Month: September 2016

  • அமுதனார் கண்ட எம்பெருமானார்

     

     தி விப்ரநாராயணன்

    ramanujar19

          மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள்  மாதவனே

          கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்க ளெல்லாம்

          அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே

          நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற் காயினரே

    திருவரங்கநாதர்  இராமானுசரிடம் கேட்டாராம்.” அதெப்படி நான் யுகந்தோறும்  அவதரித்து  அவர்களை ரக்ஷிக்கின்றேன். என்னால் அவர்களை  என்னை  உணரவைக்க முடியவில்லை. உன்னால் எப்படி இச்செயல் முடிந்தது. அறியேன்  நான், எடுத்துரைப்பாய் நீ ”என்று வினவினாராம் அதற்கு எம்பெருமானார்  ,                          ” உன்பெருமையை நீ சொல்ல முடியுமா.  அடியார்களாகிய  நாங்கள்தானே சொல்ல வேண்டும்” என்றாராம். அண்ணல் இராமானுசன் தோன்றிய அப்போழுதே  நாராயணன் பற்றிய ஞானம்  மக்களுக்கு வந்துவிட்டது என்று அமுதனார் எம்பெருமானாரின் அரிய பெருமையை இப்பாடலின் மூலம் எடுத்துரைக்கிறார். அவர் 108 பாடல்கள் மூலம் தன் ஆச்சார்யரின் பெருமையை சொல்கிறார். ஒவ்வொரு பாடலையும்  இராமானுசன் என்ற பெயர் வருமாறு  பாடியிருக்கிறார்

    இப்பாடல் தொகுதிக்கு இராமானுச நூற்றந்தாதி என்று பெயர்.. இப்பாடலாசிரியர் திருவரங்கத்தமுதனார்  திருவரங்கத்தில் அரங்கநாதர் கோவில் பட்டராகவும் நிர்வாகத்தையும் கவனித்துவந்தார். இவர் போக்கு இராமானுசருக்குப் பிடிக்கவில்லை. அதனால் இவர் இராமானுசரை வெறுத்தார்.எப்படியாவது இவரை கோவில் காரியத்திலிருந்து விடுவித்துவிட எண்ணினார் இராமானுசர். ஆனால் தாயார் இவர் கனவில் வந்து ”அவன் என் பிள்ளை.அவனை அனுப்பிவிடாதே” என்றாராம். ஆகவேதான் காஞ்சிபுரம் சென்றுவிடலாம் என நினைத்து தன் சீடர் கூரத்தாழ்வானிடம் கூற அவரும் ”வேண்டாம், அமுதனாரை திருத்திப் பணிகொள்வோம்” என்றாராம். ”நீரே அக்காரியத்தைச் செய்யும் ” என்று கூறிவிட்டார் இராமானுசர்.   அமுதனார்     கூரத்தாழ்வானின் சீடரானார். தக்க தருணத்தில் கோவில் காரியத்திலிருந்து அவரை விடுபட வைத்தார்.  ஆனால் அவருக்கு வேண்டிய கோவில் மரியாதைகள்  பிறழாது நடக்க ஏற்பாடு செய்தார் இராமானுசர். தான் வெறுத்தும் தன்னிடம் அன்பு காட்டும் ஆச்சார்யரின் மனோபாவம் கண்டு வியந்தார். அவ்வியப்பே அந்தாதியாக உருவாயிற்று.

    ஆச்சார்ய பரம்பரையில்  ஆளவந்தாருக்குப்பின் அரியணையில் அமர்ந்தவர் இராமானுசர்தான். நம்மாழ்வாரால் இவர் வருகை  முன்னரே உரைக்கப்பட்டு இவரின் திருவுருவச் சிலையை தாமிரபரணி நீரிலிருந்து   மதுரகவி ஆழ்வாருக்குக் நம்மாழ்வார்  கொடுத்தார்.  பின்   தன் திருவுருவத்தைக் கொடுத்தார்.  நம்மாழ்வாரால் நாதமுனிகளுக்கும்  இராமானுசரின் திருவுருவம்  கொடுக்கப்பட்டது.அதை திருக்கோட்டியூர் நம்பிவரை ஆராதனம் செய்து வந்தனர்.மணக்கால் நம்பி   ஆளவந்தாருக்கு வரப்போகும் இராமானுசர் பற்றி உரைக்கவே அவரைக் காணவேண்டும் என்ற அவா ஆளவந்தாருக்கு மேலிட்டது. அதன்படி காஞ்சிக்கு வந்து இராமானுசரை அவர் அறியாது திருக்கச்சி நம்பி மூலம் பார்த்தார். உடனே இவர்தான் ”ஆம்முதல்வன்” என்று ஆனந்தித்துக் கூறினார். ஆகவே அத்தகைய பெருமை பெற்றவர் இராமானுசர். ஆதிசேஷன் அம்சமாக அவதரித்தவர்.

    07-1452138339-tirupati-balaji-temple-600

    இராமானுசரின் பெருமைகளை அறிந்து அவற்றை அந்தாதி மூலம் நமக்கு அளித்துள்ளார் அமுதனார்”பாமன்னு மாறன் அடிபணிந்துய்ந்தவன்” என்றும்,”’ குறையல் பிரானடிக்கீழ் விள்ளாத அன்பன் ” என்றும்  ”பூதத் திருவடித்தாள்கள் நெஞ்சத்துறைய வைத்தாளும் இராமானுசன்”என்றும் தமிழ்த் தலைவன் பொன்னடி போற்றும் இராமானுசன்” என்றும் ”அரங்கர்மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல்” என்றும் ”தூயநெறிசேர் எதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதிபெற்றுடைய இராமானுசன்” என்றும் பலவாறு பாடுகிறார். அந்த அளவுக்கு ஆழ்ந்த பக்தி இராமானுசரிடத்தில் அவருக்கு. ”இராமானுசன் புகழன்றி யென்வாய் கொஞ்சிப் பரவகில்லாது என்ன வாழ்வின்று கூடியதே” என்கிறார்.

    எம்பெருமானாரைத் துதித்தால் என்னவெல்லாம் கிடைக்கும் என்கிறார் இந்தப் பாட்டில்

              பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல

             திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறுகலியால்

            வருந்திய ஞாலத்தை  வன்மையினால்வந்    தெடுத்தளித்த

            அருந்தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே

    கருணையின் உறைவிடம்

    images-4

     இராமானுசருக்கு பெற்றோர்கள் சூட்டிய திருநாமம் இளையாழ்வார் என்பதே. ஏனெனில் இவர் லக்ஷ்மணனின் அவதாரம்.இவர் திருப்புட்குழியில் அத்வைதியான யாதவப் பிரகாசரிடம் பாடம் கேட்டார். அவரின் அத்வைத விளக்கத்தை ஆட்சேபித்து பணிவுடன் விசிஷ்டாத்வைத விளக்கத்தைக் கொடுத்தார், அவருக்கு இது பிடிக்கவில்லை. குருவுக்கு மிஞ்சிய சீடனாக இருக்கிறான் என்று அறிந்தவுடன் அவர் இளையாழ்வாரைக் கொல்ல சதி தீட்டினார். காஞ்சி வரதராசனே நேரில் வந்து   காப்பாற்றினார்.. இருந்தும் தன் ஆசானிடம்  மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். கடைசியில் ஆசானையே ஆட்கொண்டு  தம் சிடராக்கிய பெருந்தன்மை   படைத்த பிரான் இராமானுசர் அவர்கள்,. அவர்தம்  மனைவி தஞ்சமாம்பாள் அவர்  ஆசான் பெரியநம்பியின் மனைவியை அவமதித்தாள்; அவரின்  மற்றொரு ஆசான் திருக்கச்சிநம்பியையும் அவமதித்தாள். பசியென்று வந்த அந்தணர்கள் இருவருக்கு உணவில்லையென்று சொன்னாள். ஆனால் அவரைக் கடிந்து கொள்ளாது இத்தவற்றுக்கெல்லாம் தானே காரணம் என்று கருதி அவரின் மனைவிக்கு வேண்டிய வசதிகள் கொடுத்து பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைத்த, துறவறம் பூண்ட   கருணைக்கடல் .

            இராமானுசர்  திருவரங்கத்தில் எழுந்தருளியிருந்தபோது கோவில் நிர்வாகத்தைச் சரிப்படுத்தினார்.  இவருடைய சீர்திருத்தங்கள் பிடிக்கவில்லை சில அந்தணர்களுக்கு.அதனால் அவருக்கு விஷம் கொடுத்து கொல்ல முற்பட்டனர். ஒருநாள் உஞ்சவிருத்தி எடுத்துவரும்போது ஒரு பிராமணப் பெண்மணி அவருடைய பாத்திரத்தில் சோறிட்டு அழுதுவிட்டாள். ஏனென்று கேட்கையில்  அவள் கணவன் விஷம் கலந்து கொடுக்கசொன்னார் என்று கூறினாள்,அவளை மன்னித்து அன்றிலிருந்து உண்ணாவிரதமிருந்தார். இதையறிந்த திருக்கோட்டியூர் நம்பி   அவரின் உண்ணாவிரதத்தை முடிக்க வைத்தார். விஷம் கொடுத்த அந்தணர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டார் கருணை வடிவினரான இராமானுசர். கூரத்தாழ்வானின் கண்பறித்த சோழனின் மகனுக்கு மனமிரங்கி  ஆட்கொண்டது,வாதம்புரியவந்த யக்ஞமூர்த்தியை வென்று ஆட்கொண்டது ஊமைகள்முதலான ஊனமுற்றவர்களுக்கு அன்பு காட்டியது ,முக்தி அளித்தது குருமார்களால் ஒதுக்கிவைக்கப்பட்ட, ஊனமுற்ற  ஹொய்சாலமன்னனான விட்டலதேவராயனின்பால்     கருணைகாட்டி அவரை மன்னனாக்கியது,  அரசனின் சித்திரவதைக்குட்பட்ட சமணர்களைக் காப்பாற்றி  வைணவராக்கி ஆட்கொண்டது . முதலியன அவரின் கருணைக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும் அதனால்தான்       அமுதனார் இந்தப் பாடலை இயற்றினார் போலும்

    காரேய் கருணை ராமானுசா இக்கடலிடத்தில்

    ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு

    நேரே யுறைவிடம் நான்வந்து நீயென்னை உய்த்தபினுன்

    சீரே  உயிர்க்குயிராய் அடியேற்கின்று தித்திக்குமே

    அனைவரும் ஓர்குலத்தார்

    எட்டெழுத்து மந்திரத்தை ஒரு குருவிடமிருந்து உபதேசமாய்க் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது வைணவ மரபு. அதன்படி எம்பெருமானார் திருக்கோட்டியூர் நம்பியிடம் பெற்றார்.அதற்காக திருவரங்கத்திலிருந்து திருக்கோட்டியூருக்கு 18 முறை சென்றாரென்று கதைகள் மூலம் அறிகிறோம். அப்படிப் பெற்ற அம்மந்திரத்தை  ஆசையுடையோரெல்லாம் கேட்டுப் பயனடையலாம் என்று திருக்கோட்டியூர் கோபுரத்தின் மீதேறி  அம்மந்திரத்தைச் சொன்னார். இதையறிந்த ஆசான் கடிந்துகொண்டார். .இராமானுசர் சொன்னார்.”நான் ஒருவன் நரகம் புகுந்து எல்லோரும் சுவர்க்கம் புகுந்தால் எனக்கு ஆனந்தமே” என்று சொன்னவுடன் அவரை ஆசான் ஆரத்தழுவி அவருக்கு நீர்தான் ”எம்பெருமானார்”என்று பெயரைச் சூட்டினார்.

     திருக்கச்சிநம்பி தாழ்குலத்தவர். அத்திகிரி அருளாளனுடன் உரையாடும் புண்ணியத்தைப் பெற்றவர் அவரை ஆசானாக அன்புடன் ஏற்றுக்கொண்டார். இராமானுசர்        இளவயதிலிருந்தே அவரிடம் பக்தியுடன் பழகிவந்தார். தாழ்ந்தசாதியினரைத் ”திருக்குலத்தார் ” என்று அழைத்தார்.     ஊர்க்காரர்கள் எதிர்த்தாலும் தன்மனைவிக்குப் பிடிக்காவிட்டாலும்  அவர் எப்போதுமே எக்குலத்தவரையும் மதிக்காமல் இருந்ததில்லை.மாறனேர் நம்பி என்பவர் நம்மாழ்வாரிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட கீழ்ச்சாதிக்காரர். அவரின் அந்திமக் கிரியைகளை அவரது ஆசான் பெரியநம்பி செய்தார். ஊரார் அவரை ஒதுக்கிவைத்தனர்  . அவரை இராமானுசர் பெரிதும்  மதித்தார். ஸ்ரீராமன்  ஜடாயுவுக்கு கிரியைகள் செய்தார்  தருமன் விதுரருக்கு செய்தான்    குகனை தன் சகோதரனாகக் கொண்டார் ஸ்ரீராமன் என்றெல்லாம் பெரியநம்பி தன் சீடனுக்கு எடுத்துச்சொல்லி தன் செயலை நியாயப்படுத்தினார்.  திருவரங்கநாதனே அவர் செயலை அங்கிகரித்து அவரின் மதிப்பை உயாத்தினார் என்று கதைகள் கூறுகின்றன. இப்படி சீடனும் குருவும் சாதி வேறுபாட்டைக் களைவதில் முனைப்பாக இருந்தனர்.திருவரங்கத்தில் சோழமன்னனால்  உடையவரின் உயிருக்கு ஆபத்து நேர்ந்தது. அதனால் தன்சீடர்களுடன் மைசூருக்கு சென்றார். அப்பொழுது வழியில் காடுகள் அதிகம். இரவில் தங்க இடம் தேடினர். சில வேடர்கள் இவரை வணங்கி அவர்கள் குடிசையில் தங்க வைத்தனர். அவர்களின் பக்தியைக் கண்டு மகிழ்ந்து அவர்கள் கொடுத்த உணவை உண்டார்  உடையவர்.  எங்கு சென்றாலும் வேறுபாடு பார்க்காது வேதம் கூறியதை நடைமுறையில் வாழ்ந்து காட்டிய வள்ளல்.

    திருவரங்கத்தில் குளிக்கச் செல்லும்போது  கூரத்தாழ்வானையும் முதலியாண்டானையும்  அழைத்துச்செல்வது வழக்கம்..அப்பொழுது தன் இருகரங்களில் துணிவைத்து அதில் அவர்கள் கைகளைவைத்து  அழைத்துச்  செல்வார். ஆனால் நீராடிவிட்டு  திரும்பிவரும்போது தாழ்குலத்தவனான உறங்காவில்லியின் தோளில் கைபோட்டுக்கொண்டு வருவாராம்   மிக நெருங்கிய சீடர்களுக்கே இல்லாத மதிப்பை  இந்த தாசருக்கு அளித்தார் இராமானுசர்.  ஏனெனில் இவர் மிக உயர்ந்த பக்தர் :  இவர்   மனைவி மிகச் சிறந்த  பக்தை.,  திருப்பாணாழ்வாருக்கு ஸ்ரீரங்கநாதனே அழைப்பு விடுத்தார். பக்திதான் முதன்மையே தவிர குலம் இல்லை  என்பதைச் சென்றவிடமெல்லாம் சொல்லிவந்தவர்  இராமானுசர். காந்திஜியால்  அரிஜனங்கள் என்று அழைக்கப்பட்டவர்களை  இராமானுசர்  திருக்குலத்தார் என்று அழைத்து அவர்களுக்கு ஆலயப் பிரவேசம் செய்து வைத்த முதல் சீர்திருத்தவாதியாவார்.மேல்கோட்டையில் இதை நிகழ்த்தினார்.

    சுருங்கச் சொன்னால்  தாழ்ந்தார் பொருட்டும்’ஐயோ” என்று முகங்காட்டி  அன்புப்பணிகள் புரிந்த ராமானுசரின் சித்தசக்திதான் ,நன்னெஞ்சம்தான் ,மகாவிசுவாசம்தான் ‘அற்புதம்,அற்புதம்”. என்று பிரமிக்கத்தக்க செயற்கருஞ்செயல்களைச் செய்து முடித்து சித்தாந்தப் பெருங்கோயிலை ஆழ்ந்தகன்றதோர் அடிப்படையில்  நிலைநிறுத்த உதவியிருக்க வேண்டும்.( ஸ்ரீராமானுஜர்-பக் 317 -பி ஸ்ரீ ஆச்சார்யா) ஒரு தொண்டர் குலத்தைத் தோற்றுவித்த அருமையான வைணவப் பண்ணை உருவாக வித்திட்ட பெருமகனார்.

    இக்கருத்தை அமுதனார் ஒரு அழகான பாடலின்மூலம் தருகிறார்

        திக்குற்ற கீர்த்தி இராமானுசனை * என் செய்வினையாம்

        மெய்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை  மேவு நல்லோர்

         எக்குற்றவாளர் எது பிறப்பு ஏதியல்வாக நின்றோர்

          அக்குற்றம் அப்பிறப்பு   அவ்வியல்வே நம்மை ஆட்கொள்ளுமே.

     எத்தகைய மனிதர் என்று நாம் அறிந்துகொள்ள இப்பாடல் ஒன்றே போதுமே. அதனால்தான் வினோபா அவர்கள் துறவிகளில் சிறந்த துறவி என்று தமது உரையில் கூறுவார்

    முக்திக்கு வழிகாட்டியவர்

    “இந்த உலகில் உள்ள சரணாகதர்கள் அனைவருக்கும் ஸ்வாமியாக உள்ளவர் எம்பெருமானார் ஆவார். தன்னை அண்டியவர்களைக் காப்பதில் பெருமை ஏதும் இல்லை, தன்னை எளிதில் அண்டாமல் உள்ளவர்களையும் காத்தருளியவர் எம்பெருமானார் ஆவார். ஆகவே இனி உள்ள காலம் முழுவதும் நமது ஸித்தாந்தத்தை எதிர்ப்பவர்கள், அஹங்காரம் பற்றியவர்கள் ஆகியோருடைய நரகத்தின் வாயிலை ஒத்த அவர்களின் இருப்பிடத்தை நான் நாடமாட்டேன்; அவர்களை,  மேகம் போன்று நவநிதியைப் பொழிவார்கள்   என்று வாய்க்கு வந்தபடி துதிக்கமாட்டேன்; ஸம்ஸாரத்தில் உழல வைக்கும் இது போன்ற செயல்களில் இனி நான் ஈடுபடமாட்டேன்.”  என்று எம்பெருமானார்   தன்னை ஆட்கொண்ட விதத்தை இப்பாடலின் மூலம் தெரிவிக்கிறார்   அமுதனார்

           நிதியைப் பொழியும் முகில் என்று * நீசர் தம் வாசல் பற்றித்

            துதிகற்று உலகில் துவள்கின்றிலேன் இனி * தூயநெறி சேர்

             எதிகட்கு இறைவன் யமுனைத்துறைவன் இணை அடியாம்

            கதி பெற்றுடைய * இராமானுசன் என்னைக் காத்தனனே.

    மற்றொரு பாட்டினால் அவர்தம் பெருமையை எடுத்துக் கூறுகிறார் அமுதனார்.

              கொள்ளக் குறைவு அற்று இலங்கி * கொழுந்துவிட்டு ஓங்கிய உன்

             வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய் *

             வெள்ளைச் சுடர்விடும் உன் பெருமேன்மைக்கு இழுக்கு இதென்று

             தள்ளுற்று இரங்கும் * இராமானுச என் தனி நெஞ்சமே.

    மழை மேகம்போல்  அள்ள அள்ளக் குறைவில்லாத செல்வத்தைக் கொடுத்தார் என்கிறார் அமுதனார். அப்படியென்ன செல்வத்தைக் கொடுத்தார். மற்ற சமயங்கள் தவறாக  வேதத்தின் சாரத்தைக் கூறிவந்ததை மறுத்து அரிய க்ரந்தங்களையும் உரைகளையும் எழுதி மக்களை நல்வழிப் படுத்திய மேதையல்லவா அவர்  நல்ல அரியதொரு ஆச்சார்ய பரம்பரையை உலகிற்கு ஈந்த வள்ளல்.அதனால் தான் இராமானுசரைத் தன் தனி நெஞ்சமே என்று விளிக்கிறார்.

    எம்பெருமானார் தன்னை ஆட்கொண்டபின் தனக்கென்ன கவலை, வைகுண்டம் கிடைத்தாலும் துன்பம் சூழ்ந்த நரகம் கிடைத்தாலும் தான்  கவலைப்படமாட்டேன் என்று கீழ்வரும் பாடலில் கூறுகிறார் அமுதனார்

             இன்பம்தரு பெருவீடு வந்தெய்திலென்? * எண்ணிறந்த

             துன்பம்தரு நிரயம்பல சூழிலென்? * தொல் உலகில்

             மன் பல் உயிர்கட்கு இறைவன் மாயன் என மொழிந்த

                அன்பன் அனகன் * இராமானுசன் என்னை ஆண்டனனே

           தனக்கு எம்பெருமானார் கிட்டியபின் தான் எதற்கு மற்ற சாதனங்களை முக்திக்காக நாட வேண்டும் என்று அவர் உணர்வதை இவ்வரிகள்

             கதிக்குப் பதறி* வெங்கானமும் கல்லும் கடலும் எல்லாம்

            கொதிக்கத் தவம் செய்யும் கொள்கையற்றேன்

     நமக்கு உணர்த்தும்.. வீடு விட்டு வீடு பெற காடு நோக்கிச் செல்லவேண்டாம் என்பது உடையவரின் அமுதவாக்கு. அதைத்தான் அமுதனார் இங்கு வலியுறுத்துகிறார்.

    வைணவக் கொழுந்து

    இராமானுசர் தான் தன் தெய்வம் என்று  இப்பாடலில் குறிப்பிடுகிறார் அமுதனார்.

           நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே   சில மானிடத்தைப்

            புயலே எனக் கவிபோற்றி செய்யேன்   பொன் அரங்கமென்னில்

            மயலே பெருகும் இராமானுசன் மன்னு மா மலர்த்தாள்

           அயரேன்   அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே?

    எம்பெருமானார் எந்தவித கைம்மாறும் எதிர்பாராது தனது அளவற்ற கருணையினால் மிகவும் உயர்ந்த ஞானத்தை  அளித்து களைகள் நீக்கி வைணவப் பயிரை  வளர்த்தார் என்று இப்பாடலில் கூறுகிறார் நாங்கள் இழந்த வாழ்வை மீட்டுக் கொடுத்த முனி என்று போற்றுகிறார் அமுதனார்

          வாழ்வற்றது   தொல்லை வாதியர்க்கு   என்றும் மறையவர்தம்

           தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது  தத்துவ நூல்

           கூழற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தினர்க்கு அந்

           நாழற்றது   நம் இராமானுசன் தந்த ஞானத்திலே.

    மெய்ஞ்ஞானியர் என்று அழைக்கப்பெறும் ஆழ்வார்களின் சிகரமாய் விளங்கிய நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியின் நறுமணத்தை   பதிதொறும் எடுத்துச் சென்று பக்தி எனும் பயிரை வளர்த்த மாமுனி எம்பெருமானார்,வேருக்கு வெப்பம் கண்டால் கொழுந்து வாடுவதுபோல வைணவப் பயிருக்கு எந்த வாட்டமும் வராது காத்த வைணவக்குலக் கொழுந்து என்று இப்பாடலின் மூலம் போற்றுகிறார்.

             உணர்ந்த  மெய்ஞ்ஞாநியர்  யோகந்தொறும்   திருவாய்மொழியின்

           மணம்  தரும்  இன்னிசை  மன்னும்  இடந்தொறும்   மாமலராள்

           புணர்ந்த  பொன்மார்வன்  பொருந்தும்  பதிதொறும்  புக்கு  நிற்கும்

           குணம்  திகழ்  கொண்டல்   இராமானுசன்  எங்குலக்  கொழுந்தே.

    அற்புதம் நிகழ்த்திய அருந்தவச் செம்மல்

    அற்புதம் செய்தார் ஆளவந்தாரின் சீடர் இராமானுசர் என்று பாராட்டுகிறார் அமுதனார். அப்படியென்ன அற்புதம் செய்துவிட்டார்,மிகவும் புரிந்துகொள்ள முடியாத கருத்தாகிய ”நாராயணனே அனைவர்க்கும் புகலிடம்’ என்பதை எளிதில் தன் உபதேசம் மூலம் புரியவைத்தார்.எப்போதும் இக்கருத்து  நம்மனதில் நிலையாக இருக்கவே ஸ்ரீபாஷ்யம் என்ற நூலை உலகிற்கு அளித்தார். இக்கருத்தைத்தான் இப்பாடலில் குறிப்பிடுகிறார்

           அற்புதம் செம்மை இராமானுசன் * என்னை ஆளவந்த

           கற்பகம் கற்றவர் காமுறு சீலன் * கருதரிய

           பற்பல்லுயிர்களும் பல்லுலகு யாவும் பரனதென்னும்

           நற்பொருள் தன்னை * இந்நானிலத்தே வந்து நாட்டினனே

    திருவடி பெருமை

     எம்பெருமானாரின் அருள்பார்வையில் வீழ்ந்த அமுதனார் தனக்கு ஒன்றும் வேண்டாம், அவர்தம்  உயர்ந்த திருவடி சரணமே போதும் என்கிறார்,ஏனென்றால் திருவேங்கட மலையும் ஸ்ரீவைகுண்டமாகிய திருநாடும் திருப்பாற்கடலும் தரக்கூடிய பேரானந்தத்தைத் அவர்தம்  திருவடி தனக்கு அருளும் என்றுமன உறுதியுடன் கூறுகிறார், அக்கருத்தை வெளிப்படுத்தும் பாடல் இதோ

             நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,நிறை வேங்கடப்பொற்

              குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்

              உன்றனக் கெத்தனை இன்பந் தரும்உன் இணைமலர்த்தாள்

              என்றனக் கும்அது,இராமா னுச! இவை யீந்தருளே.

    அவரது திருவடிகளில் சரணடைந்தபின் தன் இருவினைகளெல்லாம் தவிடுபொடியாய்ப் போயிற்று என்பதைக் கண்டுகொண்டேன் என்றும் சொல்லொணா அவரது கல்யாண குணங்களை அனுபவித்தேன் என்றும் பாடி ஆனந்திக்கிறார்

                  கண்டுகொண் டேனெம் இராமா னுசன்றன்னை காண்டலுமே

                   தொண்டுகொண் டேன்அவன் தொண்டர்பொற் றாளில்என் தொல்லை வெந்நோய்

                  விண்டுகொண் டேன்அவன் சீர்வெள்ள வாரியை வாய்மடுத்தின்று

                 உண்டுகொண் டேன், இன்னம் உற்றன ஓதில் உவப்பில்லையே.

    தான் யார் பின்னேயும் செல்லமாட்டேன். எம்பெருமானார் திருவடி பற்றிய மகான்களையே பற்றி தன் வாழ்வை நடத்துவேன் என்று தொன்டர்தம் பெருமையை திருவடிப் பெருமை மூலம் கூறும் பாங்கே தனிதான்  .இதோ அந்தப் பாடல்

              பற்றா மனிசரைப் பற்றி,அப் பற்று விடாதவரே

                உற்றா ரெனவுழன் றோடிநை யேனினி, ஒள்ளியநூல்

              கற்றார் பரவும் இராமா னுசனைக் கருதுமுள்ளம்

                பெற்றார் எவர், அவ ரெம்மைநின் றாளும் பெரியவரே.

    உலகம் உய்ய வந்த உடையவரின் திருவடி பற்றினால் பரமபதமே கிடைக்கும் என்று ஆணித்தனமாக வெளியிடுகிறார் இப்பாட்டில்

               தவந்தரும் செல்வம் தகவும் தரும்,சரியாப்பிறவிப்

              பவந்தரும் தீவினை பாற்றித் தரும்,பரந்தாமமென்னும்

              திவந்தரும் தீதில் இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்

                  குவந்தருந்தேன், அவன் சீரன்றி யானென்றும் உள்மகிழ்ந்தே.

    முடிவாக அவர் குறிப்பிடுகிறார். திருவேங்கடத்துள்ளானும் திருமாலிருஞ்சோலையுள்ளானும் எம்பருமானாரின் இதயத்தை இருப்பிடமாய்க் கொண்டுள்ளனர். அத்தகைய புண்ணியவான் தன் இதயத்தில் வீற்றிருப்பது தான் செய்த புண்ணியம் என்றும் அவரது எளிமைப் பண்பென்றும் மனமுருகிச் சொல்கிறார்.

               இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ் சோலையென்னும்

                பொருப்பிடம் மாயனுக் கென்பர்நல் லோர்,அவை தன்னொடுவந்

                திருப்பிடம் மாயன் இராமா னுசன்மனத் தின்றவன்வந்

               திருப்பிடம் என்றன் இதயத்துள் ளேதனக் கின்புறவே.

    இறுதிப் பாட்டில் அவர் இராமானுசரிடம்  ஓர் வேண்டுகோள் விடுக்கிறார், அதைப் பார்க்கும்போது  உயர்ந்த    வைணவப் பண்பாகிய அடியார்தம் அடியவர்க்குத் தொண்டு செய்து வாழ விரும்பும் அமுதனாரின்  பண்பு வெளிப்படுகிறது.இதோ அந்த வேண்டுகோள். என்னே அவர்தம் சீரிய பண்பு. என்னே அவர்தம் நம்பிக்கை.

               இன்புற்ற சீலத் திராமா னுச, என்றும் எவ்விடத்தும்

               என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய

              துன்புற்று வீயினும் சொல்லுவ தொன்றுண்டுன் தொண்டர்கட்கே

             அன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கியங் காட்படுத்தே.

    தேனினும் இனிய தமிழில் ஒரு அந்தாதியைத் தந்தருளிவிட்டார் அமுதனார். 130 ஆண்டுகள் வாழ்ந்து கஷ்மீரிலிருந்து கன்யாகுமரிவரை புனித யாத்திரை மேற்கொண்டு வைணவ மதத்தைப் பரப்புவதற்கு 72 யதிகளை நியமித்து அவர்கட்கெல்லாம் தலைவராயிருந்து வழிநடத்தி அனைத்துப் பிரிவினரையும் அன்பால்  ஒருங்கிணத்து வைணவ மரபை உலகிற்களித்த மாமுனியே எம்பெருமானார். அவரது 1000 ஆவது அவதார நன்னாள் சித்திரை திருவாதிரை நாளன்று அடுத்த ஆண்டு கொண்டாடப்படவிருக்கிறது. அவரின் அடியவர்களாகிய நாம் அவர் பெருமையைப் பரப்புவோமாக

            உலகத்தை உய்விக்க வந்த  பெருமானே

          உத்தம புருடரே மாமுனியே– உள்ளத்தால்

          எப்பிறப்  பினரையும்  உவந்தேற்றுக்  கொண்டவரே

          எங்கள் எதிராஜரே போற்றி

    Share
  • மக்களாட்சிதானா இது?

    பவள சங்கரி

    தலையங்கம்

    மக்களுக்காக ஆட்சி செய்கிறோம் என்பதையே நடுவண் அரசு மறந்துவிட்டது போலத்தோன்றுகிறது. மக்களுக்கு எந்தெந்த முறையில் சலுகைகளை ஏற்படுத்தி நிம்மதியான வாழ்க்கையை ஏற்படுத்துவது என்பது பற்றி சிந்திப்பதற்கு பதிலாக துக்ளக் ஆட்சியைப்போல் மக்களுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்கள் அமல்படுத்தப்படுவதாகத் தோன்றுகிறது சமீபகாலங்களில். திரையரங்குகளில் நுழைவுச்சீட்டை அதிக விலைக்கு விற்றால் தண்டனை என்று கூறி நியாய விலையில் அதை வாங்கி திரையரங்கு செல்வதற்கு வழிவகுத்திருந்த காலம் ஒன்றும் இருந்தது. மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் ஒருவருக்கு 120 உரூபாய் என்று முறைப்படுத்தி மக்களை கொள்ளையடிப்பதற்கு சட்டப்படி அனுமதியளித்தது நாம் அறிந்ததே. இதே போல இரயில்வே அமைச்சகமும்ச ட்டம் இயற்றியிருப்பது அல்லது ஆணை பிறப்பித்திருப்பது மிகவும் வேதனைக்குரிய செயல். இரயிலில் முன்பதிவு செய்யும் நுழைவுச்சீட்டுகளை அதிக விலைக்கு விற்றால் தண்டனை அல்லது அந்த நுழைவுச்சீட்டு செல்லாது என்று இருந்தது கனவாகிவிட்டது. பரீட்சார்த்த முறையில் அனுமதிக்கப்பட்ட Premium trains இன் வெற்றியே, இன்று அரசே Surging charges அல்லது Elasticity tickets, போன்ற புதிய முறையை அறிமுகப்படுத்த ஊக்கப்படுத்தியுள்ளது. சதாப்தி, ராஜஸ்தானி, துரந்தோ போன்ற இரயில்களில் 10 சதவிகிதம் மட்டுமே நியாயமான விலையாகவும், ஒவ்வொரு பத்து சதவிகிதம் நிறைவடைந்த பிறகு 10 சதவிகிதம் கட்டண அதிகரிப்பும், 50 சதவிகிதத்திற்குப் பிறகு மீதமுள்ள 50 சதவிகிதத்திற்கு ஒன்றரை மடங்கு கட்டணமாகவும் நிர்ணயித்துள்ளனர். அதாவது பணம் உள்ளவனுக்கே இனிய பயணம் என்னும் வகையில் உள்ளது இத்திட்டம்.

    இன்றைய அறிவிப்பாக, இரயில்வேத்துறைக்கு இரண்டு நாட்களில் மட்டும் 1.6 கோடி அதிகப்படியான வருமானம் கிடைத்திருப்பதாக அறிவித்திருப்பது மகிழ்ச்சியான செய்தி அல்ல. நடுத்தர மக்களும் உயர் கீழ்வருவாய் மக்களும் இனி இந்த வகையான புகைவண்டிகளை பயன்படுத்தவே முடியாது என்பது வேதனையான விசயம். அரசியல் சாசனத்தின்படி அனைவரும் சமம் என்ற நிலை மாறி பணம் இருப்பவனுக்கு மட்டுமே அரசின் சலுகைகள், சுகமான பயணங்கள் என்றால் இது எப்படி மக்களாட்சி நடக்கும் நாடாக இருக்க முடியும் என்ற ஐயம் எழாமல் இல்லை.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”மல்லாண்டு கண்டது மாவீரன் பட்டம்தான்,
    புள்ளாண்டான் ஹார்மனியை(சுமுகத்தை) பூமிக்கு -சொல்லாண்ட
    கீதை இசைக்கின்றார், கூடாரைக் கொள்ளுமிவர்
    பாதைக் குமார்க்க பந்து”….கிரேசி மோகன்….!

    Share
  • முகமூடிக்காரன்

     

    ரோஷான் ஏ.ஜிப்ரி 

    காலத்தின் வழியே
    தொலைத்த சுயத்தை
    தெருத்தெருவாய் தேடியலையும் நான்
    அண்மையிலிருந்து
    காசுக்காகவும்,கடமைக்காகவும்
    முழுநேர முகமூடிக்காரன்


    என்னிடம் ஒரு முகமும்
    சில..முகமூடிகளும் இருக்கின்றன
    குழந்தைகள்முன் ஒருமுக மூடியையும்
    மனைவியிடம் ஒரு முக மூடியையும்
    உறவினர்களிடம் ஒரு முகமூடியையும்
    நண்பர்கள் முன் ஒரு முக மூடியையும்
    வேலை தளத்தில்
    வேறொரு முகமூடியையும்
    அணிய வேண்டியது அவசியமாகி விட்டது

    எத்தனை நேர்த்தியாக இருப்பினும்
    மாறி,மாறி மாட்டிக் கொள்ளும்
    ஒவ்வொரு முகமூடியையும்
    களற்றி வைக்கையில்
    மாட்டிக் கொள்ளவும்  நேர்கிறது

    நிம்மதியை தொலைத்தவன்
    துயிலற்று அலைவதுபோல் ஆயிற்று
    வாழ்க்கையில் வசித்தல்

    முகமூடிகளற்ற
    என்னுடைய பழைய முகத்தை
    யாரிடம் பறிகொடுத்தேன்
    என்பதைத்தான் இன்னும்
    தெரியாமல்
    தேடி அலைகிறேன்.

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 72

    ஹெர்மான் ஹெஸ்ஸ அருங்காட்சியகம், கால்வ், ஜெர்மனி

    முனைவர்.சுபாஷிணி

    ஹெர்மான் ஹெஸ்ஸ 1962ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு மரணமுற்றபோது அவருக்கு வயது 82. ஜெர்மானிய இலக்கியவாதி என்ற ஒரு எல்லைக்குள் மட்டுமே அவரது இலக்கிய ஆளுமை என்றில்லாது உலகப்புகழ்பெற்ற, உலகத்தரம் வாய்ந்த ஒரு எழுத்தாளர் என்ற புகழைப் பெற்ற அவரை அன்றைய “டி சைட்” (Die Zeit) நாளேடு இனி இந்த எழுத்தாளர் காலத்தால் மறக்கப்படுவார் என எழுதியது. ஆனால் இந்தக் கூற்று பொய்யானது என்பதைக் காலம் நிரூபித்து விட்டது. ஹெர்மான் ஹெஸ்ஸ அவர்களின் எழுத்துக்கள் இதுவரை அறுபது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இன்றும் அவரது எழுத்துக்களால் அவர் நினைக்கப்படுபவராக இருக்கின்றார்.

    as

    தான் ஒரு இலக்கியவாதி.. இன்னும் சொல்லப்போனால் ஒரு கவிஞன் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இந்தியாவில் அவரது தந்தையார் ஒரு லூதரன் மதபோதகராகப்பணியாற்றியதாலும் அவரது தாயார் ஒரு லூதரன் மத போதகரின் மகள் என்பதாலும் பெற்றோரின் எண்ணம் தன் மகனும் அதே பணியைத் தான் மேற்கொள்ளப்போகின்றான் என்பதாக இருந்தது. ஆனால் தனது எண்ணம் முழுமையும் இலக்கியத்திலே தோய்ந்திருப்பதை அவர் உணர்ந்து தன் வாழ்க்கைப் பாதையை தன் விருப்பப்படியே அமைத்துக்கொண்டு, அழியாப் புகழை இன்று பெற்றிருக்கின்றார்.
    as1

    ஹெர்மான் ஹெஸ்ஸ ஜெர்மனியின் பாடர்னுர்ட்டெம்பெர்க் மாநிலத்தின் கால்வ் நகரில் 1877ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ஆம் தேதி பிறந்தார். இந்த கால்வ் ஒரு அழகிய சிற்றூர். எனது இல்லம் இருக்கின்ற லியோன்பெர்க் நகரிலிருந்து ஏறக்குறைய 27 கிமீ தூரம் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு ஊர் இது.

    மதபோதனையாளர்கள் குடும்பத்தில் பிறந்த ஹெர்மான் ஹெஸ்ஸவிற்குப் ப்ராட்டஸ்டண்ட் சமய நம்பிக்கைகளை இளமைக் காலம் முதல் பெற்றோர் மற்றும் அவர் வளர்ந்த சூழல் அவருக்கு இயல்பாக ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் அதில் மனம் நிறைவடையாமல் தனது சுயத்தைத் தேடுவதிலே அவர் கவனமும் ஆர்வமும் இருந்தது. ஒருபள்ளியை விட்டு மற்றொன்று என திருப்தியுறா நிலையிலேயே தன் கல்வியைத் தொடர்ந்து பின்னர் தன் 15ம் அகவையில் கல்வியை விட்டு விட்டு ஒரு கடிகாரம் செய்யும் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அவருக்குக் கடிகாரம் பழுது பார்த்தலோடு புத்தக விற்பனை செய்வதும் தொழிலாக அமைந்தது.

    சமயத்திலிருந்து விடுதலை என்பதாகவும், தனி மனித சுதந்திர எண்ணங்களின் செயல்பாடு எவ்வகையில் அமைத்துக் கொள்வது என்றும் அவரது சிந்தனை இருந்தது. வாழ்க்கையைப் பற்றிய பல கேள்விகள் அவரது தேடலில் இருந்தன. தனது சுய அனுபவங்களையே தனது இலக்கியப்படைப்புகளில் புகுத்தி இலக்கியங்களைப் படைத்தார் ஹெர்மான் ஹெஸ்ஸ.

    as2

    அவரது நாவலான Peter Camenzind அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து வெற்றியை அளித்தது. இது அவருக்கு இலக்கியத்தின் வழியே அவரது வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை ஈட்டும் வழியை அமைத்துக் கொடுத்தது. ஒரு புகைப்படக்கலைஞரான மரியா பெர்னோலியை திருமணம் செய்து கொண்டு ஜெர்மனியின் தெற்குப் பகுதியான கான்ஸ்டன்ஸ் பகுதிக்குக் குடிபெயர்ந்தார். அங்கு அவரது மண வாழ்க்கை இனிமையாகத் தொடரவில்லை. இருவரும் திருமண பந்தத்திலிருந்து பிரிந்தனர். பின்னர் பயணங்களில் தன் வாழ்க்கையைச் செலவிட ஆரம்பித்தார் ஹெர்மான் ஹெஸ்ஸ. புதிய ஊர்களும் மக்களும் வாழ்க்கை நெறிமுறைகளும் சமய அனுபவங்களும் அவர் தேடுதலுக்கு விருந்தாக அமைந்தன. இலங்கைக்குச் சென்று பின்னர் இந்தோனீசியா சென்று சேர்ந்தார். ஆசிய நாடுகளின் வாழ்க்கை முறை அவருக்குப் புதிய அனுபவங்களைத் தர, வாழ்க்கையில் புதிய கோணங்களை அவர் உணர வாய்ப்பாக இது அமைந்தது. இந்தப் பயணங்கள் தொடர்ந்தன. பயணங்கள் தந்த அனுபவத்தின் சாராம்சமாக சித்தார்த்தா என்ற காப்பியத்தை இவர் வடித்தார்.

    திருமண முறிவுக்குப் பின்னர் பல இடங்களில் பயணித்து பின்னர் சுவிச்சர்லாந்திற்குக் குடிபெயர்ந்தார், அங்குதான் அவரது பல இலக்கிய ஆக்கங்கள் படைக்கப்பட்டன. 1924ம் ஆண்டில் சுவிச்சர்லாந்தின் குடியுரிமை பெற்று ரூத் வாகனர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணம் மூன்று ஆண்டுகள் தான் நிலைத்தது. பின்னர் வரலாற்றுத்துறை நிபுணரான நினோன் டோல்பின் என்பவரைத் திருமணம் செய்து தன் புது வாழ்க்கையை மீண்டும் 1931ம் ஆண்டில் தொடங்கினார். இவர்கள் உறவு அவரது வாழ்நாளின் இறுதி வரை நீடித்தது.

    culture-hermann-hesse-museum
    culture-hermann-hesse-museum

    இரண்டாம் உலகப்போர் ஐரோப்பா முழுமையையும் பாதிக்கச் செய்த ஒரு நிகழ்வு. ஹெர்மான் ஹெஸ்ஸ, நாசி அரசின் மீதான தனது எதிர்ப்புகளை வெளிப்படையாகக் காட்டியதோடு ஜெர்மானிய அகதிகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வந்தார். இரண்டாம் உலகப்போர் காலகட்டமான 1946ஆம் ஆண்டில்தான் இவரது இறுதி படைப்பான “The Glass Bead Game” நூலுக்கு நோபல் பரிசு கிடைத்தது. இந்தப்பரிசு அவரது மனித உரிமைக் கருத்துகளை வெளிப்படையாகவும் தைரியமாகவும் உரக்கச்சொல்லும் அவரது இலக்கியப்படைப்புக்காக வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு அறிவித்து அவரைப் பெருமைப்படுத்தியது. ஹெர்மான் ஹெஸ்ஸேவின் நூல்கள் ஜெர்மனியில் மிகப்பிரபலம் அடைந்தன. ஆனால் பின்னர் அவரது நூல்களுக்கான புகழ் சிறிது சிறிதாக குறையத் தொடங்கி அவரது மறைவு நேரத்தில் அவர் இலக்கிய உலகால் மறக்கப்படுவார் என சிலரால் பேசப்படும் அளவிற்கு அவரது நூல்கள் மேல் விமர்சனம் எழுந்தன. ஆனால் அந்த விமர்சனங்கள் பொய்யாக்கப்பட்டதை காலம் நிரூபித்தது.

    அவரது நூல்கள் ஜெர்மனி மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படுகின்றன. இவரது சித்தார்த்தா என்ற நாவல் தமிழில் திரிலோக சீத்தாராம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு தமிழ் வாசகர்களின் மனத்தையும் கொள்ளைக் கொண்டது. ஞானத்தேடலினை மையமாக வைத்து அவர் புனைந்த இந்த நாவல் பலரது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட காவியமாகத் திகழ்கின்றது.

    as4

    ஹெர்மான் ஹெஸ்ஸே அவர்களின் பிறந்த இல்லம் ஒரு அருங்காட்சியகமாக கால்வ் நகரில் அமைக்கபப்டுள்ளது. நதி பாயும் ஓர் அழகிய சிற்றூர் இது. இங்கே நகரின் மையப்பகுதியில் ஹெர்மான் ஹெஸ்ஸ அவர்களின் வெண்கல சிலை வருவோரை வரவேற்கும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

    அருங்காட்சியகத்தின் முகவரி
    Hermann-Hesse-Museum
    Marktpl. 30, 75365 Calw,Germany
    00 497051 7522

    Share
  • சும்மா இரு !

          

          (   எம் .ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா )

     

     

    சும்மாஇரு என்று சொல்லுவது எளிதாகும்

    சும்மா இருப்பதுதான் சுகமான நிலையாகும்

    சும்மா இருந்துவிட நினைக்கின்றார் யாவருமே

    இம்மா நிலத்தினிலே என்றுமே உயர்ந்துநிற்பார் !

     

    சும்மா இருப்பது சுமையான காரியமே

    சுகம்கண்ட யாவருமே சும்மாஇருக்க மாட்டார்

    சுழன்றோடும் மனத்தாலே சும்மா இருப்பதற்கு

    சுதந்திரத்தைப் பெற்றுவிடல் சுகமான விஷயமல்ல !

     

    சும்மா இருந்ததனால் சுமைவிட்டார் ஞானியர்கள்

    இம்மா நிலத்தினிலே இவர்வணங்கும் பேறுபெற்றார்

    சும்மா இருந்தபடி சுவாசத்தால் பலபெற்றார்

    சுகமனைத்தும் துறந்ததனால் சும்மாவே இருந்தார்கள் !

     

    சும்மா இருந்துவிட்டால் சோறுதான் கிடைத்திடுமா

    சும்மா இருப்பதுதான் சோம்பலின் நிலையாகும்

    சும்மா இருந்துவிட்டால் சுதந்திரம் கிடைத்திடுமா

    சும்மாவை தூக்கியெறி துள்ளலுடன் வாழ்ந்திடலாம் !

     

    சும்மா இருந்துவிடின் அம்மாவும் வெறுத்திடுவாள்

    சும்மா இருந்துவிடின் துணையுமே துரத்திடுவாள்

    சும்மா இருந்துவிடின் தோழமையும் கிட்டவரான்

    சும்மா இருந்துவிடின் சுகத்துக்கே கேடாகும் !

     

    சும்மா இருப்பாரை சொறிநாயும் நோக்காது

    சும்மா இருப்பாரைச் சொந்தமுமே பார்க்காது

    சும்மா இருப்பார்க்கு சொர்கமுமே நரகமாகும்

    சும்மா இருப்பதற்கு சொல்லுகின்றார் பலகருத்தை !

     

    சும்மா இருஎன்று சொல்லுகின்ற நிலையினிலே

    சும்மா இருந்துவிடின் சோறுபற்றி நினைத்திடலாம்

    சும்மா இருஎன்னும் பொருள்பொதிந்து பார்த்துவிடில்

    இம்மா நிலத்திற்கது எட்டாத தத்துவமே !

     

    தத்துவமாய் இருக்கின்ற தகைமையுடை சொல்லதனை

    சாதாரண நிலையில் நாமெடுத்தால் வேறு அர்த்தம்

    உள்விழுந்து நோக்கிவிடின் உயர்கருத்தை கொள்ளுவதால்

    சும்மா நாமெண்ணிவிடும் சொல்லல்ல சும்மாயிரு !

     

    Share
  • வாழநினைத்தால் வாழலாம்

    ரா.பார்த்தசாரதி

     

    வாழ்க்கையில்  ஏற்படும்  எதிர்பாராத  திருப்பங்கள் ,

    மனிதனின் மனதில் சட்டென்று மாறும் யோசனைகள்

    ஏன் நடந்தது என்று தெரியாத ஒரு   மன வருத்தம்

    மனதினில் சத்தம்  போடாமல் எழும்   ஆசைகள் !

     

    எதை கண்டும் நெஞ்சினுள் ஏற்படும் ஒரு ஏக்கம்

    கெட்டதை நினைத்து மனதினில் வேதனை கலந்த துக்கம் ,

    யார் மீதோ ஏற்படும் காரணம்மில்லாத  கோபம் !

    வெற்றி பெற முடியாமல், கண்ணீர் சிந்தும் தோல்வி !

     

    வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள்,

    வாழ்க்கையில் சந்தித்த மறக்க முடியாத உறவுகள்

    மனிதனின் மனதினில்  அலைபாயும் நிலையில்லாக் காதல்

    அவன் முன்னேற்றத்திற்காக செய்யும் செயல்கள்!

     

    மனித வாழ்க்கையில், விட முடியாத  தொடர்புகள்

    வாழ்க்கையில் விட்டொழிக்க முடியாத தொல்லைகள்

    வாழ்வில் மனிதனுக்கு ஏற்படும்   அவமானங்கள்

    உறங்கும்போது கலைய மறுக்கும் கனவுகள் !

     

    நிலையில்லாத வாழ்க்கையில் நிரந்தரத்தை நினைப்பதும்,

    வாழ்க்கையில், இன்ப, துன்பங்களை  சமமாக நோக்காமலிருப்பதும்  ,

    ஆறடி நிலமே சொந்தம் என அறியாமல் இருப்பதும்,

    உன்னுடன் வருவதோ நீ செய்த பாவ புண்ணியங்கள் என தெரிந்தும் !

     

    இன்றைய ஆடம்பரமும்,கலாசாரமும், மனிதனை வாழ விடுவதில்லை

    ஆண், பெண்  இருவர் சம்பாதித்தாலும்,  நிம்மதி என்பது இல்லை ,

    ஒருவக்கொருவர்  புரிதலுடன் , விட்டுக்கொடுத்தால் துன்பம்மில்லை

    மனிதனே, வாழ நினைத்தால் வாழலாம், வழியாய்  இல்லை !

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(137)

    செண்பக ஜெகதீசன்

    இடிப்பாரை யில்லாத ஏமரா மன்னன்     
    கெடுப்பார் இலானுங் கெடும்.     திருக்குறள் -448: பெரியாரைத் துணைக்கோடல்) 

    புதுக் கவிதையில்…

    தவறும்போது
    தட்டிக் கேட்கும்
    தக்க பெரியோர்
    துணையற்ற மன்னனுக்கு,
    கெடுக்கும் பகைவரின்றியே
    கேடு வரும்! 

    குறும்பாவில்…

    இடித்துரைத்துத் திருத்திடத் துணையாயப்
    பெரியோரில்லா மன்னன்,
    பகைவரின்றியே பெரிதும் கெடுவான்! 

    மரபுக் கவிதையில்…

    தவறிடும் போதெலாம் எடுத்துரைத்தே
         –தட்டிக் கேட்கும் பெரியோரை
    அவைதனில் அறிவுத் துணையாக
         –அமைத்துக் கொள்ளா மன்னவரும்,
    புவியதன் வாழ்வில் பொறாமையுடன்
         –பொருதிட நிற்கும் பகைவர்கள்
    எவரு மின்றியே கெட்டிடுவார்
          –எல்லா மிழந்து நிற்பாரே! 

    லிமரைக்கூ…

    இடித்துரைக்கும் பெரியோரென்றும் துணையே,
    இல்லையெனில் மன்னவரும் கெடுவர்
    எதிரியின்றியே,
    இல்லையென்றும் பெரியோருறவுக் கிணையே! 

    கிராமிய பாணியில்…

    தொணவேணும் தொணவேணும்
    பெரியவுங்க தொணவேணும்,
    தவறுசெஞ்சா தட்டிக்கேக்கும்
    பெரியவங்க தொணவேணும்… 

    தொணயிதுபோல் இல்லயிண்ணா
    தொலஞ்சிபோவான் ராசாவுமே,
    கெடுக்கவரும் எதிரியில்லாமலே
    கெட்டுப்போவான் ராசாவுமே… 

    அதால,
    தொணவேணும் தொணவேணும்
    பெரியவுங்க தொணவேணும்!

     

     

    Share
  • எட்டுத்தொகை நூல்களில் இயைபு வனப்பு

    -பா.ராஜபாண்டி

     

    சங்க இலக்கியம் என்று அழைக்கப்படும் பதினெண்மேற்கணக்கு நூல்கள் அகம், புறம் என்ற இரு பொருண்மைக்கு உட்பட்டு வந்த பாக்களைப் பெற்று அமைந்துள்ளன. இவற்றுள் செவ்வியல் இலக்கியங்களான எட்டுத்தொகை நூல்கள் மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகின்றன. இப்பாக்களில் ஈற்றடியில் கடைசி எழுத்து உயிர்மெய் கலந்து ஏகார ஓசையுடன்  அமைந்து முடிவதாகப் பாடப்பட்டுள்ளன. ஆனால் ஒருசில பாடல்கள் இவ்விதியிலிருந்து சற்று மாறுபட்டு உயிர்மெய்யீராக அல்லாமல் மெய்யெழுத்தாகவே வந்துள்ளன. தொல்காப்பியர் ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு மெய்யெழுத்துக்களும் ஈற்றடியில் இறுதியாக வந்து அமையும் செய்யுட்களை இயைபுவனப்பு எனக் கூறுகின்றார். எட்டுத்தொகை நூல்களில் சில செய்யுட்கள் தொல்காப்பியரின் எண்வகை வனப்புகளுள் ஒன்றான இயைபுவனப்பு செய்யுட் வகையைச் சார்ந்தவையாகும். இந்நூலில் உள்ள தொல்காப்பியர் கூறிய இயைபுவனப்பின் இலக்கண அமைப்பு கொண்ட செய்யுட்களைக் கண்டறிந்து, அவற்றின் பாடுபொருள் நிலையினையும், சிறப்பினையும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

    தொல்காப்பியரின் எண்வகை வனப்பு:

    வனப்பு என்பது அழகு, அலங்காரம் எனப் பொருள்படும். வனப்பின் வகைமை பற்றிக் கூறும் தொல்காப்பியர், “பொருந்தக் கூறிய எட்டொடுந் தொகைஇ” (தொல்.செய்யுளியல்.நூ.1) எனக் கூறுகின்றார். அதாவது, வனப்பு எட்டு வகைப்படும். அவை, 1.அம்மை, 2.அழகு, 3.தொன்மை, 4.தோல், 5.விருந்து, 6.இயைபு, 7.புலன், 8.இழைபு போன்றவையாகும். இவர் செய்யுளியலில் முதலில் கூறிய 26 செய்யுள் உறுப்புகளோடு அம்மை முதலாக இழைபு ஈறாகச் சொல்லப்பட்ட எண்வகை வனப்புகளோடு சேர்த்து மொத்தம் 34 செய்யுள் உறுப்புகள் என்று கூறுகின்றார்.

    தொல்காப்பியரின் இயைபுவனப்பு:

    இயைபு என்னும் வனப்பு இலக்கியச்செய்யுளில் இறுதியில் அமையும் மெல்லின, இடையின எழுத்துக்கள் அடிப்படையில் இனங்காணப்படும் செய்யுளுறுப்பாகும். அதாவது ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு மெய்யெழுத்துக்களில் ஏதேனும் ஒன்று ஈற்றில் பொருள் இயைந்தும், சொல் இயைந்தும் வருவதை இயைபுவனப்பு என்கிறார் தொல்காப்பியர். இதனை,

    “ஞகார முதலா னகார ஈற்றுப்
    புள்ளி இறுதி இயைபெனப் படுமே” (தொல்.செய்.இளம்பூரணர் உரை. நூ.232)

    என்ற நூற்பா மூலம் விளக்குகின்றார். இளம்பூரணர், “ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு மெய்யும் ஈறாக வரும் செய்யுள் இயைபென்னும் செய்யுளுறுப்புகளாகும் என்பார்.”1  இவ்வுறுப்புக்கு உதாரணம் வந்த வழிக் காண்க என்று கூறி, இறுதியில் முடியும் மணிமேகலை பாட்டுக்களைக் கூறுகின்றார். பேராசிரியர், “மேலே கூறப்பட்ட பதினொரு புள்ளியீற்றினுள் ஒன்றினை இறுதியாகச் செய்யுள் பொருள் தொடராகவும், சொற்றொடராகவும் செய்வது இயைபெனப்படும் என்கிறார்.”2 இவர் இயைபு என்பது பொருள் இயைந்தும், சொல் இயைந்தும் வருவது என்கிறார். சான்றாக மணிமேகலையையும், கொங்குவேளிரால் செய்யப்பட்ட கொங்குவேண்மாக்கதையினையும் காட்டுகின்றார். இவர் “அவை இப்பொழுது வீழ்ந்தன போலும்’’ என்று குறிப்பிடுவதன் மூலம் ஏனைய பத்து மெய்களும் ஈற்றில் அமையும் தொடார்நிலைச் செய்யுள் கிடைக்கவில்லை என்பது நன்கு புலனாகின்றது. நச்சினார்க்கினியர், “முன்னர்க் கூறிய பதினொரு புள்ளியுள் ஒன்றனை ஈற்றில் வந்து செய்யுளை பொருட்டொடராகச் செய்வது இயைபெனப்படும் என்கிறார்.”3 சான்றாக மணிமேகலையும், உதயணன் கதையும் இக்காலத்தவர் கூறும் அந்தாதிச் சொற்றொடரும் கொள்க எனக் கூறுகின்றார்.

    தொல்காப்பியர் இயைபு இலக்கண வரலாற்றில் மெல்லினம், இடையினம் எழுத்துக்களையும் கூறுமிடத்து ‘ங்’ என்ற மெய்யினைத் தவிர்த்து,

    “ஞகார முதலா னகார ஈற்றுப்
    புள்ளி யிறுதி இயைபெனப் படுமே” (தொல்.பொருள்.செய்.பேரா.நூ.552)

    என்ற நூற்பாவினையும், மொழிக்கு இறுதியாக வரும் எழுத்துக்களைக் கூறும் போது ‘ங்’ என்ற மெய்யொற்றைத் தவிர்த்து,

    “ஞணநம னயரல வழள வென்னும்
    அப்பதி னொன்றே புள்ளி யிறுதி” (தொல்.எழுத்து.மொழி.நூ.45)

    என்ற நூற்பாவினையும் படைத்துள்ளார். ‘ங்’ என்ற மெய்யொற்றை ஏன் தவிர்த்தார் என்று தெரியவில்லை. மேலும் தொல்காப்பியர் மொழி மரபில் மொழிக்கு ஈறாகும் எழுத்துக்களைக் கூறும்போது,

    “உயிர்ஔ எஞ்சிய இறுதி யாகும்”
    (தொல்.எழுத்து.மொழி.நூ.36) என்றும்,

    “கவவோ டியையின் ஒளவு மாகும்” (தொல்.எழுத்து.மொழி.நூ.37)

    என்றும் நூற்பாக்களைக் கூறுகின்றார். அதாவது, உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டும் மொழிக்கு ஈறாக வரும் என்று கூறுகின்றார்.

    ‘ங்’என்ற மெய்யொற்றைத் தவிர்த்து மீதமுள்ள பதினொரு மெய்யீறுகள் இலக்கியச் செய்யுளின் இறுதியில் தொடர்நிலைச் செய்யுளாக வந்து, அழகுற அமைவது இயைபுவனப்புச் செய்யுளாகும், இதேபோல் தொடை வகையினைக் கூறும்போது ‘இயைபுத் தொடை’ என்றும், வண்ணம் வகையினைக் கூறும்போது ‘இயைபு வண்ணம்’ என்றும் கூறுகின்றார். இவற்றில், இயைபுத் தொடை என்பது அடிதோறும் இறுதி எழுத்தோ அல்லது இறுதிச் சீரோ ஒன்றி வருவதாகும். இதனைத் தொல்காப்பியர்,

    “இறுவாய் ஒப்பின தியைபென மொழிப” (தொல்.பொருள்.செய்.பேரா.நூ.408)

    என்று நூற்பா மூலம் விளக்குகிறார். ‘இயைபு வண்ணம்’ என்பது இடையின எழுத்துக்கள் மிகுதியாக வருவதாகும். இதனைத் தொல்காப்பியர்,

    “இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே” (தொல்.பொருள்.செய்.தமிழண்ணல் உரை.நூ.1474)

    என்ற நூற்பாவின் மூலம் சுட்டுகின்றார். ஆகையால் தொல்காப்பியர் காலத்தில் எண்வகை வனப்புகளில் ஒன்றான இயைபு வனப்பு பிற்காலத்தில் ஒரு தொடை வகையாகக் கருதப்பெற்றது எனலாம்.

    தொல்காப்பியர் இயைபு இலக்கண வரலாற்றில் மெல்லினம், இடையினம் எழுத்துக்களையும் கூறுமிடத்து ‘ங்’ என்ற மெய்யினைத் தவிர்த்துள்ளார். மீதமுள்ள பதினொரு மெய்களும் இலக்கியச்செய்யுளில் இறுதியில் வந்து அழகுற அமைவது இயைபுவனப்பு செய்யுளுறுப்பாகும். க.வெள்ளைவாரணார், ”ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு புள்ளியுள் ஒன்றினை இறுதியாகக் கொண்டு முடியும் செய்யுள் இயைபு என்னும் வனப்புடையது என்பார்.”4 ச.பாலசுந்தரம், “விட்டிசையின்றிச் சொற்களைப் புணரியல் விதிப்படி இயைந்து யாப்பது இயைபெனப்படும். ஞகார முதலா னகாரம் ஈறாக மொழியிறுதி நிற்கும் புள்ளி எழுத்துப் பதினொன்றையும் வருமொழியொடு புணர்த்தி யாப்பது இயைபென்னும் உறுப்பாகும். உரையாசிரியர்கள், பதினொரு மெய்யெழுத்துகளும் செய்யுள் ஈறாக நிற்குமாறு அமைதல் இயைபு என்பர். ஆனால் ஞ.ந.வ ஆகிய ஈறுகள் அங்கனம் நிற்றற்குரியன அல்ல, ஆகலின் அவர்கள் கருத்து பொருந்துமாறு இல்லை என்பார்.”5 இவரின் கருத்து தொல்காப்பிய எழுத்ததிகார மொழிமரபு என்ற இயலின்,

    “உச்ச காரமோடு  நகாரம் சிவணும்” (தொல்.எழுத்து.மொழிமரபு.நூ.46)

    என்ற நூற்பாவினையும்,

    “உப்ப காரமோடு  ஞகாரையும் அற்றே
    அப்பொருள் இரட்டாது இவணை யான” (தொல்.எழுத்து.மொழிமரபு.நூ.47)

    என்ற நூற்பாவினையும்,

    “வகரக் கிளவி நான்மொழி ஈற்றது” (தொல்.எழுத்து.மொழிமரபு.நூ.48)

    என்ற நூற்பாவினையும் ஒட்டியே அமைந்துள்ளது. அதாவது நகர மெய் பொருந், வெரிந் என்றும், ஞகர மெய் உரிஞ் என்றும், வகர மெய் அவ், இவ், உவ், தெவ் என்றும் வருகின்ற சொற்களின் மட்டும் இறுதியில் வரும் என்ற கருத்துரை உள்ளதைக் கொண்டு அமைந்துள்ளன. ஆனால் உரையாசிரியர்கள் கருத்தானது,

    “ஞணநம னயரல வழள வென்னும்
    அப்பதி னொன்றே புள்ளி யிறுதி” (தொல்.எழுத்து.மொழிமரபு.நூ.45)

    என்ற நூற்பாவினை ஒட்டியே அமைந்துள்ளது. அடிகளாசிரியர், “இயைபு என்பன மேலே கண்ட பதினொரு புள்ளி ஈறாய் வந்த பாட்டெல்லாம்”6 என்றும், தமிழண்ணல், “ஞகரமெய், னகரமெய் ஆகியன செய்யுள் இறுதியில் வருமாறு இயற்றுதல்”7 என்றும் கூறுகின்றனர். இவ்வாறு இயைபுவனப்பு என்பது செய்யுளின் இறுதியில் வரும் மெல்லினம் (ங் தவிர) இடையினம் ஆகிய மெய்யெழுத்துக்களின் இலக்கணம் கூறும் உறுப்பாக உள்ளது.

    தொல்காப்பியர் மெல்லினம், இடையினம் சார்ந்த எழுத்துக்கள் (ஙகரத்தை தவிர) மொழிக்கு இறுதியில் வரும் என்று கூறியவர் வல்லின எழுத்துக்களில் குற்றியலுகரம் மொழிக்கு இறுதியில் வரும் என்பதை புணரியலில்,

    “அறுநான்கு ஈற்றொடு நெறிநின்று இயலும்”
    (தொல்.எழுத்து.புணரியல்.நூ.1)

    என்ற நூற்பாவில் சுட்டிச் செல்கின்றார். இவ்வாறு மொழிக்கு இறுதியில் இருபத்தாறு எழுத்துக்கள் வரும் என்று கூறியவர் அவற்றுள் உயிரீற்றுக் குற்றியலுகர ஈறுகளை ஒழித்து, ஏனைய பதினொரு ஒற்றுகளே இயைபென்னும் இலக்கியத்திற்கு வரும் என்று கூறுகின்றார். எனவே ஒற்றுகள் என்பது இயைபு வனப்பிற்குச் சிறந்த இயல்பாகும் என்பதை உணர முடிகின்றது.

    தமிழண்ணல் “ஞ,ண,ந,ம,ன என்ற புள்ளியிறுதியில் முடியும் பாடல்கள் இயைபு வனப்பாகும். இந்நூற்பாவின் பொருள் விளங்கவில்லை. அவ்வாறு முடியும் பாடல்கள் எவையும் இல்லை’’8 என்றும், “இயைபு வனப்பு என்பது ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு மெய்யும் ஈறாக வரும் செய்யுட்கள். இது காலத்தால் மறக்கப்பட்ட ஒரு வகையாகத் தோன்றுகின்றது. நெடும்பாடல்களின் தொகுப்பு போன்ற பழங்காப்பியங்களில் இவ்வியைபு வனப்பு அமையும்”9  என்றும் எடுத்துரைக்கின்றார்.

    சோ.ந.கந்தசாமி, “செய்யுளின் இறுதி எழுத்து கூறப்பட்ட புள்ளி எழுத்துக்களில் ஒன்றாக வருவது இயைபு வனப்பாகும்”10   என்றும், சொ.பரமசிவம் “மெல்லினம் ஆறனுள் ஞ்,ண்,ந்,ம்,ன் என்னும் ஐந்தும், ய்,ர்,ல்,வ்,ழ்,ள் என்ற இடையினம் ஆறும் சேர்ந்த பதினொரு புள்ளி எழுத்துக்கள் ஈறாக வந்த பாட்டுக்கு இயைபுவனப்பு என்று பெயர். இயைபுப் பொருள் தொடராகவும், சொற்றொடராவும் செய்யப்படும் பாட்டு’’11 என்றும், வை.கா.சிவப்பிரகாசம் “ஞகரம் முதலா  னகரம் ஈறாகவுள்ள பதினொரு மெய்கள் அமைவது இறுதியில் இயைபு வனப்பின் சிறப்பு’’12   என்றும் கூறுகின்றனர்.

    இவ்வாறு இயைபு வனப்பு என்பது செய்யுளின் இறுதியில் வரும் மெல்லினம் (ங் தவிர) இடையினம் ஆகிய மெய்யெழுத்துக்களின் இலக்கணம் கூறும் உறுப்பாக உள்ளது. தொல்காப்பியர் மொழி இறுதியில் வரும் எழுத்துக்களைப் பற்றி மொழி மரபில் நூற்பா 36,37 ஆகியவற்றில் கூறுகின்றார். இவ்வாறு மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்களைப் பற்றி கூறியவர் ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு மெய்களே இயைபென்னும் இலக்கியத்திற்கு வரும் என்று கூறுகின்றார். பிற்கால இலக்கண நூலான யாப்பருங்கல விருத்தியுரை, “ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் சொற்றொடராய்ச் செய்யப்படும் பாட்டு இயைபு எனப்படும்”13  என்று கூறுகின்றது. இவ்வாறு பதினொரு மெய்களும் ஈற்றில் அமைவது இயைபுவனப்பு இலக்கியம் என்று இலக்கணம் உள்ளதே தவிர, இவற்றுக்கான இலக்கியம் மறைந்தன  போலும் என்பதும் இடைக்கால உரையாசிரியர்களின் கருத்தாக உள்ளது.

    எட்டுத்தொகை நூல்களில் இயைபு வனப்பு:

    எட்டுத்தொகை நூல்களின் செய்யுட்களில் தொல்காப்பியரின் இயைபு வனப்பில் அமைந்த செய்யுட்களைக் கீழ்க்கண்டவாறு காணலாம்.

    ஐங்குறுநூற்றில் பொருளீட்டச் சென்ற தலைவன் தன் மனைக்குக் காலம் தாழ்த்தி வந்தவனைக் கண்ட தலைவி அவன் புறத்தொழுக்கம் (பரத்தமை ஒழுக்கம்) புரிந்துள்ளான் என வருந்துகின்றாள். அவ்விடத்தில் தோழி தலைவனின் நல்லொழுக்கத்தினைக் கூறித் தெளிவுபடுத்துகின்றாள். இதனை ஓரம்போகியார்,

    “செந்நெலஞ் செறுவிற் கதிர்கொண்டு கள்வன்
    றண்ணக மண்ணளைச் செல்லு மூரற்
    கெல்வளை நெகிழச் சாஅ
    யல்லல் உழைப்பது எவன் கொல் அன்னாய்” (ஐங்குறுநூறு. பா-27)  என்ற பாடல் மூலம் சுட்டுகின்றார். செந்நெற் கதிர்களை நண்டுகள் மண்ணாலான குளிர்ந்த வளையத்திற்குள் (நண்டுபொந்து) கொண்டு சொல்வதைப் போன்று தலைவன் தன் முயற்சியால் பொருளீட்டித் தன் மனைக்கு வருவான் எனத் தலைவனின் கடமையைத் தோழி தலைவனிடம் கூறுகின்றாள். இப்பாடலில் ஈற்றடியின் கடைசிச்சொல் “அன்னாய்” என்று “யகர” மெய்யெழுத்தில் வந்து முடிவதைக் காணமுடிகிறது.தலைவன் மீது காதல்மனம் கொண்ட தலைவி அவன் பிரிவினை நினைத்து உடல் மெலிவுற்றாள். செவிலி உடல் மெலிவிற்குக் காரணம் அணங்கினால் வந்திருக்கும் என எண்ணி வெறியாட்டு நிகழ்த்த முயன்றாள். அதனை அறிந்த தோழி தலைவியின் கற்பினைக் காப்பதற்குச் செவிலியிடம் தலைவியின் உடல் மெலிவுக்கான காரணத்தைத் தோழி அறத்தோடு நின்று கூறுகின்றாள். இதனை ஓரம்போகியார்,

    “உண்டுறை யணங்கிவ ளுறைநோ யாயிற்
    றண்சேறு கள்வன் வார்க்கு மூரற்
    கொண்டொடி நெகிழச் சாஅய்
    மென்றோள் பசப்ப தெவன்கொ லன்னாய்” (ஐங்குறுநூறு.பா-28)

    என்ற பாடலின் மூலமாகச் சுட்டுகின்றார்.பசலை நோயானது ஊரார் நீர் எடுக்கும் துறையின்கண் உள்ள தெய்வத்தால் உண்டானதல்ல. தலைவியின்மேல் உள்ள இந்நோய் குளிர்ந்த சேற்றில் நண்டுகள் ஊர்ந்து கோலம் போடுவதற்கு ஏற்ற ஊரினையுடைய தலைவனால் வந்த காதலே, தலைவியின் உடல் மெலிந்து ஒளிமிக்க வளையல் நெகிழ்வதற்கு காரணம் எனத் தோழி தன் தாயான செவிலியிடம் கூறுகின்றாள். இப்பாடலில் “உண்துறை அணங்கு” என்ற சொல் ஊரில் குடிநீர் எடுக்கும் இடத்தினையும், அவ்விடத்தில் மனிதர்களைத் தீண்டி வருத்தும் அணங்கு (பேய் அல்லது தெய்வம்) தங்கும் என்ற பண்டைய மக்களின் நம்பிக்கையும் கூறப்பட்டுள்ளன. இப்பாடலில் ஈற்றடியின் இறுதி எழுத்து யகர மெய்யுடன் முடிவதைக் காணமுடிகின்றது.

    இவ்வாறு ஐங்குறுநூற்றில் மூன்றாம் பத்தான கள்வன் பத்தில் உள்ள பத்துப்பாடல்களும், யகர மெய்யெழுத்து இறுதியில் வந்து முடிவதாகப் பாடப்பட்டுள்ளன. இப்பாடல்களில் அன்னாய் என்ற சொல் தலைவி, தோழி, செவிலி, ஆகியோரைக் குறித்து வருகின்றது. இப்பாடலில் ஈற்றடியில் முடியும் அன்னாய் என்ற சொல் கூற்றின் பொருளை விளக்க வருமிடத்து முதல் சொல்லாக வந்து நிற்கின்றது. எனவே, உரையாசிரியர்களின் விளக்க உரைகளின்படி யகர மெய்யுடன் அமைந்த இப்பாடல்களை இயைபு வனப்புச் செய்யுளாகக் கொள்ளலாம். மேலும் கபிலரின் குறிஞ்சித் திணையில் ‘அன்னாய்ப் பத்து’ என்னும் பகுதியில் ‘அன்னாய்’என யகரமெய் ஈற்றில் வந்து முடிவதாக பத்துப்பாடல்கள் அமைந்துள்ளன. அவற்றுள் ‘அன்னாய்’ என்ற சொல் தலைவியைக் குறிப்பதாக ஆறு பாடல்களிலும், செவிலியைக் குறிப்பதாக இரண்டு பாடல்களிலும், தோழியைக் குறிப்பதாக இரண்டு பாடல்களிலும் இடம்பெற்றுள்ளன.

    எனவே ‘அன்னாய்’என்ற சொல் தோழி, செவிலி, தலைவி ஆகியோரைக் குறித்து நிற்கின்றது. தோழி தலைவியை பெருமாட்டி, அன்னை என்று அழைப்பதாகவும், தலைவி தோழியை தோழியே என்று விளித்து அழைப்பதாகவும், தோழி செவிலியை அன்னை, தாய் என அழைப்பதாகவும் ‘அன்னாய்’ என்ற சொல் பொருள்படுவதை உணரமுடிகின்றது.

    தோழி தலைவியிடம் கேட்காமலே தலைவனிடம் சென்று இரவுக்குறி நேர்ந்து பின்னர் தலைவியிடம் தலைவன் இரவுக்குறியில் வருவதை உணர்த்தியபொழுது தலைவி நீ நேர்ந்தமை நன்றே எனத் தோழியிடம் தலைவி கூறுகின்றாள். இதனை மாடலூர் கிழார்,

    “ சேணோன்  மாட்டிய நறும்புகை ஞெகிழி
    வான மீனின் வயின்வயின் இமைக்கும்
    ஓங்குமலை நாடன் சாந்துபுலர் அகலம்
    உள்ளின், உள்நோய் மல்கும்:
    புல்லின் மாய்வது எவன்கொல்? – அன்னாய்” (குறுந்தொகை.பா.150)

    என்ற பாடல் மூலம் சுட்டுகின்றார். ‘அன்னாய்’ என்ற சொல் இறுதியில் வந்து முடிவதால் யகரமெய் ஈற்றில் வருகிறது. இப்பாடலில் அன்னாய் என்பது தோழியைக் குறிக்க வரும் சொல்லாகும். மேலும், சங்க நூலான எட்டுத்தொகை நூல்களில் பல பாடல்கள் பல மெய்யெழுத்துக்களை ஈற்றில் எழுத்துக்களாகக் கொண்டு முடிகின்றது.

    இயற்கைப் புணார்ச்சிக்குப் பின்னர் தலைவி மாட்டு நிகழும் செயல் வேறுபாடுகளைத் தலைவியது நாற்றம், தோற்றம் முதலான ஏழன் முதலாகத் தலைவியின் ஒழுக்கத்தை உணர்ந்த தோழி, தலைவி தன்னை மறையாமை காரணமாக மெய்யாகவும், பொய்யாகவும் பிழை நிகழாவண்ணம் கவர் பொருள் நாட்டத்தாள் என்று புனைந்து தலைமகனுக்குக் கூறுகின்றாள். இதனைக் கபிலர்,

    கயமலர் உண்கண்ணாய் காணாய் ஒருவன்
    ஆங்கண் உடைய அவன்”(கலித்தொகை.பா.37)

    என்ற பாடல் மூலம் விளக்குகின்றார். இப்பாடலில் இறுதியடியில் இறுதி எழுத்தானது ‘னகர’ மெய்யான ‘ன்’ என்ற மெய்யெழுத்து ‘அவன்’ என்று பயின்று வந்துள்ளது. இதே போன்று கலி.51(அவன்), கல்-56(உடையான்), கல்-84 (தவறுடையேன்), கலி-86 (மகன்), கலி-11(மன்) போன்ற பாடல்களில் இறுதியடியில் இறுதி எழுத்தாக ‘னகர’ மெய்யான ‘ன்’ என்ற எழுத்தானது பயின்று வந்துள்ளதைக் காணமுடிகின்றது.

    தலைமகளது குறிப்பினைக் கண்டு பிரிய இருக்கின்றான் என ஐயம் கொண்ட தலைவி, ஐயுற்றுச் செல்கின்ற அக்காலத்து தலைவன் கனவில் அரற்றினமைக் கேட்ட தலைவி, பொருள் வயிற் பிரிவான் எனத் துணிந்து ஆற்றாதவளாய்த் தோழியிடம் கூறுகின்றாள். இதனைப் பெருங்கடுங்கோ,

    நெஞ்சு நடுக்குறக் கேட்டும் கடுத்தும் தாம்
    போயின்று சொல் என் உயிர்” (கலித்தொகை.பா.24)

    என்ற பாடல் மூலம் தெளிவுபடுத்துகின்றார். இப்பாடலின் இறுதியடியில் இறுதி எழுத்தானது ‘ரகர’ மெய்யான ‘ர்’ என்ற எழுத்தினைக் கொண்டு ‘உயிர்’ என அமைந்துள்ளது. இதே போன்று கலி-141 (தமர்), கலி-145 (துயர்) போன்ற பாடல்களில் ‘ரகர’ மெய்யான ‘ர்’ என்னும் மெய்யெழுத்து பாடலின் இறுதி எழுத்தாகப் பயின்று வருவதைக் காணலாம்.

    தலைவன் பரத்தையர் சேரியிலிருந்து வந்த பொழுது காமக்கிழத்தி தன் அன்பு மிகுதியால் ஊடியதைக் கண்ட தலைவன் அங்கு சென்றான். இதனைக் கண்ட காமக்கிழத்தி ஊடல் தீர்கின்றாளாயாகக் கூறினாள். இதனை மருதனிளநாகனார்,

    பொது அவிழ் பனிப்பொய்கை புதுவது தளைவிட்ட
    வீழ்ந்தார் விருப்பு அற்றக்கால்.” (கலித்தொகை.பா.69)

    என்ற பாடல் மூலம் விளக்குகின்றார். இப்பாடலின் இறுதியடியில் இறுதி எழுத்தாக ‘லகர’ மெய்யான ‘ல்’ என்னும் மெய்யெழுத்து ‘அற்றக்கால்’ என பயின்று வந்துள்ளது. இதேபோன்று கலி-70 (கால்), கலி-82(தொழில்), கலி-85 (பால்), கலி-91 (செயல்), கலி-96 (செல்) போன்ற பாடல்களின் இறுதியில் ‘லகர’ மெய்யான ‘ல்’ என்னும் எழுத்து பயின்று வந்தமையை உணர முடிகின்றது.

    தலைவன் பரத்தையிடமிருந்து வீட்டுக்கு வந்து, இல்லத்துள்  நுழையாமல் வேலிக்கு அப்பால் நிற்கின்றானாகத் தலைவி தலைமகனுக்கு உரைக்கின்றாள். இதனை மருதனிளநாகனார்,

    நயம் தலை மாறுவார் மாறாக மாறா
    கோதை பார்ப்பு ஆட காண்குவம்.” (கலித்தொகை.பா.80)

    என்ற பாடல் மூலம் விளக்குகின்றார். இப்பாடலின் இறுதியடியில் மகர மெய்யான ‘ம்’ என்ற மெய்யெழுத்து இறுதி எழுத்தாக ‘காண்குவம்’ எனப் பயின்று வந்துள்ளது. இதேபோன்று கலி-81(நாம்), கலி-90(உடையேம்), கலி-109(வரும்) போன்ற பாடல்களில் இறுதியடியில் இறுதி எழுத்தாக மகர மெய்யான  ம்’ என்ற மெய்யெழுத்து பயின்று வந்துள்ளதைக் காணமுடிகின்றது.

    தலைவனது கொடுமை உள்ளத்தைச் சுடுகின்றது என்று கூறிய தலைவியிடம் பாணன் முதலிய வாயிலோர் நயந்து கூறும் வழி, தலைவியானவள் பரத்தையரைக் குறும்பூழ்ப் பறவை என்று கூறுகின்றாள். இதனை மருதநிளநாகனார்,

    நில் ஆங்கு நில் ஆங்கு இவார்தரல் எல்லாநீ
    நடலைப்பட்டு  எல்லாம்  நின் பூழ்.” (கலித்தொகை.பா.95)

    என்ற பாடல் மூலம் விளக்குகிறார். இப்பாடலின் இறுதியடியில் ழகர மெய்யான ‘ழ்’ என்னும் மெய்யெழுத்து ‘பூழ்’ என்று இறுதி எழுத்தாகப் பயின்று வந்துள்ளது.

    பாண்டியனுடைய தலைநகராகிய மதுரை அறிவானே ஆராய்ந்து நோக்குமிடத்து இவ்வுலகினுள்ள ஏனைய நகரங்கள் அனைத்தினும் சிறந்தது என்பதை,

    உலகம் ஒருநிறையாத் தானோர் நிறையாப்
    புலவார் புலக்கோலால் தூக்க-உலகனைத்தும்
    தான்வாட வாடத தன்மைத்தே
    தென்னவன்
    நான்மடக் கூடல் நகர்.”  (பரிபாடல்திரட்டு, ஆறாம்பாடல். மதுரை.பக்.475)

    என்ற பாடல் மூலம் அறியமுடிகின்றது. இப்பாடலானது பாண்டியனது மதுரை நகர் நல்லிசைப்புலவர்கள் தமது அறிவாகிய துலாக்கோலாலே இவ்வுலகத்தில் உள்ள நகரங்கள் அனைத்தினது பெருமையினையும் ஒரு தட்டிலிடும் நிறையாகவும், தனது பெருமையை ஒரு தட்டிலிடும் நிறையாகவும் கொண்டு சீர்தூக்குமிடத்து உலகத்தில் உள்ள அனைத்து நகரங்களின் பெருமையும் தாழ்ந்து நிற்க, தன்பெருமை அங்கனம் தாழ்ந்து நிற்காமல் சிறப்பினைப் பெறும் தன்மை உடைத்ததாகும் என்று கூறுகின்றது. இப்பாடலின் கடைசி அடியின் இறுதிச் சீரில் இறுதி எழுத்தானது இயைபு வனப்பின் இலக்கணமான ரகர ஒற்று இடம் பெற்றுள்ளதை உணரலாம்.

    முடிவுகள்

    தொல்காப்பியர் கூறிய இயைபுவனப்பின் பாடுபொருளானது ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு மெய்யெழுத்துக்கள் பாடலின் இறுதியில் பயின்று வருவன என்பதாகும். எட்டுத்தொகையில் பதினொரு மெய்களில் ன்,ர்,ல்,ம்,ழ்,ய் போன்ற மெய்யெழுத்துகளே பாடலின் இறுதியில் பயின்று வந்துள்ளது. மற்ற ஐந்து மெய்களான ண்,ஞ்,ந்,வ்,ள் போன்றவை பயின்று வரவில்லை. சங்க இலக்கியங்களுக்கு உரித்தான ஏகார ஓசையுடன் எழுத்துக்கள் வராமல் இயைபுவனப்பின் பாடுபொருளான பதினொரு மெய்யெழுத்துக்கள் இறுதியாக வருவதால் இப்பாடல்களின் அடியானது மிகச் சிறப்பினைப் பெறுகிறது. இவை தவிர மற்ற உயிர் மெய் எழுத்துகளும் எட்டுத்தொகையில் பயின்று வருவதைக் காணலாம். சங்க இலக்கியத்திற்கான ஏகார ஓசையில் முடியும் என்ற பாடுபொருள் அமைப்பு, இயைபுவனப்பின் பாடுபொருளான பதினொரு மெய்யெழுத்துக்களின் வழியில் பாடுபொருள் மாற்றி அமைவதால் பாடல்கள் மிகச்சிறப்பினைப் பெற்றுள்ளமையினை உணரலாம்.

    ***

    குறிப்புகள்

    1. தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணர் உரை,ப.167
    2. தொல்காப்பியம், பொருளதிகாரம், பேராசிரியர் உரை,பக்.429-430
    3. தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சர் உரை,ப.240
    4. வெள்ளைவாரணர்.க, செய்யுளியல் உரைவளம்,ப.1031
    5. பாலசுந்தரம்.ச, செய்யுள் உறுப்புக்கள்,ப.136.
    6. அடிகளாசிரியர்(ப), தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணர் உரை,ப.428
    7. தமிழண்ணல், சங்க மரபு,ப.89
    8. தமிழண்ணல், தொல்காப்பியரின் இலக்கியக்கொள்கைகள்,பாகம்-    2,ப.97
    9. தமிழண்ணல், இந்திய இலக்கியச் சிற்பிகள்,தொல்காப்பியர்,ப.108

    10.கந்தசாமி. சோ.ந, தமிழ் யப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்,         பாகம்-1,ப.282

    1. பரமசிவம். சொ.ம, நற்றமிழ் இலக்கணம்,ப.645
    2. சிவப்பிரகாசம். வை.கா, செந்தமிழ்ச் செல்வி, வனப்பிலக்கியமும் இலக்கிய வனப்பும்,ப.425
    3. யப்பருங்கல விருத்தியுரை.ப.172

     ***

    துணை நின்றவை:

    குறுந்தொகை மூலமும் உரையும், (2009), பொ.வே.சோமசுந்தரனார் உரை, கழக வெளியீடு, 522,டி.டி.கே.சாலை, சென்னை-18.

    ஐங்குறுநூறு மூலமும் உரையும், (2009), பொ,வே.சோமசுந்தரனார் உரை, கழக வெளியீடு, 522,டி.டி.கே.சாலை, சென்னை-18

    கலித்தொகை. மூலமும் உரையும், (2007), நச்சர் உரை, கழக வெளியீடு, 522,டி.டி.கே.சாலை, சென்னை-18

    பரிபாடல் மூலமும் உரையும், (2007) பொ,வே.சோமசுந்தரனார் உரை, கழக வெளியீடு, 522,டி.டி.கே.சாலை, சென்னை-18

    தொல்காப்பியம்,பொருளதிகாரம், (2001), கழக வெளியீடு,

    522,டி.டி.கே.சாலை, சென்னை-18

    தமிழண்ணல் – தொல்காப்பியம்,பொருளதிகாரம் மூலமும் கருத்துரையும், (2008), மீனாட்சி புத்தக நிலையம்,

    48,தானப்ப முதலி தெரு, மதுரை-1

    பாலசுந்தரம்.ச – தொல்காப்பியம்,பொருளதிகாரம்,காண்டிகையுரை (1991), தாமரை வெளியீட்டகம்,367,மேலவீதி, தஞ்சாவூர்-9

    வெள்ளைவாரணர்.க – தொல்காப்பியம், செய்யுளியல் உரைவளம் (1989),மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை, மதுரை-21

    பரமசிவம்.சொ.ம – நற்றமிழ் இலக்கணம்,(2010), பட்டுப் பதிப்பகம்,

    1269,32-ம் தெரு, அண்ணா நகர் மேற்கு, கம்பர் குடியிருப்பு,

    சென்னை-40

    தமிழண்ணல் – சங்க மரபு, (1991), மீனாட்சி புத்தக நிலையம்,

    48, தானப்ப முதலி தெரு, மதுரை-1

    தமிழண்ணல் – தொல்காப்பியரின் இலக்கியக்கொள்கைகள்,பாகம்-2,

    செல்லப்பா பதிப்பகம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை-1

    சிவப்பிரகாசம்.வை,கா –  செந்தமிழ்ச் செல்வி, வனப்பிலக்கியமும் இலக்கிய வனப்பும், (1963) தமிழ் பண்பாட்டு மையம்,மதுரை-1

    ***

    -பா.ராஜபாண்டி
    முனைவா் பட்ட ஆய்வாளர்
    தமிழ்த்துறை
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46.

    Email:rajapandiraja1986@gmail.com

     

     

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல்- 44

    க. பாலசுப்பிரமணியன்

    மொழி கற்றலில் சில பார்வைகள்

    education

    மொழி கற்றலைப் பற்றிய பலவிதமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மெரஸினிச் என்ற மூளை நரம்பியல் விஞ்ஞானி இதைப்பற்றிய கருத்து தெரிவிக்கையில் கூறுவதாவது: “வளரும் பருவத்தில்   எட்டு வயது முதல் மூளையில் மொழிகள் கற்பதற்கான  முக்கிய பகுதி (critical Area ) தயாராகிறது. இந்தப் பருவத்தில் மொழிகள்  ஒன்றோ, இரண்டோ அல்லது இதை விட அதிகமாக மொழிகளோ கற்பதற்கு மூளையின் அந்தப் பகுதி  மிகவும்  பயனுள்ளதாக அமைகின்றது. எல்லா மொழிகளும் அதன் உச்சரிப்புகளும் அந்த ஒரே இடத்தில் பதிவு பெறுகின்றன. இதனால் அந்த வயதில் எல்லா மொழிகளும் அநேகமாக அவைகளுக்கு உள்ள இயற்கையான ஒலிகள் மற்றும் உச்சரிப்புக்களுடனேயே வெளிப்படுகின்றன.” இந்த வயது வரம்புக்கு அப்பால் கற்கப்படும் மொழிகள் தாய்மொழி போலவோ அல்லது கற்கப்படும்  முதல் மொழிபோலவோ எளிதாக கற்கப்படுவதில்லை. மற்றும் அவைகளின் உச்சரிப்புகள் பொதுவாக முதல் மொழி போலவோ அல்லது அதைப் பொதுவாக பேசுபவர்கள் உச்சரிப்புப் போலவோ அமைவதில்லை.

    இதற்கான காரணத்தை விளக்கும் நிபுணர்கள் கருத்து இதோ :

    “Language Development has a critical period that begins in infancy and ends between eight years and puberty. After the critical period closes, a person’s ability to learn a second language without an accent is limited. In fact, second languages learned after the critical period are not processed in the same part of the brain as is the native language.”

    இதற்குக் காரணம் கற்றுக்கொள்ளப்படும் வளரும் பருவத்திற்குப் பின்   இரண்டாவது மொழி கற்றுக்கொள்ளும் பொழுது அந்தக் கற்றல் முதல் மொழி பதிவு செய்யப்பட்ட இடத்தில் இல்லாமல் வேறு பகுதியில் பதிவு ஆகின்றது.  ஆகவே முதல் மொழி எவ்வளவு சரளமாகப் பேசப்படுகின்றதோ அது போல் இரண்டாவது மொழி பேசப்படுவதில்லை. இதைப்பற்றிய கருத்துக்களை வெளியிடும் Dr நார்மன் டொய்ட்ஜ் என்பவர் கூறுவதாவது ”   If two languages are learned at the same time, during the critical period, both get a foothold. Brain scans, show that in a bilingual child all the sounds of its two languages share a single map, a library of sounds from both the languages.”

    ஆனால் சில நேரங்களில் நாம் இதற்கு சில விதி விலக்குகளையும்  பார்க்கலாம்.

    மூளையின் மாறும் மற்றும் விரிவாக்கம் ( Neuro Plasticity ) பற்றிய ஆராய்ச்சிகள் அதிகப்படியான கற்றலுக்கு  மூளை தயாராக இருக்கிறது என்பதையும், வளர்ச்சியின் பின் பருவத்தில் கற்கப்படும் மொழிகள் எவ்வாறு சூழ்நிலைகள் மற்றும்  மாறுபட்ட முறைகள் மூலமாக முதல் மொழியைப்போல் கற்றுக்கொள்ள முடியும் என்பதையும் விளக்குகின்றன. ஆனால் இதற்கு அதிக அளவிலான முயற்சியும் நேரமும் தேவைப்படும். இந்த விதமான கற்றல்  இயற்கையான கற்றலிலிருந்து சற்றே மாறுபட்டு இருக்க வாய்ப்பு உண்டு. ஆகவே இளமைப் பருவத்தில் மொழிகளைக் கற்றலும் அவைகளின்  பேசும் எழுதும் திறன்களை வளர்த்தலும் அவசியம் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகின்றது.

    ஒருவேளை வளரும் பருவத்தில் அதிகமான மொழிகளைக் கற்றுக்கொள்ளாவிட்டால் மூளையின் சார்ந்த பகுதிகள் காலியாகவோ அல்லது வேலையற்றதாகவோ இருப்பதில்லை என்பதும் ஆராய்ச்சிகள் மூலமாக விளங்குகின்றன. அந்தப் பகுதி முதல் மொழியின் வளத்தையும் திறன்களையும் மேலும் வளர்ப்பதற்கும் போற்றுவதற்கும் உதவியாக அமைகின்றது. இந்த ஆராய்ச்சிகளின் அடிப்படையில் மூளை நரம்பியல் மற்றும் கற்றல் பற்றிய ஆராய்ச்சி வல்லுநர்கள்  நமக்குச் சொல்லும் மந்திரமாவது ” பயன்படுத்து அல்லது இழந்துவிடு ” (Use it or Lose it). ஆகவே மூளையைத் தொடர்ந்து பயன்படுத்துதல் அவசியமாகின்றது.

    மேலும் மொழிகளைக் கற்றுக்கொள்ளும் பொழுது விழிகளால் பார்த்துக் கற்றுக்கொள்ளும் திறன் படைத்த  மாணவர்களை விட  கேட்டுக் கற்றுக்கொள்ளும் மாணவர்கள் வேகமாகவும் திறம்படவும் கற்றுக்கொள்கிறார்கள் என்று  கருதப்படுகின்றது. ஆகவேதான் மொழி கற்றலில்  ஆசிரியர்களின் பேசும் திறன் மற்றும் உரையாடும் திறன், விளக்கும் திறன், கற்பனைகளைத் தீண்டிவிடும் தூண்டிவிடும் திறன் ஆகியவை  சிறப்புக்கு பெருமளவில் பயனுள்ளதாக  அமைகின்றன.

    சிறிய வகுப்புகள் முதல் முதுநிலைக் கல்வி வரையிலான மொழி வகுப்புகள் ஆர்வத்தை உண்டுபண்ணுவதாகவும் மொழி அறிவினை (Linguistic Intelligence) வளர்ப்பதாகவும் அமைதல் அவசியம்.

    தொடரும்..

    Share
  • சுகவனம் – 6

    -இன்னம்பூரான்
    செப்டம்பர் 9, 2016

     

    innamburan

    நாளை வெளிவரும் லான்ஸெட் என்ற உலகபுகழ் வாய்ந்த மருத்துவ இதழ் ஒரு மாபெரும் சாதனையை வெளிக்கொணரும். அதுவும் ஒரு நாட்டின் சுகாதார அமைச்சரும், உலக சுகாதார மையத்தின் பிராந்திய தலைவரும் கலந்தாலோசித்து எழுதியதை நாம் யாவரும் படித்து, இயங்கி, நமது சுகவனத்தை போற்ற வேண்டும்.

    ஶ்ரீலங்காவின் சாதனை: மலேரியாவை ஒழித்ததும், அதற்கான நற்சான்றை நான்கு நாட்களுக்கு முன்பு WHO விடமிருந்து பெற்றுக்கொண்டதும். உள்நாட்டு போர் நடந்து கொண்டிருந்த போதே, இந்த ஆய்வும், செயலும் நடந்து வந்தன. அந்த நாட்டின் மக்களில் பெரும்பாலோர் கீழ் நடுத்தர வகையினர். 80%  கிராமங்களில் வாழ்பவர்கள். கொசுவின் சிரஞ்சீவி வாழ்க்கைக்கு வேறு ஒன்றும் வேண்டாம். அத்தனை சொகுசு கொசுவுக்கு அங்கே! கலோனிய ஆட்சியில் மலேரியாவால் மாண்டோர், லக்ஷக்கணக்கில். 1934-35 காலகட்டத்தில் மலேரியா எங்கெங்கும் தீ போல் பரவி, ஜனத்தொகையில் 1.5% மக்களை விழுங்கியது.

    அந்த நாடு 1945ல் டி.டி.டி தெளிப்பதை மும்முரமாக கையாண்டு பலன் கண்டாலும், அந்த முறையின் விளைவுகளை கண்டு நிறுத்தியவுடன், நாட்டில் மலேரியா தாக்கம் 17 பேர் மட்டுமே என்று 1963ல் சாதனை படைத்திருந்தாலும், கொசு புத்துயிர் பெற்றது; மலேரியா 1967-69 காலகட்டத்தில் 15 லக்ஷம் பேர் மலேரியாவினால் தாக்கப்பட்டனர்.

    1980க்கு பிறகு பத்து வருடங்களில் ஶ்ரீலங்கா கொசுவை பபமுனைகளில் தாக்கி ஒழிக்க முற்பட்டனர் – நீர்நிலைகளிலும், ஈரப்பதமுள்ள விளைநிலங்களிலும் கொசுவை அழிப்பது, அபாயம் நிறைந்த பகுதிகளில் மட்டும் மருந்து தெளிப்பது, டி.டி.டி.யை தவிர்த்த பூச்சிக்கொல்லிகள், சிசுவதம், கொசுவலை, பரந்த இடைவிடாத ஆழ்ந்த மேற்பார்வை, வகையறா.

    கொசு என்றால் சும்மாவா? இதுவெல்லாம் போதவில்லை. 1980, 1980, 1987 களில் ஆறு லக்ஷம் கேசுகள். 264,349 1999ல். உடனடி மருத்துவம், சாவுகளை குறைத்தது. இந்த நூற்றாண்டு தொடக்கத்தில்  அங்கு ஒரு திருப்புமுனை அமைந்தது எனலாம். ஒரே வருடத்தில் 68% குறைந்தது, மலேரியா. 2008ம் வருடம் உள்நாட்டு மலேரியா தலையெடுக்கவில்லை.

    இந்தியாவின் உள்குத்து வீரர்களே! மறக்காதீர்கள். ஶ்ரீலங்கை அரசுக்கு, மலேரியாவின் தாக்கம் அறிந்த விடுதலை புலிகள், இந்த மலேரியா ஒழிப்புப்போரில் ஒத்துழைத்தார்கள். நம் புத்தியும் அவ்வழி செல்ல வேண்டும். நம் நாட்டில் கொசு தர்பார் தடபுடல் என்பதால்.

    -#-

    விடுதலை புலிகளின் ஒத்துழைப்பு பற்றி:

    Abeyasinghe, RR, Galappaththy, GN, Smith Gueye, C, Kahn, JG, and Feachem, RG. Malaria control and elimination in Sri Lanka: documenting progress and success factors in a conflict setting. PLoS One. 2012; 7: e43162

    உதவி :DOI: http://dx.doi.org/10.1016/S0140-6736(16)31572-0

    சித்திரத்துக்கு நன்றி:

    https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c0/Ronald_Ross_18_Cavendish_Square_blue_plaque.jpg/220px-Ronald_Ross_18_Cavendish_Square_blue_plaque.jpg

    ***

    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 79-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரத்தின் போட்டிப் புகைப்படத்தை எடுத்துத் தந்திருக்கும் திருமிகு. ஷாமினிக்கும், அதனைத் தேர்வுசெய்திருக்கும் வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் முதற்கண் நம் நன்றி!

    man-with-hand-on-head

    சிரத்தின்மீது குவிந்திருக்கும் கரங்கள் இம்மனிதரின் முகத்தில் கவிந்திருக்கும் கவலையின் பிரதிபலிப்பாய் இருக்குமோ? 

    நமக்கேன் அந்தக் கவலை? புகைப்பட மனிதரின் அகத்தைத் திறந்துகாட்ட நம் கவிஞர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள்! ஆதலால், அப்பொறுப்பை அவர்களிடமே விட்டுவிடலாம்!

    ***

    என்ன தப்பு நிகழ்ந்திருந்தாலும் தலைமீது கைவைக்காதே தோழா! கடல் அலையெனக் கவலைகள் ஆர்ப்பரித்து வரும்போதும் நம்பிக்கையொன்றே தெப்பமாய் உன்னைக் கரைசேர்க்கும்!” என்று துணிவூட்டுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கப்பல் மூழ்கிப் போனாலும்
    கடலாய்த் துன்பம் வந்தாலும்,
    எப்பவும் எதற்கும் சோர்ந்திடாதே
    எல்லாம் போய்விடும் கடலலைபோல்,
    தப்பே நடந்து போனாலும்
    தலையில் கைகள் வைக்கவேண்டாம்,
    தெப்பமாய் உதவிடும் நம்பிக்கை
    துணிவுடன் செயல்படு வென்றிடவே…!

    ***

    தம்பி! உன் கைகள் தலையைத் தாங்கிப்பிடித்திருப்பது எதற்காக? கப்பல் கவிழ்ந்ததாலா…இல்லைத் தலைநோவாலா? காரணம் ஏதாகிலும் இருக்கட்டும்! கவலையை விடு; நம்பிக்கையை விடாதே! என்பது திரு. ரா. பார்த்தசாரதியின் அறிவுரை!

    கப்பல் மூழ்கியது போல் தலையில் இரு கைகள் வைத்தாயோ
    தலை
    வலிக்கின்றது து என இரு கைகள் வைக்கின்றாயோ
    தலையில்
    இருகை வைத்து எதை நோக்குகின்றாயோ
    தலையில்
    இருகை வைப்பது நல்லது அல்ல என்பார் சான்றோர்
    உன்
    இரு கைக்கொண்டு,நம்பிக்கையுடன்  உழைத்தாலே  போதும்
    கைகளும்
    , கால்களும் நமக்கு  தருமே பெரும் பதவி
    அதில்
    காணும் திறமைதான் நமது செல்வம்!
     

    ***

    ”நீந்திய சிறுவனை இரக்கமின்றி அள்ளிச்சென்றது கடல்; துள்ளிச்சென்று நான் காக்கத் தவறியதால் வென்றது விதி!” என்று தன்னையே நொந்துகொள்ளும் மனிதன் இவன் என்கிறார் திருமதி. ராதா.

    தன்னம்பிக்கை தலை தூக்கினால்
    கொக்கரிக்கும் அலைகள்அங்கு
    கொஞ்சி விளையாடிய சிறுவன்

    காப்பாற்ற நினைக்க
    என் வீரத்தில் நீச்சலில்
    நான் வென்ற பதக்கத்தில்
    அசையா நம்பிக்கை

    தாவி குதித்து நீந்த முயல
    நீண்டது என் நீச்சல் நேரம்
    கண் இமைக்கும் நேரத்தில்
    கடல் காலனுக்கு அவனை தாரை வார்க்க

    ஐய்யோ
    காணாமல் போனான் சிறுவன்
    வென்றது கடல்
    வெந்து தோற்றேன் நான்

    என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை
    என்னால் தான் முடியும் என்பது அகம் பாவம்
    உண்மை உறுத்துகிறதுஇனி
    உணர்ந்தும் பயனில்லை

    நான் கொண்டது தன்னம்பிக்கையா இல்லை
    அகம் பாவமா…….
    ஆனால் இது நிஜம்..
    காப்பாற்றுவேன் என்ற நிஜம்
    நிழலாக நெஞ்சை பிளக்க
    அலையை தள்ளிய கைகள்என்
    தலையை தஞ்சமடைகிறது தற்போது

     *** 

    புறமுதுகிட்டவன் புறவுலகை வென்றதில்லை; விறலோடு புறப்படு; வெற்றியை வசப்படுத்து! என்று துவண்ட நெஞ்சுக்குத் தெம்பூட்டுகின்றார் முனைவர் மா. பத்மபிரியா. 

    விரல்கள் பத்தும் மூலதனம்
    கரம் கோத்துச் சிரம் சேர்க்காதே
    […]
    விரலின் விந்தையால்
    வீணை தீண்டினால் ராகம் பெறலாம்
    உளி எடுத்தால் சிலை செதுக்கலாம்
    எழுத்தாணி பிடித்தவனும்
    பேனாமுனை பிடித்தவனும்
    அறியாமை இருளை விரட்டி
    அறிவொளியை வித்திட்டனர்
    புறமுதுகுகாட்டியவன்
    புறஉலகை வென்றதில்லை
    உண்மையை நேருக்குநேர் நோக்கு
    உள்ளொளி பெருக்கி உன்னதம் பெறுவாய்!

    ***

    ”இருகரத்தைச் சிரமேற்றிச் சிந்தித்துக்கொண்டிருப்பதால் கருநாடகம் சிந்தையிரங்கித் தண்ணீர் தந்துவிடப் போவதில்லை. யோசனையை விடுத்துப் புயலெனச் செயலில் இறங்கு! போராட்டத்தில் குதி! வழிபிறக்கும் நீருக்கு!” என்று வீரவுரை பகர்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    பற்று பாசத்தால் பரிதவித்து
    சுற்றுச் சூழலால் துடிதுடித்து
    கற்றதும் பயனில்லையேஎன்று
    கதறும்போது
    கரங்கள் சிரம்மேல் அமர்வது இயல்பு
    வெட்ட வெளிகளில் நின்று யோசித்தல்
    நினைவுகளின் மயக்கத்திலிருந்து விடுபடும்

    இருகரம் இறக்கு சிரம் தனை விடுத்து
    இடையூறுகளை களைந்திட புறப்படு
    பொறுப்புடன்கூடும் போராட்டம்
    விருப்புடன் ஏற்கப்படும்
    கர் நாடகா மனம் இறங்கி நீர் தரும்
    கருகும் பயிர்கள் செழிப்புரும்

    முடியாப்பொருளும்முடிந்துவிடும்
    விடாமுயற்சி செய்வதால்
    எடுத்தஎடுப்பு இனிதே முடிய
    தொடுத்தே தொடர் தொழில் செய்

    ***

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து வருகின்றது…

    சுதந்திர தாகம்

    ஆயுத மனிதா! நாங்கள்
    காயிதப் படகுகள்!
    அடிக்கும் புயலில்
    துடிக்கும் எமது கொடிகள்!
    குப்புறச் சாயும்
    பாய்மரம்!
    குடியுள்ள சொந்த நாட்டில்
    விடுதலை கேட்டுக்
    கண்ணீர் விட்டோம்!
    குருதி கொட்டினோம்!
    ஆடை நீக்கப் பட்டு
    மானம் இழந்தார் மங்கையர்,
    […]

    தந்தையர் இழந்தோம்!
    தாயை இழந்தோம்!
    தனையனை இழந்தோம்!
    அடே! பாவிகளா!
    ஆயுத மில்லா
    ஆவி மனிதர் நாங்கள்!
    உணவின்றி, உடையின்றி,
    உற்றார் உறவினர்,
    மேற்கூரை இன்றிக்
    காயும் வெயிலில் வேகின்றோம்!
    ஆயுத மனிதா!
    கரம் தூக்கி விட்டேன்!
    சுடாதே ! சுடாதே ! சுடாதே என்னை
    என்று சொன்னேன் !
    செத்தவர் எல்லாம் சுதந்திரம்
    பெற்றார் !
    சுட்டெனக்கும் நிரந்தரச்
    சுதந்திரம் அளித்திடு!

    ”அடிமை விலங்கை ஒடிக்க விரும்பினால் ஆயுதமேந்திய இந்த விலங்குகள் அனுமதிக்க மறுக்கின்றனவே! மண்ணுக்குச் சுதந்திரம் வேண்டினால் இங்கே கிடைப்பதோ மண்ணைவிட்டு விண்ணுக்கேகும் சுதந்திரம் ஒன்றே! அதையேனும் அளிக்கட்டும் இந்த ஆயுதபாணி!” என்று நொந்த உள்ளத்தோடு சிந்திக்கும் மனிதனைக் காண்கிறோம் திரு. சி. ஜெயபாரதனின் கவிதையில். நெகிழ்வூட்டும் இக்கவிதையைப் படைத்தமைக்காக இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அவரைத் தேர்வு செய்கிறேன்.

     

     

    Share
  • ’’குமார சம்பவம்’’

    கிரேசி மோகன்
    ———————————-
    மூவுலகில் தாங்கள் முடிக்க நினைத்ததை
    ஏவுகணை என்மூலம் எய்திடுவீர் -காவலனே
    ஏனைய பேரிருக்க என்னை அழைத்தனையும்
    ஆணை எனக்கு அருள்….(126)

    வானப் பதவி விரும்பித் தவமியற்றும்
    ஈனப் பிறவியார் இன்றுரைப்பீர் -பாணம்
    தொடுத்தயென் வில்லால் தடுத்தவனைக் காமப்
    படுக்கையில் வீழ்த்துகிறேன் பார்….(127)

    பிறவிப் பிணிக்கஞ்சி பேரின்ப மோட்ச
    வரவுக்(கு) உமைமறந்த வீணன் -கருவத்தை
    நோக்க நுதலை நெறிக்கின்ற நங்கையர்
    தாக்கத் தவிர்ப்பான் தவம்….(128)

    சுக்கிராச் சாரியார் சொன்னவுப தேசத்தால்
    அக்கறையாய் தர்மார்த்தம் ஆழ்ந்தவனும் -உக்கிரமாய்
    பொங்கும் புனல்கரையைப் பேர்த்தலாய் ஆசையை
    அங்கனுப்பக் கொள்வான் அழிவு….(129)

    புத்தி புகுந்தவள் பத்தினியே ஆனாலும்
    சித்த சபலத்தில் சேர்த்தவளை -அத்தனுன்மேல்
    இச்சையுறச் செய்வேன் இழுத்தணைக்கச் செல்லுமவள்
    அச்சமட நாணம் பயிர்ப்பு….(130)

    காமுகரே, குற்றத்தால் காலில் விழுந்தபின்னும்
    தீமுகம் காட்டிய தேவதையார் -பூமுக
    வாளியால் தேகத்தை வாட்டித் தளிர்படுக்கை
    நாளுமவள் நாடவைப்பேன் நான்….(131)

    வச்சிரம் கண்கள் வளரட்டும் ஓய்வெடுத்து
    இச்சரப் பூக்களை எய்திட -அச்சுறுத்தும்
    உன்னெதிரிக் கூட்டம் உதடு துடித்துறுமும்
    பெண்ணெதிர்க்க ஓடும் பயந்து….(132)

    பூவென்(று) அலட்சியமாய்ப் பாராய், எனதுகணைப்
    பூவொன்றால் அப்பினாக பாணிக்கே -நோவென்ற
    உள்ளக் குலைவை உதிர்ப்பேன் வசந்தனுடன்
    சொல்லித் தெரிவதில்லை சூது….(133)….கிரேசி மோகன்….!

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (21)

    நிர்மலா ராகவன்

    மனதை மயக்கும் மருந்துகள்

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-1-2

    கடந்த இரண்டு மாதங்களில் நான் சந்தித்துப் பேசிய மூன்று பெண்மணிகள் குறுகிய காலத்தில் மிகப் பருமனாக ஆகியிருந்தார்கள்.
    `எனக்கு ஐம்பது வயதாகிவிட்டதே! மெனோபாஸ்! ஓயாமல் தலைவலி. இழுப்புவேறு! அதனால் ஏதோ மருந்து சாப்பிடுகிறேன்’.

    முப்பது வயதே ஆகிய இசை ஆசிரியையான சீதாவின் பிரலாபம்: `அடிக்கடி சளியும் இருமலும் வருகின்றன. இப்படியே இருந்தால், நான் எப்படி பாட்டு வகுப்புகள் நடத்துவது?’

    மலேசிய நாடு தழுவிய நாட்டியப் போட்டி ஒன்றில் முதல் பரிசு வாங்கி, அத்துறையில் பட்டம் பெற்றவள் லதா. ஐந்தாண்டுகள் கழித்து அவளைப் பார்த்தபோது, `காலில் தாங்க முடியாத வலி. ஒரு வருடம் ஆடக் கூடாது என்கிறார் டாக்டர். மருந்து சாப்பிட்டால்தான் ஆடவே முடிகிறது!’ என்றாள்.

    இவர்களிடையே இருந்த ஒற்றுமை: மூவருக்குமே வெவ்வேறு மருத்துவர்கள் ஸ்டீராய்டு (Steroid) மருந்துகளைப் பரிந்துரைத்திருந்ததுதான்.

    அது என்னது அது, ஸ்டீராய்டு?

    நம் உடலில் இயல்பாகச் சுரக்கும் ஹார்மோன் அது. உடலில் உள்ள உறுப்புகள், திசு, உயிரணுக்கள் ஆகியவை தம் வேலையைச் சரிவரச் செய்ய வேண்டாமா? அதற்குத்தான் இவை உபயோகப்படுகின்றன. இந்த ஹார்மோன் சரியாகச் சுரக்காதபோது, பல உபாதைகள் ஏற்படும்.

    அவைகளைப் போக்கவென மனிதனால் தயாரிக்கப்பட்ட மருந்தாக (வேதியப் பொருள் கலக்கப்பட்ட) அதையே உட்கொள்ளும்போது, மந்திரம் போட்டதுபோல உடல் தொல்லை காணாமல் போய்விடும். அடுத்த முறை அதே உடல் உபாதைக்கு ஆளாகும்போது, ஒருவரை வலியப்போய் அதையே நாடும்படி செய்துவிடுகிறது. சுருங்கச் சொன்னால், ஸ்டீராய்டு ஒரு போதைப்பொருள்.

    கஞ்சா, ஹெரோயின் மற்றும் மது வகைகள் உடனுக்குடனே ஒருவரின் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்த, போதை உண்டாகும் என்பது தெரிந்த சமாசாரம். ஒருவர் குடித்தவுடன் தன் வருத்தம், கவலை, ஏமாற்றம் எல்லாவற்றையும் மறந்துவிட்டதுபோல் சில கணங்கள் இருப்பார். ஆனால், அவைகளின் அளவை அதிகரித்துக்கொண்டே போனால்தான் அவர் தான் நாடும் மனக்கிறக்கத்தை அடைய முடியும்.

    ஸ்டீராய்டு அப்படியல்ல. மனப்போக்கில் ஒரு மாற்றமும் இருக்காது. கிறக்கமும் கிடையாது — சில காலம்வரை. சில ஆண்டுகளுக்குப்பின் மெதுவாகத் தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்கும்.

    கதை 1: விக்னேஸ்வரி பதின்ம வயதிலிருந்தே ஆஸ்துமாவால் அவதிப்பட்டவள். சுமார் முப்பது வயதானபோது மருத்துவர் ஸ்டீராய்டு கொடுத்ததில், இதுவரை பாடாய்படுத்திய வியாதி குணமானது போலிருந்தது.

    `சரியாகப் போகும்வரை இம்மருந்தை உட்கொண்டுவிட்டு, பிறகு விட்டுவிடலாமே!’ என்றுதான் நினைத்திருந்தாள். அது முடியவில்லை. இப்பழக்கம்தான் ஒருவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுமே! அடுத்த முறை தானே அதைத் தேடிப் போகையில் சற்று அதிகமான அளவு தேவைப்பட்டது.

    ஆரம்ப காலத்தில், விக்னேஸ்வரிக்கு அசுர பலம் வந்ததுபோல் இருந்தது. `SUPER HUMAN!” என்று பெருமிதமாக இருந்தது. எல்லாரும் தன்னைப்போல் இல்லாமல் இருக்கிறார்களே என்ற ஏளனம் எழுந்தது. பிறரை மரியாதைக்குறைவாக நடத்த ஆரம்பித்தாள். சிடுசிடுப்பு, அநாவசிய சந்தேகம் என்று பல பக்கவிளைவுகள் ஏற்பட்டதில் குடும்ப அமைதி கெட்டது. கை கால்களில் வீக்கம். மொத்தத்தில் உடல் பூராவும் பருத்தது.
    `இப்பழக்கத்தை விடு!’ என்று யார் சொன்னாலும் கேட்கும் நிலையில் அவள் இருக்கவில்லை.

    இருபது ஆண்டுகள் கழிந்ததும், இரண்டு கை முட்டிகளும் மூடியபடி இருந்தன. திறக்க முடியவில்லை. `இனி இப்பழக்கத்தை விட்டால், உங்கள் உயிர் போய்விடும். அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள்!’ என்றார்கள் மருத்துவர்கள். சுமார் ஓராண்டுகாலம் படுத்த படுக்கையாக இருக்க நேரிட்டது.

    அந்தச் சமயம் பார்த்து, `நம்மை இவள் எப்படியெல்லாம் அவமானப்படுத்தினாள்!’ என்று பிறர் இவளிடம் சொல்லிக்காட்ட, `கதறிக் கதறி’ அழுததாகப் பிறர் தெரிவித்தார்கள்.

    இப்போது விக்னேஸ்வரியால் அதிகம் நிற்கவோ, நடக்கவோ முடிவதில்லை. பேனா பிடித்து எழுதக்கூட முடியாது. காலம் கடந்து வருந்துகிறாள்.

    நான் முதலில் குறிப்பிட்ட மூன்று பெண்களிடமும் இக்கதையைச் சொல்லி, `வேண்டாம் இந்தப் பழக்கம்!’ என்று மன்றாடினேன்.

    முதலில் சற்று பயந்தாலும், எல்லாரும் ஒரே பதிலைத்தான் கூறினார்கள்: `உடல்நிலை உடனே சீராகி விடுகிறதே!’

    கதை 2: எனக்கு ஐம்பது வயதானபோது, H.R.T (Hormone replacement therapy) என்று நான் கேளாமலேயே ஒரு மருத்துவர் என்னை அதைச் சாப்பிடும்படி பல முறை வற்புறுத்தினார். `இருதய நோய் வராது!’ என்றார். நான் கொஞ்ச காலம் சாப்பிட்டேன். முகத்தில் முடி வளர ஆரம்பித்தது.

    சில மாதங்களுக்குப்பின் அமெரிக்கா செல்ல நேரிட்டது. அங்குள்ள மருந்துக்கடையில் மருந்துச் சீட்டைக் காட்டியபோது, `இது தடை செய்யப்பட்ட மருந்து!’ என்றார்கள். எனக்கு ஒரே அதிர்ச்சியும், கோபமும். ஏனெனில், அங்கு தயார் செய்த மருந்தைத்தான் பிற நாடுகளுக்கு அனுப்புகிறார்கள்!

    அது நல்லதல்ல என்று தயாரிப்பாளர்களுக்குத் தெரியாமலில்லை. நம் நாட்டில்தான் சட்டம் நமக்கு அனுகூலமாக இல்லை, பிற நாட்டு மக்கள் எப்படிப் போனால் நமக்கென்ன என்ற மெத்தனம்! பெருமளவில் தயாரித்த மருந்துகள் வீணாகிவிட்டால், நஷ்டமாகிவிடுமே என்ற கவலை அவர்களுக்கு.

    நாடு திரும்பியதும், என்னை எச்சரிக்கை செய்யவே வெளியிட்டதுபோல, `ஸ்டீராய்டு நீண்ட காலம் கழித்து தசைகளை பலகீனமாக்கிவிடும்,’ என்று தினசரி ஒன்றில் படித்தேன். முதல் வேலையாக மிச்சமிருந்த மாத்திரைகளைத் தூக்கிக் குப்பையில் எறிந்தேன்.

    நோய்வாய்ப்பட்டவர்களோ, வயது முதிர்ந்தவர்களோதான் இப்பழக்கத்திற்கு ஆளாகிறார்கள் என்பதில்லை. குழந்தை நடிகர்கள் வளர்ந்துவிட்டால் வாய்ப்பு போய்விடுமே என்று அவர்களுக்கு ஸ்டீராய்டு கொடுக்க பெற்றோரே வழிசெய்வதாகப் படித்திருக்கிறேன். எத்தனை காலம்தான் குழந்தை நட்சத்திரங்களாக ஜொலிக்க முடியும்! முகத்தில் முதுமை தெரிவதை மறைக்க முடியுமா?

    பதின்ம வயதினர் இப்பழக்கத்துக்கு ஆளானால் என்றுமே உயரமாக வளர முடியாது. உடல் வளர்ச்சி குன்றிவிடும்.

    மிகக் குறுகிய காலத்தில் புஜங்கள் திரண்டு, ஆணழகனாக ஆக வேண்டும் என்று `ஜிம்’மிற்குப் போகும் ஆண்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஸ்டீராய்டு மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொள்கிறார்கள்.

    `என் தசைகளைப் பார்!’ என்று அவர்கள் முதலில் பெருமிதம் கொள்ளலாம். ஆனால், நாளடைவில் கல்லீரல், இருதயம் போன்ற அவயவங்களில் நோய் வருகிறது. போதாக்குறைக்கு, விந்து குறைதல், ஆணுறுப்பு சிறுத்துப்போவது, தலையில் வழுக்கை, கை நடுக்கம், பெண்களைப்போன்ற மார்பகம் வளர்வது என்று பல பக்க விளைவுகள்.
    எதையுமே தவிர்க்க முடியாதபோது, `என்னை யார் மிஞ்ச முடியும்!’ என்ற களிப்பு மறையும்.

    மிஞ்சுவது, `நான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன்!’ என்ற சுயவெறுப்பும், கசப்பும்தான்.

    தொடருவோம்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”கன்றுபோல் பார்த்தன் கிருஷ்ணனவர் கால்வருட
    குன்றேந் தியவர் குஷியாகி -நன்றந்த
    கீதை உரைத்தனர்: கீழ்படிந்த் தோர்க்கெல்லாம்
    பாதை பயணம் பகிர்வு”….கிரேசி மோகன்….!

    Share