செய்து சாப்பிட வைக்கிறார்கள்!” என்றார், பரிதாபமாக.

    இப்படிப் பிறர் நம்மை உபசாரம் செய்வது உபகாரமில்லை. உபத்திரவம்தான். மறுநாள் நம் வயிறு கெட்டால், அவர்களிடம் போய் சண்டை போட முடியுமா? ஏதாவது வியாதி வந்தாலும், `நான்தான் சொன்னேன் என்றால், உனக்கெங்கே போயிற்று புத்தி?’ என்று திருப்பிக் கேட்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சசயம்?

    `ஏழைகள் என்றால் சோனியாக இருப்பார்கள். ஏனெனில் அவர்கள் சாப்பாட்டுக்குத் திண்டாடுபவர்கள். நமக்குத்தான் பணப்பிரச்னை இல்லையே!’ என்பதுபோன்ற எண்ணப்போக்குடன் தேவைக்கு அதிகமாகப் பலரும் சாப்பிடுகிறார்களோ? சற்று வசதியாக இருப்பவர்களைப் பார்த்தால் அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.
    நான் மருத்துவரிடம் போகும்போதெல்லாம், `உங்களுக்கு என்ன வயது?’ என்று கேட்டுவிட்டு, `எடையைக் குறைக்கலாம்!’ என்று ஆலோசனை வழங்குவார்கள்.

    என் அனுபவத்தில், நாற்பது வயதில் சாப்பிட்ட அளவு உணவையே நாற்பத்து ஐந்து வயதிலும் சாப்பிட்டாலும், கடினமான வேலை செய்யாவிட்டால் எடை அதிகரித்து விடுகிறது. (சமையல், வீட்டில் சிறிது வேலை செய்வது இதெல்லாம் கணக்கில்லை). இப்படியே ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளிலும் எடை கூடுவதால், சாப்பாட்டின் அளவைக் குறைத்தால்தான் எடை ஒரே சீராக இருக்கிறது.

    `நான் உயிர் வாழ்வதே சாப்பிடுவதற்குத்தான். அப்படியாவது என்ன அழகு வேண்டிக் கிடக்கிறது?’ என்பவர்களுக்கு: எடை அதிகரித்தால் முழங்கால் வலி, மூச்சிரைப்பு, அசதி என்று என்னென்னவோ உபாதைகள்! கூடவே, சோம்பல் அல்லது சிடுசிடுப்பு மற்றும் விரக்தி வேறு. ஆனால், விருந்தையே மருந்தாக எண்ணி அளவோடு உண்டால், சுறுசுறுப்பாக உணரமுடியும். `இளமையாக இருக்கிறீர்கள்!’ என்று யாராவது பாராட்டினால், அது போனஸ்தான்.

    கதை: சாருமதி கணவனிடம், `வேலை முடிந்து வரும்போது, இளநீர் வாங்கி வாருங்கள்!’ என்றாள்.

    புது மனைவி ஆயிற்றே! கணவனோ, இரண்டு இளநீர் வாங்கி வந்தான். முலாம்பழம், மாதுளை என்று சாருமதி எது கேட்டாலும், இரண்டாக வாங்கி வந்தான். அவளும் உடனுக்குடனே சாப்பிட்டுத் தீர்த்தாள்.

    விளைவு: அந்தக் கர்ப்பிணியின் உடல் வெகுவாகப் பருத்தது.

    “இப்படி இவள் சாப்பிட்டால், பேறு காலம் விரைவாக வந்துவிடும். அப்புறம் வயிற்றைக் கீறித்தான் குழந்தையை எடுக்கவேண்டி வரும்,” என்று அந்த இளைஞனின் தாயிடம் எச்சரிக்கை செய்தேன்.

    “அவளிடம் சொல்லி விடாதீர்கள்! பாவம், சின்னப்பெண்! என் மகனும் ஆசையாக வாங்கி வருகிறான்!” என்று பரிந்தாள்.

    சில மாதங்கள் கழித்து முகம் சிறுக்க, “நீங்கள் சொன்னபடியேதான் ஆயிற்று!” என்று ஒத்துக்கொண்டாள்.

    ஏழு மாதத்திலேயே சிஸேரியன் அறுவைச் சிகிச்சையால் குழந்தை பிறக்க, சாருமதியால் உடற்பயிற்சி எதுவும் செய்ய முடியவில்லை. வயிறு பருத்த நிலையிலேயே இருந்தது. அதற்காக அவள் கவலைப்படவுமில்லை.
    கணவன் தன்மீது காட்டிய அன்பைத் திருப்பியளிக்க ஆரம்பித்தாள் சாருமதி. அவனுக்குப் பிடித்ததாக சமைத்து, `இன்னும் கொஞ்சம், ப்ளீஸ்!’ என்று உபசாரம் செய்ததில், இப்போது அவனுக்கு இனிப்பு நோய்.

    The shortest way to a man’s heart is through his stomach (ஒரு மனிதனின் இதயத்தில் இடம் பிடிக்க மிகக் குறுகிய வழி வயிற்றின்மூலம்தான்) என்பது உண்மையோ, என்னவோ! சாப்பாட்டின் அளவுதான் அன்பின் அளவுகோல் என்பதுபோல் நடப்பது வேண்டாத விளைவுகளில் கொண்டுவிடும்.

    ஒருவர்மீது நமக்கு அன்பு என்றால், அவருக்கு நிறைய உணவு அளிப்பதுதான் என்று தம்பதிகள் மட்டுமல்ல, தாய்மார்களும் எண்ணுகிறார்கள். அதுவும் ஒரே குழந்தையாக இருந்தால் போயிற்று!

    ஒரே மகனது உடல் பருமனுக்குத் தான்தான் காரணம் என்று எந்தத் தாயும் ஒத்துக்கொள்ள விரும்புவதில்லை. `என் மகன் எப்பவும் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். ஏனோ ஓடியாடி விளையாட முடியவில்லை,’ என்று காலங்கடந்து மருத்துவர்களிடம் அழைத்துப்போய் குறை கூறி என்ன பயன்?

    தொடருவோம்

    Share
  • தணிக்கையும் நிர்வாகமும் – 1

    -இன்னம்பூரான்
    செப்டம்பர் 3, 2016

     

    innamburan

     

    இது இன்றைய செய்தி.

    அம்மா காண்டீன் என்ற மலிவு விலைச் சாப்பாட்டுக்கடை தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். நேற்று, தமிழ்நாட்டுச் சட்டசபையில், நமது அரசியல் சாஸனத்தில் விதித்தபடித் தாக்கல் செய்யப்பட்ட தணிக்கை அறிக்கையில், நிர்வாகக் கோளாறுகளால் 3.69 கோடி ரூபாய்கள் நஷ்டம் என்று குறிப்பிடப்பட்டது. அதற்கு அரசு அளித்த  விளக்கமும், அதில் அடக்கம்.

    ‘உகந்த நேரத்தில் சேவை, உத்தமமான அணுகுமுறை, சிக்கனம்’ ஆகியவற்றை இந்த திட்டம் கடைப்பிடிக்காததை ஆவணங்களுடன் நிரூபித்துச் சுட்டிக்காட்டிய அந்த அறிக்கை, சென்னை மாநகராட்சிதான் வாங்கிய சப்பாத்தி மிஷின்களின் தரக்குறைவைத் தனது டெக்னிகல் கமிட்டி ஆய்வுசெய்து அறிந்து கொண்டபின்னும், ஒப்பந்தக்காரருக்குக் கொடுத்த ரூ1.33 கோடியை இழந்துவிட்டதையும், மே 2015இல் கொடுத்த நோட்டீஸுக்குப் பின், யாதொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றது. சில இடங்களில் மலிவு விலையில், சுத்தமான உணவும் கொடுக்கப்படுவதை எடுத்துரைத்த அந்த அறிக்கை, சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி மாநகராட்சிகளும், ஒன்பது முனிசிபாலிட்டிகளும் தக்கதொரு ஆய்வு செய்யாமல் அம்மா காண்டீன்கள் திறந்த வகையில் ஏற்பட்ட நஷ்டங்களைப் பட்டியலிட்டது. கோதுமை மாவு டி.யூ.சி.எஸ் மூலம் வாங்கியதில் அதிகச் செலவு ரூபாய். 30.85 லக்ஷம் என்றும், மற்றவகையில் அதிகச் செலவு ரூபாய் 2.78 கோடி என்பதையும் சுட்டியுள்ளது.

    ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்பதைத் தவிர, முனிசிபாலிட்டிகளும், மாநகராட்சிகளும் பற்றாக்குறையை ஈடு செய்யத் தவித்தன.

    அந்த அறிக்கையில் இவை சமூக நலப்பணி; வணிகம் அல்ல என்ற அரசின் பதில் அடக்கம். ஆனால், ஆடிட் ரிப்போர்ட்டில் அந்தக் கேள்வி எழவில்லை. அநாவசியச் செலவும், பற்றாக்குறையும்தான் அதில் சுட்டிக்காட்டப்பட்டது.

    உதவி:

    TIMES OF INDIA
    Mismanagement of Amma canteens cost Tamil Nadu Rs. 5.69 crore: CAG
    TNN | Sep 3, 2016, 02.16 AM IS

    ***

    சித்திரத்துக்கு நன்றி:
    http://www.thehindubusinessline.com/multimedia/dynamic/01193/CAG_-_LOGO_jpg_1193235e.jpg

    ******
     

    Share
  • தலை வணங்குகிறேன்! ( செப்டம்பர் 5 – ஆசிரியர் தினம்)

    க. பாலசுப்பிரமணியன்

    நாட்டின் முதுகெலும்புகளுக்கு உரம் போடும் இந்தத் தொழில் வல்லுனர்களுக்குத் தலை வணங்குகிறேன் !

    “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் “என்ற பழமொழிக்குச் சான்றாக இன்றும் நாடெங்கும் தெய்வங்களின் பிரதிபலிப்பாக பல நல்ல உள்ளங்கள் உழைத்து வருகின்றன. அந்தச் சான்றோரை கைகூப்பி வணங்கும் நாள் இது!

    “இறைவனும் எனது குருவும் முன் வந்து நின்றால் முதலில் நான் என்னுடைய குருவின் கால்களில் தான் விழுவேன்; அவர்தான் என்னை இறைவனுக்கு அறிமுகம் செய்தவர் ” என்று சொன்னார் கபீர்தாஸ்.

    “ஒரு ஆசிரியரின் தாக்கம் நித்தியத்தின் மேல் விழுகின்றது. அது எந்த இடத்தில் முடியும் என்று யாராலும் சொல்ல முடியாது ” என்கிறார் மேலை நாட்டு தத்துவ அறிஞர் ஹென்றி ஆடம்ஸ்.

    இதை உணர்ந்து செயல் படுதல் ஆசிரியர்களின் கடமை. அவர்களின் ஒவ்வொரு செயலும், வார்த்தைகளும், பழக்க வழக்கங்களும் ஒரு சமுதாயத்தின் அடித்தளங்களை மட்டுமல்ல, எதிர்காலத்தையும் பெரிதும் பாதிக்கின்றது.

    மற்ற பல தொழில்களை போன்றதல்ல இது .. உண்மையில் சொல்லப்போனால் இது ஒரு தொழில் அல்ல.. இது ஒரு மிகப்  பெரிய சமுதாய சேவை.  ஒரு நல்ல ஆசிரியருக்கு பணம் என்றும் ஒரு பொருட்டாக இருந்ததே அல்ல. அவர் வாழ்க்கையில் கிடைக்கும் மன நிறைவுக்கு என்றும் சரியான ஈடு இருந்ததே கிடையாது. உணர்வு பூர்வமாக இதை பல நல்லாசிரியர்கள் அனுபவித்தும் வெளிப்படுத்தியும் உள்ளனர்.

    காலப்போக்கில் சற்று மாற்றங்கள் நிச்சயமாக ஏற்பட்டுள்ளன . உலக அளவில் அறிவின் பரிமாணங்களிலும் பரிமாற்றங்களிலும் ஏற்பட்டுள்ள மாறுதல்களை சந்திப்பதில் உள்ள சிக்கல்களும் சோதனைகளும் இவர்களுக்கு பல இடர்பாடுகளை ஏற்படுத்தி உள்ளன. இவற்றை ஆக்கபூர்வமாக சந்தித்தல் மிக்க அவசியம். தற்போதைய சூழ்நிலையில் ஒரு நல்ல ஆசிரியர் நல்ல மாணவனாக இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது..வாழ்க்கை முழுதும் கற்றல் (Life Long Learninng) என்ற கோட்பாடுகளை மனதில் நிறுத்தி தங்கள்அறிவுவானத்தின் எல்லைகளை விரிவு படுத்திக்கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதை உணர்ந்து இந்த ஆக்கப்பூர்வமான செயலில் விருப்பத்துடனும் ஆர்வத்துடனும்  பங்கேற்றல் காலத்தின் கட்டாயம்.

    பல நூற்றாண்டுகளுக்கு முன் சமஸ்க்ரித மொழியில் ஆதி சங்கரர் இயற்றிய விவேக சூடாமணி என்ற நூலில் ஒரு குருவின் குணங்களை விளக்கும் வண்ணம், கீழ்கண்ட திறன்கள் அவர்களுக்குத் தேவையானவையாக சொல்லப்பட்டுள்ளது. இவை எல்லாக்காலங்களுக்கும் பொருந்தும்.

    1. அறிவை வளர்ப்பதில் ஆர்வம்
    2. அறிவில் பேராண்மை
    3. எரிந்து அமைந்த கனல் போன்ற முதிர்ச்சி
    4. கருணையில் கடலாக இருத்தல்
    5. நட்புடைமை

    இன்றும் இந்தக் கருத்துக்கள் சாலப் பொருந்தும்!

    ஒரு பொதுமேடையிலே ஒரு தொழில் வல்லுனர் உரையாற்றும் பொழுது “நான் செய்யும் தொழில்களில் எத்தனை சாதனைகள் செய்துள்ளேன். இந்த நண்பர் பெரிய மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். அந்த நபர் ஒரு நீதியரசராக இருக்கின்றார். அந்த மூலையிலே உட்கார்ந்திருக்கும் அன்பர் வியாபாரத்தில் வல்லுநராகி பல மில்லியன் டாலர்களைச் சம்பாதித்து   சமூக சேவையும் செய்து வருகின்றார். ஏன் ஆசிரியர்கள் மட்டும் வளர்வதே இல்லை?” என்று கேலியாகவும் தரக்குறைவாகவும் திமிராகவும் உரையாற்றினார். அந்தக் கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒரு வயதான மூதாட்டி சற்றே பேசுவதற்கு அனுமதி கேட்டு மேடையில் சென்று உரையாற்றினார்.

    “இந்த மருத்துவரையும் நீதியரசரையும் வர்த்தக நிபுணரையும் இவ்வாறு எள்ளி நகையாடிய தொழில் வல்லுனரையும் இளம் வயதிலிருந்தே ஆர்வத்தில் உரமிட்டு ஒளி விளக்காக வழிகாட்டியதே ஆசியர்கள்.” என்று உரைக்க அந்த அரங்கமே எழுந்து நின்று கைதட்டி அந்த மூதாட்டிக்கு நன்றி செலுத்தியது..

    தலை  வணங்குகின்றேன் !

    Share
  • படக்கவிதைப் போட்டி 78-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான புகைப்படத்தை எடுத்தவர் நம் வல்லமை ப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். வல்லமை இதழாசிரியரின் விருப்பத்திற்கிணங்க இப்படத்தை அவர் போட்டிக்கு அளித்துள்ளார். அவருக்கு நம் நன்றி உரித்தாகுக!

    grandpa and child

    அன்புக்கரம் நீட்டி ஆசையாய் அழைக்கும் பாட்டனாரை விழிவிரிய நோக்கும் இந்த மழலையின் மதிவதனம் நம் மனம் மயக்குகின்றது!

    ”தளர்நடை போடும் தளிரே…! உன் அருகிலிருக்கும் பாட்டனாரும் (வயதாகித்) தளர்நடை போடுபவரே…அந்த உறவுக்குக் கைகொடு; அவர் அன்புக்கு உனைக்கொடு!” என்று அக்குழந்தையிடம் கூறத்தோன்றுகிறது நமக்கு.

    இக்கனிமழலையைக் கண்டு, கற்கண்டுக் கவி வடித்திருப்பர் நம் கவிஞர்கள். அவற்றைச் சுவைத்து வருவோம்!

    ”குழந்தாய்! நீ தளர்நடை பயிலும் பாதை மலர்ப்படுக்கை அன்று; அங்கே முட்களின் அணிவகுப்பே அதிகம். அந்த முட்கள் உன் பிஞ்சுப் பாதத்தைப் பதம் பார்க்காதிருக்க வேண்டுமே…!” என்று கவலையோடு காவலிருக்கும் பாட்டனாரைப் பார்க்கிறோம் திருமதி. ராதாவின் பாவில்.

    ஆனந்தம் வழிகிறது கண்ணீராய் கன்னத்தில்
    அடியெடுத்து நீ தளிர் நடை பயிலும் போது
    அதே சமயம் பதட்டமும் வருகிறதுஉனது
    அந்தத் தளிர் நடை ஓட்டத்தின் வேகத்தைக் கண்டு!

    இளம் கன்று போல் துள்ளி ஓடுகிறாய்
    இன்னமும் பயம் உன்னைத் தீண்டவில்லை
    நீ நன்றாக நடை பயிலும் வரைத் தினமும்
    நான் நிழலாகத் தொடருவேன் உன்னை!

    பாதைகள் ரோஜாப் படுக்கை அல்ல
    பதம் பார்க்கும் முள்ளும்முண்டு அங்கு
    பயணித்துப் பாடம் கற்றவன் நான்
    பக்குவமாய் எடுத்து உரைக்க நானுள்ளேன்!

    என் கை நீளுகிறது இன்று பாசத்துடன் உனக்காக
    உன் கை நீளும் அன்றொரு நாள் எனக்காகஎனும்
    நம்பிக்கையில் நாளை நகர்த்துகிறேன்இந்த
    நம்பிக்கை நான் மட்டும் கூறவில்லைஇது
    நான்மறை தீர்ப்பும் கூட…!
     

    ***

    ’மகன்கள் தம்மை மதியாது செய்யும் தவறுகளைப் பேரப்பிள்ளைகளாலேயே மறக்கின்றனர் முதியோர்’ என்ற வாழ்க்கை நடைமுறையை எளிமையாய்ச் சொல்லும் கவிதையைத் தந்திருக்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

     தந்தையின்  தந்தையானவரே  தாத்தா ஆவார்
     பேரனின் செயல் கண்டு பெருமையடைவார்
     பேரனை அழைத்துக்கொண்டு பூங்கா செல்கிறார்,
    அங்கே பல விளையாட்டுக்களைக் காண்பிக்கின்றார்

    பேரனிடம் தனது முதுமையை இளமையாக்குகின்றார்
    தவறி விழுந்திடுவானோ என்று கைகாட்டி நிறுத்துகின்றார்
    உன் தந்தை என் சொல் மதியாமல் போகின்றார்
     நீயாவது என் சொல்லைக் கேள் எனக் கைநீட்டுகின்றார்
    […]
    பிள்ளைகள் செய்யும் தவறுகளைப் பேரனால் மறக்கின்றார்
    தன் வம்சாவளியினைத் தாங்கிச் செல்பவன் என நினைக்கின்றார்!
    முதுமையில் பிள்ளையைவிடப் பேரனிடத்தில் அன்பு அதிகம்
     பிள்ளைகள் வெறுத்தாலும், பேரனைப் போற்றும் தாத்தாக்களே அதிகம் 

    ***

    ”பழுத்த இலைகளாகிவிட்ட முதிய பெற்றோரிடம், பச்சை இலைகளான பிள்ளைகள் பாசம்காட்ட யோசிக்கும்போது, தளிர்க்கரம் நீட்டி அம்முதியோர் மனத்தில் பாசத்தைத் துளிர்க்கச் செய்பவர்கள் பேரக் குழந்தைகளே” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பச்சை இலைகள் பார்க்காத
    பழுத்த இலைகள் பாசத்துடன்
    இச்சை கொண்டே ஏக்கத்தொடு
    இளைய தளிரைப் பார்த்திருக்கும்,
    நிச்சய மில்லாப் புவிவாழ்வில்
    நினைக்க மறந்த பிள்ளைக்குத்
    துச்ச மான தந்தையுமே
    தொடர்வார் பாசம் பேரனிடமே…!

     ***

    பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட பெற்றோரின் வலி இக்கவிதைகளில் ஆழமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதைக் காண்கிறேன். 

    இனி, இந்த வாரத்தின் பாராட்டுக்குரிய கவிதை நம் பார்வைக்கு… 

    தொடரும் இனிய தலைமுறை
    பெயர் சொல்லும் பெயரன்(பேரன்)
    நம் பெயரை வைத்துக்கொள்ளும் பெயரன்
    பெருமை பேசும் பேத்தி
    கூடிவாழும் குலத்தின் குலக்குறியீடு
    மகனுக்கு நடைபயில்வித்த கால்களுக்கு
    நடை தளர்ந்த வயதில்
    நடைவண்டிகளாய்ப் பேரன்கள்
    ஓடியாடும் சிறுபிள்ளையின் பேச்சு
    ஒடிந்த மனதிற்கு ஒத்தடம் போடும்
    […]
    தலையெடுக்கும் தலைமுறையினரைத்
    தடத்தில் அழைத்துச்செல்லும் கரங்களாக
    ஆச்சிதாத்தாஅய்யாஅப்பத்தாஆயா
    பாட்டிபாட்டையா…. மாமை
    விரல் பிடித்து வழிகாட்டும் பருவம் முதிர்ந்தபின்
    தாவி ஓடும் இளையதலைமுறையைத்
    தன் பாசவேர்களால் கட்டிப்போடுவார்
    கைநீட்டிக் கதைபேசும் மழலைகளை
    கைகாட்டி வழிநடத்துவார்
    ஒவ்வொரு வீட்டிலும் வாழும் குலதெய்வங்கள்
    நம் பெற்றோரும்
    பெற்றோரின் பெற்றோரும்
    ஆலமரங்களாய் முன்னைய தலைமுறையினர்
    ஆதாரமாய் நம்மைக் காப்பர்.

    ”தாவி ஓடும் இளைய தலைமுறையைத் தம் பாசவேர்களால் வீழாது காப்போர் பெற்றோரும், பாட்டன்மார்களும், அவர்களையொத்த பிற உறவுகளுமே! கைநீட்டிக் கதைபேசும் மழலைகளைக் கைகாட்டி வழிநடத்தும் வித்தகர்கள் அவர்கள்” என்று முதுமையைப் போற்றும் புதுமைக் கவிதையிது! இதனை இயற்றியிருக்கும் முனைவர். மா. பத்மபிரியாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுசெய்கிறேன். பாராட்டுக்கள்!

     

     

    Share
  • பிள்ளையார் பெருமை

    சுலோசனா

    images (5)
    பிள்ளையார் வழிபாடு என்பது பாரதம் முழுவதுமே பரவியுள்ள மிகப் பழமையான வழிபாடும் மிகப்பிரசித்தமானதும் ஆகும்.. படித்த பண்டிதர் முதல் பாமரன் வரையிலும் பிள்ளையார் வழிபாடு என்பது பொதுவானதாகவே இருக்கின்றது.

    செல்வச் சீமான்களுடைய அபிஷேக ஆராதனைகள் அஷ்டோத்திரம் சகஸ்ரநாம அர்ச்சனைகள் அனைத்தையும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளும் விநாயகப் பெருமான் அதே மகிழ்வுடன் ஏழை விவசாயிகள் களத்து மேட்டில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்துவைத்து அருகம்புல்லை வைத்துவிட்டு தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணமும் போட்டுவிட்டு பிள்ளையாரப்பனே சரியான சமயத்தில் மழை பெய்ய வேண்டும், பயிர் பச்சைகள் செழிப்பாக வளரவேண்டும் பிளளைக் குட்டிகள் நன்றாக இருக்கவேண்டும் என்ற எளிமையான போற்றுதலையும் வேண்டுகோளையும் ஏற்று வரமளிக்கின்றார்.எந்த விஷயத்திலும் தொழிலோ எதுவாக இருப்பினும் முதல் பூஜை விநாயகருக்கே. அதுமட்டுமின்றி ஆற்றங்கரையிலும் அரச மரத்தடியிலும் வீற்றிருக்கும் பிள்ளையார் எந்த வேளையிலும் வழிபாடு செய்வோர்க்கு வசதியாக தரிசனம் தந்து அவர்களின் வினைகள் யாவும் தீர்க்கின்றார். வழிப்போக்கர்களுக்கு வசதியாக திறந்தவெளிக் கோவில்கள், இப்படி அனைவருக்கும் நெருக்கமாக இருக்கும் விநாயகப் பெருமானின் அவதாரத்தைப் பற்றி பார்ப்போம்.

    கஜமுகாசுரன் எனும் யானை முகம் கொண்ட அசுரனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு விநாயகர் அவதாரம் நிகழ்ந்தது. அதன் பலனாகத் தோன்றியவர் கஜமுகக் கடவுளான பிள்ளையார் ஆவார் என்பர். இரண்டொரு புராணக் கதைகளும் உருவாகி உள்ளன. அறிவிற்கு ஏற்றதாக சிந்தனைக்கு உகந்ததாக ஒரு சிந்தனை நம்முன் வைக்கப்படுகிறது. சிவத்தின் தவ நோக்கும் அம்பாளின் சக்தி நோக்கும் ஒரே நேர் கோட்டில் இணைய, இருவரின் அருட்கொடையாக ஓம்காரமாகிய பிரணவப் பொருள் உதயமாகி ஒளிவீசியது. அதுவே விநாயகரின் ஒலி வடிவம். ஓங்காரத்தின் உட்பொருளே விநாயக ஸ்வய சொரூபம். விநாயகப் பெருமானின் செவி நுனியில் துவங்கி சுழித்து வந்து துதிக்கை வரையில் வந்தால் ஓம் என்ற பிரணவ வடிவினைக் காணலாம்.பொதுவாக இந்து சமய புராணங்களின் உள்ளே உயரிய தத்துவங்கள் பொதிந்துள்ளன. அதனைக் காண இயலாமல் தடுக்கும் சிந்தனைச் சோம்பேறிகளின் முன்னால் எந்தத் தத்துவம்தான் முன் வந்து நிற்கும்.?

    அரியதானதும் மங்கா ஒளிபொருந்தியதான தங்கம்,வைரம் பவளம் மாணிக்கம் போன்றவைகள் சாலையில் கிடப்பதில்லை.சிரமப்பட்டு தேடித்தான் அடைய வேண்டி இருக்கிறது. இந்து சமயத்தின் உயரிய தத்துவங்களும் அவ்வாறே எங்கோ மலைக்குகைக்குள் மறைந்து வாழும். தீவிர ஞானம் அடைய வேண்டி விருப்பம் உள்ளவர்கள் தேடித்தான் அடைய வேண்டியிருக்கிறது. இந்து சமயத்தின் உயரிய தத்துவங்களும் அவ்வாறே. தத்துவ ஞானிகளும் அவ்வாறே எங்கோ மலைக்குகைக்குள் மறைந்து வாழ்வர். தீவிர ஞானம் வேண்டிவிருப்பம் உள்ளவர்கள் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். அந்த முயற்சி இல்லாதவர்கள் தங்க சிம்மானத்தில் அமர்ந்து தங்கத்திலான முடிசூடிக்கொள்ளும் மடாதிபதிகள் முன் மண்டியிடவேண்டியதுதான். அதுபோல் இந்து சமயத்தில் மூர்த்தங்களின் வடிவில் பொருள் உள்ளது.

    எந்த மந்திரத்தின் முன்பும் ஓம் எனும் பிரணவம் உச்சரிக்கப்படுகிறது. அதன் காரணத்தினாலேயே எந்த செயலுக்கும் முன்னால் விநாயகர் வழிபாடு கணபதி ஹோமம் என்றெல்லாம் வழக்கத்தில் உள்ளது. பிரணவ மந்திர ஸ்வரூபமே பிள்ளையார் வடிவம். திருமூலத்தேவரும் தன் திருமந்திரப்பாடலில்,

    ஐந்து கரத்தினை, ஆனை முகத்தினை
    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
    நந்தி மகந்தனை ஞானக்கொழுந்தினை
    புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேன்
    என்று விநாயகப் பெருமானை வணங்கிப் போற்றுகின்றார்.

    அதே போன்று ஞானப்பெண்மணியான ஔவைப் பிராட்டியாரும் சிறுபிராயம் முதலே விநாயகப் பெருமானைத் தன்னுடைய வழிபாட்டுத் தெய்வமாகக் கொண்டிருந்தார். கன்னிப் பருவத்திலேயே பிள்ளையாரை வேண்டி அன்னை உருவம் பெற்றவர்.தேசமெங்கும் திரிந்து மக்களுக்காக அறம் புகட்டும் நீதிநூல்களைப் பாடியவர். அதே ஔவைத்தாய் உருவ வழிப்பாடுகளைக் கடந்து மேல் நிலைகளை எல்லாம் தம்முடைய விநாயகர் அகவல் என்ற பாடலில் வித்தக விநாயக விரைகழல் சரணே எனப் பாடியுள்ளார்.

    அதுமட்டுமின்றி நாயன்மார்களின் ஒருவரான சுந்தரர் வெள்ளையானையின் மீது திருக்கயிலாயம் எழுந்தருள அதை அறிந்த அவர் தோழரான சேரமான் பெருமாளும் தம்முடைய குதிரையின் செவியில் சிவ மந்திரத்தை ஓதி குதிரையானது வெள்ளையானைக்குச் சமமாக வானில் பறந்தது. இந்த தெய்வீக சம்பவங்களை அறிந்த ஒளவைத் தாயார் தாமும் தாமும் திருக்கயிலாயம் செல்ல விரும்பினார். தம் பக்தையின் ஆவலை அறிந்த விநாயகப் பெருமான் அவர்கள் இருவருக்கும் முன்பே திருக்கயிலாயத்தில் சேர்த்து அருளினார். அருணை முனிவரான அருணகிரிநாதர் தம்முடைய பக்திப் பாமாலையில், திருப்புகழ் பாடல்களில் விநாயகப் பெருமானின் பெருமையைப் பல பாடல்களில் எடுத்துரைக்கின்றார்.பிள்ளையார் வணக்கமான,

    ‘கைதலநிறைக்கனி’ எனும் பாடல், ‘கற்றிடுன் அடியவர் புத்தியில் உறைபவர்’ என்று இருநோய் மலத்தை சிவ ஒளியில் மிரட்டி என்னும் திருப்புகழில் தம் அடியார்களின் பிறவிப் பிணியை எவ்வாறு அறுக்கின்றார் என்றும் விநாயகப் பெருமானின் பருத்த வயிற்றை ஞானத்தொப்பை என்று கூறுகின்றார். ஓங்காரவடிவமானது பிள்ளையார் வடிவம் என்றால் அவரது பருத்த வயிறு ஞானத்தால் நிரம்பியதாகத்தானே இருக்க முடியும். இதோ அந்த அடிகள்:

    கருநோய் அருத்தெனது மிடிதூள் படுத்திவிடு
    கரிமாமுகக் கடவுள் அடியார்கள்
    கருதா வகைக்கு வரம் அருள் ஞானத் தொப்பை மகிழ்
    கருணா கடப்ப மலர் அணிவோனே

    சிவபெருமானின் ஞானக்கண்ணான நெற்றிக்கண்ணில் உதித்த குமரன் ஞானமயம் என்பார்கள். அதே போன்ற சக்தியின் நோக்கில் இருந்து உதித்த விநாயகப் பெருமானும் ஞானமூர்த்தியே. இந்த ஞானச் சகோதரர்கள் இருவரும், சிவசக்தி வேறல்ல, அவர்கள் படைப்பான உலகம் வேறல்ல எனும் அறிவை நமக்குப் புகட்டவே ஒருவர் சிவசக்தியை வலம் வந்தும் ஒருவர் இவ்வுலகை வலம் வந்தும் நிரூபணம் செய்கின்றனர்.

    விநாயகப் பெருமான் குறித்து இருக்கும் விரதங்கள் ஆவணி மாதம் வரும் அமாவாசைக்குப் பிறகு வரும் நான்காம் நாளான சதுர்த்தி அன்று விநாயகச் சதுர்த்தி எனும் விரதம். இன்னொன்று பௌர்ணமிக்குப் பிறகு வரும் நாளான சதுர்த்தி அன்று சங்கடஹர சதுர்த்தி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. அன்று விரதம் இருந்து சந்திரோதயத்திற்குப் பிறகு சந்திரனை சரிசனம் செய்கின்றனர். தமிழகத்தில் விநாயகர் தனியாகவும் வடநாட்டில் சித்தி புத்தி என இரு தேவிகளும் வணங்கப்படுகின்றனர்.விநாயகச் சதுர்த்தி அன்று ஓங்கார ரூபமான விநாயகரைப் பூஜித்து ஞானம் அடைவோம். நம்முடைய அறிவாக உறைபவர் விநாயகப் பெருமான் எனும் பொருளில்,

    ’முத்தமிழை வினை முற்படு கிரிதனில்
    முற்பட எழுதிய முதல்வோனே’

    என்று வியாச முனிவர் மஹாபாரதம் சொல்லச் சொல்ல எழுதுகோலாகத் தம்முடைய ஒரு பக்கத்து தந்தத்தையே உபயோகித்து அவர் சொன்ன வேகத்துக்கே எழுதினார் என்றும், வள்ளி நாச்சியாரை குமரனின் வேண்டுக்கோளுக்கிணங்க அக்கணமே மணம் முடிக்க உதவி செய்கின்றார், என்பதை

    அத்துயரது கொடு சுப்பிரமணி படும்
    அப்புனம் அதனிடை இபமாகி
    அக்குறமகளுடன் அச் சிறு முருகனை
    அக்கனம் மனம் அருள் பெருமானே

    என்று முருகனுடன் வள்ளிக்கு மணமுடித்து வைத்த வைபவத்தையும் பாடுகின்றார்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ’’ஒரு பாகவத டயரிக் குறிப்பு’’….!
    —————————————————————
    ”தயிர்மோர் திருட்டை, டயரி எழுதும்
    தயிரியக்(தைரியக்) கள்ளன் தாமு, -DIARY MILK(ஆவின் பால்)
    கண்ணனைக் கட்டியது கண்ணிநுண் தாம்பல்ல,
    முன்னை(பழைய ராமாயண) அனுமன் முடிச்சு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”RAJAGOPALA”….!
    ———————————-

    crazy

    ”வில்டாப் விஜயனுக்கு வீரம் விளைவித்து
    ஃபுல்ஸ்டாப் நூறுக்குப் போட்டவன் -அல்டாப்பாய்
    கண்ணார்வம் கொண்டிங்கு கோதைக்காய் காத்திருக்கான்
    மன்னார் குடிமைனர் மால்’’….கிரேசி மோகன்

    Share