-முனைவர்  சி.சேதுராமன்

தமிழகத்தில் உள்ள ஒவ்வோர் ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடிக் கிராமமாக விளங்கும் எனது ஊரான மேலைச்சிவபுரிக்கும் தனித்ததொரு சிறப்பு உண்டு. ஆம், இங்குதான் தமிழன்னையின் உயர்விற்கு அயராதுபாடுபட்ட தமிழ்ப்பெருந்தகை மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் பிறந்தார். அவரால் மேலைச்சிவபுரி தமிழக வரலாற்றிலும் தமிழிலக்கிய வரலாற்றிலும் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றது. கதர்ச்சட்டை, கதர்வேட்டி கதர்த்துண்டு, கையில் குடை,  காலில் சாதாரண நடையன், நெற்றியில் திருநீறு இத்தகைய எளிமையான தோற்றத்துடன் தீட்சண்யமான கூர்ந்த பார்வையுடன் கம்பீரமாகத் திகழ்ந்தவர்தான் மூதறிஞர் வ.சுப.மா.

manikkanar1987-ஆம் ஆண்டு நான் கணேசர்  செந்தமிழ்க் கல்லூரியில் பி.லிட்., முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். எனது வீட்டிற்குச் செல்லும் வழியிலேயே மூதறிஞரின் வீடு. அப்போது நான் கல்லூரிக்குப் போகும் போதெல்லாம் அவரும்என்னுடனேயே நடந்து வருவார். அவர் எங்கள் ஊர் என்பது தெரியும். அவரின் சிறப்புகளைப் பற்றி அறியாத பருவம்.

நாள்தோறும் அவர் கல்லூரியில் உள்ள சன்மார்க்க சபைக்கு வருவார். அவ்வாறு வரும்போது ஒரு நாள் எங்களுக்கு முதலாம் ஆண்டில் நம்பியகப்பொருள் இலக்கணத்தை பேராசிரியர் தா. மணி ஐயா அவர்கள் நடத்திக் கொண்டிருந்தார். நாங்கள் அனைவரும் பாடத்தைக் கவனித்துக் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் என்னுடன் நடந்துவரும் பெரியவர் திடீரென வகுப்பறைக்குள் நுழைந்தார். எனது ஆசிரியர் மணி ஐயா அவரைக் கண்டவுடன் பணிவாக வணக்கம் ஐயா என்று மரியாதையுடன் கூறிவிட்டுத் தான் எடுக்கும் பாடம் குறித்து அவரிடம் கூறினார்.

கருப்பொருள் குறித்த பாடம்தான் பேராசிரியர் மணி ஐயா  நடத்திக்கொண்டிருந்தார். அதனைக் கேட்ட மூதறிஞர் பாலை நிலத்திற்குரிய கருப்பொருள் குறித்த நூற்பாவைச் சிறிதுநேரம் எடுத்துரைத்து அதற்கு விளக்கம் கூறிவிட்டு அதிலிருந்து வினாக்களைக் கேட்டார். அவர்கேட்ட வினாக்களுக்கு விடைகளை எங்கள் வகுப்பிலிருந்தோர் கூறினோம். அப்போது மூதறிஞர் நூற்பாவைக் கூறுமாறு வினவ, நானும் என் நண்பர்கள் சிலரும் தெரிந்தவரை கூறினோம். அதனைக் கேட்டபின்னர் மூதறிஞர் எங்களைப் பாராட்டிவிட்டு வகுப்பறையை விட்டுச்சென்றுவிட்டார். அவர் சென்றபின்னர் அவர் யார் என்று எங்கள் பேராசிரியரிடம்கேட்டோம். அதற்கு அவர் ‘‘இவர்தான் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் என்ற தமிழறிஞர்’’ என்று எங்களுக்குக் கூறினார்.

அதன்பின்னர் சன்மார்க்கச் சபைக் கட்டிடத்தில் மூதறிஞர் எங்களுக்குச் சிறப்பானதோர் உரையை வழங்கினார். அவரது உரையைக் கேட்ட எனக்கு அவர் மீதுபற்றுதல் ஏற்பட்டது. பலமுறை மூதறிஞர் உரையைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதனை எனது வாழ்நாளில் கிட்டிய பேறாகக் கருதுகிறேன். அவர் எழுதிய நூல்களைப்பற்றித் தெரிந்துகொண்டு அவற்றை எடுத்துப் படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

ஆனால் எனக்கு நூல்கள் கிட்டவில்லை. எனது ஆவல் நான் பி.லிட் மூன்றாம் ஆண்டு பயின்று கொண்டிருந்தபோதுதான் நிறைவேறியது. ஆம் மூதறிஞர் எழுதிய ‘‘தமிழ்க்காதல்’’ என்ற நூலைக் கற்கின்ற வாய்ப்பு அப்போது எனக்குக் கிட்டியது. என்னுடைய ஆசிரியப் பெருந்தகை சதாசிவம் அவர்கள் தன்னிடமிருந்த அந்நூலை எனக்குக் கொடுத்துப் படிக்குமாறு தந்தார். அந்நூலைப் படிக்கப் படிக்க என்னுள் மூதறிஞரைப்பற்றிய எண்ணம் மேலோங்கி எழுந்தது. அவரது மேதைமைத் தன்மை என்னுள் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தியது. இவ்வளவு பெரிய அறிஞரின் வீட்டருகில் வாழ்ந்துகொண்டு அவரைப் பற்றி ஒன்றும் அறியாமல் இருந்துவிட்டோமே என்று வருத்தப்பட்டேன்.

எங்கள் ஊர்ப் பெரியவர்களிடம் அவரைப் பற்றி கேட்டபோது அவர்கள்அவரைப் பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகளைக் கூறினார்கள். எங்கள் ஊரில் வாழ்ந்துமறைந்த சுதந்திரப் போராட்ட தியாகி சுவாமிநாதன் செட்டியார் அவர்களும் மறைந்த எனது பேராசிரியர் பழ. சிதம்பரம் ஐயா அவர்களும் மூதறிஞரைப் பற்றி பல செய்திகளைக் கூறினர்.

இளம் வயதில் தாய்தந்தையை இழந்து பர்மாவில் உள்ள வட்டிக்கடைக்குப் பெட்டியடிப் பையனாகச் சேர்ந்து அக்கடையின் முதலாளி யாராவது வந்து கேட்டால் தான் இல்லையென்று கூறுமாறு பொய் சொல்லச் சொன்னபோது மூதறிஞர்  மறுத்து விட்டதாகவும், அதனால் கோபமுற்ற முதலாளி அவரை மீண்டும் ஊருக்கேஅனுப்பிவிட்டதாகவும் கூறி எந்தச் சூழலிலும் பொய்சொல்லாமல் வாழ்ந்த அவரதுநேர்மையை எங்கள் ஊர்ப் பெரியவர்களின் வாயிலாக அறிந்தபோது என்னுள் அவர் இமயமலைபோல் உயர்ந்து நின்றார்.

மூதறிஞரை வீட்டிலேயே சந்தித்து அவரோடு உரையாட வேண்டும் என்று என்னுள் விருப்பம் எழுந்தது. அந்த நாளுக்காக நான் காத்துக்கொண்டிருந்தேன் என்பதை விடத் தவம் கிடந்தேன் என்று சொல்லலாம். பல பணிகளின் காரணமாக மூதறிஞர் பல ஊர்களுக்கும் சென்று கொண்டிருந்தார். மூதறிஞரை எவ்வாறேனும் தனித்துச் சந்தித்துவிட வேண்டும் என்ற எனது எண்ணம் மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருந்தது. பி.லிட். மூன்றாம் ஆண்டுத் தேர்வும் வர, தேர்வெழுதிக் கொண்டிருந்தோம்.

கடைசிநாள் தேர்வு நடந்த பொழுது ஓர் அதிர்ச்சியான தகவல் எங்களை வந்தடைந்தது. தேர்வறையில் கண்காணிப்புப் பணியில் இருந்த பேராசிரியர் அங்குவந்த மற்றொரு பேராசிரியரிடம் மூதறிஞர்  இறந்துவிட்டதாகத் தகவலைக் கூறினார்.  அதைக் கேட்ட எனக்குப் பேரதிர்ச்சி.  இது உண்மையானதா என்று அறிய என் மனம் பரபரத்தது. தேர்வினை முடித்தபின்னர் விரைந்து சென்று எனதுபேராசிரியரிடம் கேட்க அவர் கூறிய தகவல் என்னுள்ளத்தைப் பிளந்தது.

‘‘தண்டாமரையின் உடன் பிறந்து தண்டே நுகரா மண்டூகம்’’ போன்று இருந்துவிட்டோமே! என்று என்னுள்ளம் வேதனையில் துடித்தது. நானும் எனது வகுப்புத் தோழர்  பிரான்மலை கணபதி  அவர்களும் என்  ஊர்க்கார்கள் சிலருடன் மூதறிஞரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகக் காரைக்குடிக்குச் சென்றோம். யாரைப் பார்த்து உரையாட வேண்டும் என்று  எண்ணியிருந்தேனோஅங்கு அந்தப் பெருந்தகை இறைவனடி சேர்ந்திருந்தார்.

எனக்குச் சொல்லொணாத வேதனை ஏற்பட்டது. மூதறிஞர் அவர்களுக்கு மனமுருக எனது அஞ்சலியைச் செலுத்திவிட்டு அவரது  இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு எனது நண்பருடன் திரும்பினேன். எனது ஊரில் அனைவரும் அவரைக்குறித்த பல்வேறு தகவல்களைக் கூறி  அவரை  நினைவு கூர்ந்தனர்.

முன்பெல்லாம் தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளைஎழுதுவதற்கு விளம்பரம் வந்தால் அதில் கல்வித் தகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் பி.லிட்.,  நீங்கலாக என்று குறிப்பிடப்பட்டிருக்கும். தமிழ் படித்தால் அரசுத்தேர்வுகளை எழுத முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதை அறிந்த மூதறிஞர் தனது முயற்சியால் அதனைப் போக்கி பி.லிட். பட்டம் பயில்வோரும் தேர்வெழுதும் நிலையைக் கொண்டுவந்தார்.  இது பலரது வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொணர்ந்தது. எங்கள் கல்லூரியில் உள்ள சன்மார்க்க சபையில் நடைபெற்ற மூதறிஞரின் அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்ட எங்கள் ஊர்க்காரர்களும் பலஊர்களிலும் இருந்து வந்த தமிழறிஞர்களும் மூதறிஞரின் சாதனைகளை நினைவுகூர்ந்தனர்.  அப்போதுதான் அவரது பெருமைகள் பல தெரியவந்தன.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர் மூதறிஞர். அதோடு மட்டுமல்லாது மூதறிஞர்  எழுதிவைத்த உயிலில் தனதுசொத்தில் ஒரு பங்கினை எங்கள் ஊர்  ஏழை எளியவருக்கு உதவி செய்வதற்கு எழுதி வைத்துள்ளதை அறிந்து உள்ளம் நெகிழ்ந்தேன். கிடைப்பதை எல்லாம் சுருட்டிக்கொண்டு போகும் இன்றய உலகில் இத்தகைய மாமனிதர்  வாழ்ந்திருக்கின்றாரே என்று எண்ணி வியந்தேன். பண்டித ஜவகர்லால் நேரு இந்தியத் திருநாட்டிற்காகத் தாம்வசித்த வீட்டைக் கொடுத்ததைப் போன்று மூதறிஞர் தாம் நேர்மையாக உழைத்துச்சேர்த்த செல்வத்தைத் தாம் பிறந்த ஊருக்கென்று எழுதி வைத்தார்.

மூதறிஞரின் இத்தகைய செயல் காலம் உள்ளளவும் சிவபுரிக்காரர்களின் உள்ளத்தில் நின்று நிலைத்திருக்கும். அவர்  பெயரால் இன்றும் பல நலத்திட்டஉதவிகள் மூதறிஞரின் பிறந்த நாளில் அவரது குடும்பத்தாரால் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.  இந்த நூற்றாண்டு விழாவில் அவரது நினைவுகள் பலசுழன்று சுழன்று என்னுள் எழுந்த வண்ணமாகவே உள்ளன. அவர்  எங்களுக்கு ஒரு நூற்பாவைக் கூறி விளக்கமளித்த பாங்கு இன்றும் மறக்க முடியாத நிகழ்வாகவேஉள்ளது.

மூதறிஞரிடம் பாடம் கேட்ட அந்த ஒருசில மணித்துளிகள் வாழ்நாளில் மறக்கமுடியாதவையாகும்.  மூதறிஞர்  செம்மலார் பிறந்த ஊரில் நானும் பிறந்தேன் என்று கூறிக் கொள்வதில் பெருமையடைகிறேன். சிவபுரி பெற்றெடுத்த சிவநேயச் செல்வராக மூதறிஞர் விளங்கினார். கணேசர்  செந்தமிழ்க் கல்லூரியை வளர்த்தெடுத்து அதன் மூலம் என்னைப் போன்ற பலருக்கும் கல்விக் கண்ணைத்திறந்து வைத்த அந்த மாமேதையின் பெயரை மேலைச்சிவபுரி மட்டுமல்ல தமிழ்கூறும் நல்லுலகமும் என்றும் கூறிக் கொண்டே இருக்கும். அதில் தமிழ் மணம் கமழ்ந்து கொண்டிருக்கும்.

***

முனைவர்  சி.சேதுராமன்
தமிழாய்வுத்துறைத் தலைவர்
மாட்சி தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி) புதுக்கோட்டை.

மின்னஞ்சல்: malar.sethu@gmail.com

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *