சுலோசனா

images (5)
பிள்ளையார் வழிபாடு என்பது பாரதம் முழுவதுமே பரவியுள்ள மிகப் பழமையான வழிபாடும் மிகப்பிரசித்தமானதும் ஆகும்.. படித்த பண்டிதர் முதல் பாமரன் வரையிலும் பிள்ளையார் வழிபாடு என்பது பொதுவானதாகவே இருக்கின்றது.

செல்வச் சீமான்களுடைய அபிஷேக ஆராதனைகள் அஷ்டோத்திரம் சகஸ்ரநாம அர்ச்சனைகள் அனைத்தையும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளும் விநாயகப் பெருமான் அதே மகிழ்வுடன் ஏழை விவசாயிகள் களத்து மேட்டில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்துவைத்து அருகம்புல்லை வைத்துவிட்டு தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணமும் போட்டுவிட்டு பிள்ளையாரப்பனே சரியான சமயத்தில் மழை பெய்ய வேண்டும், பயிர் பச்சைகள் செழிப்பாக வளரவேண்டும் பிளளைக் குட்டிகள் நன்றாக இருக்கவேண்டும் என்ற எளிமையான போற்றுதலையும் வேண்டுகோளையும் ஏற்று வரமளிக்கின்றார்.எந்த விஷயத்திலும் தொழிலோ எதுவாக இருப்பினும் முதல் பூஜை விநாயகருக்கே. அதுமட்டுமின்றி ஆற்றங்கரையிலும் அரச மரத்தடியிலும் வீற்றிருக்கும் பிள்ளையார் எந்த வேளையிலும் வழிபாடு செய்வோர்க்கு வசதியாக தரிசனம் தந்து அவர்களின் வினைகள் யாவும் தீர்க்கின்றார். வழிப்போக்கர்களுக்கு வசதியாக திறந்தவெளிக் கோவில்கள், இப்படி அனைவருக்கும் நெருக்கமாக இருக்கும் விநாயகப் பெருமானின் அவதாரத்தைப் பற்றி பார்ப்போம்.

கஜமுகாசுரன் எனும் யானை முகம் கொண்ட அசுரனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு விநாயகர் அவதாரம் நிகழ்ந்தது. அதன் பலனாகத் தோன்றியவர் கஜமுகக் கடவுளான பிள்ளையார் ஆவார் என்பர். இரண்டொரு புராணக் கதைகளும் உருவாகி உள்ளன. அறிவிற்கு ஏற்றதாக சிந்தனைக்கு உகந்ததாக ஒரு சிந்தனை நம்முன் வைக்கப்படுகிறது. சிவத்தின் தவ நோக்கும் அம்பாளின் சக்தி நோக்கும் ஒரே நேர் கோட்டில் இணைய, இருவரின் அருட்கொடையாக ஓம்காரமாகிய பிரணவப் பொருள் உதயமாகி ஒளிவீசியது. அதுவே விநாயகரின் ஒலி வடிவம். ஓங்காரத்தின் உட்பொருளே விநாயக ஸ்வய சொரூபம். விநாயகப் பெருமானின் செவி நுனியில் துவங்கி சுழித்து வந்து துதிக்கை வரையில் வந்தால் ஓம் என்ற பிரணவ வடிவினைக் காணலாம்.பொதுவாக இந்து சமய புராணங்களின் உள்ளே உயரிய தத்துவங்கள் பொதிந்துள்ளன. அதனைக் காண இயலாமல் தடுக்கும் சிந்தனைச் சோம்பேறிகளின் முன்னால் எந்தத் தத்துவம்தான் முன் வந்து நிற்கும்.?

அரியதானதும் மங்கா ஒளிபொருந்தியதான தங்கம்,வைரம் பவளம் மாணிக்கம் போன்றவைகள் சாலையில் கிடப்பதில்லை.சிரமப்பட்டு தேடித்தான் அடைய வேண்டி இருக்கிறது. இந்து சமயத்தின் உயரிய தத்துவங்களும் அவ்வாறே எங்கோ மலைக்குகைக்குள் மறைந்து வாழும். தீவிர ஞானம் அடைய வேண்டி விருப்பம் உள்ளவர்கள் தேடித்தான் அடைய வேண்டியிருக்கிறது. இந்து சமயத்தின் உயரிய தத்துவங்களும் அவ்வாறே. தத்துவ ஞானிகளும் அவ்வாறே எங்கோ மலைக்குகைக்குள் மறைந்து வாழ்வர். தீவிர ஞானம் வேண்டிவிருப்பம் உள்ளவர்கள் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். அந்த முயற்சி இல்லாதவர்கள் தங்க சிம்மானத்தில் அமர்ந்து தங்கத்திலான முடிசூடிக்கொள்ளும் மடாதிபதிகள் முன் மண்டியிடவேண்டியதுதான். அதுபோல் இந்து சமயத்தில் மூர்த்தங்களின் வடிவில் பொருள் உள்ளது.

எந்த மந்திரத்தின் முன்பும் ஓம் எனும் பிரணவம் உச்சரிக்கப்படுகிறது. அதன் காரணத்தினாலேயே எந்த செயலுக்கும் முன்னால் விநாயகர் வழிபாடு கணபதி ஹோமம் என்றெல்லாம் வழக்கத்தில் உள்ளது. பிரணவ மந்திர ஸ்வரூபமே பிள்ளையார் வடிவம். திருமூலத்தேவரும் தன் திருமந்திரப்பாடலில்,

ஐந்து கரத்தினை, ஆனை முகத்தினை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகந்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேன்
என்று விநாயகப் பெருமானை வணங்கிப் போற்றுகின்றார்.

அதே போன்று ஞானப்பெண்மணியான ஔவைப் பிராட்டியாரும் சிறுபிராயம் முதலே விநாயகப் பெருமானைத் தன்னுடைய வழிபாட்டுத் தெய்வமாகக் கொண்டிருந்தார். கன்னிப் பருவத்திலேயே பிள்ளையாரை வேண்டி அன்னை உருவம் பெற்றவர்.தேசமெங்கும் திரிந்து மக்களுக்காக அறம் புகட்டும் நீதிநூல்களைப் பாடியவர். அதே ஔவைத்தாய் உருவ வழிப்பாடுகளைக் கடந்து மேல் நிலைகளை எல்லாம் தம்முடைய விநாயகர் அகவல் என்ற பாடலில் வித்தக விநாயக விரைகழல் சரணே எனப் பாடியுள்ளார்.

அதுமட்டுமின்றி நாயன்மார்களின் ஒருவரான சுந்தரர் வெள்ளையானையின் மீது திருக்கயிலாயம் எழுந்தருள அதை அறிந்த அவர் தோழரான சேரமான் பெருமாளும் தம்முடைய குதிரையின் செவியில் சிவ மந்திரத்தை ஓதி குதிரையானது வெள்ளையானைக்குச் சமமாக வானில் பறந்தது. இந்த தெய்வீக சம்பவங்களை அறிந்த ஒளவைத் தாயார் தாமும் தாமும் திருக்கயிலாயம் செல்ல விரும்பினார். தம் பக்தையின் ஆவலை அறிந்த விநாயகப் பெருமான் அவர்கள் இருவருக்கும் முன்பே திருக்கயிலாயத்தில் சேர்த்து அருளினார். அருணை முனிவரான அருணகிரிநாதர் தம்முடைய பக்திப் பாமாலையில், திருப்புகழ் பாடல்களில் விநாயகப் பெருமானின் பெருமையைப் பல பாடல்களில் எடுத்துரைக்கின்றார்.பிள்ளையார் வணக்கமான,

‘கைதலநிறைக்கனி’ எனும் பாடல், ‘கற்றிடுன் அடியவர் புத்தியில் உறைபவர்’ என்று இருநோய் மலத்தை சிவ ஒளியில் மிரட்டி என்னும் திருப்புகழில் தம் அடியார்களின் பிறவிப் பிணியை எவ்வாறு அறுக்கின்றார் என்றும் விநாயகப் பெருமானின் பருத்த வயிற்றை ஞானத்தொப்பை என்று கூறுகின்றார். ஓங்காரவடிவமானது பிள்ளையார் வடிவம் என்றால் அவரது பருத்த வயிறு ஞானத்தால் நிரம்பியதாகத்தானே இருக்க முடியும். இதோ அந்த அடிகள்:

கருநோய் அருத்தெனது மிடிதூள் படுத்திவிடு
கரிமாமுகக் கடவுள் அடியார்கள்
கருதா வகைக்கு வரம் அருள் ஞானத் தொப்பை மகிழ்
கருணா கடப்ப மலர் அணிவோனே

சிவபெருமானின் ஞானக்கண்ணான நெற்றிக்கண்ணில் உதித்த குமரன் ஞானமயம் என்பார்கள். அதே போன்ற சக்தியின் நோக்கில் இருந்து உதித்த விநாயகப் பெருமானும் ஞானமூர்த்தியே. இந்த ஞானச் சகோதரர்கள் இருவரும், சிவசக்தி வேறல்ல, அவர்கள் படைப்பான உலகம் வேறல்ல எனும் அறிவை நமக்குப் புகட்டவே ஒருவர் சிவசக்தியை வலம் வந்தும் ஒருவர் இவ்வுலகை வலம் வந்தும் நிரூபணம் செய்கின்றனர்.

விநாயகப் பெருமான் குறித்து இருக்கும் விரதங்கள் ஆவணி மாதம் வரும் அமாவாசைக்குப் பிறகு வரும் நான்காம் நாளான சதுர்த்தி அன்று விநாயகச் சதுர்த்தி எனும் விரதம். இன்னொன்று பௌர்ணமிக்குப் பிறகு வரும் நாளான சதுர்த்தி அன்று சங்கடஹர சதுர்த்தி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. அன்று விரதம் இருந்து சந்திரோதயத்திற்குப் பிறகு சந்திரனை சரிசனம் செய்கின்றனர். தமிழகத்தில் விநாயகர் தனியாகவும் வடநாட்டில் சித்தி புத்தி என இரு தேவிகளும் வணங்கப்படுகின்றனர்.விநாயகச் சதுர்த்தி அன்று ஓங்கார ரூபமான விநாயகரைப் பூஜித்து ஞானம் அடைவோம். நம்முடைய அறிவாக உறைபவர் விநாயகப் பெருமான் எனும் பொருளில்,

’முத்தமிழை வினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே’

என்று வியாச முனிவர் மஹாபாரதம் சொல்லச் சொல்ல எழுதுகோலாகத் தம்முடைய ஒரு பக்கத்து தந்தத்தையே உபயோகித்து அவர் சொன்ன வேகத்துக்கே எழுதினார் என்றும், வள்ளி நாச்சியாரை குமரனின் வேண்டுக்கோளுக்கிணங்க அக்கணமே மணம் முடிக்க உதவி செய்கின்றார், என்பதை

அத்துயரது கொடு சுப்பிரமணி படும்
அப்புனம் அதனிடை இபமாகி
அக்குறமகளுடன் அச் சிறு முருகனை
அக்கனம் மனம் அருள் பெருமானே

என்று முருகனுடன் வள்ளிக்கு மணமுடித்து வைத்த வைபவத்தையும் பாடுகின்றார்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க