Year: 2017

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav
    ”பாதம் வருடும் பசுவைப் பதிஆசிர்
    வாதம் புரிதல் வெகுநேர்த்தி: -ஆதலால்
    அன்னையென்(று) எண்ணி அணுகினால் காத்தருள்வார்,
    தன்னையே கன்னையன் தந்து….!கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    unnamed (3)

    ”மாடவர், மாதவர், மாதாகே சவ்விரல்
    கோடவர், கோகுல கோபாலர், -வீடவர்,
    ராதை கரம்விலக்கிக், கீதை உரைநிறுத்தி,
    ஆதரவுக்(கு) ஓடும் அரி’’….கிரேசி மோகன்….!

    Share
  • இரண்டாம் உலகத்தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு!

    பவள சங்கரி

    1

    இதோ.. இதோ வந்துவிட்டது உலகத்தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டுத் திருவிழா! என்னுடைய அமர்வு 11-06-17 – ஞாயிற்றுக்கிழமை ஔவையார் அரங்கில் திருமிகு என்.கண்ணன் (செயலர், முத்தமிழ்ப்பேரவை, புதுதில்லி) முன்னிலை, திருமிகு முனைவர் காவ்யா சண்முகசுந்தரம் தலைமையில், கடல்சார் வணிகமும் பண்டைத்தமிழகமும் பண்பாடும் என்ற பொருண்மையில் அமைகிறது. மிக மகிழ்ச்சியான தருணம். அற்புதமான இந்த வாய்ப்பளித்த நல்லுள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி.

    New Doc 2017-06-06_2

    2

    3

    unnamed (1)

    unnamed (2)

    Share
  • படக்கவிதைப் போட்டி (115)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    DSC_0884
    69940943@N05_rபவள சங்கரி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (10.06.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையுமபெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (12)

    க. பாலசுப்பிரமணியன்

    பொன்னான நெஞ்சம் வேண்டுமே !

    திருமூலர்-1

    சிறிய வயதில் பள்ளியில் படித்த ஒரு கதை. மிடாஸ் என்ற ஒரு அரசன். அவனுக்கு உலகமே வியக்கும் வண்ணம் சொத்து இருந்தது. அவன் வீட்டு அறைகளெல்லாம் பொன்னால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவன் கருவூலத்தில் அளவிட முடியாத பொன் நகைகளும் முத்துக்களும் வைரங்களும் நவரத்தினங்களும்  தங்க நாணயங்களும் இருந்தன. ஆனாலும் அவனுக்கு திருப்தி இல்லை. இன்னும் கொஞ்சம் பொன் நம்மிடம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற பேராசைக்கடலில் மூழ்கிவிட்டான்.

    அந்த நேரத்தில் ஒரு தேவதை அங்கே வந்தது. “மிடாஸ், உலகிலேயே நீதான் அதிகமான பொன்னுக்குச் சொந்தக்காரனாக இருக்கிறாய். சந்தோஷம்தானே?” என்றது.  அவன் முகத்தில் இருந்த அதிருப்தியைக் கண்ட தேவதை “மிடாஸ் உனக்கு ஒரு வரம் தரலாம் என்று எண்ணுகிறேன். என்ன வேண்டும் என்று கேள்” என்றது.

    உடனே மிடாஸ் “நான் தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும்.” எனக் கேட்டான். “அப்படியா? உன் விருப்பபடி நாளைக் காலை முதல் நீ தொட்டதெல்லாம் பொன்னாகும்: என்று வரமளித்து அந்த தேவதை மறைந்தது.

    மறுநாள் காலை எழுந்த மிடாஸ் தன் கட்டிலைத் தொட்டான். அது தங்கமானது. ஒவ்வொரு பொருளாக தொட்டுக்கொண்டே வந்தான். அனைத்தும் தங்கமாக மாறின. அளவில்லாத ஆனந்தத்தில்  குடிப்பதற்காக நீரை எடுத்தான் . அந்தத் தண்ணீரும் தங்கமாக மாறியது. அவனால் குடிக்க முடியவில்லை. சிற்றுண்டிக்காக அமர்ந்த மிடாஸ் ஒவ்வொரு உணவையும் தொட அது தங்கமாக மாறியது.

    பயந்து போன மிடாஸ் ஓடி வந்த தன் மகளைக் கட்டி அணைத்தான். மகளும் பொற்சிலையாக மாறினாள். துயரத்தில் மிதந்த  மிடாஸ் தேவதையிடம் தன்  தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டான். “எனக்குப் பொன்னே வேண்டாம். நல்ல   வாழ்க்கை மட்டும் போதும்”  என்று வேண்டினான்.

    இந்தக் கதை ஒரு மனிதனின் பொன்னாசைக்கு என்ன விளைவுகள் ஏற்படும் என்று உணர்த்துகின்றது.  புன்னகையைத்  தொலைத்து விட்டு  பொன்னகையைத் தேடும் உலகம் இதைப் புரிந்து கொள்ளவேண்டும் !!

    திருமூலர் கூறுகின்றார்

    கற்குழி தூரக் கனகுமுன்னத் தேடுவர்

    அக்குழி தூர்க்கை யாவருக்கும் அரியது

    அக்குழித் தூர்க்கும் அறிவை அறிந்தபின்

    அக்குழி தூறும் அழுக்கற்றவாறே.  

    “பிறப்பு என்ற குழியை பொன்னால் நிரப்ப முடியாது. உண்மை அறிவை நாடுங்கள். அதனால் தான் பிறப்பு என்னும் குழியை நிரப்ப முடியும்.”

    நல்ல சிந்தனைக்கு ஈடு இணை ஏதுமில்லை என்று வலியுறுத்திய கலீல் கிப்ரான் என்ற ஒரு தத்துவ அறிஞர் கூறிகின்றார் :” ஓர் டன் தங்கத்திற்கு ஈடாக ஒரு நல்ல சிந்தனையை யார் எனக்கு கொடுப்பார்?: என்று. “Who would sell me one beautiful thought for a ton of gold?”

    ஆகவே பொன்னில் நாம் வைத்திருக்கின்ற மாயையை நீக்கி பொன்னார்  மேனியனான இறைவனிடம் உள்ளத்தைச் செலுத்துதலே நமக்கு முக்திக்கு வழி காட்டும்  என்பதை நாம் உணர வேண்டும்.

    இப்படிப்பட்ட பேராசை நமக்கும் பிற்காலத்தில் சிறிதும் உதவாது என்ற கருத்தை முன்னிறுத்தி பட்டினத்தாரோ கீழ்கண்டவாறு அங்கலாய்க்கிறார்.

    மாணிக்க முத்து வயிரப் பணிபூண்டு

    ஆணிப்பொன் சிங்கா தனத்தி லிருந்தாலும்

    காணித்  திடலைநமன் கட்டியே  கைப்பிடித்தால்

    காணிப்பொன் கூடவராக காண்கிலமே நெஞ்சமே

    இதே கருத்தை வலியுறுத்தும் பத்ரகிரியாரும் இவ்வாறு உரைக்கின்றார்.

    மனதை ஒரு  வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி

    எனதறிவை அம்பாக்கி எய்வதினியெக்காலம்?

    ஆகவே ஆசைகளை அடக்கி நெஞ்சத்தில் இறைவனை நிறுத்தி அவனோடு ஒன்றிட முயன்றால் அவன் அருள் நிச்சயம் கிட்டிடும். ஆசைகள் உந்திவிடும் துயரங்களிலிருந்து நாம் நம்மை விடுவித்துக்கொள்ளலாம் .

    ஆனால் நமக்கு அடிக்கடி ஏற்படும் சந்தேகம் “இப்படியெல்லாம் நடக்குமா? இறைவன் அருள் நமக்கு கிட்டுமா?” என்பதே. இந்த சந்தேகங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்  வகையில் மாணிக்க வாசகர் திருவாசகத்தில் அந்த விந்தையைச் சுட்டிக்காட்டுகின்றார்

    மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும்

    மங்கையும் தம்மோடுங்

    கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு

    குலாவியே திரிவேனை

    வீடுதந் தென்றன் வெந்தொழில் வீட்டிட

    பொன்மலர் கழல் காட்டி

    ஆடு வித்தென தகம்புகுந் தாண்டதோர்

    அற்புதம் அறியேனே.

    அந்த அருள் நமக்கு கிடைத்துவிட்டால் இந்தத் துயரமும் துன்பமும்தான் தொடருமோ? உறுதியாக அது தொடராது என்ற உண்மையை நமக்கு வள்ளுவர் பெருமான் எடுத்துரைக்கின்றார் :

    அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

    இன்னா உலகம் புகல்.

    தொடரும் ..

    Share
  • “மேகம் போடும் தாளம்”

     

    பெருவை பார்த்தசாரதி
    ===================

    unnamed (3)

    கண்ணில் காணும் காட்சிகள் தோறும்
    எண்ணம் தரும் எழுத்துகளொவ் ஒன்றையும்
    வண்ணம் கலையாத இயற்கை எழிலையும்
    திண்ண முடன் திளைத்து நோக்கினால்..

    காட்டா றாயெழுமுன் எண்ணங்கள்!..அவை
    கனிந்து காதலாய்க் கசிந்துருகிப் படிந்திடுமே.
    கன்னலெனும் தமிழி லருங் கவிதையாக..அக்
    கவிதைக்குகந்த கருவுக்குப் பஞ்சமில்லை மகனே..!

    பாயில் படுத்துக் கொண்டே கவியெழுத
    பரந்து விரிந்த வானத்தைப் பாரதிலுன்
    பட்டுப் போன்ற எண்ணச்சிறகு விரியும்
    படபட வெனச் சிறகடிக்குமுன் சிந்தனைகள்..!

    மின்னலின் ஒலியுன் மூளையில் புகும்
    பின்னலாய் மேகம் போடும் தாளம்
    சன்னமாயுன் காதில் விழும் இனிமையாய்
    பின்னதி லெழும் பிரியமான பாவொன்று..!

    மண்மீதில் மலை பார்க்கின் பனிமூட்டமாம்
    வண்ணப் பூப்போலதில் விண்மீன் கூட்டமாம்
    விண்ணிலெழும் மேகம் போடும் தாளமதை
    பண்ணிசையாய்த் தொடுக்குமாம் விரிந்தவானம்..!

    என் எண்ணமுழுதும் விண்ணை நோக்க
    விண்ணிலிருந்து வந்ததுவோர் இசை நாதமந்த
    இசைக்குழுவில் இடம் பெற்றவர் எத்துணைபேர்.?
    ஆசையுடன் வினவுகிறேன் வெண்ணிலவே..!

    வானத்தினழகு மேடையில் சூரியனின் சுடர்விளக்கும்
    மின்னலின் மேளத்தோடு மேகம்போட்ட தாளமும்
    ஜதிஸ்வரம் பாடும் மழையின் ராகமுமிணைந்து
    ஸ்வரங்கள் ஏழில்பல சுகங்களைத் தரும்..!

    வான்மேடையில் நிகழும் அழகிப் போட்டியில்
    பூனைநடை பயிலும் வெண்ணிலவு…கார்
    வண்ணமேகம் போடும் தாளமுடன் சேர்ந்தால்
    உன்னழகு கூடிகவி உவமைக்குப் புகழ்சேர்க்கும்..!
    ==================================================================

    தினமணி கவிதைமணி தந்த தலைப்பு::“மேகம் போடும் தாளம்”

    நன்றி கவிதைமணி வெளியீடு::06-05-17

    Share
  • உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

     

    பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்

    ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

    [52]

    சுல்தான் மரணத் தளம் வெற்றுக் கூடாரம்,

    சொந்தமான பூமியாய் அவர்க் கெழுதப் பட்டது;

    எழுந்தார் சுல்தான்; அவரது கறுப்புத் தொண்டர்

    தாக்கி அடுத்தவரைப் புதைக்கத் தயாரிப்பார்.

    [52]
    But that is but a Tent wherein may rest
    A Sultan to the realm of Death addrest;
    The Sultan rises, and the dark Ferrash
    Strikes, and prepares it for another guest.

    [53]

    என் ஆத்மாவை அனுப்பினேன் இறப்புக்குப்

    பின்னே புலம்பெயரும் மாய உலகுக்கு;

    பலநாள் கடந்து திரும்பிய ஆத்மா பகரும்:

    “பார், சொர்க்கம், நரகம் கண்ட என்னை.”

    [53]
    I sent my Soul through the Invisible,
    Some letter of that After-life to spell:
    And after many days my Soul return’d
    And said, ‘Behold, Myself am Heav’n and Hell.’

    [54]

    சொர்க்க ஒளிக்காட்சி நிறைவேற்றும் இச்சை,

    நரக நெருப்பில் எரிந்த ஆத்மாவின் நிழல்,

    இருள்வெளியே வார்த் தெடுத்த நம்முடல்,

    தாமதமாய் வந்தாலும் விரைவில் அழியும்.

    [54].
    Heav’n but the Vision of fulfill’d Desire,
    And Hell the Shadow of a Soul on fire,
    Cast on the Darkness into which Ourselves,
    So late emerg’d from, shall so soon expire.
    +++++++++++++++++++

    Share
  • இழுத்துண்டு ஓடு

    தமிழ்த்தேனீ

    சபேசனுக்கு  இன்னும் கொஞ்சம் வெண்டைக்காய் போடு அவனுக்கு சின்ன வயசிலேருந்தே வெண்டைக்காய் பிடிக்கும் என்றார்  கண்ணன்
    கன்ணனின் மனைவி ஆனந்தி நிறைய இருக்கு சபேசன் அண்ணா கேட்டு சாப்பிடுங்க என்றாள்  
    
    சரி ஆனந்திம்மா  போடும்மா  சாப்படறேன் என்றபடி சாப்பிட்டுக்கொன்டே
    டேய் கண்ணா  இந்த  வாழ்க்கையிலே  நம்மைச் சுத்தி மனுஷ வடிவிலே இருக்கற  நரி பூனை சிங்கம் கரடி காட்டுநாய்,ஓநாய் மாதிரி இருக்கற மனுஷாகிட்டேருந்து நம்மளைக் காப்பாத்திண்டு ஓடறது இருக்கே
    
    அதுதாண்டா  பெரிய திறமையான காரியம்
    அப்பிடி ஓடி ஓடியே நாம ரெண்டு  பேரும் ஏதோ  நம்மாலான நம்மோட பொறுப்புக்களையெல்லாம் நிறைவேத்தி பிள்ளங்களையெல்லாம் படிக்கவும் வெச்சு  கல்யாணமும் செஞ்சு வெச்சு நிமிந்துட்டோம் , அதுனாலே  நிம்மதியா இருக்கு  என்றார்  கண்ணன்
    
    ஆமாம் கண்ணா நாம எங்கேயாவது  தவறும் போது உன் பொண்டாட்டி உன்னையும்  என் பொண்டாட்டி என்னையும் , அதே மாதிரி அவங்க  தவறும் போது நாமளும் அவங்களுக்கு  சொல்லிக் குடுத்து  இழுத்துண்டு ஓடித்தானே  இப்பிடி வளந்திருக்கோம்  என்றார் சபேசன்
    
    சபேசா  இப்போ  நினைச்சுப் பாக்கறேன்  நீ இதோ இருக்காளே கனகா இவளை நீயும் இவ உன்னையும் இழுத்துண்டு ஓடிட்டீங்கன்னு ஊரே  உங்களை  கரிச்சுக் கொட்டித்தே என்றார்  கண்ணன்
    
    கண்ணா   நீ ஆனந்தியைக் கல்யாணம் செஞ்சிண்டு இழுத்துண்டு  இவ்ளோ தூரம் வாழ்க்கையிலே ஓடி வந்திருக்கே
    நான்  இந்தக் கனகாவை இழுத்துண்டு ஓடிப் போயி கல்யாணம் செஞ்சுண்டிருக்கேன். 
    
    ஆனா  நாம ரெண்டு பேரும்  இன்னமும் 60 வயசாகியும் இன்னமும்  இழுத்துண்டு  ஓடிண்டேதானா  இருக்கோம் . பாதியிலே  விட்டுட்டு ஓடிடலையே  அதுதான்  விசேஷம்  என்றார்  சிரித்துக்கொண்டே
    
    ஆமா  சபேசா ஆனா இப்போ  இழுத்துண்டு ஓடிப்போய் பாதியிலேயே  விட்டுட்டு போயிடறாங்களே  அதுதான் ப்ரச்சனையா இருக்கு என்றார் கண்ணன்
    
    போறும்  வழியாதீங்க  என்று ஆனந்தியும் கனகாவும் ஏகோபித்த குரலில் சொன்னார்கள் , இழுக்கறதாம் ஓடறதாம்  வாழ்க்கையிலே  ரெண்டு பேருமே சேர்ந்து ஒத்துமையா இழுத்துண்டு ஓடினாத்தானே  வண்டி நல்லா  ஓடும்   என்றாள் ஆனந்தி
    அதானே  என்றாள் கனகா
    
    
                   சுபம்
    
    Share
  • என்னைத் தேடும் நானும் கண்டு பிடிக்க முடியாத நானும்

     

     

    ஒற்றைத் தாள் நாணயம் நான்
    மாற்றிச் செலவு செய்யத்தான்
    முடியவில்லை

    வாழ்க்கை தூர்ந்து போன கிணறு
    அள்ளிக் குடிக்கவும்
    குளிக்கவும் எப்படி இயலும்

    மின்மினிப் பூச்சியாய்
    நான் பறந்து கொண்டிருக்கிறேன் சுடர் நோக்கியவாறு

    எனக்கென்று எதுவுமே
    சொந்தமில்லை
    நான் கூட வேறொருவன் உடமை

    புல்லாகத்தான் முளைத்திருக்கிறேன்
    மரமாகும் வழி தெரியவில்லை

    ஒன்பது வாசல்கள் உள்ளன
    எந்த வழியாலும்
    நான் வெளியேறலாம்

    வெற்றிடமாகத்தான் வந்தேன்
    சுமையால் நிரம்பிக்கிடக்கிறது பை

    என்னை எனக்கே தெரியவில்லை
    என் பெயர் கேட்கிறார்கள்

    வாழ்க்கை ஓர் அடுப்பு
    தண்ணீர்ப் பானையாய்
    நான் உட்கார்ந்திருக்கிறேன்

    வெளியே பேசியது துளிதான்
    உள்ளே கடல்

    – ராஜகவி ராகில் –

    Share
  • நாலடியார்

     

    நாலடியார்

    25ம் அதிகாரம்
    அறிவுடைமை – 3

    unnamed (4)

     

    25ம் அதிகாரம்
    அறிவுடைமை – 3

     

    எந்நிலத்து வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காகா
    தென்னாட்டவருஞ் சுவர்க்கம் புகுதலாற்
    றன்னாற்றா னாகு மறுமை வடதிசையுங்
    கொன்னாளர் சாலப் பலர்

    எந்நிலத்து – எந்த நிலத்தில், வித்து இடினும் – விதை போட்டாலும், காஞ்சிரம் – எட்டியின், காழ் – விதை, தெங்கு ஆகா – தென்னைமரம் ஆக மாட்டா, தென்நாட்டவரும் – தென்திசையுள்ளவரும், சுவர்க்கம் புகுதலால்-(நல்வினைப்பயனால்) சுவர்க்கலோகம் சேர்வதினால், தன்-ஒருவனது, ஆற்றான் – முயற்சியினாலே, மறுமை- மறுமையில் நற்கதி, ஆகும்-பொருந்தும்: வட திசையும் – வட திசையிலும், கொன் ஆளர்-அறஞ் செய்யாது வீணே கழிப்பவர், சால பலர்- மிகவும் பலர் உளர்.
    எனது வரிகள்:-

    எட்டி மர விதைகளிட்டால்
    எத்தன்மை நிலமானாலும்
    தென்னை மரங்களாக முளைக்காது.
    தென்னாட்டு வாசிகள், அது
    இயமதிசையாதலால் சுவர்க்கம்
    சேர்தல் அருமை, அவரும்
    நல்வினைப் பயனால் சுவர்க்கம்
    அடைகிறார்கள். வடக்குத் திசையில்
    வாசிகள் அது புண்ணிய பூமி
    என்பதால் சுவர்க்கம் அடைவாரெனும்
    எண்ணத்துடன் நற் கதியடைய
    முயற்சிக்காது வீணே காலம்
    கழிப்பவர் பலர். அவரவர்
    அறிவு, நற்செயல், முயற்சியாலன்றி
    வாழும் நிலத்தால் நற்கதியடையார்.

    வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 31-5-2017

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”கண்ணிநுண் பாம்பதன் கட்டுறங்கி, பின்யசோதா
    கண்ணிநுண் தாம்பினால் கட்டுண்டோன் , -எண்ணிய
    வண்ணம் எழுந்தருளி விஸ்வம் விளக்கிடுவான்:
    கண்ணனை நெஞ்சே கருது’’….!கிரேசி மோகன்….!

    Share
  • வாழ்த்துகள் கோவை!

    பவள சங்கரி

    தலையங்கம்

    கோவை மாநகராட்சியில் வீடுகள் கட்டுவதற்கு மாநகராட்சி அலுவலகங்களுக்கு கால் கடுக்க நடக்க வேண்டியதில்லை. கணினிமயமாக்கப்பட்டுள்ள, அலுவலகத்தில் அங்கிருக்கும் திரைச்சீலைகளுக்குக்கூட கையூட்டு தர வேண்டியதில்லை. கட்டிட வரைபடங்கள், அதற்குரிய அனைத்து ஆவணங்களையும் பதிவு செய்துவிட்டால், உடனடியாக குறுஞ்செய்தி மூலமாக பதிவு எண் அளிக்கப்பட்டுவிடுகிறது. அதில் எத்தனை நாட்களுக்குள் அந்த வரைபடம் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற தகவல் அறிவிக்கப்படுகிறது. அந்த நாட்களுக்குள் ஒப்புதல் சீட்டும் வழங்கப்பட்டு விடுகிறது. மாற்றங்கள் தேவைப்படும்பட்சத்தில் அதன் காரணங்கள் கேட்டும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு இதன் மூலமாக குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு கட்டிடம் கட்டுவதற்கான ஒப்புதல் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக ஒரு பைசா கையூட்டு கொடுக்காமல் ஒப்புதல் பெறும் முறை கோவையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டது. கோவையில் இது முடியும் என்றால் ஏன் ஈரோடு, சேலம், சென்னை, அகமதாபாத், குஜராத் போன்ற அனைத்து நகரங்களிலும் இதனை நடைமுறைப்படுத்த முடியாது. மத்திய அரசு இதற்கான ஒரு செயலியை உருவாக்கி முதலாவதாக அனைத்து மாநகராட்சிகளிலுமாவது செயல்படுத்தினால் மிகவும் பயனுடையதாக அமையும். இலஞ்ச ஒழிப்பின் முதல் நடவடிக்கையாகக்கூட இதைக் கொள்ளலாம். ஆறு மாதங்களுக்குள் அலுவலர்களின் நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு விவரம் அளிக்கவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள நடுவண் அரசு மாநகராட்சிகளிலும் இதை உடனடியாகச் செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

    Share
  • சிவபிரதோஷம் – “சிவனுடை அன்பகம்”

     

    மீ.விசுவநாதன்

    ame
    சிவனை வணங்கிடச் சிந்தை அமைதியில் தேர்ந்திடுமோ ?
    சிவனை நினைத்திடத் தேர்ந்தநல் ஞானமும் சேர்ந்திடுமோ?
    நமனை உதைத்தவன் நானினைக் கொல்ல நடுங்குவனோ ?
    இவனைத் திருத்திட இத்தனை காலமேன் என்சிவனே !

    கருமைக் குழலுள் கருணை மழையினைக் கட்டியவா !
    இருமை விழியால் எளியோர் வினைகளை நீக்கிடவா !
    பெருமை கொடுக்கும் பெரும்பே(ர்) அடியவர் பெற்றவனே !
    அருமை அடியேன் அகமே சிவனுடை அன்பகமே !

    (இன்று 06.05.2017 பிரதோஷம்)
    (பாவினம்: கட்டளைக் கலித்துறை)

    Share
  • எப்போது வருவாய் நீ?

     

    முனைவர் சி. சேதுராமன்,
    தமிழாய்வுத்துறைத் தலைவர்,
    மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.),
    புதுக்கோட்டை.
    Malar.sethu@gmail.com

     
    எந்தமிழ்த் தாய்பெற் றெடுத்த கவிமகனே
    எல்லோரின் உள்ளத்தில் எழுகின்ற கவிச்சுடரே!
    எங்கே எங்கள் கவிக்கோ? என்றிங்கு
    எந்தமிழர் எல்லாரும் ஏங்கிப் புலம்புகின்றார்
    ஏந்தலே! கவியரங்கில் கவிபாடி எம்மை மகிழ்வித்தாய்!
    எழில் நிறைந்த கவிதைகளில் ஏழையரைப் பாடி வைத்தாய்!
    ஏற்றமிகு சிலம்பின்கதை இருநாற்சொல்லில் இயம்பினாயே!
    பால்வீதி படைத்து பலர் நெஞ்சைக் கவர்ந்தாயே!
    சிலேடைக் கவிதைகளால் எம்சிந்தை குளிர்வித்த சீமானே!
    பாலைநிலா படைத்து பலர் மனத்திலும் குடிபுகுந்தாய்!
    விதைபோல் விழுந்தவன் என்று கவிபாடி இன்று
    விதையாக மாறிவிட்டாய்!
    நேயர் விருப்பத்தை நிறைவு செய்த நேயனே!
    கண்ணீரில் தவிக்கவிட்ட எங்கள் கவிக்கோவே!
    கவியுலகில் புதுமையினைப் புகுத்திட்ட பாவலனே!
    கற்பனையின் ஊற்றே! கலைவளர் நற்கவிச்சுடரே!
    கவிதை அரங்குகளை கவிபெறச் செய்தாயே!
    உம்கவிதை வாங்குதற்கோ எமன் உன்னை அழைத்திட்டான்?
    அருந்தமிழின் மீது அருங்காதல் கொண்டவனே!
    அழகுதமிழ்க் கவிதைகளை அள்ளி அள்ளித் தந்தவனே!
    அருந்தமிழர் நெஞ்சங்களில் அழகாய் அமர்ந்தவனே!
    அனைவரும் உன்கவிதை கேட்பதற்குத் தவிக்கின்றோம்
    அன்பார்ந்த தமிழினிலே அருமருந்தாய்க் கவிபடைக்க
    அப்துல் ரகுமானே எப்போது வருவாய் நீ?

    Share