நிர்மலா ராகவன்

உணவின்மூலம் அன்பா?

நலம்-1-2
`இன்னும் நிறையச் சாப்பிடுங்கள்!’ கல்யாண வீட்டில் பந்தி உபசாரம். நம் வயிறு கொள்ளும்வரை சாப்பிட்டிருப்போம். இருந்தாலும், உபசாரம் செய்வார்கள்.

எனக்குத் தெரிந்த ஓர் இசைக்கலைஞர் நான் ஒவ்வொரு ஆண்டு பார்க்கும்போதும் பல கிலோ எடை கூடியிருப்பார். முப்பத்தைந்து வயதுதான். அவர் மனைவி என்னிடம் முறையிட்டார்.

“என்ன, இப்படி குண்டாகிக்கொண்டே போகிறீர்களே! இனிப்பு வியாதி வந்துவைக்கப்போகிறது!” என்று கவலைப்பட்டேன்.

“என்ன செய்யறது, மாமி! அடிக்கடி கல்யாணக் கச்சேரி. அப்போதெல்லாம், ஒரேயடியாக உபசாரம் செய்து சாப்பிட வைக்கிறார்கள்!” என்றார், பரிதாபமாக.

இப்படிப் பிறர் நம்மை உபசாரம் செய்வது உபகாரமில்லை. உபத்திரவம்தான். மறுநாள் நம் வயிறு கெட்டால், அவர்களிடம் போய் சண்டை போட முடியுமா? ஏதாவது வியாதி வந்தாலும், `நான்தான் சொன்னேன் என்றால், உனக்கெங்கே போயிற்று புத்தி?’ என்று திருப்பிக் கேட்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சசயம்?

`ஏழைகள் என்றால் சோனியாக இருப்பார்கள். ஏனெனில் அவர்கள் சாப்பாட்டுக்குத் திண்டாடுபவர்கள். நமக்குத்தான் பணப்பிரச்னை இல்லையே!’ என்பதுபோன்ற எண்ணப்போக்குடன் தேவைக்கு அதிகமாகப் பலரும் சாப்பிடுகிறார்களோ? சற்று வசதியாக இருப்பவர்களைப் பார்த்தால் அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.
நான் மருத்துவரிடம் போகும்போதெல்லாம், `உங்களுக்கு என்ன வயது?’ என்று கேட்டுவிட்டு, `எடையைக் குறைக்கலாம்!’ என்று ஆலோசனை வழங்குவார்கள்.

என் அனுபவத்தில், நாற்பது வயதில் சாப்பிட்ட அளவு உணவையே நாற்பத்து ஐந்து வயதிலும் சாப்பிட்டாலும், கடினமான வேலை செய்யாவிட்டால் எடை அதிகரித்து விடுகிறது. (சமையல், வீட்டில் சிறிது வேலை செய்வது இதெல்லாம் கணக்கில்லை). இப்படியே ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளிலும் எடை கூடுவதால், சாப்பாட்டின் அளவைக் குறைத்தால்தான் எடை ஒரே சீராக இருக்கிறது.

`நான் உயிர் வாழ்வதே சாப்பிடுவதற்குத்தான். அப்படியாவது என்ன அழகு வேண்டிக் கிடக்கிறது?’ என்பவர்களுக்கு: எடை அதிகரித்தால் முழங்கால் வலி, மூச்சிரைப்பு, அசதி என்று என்னென்னவோ உபாதைகள்! கூடவே, சோம்பல் அல்லது சிடுசிடுப்பு மற்றும் விரக்தி வேறு. ஆனால், விருந்தையே மருந்தாக எண்ணி அளவோடு உண்டால், சுறுசுறுப்பாக உணரமுடியும். `இளமையாக இருக்கிறீர்கள்!’ என்று யாராவது பாராட்டினால், அது போனஸ்தான்.

கதை: சாருமதி கணவனிடம், `வேலை முடிந்து வரும்போது, இளநீர் வாங்கி வாருங்கள்!’ என்றாள்.

புது மனைவி ஆயிற்றே! கணவனோ, இரண்டு இளநீர் வாங்கி வந்தான். முலாம்பழம், மாதுளை என்று சாருமதி எது கேட்டாலும், இரண்டாக வாங்கி வந்தான். அவளும் உடனுக்குடனே சாப்பிட்டுத் தீர்த்தாள்.

விளைவு: அந்தக் கர்ப்பிணியின் உடல் வெகுவாகப் பருத்தது.

“இப்படி இவள் சாப்பிட்டால், பேறு காலம் விரைவாக வந்துவிடும். அப்புறம் வயிற்றைக் கீறித்தான் குழந்தையை எடுக்கவேண்டி வரும்,” என்று அந்த இளைஞனின் தாயிடம் எச்சரிக்கை செய்தேன்.

“அவளிடம் சொல்லி விடாதீர்கள்! பாவம், சின்னப்பெண்! என் மகனும் ஆசையாக வாங்கி வருகிறான்!” என்று பரிந்தாள்.

சில மாதங்கள் கழித்து முகம் சிறுக்க, “நீங்கள் சொன்னபடியேதான் ஆயிற்று!” என்று ஒத்துக்கொண்டாள்.

ஏழு மாதத்திலேயே சிஸேரியன் அறுவைச் சிகிச்சையால் குழந்தை பிறக்க, சாருமதியால் உடற்பயிற்சி எதுவும் செய்ய முடியவில்லை. வயிறு பருத்த நிலையிலேயே இருந்தது. அதற்காக அவள் கவலைப்படவுமில்லை.
கணவன் தன்மீது காட்டிய அன்பைத் திருப்பியளிக்க ஆரம்பித்தாள் சாருமதி. அவனுக்குப் பிடித்ததாக சமைத்து, `இன்னும் கொஞ்சம், ப்ளீஸ்!’ என்று உபசாரம் செய்ததில், இப்போது அவனுக்கு இனிப்பு நோய்.

The shortest way to a man’s heart is through his stomach (ஒரு மனிதனின் இதயத்தில் இடம் பிடிக்க மிகக் குறுகிய வழி வயிற்றின்மூலம்தான்) என்பது உண்மையோ, என்னவோ! சாப்பாட்டின் அளவுதான் அன்பின் அளவுகோல் என்பதுபோல் நடப்பது வேண்டாத விளைவுகளில் கொண்டுவிடும்.

ஒருவர்மீது நமக்கு அன்பு என்றால், அவருக்கு நிறைய உணவு அளிப்பதுதான் என்று தம்பதிகள் மட்டுமல்ல, தாய்மார்களும் எண்ணுகிறார்கள். அதுவும் ஒரே குழந்தையாக இருந்தால் போயிற்று!

ஒரே மகனது உடல் பருமனுக்குத் தான்தான் காரணம் என்று எந்தத் தாயும் ஒத்துக்கொள்ள விரும்புவதில்லை. `என் மகன் எப்பவும் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். ஏனோ ஓடியாடி விளையாட முடியவில்லை,’ என்று காலங்கடந்து மருத்துவர்களிடம் அழைத்துப்போய் குறை கூறி என்ன பயன்?

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *