இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (240)
சக்திசக்திதாசன்
அன்பினியவர்களே !
அன்பான வணக்கங்களுடன் இவ்வாரம் உங்களை இம்மடல் மூலம் வந்தடைவதில் மகிழ்கிறேன்.. இங்கிலாந்து நாட்டினை வெப்பாலை கடந்த சில நாட்களாக தகிக்கப் பண்ணிக் கொண்டிருக்கிறது. என்னடா இது ? இங்கே சுட்டுப் பொசுக்கும் வெப்பத்தில் தவித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு இங்கிலாந்தின் வெப்பத்தைப் பற்றி இதென்ன புதுக்கதை ! என்று அங்கலாய்ப்பது புரிகிறது. ஆனால் இங்கிலாந்து நாட்டின் சாதாரண காலநிலைகளையும், வெப்பச்சூழலையும் பொறுத்த அளவில் இது அசாதாரணமானதுவே. .நேற்றைய வெப்பநிலை வெப்பமானியில் அதியுச்சமாக 34 பாகைகளை எட்டிப்பிடித்தது./ இது இங்கிலாந்தின் ஜூன் மாத அதியுச்ச வெப்பநிலையை சுமார் 41 வருடங்களின் பின்னால் எட்டிப்பிடித்திருக்கிறது என்கிறார்கள்.
சரி எதற்காக இந்த திடீர் வெப்பநிலையைப் பற்றிய சிலாகிப்பு ?
சுமார் ஒரு வாரத்துக்கு முன்னால் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு தீ விபத்தின் அகோரச் சம்பவத்தைப் பற்றிப் பகிர்வதற்காகவே ! இலண்டனில் தென்மேற்குப் பகுதியில் உள்ள “நார்த் கென்சிங்டன் (North Kensington) “ எனும் வட கென்சிங்டன் பகுதியில் அமைந்துள்ள கிறன்வெல் எனப்படும் 24 மாடி அடுக்குமாடிக் கட்டிடம் தீ பற்றியெரிந்தது. ஒரு மாடியில் உள்ள ஒரு பிளாட்டில் ஏற்பட்ட தீவிபத்தினால் இக்கட்டிடம் ஒரு தீக்குச்சி போல அகோரமாக எரிந்தது அனைவரின் மனதை துயரத்தில் ஆழ்த்தியது. கனவேகத்தில் பற்றிக் கொண்ட தீ அத்தனை விரைவாக எப்படி இத்தனை தீவிரமாக முழுக்கட்டிடத்தையும் தாக்கியது என்பது பலரையும் பயங்கரமான கேள்விக்குறியில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் பத்து மில்லியன் பவுண்ட்ஸ் செலவில் மீளமைக்கப்பட்ட இக்கட்டிடத் தொடர் நவீனகால தீ தடுப்பு வசதிகளை ஏன் கொண்டிருக்கவில்லை என்பதும் கேள்வியாகவே இன்னமும் தொங்கிக் கொண்டிருக்கிறது. இக்கட்டிடத்தின் வெளிப்பகுதியை அழகாகக் காண்பிக்க பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் கவரிங் தீ விபத்தினைத் தடுக்கும் வகையிலானதா? என்பதும் இன்னமும் விடையில்லா வினாவாகவே இருக்கிறது. இதுவரை வெளிவந்த செய்திகளின்படி இத்தகைய பிளாஸ்டிக் கவரிங் அமெரிக்கா, சீனா போன்ற பல நாடுகளில் பாவனையிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், அத்தகைய ஒரு பாவனைப் பொருள் மக்கள் வசிக்கும் கட்டிடத்தில் பொருத்தப்படுவதற்கு அந்நகரசபை எவ்வகையில் அனுமதி அளித்தது எனும் கேள்வியை அனைத்துப் பகுதிகளிலுமிருந்தும் மக்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இத் தீவிபத்து இதுவரை காவு கொண்ட உயிர்களின் எண்ணிக்கை 79 ஆகும். அதைத்தவிர சுமார் 15 பேர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள், அவர்களில் சிலர் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
ஏற்கனவே அவசியமில்லாத தேர்தல் ஒன்றை நடத்தி தனக்கிருந்த பெரும்பான்மையையும் இழந்து சிறுபான்மை அரசமைத்து குழம்பிக் கொண்டிருக்கும் பிரதமர் தெரேசா மே அவர்களை ஏழரைச்சனி ஆட்டி வைக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இத்தீவத்தின் பின்னால் அவ்விடத்துக்கு விஜயம் செய்த பிரதமர் உத்தியோகத்தர்களையும், சில பாதிப்படைந்தவர்களையும் சந்தித்து விட்டு அவரைச் சந்தித்து தமது மனக்குறையைச் சொல்லக் காத்திருந்த பொதுமக்களை, அதாவது அக்கட்டிடத் தொடர் விபத்தில் இருந்து தப்பி வந்து வீடு, உடமைகள் இழந்தவர்களை சந்திக்காமல் திரும்பியது அவரை மிகவும் சிக்கலுக்குள் கொண்டு சென்று மாட்டிவிட்டது. எதிர்க்கட்சித் தலைவரான ஜெர்மி கோர்பன் அவர்களின் தொகி இக்கட்டிடத் தொடர் உள்ள பகுதியையும் உள்ளடக்கியதாலும் அங்கு நேரடியாக விஜயம் செய்து அங்கிருந்த மக்கள் அழுவதற்குத் தன் தோள்களைத் தந்த எதிர்க்கட்சித் தலைவரின் செயல் பிரதமரை மேலும் சங்கடத்துக்குள்ளாக்கி இருந்தது. . சரமாரியாகப் பிரதமரின் மீது அதிருப்தியளிக்கும் விமர்சனங்கள் குவிந்தன. அது மட்டுமன்றி அத்தீவத்தைத் தொடர்ந்து மீட்பு உதவிகளுக்கு பல பொதுமக்கள் உதவிகள் வழங்கி வந்தார்கள். ஆனால் அக்கட்டிடத்துக்குப் பொறுப்பாக உள்ள நகரசபையிலிருந்து ஒரு ஊழியரோ அன்றி அரசாங்கத் தரப்பிலிருந்து ஒரு உத்தியோகத்தினரோ அங்கு தென்படவில்லை.
இந்தக் கட்டிடத்தில் வசித்தோர் பெரும்பான்மையோர் அரசியல் தஞ்சமடைந்த வெளிநாட்டவர். பெரும்பான்மையோர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தாம் வாழ்வில் வசதி குறைந்தவர்கள் என்பதால் தமக்குத் தகுந்த நேரத்தில் தகுந்த உதவிகளைச் செய்ய அரச அதிகாரிகளோ அன்றி நகரசபை அதிகாரிகளோ முன்வரவில்லை என்னும் கருத்து இவர்களிடையே பரவி வந்தது. அது மட்டுமன்றி இக்கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டால் அதைத் தடுக்கக்கூடிய வசதிகளின் குறைவை இதற்கு முன்னால் எத்தனையோ தடவைகள் அரசுக்கும், நகரசபைக்கும் சுட்டிக் காட்டியும் அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இவர்களது குற்றச்சாட்டாகும். இவையனைத்தும் ஒன்றிணைந்து அனைத்து மக்களையும் ஒன்று கூடிய எதிர்ப்பலையைக் காட்டும் உணர்வுக்குத் தள்ளியது. விளைவாக பாதிக்கப்பட்டோர் ஒரு பேரணி நடத்தி நகரசபைக் கட்டிடத்துக்குள் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்தினர்.
நிலைமை தமக்கெதிராக விரைவாகத் திசைமாறுவது கண்டு பிரதமர் பாதிக்கப்பட்டோரை முன்னணிப்படுத்தும் குழுவொன்றை தனது உத்தியோக வாசஸ்தலத்தில் சந்தித்து அவர்களுக்கு உடனடியாக நட்ட ஈடாக ஓரளவு தொகையை அரசு கொடுக்கும் என்று உறுதியளித்தார். பாதிப்படைந்த மக்கள் அனைவரும் இன்னமும் குடியிருப்பு வசதிகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். அரசியல் சூறாவளியோடு சேர்ந்து காலம் எனும் சுனாமியும் சேர்ந்து பிரதமரின் பதவி எனும் விளக்கை அணைக்க முற்படும் வேளையில் அதைச் சுற்றி ஒரு அரணைக் கட்டிப் பாதுகாக்க முனைகிறார் தெரேசா மே.
இதுவரை பலியாகிய உயிர்கள் 79 இது இன்னமும் அதிகரிக்குமா ? வீடு, வாசல், உடமைகளை இழந்த மக்களுக்கு நியாயம் கிடைக்குமா? இத்தகையதோர் அடுக்குமாடிக் கட்டிடத் தொடரில் இப்படிப்பட்ட பயங்கர தீவிபத்தை இதுவரை தனது 29 வருட கால அனுபவத்தில் காணவில்லை என்றுரைத்த தீயணைப்புப் படைத் தலைவரின் அதிர்ச்சிக்குக் காரணமான இத்தீவிபத்துக்கு காரணமானவர்கள் யார் ? இத்தீவிபத்து எப்படி இத்தனை சீக்கிரம் முழுக்கட்டிடத்தையும் வியாபித்தது? இக்கேள்விகளுக்கான விடைகள் பிரதமர் தெரேசா மேயினால் அறிவிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் விசாரணையால் வெளிப்படுமா? .
அரசியல் எனும் சதுரங்கப் பலகையில் இது ஒரு விளையாட்டாக இருக்கலாம். ஆனால் எரியுண்ட அந்தக் கட்டிடத்தில் தமது உறவினர்களைத் தீக்கு இரையாகக் கொடுத்தவர்களும், தமது உடமைகளைப் பறிகொடுத்து வீதியில் நிற்பவர்களும் இதைத் தமது வாழ்வின் முக்கியக் கட்டம் என்றே எதிர்நோக்குகிறார்கள். அவர்கள் அனைவரினதும் வாழ்வில் ஓரளவாவது நிம்மதி கிடைக்க பிரார்த்திப்பது ஒன்றே எமக்குத் தெரிந்த வழியாகிறது.
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்