நிர்மலா ராகவன்

அந்தப் பெரிய மண்டபத்துக்குள் நுழையும்போதே செல்லப்பா பாகவதருக்கு நா உலர்ந்துபோயிற்று. ஓரடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. கால்கள் பின்னுக்கு இழுத்தன.

தோரணங்கள் என்ன, மேடையைச் சுற்றி வண்ண வண்ண விளக்குகள் என்ன என்று, கல்யாணக்கோலத்தில் இருந்தது மண்டபம். இருபதுக்குக் குறையாத வாத்தியங்கள் அன்று நிகழப்போகும் பாடல் போட்டியின் இறுதிச் சுற்றுக்குக் கட்டியம் கூறிக்கொண்டிருந்தன.

அந்த மேடைமேல் தானும் இருக்கப்போகிறோம்!

கடந்த வாரம்வரை ஓர் இன்பக் கனவென அதை ஆவலுடன் எதிர்பார்த்து வந்தவருக்கு மயக்கம் வருவதுபோல் இருந்தது. அருகிலிருந்த இருக்கையைப் பிடித்துக்கொண்டு சுதாரித்துக்கொண்டார்.

பூமி பிளந்து பாவிகளை உள்வாங்கிக் கொள்வதெல்லாம் இதிகாச புராணங்களில்தான் நடக்குமோ?

இந்தக் கலிகாலத்தில் ஜக்கு போன்ற அயோக்கியர்கள்தாம் தரைக்க முடியுமோ?

`நீ மட்டும் பெரிய யோக்கியனா?’ என்று அவரது அந்தராத்மா இடித்துரைத்தது.

`எங்காவது ஓடிவிட மாட்டோமா!’ என்ற ஏக்கம் பிறக்க, `கொன்று போட்டுவிட மாட்டார்கள்?’ என்று எதிரெண்ணம் ஒன்று எழுந்து பயமுறுத்தியது.

அதுதான் வெளிப்படையாகவே சொல்லிப் போனாரே அந்த மனிதர், `நாங்க நல்லவங்களுக்கு நல்லவங்க. பொல்லாதவங்களுக்கு யமன்!’ என்று!

செல்லப்பாவின் வீட்டுக்கு முதல்நாள் வந்திருந்திருந்தார் அவர். “என் பெயர் ஜக்கு — ஜகன்னாதன்! ஒங்களால எனக்கு ஒரு காரியம் ஆகணுமே!” மிகப் பணிவாகப் பேசினார். வீட்டுச் சுற்றுச்சூழலைப் பார்த்தபோதே ஒரு முடிவுக்கு வந்திருந்தார் அவர்.

ஒரு சிறு கிராமத்தில் எக்காலத்திலோ கும்பாபிஷேகம் பண்ணப்பட்ட கோயிலில் வாத்தியம் வாசிக்கும் பரம்பரையில் வந்தவர் என்று செல்லப்பாவின் முன்னோர்களுக்கு அந்த வீடு கொடுக்கப்பட்டிருந்தது. கோயிலே சிதிலம் என்றால் வீட்டைப்பற்றிக் கேட்கவா வேண்டும்!

இந்த மனிதரையா தன் கைக்குள் போட்டுக்கொள்ள முடியாது!

ஆனால், அவர் எதிர்பார்த்தபடி செல்லப்பா அவ்வளவு எளிதாக மசியவில்லை. ஜக்கு சொல்வதைக் கேட்டுவிட்டு, “அது இசைக்குச் செய்யற துரோகமில்லே,” என்று மறுத்தார்.

“ஒங்க மனைவிக்குப் புத்துநோயாமே! நீங்க எவ்வளவு உழைச்சாலும், இந்த ஜன்மத்தில அஞ்சு லட்சத்தைப் பாக்க முடியுமா? இதை வெச்சுக்கிட்டு நல்லா வைத்தியம் பாக்கலாமில்ல? பிடிங்க!” ஒரு பெட்டியை அருகிலிருந்த முக்காலிமேல் வைத்தார் அந்த விடாக்கண்டர். பெட்டியைத் திறந்து காட்டியபோது செல்லப்பாவின் கண்கள் அகன்றதைக் கவனிக்கத் தவறவில்லை அவர்.

“நீங்களும் எத்தனையோ வருஷமா, `சாமி காரியம்’னு செஞ்சுக்கிட்டிருக்கீங்கல்ல? அந்தக் கடவுளே என் ரூபத்திலே வந்திருக்குன்னு நினைச்சுக்குங்க,” என்று நைச்சியமாகப் பேசியவர், “இதிலே ஒரு லட்சம் இருக்கு. வெச்சுக்குங்க. மீதியை விழா முடிஞ்சதும், நானே ஒங்ககிட்டே மண்டபத்திலேயே குடுத்துடறேன். என்ன?”

“ஐயோ!” பதறினார் செல்லப்பா.

“சரி, வேண்டாம். யாராவது பாத்துட்டா வம்பு! அடுத்த நாள் காலையிலே இங்கேயே வந்து குடுத்தாப்போச்சு!” வந்த காரியம் நல்லவிதமாக முடிந்தது என்ற திருப்தியுடன் எழுந்துகொண்டார். “கைநீட்டி காசு வாங்கியிருக்கீங்க. கல்யாணிக்குப் பரிசு கிடைக்கக் கூடாது. அவ்வளவுதான். அது ஒங்க கையிலதான் இருக்கு”.

கல்யாணியின் விதவைத் தாய் ஓர் இசை ஆசிரியை. கருவிலிருந்தே பாட்டைக் கேட்டு வளர்ந்த பெண்! சோடையாக இருக்குமா?

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஜக்குவைப்போன்ற பலர் ஒன்று சேர்ந்து, போட்டி முடிவைக் குறித்து பொதுமக்களைப் பந்தயம் கட்ட வைத்திருந்தார்கள். மக்களின் கணிப்புப்படி கல்யாணிக்குத்தான் முதல் இடம்.

அப்படி ஏடாகூடமாக ஏதாவது நடந்துவிட்டால், பந்தயம் கட்டியவர்களுக்கு வாரிக் கொடுத்து, நஷ்டப்பட வேண்டியிருக்குமே என்று ஜக்கு போன்றவர்கள் முன்ஜாக்கிரதையாக இருந்தார்கள்.

ஜக்கு போனதும், “யாருங்க?” என்று மெல்லிய குரலில் விசாரித்தாள் மனைவி.

“ஒனக்கு வைத்தியம் செய்ய சாமி அனுப்பினவரு!” என்று கூறினாலும், செல்லப்பாவின் மனதில் நிம்மதி இல்லை. குறுக்கு வழியில் சம்பாதித்தாவது மனைவியின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமா?

நிகழ்ச்சி ஆரம்பிக்க சில நிமிடங்களே இருந்தன.

“வந்துட்டீங்களா, மாமா? இந்தப் பக்கமா நில்லுங்க. நமஸ்காரம் பண்ணறேன்!”

ஒரு வருடத்துக்கு முன்னால் அவர் யாரோ, அவள் யாரோ! ஆனால், இந்தச் சில மாதங்களாக, அவள் பாடிய ஒவ்வொரு வரிக்குப் பிறகும் அவர் தன் வாத்தியத்தில் அதையே திரும்ப வாசிக்க வேண்டிய நிலையில், இசைத்துறையில் தனக்கிருந்த நீண்டகால அனுபவத்தால் அவளுக்கு நிறைய கற்றுக் கொடுத்திருந்தார்.

குருவென மதித்தவரின் காலில் விழுந்து கும்பிட்டாள் கல்யாணி.

செல்லப்பா காலைப் பின்னால் இழுத்துக் கொள்ளாதிருக்க அரும்பாடு பட்டார்.

“ஏன் மாமா, முகம் வெளுத்தாப்போல இருக்கு? ராத்திரி எல்லாம் தூங்கலியா? படபடப்பா இருந்திச்சோ?”

“அ.. ஆமா. இல்ல. லேசா காய்ச்சல்!”

“அதெல்லாம் சரியாப் போயிடும். ஒங்களுக்குத்தான் வாத்தியத்தைக் கையில எடுத்தா, ஒலகமே மறந்துடுமே!” உற்சாகமூட்ட நினைப்பதுபோல கலீரென்று சிரித்தாள்.

`ஐயோ! சிரிக்காதேயேன்!’ என்று அலற வேண்டும்போல இருந்தது செல்லப்பாவுக்கு.

வாத்தியத்தைக் கையில் எடுத்தால் தனக்கு உலகமே மறந்துவிடுமாம்! அதுதான் ஜக்கு கூறிப்போனதை மறக்காமல், கல்யாணியின் ஐந்து கட்டை ஸ்ருதிக்குச் சற்றே குறைவாக வாத்தியத்தில் வைத்துக்கொண்டு வந்தோமா?

இசை கற்றிருந்தாலும் சரி, இல்லை, அதுபற்றி எதுவும் தெரிந்திராவிட்டாலும்கூட, இரண்டையும் ஒரே சமயத்தில் கேட்பவருக்கு நாராசமாக ஆகிவிடுமே! அவர்களல்லவா வாக்களிக்கப்போகிற நீதிபதிகள்!

பலத்த கரகோஷத்துக்கு நடுவே, தொலைகாட்சி நிலையத்தாரின் உபயமான புதிய ஆடையை அணிந்து, வாய்கொள்ளாத சிரிப்புடன் கல்யாணி மேடைக்கு வந்தாள்.

பாட்டின் முதல் வரியைப் பாடினாள். அடுத்து, செல்லப்பாவின் முறை. அவரைத் திரும்பிப் பார்த்து, மென்மையாகச் சிரித்தாள்.

அடுத்த வரி. அதற்கடுத்த வரி. கல்யாணி பாடிக்கொண்டே போனாள்.

நீதிபதிகள் முகத்தைச் சுருக்கினார்கள். சபையிலிருந்தவர்களிடமும் `கசமுசா’ என்று பேச்செழுந்தது.

கல்யாணி அவர் பக்கம் திரும்பினாள். முகத்தில் கேள்விக்குறி. எங்கே தவறு நிகழ்ந்தது என்று யோசிக்கவெல்லாம் அது நேரமல்ல. வலக்கை மைக்கைப் பிடித்திருக்க, இடது ஆள்காட்டி விரல் ஒரு காதுக்குள் நுழைந்து, வாத்திய இசையை மறைக்கப் பார்த்தது.

தானும் புதிய புடவை அணிந்து, பெருமையுடன் சபையில் அமர்ந்திருந்த தாயின் கன்னத்தில் கண்ணீர் வழிந்தோடுவதை அவள் கவனிக்கவில்லை. கண்ணை மூடிக்கொண்டு, தன் குரலிலேயே கவனம் செலுத்தினாள்.

பாட்டு முடிந்ததும், நீதிபதி, “இந்தச் சூழ்நிலையிலும் நீங்க ஸ்ருதி தவறாம பாடினதைப் பாராட்டித்தான் ஆகணும்!” என்று தவறு எங்கு, எப்படி நிகழ்ந்தது என்று சூசகமாகச் சுட்டிக் காட்டியபோதும், அவளால் செல்லப்பாவைத் தப்பாக நினைக்க முடியவில்லை.

“பாவம் மாமா நீங்க! காய்ச்சலோட வாசிக்க முடியல,” என்று அனுதாபம் காட்டினாள், தனக்குப் பரிசு கிடைக்காததைப் பெரிதாக எண்ணாது.

செல்லப்பாவுக்கு வார்த்தைகளே வரவில்லை. நெற்றியில் அடித்துக்கொண்டார்.

மறுநாள் ஜக்கு வரவில்லை. அவர் மனைவிதான் நிரந்தரமாக அவரைப் பிரிந்து போனாள் — பிறரை ஏமாற்றிச் சேர்த்த பணம் தனக்கு வேண்டாம் என்பதைப்போல்.

ஒரு நாள் அவரைத் தேடி வந்தாள் கல்யாணி. அவளுடன் நாகரிகமான இளைஞன் ஒருவன்.

“மாமா! போட்டி அன்னிக்கு ஒங்களுக்கு ஒடம்பு முடியாம போனதும் நல்லதுக்குத்தான். ஜெயிச்சிருந்தா, ஊர் ஊராப் போய் பாடியிருக்கணும். இப்ப வெளிநாட்டுக்கே போகப்போறேன்!”

வந்திருந்தவன் பேசினான்: “கல்யாணியை டி.வியில பாத்ததுமே, `எனக்கு இவதான்!’னு முடிவு செஞ்சுட்டேன். போட்டியில பரிசு கிடைக்கலியேன்னு இவளுக்கு வருத்தமா இருந்திருக்கும். ஆனா, நான் சந்தோஷமா ஒடனே பறந்து வந்து, பெண் கேட்டுட்டேன்!”

“மொதல் பத்திரிகை ஒங்களுக்குத்தான் குடுக்கணும்னு வந்தோம், மாமா!”

இருவரும் மாறி மாறி, ஸ்ருதி பேதமில்லாத இரட்டை நாயனங்கள்போல் பேசினார்கள். சேர்ந்து அவர் காலில் விழுந்தார்கள்.

ஆசி கூறக்கூட அவர் நாக்கு புரளவில்லை. சற்று யோசித்துவிட்டு, ஏதோ முடிவுக்கு வந்தவராக, “இரும்மா!” என்று உள்ளே போனவர், ஒரு சிறு பெட்டியைக் கொண்டுவந்தார். “இதிலே லட்ச ரூபா இருக்கு. என்னோட கல்யாணப் பரிசா இருக்கட்டும்”.

அதைப் பார்க்காமலேயே, “இப்போ எதுக்கு, மாமா? கல்யாணத்துக்கு வர்றப்போ குடுங்க”. ஒரு சிறிய மிரட்டலுடன், குழந்தைமாதிரி பிடிவாதம் பிடித்தாள் கல்யாணி.

“ஒங்க மாமி செத்துப்போய் இன்னும் ஒரு மாசம்கூட ஆகலே, குழந்தே. நான் வரதுக்கில்ல!”

“எத்தனை பணம்னு சொன்னீங்க?” அப்போதுதான் அவளுக்கு உறைத்தாற்போல் கேட்டாள். “ஒரு லட்சமா! அப்படியோவ்!” சிரித்தாள். “என்ன மாமா? லாட்டரி ஏதும் அடிச்சீங்களா?”

தளர்ந்த குரலில் ஒப்புக்கொண்டார்: “இல்லேம்மா. ஒரு பந்தயத்திலே கிடைச்சது!”

அவ்வார்த்தையைக் கேட்டதும், அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தாள் கல்யாணி.

மகளுக்குப் பரிசு கிடைக்காத ஆத்திரத்தில் அம்மா கூறியது இப்போது கேட்டது: `மனுசன் எவங்கிட்டேயோ பணம் வாங்கிக்கிட்டு, வேணுமின்னே ஸ்ருதியைக் குறைச்சு வாசிச்சிருக்கான். அப்போதானே ஒனக்குப் பரிசு கிடைக்காம பண்ணமுடியும்?’

`சேச்சே! மாமா என்னை அவர் பெறாத மகளாத்தான் நினைச்சுக்கிட்டிருக்காரும்மா. அப்படியெல்லாம் தப்புத்தண்டாவுக்குப் போகமாட்டார். தினமும் சாமி காரியம் பண்றவரு!’ என்றெல்லாம் இந்த மனிதரையா விட்டுக்கொடுக்காமல் பேசினோம்!

கல்யாணி செல்லப்பாவைப் பார்த்த பார்வையில் ஒரு வெறுப்பு. அப்பார்வையில், `ஒங்களை எவ்வளவு ஒசத்தியா நினைச்சிருந்தேன்!’ என்ற வேதனைதான் அதிகமிருந்ததோ?

அதைத் தாளமாட்டாது தலைகுனிந்தார் செல்லப்பா.

“வாங்க, போகலாம்!”

அவரிடம் சொல்லிக்கொள்ளாமலேயே வெளியே விரைந்தாள் கல்யாணி.

பணப்பெட்டி அங்கேயே இருந்தது. உள்ளே புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள், கத்தை கத்தையாய்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.