நாளையென்ன நாளை
நாளையென்ன நாளையைய்யா வரதராஜா ! – உன்
. நல்லருளை இன்றனுப்பு வரதராஜா !
நீளுகின்ற காத்திருப்பு போதும்ராஜா – உன்
. நிர்மலக்க ழல்காட்சி சிந்துராஜா !
தோளிலென்னை வேஷபாரம் தாக்குகின்றதே – மனம்
. தோற்றபடி வெந்தழுது வீங்குகின்றதே
ஆளுமாக பாதஜாலம் காட்டுராஜா – அட
. அம்பிகையின் சோதரனே வரதராஜா !
காலமென்னை ஆட்டுவிக்கக் கண்டிருப்பதோ – உன்
. கழல்பிடிக்க விளையாட்டு கொண்டிருப்பதோ
ஓலமிட்டு கெஞ்சுமொலி கேட்கவில்லையோ – என்ன
. ஓரவிழியின் ஜாலமெலாம் பிள்ளைமுன்னமோ ?
தோலிறுக்கம் மொழிநடுக்கம் நேரும்போதுதான் – உரு
. தோற்றியெனைத் தேவலோகம் காட்டுமெண்ணமோ ?
பாலனிட்ட கவிப்புலம்பல் மாண்டுபோகவோ – ஒரு
. பார்வையொளி வீசமனம் சொல்லவில்லையோ ?
காத்திருப்பு நன்மையென்று கண்டபோதிலும் – உன்
. கருணைமழை கடமைவினை அதைமறுப்பதோ ?
பூத்திருக்கும் கண்களுக்குள் புயல்நடப்பதோ ? – வளிப்
. பூழ்திவந்து நெஞ்சினோரம் வெடிவெடிப்பதோ ?
சாத்திரங்கள் சொல்வதுபோல் வாட்டுமெண்ணமோ ? – இந்தச்
. சமகாலத் தீயட்டம் இன்னும்மன்னுமோ ?
ஆர்த்தெழுந்து கையிலெனைத் தூக்குராஜா – உன்
. அருட்கமலப் பாதத்தைக் காட்டுராஜா !
https://soundcloud.com/vivekbharathi/drofx6rv7ntu
“ஓம் சக்தி”
விவேக்பாரதி