தலை வணங்குகிறேன்! ( செப்டம்பர் 5 – ஆசிரியர் தினம்)

0

க. பாலசுப்பிரமணியன்

நாட்டின் முதுகெலும்புகளுக்கு உரம் போடும் இந்தத் தொழில் வல்லுனர்களுக்குத் தலை வணங்குகிறேன் !

“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் “என்ற பழமொழிக்குச் சான்றாக இன்றும் நாடெங்கும் தெய்வங்களின் பிரதிபலிப்பாக பல நல்ல உள்ளங்கள் உழைத்து வருகின்றன. அந்தச் சான்றோரை கைகூப்பி வணங்கும் நாள் இது!

“இறைவனும் எனது குருவும் முன் வந்து நின்றால் முதலில் நான் என்னுடைய குருவின் கால்களில் தான் விழுவேன்; அவர்தான் என்னை இறைவனுக்கு அறிமுகம் செய்தவர் ” என்று சொன்னார் கபீர்தாஸ்.

“ஒரு ஆசிரியரின் தாக்கம் நித்தியத்தின் மேல் விழுகின்றது. அது எந்த இடத்தில் முடியும் என்று யாராலும் சொல்ல முடியாது ” என்கிறார் மேலை நாட்டு தத்துவ அறிஞர் ஹென்றி ஆடம்ஸ்.

இதை உணர்ந்து செயல் படுதல் ஆசிரியர்களின் கடமை. அவர்களின் ஒவ்வொரு செயலும், வார்த்தைகளும், பழக்க வழக்கங்களும் ஒரு சமுதாயத்தின் அடித்தளங்களை மட்டுமல்ல, எதிர்காலத்தையும் பெரிதும் பாதிக்கின்றது.

மற்ற பல தொழில்களை போன்றதல்ல இது .. உண்மையில் சொல்லப்போனால் இது ஒரு தொழில் அல்ல.. இது ஒரு மிகப்  பெரிய சமுதாய சேவை.  ஒரு நல்ல ஆசிரியருக்கு பணம் என்றும் ஒரு பொருட்டாக இருந்ததே அல்ல. அவர் வாழ்க்கையில் கிடைக்கும் மன நிறைவுக்கு என்றும் சரியான ஈடு இருந்ததே கிடையாது. உணர்வு பூர்வமாக இதை பல நல்லாசிரியர்கள் அனுபவித்தும் வெளிப்படுத்தியும் உள்ளனர்.

காலப்போக்கில் சற்று மாற்றங்கள் நிச்சயமாக ஏற்பட்டுள்ளன . உலக அளவில் அறிவின் பரிமாணங்களிலும் பரிமாற்றங்களிலும் ஏற்பட்டுள்ள மாறுதல்களை சந்திப்பதில் உள்ள சிக்கல்களும் சோதனைகளும் இவர்களுக்கு பல இடர்பாடுகளை ஏற்படுத்தி உள்ளன. இவற்றை ஆக்கபூர்வமாக சந்தித்தல் மிக்க அவசியம். தற்போதைய சூழ்நிலையில் ஒரு நல்ல ஆசிரியர் நல்ல மாணவனாக இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது..வாழ்க்கை முழுதும் கற்றல் (Life Long Learninng) என்ற கோட்பாடுகளை மனதில் நிறுத்தி தங்கள்அறிவுவானத்தின் எல்லைகளை விரிவு படுத்திக்கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதை உணர்ந்து இந்த ஆக்கப்பூர்வமான செயலில் விருப்பத்துடனும் ஆர்வத்துடனும்  பங்கேற்றல் காலத்தின் கட்டாயம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் சமஸ்க்ரித மொழியில் ஆதி சங்கரர் இயற்றிய விவேக சூடாமணி என்ற நூலில் ஒரு குருவின் குணங்களை விளக்கும் வண்ணம், கீழ்கண்ட திறன்கள் அவர்களுக்குத் தேவையானவையாக சொல்லப்பட்டுள்ளது. இவை எல்லாக்காலங்களுக்கும் பொருந்தும்.

  1. அறிவை வளர்ப்பதில் ஆர்வம்
  2. அறிவில் பேராண்மை
  3. எரிந்து அமைந்த கனல் போன்ற முதிர்ச்சி
  4. கருணையில் கடலாக இருத்தல்
  5. நட்புடைமை

இன்றும் இந்தக் கருத்துக்கள் சாலப் பொருந்தும்!

ஒரு பொதுமேடையிலே ஒரு தொழில் வல்லுனர் உரையாற்றும் பொழுது “நான் செய்யும் தொழில்களில் எத்தனை சாதனைகள் செய்துள்ளேன். இந்த நண்பர் பெரிய மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். அந்த நபர் ஒரு நீதியரசராக இருக்கின்றார். அந்த மூலையிலே உட்கார்ந்திருக்கும் அன்பர் வியாபாரத்தில் வல்லுநராகி பல மில்லியன் டாலர்களைச் சம்பாதித்து   சமூக சேவையும் செய்து வருகின்றார். ஏன் ஆசிரியர்கள் மட்டும் வளர்வதே இல்லை?” என்று கேலியாகவும் தரக்குறைவாகவும் திமிராகவும் உரையாற்றினார். அந்தக் கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒரு வயதான மூதாட்டி சற்றே பேசுவதற்கு அனுமதி கேட்டு மேடையில் சென்று உரையாற்றினார்.

“இந்த மருத்துவரையும் நீதியரசரையும் வர்த்தக நிபுணரையும் இவ்வாறு எள்ளி நகையாடிய தொழில் வல்லுனரையும் இளம் வயதிலிருந்தே ஆர்வத்தில் உரமிட்டு ஒளி விளக்காக வழிகாட்டியதே ஆசியர்கள்.” என்று உரைக்க அந்த அரங்கமே எழுந்து நின்று கைதட்டி அந்த மூதாட்டிக்கு நன்றி செலுத்தியது..

தலை  வணங்குகின்றேன் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *