க. பாலசுப்பிரமணியன்

மொழி கற்றலும் கண்ணாடி நியூரான்களும்

education

குழந்தை பிறந்து சில வாரங்களிலிருந்தே தாய் அந்தக் குழந்தையின் வளர்ச்சிப் பாதையின் முறைகளையும் வடிவங்களையும் நுணுக்கமாகவும் துல்லியமாகவும் கவனிக்கத் தொடங்குகின்றாள். இந்த கவனிப்பு குழந்தையின் பிற்காலக் கற்றலுக்கு மிக அவசியமானதாகக் கருதப்படுகின்றது. ஒரு குழந்தையின் கண்களின் விழிகள் எப்படிச் செல்கின்றன, அதன் பார்வைகள் எல்லாப் பக்கமும் செல்கின்றனவா என்றெல்லாம் கவனித்தல் அவசியம். மேலும் அருகில் இருந்து வரும் ஒளி அலைகளுக்கு அந்தக் குழந்தையின் மறுமொழிகள் (Responses) எவ்வாறு இருக்கின்றன என்றெல்லாம் கவனித்தல் அவசியம்.

மூளை ஆராய்ச்சியில் அறியப்பட்ட ஒரு முக்கிய தகவல் – மூளையில் உள்ள “கண்ணாடி நியூரான்களைப் (Mirror Neurons) பற்றியது தான். குழந்தைகளின் மொழி அறிதலிலும் ஆராய்ச்சியிலும் இவைகளின் பங்கு மகத்தானவை. “முகம் பார்த்துச் சிரித்தல் “போலவே “முகம் பார்த்துக் கற்றலும் ஒரு அற்புதமான செயல். குழந்தையைக் கைகளில் ஏந்திய தாய், குழந்தையின் முகம் பார்த்து “அம்மா’   அப்பா மாமா தாத்தா என்று சொல்லும் பொழுது அந்தத் தாயின் முக அசைவுகளும் ஒலி அலைகளும் ஒருங்கிணைந்து குழந்தையின்  மூளையில் உள்ள கண்ணாடி நியூரான்களை செயல்படுத்தி அந்த அசைவுகளையும் ஒலி அதிர்வுகளையும் பிரதிபலிக்கச் செய்வதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆகவே மொழி கற்றலில் தாய் தந்தை மற்றும் ஆசிரியர்களின் நேரடி உறவுகளும்” (individual relationships) உயிரோட்டங்களும்(live interactions)அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன..

மொழி பேசும் திறன்கள், உச்சரிப்புக்கள், சொல்லாண்மை போன்ற பல வல்லமைகளை வளர்ப்பதிலும் பேணுவதிலும் இந்தக் கண்ணாடி நியூரான்களின் பங்கு முக்கியமானதாகக் கருதப்படுகின்ற்து. இதன் காரணமாகத்தான் பல மாநிலங்களில் மொழிகள் பேசும் வடிவங்கள் அந்த நிலத்தின் சமூகப் பண்பாக வெளிப்படுகின்றது. இந்தக் கண்ணாடி நியூரான்கள் ஒரு சமூகத்தின் பொதுவான பண்புகளையும் கலாச்சாரங்களையும் வளர்ப்பதில் பொறுப்பேற்கின்றன என்று “சமூக நுண்ணறிவு “(social Intelligence)  பற்றிய தன்  ஆராய்ச்சியின் அடிப்படையில் முனைவர் டேனியல் கோல்மான் ( Daniel Goleman)  கூறுகின்றார்

தாயிடமிருந்து மொழியைக் கற்றுக்கொள்ளும் குழந்தைகள் பொதுவாக “மாமா, தாத்தா. பாப்பா” போன்ற வார்த்தைகளை எளிதாகவும் துரிதமாகவும் கற்றுக்கொள்ளுவது மட்டுமின்றி அந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் திருப்பிச் சொல்ல முயற்சிப்பதைக் காணலாம். இந்த மொழி கற்றல் பற்றிய ஆராய்ச்சியில் பல மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள நாடுகளிலுள்ள குழந்தைகளிடம் ஆராய்ச்சி செய்த மூளை நரம்பியல் விஞ்ஞானி மெர்ஸினிச் (Merzenich )  என்பவர் பொதுவாக மெய்யெழுத்தும் உயிரெழுத்தும் சேர்ந்த சொற்களை எளிதாகவும் விருப்பத்துடனும் கற்பது மட்டுமின்றி அவைகள் திருப்பிச் சொல்லப் பழகுவதில் இந்தக் கண்ணாடி நியூரான்களின் பங்கினை சிறப்பித்துக் கூறியிருக்கின்றார்.

அது மட்டுமல்ல.. எந்தக் குழந்தைகளுக்கு சிறு வயதில் தாய் தந்தையாரின் நேர்பார்வையிலோ அல்லது குடும்பத்தினரின் நேர்பார்வையிலோ மொழி கற்றுக்கொள்ள குறைந்த நேரமோ அல்லது வாய்ப்போ கிடைக்கின்றதோ அந்தக் குழந்தைகளின் மொழித் திறன்கள் மற்ற குழந்தைகளின் மொழித் திறன்களை விட சற்றே குறைவாக இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. இதன் பொருள் அவர்களுக்கு அந்த மொழித் திறன் மற்றும் வல்லமை பின்பு வாராது என்பதல்ல. அதன் வளர்ச்சிக்கு அதிக முயற்சிகள் தேவைப் படும் என்பதுவே.

மேலும் “கண்களைப் பார்த்துப்” பேசுதல் குழந்தையின் மன இருக்கங்களைத் தளர்த்துவதற்குப் பேருதவியாக இருக்கின்றது. “மன இறுக்கத்தால் “( Autism ) பாதிக்கப்பட்ட பல குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் போது இந்தக் குழந்தைகளின் மூளையில் கண்ணடி நியூரான்களின் செயல்பாடுகள் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.. அவர்களுடைய, மற்றவர்களோடு “கண்பார்த்துப் ” பேசும் திறனும் ஆர்வமும் அதிக அளவில் பாதிக்கப் பட்டதாகவும் அறியப்படுகின்றது.

கண்களுக்கு கிடைக்கும் ஒளி அலைகளும் காதுகளில் விழுகின்ற ஒலி  அதிர்வுகளும் எவ்வாறு இணைந்து செயல்பட்டு மூளையில்  கருத்தோவியங்களை உருவாக்குகின்றன என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

தொடரும் ..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *