Year: 2017

  • நீட் தேர்வு!

    பவள சங்கரி

    தலையங்கம்

    நீட் தேர்வில் தமிழகத்திலிருந்து 80,000 மாணவர்கள் கலந்துகொண்டனர். அதில் தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்கள் 15,000 மாணவர்கள். இதில் அதிக மதிப்பெண்களைப்பெற்ற 25 மாணவர்கள் பட்டியலில் ஒரு தமிழ் மாணவர்கூட இடம் பெறவில்லை. நமது அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவைச் சார்ந்த மாணவர்கள் 8 இடங்களைப் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த மதிப்பெண்களில் நமது தமிழக மாணவர்கள் சராசரியாக 50% மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளனர் என்பது வருத்தமான செய்தி.

    நேற்று சட்டசபையில், தமிழகக் கல்வி வழியில் நீட் தேர்வில் கலந்துகொண்ட மாணவர்களில் 85% மாணவர்களுக்கு நமது மருத்துவக் கல்லூரிகளில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் மூலமாக பயின்ற 15%  மாணவர்களுக்காகவும் ஒதுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்பே நமது உச்ச நீதி மன்றம், உயர்நீதி மன்றங்களில் இதற்கு விலக்கு அளிக்க மறுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பானது சட்ட அங்கீகாரத்தைப் பெறுமா என்பது ஐயமே. அரசு அடுத்த ஆண்டிற்கு இப்போதிருந்தே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற தேர்வுகளுக்குப் பயிற்சி அளிப்பது போல நீட் தேர்வுகளுக்கும் தமிழகம் முழுவதும் சிறந்த பயிற்சி அளிக்க ஆவண செய்யவேண்டியதே அவசியமாகும். அதைவிடுத்து குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பளித்தாலும் அவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் என்பதே நிதர்சனம்.

    Share
  • சூரிய குடும்பத்தில் புளுடோவுக்கு அப்பால் பூமி வடிவில் பத்தாவது கோள் ஒன்று ஒளிந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது

    aj

     

    சூரிய குடும்பத்தின் புறக்கோளாய்ச்
    சுற்றும் புதிய கோள் பத்து
    ஒளிந்து திரிவது
    உறுதி செய்யப் படுகிறது  !
    ஒன்பதாம் கோள் இருப்பதைச்
    சென்ற ஆண்டு கண்டார் !
    கியூப்பர் வளைய அண்டங்கள் .
    குளிர்ந்து போனவை.
    கியூப்பர் வளைய அண்டங்கள்
    சூரியனைச் சுற்றும்
    பாதைகள் சாய்வதின் காரணம்
    என்ன ?
    பூமி வடிவில் பத்தாவது கோள்
    புளுடோ வுக்கு அப்பால்.
    சாய்க்கும் மர்மம் என்ன ?
    இதுவரைக் கோளைக் கண்டிலர்.
    சூரியன் சுழலச்சைப் பூதக்கோள் -9
    கோரமாய்ச் சாய்க்கும்,
    விந்தை என்ன ?
    விதி என்ன ?

    ++++++++++++++

    புளுடோவுக்கு அப்பால் பூமி வடிவில் சூரிய மண்டலத்தின் புதிய புறக்கோள் – 10

    ஒன்பதாவது கோளாய் ஒரு காலத்தில் கருதப்பட்ட புளுடோ 2006 ஆகஸ்டில் குள்ளக் கோள் வகுப்பில் தள்ளப்பட்டு , ஒன்பதாம் கோள் தகுதி இழந்து ஒதுக்குப்பட்டது.  அதன் பிறகு கால்டெக் விஞ்ஞானிகள் இருவர், கான்ஸ்டன்டின்  படிஜின் & மைக்கேல் பிரௌன்  பூமிபோல் பத்து மடங்கு பெரிய கோள் -9 புளுடோ வுக்கு அப்பால் ஒளிந்து திரிவதை  2016 ஜனவரியில் மெய்ப் படுத்தினார்.  பரபரப்பான இந்த சூரிய மண்டலப் புதிய கோள் எண்ணிக்கை, பலரை வியப்புக்குள்ளாக்கி வரும்போது,  பூமி வடிவில் இப்போது [2017 ஜூனில்] பத்தாவது கோளும் ஒளிந்து கொண்டிருக்கிறது என்று அரிசோனா பல்கலைக் கழக வானியல் நிபுணர் இருவர், காத் வோக் & ரேணு மல்கோத்ரா [Kat Volk & Renu Malhotra] அறிவிப்பது மேலும் குழப்பத்தை உண்டாக்கி யுள்ளது.  இத்தோடு சூரிய குடும்பக் கோள்களின் எண்ணிக்கை முடிந்து விட்டது என்று விஞ்ஞானிகள் முடிவு செய்யக் கூடாது என்றும் அரிசோனா நிபுணர் எச்சரிக்கையும் விடுகிறார்.

    அரிசோனா பல்கலைக் கழகத்துக் கோள் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் பூமி-செவ்வாய்க் கோள்கட்கு இடைப்பட்ட வடிவில் கோள் வடிவில், பனி மண்டலக் கியூப்பர் வளையத்தில் [Kuiper Belt] ஒளிந்து திரியும் சூரிய மண்டலக் கோள் இருப்பதை உறுதியாக நம்பி அறிவிக்கிறார்.  2016 ஜனவரியில் கால்டெக் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் இருவர், புளுடோக்கு அப்பால் பூமிபோல் 25 மடங்கு பெரிதாய், ஒளிந்திருக்கும் மாபெரும் கோளை முன்னறிவித்தார். அந்தக் கோள் வேறு.  தற்போது அரிசோனா நிபுணர் அறிவித்த பூமி வடிவக் கோள் வேறு.  இந்தக் கோள் கியூப்பர் அரங்கு அண்டங்களின் சூரியச் சுற்றுப் பாதைகளைச் சராசரி 8 டிகிரி சாய்வு செய்கிறது.  இந்த விஞ்ஞான அறிவிப்பு அடுத்து வானியல் விஞ்ஞான இதழில் [The Astronomical Journal] வெளியாகப் போகிறது.

    இந்த மர்மக் கோள் -10 சிறியது;  பூமி வடிவில் பூமியிலிருந்து 500 – 700 AU [Astronomica Unit] [One AU = distance between the Sun & Earth] [93 மில்லியன் மைல் அல்லது 150 மில்லியன் கி.மீ.] தூரத்தில்,  நெப்டியூன் கோளுக்கு அப்பால்  புலப்படாமல் ஒளிந்து கொண்டு திரிகிறது.  ஹப்பிள் தொலைநோக்கியை விட நூதன பெரிய தொலைநோக்கி மூலம் தேடினால் கிடைத்து விடலாம். புளுடோ சூரியனை உச்ச தூரத்தில் சுற்றுவது சுமார் 50 AU தூர அளவு.  கியூப்பர் வளைய அண்டங்களின் தூரம் சுமார் 100 AU.


    Batygin Shows Planet 9

    புறக்கோளாய் சூரியனுக்குப் புதிய பூதக்கோள் – 9 இருப்பு

    [ஜனவரி 2016]

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++

    https://youtu.be/6poHQ2h00ZA

    https://youtu.be/fAIV_6lcbIQ

    https://youtu.be/TBnItMgSjsE

    http://video.pbs.org/video/1790621534/

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A

    *********************

    planet-9-orbit

    planet-9

    புதுப் புறக்கோள் -9 தொடர்ந்து எமக்கு வியப்பளித்து வருகிறது.  கூர்ந்து நோக்கும் போது மர்மமாக இருந்த சூரிய மண்டத்தின் சில புதிர்களை விடுவிக்கிறது.

    கான்ஸ்டன்டின் படிஜின் [Professor, Planetary Science Caltech Researcher] 

    மற்ற கோள்கள் போலின்றி மிகச் சரிந்த சுற்றுப் பாதையில் செல்லும் புதுக் கோள் -9 இன் நிறை பேரளவானது !  அதனால் சூரிய மண்டலம் மெதுவாய் நேர்நிலை நழுவிச் சரிவதைத் தவிர வேறு வழியில்லை.

    எலிஸபெத் பெய்லி [கோள் -9 கண்டுபிடித்த கால்டெக் ஆய்வுக் குழு மாணவி]

    Earth's Planet -9

    பெருநிறை கொண்ட புதுக்கோள் -9 சூரியனைக் குலுக்கிச் சாய்க்கிறது

    2016 ஜனவரியில் ஹப்பிள் போன்ற தொலைநோக்கிக் கருவிகளுக்குத் தெரியாது, கணினி போலி மாடல் மூலம் இருப்பதாய்க் கருதப்பட்டது பூதப் புறக்கோள் -9.  அதன் இருப்பு, சுற்றுப் பாதை, நிறையைக் கணித்தவர் இருவர்.  அமெரிக்கக் கால்டெக் ஆய்வகத்தின் கோள் ஆய்வுப் பேராசிரியர், கான்ஸ்டன்டின்  படிஜின் & மைக்கேல் பிரௌன்  [Konstantin Batygin & Michael Brown] அவரது 2016 அக்டோபர் 18 ஆம் தேதிப் புதிய வாசிப்பு வெளியீடு [American Astronomical Society Annual Meeting], கோணி நீள்வட்டத்தில் சூரியனைச் சுற்றி வரும் புதுக்கோள் -9 சூரியனின் வழக்கத்துக்கு மாறான  சரிவுக்குப் [Tilt] பொறுப்பாகிறது என்று அறிவிக்கிறது.  வெகுதூரத்தில் பேரளவு நிறை கொண்ட புதுக்கோள் -9 சூரிய மண்டலத்துக்கு ஒரு குலுக்கைச் [Wobble] சேர்க்கிறது என்றும் கூறுகிறார்.  அந்தக் குலுக்கே சூரிய மண்டலம் சிறிது சரிந்துள்ளதாகக் காட்டுகிறது.

    New Planet 9 orbit

    பொதுவாக சூரியனின் அண்டக்கோள்கள் இரண்டு டிகிரிக் கோணத்துக்குள் ஒன்றுக்கொன்று மாறுபடும் மட்டநிலைப் பாதைகளில்தான் சுற்றி வருகின்றன.  அந்த மட்டநிலை சுற்றுப் பாதைகள் சூரியனுக்கு 6 டிகிரிச் சாய்வில் உள்ளன.  அச்சரிவு சூரியனே சற்று கோணிப் போனதாய்க் காட்டுகிறது !  இதுவரை அவ்விளைவு எதனால் நேர்கிறது என்று எவராலும் உறுதியாக விளக்க முடியவில்லை. அதனால் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை.  புதுக்கோள் -9 பூமியைப் போல் 10 மடங்கு வடிவு. சுற்றும் தொலைவு :  புறக்கோள் நெப்டியூன் சூரியனைச் சுற்றும் தூரத்தைப் போல் 20 மடங்கு அளவு.  புதுக்கோள் -9 இன் சுற்றுப் பாதை மற்ற கோள்கள் சுற்றும் மட்டப் பாதைக்கு 30 டிகிரிக் கோணத்தில் இருப்பதாகத் தெரிகிறது. புதுக்கோள் -9 சூரியனைச் சாய்ப்பது போல், கியூப்பர் வளைய [Kuiper Belt] அரங்கில் நகரும் ஏராளமான அண்டங்களையும் பாதிப்பு செய்கிறது.

    New Planet System 2016

    புதுக்கோள் -9 இன் “கோண நெம்பியக்கம்” [Angular Momentum], தனது பூத வடிவத்தாலும், தூர இடத்தாலும் சூரிய மண்டலத்தில் நிறை மீறிய தாக்கத்தை [Outsized Impact] உண்டாக்குகிறது. [Angular Momentum = Mass of the Planet X Its Distance from the Sun].  மேலும் புதுக்கோள் -9 இன் வியப்பான கோணப் பாதை சூரியனுக்குப் பல பில்லிய ஆண்டுக்கு ஒரு குலுக்கு [A Multi-billion-year Wobble] கொடுக்கிறது ! அந்தக் குலுக்கு 6 டிகிரிச் சரிவுக்கு வெகுப் பொருத்தம் என்று சொல்கிறார் மைக்கேல் பிரௌன்.

    புறக்கோளாய்ச் சூரியனைச் சுற்றுவதாகச் சான்று கண்டு, புதுக்கோள் -9 என்று பெயரிடப்படும் புதிய பூதக்கோள் பூமியைப் போல் 10 மடங்கு நிறையுள்ளது.  அது ஒரு வினோத நீள்வட்ட நீட்சிப் பாதையில், பரிதி மண்டலத்தை வெகு, வெகு தூரத்தில் சுற்றி வருகிறது. இப்புதிய கோள் சூரியனை ஒருமுறை சுற்றிவர 10,000 – 20,000 ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் எடுக்கலாம்.   அந்த அனுமானப் புதுக் கோள் புளுடோவைப் போல் 5000 மடங்கு நிறையுள்ளது.

    கான்ஸ்டன்டின் படிஜின் & மைக்கேல் பிரௌன் [Caltech Researchers] 

    New Planet System

    சூரிய மண்டலத்துப் புறக்கோளாய்ச் சுற்றும் ஒன்பதாம் கோள் ஒன்றிருக்கலாம்

    சூரிய மண்டலத்தின் புறக்கோளாய் இருந்த புளுடோ குள்ளக் கோள் என்று புறக்கணிப்பாகிய பிறகு, எட்டுக் கோள்கள் கொண்ட மண்டலம் மீண்டும் ஒன்பது கோள்கள் சுற்றும் பரிதி மண்டலம் ஆனது.  ஆனால் கோள் -9 இதுவரை புலப்படாது நீட்சியான நீள்வட்டப் பாதையில் எங்கோ சுற்றிக் கொண்டு வருகிறது.  அது ஒருமுறைப் பரிதியைச் சுற்றிவர 10,000 – 20,000 ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் எடுத்துக் கொள்ளலாம்.  அதை நேரடியாகக் காணாமல், அதன் இருப்பைப் போலிக் கணினி மாடல்[Computer Simulation Model] மூலம், போட்டுக் காட்டியவர் இருவர்:  காலிஃபோர்னியா பொறிநுணுக்க ஆய்வகத்தில் [California Institute of Technology – (Caltech)] பணிபுரியும் அவரது பெயர்கள் : கான்ஸ்டன்டின் படிஜின் & மைக்கேல் பிரௌன். [Konstantin Batygin & Michael Brown]

    Batygin & Brown

    சூரிய மண்டலத்தின் தற்போதைய இறுதிப் புறக்கோள் நெப்டியூன் இதுபோல் போலிக் கணினி மாடல் மூலம் முதலில் அனுமானிக்கப் பட்டுப் பிறகு தொலைநோக்கிப் பார்வைகளில் கண்டுபிடிக்கப் பட்டது. நெப்டியூன் போல் வடிவமும், வாயுவும் கொண்டது புதிய பூதக்கோள் என்று கருதப் படுகிறது.  நெப்டியூன் சூரியனை 2.8 பில்லியன் மைல் தூரத்தில் சுற்றி வருகிறது.  புதுக்கோள் கோள் -9 அதைவிடச் சராசரி 20 மடங்கு தூரத்தில்  [5.6 பில்லியன் மைல்] சுற்றி வரலாம் என்று கணிக்கப் படுகிறது.

    New planet Nine

    இந்தப் புதிய அனுமானக் கோள் -9 இருப்பு அறிவிப்பு நேரடியாக நிகழ்ந்த ஒரு சம்பவம் இல்லை.  2014 ஆம் ஆண்டில் மைக்கேல் பிரௌனுக்கு முந்தைய ஆய்வாளர் ஸாட் டுருஜில்லோ [Chad Trujillo] & ஸ்காட் செப்பேர்டு [Scott Sheppard] வெளியிட்ட ஆய்விதழில் தாம் குறிப்பிட்ட 13 புறக்கோள்களைப் பற்றி விளக்கம் இருந்தது.  அவை வெகு வெகு தூரத்தில் சுற்றிய புளுடோவைத் தாண்டியுள்ள கியூப்பர் வளைய [Kuiper Belt] விண்வெளியில் உலவுவதாய் அறிவித்திருந்தார். அவற்றில் இம்மாதிரி நூதன நீள்வட்டப் பாதையில் சுற்றும் அபூர்வக் கோள் ஒன்றைப் பற்றி விபரம் இருந்தது.

    Hypergiant Star with disks of dust.

    மைக்கேல் பிரௌன் புளுடோவிற்கு அருகில் சுற்றும் குள்ள புறக்கோள்களின் நீள் வட்ட வீதிகளை ஆராய்ந்ததில் ஓர் அரிய ஒற்றுமையைக் கண்டார்.  அனைத்து நீள்வட்ட வீதிகளும் சூரியனுக்கு ஒரே திக்கில் 30 டிகிரி கீழ் கோணத்தில் சாய்ந்திருப் பதைக் கண்டார்.  அதாவது ஏதோ ஓர் அண்டம் அருகில் இருந்து அவற்றை ஒருபுறம் வீசி எறிவதை அறிய முடிந்தது.  இந்த அனுமானக் கோளை வைத்து பிரௌன் ஒரு போலிக் கணினி மாடல் தயாரித்து, அதன் சுற்றுப் பாதையைக் கணித்தார்.  அப்போதுதான் கோள் -9 நிறையின் இருப்பு பூமிபோல் 10 மடங்கு இருக்க வேண்டும் என்றும், சுற்றுப் பாதையில் ஒருமுறைப் பரிதியை வலம்வர 10,000 – 20,000 ஆண்டுகள் எடுக்கும் என்றும் கணித்தார்.  2003 ஆண்டில் பிரௌந்தான் குள்ளக் கோள் செடேனாவைக் [Dwarf Planet Sedena] புளுடோ அருகில் கண்டு பிடித்தவர்.  இதுவரை கோள் -9 யார் கண்ணிலும் படவில்லை. இப்போது உலகத்தின் பெரிய தொலை நோக்கிகள் புதுக்கோள் கோள் -9 தேடிப் பிடிக்க தீர்மானித்து விட்டன.

    Oigins of Solar System

    எறிகற்கள் [Meteors] தாக்கிக் கோள்கள் உருவாயின என்பது மெய்யான முத்திரை அறிவிப் பில்லை.  அந்த சிறு துணுக்குகள் கோள்களின் வடிவ விளைவால் உண்டான உதிரியே தவிர, அவை கோள்களை உருவாக்கிய செங்கற்கள் [Building Blocks] அல்ல.  தற்போதைய இப்புதிய கோட்பாடு சூரியக் கோள்கள் தோன்றியதாக  முன்னர் கருதப் பட்ட கொள்கையைத் திருத்தி விடும்.   அதாவது பூர்வீக சூரிய தோற்ற ஏற்பாடு நாம் எதிர்பார்த்ததை விடப் பெரும் மோதல் கொந்தளிப்பில் உண்டானதாகத் தெரிய வருகிறது.

    பிரான்டன் ஜான்சன் [Post doctorate, MIT Dept of Earth]

    யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் கருவிகள் இன்னும் சீராகப் பணியாற்றிச் சூரியப் புயல், அகிலக் கதிர்கள், சக்தி வாய்ந்த துகள்கள், சூரிய காந்த அரங்கம் பற்றிய தகவலைத் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. . . . ஏவிய நாளிலிருந்து (அக்டோபர் 1990) எந்தக் கருவியும் இதுவரைப் பழுதாகவில்லை !

    ரிச்சர்டு மார்ஸ்டன், யுலிஸிஸ் சூரிய விண்ணுளவித் திட்ட மேற்பார்வை விஞ்ஞானி (European Space Agency)  [ஏப்ரல் 15, 2008]

    Meteorite impacts on Planets

    பூர்வச் சூரியக் கோள்கள் தோற்றத்தின் மாறுபட்ட கோட்பாடு

    பூர்வீகச் சூரியக் கோள்கள் தோன்றியதால் உண்டான எச்சத் துணுக்குகளே முரண் கோள்கள் [Asteroids]  என்னும் கோட்பாடு இப்போது [2015 ஜனவரி 15] இயற்கை விஞ்ஞான நூல் வெளியீட்டின் அறிவிப்புப்படி உறுதியாகி வருகிறது.  முரண் கோள்கள்  சூரியக் கோள்களின் உருவாக்கத் தோற்றத்துக்கு  மூலப் பொருட்கள் அல்ல. சூரியக் கோள்கள் தோன்றத் தேவை யான மூலச் செங்கற்கள் [Building Blocks] நாமறிந்த முரண் கோள்கள் அல்ல என்பதே புதிய முடிவு;   அமெரிக்காவின் பர்டே [Purdue] பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர், பிரான்டன் ஜான்சன் கூறுவது,  ” நான்கு பில்லியன் ஆண்டுக்கு முன்பே பூர்வச் சூரியக் கோள் பிறப்புக் கருவில் [Planetary Embryos]  ஆரம்பத்திலே வித்துகள் இருந்தன,” என்று.

    Violant beginning

     

    முரண் கோள் முறிவுகள் பூமியில் விழும்போது எறிகற்களாய்ச் [Meteorites] சிதறுகின்றன. கடந்த 100 ஆண்டுகளாய் உறைந்த திரவ உருண்டையான கோலிப் பாறைகள்  [Beads like Chondrules]  எறிகற்களில் காணப்பட்டன.  அவை  இருப்பதற்குக் காரணம் தெரியாமல் இதுவரை மர்மமாகவே இருந்தது.  இப்போது விளைவுகளைத் தாக்கல் மாடலில் [Computer Impact Model] இட்டுப் பார்த்தால் செம்மையாகப் பொருந்துகின்றன.

    முடிவுகள் இவைதான் :

    1.  முரண் கோள்கள் [Asteroids] பரிதிக் கோள்கள் உருவாக்கத்தில் விளந்த கிளைப் பொருட்கள்.   அவை கோள்கள் வடிக்கத் தேவையான மூலச் செங்கற்கள் அல்ல.

    2.  உண்டையான கோலிகள் [chondrules] மோதலில் தோன்றிய பளிங்குகளே.  சூரியக் கோள் வடிவாக அவை தேவைப்படா.  அவையும்  கோள்கள் உருவாகத் தேவையான மூலச் செங்கற்கள் அல்ல.

    நமது சூரிய மண்டலம் எப்போது தோன்றியது ?

    வானியல் விஞ்ஞானிகளும், பூதளவாதிகளும் (Astronomers & Geologists) பூமியின் வயதைக் கணித்து அதிலிருந்து பரிதி மண்டலத்தின் தோற்ற வயதை அறியப் பல்வேறு முறைகளைக் கையாள்கிறார்.  நாமறிந்த பூமிப் பாறைகளின் கதிரியக்கத் தேய்வு வீதங்களைப் “பாறைக் கதிரளப்புக் காலக் கணிப்பு” மூலம் (Radiometric Dating of Rocks) கணக்கிட்டுச் சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.  பூமியின் பூர்வீகப் பாறை வயது கதிரியக்கத் தேய்வு வீதக் கணிப்பில் 3.9 பில்லியன் ஆண்டுகள் என்பது தெரிய வருகிறது !  பூதளத் தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) தூண்டி பூமியில் எழும் பூகம்ப எரிமலை நிகழ்ச்சிகளால் பூர்வீகப் பாறைகள் நிலைமாறி அவற்றைக் காண முடியாமல் சிதைத்து விடுகின்றன !

    பூமியின் பூர்வீகப் பாறைகளைத் தவிர விண்வெளிக் கற்கள், எரிகற்கள், நிலவிலிருந்து அல்லது செவ்வாய்க் கோளிலிருந்து வீழும் விண்கற்கள் மிகத் துல்லியமாகப் பரிதி மண்டல வயதுக் காலத்தை நிர்ணயம் செய்ய உதவுகின்றன.  அந்த மாதிரிகளின் கதிரியக்கத் தேய்வு வீதத்தைக் கணித்ததில் அவை 4.6 பில்லியன் ஆண்டு வயதைக் கொண்டவை என்று அறியப்பட்டு, பரிதி மண்டலம் அந்த வயதை ஒட்டி உண்டாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.

    நமது சூரிய மண்டலம் எப்படி உண்டானது ?

    விஞ்ஞான வரலாற்றில் எத்தனையோ கருத்துக்கள் மாறிப் போனாலும், பரிதி மண்டலம் எப்படி உண்டானது என்னும் கருத்து கடந்த 250 ஆண்டு காலமாக மாறவில்லை.  1755 ஆம் ஆண்டில் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவெல் கென்ட் (Immanuel Kant) (1724-1804) முதன்முதலில் தனது நிபுளா கோட்பாடைக் (Nebular Hypothesis) கூறினார்:  அதன்படி பேரளவு வாயு முகில் கொண்ட ஆதிச்சூரிய நிபுளா, பரிதி மண்டலத்தின் சூரியனாகவும், மற்ற அண்டக் கோள்களாகவும் உண்டாக மூலாதாரப் பொருளானது !  1796 இல் பிரெஞ்ச வானியல் நிபுணர் பியர் சைமன் லாப்பிலாஸ் (Pierre Simon Laplace) (1749-1827) அதே மாதிரிக் கோட்பாடை எடுத்துக் கூறினார்.  ஆனால் ஆழ்ந்த விண்வெளியை நோக்கி அவரால் அதற்குச் சான்றுகளை எடுத்துக் காட்ட முடியவில்லை !

    இம்மானுவெல் கென்ட் விளக்கிய நிபுளா கோட்பாடில் இருப்பது இதுதான் : பேரளவுக் கொள்ளளவு வாயு நிறையும் தூசி துணுக்குகளும் திணிவு ஈர்ப்பு (Mass Gravity) விசையால் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தன.  திணிவு நிறை பெருகப் பெருக ஈர்ப்பு சக்தி மிகையாகி வாயுத் திணிவை இறுக்கிச் சுருக்கி (Gravitational Contraction) வாயுக் கோள்களாகவும், திடக்கோள்களாகவும் உருவாயின.

    இப்போது வானியல் விஞ்ஞானிகள் அவற்றை விபரமாகச் சொல்ல முடிகிறது.  அதாவது முதலில் சூரிய மண்டலத்தின் வாயு முகில் மூலக்கூறு (Molecular Gas Cloud) முறிந்த போது அதன் விரிவு 100 AU (Astronomical Unit) [1 AU = Average distance between Sun & Earth (93 மில்லியன் மைல் /150 மில்லியன் கி.மீ.)] ஆகவும், திணிவு நிறை பரிதியைப் போல் 2 அல்லது 3 மடங்கு இருந்ததாகவும் யூகிக்கிறார்கள்.  அத்தகைய வாயு முகில் ஈர்ப்பு முறிவைத் (Cloud’s Gravitational Collapse) தூண்டி விட்டிருப்பது அருகில் இருந்த சூப்பர்நோவாவின் (Supernova) மின்னல் வெடிப்பில் நேர்ந்த அழுத்த அலையாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.  வாயு முகில் குவிந்து விழுந்த பிறகு பலமுறைகளில் திணிவு சேர்ப்பு விரைவானது.  முகில் திணிவின் உஷ்ணம் அதிகரித்து அது சுழலத் தொடங்கியது.  வாயுப் பிண்டம் தங்கி அது வட்டத் தட்டு வடிவாக மட்டமானது.  மிகையான ஈர்ப்பு சேமிப்புச் சக்தி (Gravitational Potential Energy) வெப்பமாக மாறி வாயு முகில் அடர்த்தி (Density) அதிகமானது.  அதுவே கோள்களின் உட்கரு உலோகமாகப் பின்னால் திரட்சி யானது.

    பரிதியின் அண்டக் கோள்கள் உண்டான தெப்படி ?

    வட்டவியல் திணிவு நெம்பு நிலைப்புப்படி (Conservation of Angular Momentum) வடிவம் சிறுகச் சிறுகச் சுழலும் மட்டமான தட்டின் வேகம் மிகையானது.  மென்மேலும் விழுந்து சேரும் வாயுவும், தூசி துணுக்குகளும் சேர்ந்து கொண்டு முன்னோடிக் கோள் தட்டு (Proto-Planetary Disk) மையம் தடித்து ஓரம் மெலிவாகித் தமிழகத்தின் “ஆப்பம்” போல் (Pancake) உருவாகியது.  நடுவில் மகா ஈர்ப்புச்சக்தி வாய்ந்த உட்கரு எழுவதும் அப்பால் விளிம்பு நோக்கிச் செல்லச்செல்ல வலுகுன்றிய கோள்கள் உருவாவதும் எப்படி என்று விளக்கிச் சொல்லலாம் ?  பேரளவு வாயுப் பிண்டம் செழித்த நிபுளாவைச் சுற்றிலும் அதன் பூத ஈர்ப்பு மண்டலம் காந்த சக்தியால் சூடாக உள்ளது !  அந்த ஈர்ப்பு வாயுத் துணுக்குகளுக்கு சுழற்சியை உண்டாக்கித் தன் பூத ஈர்ப்புக் குழியில் சுற்றத் தூண்டுகிறது.  அவ்விதம் சிறுகச் சிறுக்கச் சேர்ந்துதான் சுழலும் கிருஷ்ணச் சக்கிரம் போல் அசுர வடிவாகி வட அமெரிக்க வேனிற்தள ஹர்ரிக்கேன் (Tropical Hurricanes) சூறாவளிகள் உருவாகின்றன !

    பேரளவு இயக்கம் மையத்தில் உண்டாகி முன்னோடிச் சேய் விண்மீன் (Infant Proto-Star) விரைவாக வாயுத் திணிவைத் திரட்டி சூரியனாகியது.  அதன் பிறகு 50 மில்லியன் ஆண்டுகளாக பரிதி போதுமான வாயு நிறையைச் சுருட்டிப் பூரண எரிநிலை அடைந்து பிணைவு சக்தி தூண்டப் பட்டு சுயவொளி விண்மீனாக மாறியது.  தட்டின் விளிம்புகளில் மேலும் வாயுத் துணுக்குகள் சேமிப்பாகி அங்குமிங்கும் கண்ட இடங்களில் சிறிதும் பெரிதுமாக வாயுவிலும் திடப் பிண்டத்திலும் கோள்கள் உண்டாயின.

    பரிதி வெப்ப அணுக்கரு சக்தியால் தூண்டப் பட்டதும் அது அசுரப் புயலை எழுப்பித் தூசிகளையும் துணுக்குகளையும் தட்டிலிருந்து வெளியேற்றியது.  அப்போது பூத வாயுக் கோள்கள் மென்மேலும் பெருக்க இயலாது போயின.  தட்டில் தங்கிய மீத வாயுக்கள் பேரளவு வெப்பத்தாலும், ஈர்ப்பு விசையாலும் மூலகமாற்றம் நிகழ்ந்து குளிர்ந்து திரண்டு சிலிகேட்களும், உலோகங்களும் (Silicates & Metals) உண்டாயின.  துணுக்குகளும், தூசிப் பனிகளும் மற்ற கோள்களின் முன்னோடிகளைக் கட்டி மென்மேலும் பெருக்க வைத்துப் பேரளவு அண்டங்களாக்கின.

    பரிதி மண்டலத்தின் புறக் கோள்கள் பனி அண்டங்களாய்க் கட்டுமான மாகின.  வாயுக் கோள்களின் உட்கரு அடர்த்தியாகி வாயு முகில்கள் அவற்றை இறுகிப் போர்த்திக் கொண்டன.  புறக்கோள்களைச் சுற்றிலும் பல துணைக்கோள்கள் உண்டாகிச் சுற்றத் தொடங்கின.  வாயு முகில்கள் வீசி எறியப்பட்டு வால்மீன்களாக “ஓர்ட் முகில்” மந்தையில் (Oort Cloud of Comets) சிக்கின.  ஓர் அசுரப் பிண்டம் பூமியை மோதி நிலவு உண்டானது.  செவ்வாய்க் கோளுக்குச் சந்திரன்கள் ஏற்பட்டுச் சுற்ற ஆரம்பித்தன.  இவை அனைத்தும் இம்மானுவெல் கான்ட் 250 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய நிபுளாக் கோட்பாடைத்தான் முற்றிலும் மெய்ப்பிக்கின்றன.

    பரிதி மண்டலப் படைப்பில் காணும் சில புதிர்கள் !

    அண்டக் கோள்கள் ஏன் பரிதியை ஒரே தளமட்டத்தில் நீள்வட்ட வீதிகளில் சுற்றுகின்றன ?  அவற்றின் சீரொழுக்க இயக்க முறைக்கு என்ன காரணம் உள்ளது ?  அகக்கோள்களும், புறக்கோள்களும் சூரியனை ஏன் எதிர்க் கடிகார முறையில் சுற்றி வருகின்றன ? சூரியனையும் மற்ற கோள்கள் போலின்றித் தன்னச்சில் சுக்கிரன் மட்டும் ஏன் நேர்க் கடிகார வக்கிர திசையில் சுற்றி வருகிறது ? பூமியின் நிலவு தன்னச்சில் சுழாது ஏன் ஒரே முகத்தைக் காட்டிக் கொண்டு புது மாதிரிச் சுற்றி வருகிறது ? தன்னச்சில் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுழல்வது ஓர் விந்தைதான்.  கோள்களின் துணைக் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுற்றுவதும் ஒரு விந்தைதான்.  இந்த விந்தைகள் அனைத்தும் நிபுளாக் கோட்பாடு கூறும் “சுழற்தட்டு அமைப்பு” விதியைப் பெரும்பாலும் நிரூபிக்கின்றன.

    யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் பணி தொடர்கிறது !

    ஏப்ரல் 15, 2008 ஆம் தேதி அண்டவெளித் தேடல் விஞ்ஞானிகள் 1990 ஆண்டு முதல் பதினேழு ஆண்டுகளாய்ப் பரிதியைச் சுற்றி ஆராய்ந்து வரும் “யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியைப்” (Ulysses Solar Probe) பூமி ஆட்சி அரங்கிலிருந்து தளர்த்தி ஓய்வாக இருக்கவிட்டு 2013 ஆண்டில் மீண்டும் ஆய்வு செய்ய மாற்றியுள்ளார் !  அப்போதுதான் மறுபடியும் பரிதியின் அடுத்த உச்சநிலைக் கதிராட்டம் தொடங்கும் !  அதுவரை விண்ணுளவியின் ராக்கெட் உந்தல் எரிசக்தியை வீணாக்காமல் சேமித்து வைத்து சில இயக்கங்களையும் முடக்கி உளவி ஓய்வெடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது !  பரிதியி லிருந்து 125 மில்லியன் மைல் தூரத்தில் பரிதியை மையமாகக் கொண்டு சுற்றிவரும் நீள் வட்ட வீதியில் (Helio Centric Orbit) உறங்கி வரும் கருவிகளைச் சூரிய கனல் வெப்பமே எழுப்பிவிடும் தகுதி பெற்றது.  இப்போது ஓய்வெடுக்கும் உளவி பரிதியை விட்டு அப்பால் நகன்று 250 மில்லியன் தொலைவை 2010 ஆண்டில் அடைந்து விடும்.

    ++++++++++++++++++++++

    [தொடரும்]

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206291&format=html[சூரியன்]
    16 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40804101&format=html (What will Happen to the Sun ?)
    17 Solar System Formation By Jeff Scott (October 16, 2005)
    18. Spaceflight Now -Breaking News. Controllers Working to Keep “Ulysses Sun Orbiter Alive” By :Stephen Clark (www.spaceflightnow.com/news/n0804/15ulysses) [April 18, 2008]

    19.  http://www.spacedaily.com/reports/A_twist_on_planetary_origins_999.html  [January 15, 2015]

    20. http://www.spacedaily.com/reports/Meteorite_material_born_in_molten_spray_as_embryo_planets_collided_999.html  [January 15, 2015]

    21.  http://mashable.com/2016/01/20/new-solar-system-planet-nine/#PKq33NOdLPqT [January 20, 2016]

    22. http://iopscience.iop.org/article/10.3847/0004-6256/151/2/22/pdf

    23.  http://iopscience.iop.org/article/10.3847/0004-6256/151/2/22;jsessionid=9DAB98EED9CB30448604A2F4CA0F8752.c5.iopscience.cld.iop.org#aj522495s6

    24.  http://www.dailygalaxy.com/my_weblog/2016/01/caltech-evidence-found-for-a-ninth-planet-in-the-outer-solar-system.html?  [January 20, 2016]

    25. http://www.dailygalaxy.com/my_weblog/2016/01/todays-galaxy-insight-beyond-pluto-discovery-of-an-unseen-9th-planet-in-our-solar-system-video.html?  [January 23, 2016]

    26.  http://www.dailygalaxy.com/my_weblog/2016/10/unusual-tilt-of-our-sun-caused-by-planet-caltech-scientists-explains-something-about-the-solar-syste.html?  [October 19, 2016]

    27.  http://www.cbc.ca/news/technology/9th-planet-x-1.3412070 [January 21, 2016]

    27(a)  https://en.wikipedia.org/wiki/Pluto  [May 20, 2017]

    28.  https://en.wikipedia.org/wiki/Planets_beyond_Neptune [June 23, 2017]

    29. http://www.dailygalaxy.com/my_weblog/2017/06/the-curious-case-of-the-warped-kuiper-belt-is-there-an-earth-sized-planet-far-beyond-pluto.html  [June 22, 2017]

    30.  https://www.space.com/37295-possible-planet-10.html?utm_source=sdc-newsletter&utm_medium=email&utm_campaign=20170623-sdc  [June 22, 2017]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com] June 24, 2017 [R-4]

    Attachments area
    Preview YouTube video Evidence of a Ninth Planet

    Evidence of a Ninth Planet

    Preview YouTube video Nibiru Planet X: Astronomers Prove Planet X exists (Must See) Update 2016

    Nibiru Planet X: Astronomers Prove Planet X exists (Must See) Update 2016

    Preview YouTube video We can’t see this possible 9th planet, but we feel its presence

    We can’t see this possible 9th planet, but we feel its presence

    Preview YouTube video Ray Jayawardhana – “Rocks, Ice and Penguins: Searching for Clues to Planetary Origins in Antarctica”

    Ray Jayawardhana – “Rocks, Ice and Penguins: Searching for Clues to Planetary Origins in Antarctica”

    Preview YouTube video The origin of mankind, ufos, planetary travel, venus, mars, where we have been

    The origin of mankind, ufos, planetary travel, venus, mars, where we have been
    Share
  • கவியரசர் கண்ணதாசன்

    விவேக பாரதி 

     

    கவியரசர் கண்ணதாசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து….இன்று காலை பொதிகைத் தொலைக்காட்சியில் நான் கேட்ட ஒரு கிராமியப் பாடலின் மெட்டில்….

    unnamed

    வானம்விட்டு வந்தானோ ? மண்ணுக்குள்ள நின்னானோ ?
    வார்த்தையால கட்டிப்போட்டு அவுக்காம போனானோ ?
    ஞானஞ்சொல்லித் தந்தானோ யாருகிட்ட கேட்டானோ ?
    ஞாலமெலாம் வாய்பொளக்க நாளும்பாடி வெச்சானோ ?

    ஊனமுற்ற பேர்கள உசுப்பிவிடும் பாட்டுல,
    ஊருக்குள்ள கேக்குற உற்சாகக் கூத்துல,
    தானும்வந்து நிக்குறானடி – என் கண்ணம்மா
    தமிழால சொக்குறோமடீ !

    பாட்டுபாடி வந்தானே பாடமெலாஞ் சொன்னானே
    பக்குவமா பக்தியோடு பலசேதி தந்தானே !
    ஆட்டம்போட வெச்சானே அமையாக வெச்சானே !
    ஆடி அடங்கிப்போகும் அர்த்தமெலாஞ் சொன்னானே !

    கூட்டஞ்சேக்க பாக்கல ! கொள்கயெதும் பேசல !
    கூட்டாளி யாகல ! குடுக்காம போகல !
    நாட்டுக்குள்ள நிக்குறானடி – என் கண்ணம்மா
    நாமபாத்து சொக்குறோமடீ !

    கண்ணனுக்கு தாசனா ! கவிதைக்கெல்லாம் ராசனா !
    கதசொல்லும் பாட்டுகளக் காலமெலாம் வீசுனான் !
    வண்ணத்தமிழக் கொஞ்சுனான் ! வரிவரியாக் கொஞ்சுனான் !
    வாழ்க்கையோட தத்துவத்த வாழ்ந்துகிட்டே பாடுனான் !

    கிண்ணத்தையும் மறக்கல ! கீதையையும் மறக்கல !
    கீழிருந்து வந்தவன் மறுபடியும் விழுகல !
    எண்ணத்துல நிக்குறானடி – என் கண்ணம்மா
    எழுத்தால சொக்குறோமடீ !

    https://soundcloud.com/vivekbharathi/nlb3dghekzqg

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170624 - DWA -wcol-wmark

    பகவான் உவாச
    ———————-
    ”காரியம் அற்றசோர்வு வீரன் உனக்கெதற்கு
    சூரிகள் விண்ணிடை சேர்ப்பாரோ ! -ஆரியா
    தேரை குதிரையை தேர்ந்தெடுத்த நீயெனக்குத்
    தேரைநான் பாறை துளி’’….கிரேசி மோகன்….!

     

    Share
  • நாளையென்ன நாளை

     

    நாளையென்ன நாளையைய்யா வரதராஜா ! – உன்
    . நல்லருளை இன்றனுப்பு வரதராஜா !
    நீளுகின்ற காத்திருப்பு போதும்ராஜா – உன்
    . நிர்மலக்க ழல்காட்சி சிந்துராஜா !
    தோளிலென்னை வேஷபாரம் தாக்குகின்றதே – மனம்
    . தோற்றபடி வெந்தழுது வீங்குகின்றதே
    ஆளுமாக பாதஜாலம் காட்டுராஜா – அட
    . அம்பிகையின் சோதரனே வரதராஜா !

    காலமென்னை ஆட்டுவிக்கக் கண்டிருப்பதோ – உன்
    . கழல்பிடிக்க விளையாட்டு கொண்டிருப்பதோ
    ஓலமிட்டு கெஞ்சுமொலி கேட்கவில்லையோ – என்ன
    . ஓரவிழியின் ஜாலமெலாம் பிள்ளைமுன்னமோ ?
    தோலிறுக்கம் மொழிநடுக்கம் நேரும்போதுதான் – உரு
    . தோற்றியெனைத் தேவலோகம் காட்டுமெண்ணமோ ?
    பாலனிட்ட கவிப்புலம்பல் மாண்டுபோகவோ – ஒரு
    . பார்வையொளி வீசமனம் சொல்லவில்லையோ ?

    காத்திருப்பு நன்மையென்று கண்டபோதிலும் – உன்
    . கருணைமழை கடமைவினை அதைமறுப்பதோ ?
    பூத்திருக்கும் கண்களுக்குள் புயல்நடப்பதோ ? – வளிப்
    . பூழ்திவந்து நெஞ்சினோரம் வெடிவெடிப்பதோ ?
    சாத்திரங்கள் சொல்வதுபோல் வாட்டுமெண்ணமோ ? – இந்தச்
    . சமகாலத் தீயட்டம் இன்னும்மன்னுமோ ?
    ஆர்த்தெழுந்து கையிலெனைத் தூக்குராஜா – உன்
    . அருட்கமலப் பாதத்தைக் காட்டுராஜா !

     

    https://soundcloud.com/vivekbharathi/drofx6rv7ntu

     

    “ஓம் சக்தி”
    விவேக்பாரதி

    Share
  • காலமெலாம் வாழுகிறாய்

     

    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் அவுஸ்த்திரேலியா 

    unnamed
    எங்கள்கவி கண்ணதாச
    என்றும்நீ வாழுகிறாய்
    தங்கநிகர் கவிதந்த
    தமிழ்க்கவியே நீதானே

    தங்கிநிற்கும் வகையினிலே
    தரமிக்க கவிதைதந்து
    எங்களுக்கு அளித்தவுன்னை
    எம்மிதயம் மறந்திடுமா

    பொங்கிவரும் கடலலைபோல்
    புதுப்புதிதாய் பாட்டெழுதி
    எங்கும்புகழ் பரப்பியதை
    எம்மிதயம் நினைக்கிறதே

    தங்கத் தமிழ்மகனே
    தரமான தமிழ்ப்புலவா
    எங்குநீ சென்றாலும்
    எல்லோரும் உனைமறவோம் !

    கவிச்சிங்கம் உனக்காக
    பலசங்கம் எழுந்துளது
    கவிபாடி கவிபாடி
    கவிஞரெலாம் போற்றுகிறார்

    புவிமுழுதும் உன்புகழோ
    பொலிந்தெங்கும் இருக்கிறது
    கவியரசே கண்ணதாச
    காலமெலாம் வாழுகிறாய் !

    நீபாடாப் பொருளில்லை
    நீயெடுக்கா உவமையில்லை
    தாய்த்தமிழே உன்னிடத்தில்
    சரண்புகுந்து இருந்திடுச்சே !

    களைப்பெமக்கு வந்தாலும்
    கவலையெமைச் சூழ்ந்தாலும்
    கண்ணதாசா உன்பாட்டே
    கைகொடுத்து நின்றதையா !

    வைத்தியர் முதற்கொண்டு
    நோயாளி யாவருக்கும்
    வரமாக உன்பாட்டே
    வாய்த்ததை நாம்மறக்கமாட்டோம் !

    அர்த்தமுள்ள கருத்துகளை
    அள்ளித்தந்த பெருங்கவியே
    ஆண்டாண்டாய் உன்புகழை
    அனவருமே போற்றிடுவோம் !

    Share
  • காலத்தால் அழியாக் கவிஞன்

    சக்திசக்திதாசன்

    10354728_655625571192738_5553640597757638670_n

    ஜூன் 24 எப்படி தன்னைப் பெருமையாக்கிக் கொண்டது ? இந்த தினத்தில் எத்தனையோ நிகழ்வுகள் நடந்தேறியிருக்கலாம். . எத்தனையோ கோடி மக்கள் பிறந்திருக்கலாம் அன்றி இறந்திருக்கலாம். ஆனால் இத்திகதி தமிழர்கள் அனைவரையும் தன்பால் இழுக்க வைக்கும் ஒரு மாபெரும் நிகழ்வுக்கு வித்திட்டது. ஆம் தாய்த்தமிழகம் என நாம் போற்றும் தமிழ்நாட்டில் சிறுகூடல் பட்டியில், மலையரசித் தாயின்மடியில் முத்தாக ஒரு முத்தையாவை தமிழன்னை விசாலாட்சி எனும் சிப்பியினுள் விளைய வைத்தது..

    விளைவு !

    உலகத்தமிழர்களுக்கெல்லாம் காலத்தால் அழியாத கவிஞனை ஈந்து ஜூன் 24 தன்னை உலகத் தமிழர் மனங்களில் நிலை கொள்ளும் ஒரு தேதியாக நிர்ணயித்து விட்டது. என்று நான் எழுதத் தொடங்கினேனோ அன்றே கவியரசர் கண்ணதாசனை என் மனதினில் மானசீகக் குருவாக வரித்துக் கொண்டேன். நான் எழுத்தாளனாக வேண்டும் எனும் இலட்சிய வேட்கையோடு எழுத்தாளனாகவில்லை. எழுத்து என்னையறியாமலே என்னைத் தன்வசப்படுத்திக் கொண்டு விட்டது. தமிழை நேசித்ததினால் கண்ணதாசனை நேசித்தேனா அன்றிக் கண்ணதாசனின் படைப்புகளை நேசித்ததினால் தமிழை நேசித்தேனா எனும் விவாதம் என்னுள் என் வாழ்வின் மத்திய பகுதியில் தான் நிகழ்ந்தது. அப்போது என்னுள் ஏன் இப்படி ஒரு விவாதம் என்று என்னை நானே கேட்ட போது அதற்கான விடையும் எனக்குக் கிடைத்தது. ஆம் கண்ணதாசனுக்கும், தமிழுக்கும் இருந்த பிரிக்க முடியாத பிணைப்பே எனது விவாதத்திற்கு காரணமாயிற்று என்று உணர்ந்து கொண்டேன்.

    10492612_655625301192765_47976254459603565_n

    வாலிபக் காலங்களில் மனதில் காதல் எண்ணங்கள் ஊர்வது சகஜம், ஆனால் அக்காதல் எண்ணங்களுக்கு வடிவம் கொடுப்பது அன்றைய எம் தலைமுறையில் திரைப்படப்பாடல்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. அத்தகைய பாடல்களில் உள்ளத்து உணர்வுகளை எளிமையாகக் கேட்கும் முதல் மாத்திரத்திலேயே புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அமைத்துத் தந்த வல்லமை கவியரசர் கண்ணதாசனுக்கு உண்டு என்பதே அவர்பால் அன்றைய நான் கொண்ட ஈர்ப்பு. அத்தகைய ஈர்ப்பின்பால் கவரப்பட்ட நான் காலச்சுழற்சி எனும் காற்றில் அகப்பட்ட சருகினைப் போல புலம்பெயர் தேசத்துக்கு அடித்துச் செல்லப்பட்டேன். சிறியதோர் மீன் தொட்டியில் இருக்கும் மீன் பெரும் ஆழியில் தூக்கி வீசப்பட்டால் திக்குத் திசை தெரியாமல் தடுமாறுவது போல அன்னை தந்தை எனும் பாதுகாப்பு வலையத்தினுள் இருந்து 18 வயதினில் இங்கிலாந்து எனும் பரந்த தேசத்தினுள் தூக்கி வீசப்பட்டேன் அப்போது எனக்கு என் தனிமையில் துணையாய் இருந்தது ஈழத்தில் இருந்து நான் பதிவு செய்து கொண்டு வந்திருந்த எனக்குப் பிடித்தமான திரைப்படப் பாடல்கள் தான். “தனிமையிலே இனிமை காண முடியுமா?” எனும் கவியரசரின் பாடலின் உண்மையான அர்த்தம் என்னுள்ளத்தில் புலப்படத் தொடங்கியது. கவியரசர் யாத்த பாடல்கள் ஒவ்வொன்றின் வரிகளிலும் பொதிந்திருந்த பொருளின் கனத்தை என்னெஞ்சம் உள்வாங்கத் தொடங்கியது.. எப்போது உள்ளத்தில் என் தாய்நாட்டின் பிரிவின் துயரம் தாக்கினாலும் ” எண்ணங்களினாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா” எனும் வரிகள் மனதுக்கு இதமளித்தன.

    10300436_656121441143151_5885257405195879848_n
    புலம்பெயர் வாழ்க்கையில் பல திருப்பங்களைச் சந்தித்து திசைமாறி ஓடிக்கொண்டிருந்த என் வாழ்க்கை நதியைச் சரியான வழியில் திருப்ப வழிகள் தேடித் தவித்திருந்த வேளை ஈழத்திலிருந்த என் உற்ற நண்பன் எனக்கு கவியரசரின் “அர்த்தமுள்ள இந்துமதம்” எனும் அரிய பொக்கிஷத்தின் பத்துப் பகுதிகளையும் அனுப்பி வைத்தான். அதைப்படிக்கப் படிக்க என் வாழ்வின் போக்கினில் நான் செல்லும் வழிகளின் நுணுக்கங்களை மாற்றும் மார்க்கத்தைக் கற்றுக் கொண்டேன். நான் பிறந்த கலாச்சாரத்தின்படி நானுதித்த மதத்தின் அடிப்படையை வெறுப்பதும், எள்ளி நகையாடுவதும் நாகரீகம் என்று கருதி வந்த எனக்கு “நான் ஒரு இந்து” என்று எண்ணுவதோ, கூறுவதோ மட்டும் என்னை ஒரு மதவெறியன் என்று அடையாளம் காட்டி விடாது என்று உணர்ந்து கொண்டேன். நல்ல மனிதனாக நடப்பதுவே ஒரு நல்ல இந்துவின் அடையாளம் என்று உணர்ந்து கொண்டேன். வாழ்வின் ஒவ்வொரு அசைவுகளுக்கும் விளக்கம் அளித்த கவியரசரின் எளிதான , அனைவருக்கும் புரிய வைக்கும் தமிழ்நடை என்னைக் கவர்ந்தது. கவியரசரின் பாடல்களை மட்டுமல்ல அவரின் எழுத்துக்களையும் காதலிக்கத் தொடங்கினேன். எழுத்து என்பது எனது இலக்கணச் சிறப்பையோ அன்றி இலக்கியச் செறிவையோ விளம்பரப்படுத்தும் ஆயுதமல்ல அது சாமான்ய மக்களையும் சென்றடையக்கூடிய ஒரு ஊடக ஊடுருவலாக இருக்க வேண்டியதன் அவசியத்தைக் கவியரசரின் எழுத்துக்களின் மூலம் கற்றேன் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

    அர்த்தமுள்ள இந்துமதத்தில் ஆரம்பித்த கவியரசரின் எழுத்துக்களின் சேகரிப்பு இன்று நான் எப்போது சென்னை சென்றாலும் கவியரசரின் மூன்று புத்தகங்களாவது இல்லாமல் திரும்புவது கிடையாது எனும் நிலைமைக்கு என்னை மாற்றியுள்ளது. என்னுடைய வாசிப்பு பழக்கத்தை அதிகரித்து இன்று எனது இல்லத்தில் ஒரு நூலகம் போன்று ஏறத்தாழ 500 நூல்கள் வைத்துப் படிக்கும் ஒரு நிலைக்கு உயர்த்தியுள்ளது. அது மட்டுமல்ல அவரது எழுத்துக்களின் வாசம் இன்று என்னை கவிதை, கட்டுரை, கதை என பல புனைவுகளை யாக்கும் வகையில் ஒரு எழுத்தை நேசிப்பவனாக மாற்றியுள்ளது.

    என்ன சக்திதாசன் “காலத்தால் அழியாக் கவிஞன்” எனும் தலைப்பிட்டு விட்டு தன்னுடைய எழுத்துப்பயணத்தை விவரிக்கின்றானே என்று சிலர் எண்ணக்கூடும். கவியரசர் கண்ணதாசன் ஒரு பாமரன், ஒரு சாமானியத் தமிழனின் மனதில் இத்தகைய தாக்கத்தை விளைவிக்கக் கூடியவராக இருப்பதே அவர் தமிழர் மனங்களில் என்றும் வாழ்ந்து காலத்தால் அழியாக் கவிஞராக நிலைபெறுகிறார் என்பதற்குச் சான்றாகவே எனது வாழ்விலிருந்து உதாரணங்களை எடுத்தியம்பினேன். நான் கவியரசரிடமிருந்து கற்றுக் கொண்ட முதல் பாடம் ஒரு நல்ல எழுத்தாளனாவதன் அடிப்படை சுய அலசலே என்பதுதான். அவர் என்றுமே எதையுமே தனது வாழ்வின் நிகழ்ந்த நிகழ்வுகளின் அடிப்படையில் விளக்குவதை அடிப்படையாகக் கொண்டிருந்தார்.. அதற்குச் சான்றாக அவரே

    “ நான் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேனோ
    அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன் ஆகையால்
    இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்லும்
    யோக்கிதை எனக்குண்டு “

    என்று மிகவும் துணிச்சலாக அடித்துக் கூறியுள்ளார். கவியரசரது 90வது பிறந்ததினத்தில் அவரை நினைவுகூறுவது எந்தன் அவா. அதை இவ்வகையில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

    உள்ளத்திலே ஒரு ஒளியாக
    உணர்வினில் கலந்த மொழியாக
    தமிழோடு கலந்திடும் கவியாக
    தாரகம் போற்றிடும் கவியரசே !

    நேற்றோடு போன பொழுதாக
    காற்றோடு கரைந்த முகிலாக
    நீறாகிப் போகும் வெறும் உடலல்ல
    நினைவோடு வாழும் உணர்வய்யா நீ !

    ஈழத்தின் வடக்குக் கோடியிலே
    இகத்தில் உதித்த பாமரன் இவனை
    தமிழோடு யாத்து கவிபாட வைத்த
    தங்கத் தமிழ்க் குருநாதன் நீயே !

    வனவாசம் போதாது என்றே
    மனவாசம் கொண்டு உன் வாழ்வினை
    சோதனை செய்து அறிவுரை தந்து
    சோதரர் பலரின் வாழ்வினை மாற்றினாய்

    அர்த்தம் உள்ள இந்து மதத்தினை
    அத்தனை இலகுவாய் அறிமுகம் செய்தனை
    ஏழையாய் உதித்து ஏணியாய் உயர்ந்தவன்
    ஏசுகாவியம் பாடி நீ பகர்ந்தனை

    பாடல்கள் ஆயிரம் பாடினாய் கவியே
    படித்தவர் நெஞ்சில் பதிந்தனை நீயே
    பொதித்திடும் கருத்துக்கள் நெருப்பினை போல
    பொசுக்கிடும் உள்ளத்தை உண்மைக் கனலாய்

    கவியரசன் உந்தன் பிறந்தநாளில் தமிழ்க்
    கண்ணதாசன் நின்னை நினைந்தொரு
    சிறிய கவிதை படைத்தவன் நான்
    சக்திதாசன் எனும் ஒரு பாமரன்

    வணக்கங்களுடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • பந்தயம்

    நிர்மலா ராகவன்

    அந்தப் பெரிய மண்டபத்துக்குள் நுழையும்போதே செல்லப்பா பாகவதருக்கு நா உலர்ந்துபோயிற்று. ஓரடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. கால்கள் பின்னுக்கு இழுத்தன.

    தோரணங்கள் என்ன, மேடையைச் சுற்றி வண்ண வண்ண விளக்குகள் என்ன என்று, கல்யாணக்கோலத்தில் இருந்தது மண்டபம். இருபதுக்குக் குறையாத வாத்தியங்கள் அன்று நிகழப்போகும் பாடல் போட்டியின் இறுதிச் சுற்றுக்குக் கட்டியம் கூறிக்கொண்டிருந்தன.

    அந்த மேடைமேல் தானும் இருக்கப்போகிறோம்!

    கடந்த வாரம்வரை ஓர் இன்பக் கனவென அதை ஆவலுடன் எதிர்பார்த்து வந்தவருக்கு மயக்கம் வருவதுபோல் இருந்தது. அருகிலிருந்த இருக்கையைப் பிடித்துக்கொண்டு சுதாரித்துக்கொண்டார்.

    பூமி பிளந்து பாவிகளை உள்வாங்கிக் கொள்வதெல்லாம் இதிகாச புராணங்களில்தான் நடக்குமோ?

    இந்தக் கலிகாலத்தில் ஜக்கு போன்ற அயோக்கியர்கள்தாம் தரைக்க முடியுமோ?

    `நீ மட்டும் பெரிய யோக்கியனா?’ என்று அவரது அந்தராத்மா இடித்துரைத்தது.

    `எங்காவது ஓடிவிட மாட்டோமா!’ என்ற ஏக்கம் பிறக்க, `கொன்று போட்டுவிட மாட்டார்கள்?’ என்று எதிரெண்ணம் ஒன்று எழுந்து பயமுறுத்தியது.

    அதுதான் வெளிப்படையாகவே சொல்லிப் போனாரே அந்த மனிதர், `நாங்க நல்லவங்களுக்கு நல்லவங்க. பொல்லாதவங்களுக்கு யமன்!’ என்று!

    செல்லப்பாவின் வீட்டுக்கு முதல்நாள் வந்திருந்திருந்தார் அவர். “என் பெயர் ஜக்கு — ஜகன்னாதன்! ஒங்களால எனக்கு ஒரு காரியம் ஆகணுமே!” மிகப் பணிவாகப் பேசினார். வீட்டுச் சுற்றுச்சூழலைப் பார்த்தபோதே ஒரு முடிவுக்கு வந்திருந்தார் அவர்.

    ஒரு சிறு கிராமத்தில் எக்காலத்திலோ கும்பாபிஷேகம் பண்ணப்பட்ட கோயிலில் வாத்தியம் வாசிக்கும் பரம்பரையில் வந்தவர் என்று செல்லப்பாவின் முன்னோர்களுக்கு அந்த வீடு கொடுக்கப்பட்டிருந்தது. கோயிலே சிதிலம் என்றால் வீட்டைப்பற்றிக் கேட்கவா வேண்டும்!

    இந்த மனிதரையா தன் கைக்குள் போட்டுக்கொள்ள முடியாது!

    ஆனால், அவர் எதிர்பார்த்தபடி செல்லப்பா அவ்வளவு எளிதாக மசியவில்லை. ஜக்கு சொல்வதைக் கேட்டுவிட்டு, “அது இசைக்குச் செய்யற துரோகமில்லே,” என்று மறுத்தார்.

    “ஒங்க மனைவிக்குப் புத்துநோயாமே! நீங்க எவ்வளவு உழைச்சாலும், இந்த ஜன்மத்தில அஞ்சு லட்சத்தைப் பாக்க முடியுமா? இதை வெச்சுக்கிட்டு நல்லா வைத்தியம் பாக்கலாமில்ல? பிடிங்க!” ஒரு பெட்டியை அருகிலிருந்த முக்காலிமேல் வைத்தார் அந்த விடாக்கண்டர். பெட்டியைத் திறந்து காட்டியபோது செல்லப்பாவின் கண்கள் அகன்றதைக் கவனிக்கத் தவறவில்லை அவர்.

    “நீங்களும் எத்தனையோ வருஷமா, `சாமி காரியம்’னு செஞ்சுக்கிட்டிருக்கீங்கல்ல? அந்தக் கடவுளே என் ரூபத்திலே வந்திருக்குன்னு நினைச்சுக்குங்க,” என்று நைச்சியமாகப் பேசியவர், “இதிலே ஒரு லட்சம் இருக்கு. வெச்சுக்குங்க. மீதியை விழா முடிஞ்சதும், நானே ஒங்ககிட்டே மண்டபத்திலேயே குடுத்துடறேன். என்ன?”

    “ஐயோ!” பதறினார் செல்லப்பா.

    “சரி, வேண்டாம். யாராவது பாத்துட்டா வம்பு! அடுத்த நாள் காலையிலே இங்கேயே வந்து குடுத்தாப்போச்சு!” வந்த காரியம் நல்லவிதமாக முடிந்தது என்ற திருப்தியுடன் எழுந்துகொண்டார். “கைநீட்டி காசு வாங்கியிருக்கீங்க. கல்யாணிக்குப் பரிசு கிடைக்கக் கூடாது. அவ்வளவுதான். அது ஒங்க கையிலதான் இருக்கு”.

    கல்யாணியின் விதவைத் தாய் ஓர் இசை ஆசிரியை. கருவிலிருந்தே பாட்டைக் கேட்டு வளர்ந்த பெண்! சோடையாக இருக்குமா?

    உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஜக்குவைப்போன்ற பலர் ஒன்று சேர்ந்து, போட்டி முடிவைக் குறித்து பொதுமக்களைப் பந்தயம் கட்ட வைத்திருந்தார்கள். மக்களின் கணிப்புப்படி கல்யாணிக்குத்தான் முதல் இடம்.

    அப்படி ஏடாகூடமாக ஏதாவது நடந்துவிட்டால், பந்தயம் கட்டியவர்களுக்கு வாரிக் கொடுத்து, நஷ்டப்பட வேண்டியிருக்குமே என்று ஜக்கு போன்றவர்கள் முன்ஜாக்கிரதையாக இருந்தார்கள்.

    ஜக்கு போனதும், “யாருங்க?” என்று மெல்லிய குரலில் விசாரித்தாள் மனைவி.

    “ஒனக்கு வைத்தியம் செய்ய சாமி அனுப்பினவரு!” என்று கூறினாலும், செல்லப்பாவின் மனதில் நிம்மதி இல்லை. குறுக்கு வழியில் சம்பாதித்தாவது மனைவியின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமா?

    நிகழ்ச்சி ஆரம்பிக்க சில நிமிடங்களே இருந்தன.

    “வந்துட்டீங்களா, மாமா? இந்தப் பக்கமா நில்லுங்க. நமஸ்காரம் பண்ணறேன்!”

    ஒரு வருடத்துக்கு முன்னால் அவர் யாரோ, அவள் யாரோ! ஆனால், இந்தச் சில மாதங்களாக, அவள் பாடிய ஒவ்வொரு வரிக்குப் பிறகும் அவர் தன் வாத்தியத்தில் அதையே திரும்ப வாசிக்க வேண்டிய நிலையில், இசைத்துறையில் தனக்கிருந்த நீண்டகால அனுபவத்தால் அவளுக்கு நிறைய கற்றுக் கொடுத்திருந்தார்.

    குருவென மதித்தவரின் காலில் விழுந்து கும்பிட்டாள் கல்யாணி.

    செல்லப்பா காலைப் பின்னால் இழுத்துக் கொள்ளாதிருக்க அரும்பாடு பட்டார்.

    “ஏன் மாமா, முகம் வெளுத்தாப்போல இருக்கு? ராத்திரி எல்லாம் தூங்கலியா? படபடப்பா இருந்திச்சோ?”

    “அ.. ஆமா. இல்ல. லேசா காய்ச்சல்!”

    “அதெல்லாம் சரியாப் போயிடும். ஒங்களுக்குத்தான் வாத்தியத்தைக் கையில எடுத்தா, ஒலகமே மறந்துடுமே!” உற்சாகமூட்ட நினைப்பதுபோல கலீரென்று சிரித்தாள்.

    `ஐயோ! சிரிக்காதேயேன்!’ என்று அலற வேண்டும்போல இருந்தது செல்லப்பாவுக்கு.

    வாத்தியத்தைக் கையில் எடுத்தால் தனக்கு உலகமே மறந்துவிடுமாம்! அதுதான் ஜக்கு கூறிப்போனதை மறக்காமல், கல்யாணியின் ஐந்து கட்டை ஸ்ருதிக்குச் சற்றே குறைவாக வாத்தியத்தில் வைத்துக்கொண்டு வந்தோமா?

    இசை கற்றிருந்தாலும் சரி, இல்லை, அதுபற்றி எதுவும் தெரிந்திராவிட்டாலும்கூட, இரண்டையும் ஒரே சமயத்தில் கேட்பவருக்கு நாராசமாக ஆகிவிடுமே! அவர்களல்லவா வாக்களிக்கப்போகிற நீதிபதிகள்!

    பலத்த கரகோஷத்துக்கு நடுவே, தொலைகாட்சி நிலையத்தாரின் உபயமான புதிய ஆடையை அணிந்து, வாய்கொள்ளாத சிரிப்புடன் கல்யாணி மேடைக்கு வந்தாள்.

    பாட்டின் முதல் வரியைப் பாடினாள். அடுத்து, செல்லப்பாவின் முறை. அவரைத் திரும்பிப் பார்த்து, மென்மையாகச் சிரித்தாள்.

    அடுத்த வரி. அதற்கடுத்த வரி. கல்யாணி பாடிக்கொண்டே போனாள்.

    நீதிபதிகள் முகத்தைச் சுருக்கினார்கள். சபையிலிருந்தவர்களிடமும் `கசமுசா’ என்று பேச்செழுந்தது.

    கல்யாணி அவர் பக்கம் திரும்பினாள். முகத்தில் கேள்விக்குறி. எங்கே தவறு நிகழ்ந்தது என்று யோசிக்கவெல்லாம் அது நேரமல்ல. வலக்கை மைக்கைப் பிடித்திருக்க, இடது ஆள்காட்டி விரல் ஒரு காதுக்குள் நுழைந்து, வாத்திய இசையை மறைக்கப் பார்த்தது.

    தானும் புதிய புடவை அணிந்து, பெருமையுடன் சபையில் அமர்ந்திருந்த தாயின் கன்னத்தில் கண்ணீர் வழிந்தோடுவதை அவள் கவனிக்கவில்லை. கண்ணை மூடிக்கொண்டு, தன் குரலிலேயே கவனம் செலுத்தினாள்.

    பாட்டு முடிந்ததும், நீதிபதி, “இந்தச் சூழ்நிலையிலும் நீங்க ஸ்ருதி தவறாம பாடினதைப் பாராட்டித்தான் ஆகணும்!” என்று தவறு எங்கு, எப்படி நிகழ்ந்தது என்று சூசகமாகச் சுட்டிக் காட்டியபோதும், அவளால் செல்லப்பாவைத் தப்பாக நினைக்க முடியவில்லை.

    “பாவம் மாமா நீங்க! காய்ச்சலோட வாசிக்க முடியல,” என்று அனுதாபம் காட்டினாள், தனக்குப் பரிசு கிடைக்காததைப் பெரிதாக எண்ணாது.

    செல்லப்பாவுக்கு வார்த்தைகளே வரவில்லை. நெற்றியில் அடித்துக்கொண்டார்.

    மறுநாள் ஜக்கு வரவில்லை. அவர் மனைவிதான் நிரந்தரமாக அவரைப் பிரிந்து போனாள் — பிறரை ஏமாற்றிச் சேர்த்த பணம் தனக்கு வேண்டாம் என்பதைப்போல்.

    ஒரு நாள் அவரைத் தேடி வந்தாள் கல்யாணி. அவளுடன் நாகரிகமான இளைஞன் ஒருவன்.

    “மாமா! போட்டி அன்னிக்கு ஒங்களுக்கு ஒடம்பு முடியாம போனதும் நல்லதுக்குத்தான். ஜெயிச்சிருந்தா, ஊர் ஊராப் போய் பாடியிருக்கணும். இப்ப வெளிநாட்டுக்கே போகப்போறேன்!”

    வந்திருந்தவன் பேசினான்: “கல்யாணியை டி.வியில பாத்ததுமே, `எனக்கு இவதான்!’னு முடிவு செஞ்சுட்டேன். போட்டியில பரிசு கிடைக்கலியேன்னு இவளுக்கு வருத்தமா இருந்திருக்கும். ஆனா, நான் சந்தோஷமா ஒடனே பறந்து வந்து, பெண் கேட்டுட்டேன்!”

    “மொதல் பத்திரிகை ஒங்களுக்குத்தான் குடுக்கணும்னு வந்தோம், மாமா!”

    இருவரும் மாறி மாறி, ஸ்ருதி பேதமில்லாத இரட்டை நாயனங்கள்போல் பேசினார்கள். சேர்ந்து அவர் காலில் விழுந்தார்கள்.

    ஆசி கூறக்கூட அவர் நாக்கு புரளவில்லை. சற்று யோசித்துவிட்டு, ஏதோ முடிவுக்கு வந்தவராக, “இரும்மா!” என்று உள்ளே போனவர், ஒரு சிறு பெட்டியைக் கொண்டுவந்தார். “இதிலே லட்ச ரூபா இருக்கு. என்னோட கல்யாணப் பரிசா இருக்கட்டும்”.

    அதைப் பார்க்காமலேயே, “இப்போ எதுக்கு, மாமா? கல்யாணத்துக்கு வர்றப்போ குடுங்க”. ஒரு சிறிய மிரட்டலுடன், குழந்தைமாதிரி பிடிவாதம் பிடித்தாள் கல்யாணி.

    “ஒங்க மாமி செத்துப்போய் இன்னும் ஒரு மாசம்கூட ஆகலே, குழந்தே. நான் வரதுக்கில்ல!”

    “எத்தனை பணம்னு சொன்னீங்க?” அப்போதுதான் அவளுக்கு உறைத்தாற்போல் கேட்டாள். “ஒரு லட்சமா! அப்படியோவ்!” சிரித்தாள். “என்ன மாமா? லாட்டரி ஏதும் அடிச்சீங்களா?”

    தளர்ந்த குரலில் ஒப்புக்கொண்டார்: “இல்லேம்மா. ஒரு பந்தயத்திலே கிடைச்சது!”

    அவ்வார்த்தையைக் கேட்டதும், அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தாள் கல்யாணி.

    மகளுக்குப் பரிசு கிடைக்காத ஆத்திரத்தில் அம்மா கூறியது இப்போது கேட்டது: `மனுசன் எவங்கிட்டேயோ பணம் வாங்கிக்கிட்டு, வேணுமின்னே ஸ்ருதியைக் குறைச்சு வாசிச்சிருக்கான். அப்போதானே ஒனக்குப் பரிசு கிடைக்காம பண்ணமுடியும்?’

    `சேச்சே! மாமா என்னை அவர் பெறாத மகளாத்தான் நினைச்சுக்கிட்டிருக்காரும்மா. அப்படியெல்லாம் தப்புத்தண்டாவுக்குப் போகமாட்டார். தினமும் சாமி காரியம் பண்றவரு!’ என்றெல்லாம் இந்த மனிதரையா விட்டுக்கொடுக்காமல் பேசினோம்!

    கல்யாணி செல்லப்பாவைப் பார்த்த பார்வையில் ஒரு வெறுப்பு. அப்பார்வையில், `ஒங்களை எவ்வளவு ஒசத்தியா நினைச்சிருந்தேன்!’ என்ற வேதனைதான் அதிகமிருந்ததோ?

    அதைத் தாளமாட்டாது தலைகுனிந்தார் செல்லப்பா.

    “வாங்க, போகலாம்!”

    அவரிடம் சொல்லிக்கொள்ளாமலேயே வெளியே விரைந்தாள் கல்யாணி.

    பணப்பெட்டி அங்கேயே இருந்தது. உள்ளே புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள், கத்தை கத்தையாய்!

    Share
  • சர்வதேச யோகா தின விழா

    தினமும் யோகா செய்யுங்கள் மன நிம்மதி கிடைக்கும் – காவல் ஆய்வாளர் பேச்சு

    unnamed (3)
    தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சர்வேதச யோகா தின விழா நடைபெற்றது.

    விழாவிற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் முத்துகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்,உடற்கல்வி முக்கியம் ஆகும்.பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.உடற்பயிற்சி செய்யும்போது பல நல்ல விசயங்கள் நமது மனதுக்கும்,உடலுக்கும் கிடைக்கும்.மாணவர்களாகிய நீங்கள் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதற்கும்,யோகா செய்வதற்கும் இந்த சிறு வயதில் பழகி விட்டால் உங்களின் வாழ்க்கை பிற்காலத்தில் பிரகாசமாக இருக்கும்,தினமும் யோகா செய்யுங்கள்.மன நிம்மதி அடையுங்கள்.பெற்றோர் ,பெரியவர்கள் சொல்லும் நல்ல விசயங்களை கடைபிடியுங்கள்.உங்களின் பள்ளி ஆசிரியர்கள் உங்களுக்கு பல வழிகளில் நல்ல வாழ்க்கைக்கு வழிகாட்டுவார்கள்.அவற்றை பயன்படுத்தி வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள்.என்று பேசினார்.விழாவில் மாணவர்கள் ராஜேஷ்,ரஞ்சித்,விக்னேஷ்,ஆகியோர் பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்தனர்.யோகா தொடர்பாக ஆங்கிலத்தில் மாணவர் ரஞ்சித்தும்,தமிழில் மாணவர் விக்னேஷும் பேசினார்கள்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா செய்து இருந்தார்.விழா நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

    unnamed (1)

    பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது. தேவகோட்டை நகர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துகுமார் யோகா தினம் தொடர்பாக பேசினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் உடன் உள்ளார்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (240)

    சக்திசக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் இவ்வாரம் உங்களை இம்மடல் மூலம் வந்தடைவதில் மகிழ்கிறேன்.. இங்கிலாந்து நாட்டினை வெப்பாலை கடந்த சில நாட்களாக தகிக்கப் பண்ணிக் கொண்டிருக்கிறது. என்னடா இது ? இங்கே சுட்டுப் பொசுக்கும் வெப்பத்தில் தவித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு இங்கிலாந்தின் வெப்பத்தைப் பற்றி இதென்ன புதுக்கதை ! என்று அங்கலாய்ப்பது புரிகிறது. ஆனால் இங்கிலாந்து நாட்டின் சாதாரண காலநிலைகளையும், வெப்பச்சூழலையும் பொறுத்த அளவில் இது அசாதாரணமானதுவே. .நேற்றைய வெப்பநிலை வெப்பமானியில் அதியுச்சமாக 34 பாகைகளை எட்டிப்பிடித்தது./ இது இங்கிலாந்தின் ஜூன் மாத அதியுச்ச வெப்பநிலையை சுமார் 41 வருடங்களின் பின்னால் எட்டிப்பிடித்திருக்கிறது என்கிறார்கள்.

    சரி எதற்காக இந்த திடீர் வெப்பநிலையைப் பற்றிய சிலாகிப்பு ?

    unnamed (2)

    சுமார் ஒரு வாரத்துக்கு முன்னால் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு தீ விபத்தின் அகோரச் சம்பவத்தைப் பற்றிப் பகிர்வதற்காகவே ! இலண்டனில் தென்மேற்குப் பகுதியில் உள்ள “நார்த் கென்சிங்டன் (North Kensington) “ எனும் வட கென்சிங்டன் பகுதியில் அமைந்துள்ள கிறன்வெல் எனப்படும் 24 மாடி அடுக்குமாடிக் கட்டிடம் தீ பற்றியெரிந்தது. ஒரு மாடியில் உள்ள ஒரு பிளாட்டில் ஏற்பட்ட தீவிபத்தினால் இக்கட்டிடம் ஒரு தீக்குச்சி போல அகோரமாக எரிந்தது அனைவரின் மனதை துயரத்தில் ஆழ்த்தியது. கனவேகத்தில் பற்றிக் கொண்ட தீ அத்தனை விரைவாக எப்படி இத்தனை தீவிரமாக முழுக்கட்டிடத்தையும் தாக்கியது என்பது பலரையும் பயங்கரமான கேள்விக்குறியில் ஆழ்த்தியுள்ளது.

    சமீபத்தில் பத்து மில்லியன் பவுண்ட்ஸ் செலவில் மீளமைக்கப்பட்ட இக்கட்டிடத் தொடர் நவீனகால தீ தடுப்பு வசதிகளை ஏன் கொண்டிருக்கவில்லை என்பதும் கேள்வியாகவே இன்னமும் தொங்கிக் கொண்டிருக்கிறது. இக்கட்டிடத்தின் வெளிப்பகுதியை அழகாகக் காண்பிக்க பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் கவரிங் தீ விபத்தினைத் தடுக்கும் வகையிலானதா? என்பதும் இன்னமும் விடையில்லா வினாவாகவே இருக்கிறது. இதுவரை வெளிவந்த செய்திகளின்படி இத்தகைய பிளாஸ்டிக் கவரிங் அமெரிக்கா, சீனா போன்ற பல நாடுகளில் பாவனையிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், அத்தகைய ஒரு பாவனைப் பொருள் மக்கள் வசிக்கும் கட்டிடத்தில் பொருத்தப்படுவதற்கு அந்நகரசபை எவ்வகையில் அனுமதி அளித்தது எனும் கேள்வியை அனைத்துப் பகுதிகளிலுமிருந்தும் மக்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இத் தீவிபத்து இதுவரை காவு கொண்ட உயிர்களின் எண்ணிக்கை 79 ஆகும். அதைத்தவிர சுமார் 15 பேர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள், அவர்களில் சிலர் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

    ஏற்கனவே அவசியமில்லாத தேர்தல் ஒன்றை நடத்தி தனக்கிருந்த பெரும்பான்மையையும் இழந்து சிறுபான்மை அரசமைத்து குழம்பிக் கொண்டிருக்கும் பிரதமர் தெரேசா மே அவர்களை ஏழரைச்சனி ஆட்டி வைக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இத்தீவத்தின் பின்னால் அவ்விடத்துக்கு விஜயம் செய்த பிரதமர் உத்தியோகத்தர்களையும், சில பாதிப்படைந்தவர்களையும் சந்தித்து விட்டு அவரைச் சந்தித்து தமது மனக்குறையைச் சொல்லக் காத்திருந்த பொதுமக்களை, அதாவது அக்கட்டிடத் தொடர் விபத்தில் இருந்து தப்பி வந்து வீடு, உடமைகள் இழந்தவர்களை சந்திக்காமல் திரும்பியது அவரை மிகவும் சிக்கலுக்குள் கொண்டு சென்று மாட்டிவிட்டது. எதிர்க்கட்சித் தலைவரான ஜெர்மி கோர்பன் அவர்களின் தொகி இக்கட்டிடத் தொடர் உள்ள பகுதியையும் உள்ளடக்கியதாலும் அங்கு நேரடியாக விஜயம் செய்து அங்கிருந்த மக்கள் அழுவதற்குத் தன் தோள்களைத் தந்த எதிர்க்கட்சித் தலைவரின் செயல் பிரதமரை மேலும் சங்கடத்துக்குள்ளாக்கி இருந்தது. . சரமாரியாகப் பிரதமரின் மீது அதிருப்தியளிக்கும் விமர்சனங்கள் குவிந்தன. அது மட்டுமன்றி அத்தீவத்தைத் தொடர்ந்து மீட்பு உதவிகளுக்கு பல பொதுமக்கள் உதவிகள் வழங்கி வந்தார்கள். ஆனால் அக்கட்டிடத்துக்குப் பொறுப்பாக உள்ள நகரசபையிலிருந்து ஒரு ஊழியரோ அன்றி அரசாங்கத் தரப்பிலிருந்து ஒரு உத்தியோகத்தினரோ அங்கு தென்படவில்லை.

    இந்தக் கட்டிடத்தில் வசித்தோர் பெரும்பான்மையோர் அரசியல் தஞ்சமடைந்த வெளிநாட்டவர். பெரும்பான்மையோர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தாம் வாழ்வில் வசதி குறைந்தவர்கள் என்பதால் தமக்குத் தகுந்த நேரத்தில் தகுந்த உதவிகளைச் செய்ய அரச அதிகாரிகளோ அன்றி நகரசபை அதிகாரிகளோ முன்வரவில்லை என்னும் கருத்து இவர்களிடையே பரவி வந்தது. அது மட்டுமன்றி இக்கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டால் அதைத் தடுக்கக்கூடிய வசதிகளின் குறைவை இதற்கு முன்னால் எத்தனையோ தடவைகள் அரசுக்கும், நகரசபைக்கும் சுட்டிக் காட்டியும் அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இவர்களது குற்றச்சாட்டாகும். இவையனைத்தும் ஒன்றிணைந்து அனைத்து மக்களையும் ஒன்று கூடிய எதிர்ப்பலையைக் காட்டும் உணர்வுக்குத் தள்ளியது. விளைவாக பாதிக்கப்பட்டோர் ஒரு பேரணி நடத்தி நகரசபைக் கட்டிடத்துக்குள் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்தினர்.

    நிலைமை தமக்கெதிராக விரைவாகத் திசைமாறுவது கண்டு பிரதமர் பாதிக்கப்பட்டோரை முன்னணிப்படுத்தும் குழுவொன்றை தனது உத்தியோக வாசஸ்தலத்தில் சந்தித்து அவர்களுக்கு உடனடியாக நட்ட ஈடாக ஓரளவு தொகையை அரசு கொடுக்கும் என்று உறுதியளித்தார். பாதிப்படைந்த மக்கள் அனைவரும் இன்னமும் குடியிருப்பு வசதிகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். அரசியல் சூறாவளியோடு சேர்ந்து காலம் எனும் சுனாமியும் சேர்ந்து பிரதமரின் பதவி எனும் விளக்கை அணைக்க முற்படும் வேளையில் அதைச் சுற்றி ஒரு அரணைக் கட்டிப் பாதுகாக்க முனைகிறார் தெரேசா மே.

    இதுவரை பலியாகிய உயிர்கள் 79 இது இன்னமும் அதிகரிக்குமா ? வீடு, வாசல், உடமைகளை இழந்த மக்களுக்கு நியாயம் கிடைக்குமா? இத்தகையதோர் அடுக்குமாடிக் கட்டிடத் தொடரில் இப்படிப்பட்ட பயங்கர தீவிபத்தை இதுவரை தனது 29 வருட கால அனுபவத்தில் காணவில்லை என்றுரைத்த தீயணைப்புப் படைத் தலைவரின் அதிர்ச்சிக்குக் காரணமான இத்தீவிபத்துக்கு காரணமானவர்கள் யார் ? இத்தீவிபத்து எப்படி இத்தனை சீக்கிரம் முழுக்கட்டிடத்தையும் வியாபித்தது? இக்கேள்விகளுக்கான விடைகள் பிரதமர் தெரேசா மேயினால் அறிவிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் விசாரணையால் வெளிப்படுமா? .

    அரசியல் எனும் சதுரங்கப் பலகையில் இது ஒரு விளையாட்டாக இருக்கலாம். ஆனால் எரியுண்ட அந்தக் கட்டிடத்தில் தமது உறவினர்களைத் தீக்கு இரையாகக் கொடுத்தவர்களும், தமது உடமைகளைப் பறிகொடுத்து வீதியில் நிற்பவர்களும் இதைத் தமது வாழ்வின் முக்கியக் கட்டம் என்றே எதிர்நோக்குகிறார்கள். அவர்கள் அனைவரினதும் வாழ்வில் ஓரளவாவது நிம்மதி கிடைக்க பிரார்த்திப்பது ஒன்றே எமக்குத் தெரிந்த வழியாகிறது.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • காலப் பெண்ணே

    தில்லித் துருகர்செய்த வழக்கமடி” மற்றும் “மன்னர் குலத்தினிடை பிறந்தவளை” என்ற பாரதி பாட்டின் சந்தமெட்டு !

    என்னை அலையவைத்துச் சிரிப்பதென்ன – அடி
    எங்குந் திகழ்கின்ற காலப்பெண்ணே !
    உன்னைப் புகழ்வதன்றி இந்தச்சிறுவன் – எழில்
    ஊறுஞ் சொல்வேறு சொல்லியதுண்டோ ?
    மின்ன லெனப்போகும் காலப்பெண்ணே ! – எனை
    மீட்டி இயக்கிடுவை காலப்பெண்ணே !
    சின்னஞ் சிறுவனென நானிருப்பதால் – உன்னில்
    சிக்கி உழல்கவென நீவிடுப்பதோ ?

    எத்த னைதூரம் செல்லவைக்கிறாய் – சின்ன
    ஏழைக் குடலலுப்பை நீயளிக்கிறாய்
    பத்துப் பதினைந்து மைல்நடக்கிறேன் – எனைப்
    பார்த்திங் கமர்ந்தபடி பரிகசிக்கிறாய் !
    நித்தம் உனைக்கேட்ப தொன்றுமட்டுமே – வழி
    நீளம் குறைக்கும்வழி தந்துசென்றிடு
    பித்தைத் தீர்க்கவழி எண்ணுவையெனில் – கவி
    பீறிட் டெழும்வேகம் நீவழங்கிடு !

    காற்றைக் கவியாக்கிக் காலம்கழிப்பேன் – அடி
    காக்கை ஒலியினிலுஞ் சந்தம்பிடிப்பேன்
    நேற்றை இன்றாக்கி நாளைவகுப்பேன் – இந்த
    நெஞ்சம் தூங்கும்வரை பாடல்படிப்பேன் !
    ஆற்றல் அறிவென்று பேசிக்களிப்பேன் – என்றன்
    அம்மை முகஜாலம் சொல்லிரசிப்பேன்
    போற்றி உனைச்சொல்லி வாழ்த்தையொலிப்பேன் – பெரும்
    போதந் தருகின்ற வார்த்தைபடைப்பேன் !

    “ஓம் சக்தி”
    விவேக்பாரதி

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170623 - Tvameva -lores

     

    ”பொன்னிற வண்ணப் புழுதி எழுந்துயர்
    விண்ணவர் கண்ணில் விழுந்திட -செந்நிற
    சாயங்கா லத்தில் சகாக்களுடன் வீடேகும்
    காயாம்பூ வண்ணனே காப்பு”….!

    ”அதிகாலைப் போதினில் ஆவுக்(கு) அளிப்பு
    குதிகாலை கோவிந்தக் கண்ணன் : -சதிகார
    மாமன் அனுப்பிட மல்லாண்ட போதிலும்
    காமம்(பிரியம்) இவருக்குக் கன்று’’….!

    ’’சகாதேவன் கட்டினான்,ய சோதை பிணைத்தனள்
    சுகதேவர் சொல்லுற்ற(பாகவத) சேயோ, -அகமில்லா
    அன்பால் அடைபடும் ஆனந்தக் கண்ணன்,ஆ
    வின்பால் யசகாதே வர்’’….கிரேசி மோகன்….!

    Share
  • சிறுவர் இலக்கியம் படைப்பது எப்படி? (7)

    பவள சங்கரி

    குழந்தைகளைச் சுண்டியிழுக்கும் முதற்கதை :

    சிறுவர் இலக்கியம்

    வண்ணமயமான படங்களுடன் அதிசய மனிதர்களும், மிருகங்களும், இயற்கைக் காட்சிகளும் குழந்தைகளை குதூகலம் கொள்ளச்செய்கின்றன. ஜீபூம்பா கதை, அரக்கனின் அச்சமூட்டல்கள், குட்டிச்சாத்தானின் குறும்புகள், இவையனைத்திலிருந்தும் குட்டிகளைக் காக்கும் கதாநாயகனின் சாகசங்கள் போன்றவைகள் குழந்தைகளை ஆச்சரியத்தில் கண்கள் மலரச்செய்கின்றன. கற்பனைப் பாத்திரங்களை உற்ற தோழனாகக் கருதுகின்றனர்.

    பெற்றவர்களை விட்டுச்சென்று தனியே தத்தளிக்கும் குழந்தை காணும் அதிசய உலகம், கற்றுக்கொள்ளும் பாடம், தவழ்ந்து வரும் குழந்தை விளையாட்டாக போகிறபோக்கில் செய்யும் சாகசங்கள் என அனைத்தும் குழந்தைக்கு தன்னையே அங்கு நிலைநிறுத்திவிடுகின்றன.

    டாம், ஜெர்ரியின் குறும்புகள், ஒரு ரொட்டித் துண்டிற்காக ஓராயிரம் லீலைகள் புரியும் அதன் வேடிக்கை விநோதங்களைக் கண்டு மனம் திறந்து சிரித்து மகிழும் குழந்தைகளைக் காணும்போது உலகமே ஒரு சில நொடிகள் அதனூடேயே அடங்கிவிடும். நகைச்சுவைக்கு முதலிடம் கொடுக்கும் எந்தவொரு படைப்பும் குழந்தைகள் மத்தியில் சோரம் போவதேயில்லை.

    வார்த்தை விளையாட்டுகளில் கூடிக்களித்திருக்கும் குழந்தைகள் புதிய பல வார்த்தைகளைக் கற்பதிலும் நாட்டம் கொள்கின்றன. அடுக்கு மொழியும், கிண்டல் நடையும் குழந்தைகளை மிகவும் கவரவேச் செய்கின்றன. உதாரணமாக,

    தாப்பூ தாமரைப்பூ

    தாப்பூ தாமரைப் பூ தாத்தா தந்த செண்பகப்பூ
    பூப்பூ புளியம்பூ பொன்னால் செய்த தாழம்பூ
    தீப்பூ தித்திப்பூ .

    கைவீசம்மா கைவீசு
    கடைக்குப்போகலாம் கைவீசு
    மிட்டாய் வாங்கலாம் கைவீசு
    மெதுவாய்த் திங்கலாம் கைவீசு
    பொம்மை வாங்கலாம் கைவீசு
    ஜப்பான் போகலாம் கைவீசு.
    சொக்காய் வாங்கலாம் கைவீசு
    ஜோராய்ப் போடலாம் கைவீசு
    கோயிலுக்குப் போகலாம் கைவீசு
    கும்பிட்டு வரலாம் கைவீசு.

    Ring A Ring O roses
    A pocket full of poises
    A tishoo! A tishoo!
    we all fall down
    A Ring. A Ring of Roses.
    A pocketfull of poises
    Ash-a Asha-a All stand Still.

    திரும்பத்திரும்ப சில வார்த்தைகளை இசை நயத்துடன் சொல்லும்போது குழந்தைகள் அதை மிகவும் ரசிக்கின்றனர்.

    குழந்தைகளின் பங்களிப்பும் இருக்கும் வகையில் படைப்புகள் புதிருடனும், எளிமையான பதங்களுடனும் இருப்பது அவர்களுக்கு  சுவைகூட்டும்.

    கண்ணாமூச்சி ரே.. ரே..
    காட்டுப்பூச்சி ரே .. ரே ..

    படம் பார்த்து கதை சொல்லும் உக்தி குழந்தைகளுக்கு இன்பமளிப்பதோடு அவர்தம் கற்பனை வளம் பெறுகுவதோடு, தன்னம்பிக்கையும் வளர்கிறது. படங்களுடன் வார்த்தைகளும் இணையும்போது குழந்தைகளுக்கு எளிதாக வாசிப்பும், புரிதலும் வாய்த்துவிடுகிறது.

    இசையும், இயற்கையும் இயைந்து இனிய உலகிற்கு எடுத்துச்செல்லும் மாயம் ஏற்படுத்தும் பாடல்களும் அபரிமித வரவேற்பைப் பெறுகின்றன..

    நிலா நிலா ஓடி வா!
    நில்லாமல் ஓடி வா!
    மலைமேல ஏறி வா!
    மல்லிகைப்பூ கொண்டு வா!!

    சவால்களும், சமயோசித முடிவெடுப்பும் ஊக்குவிக்கின்ற படைப்புகள் குழந்தைகளுக்கு மிகுந்த ஆர்வம் ஏற்படுத்துவதாக அமைந்துவிடுகின்றன. உதாரணமாக தாகத்துடன் நீர் தேடும் காகம், குவளை நீரில் கற்களைப்போட்டு புத்திசாலித்தனமாக தண்ணீரை மேலே வரவழைத்து தாகம் தீர்த்துக்கொள்ளும் கதை எத்தனை முறை கேட்டாலும் அலுத்துப்போவதில்லை. ஆக்கப்பூர்வமான சிந்தைகளுடன் எதிர்கால வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கும் மனோநிலை வளர்ச்சியும் ஏற்படுத்தும் இதுபோன்ற படைப்புகள் சுவை கூட்டுவதோடு நம்பிக்கை அளிப்பதாகவும் அமைந்துவிடுகின்றன.

    கதைக்களமும், பாத்திரப்படைப்புகளும் எத்தகையனவாக இருப்பினும் மேற்கண்ட அடிப்படைத் தத்துவங்களைக் கருத்தில்கொண்டு நம் முன்னோர்கள் மூலம் வழிவழியாக வந்த கற்பனைகளையும் சில மாற்றங்களுடன் புகுத்தி, குழந்தைகளின் மனதில் ஆழமாகப் பதியும்வண்ணம் சிறந்த ஆக்கங்களைப் படைக்கவியலும்.

    மூன்று வயது முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கான பெரும்பாலான படக்கதைப் புத்தகங்கள் ஏறத்தாழ 24 முதல் 32 பக்கங்கள் கொண்டதாக இருக்கக்கூடும். எளிமையான கதைகளும், சிறிய பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் சொல்லப்படுகின்றன. பொதுவாக படக்கதைகளில் வார்த்தைகள் மிகவும் குறைவாகவே இருப்பதால், கதைக்கான கருவும் மிகவும் எளிதாக இருக்கவேண்டியது அவசியம். கதை நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனையும், அதனால் உண்டாகும் குழப்பமும், அவன் கண்டுபிடிக்கும் தீர்வும் என கதை செல்லும்.

    விடுமுறைக்கு தாத்தா, பாட்டி வசிக்கும் கிராமத்திற்குச் செல்லும் குழந்தைகள் எதையோப்பார்த்து அச்சம் கொள்ள, தாத்தா அதைப்போக்கும் விதமாக நல்ல தேவதைகள் குழந்தைகளைக் காக்க எப்போதும் காத்திருக்கும் என்பதை விளக்குவதாகச் செல்லும் கதைகளை உதாரணமாகச் சொல்லலாம்.

    ஏழுவயது முதல் ஒன்பது வயது வரையிலான குழந்தைகளின் நூல்கள் 32 முதல் 64 பக்கங்கள் அல்லது 1000 முதல் 1,500 வார்த்தைகள் கொண்டதாக இருக்கலாம். சிலவற்றைத் தவிர பெரும்பாலான நூல்கள் மிக எளிய கதைக்களம் கொண்டதாகவே இருக்கும்.

    ஆரம்பக்கட்டங்களில் சாதாரணமான கருத்தாக்கங்களுடன் பலமுறை திரும்பத்திரும்ப ஒரு விசயத்தைச் சொல்லும் விதமாக அமைகின்றன. நீண்ட வாக்கியங்களுடன் சில புதிய சொற்களை அறிமுகம் செய்து, அவற்றிற்கான படக்குறிப்புகளும் வழங்குவதன் மூலம் குழந்தைகள் அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்களை எளிதாகப் புரிந்துகொள்வர்.

    அடுத்த நிலை குழந்தைகள் சற்றே விவரமானவர்கள். அவர்களுக்கு கதைகளுடன் பொது அறிவும் கலந்து வழங்கவேண்டும். சற்றே பெரிய வாக்கியங்களாகவும், புதிய வார்த்தைகளையும் பயன்படுத்த வேண்டும்.

    தொடருவோம்

    Share
  • கடவுளுமே பொறுக்க மாட்டார் !

     

    எம் .ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

    கண்விழித்து கண்விழித்து காலமெல்லாம் காவல்காத்து
    கடல்கடந்து உடல்வலிந்து காசுழைத்து வந்துநின்று
    கண்ணுக்குள் மணியாக கருணைமழை பொழிந்துநிற்பார்
    மண்மீது வரமெனவே வந்துதமைந்த பெற்றோரோ !

    பெற்றோரின் கனவெல்லாம் பெற்றபிள்ளை உயர்வினிலே
    கற்றவராய் நிற்கவேண்டி கடுமுழைப்பை ஈந்துநிற்பார்
    பட்டம்பெற்று பிள்ளைவந்து பக்கமதில் நிற்கையிலே
    பெற்றதிலும் அவர்மனது பெரிதாக மகிழ்ந்துநிற்கும் !

    ஆணென்றோ பெண்ணென்றோ அவரெண்ணி நிற்காமல்
    தாம்பெற்ற பிள்ளைகளை தானுயர்த்த மனந்துணிவார்
    எந்தவேலை பார்த்தாலும் எப்படியும் தம்பிள்ளை
    சொந்தக்காலில் நிற்பதற்கு சுகமனைத்தும் துறந்துநிற்பார் !

    பட்டினியாய் கிடந்தாலும் பலதுன்பம் பட்டாலும்
    மற்றவர்கள் பேசுவதை மனமேற்றிக் கொள்ளாமல்
    எப்படியும் தம்பிள்ளை ஏற்றமுற வேண்டுமென்று
    தப்பாமல் கோவில்சென்று தண்டனிட்டு வேண்டிநிற்பார் !

    விரதங்கள் பலவிருப்பார் வேண்டியதை விட்டிடுவார்
    குலதெய்வம் தனைவேண்டி கொடுத்திடுவார் தானமெலாம்
    நலமான வாழ்வுவர நாளுமவர் நினைத்திடுவார்
    குலையாத உறுதியுடன் கொண்டுநிற்பார் இலட்சியங்கள் !

    வேலைபெற்ற பிள்ளைக்கு விருப்பமுடன் மணஞ்செய்து
    நாலுபேரும் மதிக்கும்படி நல்லபடி பார்த்திடுவார்
    பேரப்பிள்ளை வந்துவிட்டால் பேரின்பம் பெற்றுநின்று
    ஊர்கூட்டி விழாவெடுத்து உவகையிலே மிதந்திடுவார் !

    வீடுவாங்கிக் கொடுத்திடுவார் வேறும்பல செய்தும்நிற்பார்
    நாடுவிட்டு நாடுபோனால் தாமும்போய் உதவிடுவார்
    நல்லதெல்லாம் தேடித்தேடி எல்லாமே கொடுத்திடுவார்
    எள்ளளவும் தமைப்பற்றி எண்ணார்கள் பெற்றோர்கள் !

    பிள்ளைகளும் வளர்ந்து பேரும்புகழ் பெற்றுநின்று
    தம்பிள்ளை வளர்ச்சியிலே தாம்கவனம் செலுத்திடுவார்
    தாம்வளர்ந்து நிற்பதற்கு தமைஈந்த பெற்றோரை
    ஓரக்கண்ணால் பார்ப்பதற்கும் ஒதுக்கிவிடார் நேரமதை !

    உழைத்துக் கழைத்து ஓய்வெடுக்க முடியாமல்
    தனித்து நிற்கப் பெற்றவரை தான்விடுவார் பிள்ளைகளும்
    கனவுபலகண்டு கண்விழித்துப் பார்த்த பெற்றோர்
    உணவுகூட இல்லாமல் ஒருபக்கம் ஒதுங்கிநிற்பார் !

    வளர்த்தகடா மார்மீது ஏறிநின்று உதைப்பதுபோல்
    வளர்த்துவிட்ட பிள்ளைகளால் பெற்றோரும் வாடிடுவார்
    உழைத்துவிட்ட உழைப்பெல்லாம் உறுஞ்சிவிட்ட பிள்ளைகளோ
    உயர்பதவி தனிலிருந்து உல்லாசம் அனுபவிப்பார் !

    வயதுவந்த காரணத்தால் வாய்திறக்க முடியாமல்
    மெளனமாய் அவரிருந்து வடித்திடுவார் கண்ணீரை
    ஆளாக்கி விட்டபெற்றோர் அரவணைப்பார் யாருமின்றி
    ஆண்டவனை வேண்டிநின்று அனுதினமும் அழுதுநிற்பார் !

    தமைவளர்த்த பெற்றோரைத் தாம்பார்க்க முடியாமல்
    முதியோர்கள் இல்லமதை முழுமனதாய் தேர்ந்தெடுத்து
    பெற்றெடுத்துப் பேர்கொடுத்த பெற்றோரை கொண்டுசென்று
    விட்டுவிட்டு வந்துநின்று விருந்துண்டு மகிழ்ந்துநிற்பார் !

    மிருகக்காட்சிச் சாலைக்கு மிருகம்பார்க்கச் செல்வதுபோல்
    வேளைவரும் போதுஅவர் விருப்பமின்றி போய்வருவார்
    அன்னைதந்தை தினமதனில் அவைநடுவே பேசிநிற்பார்
    அன்னைதந்தை நினைவைமட்டும் அவர்மனது மறந்துவிடும் !

    பெரும்பாலும் பிள்ளைகளால் பெற்றோர்கள் படும்துன்பம்
    பேசுகின்ற வேளையிலே பெருங்கோபம் எழுகிறது
    அரும்பாடு பட்டவர்கள் அனாதைபோல் ஆகும்நிலை
    அடிக்கடி நடப்பதினை அனைவருமே அறியவேண்டும் !

    முதுமையென்னும் காலமது எல்லோர்க்கும் வந்துநிற்கும்
    இளமையது என்னாளும் எம்முடனே இருந்திடாது
    தலைமீது எமைத்தாங்கி தம்முயிராய் எமைநினைத்த
    விலையில்லா பெற்றோரை விடுதிவிடல் முறையாமோ !

    விரதம் பலவிருந்து வேதனைகள் பலசுமந்து
    உரம்போட்டு எமைவளர்த்த உத்தமராம் பெற்றோரை
    அரம்போல அறுக்காமல் அருவருப்பாய் நோக்காமல்
    சிரந்தாழ்த்தி தொழுதெழுதால் சிறப்புடனே நாம்வாழ்வோம் !

    மண்மீது தெய்வமாய் வந்துநிற்கும் பெற்றோரை
    மடிமீது நாம்வைத்து வருடிவிடல் வேண்டாமா
    கண்ணுக்குள் எமைவைத்துக் காத்துநின்ற பெற்றோரை
    கண்கலங்க விட்டுவிட்டால் கடவுளுமே பொறுக்கமாட்டார் !

    பெற்றோரை அரவணைத்தால் பேரின்பம் பெற்றிடுவோம்
    கற்றதனால் ஆயபயன் பெற்றோரைப் பேணுவதே
    நற்பயனாய் அமைந்தவரே நம்முடைய பெற்றோர்கள்
    உற்றதுணை அவரென்றே பெற்றோரைக் காத்துநிற்போம் !

    Share
  • எழிலரசி கிளியோபாத்ரா -13

    அங்கம் -2 பாகம் -13

    aj

    “எனது உள்ளம் ஒருவரால் கவரப்பட்ட வேளையில், ஒருமாதிரி ஆங்காரப் பூரிப்போடு, நிதானமாக அதன் காரணத்தை வெளியேற்றக் கதவைத் திறந்து வைத்தேன்! தர்க்கமின்றி, போராட்ட மின்றி, பொய் வெட்கமின்றி, மன வேதனை யின்றி, நெஞ்சக் கலக்க மின்றி அனைத்துக்கும் உடன்பட்டேன், அனைத்தையும் நான் நம்பினேன்! முகம் சிவந்து ஒருத்தி வெட்கப் படுவது எப்படி, ஒருவரால் ஈர்க்கப்பட்டு ஆராதிக்கப்படும் போது?”

    ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]

    “ஒவ்வொரு பாறைத் துண்டமும் ஒரு சிலையைத் தன்னுள் ஒளித்து கொண்டுள்ளது! சிற்பியின் கலைப்பணி அச்சிலையை அதில் கண்டுபிடிப்பதுதான்!”

    மைக்கேலாஞ்சலோ [1474-1564]

    “என்னைப் பாராட்டுபவன் எவனையும் நான் பாராட்டுவேன்! நாட்டைக் கைப்பற்றப் போர்க் களத்தில் நான் புரிந்த மாவீரச் செயல்களை யாரேனும் மறுக்க முடியுமா?”

    அண்டனி
    வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]

    “சீஸர்! பத்துத் தலைமுறைகளுக்கு [முன்னூறு ஆண்டுகள்] ஒருதரம் உலகத்துக்கு ஓர் உன்னத நூல் கிடைக்கிறது. வரலாறின்றிப் போனால், மரணம் உங்களை மூடப் படைவீரன் அருகிலே புதைத்து விடும்!”

    [தியோடோடஸ், அலெக்ஸாண்டிரியா நூலகம் தீப்பற்றி எரியும் போது]
    பெர்னாட் ஷா [சீஸர் & கிளியோபாத்ரா]

    நேரம், இடம்:

    அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

    நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர்.

    காட்சி அமைப்பு:

    கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். சீஸர் ரோமுக்கு மீள்வதை நிறுத்தி கிளியோபாத்ரா அவரைத் தன் கவர்ச்சியால் மயக்கி ஆண்மகவு பெற்றுத் தருவாய் உறுதி அளித்து மகிழ்ச்சி ஊட்டுகிறாள். வெளியே டாலமியின் படைவீரர் ரோமானியரைத் தாக்கி, அவரது கப்பல்களுக்குத் தீவைக்கிறார்!

    ஜூலியஸ் சீஸர்: [கோபத்துடன்] முதலில் நீவீர் எமது போர்க்கைதி! போரை அறிவிக்காமல் போர் தொடுத்து, ரோமானிய வீரர் இருவரைக் கொன்றது உங்கள் குற்றம். பிரிட்டானஸ்! கைது செய் போதினஸ் போர்க் கைதியை!

    போதினஸ்: [கேலியாக] நானா உங்கள் கைதி? வியப்பாக இருக்கிறதே! நீங்கள் தங்கி யிருப்பது எங்கே என்று தெரிகிறதா? அலெக்ஸாண்டிரியாவில்! எகிப்தியர் பூமியில்! டாலமியின் படைவீரர் உங்களை விட மிகையான எண்ணிக்கையில் அலெக்ஸாண்டிரியாவை முற்றுகை செய்துள்ளதைச் சற்றேனும் அறிவீரா?

    ஜூலியஸ் சீஸர்: [கோபத்துடன்] நண்பா! வந்த வழியே திரும்பிச் செல், உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினால்! சீக்கிரம் செல்! தூதன் என்பதால் உன்னைத் தப்பிச் செல்ல விடுகிறேன்! வெளியே உன் படையாட்களிடம் உடனே சொல், ரோமானியரை இனிமேலும் கொல்ல வேண்டாமென்று! அல்லாவிடில் நீ கொல்லப் படுவாய், அறிந்து கொள். என்னைப் போல் பரிவு மிக்கவர், என்படை வீரர் என்று எண்ணாதே! பிரிட்டானஸ், செய்தியைப் பரப்பு; எனது போர்க் கவசத்தை எடுத்து வரச்சொல்!

    [பிரிட்டானஸ் போகிறான். ரூஃபியோ நுழைகிறான்.]

    aj

    ரூஃபியோ: [ஜன்னல் பக்கம் சீஸரை அழைத்துச் சென்று, தூரத்தில் எழுகின்ற புகை மூட்டத்தைக் காட்டி] பாருங்கள் வெடிப் புகையை. [போதினஸ் ஓடி வந்து பார்க்கிறான்]

    ஜூலியஸ் சீஸர்: [கவசத்தை அணிந்து கொண்டே] ஓ, அதற்குள் கலகம் ஆரம்பித்து விட்டதா? எனக்குத் தெரியாமல் என்ன நடக்கிறது? எப்படி நடக்கிறது? நம் கண்முன்பாகவே நமது ரோமானியர் கொல்லப் படுவது அவமானம்! அக்கிரமம்! அயோக்கியத்தனம்!

    ரூஃபியோ: நமது ஐம்பெரும் கப்பல்கள் துறைமுகத்தில் தகர்க்கப் பட்டன! கப்பலுக்கான எண்ணைக் கலன்களை ஏந்திச் சென்ற கட்டுமரமும் எரிக்கப் பட்டது! எகிப்தியர் படை மேற்குத் துறைமுகத்தைக் கைப்பற்றி விட்டது உண்மை! அவர்கள் வைத்த தீ வளர்ந்தோங்கி வருகிறது!

    ஜூலியஸ் சீஸர்: [சீற்றமுடன், கவசத்தை சரிசெய்து கொண்டு] அப்படியானால் கிழக்குத் துறைமுகம் யார் கையில் உள்ளது? கலங்கரை விளக்கம் யார் கையில் உள்ளது, ரூ·பியோ?

    ரூஃபியோ: [கோபத்துடன்] சீஸர்! நீங்களே களத்துக்கு வந்து கட்டளை யிடுங்கள்! ஐந்து நிமிடத்தில் என்னால் படை திரட்டித் தாக்க முடியாது! கிளியோபாத்ராவின் பட்டம் சூட்டு விழாவுக்கு நீங்கள் ஒத்திகை பார்த்து வருகிறீர், அலெக்ஸாண்டிரியாவை எகிப்தியர் அபகரிக்கும் போது! நாம் விழித்தெழா விட்டால், நம்மையும் சிறைப் படுத்திக் கொன்று விடுவர் டாலமியின் ஆட்கள்!

    ஜூலியஸ் சீஸர்: [சற்று நிதானமுடன்] எகிப்த் ரோமாபுரியின் ஆக்கிரமிப்பு நாடு! ஜூலியஸ் சீஸர் உள்ள வரை அலெக்ஸாண்டிரியா ஒருபோதும் அவரது கையிக்கு மீளாது, ரூஃபியோ!
    [அப்போது தியோடோடஸ் அலறிக் கொண்டு ஒருபுறம் நுழைகிறார்.

    கிளியோபாத்ரா தீயெரிப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்ட பின்பு ஆத்திரப் பட்டு மாளிகைக்குள் நுழைகிறாள்]

    தியோடோடஸ்: [பயங்கரக் குரலுடன்] எகிப்திய மாந்தர்காள்! நமது நகரம் நரக மாகுது! அலெக்ஸாண்டிரியாக் கடற்கரை எங்கெங்கு நோக்கினும் தீ மயம்! நமது உன்னத நூலகம் வெந்து சாம்பலாகுது! நமது எகிப்த் நாகரீகம் மாயுது! நமது கலாச்சாரம் எரிந்து போகுது!
    [எல்லாரும் மாளிகை ஜன்னல் வழியாகத் தூரத்தில் தீ மண்டலங்களைக் காண்கிறார்]

    கிளியோபாத்ரா: [ஆங்காரமாக, கொதிப்புடன்] காட்டுமிராண்டியர், ரோமானியர்! நூலகத்தில் எப்படித் தீ வைக்கலாம்? அலெக்ஸாண்டிரியா நூலகம் வரலாற்றுக் களஞ்சியம்! உலகின் முதல் நூலகம் எரியுது! வான சாஸ்திரம், கணித சாஸ்திரம், அண்ட கோள்களின் நகர்ச்சி விளக்கம், கட்டடக் கலைகள், பிரமிட்களின் அமைப்பு அனைத்தும் எரிந்து புகையாய்ப் போகின்றன! வரலாற்றுப் புகழ் பெற்ற எங்கள் நூலகம் கருஞ் சாம்பலாகுது! பிளாடோவின் உரையாடல் நூல் வெந்து போகுது! அரிஸ்டாடலின் படைப்புகள் கரும் புகையாய் போகுது! அலெக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்பு வரலாறுகள் கரிந்த சாம்பலாகின்றன! கிரேக்க, ·பாரோ வரலாறுகள், காவியங்கள், ஹீப்ரூ படைப்புகள் அனைத்தும் நாசமாகின்றன! காட்டுமிராண்டித்தனம் சீஸரே!

    ஜூலியஸ் சீஸர்: [சற்று கனிவோடும், சீற்றத்தோடும்] வருந்துகிறேன், கிளியோபாத்ரா! நூலகத்துக்கு யாரும் திட்டமிட்டுத் தீ வைக்க வில்லை! டாலமியின் படகுகளில் வைத்த தீ காற்றடித்தால் நூலகத்தில், தாவிப் பற்றி யிருக்க வேண்டும், என்பது எனது யூகம்!

    கிளியோபாத்ரா: வருந்துகிறேன் என்று வெறும் வாய் வார்த்தை போதாது! நூலகம் திரும்பவும் மீளுமா? எப்படி அதை மீண்டும் உருவாக்குவது? முதலில் தீயை அணைக்க யாரும் போக வில்லை!

    ஜூலியஸ் சீஸர்: [சற்று குற்ற உணர்வுடன்] டாலமியின் படையினர் எமது கப்பல் மீது முதலில் இட்ட தீ! ரோமானியர் யாரும் அந்தப் போரை ஆரம்பிக்க வில்லை! டாலமியின் ஆட்கள் ரோமானியரைக் கொல்லத் தொடங்கினர். பிறகு என்ன நடக்கும், போரைத் தவிர? ரோமானியரும் வெடிப்புக் குண்டுகளை எகிப்தியர் கப்பல்கள் மீது வீசினர்! அந்தத் தீயைக் காற்று தூக்கிச் சென்று தவறாக நூலகத்தில் விட்டுவிட்டது!

    கிளியோபாத்ரா: [கோபத்துடன்] நூலகத்தின் பெயர் முன்னால் காட்டப் பட்டுள்ளது. அதைப் பார்க்காமல், அதன் அருகே எப்படி வெடிகுண்டை வீசலாம்! காட்டுமிராண்டிகள்தான் சிந்தனை யில்லாமல், கண்ணால் பாராமல் இப்படிச் செய்வார்!

    aj

    ஜூலியஸ் சீஸர்: [தன் படையாட்களை வெளியே போகச் சொல்லி, அவர்கள் சென்ற பிறகு, பெருங் கோபத்துடன்] வாயை மூடு! ரோமானியரைக் காட்டுமிராண்டிகள் என்று எப்படி நீ திட்டலாம்? ஒழுக்கமுள்ள ரோமானியப் படைக்கு நிகராக எப்படையும் கிடையாது! நாகரீக மற்றவர் எகிப்தியர்தான்! ரோமானியர் அல்லர்! நான் ஜூலியஸ் சீஸர்! ரோமானியர் தலைவனாய்ப் போற்றுப் படுபவன்!

    கிளியோபாத்ரா: நான் கிளியோபாத்ரா! எகிப்தியர் வணங்கும் மகாராணி! ஐஸிஸ் [1*] கடவுளாக வணங்கப் படுபவள் நான்! ஃபாரோ மன்னர் நாகரீகம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே உதயமானது! எங்கள் நாகரீகம் எப்படிப் பட்டதென்று நேராகப் பார்க்க வேண்டுமா? அதோ அங்குள்ள எங்கள் பிரமிட் கோபுரத்தில் புதைத்து வைத்துள்ள களஞ்சியங்களைப் பாருங்கள்! அதோ அங்கு படுத்துள்ள மனிதத் தலைச் சிங்கத்தைப் பாருங்கள்! ஈராயிரம் ஆண்டுக்கு முன் விருத்தியான எங்கள் கட்டடக் கலைக்கு நிகராக எந்த நாட்டில் உள்ளது?

    ஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ரா! அவை எல்லாம் புராணக் கதைகள்! நீங்கள் இப்போது எங்கள் அடிமை! எகிப்த் நாடு ரோமுக்குக் கீழ் உள்ளது! நீ எப்போது எகிப்தின் அரசி ஆவாய் என்பது என் கையில் உள்ளது! நீ எகிப்தின் தேவதை ஐஸிஸ்தான்! ஆனால் நீ வெறும் ஓர் அழகுப் பதுமை! உன்னை அரசியாக என்றைக்கு நான் ஆசனத்தில் ஏற்றுவேனோ அன்றுதான் நீ எகிப்தின் ராணி! அதுவரை நீ வெறும் கவர்ச்சி மாதுதான்! காட்டுமிராண்டி என்று எங்களைத் திட்டியதற்கு நீ மன்னிப்புக் கேட்க வேண்டும்!

    கிளியோபாத்ரா: சீஸரே! அது மட்டும் நடக்காது! ஐஸிஸ் கடவுளான

    கிளியோபாத்ரா யாரிடமும் மன்னிப்புக் கேட்க மட்டாள்! எகிப்தியர் நாகரீக மற்றவர் என்று அறிவில்லாமல் ஏளனப் படுத்திய நீங்கள்தான் என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுவரை உங்கள் முகத்தில் நான் விழிக்கப் போவதில்லை! நான் போகிறேன்!

    [கிளியோபாத்ரா கோபத்துடன் வெளியேறுகிறாள். சீஸர் பரிதாபமாய் விழித்துக் கொண்டு நிற்கிறார்]

    ++++++++++++++++

    Share