அங்கம் -2 பாகம் -13

aj

“எனது உள்ளம் ஒருவரால் கவரப்பட்ட வேளையில், ஒருமாதிரி ஆங்காரப் பூரிப்போடு, நிதானமாக அதன் காரணத்தை வெளியேற்றக் கதவைத் திறந்து வைத்தேன்! தர்க்கமின்றி, போராட்ட மின்றி, பொய் வெட்கமின்றி, மன வேதனை யின்றி, நெஞ்சக் கலக்க மின்றி அனைத்துக்கும் உடன்பட்டேன், அனைத்தையும் நான் நம்பினேன்! முகம் சிவந்து ஒருத்தி வெட்கப் படுவது எப்படி, ஒருவரால் ஈர்க்கப்பட்டு ஆராதிக்கப்படும் போது?”

ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]

“ஒவ்வொரு பாறைத் துண்டமும் ஒரு சிலையைத் தன்னுள் ஒளித்து கொண்டுள்ளது! சிற்பியின் கலைப்பணி அச்சிலையை அதில் கண்டுபிடிப்பதுதான்!”

மைக்கேலாஞ்சலோ [1474-1564]

“என்னைப் பாராட்டுபவன் எவனையும் நான் பாராட்டுவேன்! நாட்டைக் கைப்பற்றப் போர்க் களத்தில் நான் புரிந்த மாவீரச் செயல்களை யாரேனும் மறுக்க முடியுமா?”

அண்டனி
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]

“சீஸர்! பத்துத் தலைமுறைகளுக்கு [முன்னூறு ஆண்டுகள்] ஒருதரம் உலகத்துக்கு ஓர் உன்னத நூல் கிடைக்கிறது. வரலாறின்றிப் போனால், மரணம் உங்களை மூடப் படைவீரன் அருகிலே புதைத்து விடும்!”

[தியோடோடஸ், அலெக்ஸாண்டிரியா நூலகம் தீப்பற்றி எரியும் போது]
பெர்னாட் ஷா [சீஸர் & கிளியோபாத்ரா]

நேரம், இடம்:

அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர்.

காட்சி அமைப்பு:

கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். சீஸர் ரோமுக்கு மீள்வதை நிறுத்தி கிளியோபாத்ரா அவரைத் தன் கவர்ச்சியால் மயக்கி ஆண்மகவு பெற்றுத் தருவாய் உறுதி அளித்து மகிழ்ச்சி ஊட்டுகிறாள். வெளியே டாலமியின் படைவீரர் ரோமானியரைத் தாக்கி, அவரது கப்பல்களுக்குத் தீவைக்கிறார்!

ஜூலியஸ் சீஸர்: [கோபத்துடன்] முதலில் நீவீர் எமது போர்க்கைதி! போரை அறிவிக்காமல் போர் தொடுத்து, ரோமானிய வீரர் இருவரைக் கொன்றது உங்கள் குற்றம். பிரிட்டானஸ்! கைது செய் போதினஸ் போர்க் கைதியை!

போதினஸ்: [கேலியாக] நானா உங்கள் கைதி? வியப்பாக இருக்கிறதே! நீங்கள் தங்கி யிருப்பது எங்கே என்று தெரிகிறதா? அலெக்ஸாண்டிரியாவில்! எகிப்தியர் பூமியில்! டாலமியின் படைவீரர் உங்களை விட மிகையான எண்ணிக்கையில் அலெக்ஸாண்டிரியாவை முற்றுகை செய்துள்ளதைச் சற்றேனும் அறிவீரா?

ஜூலியஸ் சீஸர்: [கோபத்துடன்] நண்பா! வந்த வழியே திரும்பிச் செல், உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினால்! சீக்கிரம் செல்! தூதன் என்பதால் உன்னைத் தப்பிச் செல்ல விடுகிறேன்! வெளியே உன் படையாட்களிடம் உடனே சொல், ரோமானியரை இனிமேலும் கொல்ல வேண்டாமென்று! அல்லாவிடில் நீ கொல்லப் படுவாய், அறிந்து கொள். என்னைப் போல் பரிவு மிக்கவர், என்படை வீரர் என்று எண்ணாதே! பிரிட்டானஸ், செய்தியைப் பரப்பு; எனது போர்க் கவசத்தை எடுத்து வரச்சொல்!

[பிரிட்டானஸ் போகிறான். ரூஃபியோ நுழைகிறான்.]

aj

ரூஃபியோ: [ஜன்னல் பக்கம் சீஸரை அழைத்துச் சென்று, தூரத்தில் எழுகின்ற புகை மூட்டத்தைக் காட்டி] பாருங்கள் வெடிப் புகையை. [போதினஸ் ஓடி வந்து பார்க்கிறான்]

ஜூலியஸ் சீஸர்: [கவசத்தை அணிந்து கொண்டே] ஓ, அதற்குள் கலகம் ஆரம்பித்து விட்டதா? எனக்குத் தெரியாமல் என்ன நடக்கிறது? எப்படி நடக்கிறது? நம் கண்முன்பாகவே நமது ரோமானியர் கொல்லப் படுவது அவமானம்! அக்கிரமம்! அயோக்கியத்தனம்!

ரூஃபியோ: நமது ஐம்பெரும் கப்பல்கள் துறைமுகத்தில் தகர்க்கப் பட்டன! கப்பலுக்கான எண்ணைக் கலன்களை ஏந்திச் சென்ற கட்டுமரமும் எரிக்கப் பட்டது! எகிப்தியர் படை மேற்குத் துறைமுகத்தைக் கைப்பற்றி விட்டது உண்மை! அவர்கள் வைத்த தீ வளர்ந்தோங்கி வருகிறது!

ஜூலியஸ் சீஸர்: [சீற்றமுடன், கவசத்தை சரிசெய்து கொண்டு] அப்படியானால் கிழக்குத் துறைமுகம் யார் கையில் உள்ளது? கலங்கரை விளக்கம் யார் கையில் உள்ளது, ரூ·பியோ?

ரூஃபியோ: [கோபத்துடன்] சீஸர்! நீங்களே களத்துக்கு வந்து கட்டளை யிடுங்கள்! ஐந்து நிமிடத்தில் என்னால் படை திரட்டித் தாக்க முடியாது! கிளியோபாத்ராவின் பட்டம் சூட்டு விழாவுக்கு நீங்கள் ஒத்திகை பார்த்து வருகிறீர், அலெக்ஸாண்டிரியாவை எகிப்தியர் அபகரிக்கும் போது! நாம் விழித்தெழா விட்டால், நம்மையும் சிறைப் படுத்திக் கொன்று விடுவர் டாலமியின் ஆட்கள்!

ஜூலியஸ் சீஸர்: [சற்று நிதானமுடன்] எகிப்த் ரோமாபுரியின் ஆக்கிரமிப்பு நாடு! ஜூலியஸ் சீஸர் உள்ள வரை அலெக்ஸாண்டிரியா ஒருபோதும் அவரது கையிக்கு மீளாது, ரூஃபியோ!
[அப்போது தியோடோடஸ் அலறிக் கொண்டு ஒருபுறம் நுழைகிறார்.

கிளியோபாத்ரா தீயெரிப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்ட பின்பு ஆத்திரப் பட்டு மாளிகைக்குள் நுழைகிறாள்]

தியோடோடஸ்: [பயங்கரக் குரலுடன்] எகிப்திய மாந்தர்காள்! நமது நகரம் நரக மாகுது! அலெக்ஸாண்டிரியாக் கடற்கரை எங்கெங்கு நோக்கினும் தீ மயம்! நமது உன்னத நூலகம் வெந்து சாம்பலாகுது! நமது எகிப்த் நாகரீகம் மாயுது! நமது கலாச்சாரம் எரிந்து போகுது!
[எல்லாரும் மாளிகை ஜன்னல் வழியாகத் தூரத்தில் தீ மண்டலங்களைக் காண்கிறார்]

கிளியோபாத்ரா: [ஆங்காரமாக, கொதிப்புடன்] காட்டுமிராண்டியர், ரோமானியர்! நூலகத்தில் எப்படித் தீ வைக்கலாம்? அலெக்ஸாண்டிரியா நூலகம் வரலாற்றுக் களஞ்சியம்! உலகின் முதல் நூலகம் எரியுது! வான சாஸ்திரம், கணித சாஸ்திரம், அண்ட கோள்களின் நகர்ச்சி விளக்கம், கட்டடக் கலைகள், பிரமிட்களின் அமைப்பு அனைத்தும் எரிந்து புகையாய்ப் போகின்றன! வரலாற்றுப் புகழ் பெற்ற எங்கள் நூலகம் கருஞ் சாம்பலாகுது! பிளாடோவின் உரையாடல் நூல் வெந்து போகுது! அரிஸ்டாடலின் படைப்புகள் கரும் புகையாய் போகுது! அலெக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்பு வரலாறுகள் கரிந்த சாம்பலாகின்றன! கிரேக்க, ·பாரோ வரலாறுகள், காவியங்கள், ஹீப்ரூ படைப்புகள் அனைத்தும் நாசமாகின்றன! காட்டுமிராண்டித்தனம் சீஸரே!

ஜூலியஸ் சீஸர்: [சற்று கனிவோடும், சீற்றத்தோடும்] வருந்துகிறேன், கிளியோபாத்ரா! நூலகத்துக்கு யாரும் திட்டமிட்டுத் தீ வைக்க வில்லை! டாலமியின் படகுகளில் வைத்த தீ காற்றடித்தால் நூலகத்தில், தாவிப் பற்றி யிருக்க வேண்டும், என்பது எனது யூகம்!

கிளியோபாத்ரா: வருந்துகிறேன் என்று வெறும் வாய் வார்த்தை போதாது! நூலகம் திரும்பவும் மீளுமா? எப்படி அதை மீண்டும் உருவாக்குவது? முதலில் தீயை அணைக்க யாரும் போக வில்லை!

ஜூலியஸ் சீஸர்: [சற்று குற்ற உணர்வுடன்] டாலமியின் படையினர் எமது கப்பல் மீது முதலில் இட்ட தீ! ரோமானியர் யாரும் அந்தப் போரை ஆரம்பிக்க வில்லை! டாலமியின் ஆட்கள் ரோமானியரைக் கொல்லத் தொடங்கினர். பிறகு என்ன நடக்கும், போரைத் தவிர? ரோமானியரும் வெடிப்புக் குண்டுகளை எகிப்தியர் கப்பல்கள் மீது வீசினர்! அந்தத் தீயைக் காற்று தூக்கிச் சென்று தவறாக நூலகத்தில் விட்டுவிட்டது!

கிளியோபாத்ரா: [கோபத்துடன்] நூலகத்தின் பெயர் முன்னால் காட்டப் பட்டுள்ளது. அதைப் பார்க்காமல், அதன் அருகே எப்படி வெடிகுண்டை வீசலாம்! காட்டுமிராண்டிகள்தான் சிந்தனை யில்லாமல், கண்ணால் பாராமல் இப்படிச் செய்வார்!

aj

ஜூலியஸ் சீஸர்: [தன் படையாட்களை வெளியே போகச் சொல்லி, அவர்கள் சென்ற பிறகு, பெருங் கோபத்துடன்] வாயை மூடு! ரோமானியரைக் காட்டுமிராண்டிகள் என்று எப்படி நீ திட்டலாம்? ஒழுக்கமுள்ள ரோமானியப் படைக்கு நிகராக எப்படையும் கிடையாது! நாகரீக மற்றவர் எகிப்தியர்தான்! ரோமானியர் அல்லர்! நான் ஜூலியஸ் சீஸர்! ரோமானியர் தலைவனாய்ப் போற்றுப் படுபவன்!

கிளியோபாத்ரா: நான் கிளியோபாத்ரா! எகிப்தியர் வணங்கும் மகாராணி! ஐஸிஸ் [1*] கடவுளாக வணங்கப் படுபவள் நான்! ஃபாரோ மன்னர் நாகரீகம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே உதயமானது! எங்கள் நாகரீகம் எப்படிப் பட்டதென்று நேராகப் பார்க்க வேண்டுமா? அதோ அங்குள்ள எங்கள் பிரமிட் கோபுரத்தில் புதைத்து வைத்துள்ள களஞ்சியங்களைப் பாருங்கள்! அதோ அங்கு படுத்துள்ள மனிதத் தலைச் சிங்கத்தைப் பாருங்கள்! ஈராயிரம் ஆண்டுக்கு முன் விருத்தியான எங்கள் கட்டடக் கலைக்கு நிகராக எந்த நாட்டில் உள்ளது?

ஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ரா! அவை எல்லாம் புராணக் கதைகள்! நீங்கள் இப்போது எங்கள் அடிமை! எகிப்த் நாடு ரோமுக்குக் கீழ் உள்ளது! நீ எப்போது எகிப்தின் அரசி ஆவாய் என்பது என் கையில் உள்ளது! நீ எகிப்தின் தேவதை ஐஸிஸ்தான்! ஆனால் நீ வெறும் ஓர் அழகுப் பதுமை! உன்னை அரசியாக என்றைக்கு நான் ஆசனத்தில் ஏற்றுவேனோ அன்றுதான் நீ எகிப்தின் ராணி! அதுவரை நீ வெறும் கவர்ச்சி மாதுதான்! காட்டுமிராண்டி என்று எங்களைத் திட்டியதற்கு நீ மன்னிப்புக் கேட்க வேண்டும்!

கிளியோபாத்ரா: சீஸரே! அது மட்டும் நடக்காது! ஐஸிஸ் கடவுளான

கிளியோபாத்ரா யாரிடமும் மன்னிப்புக் கேட்க மட்டாள்! எகிப்தியர் நாகரீக மற்றவர் என்று அறிவில்லாமல் ஏளனப் படுத்திய நீங்கள்தான் என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுவரை உங்கள் முகத்தில் நான் விழிக்கப் போவதில்லை! நான் போகிறேன்!

[கிளியோபாத்ரா கோபத்துடன் வெளியேறுகிறாள். சீஸர் பரிதாபமாய் விழித்துக் கொண்டு நிற்கிறார்]

++++++++++++++++

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *