சிறுவர் இலக்கியம் படைப்பது எப்படி? (7)
பவள சங்கரி
குழந்தைகளைச் சுண்டியிழுக்கும் முதற்கதை :
வண்ணமயமான படங்களுடன் அதிசய மனிதர்களும், மிருகங்களும், இயற்கைக் காட்சிகளும் குழந்தைகளை குதூகலம் கொள்ளச்செய்கின்றன. ஜீபூம்பா கதை, அரக்கனின் அச்சமூட்டல்கள், குட்டிச்சாத்தானின் குறும்புகள், இவையனைத்திலிருந்தும் குட்டிகளைக் காக்கும் கதாநாயகனின் சாகசங்கள் போன்றவைகள் குழந்தைகளை ஆச்சரியத்தில் கண்கள் மலரச்செய்கின்றன. கற்பனைப் பாத்திரங்களை உற்ற தோழனாகக் கருதுகின்றனர்.
பெற்றவர்களை விட்டுச்சென்று தனியே தத்தளிக்கும் குழந்தை காணும் அதிசய உலகம், கற்றுக்கொள்ளும் பாடம், தவழ்ந்து வரும் குழந்தை விளையாட்டாக போகிறபோக்கில் செய்யும் சாகசங்கள் என அனைத்தும் குழந்தைக்கு தன்னையே அங்கு நிலைநிறுத்திவிடுகின்றன.
டாம், ஜெர்ரியின் குறும்புகள், ஒரு ரொட்டித் துண்டிற்காக ஓராயிரம் லீலைகள் புரியும் அதன் வேடிக்கை விநோதங்களைக் கண்டு மனம் திறந்து சிரித்து மகிழும் குழந்தைகளைக் காணும்போது உலகமே ஒரு சில நொடிகள் அதனூடேயே அடங்கிவிடும். நகைச்சுவைக்கு முதலிடம் கொடுக்கும் எந்தவொரு படைப்பும் குழந்தைகள் மத்தியில் சோரம் போவதேயில்லை.
வார்த்தை விளையாட்டுகளில் கூடிக்களித்திருக்கும் குழந்தைகள் புதிய பல வார்த்தைகளைக் கற்பதிலும் நாட்டம் கொள்கின்றன. அடுக்கு மொழியும், கிண்டல் நடையும் குழந்தைகளை மிகவும் கவரவேச் செய்கின்றன. உதாரணமாக,
தாப்பூ தாமரைப்பூ
தாப்பூ தாமரைப் பூ தாத்தா தந்த செண்பகப்பூ
பூப்பூ புளியம்பூ பொன்னால் செய்த தாழம்பூ
தீப்பூ தித்திப்பூ .
கைவீசம்மா கைவீசு
கடைக்குப்போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய்த் திங்கலாம் கைவீசு
பொம்மை வாங்கலாம் கைவீசு
ஜப்பான் போகலாம் கைவீசு.
சொக்காய் வாங்கலாம் கைவீசு
ஜோராய்ப் போடலாம் கைவீசு
கோயிலுக்குப் போகலாம் கைவீசு
கும்பிட்டு வரலாம் கைவீசு.
Ring A Ring O roses
A pocket full of poises
A tishoo! A tishoo!
we all fall down
A Ring. A Ring of Roses.
A pocketfull of poises
Ash-a Asha-a All stand Still.
திரும்பத்திரும்ப சில வார்த்தைகளை இசை நயத்துடன் சொல்லும்போது குழந்தைகள் அதை மிகவும் ரசிக்கின்றனர்.
குழந்தைகளின் பங்களிப்பும் இருக்கும் வகையில் படைப்புகள் புதிருடனும், எளிமையான பதங்களுடனும் இருப்பது அவர்களுக்கு சுவைகூட்டும்.
கண்ணாமூச்சி ரே.. ரே..
காட்டுப்பூச்சி ரே .. ரே ..
படம் பார்த்து கதை சொல்லும் உக்தி குழந்தைகளுக்கு இன்பமளிப்பதோடு அவர்தம் கற்பனை வளம் பெறுகுவதோடு, தன்னம்பிக்கையும் வளர்கிறது. படங்களுடன் வார்த்தைகளும் இணையும்போது குழந்தைகளுக்கு எளிதாக வாசிப்பும், புரிதலும் வாய்த்துவிடுகிறது.
இசையும், இயற்கையும் இயைந்து இனிய உலகிற்கு எடுத்துச்செல்லும் மாயம் ஏற்படுத்தும் பாடல்களும் அபரிமித வரவேற்பைப் பெறுகின்றன..
நிலா நிலா ஓடி வா!
நில்லாமல் ஓடி வா!
மலைமேல ஏறி வா!
மல்லிகைப்பூ கொண்டு வா!!
சவால்களும், சமயோசித முடிவெடுப்பும் ஊக்குவிக்கின்ற படைப்புகள் குழந்தைகளுக்கு மிகுந்த ஆர்வம் ஏற்படுத்துவதாக அமைந்துவிடுகின்றன. உதாரணமாக தாகத்துடன் நீர் தேடும் காகம், குவளை நீரில் கற்களைப்போட்டு புத்திசாலித்தனமாக தண்ணீரை மேலே வரவழைத்து தாகம் தீர்த்துக்கொள்ளும் கதை எத்தனை முறை கேட்டாலும் அலுத்துப்போவதில்லை. ஆக்கப்பூர்வமான சிந்தைகளுடன் எதிர்கால வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கும் மனோநிலை வளர்ச்சியும் ஏற்படுத்தும் இதுபோன்ற படைப்புகள் சுவை கூட்டுவதோடு நம்பிக்கை அளிப்பதாகவும் அமைந்துவிடுகின்றன.
கதைக்களமும், பாத்திரப்படைப்புகளும் எத்தகையனவாக இருப்பினும் மேற்கண்ட அடிப்படைத் தத்துவங்களைக் கருத்தில்கொண்டு நம் முன்னோர்கள் மூலம் வழிவழியாக வந்த கற்பனைகளையும் சில மாற்றங்களுடன் புகுத்தி, குழந்தைகளின் மனதில் ஆழமாகப் பதியும்வண்ணம் சிறந்த ஆக்கங்களைப் படைக்கவியலும்.
மூன்று வயது முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கான பெரும்பாலான படக்கதைப் புத்தகங்கள் ஏறத்தாழ 24 முதல் 32 பக்கங்கள் கொண்டதாக இருக்கக்கூடும். எளிமையான கதைகளும், சிறிய பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் சொல்லப்படுகின்றன. பொதுவாக படக்கதைகளில் வார்த்தைகள் மிகவும் குறைவாகவே இருப்பதால், கதைக்கான கருவும் மிகவும் எளிதாக இருக்கவேண்டியது அவசியம். கதை நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனையும், அதனால் உண்டாகும் குழப்பமும், அவன் கண்டுபிடிக்கும் தீர்வும் என கதை செல்லும்.
விடுமுறைக்கு தாத்தா, பாட்டி வசிக்கும் கிராமத்திற்குச் செல்லும் குழந்தைகள் எதையோப்பார்த்து அச்சம் கொள்ள, தாத்தா அதைப்போக்கும் விதமாக நல்ல தேவதைகள் குழந்தைகளைக் காக்க எப்போதும் காத்திருக்கும் என்பதை விளக்குவதாகச் செல்லும் கதைகளை உதாரணமாகச் சொல்லலாம்.
ஏழுவயது முதல் ஒன்பது வயது வரையிலான குழந்தைகளின் நூல்கள் 32 முதல் 64 பக்கங்கள் அல்லது 1000 முதல் 1,500 வார்த்தைகள் கொண்டதாக இருக்கலாம். சிலவற்றைத் தவிர பெரும்பாலான நூல்கள் மிக எளிய கதைக்களம் கொண்டதாகவே இருக்கும்.
ஆரம்பக்கட்டங்களில் சாதாரணமான கருத்தாக்கங்களுடன் பலமுறை திரும்பத்திரும்ப ஒரு விசயத்தைச் சொல்லும் விதமாக அமைகின்றன. நீண்ட வாக்கியங்களுடன் சில புதிய சொற்களை அறிமுகம் செய்து, அவற்றிற்கான படக்குறிப்புகளும் வழங்குவதன் மூலம் குழந்தைகள் அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்களை எளிதாகப் புரிந்துகொள்வர்.
அடுத்த நிலை குழந்தைகள் சற்றே விவரமானவர்கள். அவர்களுக்கு கதைகளுடன் பொது அறிவும் கலந்து வழங்கவேண்டும். சற்றே பெரிய வாக்கியங்களாகவும், புதிய வார்த்தைகளையும் பயன்படுத்த வேண்டும்.
தொடருவோம்