சக்திசக்திதாசன்

10354728_655625571192738_5553640597757638670_n

ஜூன் 24 எப்படி தன்னைப் பெருமையாக்கிக் கொண்டது ? இந்த தினத்தில் எத்தனையோ நிகழ்வுகள் நடந்தேறியிருக்கலாம். . எத்தனையோ கோடி மக்கள் பிறந்திருக்கலாம் அன்றி இறந்திருக்கலாம். ஆனால் இத்திகதி தமிழர்கள் அனைவரையும் தன்பால் இழுக்க வைக்கும் ஒரு மாபெரும் நிகழ்வுக்கு வித்திட்டது. ஆம் தாய்த்தமிழகம் என நாம் போற்றும் தமிழ்நாட்டில் சிறுகூடல் பட்டியில், மலையரசித் தாயின்மடியில் முத்தாக ஒரு முத்தையாவை தமிழன்னை விசாலாட்சி எனும் சிப்பியினுள் விளைய வைத்தது..

விளைவு !

உலகத்தமிழர்களுக்கெல்லாம் காலத்தால் அழியாத கவிஞனை ஈந்து ஜூன் 24 தன்னை உலகத் தமிழர் மனங்களில் நிலை கொள்ளும் ஒரு தேதியாக நிர்ணயித்து விட்டது. என்று நான் எழுதத் தொடங்கினேனோ அன்றே கவியரசர் கண்ணதாசனை என் மனதினில் மானசீகக் குருவாக வரித்துக் கொண்டேன். நான் எழுத்தாளனாக வேண்டும் எனும் இலட்சிய வேட்கையோடு எழுத்தாளனாகவில்லை. எழுத்து என்னையறியாமலே என்னைத் தன்வசப்படுத்திக் கொண்டு விட்டது. தமிழை நேசித்ததினால் கண்ணதாசனை நேசித்தேனா அன்றிக் கண்ணதாசனின் படைப்புகளை நேசித்ததினால் தமிழை நேசித்தேனா எனும் விவாதம் என்னுள் என் வாழ்வின் மத்திய பகுதியில் தான் நிகழ்ந்தது. அப்போது என்னுள் ஏன் இப்படி ஒரு விவாதம் என்று என்னை நானே கேட்ட போது அதற்கான விடையும் எனக்குக் கிடைத்தது. ஆம் கண்ணதாசனுக்கும், தமிழுக்கும் இருந்த பிரிக்க முடியாத பிணைப்பே எனது விவாதத்திற்கு காரணமாயிற்று என்று உணர்ந்து கொண்டேன்.

10492612_655625301192765_47976254459603565_n

வாலிபக் காலங்களில் மனதில் காதல் எண்ணங்கள் ஊர்வது சகஜம், ஆனால் அக்காதல் எண்ணங்களுக்கு வடிவம் கொடுப்பது அன்றைய எம் தலைமுறையில் திரைப்படப்பாடல்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. அத்தகைய பாடல்களில் உள்ளத்து உணர்வுகளை எளிமையாகக் கேட்கும் முதல் மாத்திரத்திலேயே புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அமைத்துத் தந்த வல்லமை கவியரசர் கண்ணதாசனுக்கு உண்டு என்பதே அவர்பால் அன்றைய நான் கொண்ட ஈர்ப்பு. அத்தகைய ஈர்ப்பின்பால் கவரப்பட்ட நான் காலச்சுழற்சி எனும் காற்றில் அகப்பட்ட சருகினைப் போல புலம்பெயர் தேசத்துக்கு அடித்துச் செல்லப்பட்டேன். சிறியதோர் மீன் தொட்டியில் இருக்கும் மீன் பெரும் ஆழியில் தூக்கி வீசப்பட்டால் திக்குத் திசை தெரியாமல் தடுமாறுவது போல அன்னை தந்தை எனும் பாதுகாப்பு வலையத்தினுள் இருந்து 18 வயதினில் இங்கிலாந்து எனும் பரந்த தேசத்தினுள் தூக்கி வீசப்பட்டேன் அப்போது எனக்கு என் தனிமையில் துணையாய் இருந்தது ஈழத்தில் இருந்து நான் பதிவு செய்து கொண்டு வந்திருந்த எனக்குப் பிடித்தமான திரைப்படப் பாடல்கள் தான். “தனிமையிலே இனிமை காண முடியுமா?” எனும் கவியரசரின் பாடலின் உண்மையான அர்த்தம் என்னுள்ளத்தில் புலப்படத் தொடங்கியது. கவியரசர் யாத்த பாடல்கள் ஒவ்வொன்றின் வரிகளிலும் பொதிந்திருந்த பொருளின் கனத்தை என்னெஞ்சம் உள்வாங்கத் தொடங்கியது.. எப்போது உள்ளத்தில் என் தாய்நாட்டின் பிரிவின் துயரம் தாக்கினாலும் ” எண்ணங்களினாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா” எனும் வரிகள் மனதுக்கு இதமளித்தன.

10300436_656121441143151_5885257405195879848_n
புலம்பெயர் வாழ்க்கையில் பல திருப்பங்களைச் சந்தித்து திசைமாறி ஓடிக்கொண்டிருந்த என் வாழ்க்கை நதியைச் சரியான வழியில் திருப்ப வழிகள் தேடித் தவித்திருந்த வேளை ஈழத்திலிருந்த என் உற்ற நண்பன் எனக்கு கவியரசரின் “அர்த்தமுள்ள இந்துமதம்” எனும் அரிய பொக்கிஷத்தின் பத்துப் பகுதிகளையும் அனுப்பி வைத்தான். அதைப்படிக்கப் படிக்க என் வாழ்வின் போக்கினில் நான் செல்லும் வழிகளின் நுணுக்கங்களை மாற்றும் மார்க்கத்தைக் கற்றுக் கொண்டேன். நான் பிறந்த கலாச்சாரத்தின்படி நானுதித்த மதத்தின் அடிப்படையை வெறுப்பதும், எள்ளி நகையாடுவதும் நாகரீகம் என்று கருதி வந்த எனக்கு “நான் ஒரு இந்து” என்று எண்ணுவதோ, கூறுவதோ மட்டும் என்னை ஒரு மதவெறியன் என்று அடையாளம் காட்டி விடாது என்று உணர்ந்து கொண்டேன். நல்ல மனிதனாக நடப்பதுவே ஒரு நல்ல இந்துவின் அடையாளம் என்று உணர்ந்து கொண்டேன். வாழ்வின் ஒவ்வொரு அசைவுகளுக்கும் விளக்கம் அளித்த கவியரசரின் எளிதான , அனைவருக்கும் புரிய வைக்கும் தமிழ்நடை என்னைக் கவர்ந்தது. கவியரசரின் பாடல்களை மட்டுமல்ல அவரின் எழுத்துக்களையும் காதலிக்கத் தொடங்கினேன். எழுத்து என்பது எனது இலக்கணச் சிறப்பையோ அன்றி இலக்கியச் செறிவையோ விளம்பரப்படுத்தும் ஆயுதமல்ல அது சாமான்ய மக்களையும் சென்றடையக்கூடிய ஒரு ஊடக ஊடுருவலாக இருக்க வேண்டியதன் அவசியத்தைக் கவியரசரின் எழுத்துக்களின் மூலம் கற்றேன் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

அர்த்தமுள்ள இந்துமதத்தில் ஆரம்பித்த கவியரசரின் எழுத்துக்களின் சேகரிப்பு இன்று நான் எப்போது சென்னை சென்றாலும் கவியரசரின் மூன்று புத்தகங்களாவது இல்லாமல் திரும்புவது கிடையாது எனும் நிலைமைக்கு என்னை மாற்றியுள்ளது. என்னுடைய வாசிப்பு பழக்கத்தை அதிகரித்து இன்று எனது இல்லத்தில் ஒரு நூலகம் போன்று ஏறத்தாழ 500 நூல்கள் வைத்துப் படிக்கும் ஒரு நிலைக்கு உயர்த்தியுள்ளது. அது மட்டுமல்ல அவரது எழுத்துக்களின் வாசம் இன்று என்னை கவிதை, கட்டுரை, கதை என பல புனைவுகளை யாக்கும் வகையில் ஒரு எழுத்தை நேசிப்பவனாக மாற்றியுள்ளது.

என்ன சக்திதாசன் “காலத்தால் அழியாக் கவிஞன்” எனும் தலைப்பிட்டு விட்டு தன்னுடைய எழுத்துப்பயணத்தை விவரிக்கின்றானே என்று சிலர் எண்ணக்கூடும். கவியரசர் கண்ணதாசன் ஒரு பாமரன், ஒரு சாமானியத் தமிழனின் மனதில் இத்தகைய தாக்கத்தை விளைவிக்கக் கூடியவராக இருப்பதே அவர் தமிழர் மனங்களில் என்றும் வாழ்ந்து காலத்தால் அழியாக் கவிஞராக நிலைபெறுகிறார் என்பதற்குச் சான்றாகவே எனது வாழ்விலிருந்து உதாரணங்களை எடுத்தியம்பினேன். நான் கவியரசரிடமிருந்து கற்றுக் கொண்ட முதல் பாடம் ஒரு நல்ல எழுத்தாளனாவதன் அடிப்படை சுய அலசலே என்பதுதான். அவர் என்றுமே எதையுமே தனது வாழ்வின் நிகழ்ந்த நிகழ்வுகளின் அடிப்படையில் விளக்குவதை அடிப்படையாகக் கொண்டிருந்தார்.. அதற்குச் சான்றாக அவரே

“ நான் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேனோ
அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன் ஆகையால்
இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்லும்
யோக்கிதை எனக்குண்டு “

என்று மிகவும் துணிச்சலாக அடித்துக் கூறியுள்ளார். கவியரசரது 90வது பிறந்ததினத்தில் அவரை நினைவுகூறுவது எந்தன் அவா. அதை இவ்வகையில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

உள்ளத்திலே ஒரு ஒளியாக
உணர்வினில் கலந்த மொழியாக
தமிழோடு கலந்திடும் கவியாக
தாரகம் போற்றிடும் கவியரசே !

நேற்றோடு போன பொழுதாக
காற்றோடு கரைந்த முகிலாக
நீறாகிப் போகும் வெறும் உடலல்ல
நினைவோடு வாழும் உணர்வய்யா நீ !

ஈழத்தின் வடக்குக் கோடியிலே
இகத்தில் உதித்த பாமரன் இவனை
தமிழோடு யாத்து கவிபாட வைத்த
தங்கத் தமிழ்க் குருநாதன் நீயே !

வனவாசம் போதாது என்றே
மனவாசம் கொண்டு உன் வாழ்வினை
சோதனை செய்து அறிவுரை தந்து
சோதரர் பலரின் வாழ்வினை மாற்றினாய்

அர்த்தம் உள்ள இந்து மதத்தினை
அத்தனை இலகுவாய் அறிமுகம் செய்தனை
ஏழையாய் உதித்து ஏணியாய் உயர்ந்தவன்
ஏசுகாவியம் பாடி நீ பகர்ந்தனை

பாடல்கள் ஆயிரம் பாடினாய் கவியே
படித்தவர் நெஞ்சில் பதிந்தனை நீயே
பொதித்திடும் கருத்துக்கள் நெருப்பினை போல
பொசுக்கிடும் உள்ளத்தை உண்மைக் கனலாய்

கவியரசன் உந்தன் பிறந்தநாளில் தமிழ்க்
கண்ணதாசன் நின்னை நினைந்தொரு
சிறிய கவிதை படைத்தவன் நான்
சக்திதாசன் எனும் ஒரு பாமரன்

வணக்கங்களுடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.